இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2010  இதழ் 124  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை
விநோதன்

- ராம்ப்ரசாத் ( சென்னை ) -


ராம்ப்ரசாத் ( சென்னை ) -அவன் இயல்பில் அப்படி நிற்பவன் அல்ல. ஆனால் அன்று நின்றிருந்தான், நடுத்தெருவில். இடது புறம் ஒரு சைக்கிள்காரரும், வலதுபுறம் ஒரு மொபெட்காரரும் கடந்து செல்கையில் இவனை வினோதமாக பார்த்துச்செல்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய பிரங்ஞை இல்லாமல் அவன் பார்வைக்கு தெரிந்த சில நொடிக்காட்சிகள் அப்படியே நின்று விட்டன. தெருவில் சென்றுகொண்டிருந்த ஏனையோர் அவனை வினோதமாய் பார்த்திருக்க, அவனது பார்வையோ எங்கோ நிலைகுத்தியிருந்தது. கோடு போட்ட அரைகை சட்டையும், கறுப்பு நிற கால்சட்டையும் மறைத்திருந்த அவன் உடலில் எந்த வித அசைவும் இன்றி சிலையாய் நின்றிருந்தான்.

அவன் பார்வை சிறையெடுத்த காட்சியில், அவனே கைதியாகிடும் படிக்கு தோன்றிய‌து , அவள் மட்டும்தான். அவள் லாவண்யா. சிகப்பு நிற சல்வாரில், தலை நிறைய மல்லிப்பூவுடன், நிலம் பார்த்தபடி, நடந்து சென்றுகொண்டிருந்தாள். அவளைத்தவிர சுற்றி இருந்த அத்தனையும், விலக எத்தனிக்கும் பனிமூட்டம் போலவே பதியும் அவன் நினைவுகளில். அவளுடன் யாரும் இல்லை. தனியே தான் நடந்து கொண்டிருந்தாள். மிக வேகமாயும் இல்லாமல், மிக மெதுவாகவும் இல்லாமல், நிதானமாக, அவளைத் தாங்கும் நிலம் கூட அவள் இருப்பை உணர்ந்திருக்குமா என்று சந்தேகம் கொள்ளும் விதத்துக்கு நடந்திருந்தாள். எல்லாம் சில நொடிப்பொழுதுகள் தான்.

எங்கிருந்தோ அவனைத் தாண்டி கடந்து போன ஒரு கனரக‌ வாகனம் அவன் பார்வை கோணத்தை கத்தரித்துச் செல்ல, துண்டாகிப் போன மறுபாதியில் அவள் எங்கோ மறைந்துவிட்டிருந்தாள். அவள் பார்வையில் பட்ட அதிர்ச்சியினின்று மீள்வதற்குள்ளாக, சட்டென அவள், கண்களை விட்டு அகன்றதை ஜீரணிக்க முடியாமல், அனிச்சையாக அவளை தேடத்தொடங்கியிருந்தான். அவ‌ள் நின்றிருந்த‌ இட‌த்தில், இருள் சூழ பூட்டிக் கிடந்த வீட்டின் முன், அக்கம் பக்கத்திலிருந்த கடைகளில், இந்தப்புறம், அந்தப்புறம் என எந்தப்புறம் நோக்கினும் அவளைக் காண‌வில்லை.

நடுக்கடலில் தத்தளிக்கையில், தூரத்தே தெரிந்து, உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கையூட்டி பின் அப்படியே பார்வையினின்று மறைந்து போன கப்பலைப் போல உணர்ந்தான். அவனை விட மூன்று வயது மூத்தவளிடம் தனக்கு ஏன் இந்த மாதிரியான ஒரு உணர்வு என்று அந்த நேரம் அவனுக்கு தோன்றினாலும், 'இப்படித்தான் கடந்த நான்கு வருடமாய் தோன்றுகிறது, ஆனாலும் இது மாறுவதற்கில்லை, மாறுவதும் பிடித்தமில்லை' என்பதாக அவனுக்கு தோன்றியது வழக்கம்போல்.

