இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2008 இதழ் 98  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!

மனந்துளிர்காலம்!

- முரளீதரன் நவரத்தினம் -


அந்த அழகிய குட்டித்தீவைச் சுற்றிக்காட்டியவாறே இரயில் மெதுவாக இருண்ட குகையினுள் நுளைந்தது. எதுவும் தெரியாத கும்மிருட்டு, கூடவே குழந்தைகளின் உற்சாகக் கூச்சல். மெதுவாக மனைவியின் கைகளை கோர்த்துக் கொண்டேன். இருளுக்குக் கண் இல்லை என்று துணிந்து என் உதட்டோரம் சொன்னாள். இரயில் குகை நீங்கி அப்பாவியாக வெளிவந்தது. மனைவி தன் கையை விடுவித்துக் கொண்டாள். இளவேனிற்கால வெய்யில் அவள் முகத்தில் பரவிய நாணத்தைக் காட்டிக் கொடுத்தது. அந்த அழகிய குட்டித்தீவைச் சுற்றிக்காட்டியவாறே இரயில் மெதுவாக இருண்ட குகையினுள் நுளைந்தது. எதுவும் தெரியாத கும்மிருட்டு, கூடவே குழந்தைகளின் உற்சாகக் கூச்சல். மெதுவாக மனைவியின் கைகளை கோர்த்துக் கொண்டேன். இருளுக்குக் கண் இல்லை என்று துணிந்து என் உதட்டோரம் சொன்னாள். இரயில் குகை நீங்கி அப்பாவியாக வெளிவந்தது. மனைவி தன் கையை விடுவித்துக் கொண்டாள். இளவேனிற்கால வெய்யில் அவள் முகத்தில் பரவிய நாணத்தைக் காட்டிக் கொடுத்தது.

அடுத்த சுற்றுக்கு ஏற நண்பன் ரவி குடும்பம், கூடவே என் பிள்ளைகளும்.

“அப்பா எப்பிடி இருந்திச்சு” இறங்கிய என் அனுபவம் கேட்டாள் மூத்தவள்.

“அம்மாட்ட கேள்” என் பதிலுக்கு செல்லமாகக் கோபித்தாள் மனைவி.

இரயில் புறப்பட அவர்களுக்குக் கை காட்டிவிட்டு சிறிய அந்த ஏரியின் புல்தரையில் அமர்ந்து கொண்டோம்.

பலர் ஏரியில் படகுச் சவாரி போய்க் கொண்டிருந்தார்கள். இது ஒரு உற்சாகமான இளங்காலைப்பொழுது என்று பறவைகள் கத்திக்கொண்டே பறந்து தேய்ந்து மறைந்தன. இரண்டு கிழமை விடுமுறை. மனமும் உற்சாகச்சிறகு கட்டிப்பறந்தது. ஆண்டு முழுவதும் இயந்திரமாக இருப்பவனை மனிதனாக இருக்க அனுமதிக்கும் நாட்கள் இவை. பல நாட்களின் பின் இருவரும் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல் பேசிக்கொண்டே இருந்தோம். வீட்டுவேலை, சமையல், பிள்ளைகளின் படிப்பு என்று இருந்தவளுக்கு என் விடுமுறை அவளுடையதாகியது.

மனைவியும் பிள்ளைகளும் போட்ட நிகழ்ச்சிநிரலின் படி முதல் நாளே இங்கு வந்தாயிற்று. நின்று போன என் வாசிப்புப் பழக்கத்தைத் தொடர நூலகம் போகும் என் திட்டத்தை எப்படி இதனுள் திணிப்பது என்று யோசிக்கலானேன். ஊரில் சிறுவயதில் கிறுக்கிய கவிதைகளும் கதைகளும் விமானக்குண்டு வீச்சில் மண்ணோடு மண்ணாகி அங்கேயே தங்கிவிட, எழுதும் ஆர்வம் மட்டும் ஆழ்மனதோடு புலம் பெயர்ந்தது. இன்று சூழலின் வனப்பு வறண்டுகிடந்த மனத்தில் கவிதைகளாய் துளிர் விட ஆரம்பித்திருந்தது. அன்றைய பொழுது போனதே தெரியவில்லை. பிள்ளைகள் உற்சாகமாக எல்லா விளையாட்டுகளிலும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். அவர்களின் உற்சாகத்தை அழகிய கவிதையெனப் படித்தேன்.

கோடையின் புழுக்கத்தைப் போக்க பால்கனியில் வீசிய காற்று உதவினாலும் கூடவே நான் கிறுக்கிய கவிதைத் தாள்களையும் புரட்டிப்பார்த்து விட்டுப்போனது. நாள் முழுவதும் விளையாடியதில் பிள்ளைகள் களைத்துப்போய் தூங்கியிருந்தனர். இருள ஆரம்பித்திருந்தும் வீதியெங்கும் மக்கள் நடமாட்டமிருந்தது. சிறுவர்கள் ஈருருளிகளில் பூங்காக்களிலிருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். பெற்றவர்கள் அன்னநடை போட்டு பின் தொடர்ந்தனர். இந்த நடை வெப்பநிலை இறங்க இறங்க வேகமெடுக்கும். இதுவே பனிப்பொழிந்த ஒரு நாளில் வேகமாக நடக்க நினைத்தாலும் வழுக்காமலிருக்க, புது நடை பயிலும் கால்கள் ஒத்துழைப்பதில்லை.

“கனடாவில அடிக்கடி நடையை மாத்தோணும் தெரியுமே?”

முதலில் விழித்து, பின் என் விளக்கம் கேட்டு சிரித்தாள் பால்கனிக்கு வந்த மனைவி.

நேரமாக விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் நகரம் மூழ்கத்தொடங்கியது. நகர விளக்குகளை இரசித்ததில் முழுநிலவின் வரவைக்கூட கவனிக்காமல் இருந்ததை நினைக்க ஆச்சரியமாக இருந்தது.

வேண்டா விருந்தாளியாக
நகரங்களுக்கு வரும்.....
நிலவு!


கவிஞர்களுக்கு நிச்சயமாக வேண்டா விருந்தாளி இல்லை. உற்சாகமாக ஹக்கூக் கவிதை ஒன்றைத் தாளில் கிறுக்கிக்கொண்டேன்.

நீண்ட காலத்தின் பின் வேலை, குடும்பம் என சிறைப்பட்டிருந்த சிந்தனை கவிதையெனச் சிறகடித்துப் பறந்தது.

நான் எழுதிய கவிதைகளை ஆர்வத்துடன் எடுத்து படிக்கலானாள் என் மனைவி. எனக்கொரு வாசகி கிடைத்த மகிழ்ச்சி. அவளுக்கோ நான் ஒரு காதல் கவிதையும் எழுதவில்லையே என்ற மனக்குறை.

பின்னிரவில் அவள் குறை தீர காதல் கவிதைகளில் முடிக்க வேண்டியிருந்தது.

***********************************

இளவயதில் யாழ் நூலகத்தில் கழித்த நாட்கள் வந்து போயின மனதில். அவ்வளவு தமிழ்நூல்கள் அந்த நூலகத்தில் இல்லாவிட்டாலும் சிறு தொகை இருக்கத்தான் செய்தது. பன்நாட்டவரும் வரும் இடம் அது.

பட்டினியால் வாடியவனின் நிலையில் நான் இருந்தேன். எதை எடுப்பது என்பதில் சிக்கல் இருந்தது.

“இந்தப் புத்தகம் நீங்க கட்டாயம் படிக்கோணும்”

“எது?”

“ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி?”

சிரித்துக்கொண்டேன். கடையில் வாங்கிவரச் சொல்லும் சாமான்களில் இருந்து, வேலைக்கு எடுத்துப் போவது வரை எதையாவது மறந்து விடுவது என் வழக்கம். படித்துத்தான் பார்த்து விடுவோமே என்று எடுத்தக்கொண்டேன்.