மனத்திற்கு எது சாசுவதம் என்பது பல சமயங்களில் ஒரு முரணின் பிம்பமாகவே இருக்கின்றது. அவனுக்கு அவள் பிடித்தம். இத்தனைக்கும் இந்த நான்கு வருடங்களில் எதிர்வீடாக இருந்தபோதிலும் அவளுடன் அவன் பேசியது இல்லை. பேசவென்று அவன் முயன்றதில்லை. அவள் மேல் அவன் காதல் வயப்பட்டிருக்கவில்லை. தோழி என்றழைத்திட அவளுடன் பேசியுமிருக்கவில்லை. வலியப் போய் அறிமுகப்படுத்திக்கொள்ளவோ, பேசவோ காரணங்களில்லை.

வலுக்கட்டாயமாய்க் ஒரு உறவை வளர்த்து அதற்கு காதல் என்று பெயரிட்டு உலவ அவனுக்குத் தேவைகள் இருக்கவில்லை. ஆனால் அவளைப் பார்த்துக்கொண்டிருக்க பிடிக்கிறது. அதில் ஏதோ இருக்கிறது. மனம் லேசானது மாதிரி, வர வேண்டிய இடத்துக்கு வந்தாயிற்று என்பது போல. பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று கூட அவ்வப்போது யோசித்திருக்கிறான்.

அவளைப் பார்க்கும் போது ஒரு அமைதி கலந்த சாசுவதம் மனதில் பரவுகிறது. அந்த நேரம் அது போதும். எந்த பேச்சும் வேண்டாம். பேசி என்னாகப்போகிறது. இந்தப் பார்வையில், ஆயிரம் கோடி காதல்கள் கூடுமே. அவ்வப்போது இவன் புறமாக அவள் திரும்புவது போதுமே. அது தன்னைப் பார்க்கவா, சீ சீ வேறு யாரையோ பார்க்கவா? இப்படி ஏன் யோசிக்கவேண்டும்? கோயிலுக்கு போகிறோம். அம்பாள் தன்னைப் பார்க்கிறாளா? இல்லையா? என்பது அனாவசியம். அம்பாளின் மேல் த‌னக்கு பக்தி இருக்கிறது. அந்த பக்திக்கு உண்மையாய் இருத்தல் போதும். அது போதும் த‌னக்கு என்பதாகும்போது, அம்பாள் எதைப் பார்க்கிறாள், எப்படிப் பார்க்கிறாளென்றெல்லாம் கண்டேனா? எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துவதில் இது அடங்கிப்போகுமா? உண்மையில் அப்ப‌டி அன்பு செலுத்துவ‌துதான் அவ‌ன் இய‌ல்பு அல்ல‌து அவ‌ன் விருப்ப‌ம். விருப்ப‌மே இய‌ல்பாகியிருக்க‌லாம். அதனை அவன் தன் இயல்பென நினைத்திருக்கலாம். அவ‌ள் பார்வையில் அக‌ப்ப‌ட‌வில்லை. அவ‌ன் பார்வை மீண்டும் மீண்டும் அலைபாய்ந்த‌து. ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன்பு வீடு மாற்றி சென்றுவிட்டது அவ‌ள் குடும்ப‌ம். அன்றிலிருந்து இந்த‌ தேடல். அவ‌ளை போகும் இட‌மெல்லாம் தேடும் வேத‌னை. காணும் பெண்க‌ளிலெல்லாம் அவ‌ளைத் தேடும் பிர‌ங்ஞை. இன்று அவளே எதிர்படுகையில், எதிர்பட்டது அவள் தானா என அவதானிக்கையிலேயே, அவள் மறைந்துவிட்டிருந்தாள். எங்கேயாவது அவளை மீண்டும் பார்த்திட மாட்டோமா என் ஏங்கியது அவன் மனம். சளைக்காமல் இங்குமங்கும் பார்த்தபடியே இருந்தான் அவன்.

குறைத்தபடி ஓடும் நாய், பேப்பர் பொறுக்கும் சிறுவன், தனியே சுழலும் காற்றோடு சேர்ந்து சுழலும் குப்பை காகிதங்கள், கையில் காய்கறிக்கூடையுடன் கடந்து போகும் குடும்பப்பெண்கள் என எல்லோர் மத்தியிலும் அவளைத் தேடிக்கொண்டே தெரு முனைக்கு வந்துவிட்டிருந்தான். அந்தத் தெரு இருபுறமும் பிரிந்தது. அதில் வலது புறம் பிரிந்த தெருவில் அவன் பார்வை படர்ந்த போது அவள் மீண்டும் அகப்பட்டாள். அதே சிகப்பு நிற சல்வார்.
அவளை மீண்டும் கண்ணால் கண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. மனதுக்கு இதமாக இருந்தது. இதயத்தின் மூலையில் எரியத் தொடங்கிய ஏதோ ஒரு ஜ்வாலை மீது பனிக்குடம் கவிழ்ந்தது போலிருந்தது. அவளின் வசிப்பிடம் தெரிந்துகொள்ளும் ஆவலில் அவளைத் தொடரலானான். அவள், அவன் பார்வைக்கு, காற்றிலே மிதந்தபடி, அருகாமையில் இருந்த கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அவள் பின்னாலேயே அவனும் சென்றான். அவ‌ன் வேக‌த்தில், அவ‌ளை கோயிலுக்கு முன்ன‌மேயே ச‌ந்தித்து விடுவோமோ என‌த் தோன்றிய‌து. அது நாள் வ‌ரை பேசாத‌ அவ‌ளிட‌ம் திடீரென்று என்ன‌ பேசுவ‌து. அவ‌னுக்கு ஒன்றும் தோன்ற‌வில்லை. பிற்பாடு பேச‌லாம், இப்போதைக்கு அவ‌ளின் இருப்பிட‌ம் அறிய‌லாமென்று சற்றேன வேகம் குறைத்து ந‌ட‌க்க‌லானான். சாலையோர‌ம் ஒரு வீட்டின் முகப்புக்கதவில் கட்டப்பட்டிருந்த நாய் அவளையும், சற்று பின்னாலேயே வரும் அவனையும் பார்த்து என்ன நினைத்ததோ, குறைக்கத் தொடங்கியது. அவ‌ள் கோயிலை நெருங்கினாள். அவ‌னும் பின்னாலேயே நெருங்கினான். அவ‌ள் ச‌ட்டென‌ வ‌ல‌துபுற‌ம் திரும்பி, கோயிலை ஒட்டியிருந்த‌ வீட்டினுள் நுழைந்தாள். அதுதான் அவ‌ள் வீடாக‌ இருக்க‌ வேண்டும். அவ‌ன் நினைத்துக்கொண்டான். இத்த‌னை ப‌க்க‌மாக‌வா இருக்கிறாள். இது நாள் வ‌ரை எப்ப‌டி க‌வ‌னியாது போனோம் என‌ ஆச்ச‌ரிய‌ம் கொண்டான். வீட்டு வாச‌லில் நீர் தெளித்து கோல‌மிட‌ப்ப‌ட்டு, அந்த‌ கோல‌ப்பொடியை சில‌ எறும்புக‌ள் ஓர் ஓர‌மாய் மொய்த்திருந்த‌ன‌. வீடு, முக‌ப்பிலிருந்து, துளசி மாடத்தை மையமாகக் கொண்ட, பல்வேறு பூச்செடிகள் நிறைந்த, சீராக‌ ந‌டைபாதை அமையப்பெற்ற‌ தோட்ட‌த்தைத் தாண்டி, உள்வாங்கியிருந்த‌து.

அவ‌ன், உள்ளே செல்வ‌தா வேண்டாமா என்ற‌ த‌ய‌ங்கிய‌வாறே நின்றிருந்தான். என்ன‌வென்று சொல்லிச் செல்வ‌து என்று யோசித்த‌ப‌டியே நின்றிருந்தான். ச‌ரி, வீட்டினுள் யாரெனும் தென்ப‌டுவார்க‌ள். மாமாவோ, அத்தையோ யாரேனும் தென்ப‌ட்டால் ந‌ல‌ம் விசாரித்த‌ப‌டி அறிமுக‌ம் செய்த‌வாறே பிர‌வேசிக்க‌லாம் என் எண்ணிய‌வாறே அவ‌ன் தோட்ட‌த்தைத் தாண்டி வீட்டினுள் பார்வையை செலுத்திய‌ போது அதைக் காண‌ நேர்ந்த‌து. அவ‌ள் த‌லை நிறைய‌ ம‌ல்லிப்பூவுட‌ன் ப‌ச்சை தாவ‌ணியில் சிரித்த‌ முக‌மாய் இருந்த‌ புகைப்ப‌ட‌த்தை சுற்றி மாலை அணிவிக்க‌ப்ப‌ட்டு எரிந்து கொண்டிருந்த‌ நிலையில் இர‌ண்டு ஊதுவ‌த்திக‌ள் கொலுத்த‌ப்ப‌ட்டு புகைப்படத்தைத் தாங்கியிருந்த சட்டத்தில் செருக‌ப்ப‌ட்டிருந்த‌ன‌.

அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தின் மீது அவ‌ன் பார்வை நிலை கொண்டிருக்க‌, அவ‌ன் மீண்டும் விநோத‌னாகியிருந்தான்.

ramprasath.ram@googlemail.com

 


நீ விரும்பும் தூரத்தில்

- ராம்ப்ரசாத் (சென்னை) -

ராம்ப்ரசாத் ( சென்னை ) -வானம் மப்பும் மந்தாரமுமாய் காட்சியளித்தது. மாலை சாய்ந்திருந்த வேளை, நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் புஷ்பம் காலனி பெரியவர்கள், மழை வரப்போவதாய் குறிப்பறிந்து தத்தம் வீடுகளின் முன்பாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வீட்டிற்குள் விரட்டிக்கொண்டிருந்தனர். விளையாட இடம் கிடைத்த தோரணையில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த கூதற்காற்றின் மத்தியில், அனிச்சையாய், பழக்கப்பட்ட வழியில் தானே நகரும் கால்களுக்கு உடலைத் தந்துவிட்டு, எங்கோ எதிலோ தொலைத்துவிட்ட நினைவுகளைத் தேடக் கூடத் திராணியின்றி சோர்வாய்க் காலனித் தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தான் நந்தா. மெல்ல நடந்து, தரை தளத்திலொரு வீட்டில் கட்டிப்போடப்பட்டிருந்த நாய் இவனைப் பார்த்ததும் வாலாட்டியதை கவனியாமல், தளர்வாய்ப் படியேறி முதல் மாடி வந்தான். அவன் எதிர்பார்த்தபடி அவன் வீட்டுக்கதவு தாழ் போடப்படாமல் வெறுமனே சாத்தியிருந்தது அவன் சோர்வை இரட்டிப்பாக்கியது. இன்னதென்று புரியாத வகைக்கு ஒரு வித ஆயாசம் நந்தாவின் மனதை சூழ்ந்துகொண்டது.

இரண்டு மூன்று நாட்களாக மஞ்சு சரியில்லைதான். வீட்டை சரிவர கவனிப்பதில்லை. குழந்தைக்காவது சாப்பாடு கொடுத்தாளா? குழந்தை சாப்பிட்டாளா? நந்தா அவசரமாய் கதவை மூடி உட்புறமாய்த் தாழிட்டுவிட்டு, ஐந்து வயது பெண் பிரமிளாவின் ரூம் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். அவள் வீட்டுப்பாடங்கள் செய்தபடிக்கு, திறந்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தின் மீது எச்சில் வழிய, குப்புற படுத்தபடி தூங்கிவிட்டிருந்தாள். நாளை ஞாயிற்றுக்கிழமைதான். அதனால் தூங்கட்டும். அவசரமில்லை என்பதாய் பிரமிளாவின் ரூமை பொத்தினாற்போல சாத்திவிட்டு வந்து ஹாலில் சோபாவில் உட்கார்ந்தான். ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. தான் ஃபேன் போடவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஹாலில் யாரும் இல்லாமல் எத்தனை நேரம் ஃபேன் ஓடிக்கொண்டிருந்ததோ தெரியவில்லை? நந்தா ம்ச் என்றவாறே ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டபடி சோபாவில் சாய்ந்து, ஷூக்களிடமிருந்து லாவகமாய் கால்களை விடுவித்துக்கொண்டு டீபாயின் மேல் சாக்ஸ் மூடிய கால்களை நீட்டிச் சாய்ந்தான்.

லேசாகத் தலை தூக்கிப் பார்த்தபோது மஞ்சு ரூமில் ஒருக்களித்துப் படுத்திருந்தது ஹாலிலிருந்தே தெரிந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பும் இப்படித்தான் நடந்தது முதல் முறையாக. அப்போது தான் நந்தாவுக்கும் மஞ்சுவுக்கு திருமணம் நடந்திருந்தது.திருமணமான இரண்டாவது மாதத்திலொரு நாள் இதே போல வீடு சரிவர ஒழுங்கு செய்யப்படாமல், மஞ்சு ரூமில் படுக்கையில் ஒருக்களித்துப்படுத்திருந்தாள். அவள் கைகளைக் குறுக்கே மடித்துக் கட்டியிருக்க, கைகளுக்கும் நெஞ்சுக்கும் இடையே தங்க நிற‌ ஃப்ரேம் போட்ட சட்டத்தில் தியாகுவின் புகைப்படம். அந்த தங்க நிற ஃப்ரேம் அவளின் கண்ணீரில் நனைந்திருந்தது. நந்தா சற்றே அருகே சென்று கவனிக்கையில் அந்த சட்டம் தியாகுவின் புகைப்படத்தைத் தாங்கியிருந்தது. அவள் அன்னேரம் தூங்கியிருந்ததால், நந்தா கவனித்ததை அவள் கவனித்திருக்கவில்லை.

தியாகு மஞ்சுவின் முதல் கணவன். அடுத்த தெரு மஞ்சுவை நந்தா உருகிஉருகி காதலித்துக்கொண்டிருக்க, மஞ்சுவின் மனதை கல்லூரித்தோழன் தியாகு படிக்கத்தொடங்க, அது காதலாகி, கசிந்துருகி கல்யாணத்தில் முடிந்திருந்தது. பிரமிளாவிற்கு இரண்டு வயதிருக்கும்போது பிரமிளாவின் அப்பா தியாகு ஒரு கார் விபத்தில் மரணமடைந்திருந்தான். இரண்டு வயது பிரமிளாவுடன் மஞ்சு இருபத்தினான்கு வயதிலேயே தனிமரமானது கேள்விப்பட்டு நந்தாவுக்கு இருதயமே நின்றுவிடும் போலிருந்தது.

இளம் விதவையாகி இருந்தாள் அவன் இதயம் திருடியவள். பெண் உணர்வுகளின் குவியல். உணர்வுகள் பெண்ணை ஆளாதிருக்கும் நேரம், அவள் மரணம் மட்டுமே. அவள் மட்டும் என்ன விதிவிலக்கா? பெண் எனும் வீட்டின் ஜன்னல்கள் திறக்கப்பட்டால் பிரவேசிக்கும் காற்று அவளின் எதோவொரு உணர்வுடன் மட்டுமெ பிரவேசிக்க முடிகிறது. அது தென்றலாவதும், புயலாவதும் அந்த உணர்வைச் சார்ந்தே அமைகிறது. உணர்வுகளை ஆளக் கற்கவில்லை அவள். உணர்வுகளால் உருப்பெற்றிருக்கிறாள். வெறும் முலைகளும், பிருஷ்டங்களுமே பெண்னென பார்க்கும் உலகத்தில் அவளை வல்லூறுகள் குறிவைக்கலாம். தென்றலும் புயலும் ஒரு முறையின்றி அவள் ஆழ்மனதில் அவளயுமறியாமல் பலவந்தமாய் மையம் கொள்ள முயற்ச்சிக்கலாம். அதனால் அவள் மாசடையலாம். இதுபோன்ற தருணங்களில் அவளுக்கு காவல் தேவை. மஞ்சுவிற்கும் அது தேவை. மஞ்சுவை உணர்வுகளால் மட்டுமே பார்த்திருந்தான் நந்தா. உணர்வுகளோடு மட்டுமே அவளை காதலித்திருந்தான்.
அவன் அவளுக்கு காவல் இருக்க முடிவு செய்தான். ஓடிச்சென்று வாழ்வளித்தான் தன் கனவு தேவதைக்கு. வல்லூறுகள் அலையும் மயானத்தில் அரிதான பூ அவளுக்கு அழகியகுடையானான். மஞ்சுவின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தான். மஞ்சுவின் குழந்தையை தன் குழந்தையாய்ப் பார்த்துக்கொண்டான். பிரமிளா மட்டுமே தனது ஒரே குழந்தை எனவும் முடிவு செய்துகொண்டான். மஞ்சுவின் மேல் கொண்ட அத்தனை வருட காதலில் கனிந்த பாசம் மொத்தத்தையும் மஞ்சுவின் மேல் பொழிந்தான். மஞ்சுவே அவனின் எல்லைகடந்த பாசத்தில், அன்பில் திக்குமுக்காடிப்போனாள் .
அன்று தியாகுவின் புகைப்படத்தைக் கட்டியபடி ஒருக்களித்துப் படுத்திருந்ததைப் பார்த்ததுமே தோன்றியது, மஞ்சுவால் தியாகுவை மறக்கமுடியவில்லை. இப்போது இந்த மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் அதே சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

நந்தா மீண்டும் ஒரு முறை படுக்கை அறையைப் பார்த்தான். மஞ்சு அதே நிலையில், ரூமில் ஒருக்களித்துப் படுத்திருந்தது தெரிந்தது. கொஞ்சம் எக்கிப் பார்த்தபோது, அவள் இருகைகளுக்கும் நெஞ்சுக்கும் இடையே அதே தங்க நிற ஃப்ரேம் போட்ட சட்டம். நந்தாவுக்கு புரிந்துவிட்டது. அவளால் இன்னும் தியாகுவை மறக்க முடியவில்லை. தளர்வு அவனை மெல்ல படரத் தொடங்கியிருந்தது. அவள் எத்தனை நேரம் இப்படி தியாகு நினைவாய் படுத்திருக்கிறாளோ? சாப்பிட்டிருப்பாளா? தலை வலித்திருக்குமோ? ஒரு டீ போட்டுக்கொடுத்தால் எழுந்து உட்கார்வாளோ? அல்லது, வேண்டாவெருப்பாய் ஆனால், எனக்காக‌, சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதாய், என்னைப் பொய்யாய் சமாதானம் செய்யவாவது எழுந்து உட்கார்வாளோ? அவன் கனவு தேவதை, காய்ந்த சருகாய்க் கிடப்பது அவனால் ஜீரணிக்கமுடியவில்லை.

அவளை எழுப்பவும் தயக்கமாய் இருந்தது. மூன்று வருடத்திற்கு முன்பு, மறுமணமான இரண்டாவது மாதத்தில், அவள் இப்படி ஒருக்களித்து படுத்திருக்கையில், அவளை எழுப்பப் அவள் அம்மா போனபோது, தியாகுவை மறக்கமுடியவில்லை என்பதாயும், தியாகுவின் காதலுக்கு தான் அருகதையற்றவள் என்பதாயும், தியாகு அளவிற்க்கு ஒருவரை காதலிக்க முடியாது என்பதாயும் அவள் அழுது அரற்றிய குரல் இன்னமும் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் அவளை எழுப்பினால், அப்படி அவள் அழுது அரற்றி தன் மனக்கஷ்டத்திற்கு, சோகத்திற்கு வடிகால் தேட அவளுக்குத் தேவைகள் இருக்கலாம். ஆனால், தன்னைப் பார்த்துவிட்டு, தன் முன்னே அப்படி வெளிப்படுத்தத் தயங்கி, அவ்வேதனையை அவள் அவளுக்குள்ளேயே ஆழத்தில் புதைக்க முயற்சிக்கலாம். அல்லது என் முன்னே எனக்கான வாழ்க்கைத்துணைவியாய் இருப்பதாக பொய்யாய், தன் துக்கத்தைத் தனக்குள்ளேயே மறைத்து, ஒரு தோற்றமளிக்க அவள் யத்தனிக்கலாம். அப்படி நடந்தால், என் மனதை நோகடிக்க வேண்டாமென்கிற கரிசனத்தில் அவள் சாதாரணமாக எப்போதும் போல் நடந்துகொள்ள முயற்சித்தால், அது அவளின் இயல்பை விட்டு திரிந்ததாக இருக்குமோ? அவளின் அந்த நேர துக்கத்துக்கான வடிகாலை அவள் தானாகவே பெற்றிட, தானே ஒரு தடைக்கல்லாகிப் போய்விடுவோமோ?

அவள் இயல்பு தன்னால் ஒரு போதும் பாதிக்கப்படக்கூடாது. எந்த நிலையிலும் அவள் அவளாகவே இருக்கட்டும். அவளின் முழுச்சுதந்திரத்தையும் அவளே ஆளட்டும். அவனைப்பொறுத்தவரை இது ஒரு அற்பணிப்பு. மஞ்சுவிடம் அவன் கொண்ட காதலுக்கு அற்பணிப்பு. மஞ்சு என்கிற தன் காதலை, அது எவ்வாறு இருந்ததோ, அதை அவ்வாறே ஒரு சின்ன சிதைவோ மாற்றமோ இன்றி அல்லது விரும்பாமல் அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தான் அவன். அவனைப் பொறுத்தவரை இறையும் காதலும் ஒன்றுதான். இறைவனிடத்தில் தன்னை அப்படியே உள்ளது உள்ளபடி அற்பணிப்பது போல, 'நீ உருவாக்கிய நான், உன்னில் ஒரு சிறு துளி நான், உன்னையன்றி நான் இல்லை, நீ பார்த்து என்ன செய்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்ள சித்தமாயிருக்கிறேன், என் சகலமும் உன்னுடையது, உன் பின்புலம் இல்லாமல் என்னிடம் எதிவும் இல்லை, உன்னிடம் என்னை அற்பணிக்கிறேன்' என்பதாக‌ மஞ்சுவுடனான காதலுக்கும் தன்னை அப்படியே அற்பணித்திருந்தான். அவளுடனான காதலில் முழுமையாக நனைந்திருந்தான்.
'உன்னிடம் அன்பு செய்யவே நான் பிறந்திருப்பதாய் உணர்கிறேன். உன்னிடமிருந்து எனக்கேதும் வேண்டாம். உன் விருப்பமாய் நீ எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள நான் தயார். நீயும் என்னையே நினைக்க வேண்டும் என்ற நிர்பந்தமில்லை. ஆனால், உன்னையே நினைத்திருக்க எனக்கு நானே நிர்பந்திக்கவும் எனக்கு பிடித்தம். உனக்கென எப்போதும் இருப்பேன். நீ விரும்பும் தூரத்தில் இருப்பேன். உன்னையே நினைத்திருப்பேன். உன் சலனம் என் கவலை. உன் சந்தோஷமே என் குறிக்கோள்.' என்பதாய் அவளைத் தனக்குள்ளே பூஜித்திருந்தான்.

அவள் வாடிக்கிடப்பது அவன் மனதை வாட்டியது. கண்களில் கண்ணீர் முட்டியது. அவளின் அப்போதைய நிலைப்பாட்டை புரிந்துகொள்ள முடிகிறது. அது அவளின் மனதை கசக்கிப்பிழியும் உணர்வுகளின் வடிகால். அது அப்போதைக்கு அவளுக்கு மிகவும் தேவை. தன்னுடைய தலையீடு அவளின் தவத்தை கலைக்கலாம். ஒரு செயற்கையை தோற்றுவிக்கலாம். அதை அவன் விரும்பவில்லை. அவளாகவே அதைவிட்டு வெளியே வரட்டும். பெருமூச்சொன்றை பிரசவித்தபடி எழுந்தான். மெளனம் அவனைச் சுற்று எங்கும் நிறைந்திருந்தது.

மதியம் சமைக்கப்படவில்லை. இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவளுக்கு உணவு தேவைப்படலாம். தன் குழந்தையாகிப்போன, தியாகுவின் குழந்தை பிரமிளா பசியோடிருப்பதை அவள் தாயுள்ளம் சகியாது. உணவு தயார் செய்தால் அவளுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணியவாறே உடைமாற்றிவிட்டு, சமையற்கட்டிற்குள் நுழைந்து, அவளுக்கு மிகவும் பிடித்தமான வெண்டைக்காய் சாம்பார் வைக்கத் தொடங்கினான். அங்கு பெட்ரூமில், மஞ்சுவின் கைகளுக்கும் நெஞ்சுக்கும் இடையில் அந்த தங்க நிற ஃப்ரேமில் நந்தாவின் புகைப்படம் அவளது கண்ணீரில் நனைந்துகொண்டிருந்ததையும், யாரும் எழுப்பாமல், அவள் மனம் ' நந்தாவின் காதலுக்கு தான் அருகதையற்றவள் என்பதாயும், நந்தா அளவிற்க்கு ஒருவரை காதலிக்க முடியாது' என்பதாயும் அரற்றிக்கொண்டிருந்ததையும் அவன் அறிந்திருக்கவில்லை. நந்தாவுக்கு அது தேவையுமில்லை.

- ramprasath.ram@googlemail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்