கடையில் வாங்கும் பொருட்களின் பட்டியல் முதல் தொலைபேசி எண்கள் வரை மனதில் இருத்த பல உத்திகளை கூறியிருந்தார் நூலாசிரியர்.

படித்த பின் என் நண்பர்கள் உறவினர்களின் எண்களை ஒப்புவித்த போது மனைவி ஆச்சரியப்பட்டுத்தான் போனாள். பட்டியல் இல்லாமலே சென்று வந்தேன் கடைகளுக்கு சகல சாமான்களோடும்.

விடுமுறையின் முதல் கிழமையே என்னில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. முதன் முதலாக எழுதுவது, வாசிப்பது என எனக்குப்பிடித்த வேலை ஒன்றைச் செய்வதாகத் தோன்றியது. ஓவர்டைம் வேறு செய்தேன். பிள்ளைகளுடன் கோபப்படாமல் பேசினேன். கூடவே விளையாடவும் செய்தேன். விளையாட்டில் புது நண்பர் கிடைத்த மகிழ்ச்சி அவர்களுக்கு.

“அப்பா நீங்க வேலைக்கு போகாம வீட்ட இருந்தா எவ்வளவு நல்லம்” என்றாள் என் மூத்தவள்.

இரண்டு வேலை என்றலையும் நண்பன் ரவியை நினைத்துக் கொண்டேன். கனேடியப் பெற்றோர் பிள்ளைகளுடன் களிக்கும் நேரம் மிகக்குறைவு என எங்கோ படித்த ஞாபகம் வந்தது. இதில் நாமும் சேர்த்தியோ என்ற கவலையும், நம்மை இதில் தள்ளி விட்ட பொருளாதார சூழலின் மீது வெறுப்பும் ஏற்பட்டது. மேலைத்தேசத்தின் பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் சிதைவுறும் குடும்பங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

நேரம் கிடைத்தாலும் குடும்பமாக தொலைக்காட்சியுடன் சங்கமமாகும் நிலை. இதுவே வயது வந்த பிள்ளைகள் உள்ள வீடுகளில் தனி அறைகளில் இணையங்களில் காலம் செலவாகிறது.

* * * *

‘எப்ப வந்தாலும் புதுசாக்கொட்டுது’ அருவியை இரசித்தபடியே சொன்னாள் மனைவி.

‘எந்தக்கமராவுக்குள்ளும் அடக்கேலாத அழகு’ என்றேன் அருவியைப் படமெடுக்க முயலும் மகளைத் தூக்கியபடி.

‘உங்கட கவிதைக்குள் அடக்கப் பாருங்கோ’

அதுவும் மடியாத காரியம். பல கவிஞர்களும் கலைஞர்களும் உருவான இடம் நயகராவாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றியது. நான் கூட அழகையும் அதை இரசிக்கும் மாந்தர்களையும் இம்முறை கவித்துவத்துடன் பார்க்கத் தலைப்பட்டேன். காரணமில்லாமலா பலர் நீண்ட பயணத்தின் பின் இங்கு வருகின்றனர்.

ஓயாத யுத்தமுழக்கம்
எல்லையில்....
இரசிக்கப்போவோமா
நயகரா!


நடைபாதையெங்கும் பன்மொழி பேசும் மாந்தர்களின் குரல்கள் செவிக்கினிமையாய் இருந்தது. அருவியின் மீது அடிக்கடி தோன்றும் வானவில் கூட இம்மாந்தரைத்தான் குறிக்கிறதோ என எண்ணத்தோன்றியது. எனினும் காதலர் பேசும் மொழி மட்டும் யாருக்கும் புரியக்கூடிய பொதுமொழியாகத் தோன்றியது.

ஒருநாளில் பார்த்து முடிக்கும் இடமல்ல நயகரா, அதனால் இருநாட்கள் தங்கும் முடிவுடனேயே சென்றிருந்தோம்.

மறுநாள் அருவியை அண்மிக்கும் பயணத்தில் இணைந்து கொண்டோம். அருவியின் சாரலில் நனைந்து மகிழ்ந்தோம். பிள்ளைகளின் குதூகலத்தை இரசிப்பதே தனியின்பத்தைக் கொடுத்தது. நதிக்கரை பூங்காவில் சேர்ந்தே உணவுண்டு, புல்தரையில் இளைப்பாறி என இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை.

* * * * *

விடுமுறையில் எடுத்த படங்களைப் பார்த்து சிரிப்பதும் இரசிப்பதுவுமாய் இருந்தனர் மனைவியும் பிள்ளைகளும். அவர்களோடு மகிழ முடியாதவாறு கவலை அடிமனதில் எழ ஆரம்பித்திருந்தது. மேலை நாடுகளில் காலம் விரைவாகச் செல்வதாக பல தமிழர்கள் சொல்வதுண்டு. அதில் உண்மை இருப்பதாகவே தோன்றியது. வாழ்க்கையின் தேவைகளைத் தேடவே நேரம் செலவாக அர்த்தங்களைத் தேட காலம் முடிந்து விடுகிறது.

ஹக்கூ வாழ்க்கை!
படித்துப் புரிவதற்குள்....
முடிந்து விடுகிறது.‘நாளைக்கு உங்களுக்கு வேலை’ என் முகக்குறிப்பறிந்து கூடவே கவலையுடன் மனைவி.

‘தெரியும்’ என்றேன் சினத்துடன்.

நினைப்பே சோர்வைக் கூட்டியது. இரண்டு கிழமை விடுதலை முடிவுக்கு வருகிறது. கூடவே சினமும் பதற்றமும் தொற்றிக்கொண்டது. பிள்ளைகளின் புத்தகங்கள், சட்டை, வீட்டுச்சாமான்கள் என்று கடைகளுக்கு திரிவதில் நேரம் செலவானது. பழைய நிகழ்ச்சி நிரலுக்குள் என்னையறியாமல் நுழைவதைத் தடுக்க முடியவில்லை. பிள்ளைகளும் புரிந்து கொண்டு தொலைக்காட்சி, கணினி என்று அவர்கள் உலகத்தினுள் புகுந்து கொண்டனர். மனைவி சமையலறையினுள் புகுந்து கொண்டாள்.

காலையில் வேலைக்கு எழும்ப வேண்டும் என்ற உணர்வே தூக்கத்தைக் கெடுத்து நடுஇரவுக்குத் தள்ளிப்போட்டது.

காலை வெயில் முகத்தில் பரவ திடுக்கிட்டு எழுந்தேன். மணி ஏழு காட்டியது. வேலை தொடங்கும் நேரம். அலாம் வைக்க மறந்ததால் வந்த வினை. மனைவியும் களைப்பில் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளையும் எழுப்பி விட்டு காலைக் கடன்களைக் கடனுக்கு முடித்துக்கொண்டு ரீயை தொண்டையில் சுடச்சுட இறக்கினேன்.

‘அப்பா, அக்கா செஞ்ச கப்பல்’ அவசரத்திலும் கடைக்குட்டி கொடுத்த காகிதக்கப்பலை வாங்கிக்கொண்டேன். நான் எழுதிய கவிதைத்தாள்களைக் கிழித்து அழகாகச் செய்யப்பட்டிருந்தது. எடுத்து வைக்கத்தோன்றவில்லை.

காரில் காஸ் வேறு முடிகிறேன் பார் என்று மிரட்டிக்கொண்டே வந்தது. முதல் நாள் அடித்து வைக்காததற்காக என்னிலேயே ஆத்திரமாக வந்தது. ஒருவாறு போய்ச்சேர்ந்தேன். நீண்ட நாட்களின் பின் அதுவும் பிந்தி வந்தது மேலதிகாரிக்கு பிடிக்கவில்லை என்பதை அவன் ‘குட்மோணிங்’ காட்டிக்கொடுத்தது.

இயந்திரங்களின் இரைச்சலில் அவசரமாக ‘நான்’ கரையத்தொடங்கினேன்.

muralee31@yahoo.ca


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner