| 
            [இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் 
            எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு 
            இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 
            'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது ]அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் 
            தத்துவவியற் பார்வைகளும்!
 
 - வ.ந.கிரிதரன் -
 
 
  "'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே 
            பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  
            பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் 
            இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார்
            கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான 
            பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது 
            மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட 
            வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான
            'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் 
            காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு 
            ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 
            'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு
            வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் 
            சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் 
            பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் 
            இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை 
            ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது 
            குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி
            வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை 
            முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே
            மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் 
            தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , 
            துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய 
            சிறப்பியல்புகளிலொன்று. அறுபதுகளில், எழுபதுகளில்
            கோலோச்சிக் கொண்டிருந்த முற்போக்கிலக்கியப் படைப்புகளைக் காரமாக 
            விமர்சித்தவர் வெ.சா. அதன் காரணமாக, 'கலை 
            சமுதாயத்திற்கே' என்னும் முற்போக்கணியினரை, அவர்தம் கலைப்படைப்புகளின் 
            தன்மையினைத் தன அறிவிற்கேற்ப , தர்க்கரீதியாக 
            விமர்சித்த காரணத்தினால் வெ.சா.வைக் 'கலை கலைக்காகவே' என்று வாதிடும், 
            'அழகியலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கு'மொரு' 
            அழகியல் உபாசகராகவும், சமுதாயப் பிரக்ஞையற்றவொருவராகவும் 
            ஓரங்கட்டிவிடவும் சிலர் தலைப்பட்டனர். அவரை முக்கியமான
            விமர்சகராக ஏற்றுக் கொண்டு அதே சமயம் அவர் அறிவுத்தளத்தையொரு 
            பொருட்டாகவே கருதியதில்லையென்றும், அவரது மொழி 
            விமர்சனத்திற்குரிய தர்க்க மொழியல்லவென்றும் கூறித் தமது 
            மேலாவிலாசத்தைக் காட்டும் முனைப்புகளும் நடைபெறாமலில்லை. வேறு சில இளம் 
            படைப்பாளிகளோ அவரை ஞான சூனியமென்றும், அயோக்கியனென்றும் கூட வசை 
            பாடினர். இவை பலவற்றுக்கு அவர் தன் பாணியில் பதிலிறுத்துள்ளார். 
            அத்தகைய அவரது பதில்களில் சிலரைச் சீண்டியுமிருக்கிறார். தனது 
            எழுத்தினைப் பற்றிக் குறிப்பிடும்போது 'எல்லாமே தனி மனிதனாகவும், 
            இந்தச் சமுதாயத்தில் ஓர் அங்கமாகவும், என் உணர்வுகளைத் தாக்கிய, 
            சுற்றிச் சமூகத்தில் நடக்கும் அருவருப்பான நடப்புகளைப் பற்றிய என் 
            எதிர்வினைகள்' ('விவாதமேடைச் சர்ச்சைகள்'; பக்கம் 4- முன்னுரையில்) 
            என்று குறிப்பிடும் இவரது எண்ணங்களின் தர்க்கச் சிறப்பும், பரந்த 
            வாசிப்புடன் கூடிய அறிவும் பிரமிக்க வைப்பன.. கலாநிதி கைலாசபதியின் 
            'தமிழ் நாவல் இலக்கியம்' பற்றிய இவரது 'மார்க்சின் கல்லறையிலிருந்து 
            ஒரு குரல்' என்னும் விரிவான ஆய்வுக் கட்டுரை, 'பேராசிரியர் 
            நா.வானமாலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' போன்ற கட்டுரைகளும் அவற்றிற்கான 
            எம்.ஏ.நுஃமான் போன்றவர்களின் எதிர்வினைககளும் தமிழ் இலக்கியத் துறைக்கு 
            வளம் சேர்ப்பன. இவர்கள் விவாதங்களில் முரண்பட்டிருந்த போதிலும், அவை 
            தர்க்கச் சிறப்பு மிக்கவை. ஆழமானவை. சிந்தனையினைத் தூண்டுவன. இவர்கள் தங்களது விமர்சனங்கள் 
            தமது தனிப்பட்ட வாழ்வினுள் குறுக்கிட விடாது பார்த்துக் கொண்டனர். 
            வல்லிக்கண்ணனை விமர்சிக்கும் அதே சமயம் சாகித்திய அகாடமி விருது தானாக 
            அவரைத் தேடி வந்தததை மனம் திறந்து பாராட்டுவார். ஜெயகாந்தன் 
            போன்றவர்கள் ஏற்கனவே சாகித்திய அகாடமி விருதுகள் பெற்றவர்களைவிட 
            மேற்படி விருதினைப் பெறுவதற்கு உரித்துடையவர்களென்று தன் கருத்தினை 
            உரத்து எடுத்துரைக்கும் வெ.சா. மறுநிமிடமே தினமணிக்கதிரில் அவரது 'ரிஷி 
            மூலம்' போன்ற கதைகளை இனி பிரசுரிக்க மாட்டொமென்ற அறிவிப்பும் 
            வந்தபின்னரும் தொடர்ந்தும் அவ்விதழில் தன் தொடர்கதைகளை எழுதிய 
            அவரது சந்தர்ப்பவாதத்தினைக் கேள்விக்குட்படுத்துவார். 
            சி.சு.செல்லப்பாவின் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். அதற்காக 
            அவரைக் கடுமையாக விமர்சிக்கவும் தயங்க மாட்டார்.  
            இவ்விதமாகச் சுற்றிவர நிலவிய எதிர்ப்புகளின் மத்தியில், கடந்த 
            ஐம்பதாண்டு காலமாகத் தனித்துத் துணிச்சலாகத தனது கருத்துகளைக் 
            கூறுவதற்குத் தயங்காமல் வாழ்ந்து வருபவர். , உண்மையில் வெ.சா.வின் கலை 
            பற்றிய பார்வை மற்றும் அவரது தர்க்கச் சிறப்பும், பரந்த அறிவும் 
            அடங்கிய இருப்பு பற்றிய தத்துவவியற் பார்வை இவற்றின் மூலம் அவரை 
            இனங்காண்பதே பொருத்தமானது. எந்தவிதப் பயன்களினதும் எதிர்பார்ப்பின்றித் 
            தனது பங்களிப்பினை வழங்கிய வெ.சா.வின் பங்களிப்பு எந்தவிதக் 
            காழ்ப்புணர்ச்சிகளுமற்று, அவரது படைப்புகளினூடு அறியப்பட வேண்டும்; 
            வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பதும் இக்கட்டுரையின் இன்னுமொரு 
            நோக்கமாகும். 
 வெ.சா.வும் கலை பற்றிய அவர்தம் பார்வையும்:
 
  'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் 
            கலைகளாகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 36) 
            `'சித்திரமாகட்டும், இலக்கியமாகட்டும் சிற்பங்களாகட்டும் அது ஒரு 
            தனிமனிதக் கலைஞனும் சமூகமும் கொண்ட உறவாடலின் பதிவு' (கலை உலகில் ஒரு 
            சஞ்சாரம்'; க்0) அதே சமயம் 'கலைஞரின் மன உந்துதல்களுக்கேற்ப, 
            அக்காலத்துச் சூழ்நிலைகளுக்கேற்ப, மீறியே ஆக வேண்டிய சுய, சமூக 
            நிர்ப்பந்தங்களுக்கேற்ப, தானறிந்தோ அறியாமலோ, மரபுகள் மீறப்படுகின்றன' 
            ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்': பக்கம் 39) என்று குறிப்ப்டும் வெ.சா. 
            'சமூக மாற்றங்களோ' அல்லது கலைப்படைப்பு மனதிலேற்படுத்தும் விளைவாக 
            உருவாகும் மாற்றங்களோ முன்கூட்டியே விதிகளால் தீர்மானிக்கப்பட்டுப் பெற 
            முடியாது' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 40) என்கின்றார். 
            சூத்திரங்களுக்குள் கலையினை அடைப்பதை அவர் பலமாகவே எதிர்க்கின்றார். 
            இந்த விடயத்திற்காகத்தான் அவர் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் (மார்க்சியத் 
            தத்துவத்துடனல்ல), முற்போக்கணியினருடன் முரண்படுகின்றார். அடித்தளமாக 
            விளங்கும் சமூக-பொருளாதார அமைப்புகளே இலக்கியம், தத்துவம், அரசியல் 
            போன்றவற்றினை உள்ளடக்கிய மேல் கட்டுமானத்தை உருவாக்குகின்றனவென்பதை 
            அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'நம் தத்துவ சரித்திரத்தின் பல சிந்தனைகளை, 
            மனித வரலாற்றின் நிகழ்ச்சிகளில் பலவற்றை அவற்றின் சமுதாய- பொருளாதார 
            அமைப்பின் விளைவாகக் காணலாம். அப்படியில்லாதவை அநேகமுண்டு. அதுபோல 
            சமூக- பொருளாதார அமைப்புகளைத் தத்துவ சிந்தனைகளின் விளைவாகவும் 
            காணமுடியும். இவை ஒன்றை ஒன்று பாதிக்கின்றன. பாதிக்காமலே அமைதியாகக் 
            கூட்டு வாழ்க்கை நடத்துவதும் உண்டு. எது நிரந்தரமான அடித்தளம், எது 
            நிரந்தரமான மேல் கட்டுமானம் என்று சொலவ்து முடியாது. இது ஒரு முடிவற்ற 
            சுழல். எதை ஆரம்பம், எதை முடிவு என்று சொல்வது? முடிவற்றுப் 
            பிரவாகிக்கும் சரித்திர கதியின் ஒரு கால கட்டத்தை வேண்டுமானால் 
            மடையிட்டுத் தடுத்து, ஒன்றை ஆரம்பம் என்றும் பின்னையதை முடிவு என்றும் 
            சொல்லலாம். அதைச் சொல்ல வசதியாகக் கட்டிய மடை , அதன் உணமையைப் 
            பொய்ப்பித்து விடுகிறது. மடையை நீக்கிவிட்டால், விளைவு என்று 
            சொல்லப்பட்ட பின்னையது அடுத்த கதியில் ஆரம்பமாகக் காட்சியளிக்கும்' 
            ('விவாதங்கள் சர்ச்சைகள்'; பக்கம் 41). இவ்விதம் வெ.சா. கூறுவதைப் 
            பார்த்து அவரையொரு மார்க்சியத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்துக் 
            குரல்கொடுத்தவராகக் கருத முடியாது. அப்படியிருந்தால் 'மார்க்சின் 
            முடிவுகள், மனித சிந்தனை வளத்திற்கு அளித்த பங்கு உண்மையிலேயே 
            அதிகம்தான்' ('விவாதங்கள், சர்ச்சைகள்'; பக்கம் 88) என்று அவரால் 
            கூறியிருக்க முடியாது. பல முற்போக்குப் படைப்புகளையெல்லாம் ஆரோக்கியமாக 
            விமர்சித்திருக்க முடியாது. வெ.சா. மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர். 
            அதனை அவரது கட்டுரைகளில் அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கின்றார். 
            அவ்விதம் மார்க்சியத்தைக் கற்றபின்தான் அதனை மீறிச் சிந்திக்குமொரு 
            எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளப்படுத்த அவரால் முடிகிறது. நம் 
            உணர்வுகளாலும், பார்வையினாலும் பெறப்படும் அனுபவ உலகிலிருந்து 
            உருவாகும் கலைகளை விதிகளுக்குள் கட்டுப்படுத்திவிட முடியாதென்பதே 
            வெ.சா.வின் பார்வை. இதனை நன்கு விளங்கிக் கொண்டால் முரண்பாடுகள் பற்றிய 
            விதிகளை விபரிக்கும் மார்க்சியக் கோட்பாடுகளுக்கமைய வெ.சா.வின் 
            பார்வையும் தவிர்க்கமுடியாததொரு முரண் என்று உள்வாங்கி விளங்கிக் 
            கொண்டிருந்தால் இரு சாராருமே இத்தகைய மோதல்களை,  
            ,முரண்பாடுகளை ஆரோக்கியமானவைகளாகக் கருத முடியும். வெ.சா. ஒரு போதுமே 
            மார்க்சியத்தின் மூலவர்களான கார்ல் மார்க்சையோ அல்லது எங்கெல்சையோ 
            தரக்குறைவாக மதிப்பிட்டவரல்லர். 'மார்க்ஸினதும், எங்கெல்ஸினதும் 
            சிந்தனைகள் அவர்களது காலத்துக்குரியன. அவர்களையும் மீறி உலகமும், 
            சிந்தனை நிலைகளும் சென்றுவிட்டன' என்பது அவர் கருத்து. இதனால்தான் அவர் 
            '... அவர்களது மேதைமையையோ, புரட்சிகரமான சிந்தனைகளையோ குறை 
            கூறுவதாகாது. அவர்கள் காலத்தில் அவர்களின் எதிராளிகளின் கருத்து நிலையை 
            அறிந்து அதற்கு எதிராக வாதாடியவர்கள். அவர்கள் காலம் மாறி விட்டது. 
            கருத்து நிலைகள் மாறி விட்டன. மார்க்ஸ்-எங்கெல்ஸின் வாதங்கள் இன்று 
            நமக்கு உதவுவதில்லை.' இவ்விதம் கூறும் வெ.சா. லெனினோ, ஸ்டாலினோ 
            மார்க்ஸ்- எங்கெல்ஸின் கருத்துகளை அவர்கள் அளித்த ரூபத்தில் 
            ஏற்றுக்கொள்ள்வில்லை. இன்றைய சோவியத் ரஷ்யாவும் அப்படியே 
            ஏற்றுக்கொள்ளவில்லை. மா-ஸே-துங்கும் ஏற்றுக்கொள்ளவில்லை' ('விவாதங்கள், 
            சர்ச்சைகள்'; பக்கம் 80) என்பார்.  உண்மையில் வெ.சா. மார்க்ஸ், எங்கெல்ஸ் 
            ஆகியோரின் தத்துவங்களைக் குப்பைக் கூடைக்குள் போடுங்களென்று கூறவில்லை. 
            காலத்திற்கேற்ப அவை மாறவேண்டுமென்றுதான் வற்புறுத்துகின்றார். 
            அதிலவருக்கு எந்தவித முரண்பாடுமில்லை என்பதைத்தான் அவரது கீழ்வரும் 
            கூற்று புலப்படுத்துகின்றது: 
 '19-11ம் நூற்றாண்டில் முதலாளித்துவ வர்க்கம் இருந்த திசையைச் சரியாகக் 
            கணித்துத்தான் மார்க்ஸும் எங்கெல்ஸும் தங்கள் சித்தாந்த
            பீரங்கிகளைக் குறிபார்த்துக் கொடுத்துள்ளார்கள். முதலாளித்துவம் அந்த 
            இடத்தை விட்டு நகர்ந்துவிட்டது. அதற்கேற்ப உங்கள் 
            பீரங்கிகளின் குறியையும் மாற்றிக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 
            மார்க்ஸும் எங்கெல்ஸும் குறிவைத்துக் கொடுத்த 
            இடத்தையே சுட்டுக்கொண்டிருப்பதால்தான் உலகம் முழுதும், எங்கிலும் 
            இருக்கும் முதலாளித்துவத்தை நீங்கள் எதுவும் செய்ய 
            முடியவில்லை' (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 80)
 
 அத்துடன் அவர் கீழ்வருமாறும் கூறுவார்: ' மார்க்சையும், எங்கெல்சையும் 
            ஒவ்வொருவரும் கற்க வேண்டும். அது அவசியம். கற்று, 
            ஜீரணித்து, அவர்கள் சித்தாந்தத்தை நம் System-இல் ஒன்று கலக்கச் செய்ய 
            வேண்டும். ஜீரணமாகாது மாந்தம் ஏற்பட்டுவிடக் கூடாது' 
            என்கின்றார். இது எதனைக் காட்டுகிறதென்றால் வெ.சா. மார்க்சியத்தின் 
            எதிர்ப்பாரல்லர்; ஆனால் அத்தத்துவத்தைக் கற்று, உள்வாங்கி,
            அது ஜீரணித்துப் பெறும் சக்தியில் அடுத்த வளர்ச்சிக்குச் செல்ல 
            வேண்டுமென்ற கருத்துடையவர் என்பதையல்லவா? மேலுள்ள கூற்றின் இறுதியில் 
            அவர் 'கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் மாந்தம் ஏற்பட்டுவிட்டது' என்பார். 
            அவ்விதம் அவர் கூறுவது கம்யூனிஸ்ட்
            கட்சியினரைத்தான். எனவே கம்யூனிஸ்ட் கட்சியினரோ அல்லது முற்போக்குப் 
            படைப்பாளிகளோ வரிந்து கட்டிக் கொண்டு வெ.சா.வின் 
            மேல் குற்றச்சாட்டுகளை வீசுவதற்குப் பதில், தங்களுக்கு ஏன் 
            மாந்தமெற்படவில்லையென்பதை வெ.சா.வுக்குப் புரிய வைத்தாலே
            போதுமானது. அதனைத்தான் அவரும் எதிர்பார்க்கின்றாரென்பதைத்தான் அவரது 
            கட்டுரைகள், கூற்றுகள் புலப்படுத்துகின்றன.
            மார்க்ஸியம் பற்றி, கலையின் அம்சங்கள் பற்றியெல்லாம் வெ.சா. என்னுமொரு 
            மனிதருக்கு அவரது கற்றுக் கேட்டு, உணர்ந்த 
            அறிவிற்கேற்ப சரியென்று படக்கூடிய கருத்துகளுள்ளன. அந்தக் கருத்துகள் 
            மாற்றுக் கருத்துகளாக இருக்கின்றன என்பதனால் அவற்றைக்
            கொச்சைப்படுத்திச் சேற்றை வாரித்தூற்றுவதில் அர்த்தமெதுவுமில்லை. கருத்தை 
            கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான
            தர்க்கத்தின் மூலமே அது சாத்தியம். எவ்விதம் வெ.சா.வுக்கு மார்க்ஸிய 
            கோட்பாடுகளில் ஈடுபாடுள்ள ஓவியர் தாமோதரனின்
            ஓவியங்களைக் கலைத்துவமிக்க படைப்புகளாகக் காண முடிகிறதோ? அந்தப் 
            பக்குவம் நல்லதொரு ஆரோக்கியமானதொரு பண்பு. 
            அதனால்தான் அவரால் தாமோதரன் போன்றவர்களுடன் மார்க்சியம் பற்றியெல்லாம் 
            ஆரோக்கியமான விவாதங்களை நடாத்த
            முடியுமென்று கூற முடிகிறது. தன் படைப்புகளைப் பற்றிக் 
            குறிப்பிடுகையில் வெ.சா. அவர்கள் 'என் கருத்துநிலை என்ன என்று 
            தெரிந்து, புரிந்து, ஒப்புக் கொண்டு பின் என்னுடன் வாதிட வாருங்கள்' 
            (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 80) என்று கூறுவதைப் போல் அவரது 
            கருத்துகளைப் பற்றி விவாதிக்க விளைபவர்கள் அவர் கூறுவதைப் படித்து, 
            புரிந்து, ('ஒப்புக் கொண்டு' என்று அவர் கூறுவதை என்னால் ஏற்க 
            முடியாது. ஒப்புக் கொண்டால் பின் எதற்கு விவாதம்? - கட்டுரையாளர்) 
            அவருடன் வாதிட முனைவதே சரியானதாகப்படுகிறது.
            மேலும் வெ.சா. மாக்ஸிய கோட்பாடுகளைச் சூத்திரங்களாக்கி , அவற்றிற்கியைய 
            படைக்கப்படும் படைப்புகள் கலைத்தன்மையினை 
            இழந்து விடுகின்றனவென்று கருதினாலும், கம்யூனிஸ்டுகள் 
            ஆட்சியிலிருக்கும் நாடுகளிலிருந்து உண்மையான கலைப்படைப்புகள்
            வெளிவராதென்று கருதியவரல்லர். அவ்விதம் வந்தபொழுது அவற்றைக் 
            குறிப்பிடவும் மறந்தவரல்லர். 'இன்னமும் குறிப்பாக, மிலாஸ் 
            போர்மன் என்ற பெயரைக் கவனித்தீர்களானால் இன்னுமொன்று விளங்கும். மிலாஸ் 
            போர்மன், கம்யூனிஸ்டுகள் அரசு செலுத்தும் 
            செக்கோஸ்லோவேகியாவிலிருந்து வந்தவர். அங்கு இருந்தவரின் அவரது 
            படைப்புகள் , கலைப்படைப்புகளாக இருந்தன. காரணம்
            கம்யூனிஸ ஆட்சி அல்ல. அங்கு இருந்த திரைப்பட உள்வட்டச சூழல், கலைப் 
            பண்புகொண்ட சூழல். ஆகவே அங்கு இருந்தவரை அவர் 
            படைத்தவற்றின் கலைப்பண்புகளைக்கண்டு, கலையாக அவற்றை ஏற்றுக் கொண்டோம். 
            அமெரிக்கா வந்ததும் அமெரிக்க திரைப்பட 
            உள்வட்டச் சூழலின் வியாபாரப் போக்கு, அவரது கலையைக் கொன்றுவிட்டது.' 
            (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 73)
 
 ஆகச் சுருக்கமாகக் கூறப்போனால் 'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் 
            அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் 
            கலைகளாகின்றன' என்றும் , அவ்விதமான கலைப்படைப்புகள் கோட்பாடுகளின் 
            சூத்திரங்களாகி, வெறும் பிரச்சாரங்களாக மாறுதல் 
            கூடாதென்றும், ஆயினும் நல்லதொரு கலைப்படைப்பு உருவாவதென்பது அது எந்தச் 
            சமுதாயத்தில் உருவாகின்றதோ அங்கு நிலவும் 
            கலைப்பண்புகொண்ட உள்வட்டச் சூழல்களிலேயே தங்கியிருக்கிறதென்றும் வெ.சா. 
            கருதுவதாகக் கருதலாம். அதனைத்தான் அவரது
            படைப்புகளும் வெளிக்காட்டி நிற்கின்றன.
 
 வெ.சா.வும் இருப்பு பற்றிய தத்துவவியல் பற்றிய அவரது பார்வையும்!..
 
  'நா.வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையினைப் 
            பேராசிரியர் நா.வானமாமலை தனது 'ஆராய்ச்சி' என்னும்
            காலாண்டுப் பத்திரிகையில் பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் 
            கருத்துகள் பற்றியதாக எழுதியதற்குப் பதிலடியாக வெ.சா.
            எழுதியிருந்தார். பேராசிரியர் கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்' 
            என்னும் நூலிற்குப் பதில் விமர்சனமாக வெ.சா. 'மார்க்ஸின் 
            கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்றொரு நீண்ட கட்டுரையினை , 'நடை' 
            சஞ்சிகையில் தொடராக எழுதியிருந்தார். வெ.சா.வின் நீண்ட
            அக்கட்டுரைக்கு எதிரொலியாக நீண்டதொரு கட்டுரையொன்றினைப் பேராசிரியர் 
            எம்.ஏ.நுஃமான் எழுதியிருந்தார். அது பின்னர் அவரது 
            'மார்க்சியத் திறனாய்வும், இலக்கியமும்' என்னும் நூலிலும் 
            சேர்க்கப்பட்டிருந்தது. அதிலவர் வெ.சா. தனது 'நா.வானமாமலையின்
            ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையில் 'நான் கருத்து முதல்வாதியா? 
            பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் 
            இல்லைதான்' என்று குறிப்பிட்டிருப்பார். அதனைத் தனது கட்டுரையில் 
            நுஃமான் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:"'நான் 
            கருத்துமுதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் 
            இல்லைதான்' என்று சாமிநாதன் கூறுவது எவ்வளவு பேதமை,
            தத்துவ சித்தாந்தங்கள் எல்லாம் சாராம்சத்தில் கருத்துமுதல்வாதம், 
            பொருள்முதல்வாதம் என்ற இரண்டு பிரிவுக்குள் ஏதோ ஒன்றுள் 
            அடங்கும் என்பதும், சாமிநாதன் திட்டவட்டமாகக் கருத்துமுதல்வாதச் 
            சிந்தனையாளன் என்பதும் தத்துவ விசாரத்தைப் பொறுத்தவரை 
            இதுவும் அல்லாத அதுவும் இல்லாத 'அலி' பிறவிகள் இல்லை என்பதும் 
            வெளிப்படையான உண்மைகள்' ('மார்க்சியமும், இலக்கியத் 
            திறனாய்வும்' பக்கம் 126) 
 வெ.சா. தனது கட்டுரையில் மேற்படி முடிவுக்கு வரமுன்னர் விளக்கமாகக் 
            குறிப்பிடும் விபரங்களை மறைத்துவிட்டு அல்லது 
            தவறுதலாகத் தவறவிட்டு நுஃமான் மேற்படி கருத்தினைக் 
            கூறியிருக்கிறாரென்று தெரிகின்றது. இப்பொழுது வெ.சா. கூறியுள்ள முழு
            விபரத்தையும் பார்ப்போம்:
 
 "நான் நாஸ்திகன். கடவுளை நம்புகிறவனில்லை.(உண்மையான தெய்வ பக்தி 
            உள்ளவர்களை மதிப்பவன. நாம் காணும்
            பொருட்களெல்லாம் மாயை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவை நமக்கு 
            அளிக்கும் தோற்றம், அப்பொருட்களின் உண்மை
            அல்ல. இத் தோற்றம் நம்மைச் சார்ந்த , நம்புலன்களைச் சார்ந்த கருத்து. 
            அந்த உண்மையை அதன் முழுமையில் நாம் அறிய முடியுமா
            என்பது சந்தேகமே. உண்மையை அறிவது அறிவினால் மட்டும் சாத்தியமில்லை. 
            புலன்களை, தர்க்க அறிவை மீறிய உள்ளொளி மூல
            உண்மையைக் காண்பதும் சாத்தியமே. விஞ்ஞானமும், சுற்றமும் அவற்றின் 
            சாத்தியங்களில் எல்லை வரம்புகள் கொண்டவை. 
            இப்போதைய அதன் எல்லைகள் நாளை அகன்று செல்லலாம்ம். ஆனால் அதற்கும் 
            அப்பால், அப்பால் என்று உண்மை எட்டாதே அகன்று             சென்று கொண்டிருக்கிறது. உள்ளொளி மூலம் பெற்றது உண்மைதானா என்பதை அறிய 
            , பின்னர் தர்க்க அறிவும், விஞ்ஞானமும்தான் 
            துணைபுரிய வேண்டும்.... புலன்கள் சிந்தனைக்கு வழி வகுக்கின்றன. 
            புலன்கள் மூலம்தான் சிந்தனை சாத்தியமாகிறது முதலில். சிந்தனை 
            மட்டுமல்ல. பல்வேறு மனநிலைகளும் கூடத்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அவை 
            புலன்களை மீறி ஜீவிக்க ஆரம்பிக்கின்றன. அதே 
            போல் இதற்கு எதிராக மாற்றுப் பிரவாகம் உண்டு. சிந்தனையும் மனநிலைகளும் 
            புலன்களின் இயக்கத்திற்கும் காரணமாகின்றன.'
            (விவாதங்கள், சர்ச்சைகள்; பக்கம் 40)
 
 இவ்விதமாகக் குறிப்பிட்டுவிட்டுத்தான் வெ.சா. 'நான் கருத்து 
            முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் 
            இல்லைதான்' என்று குறிப்பிடுகின்றார். நுஃமான் இவற்றையும் ஆழ்ந்து 
            கவனித்திருந்தால் "'நான் கருத்துமுதல்வாதியா? பொருள்
            முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று சாமிநாதன் 
            கூறுவது எவ்வளவு பேதமை" என்று கூறியிருந்திருக்க
            மாட்டார். இப்பொழுது மீண்டுமொருமுறை வெ.சா.வின் கூற்றினை கூர்ந்து 
            புரிந்து கொள்ள முயல்வோம். 'நான் நாஸ்திகன். கடவுளை 
            நம்புகிறவனில்லை.(உண்மையான தெய்வ பக்தி உள்ளவர்களை மதிப்பவன. நாம் 
            காணும் பொருட்களெல்லாம் மாயை என்று நான் நினைக்கவில்லை' என்று 
            கூறும்பொழுது வெ.சா. ஒரு பொருள்முதல்வாதியாகத் தென்படுகின்றார். 
            இப்பிரபஞ்சத்தை ஆக்கியவர் அதனிலும் வேறான இன்னொருவரான கடவுள் என்பதை 
            அவர் ஏற்கவில்லை. அவ்விதம் அவர் ஏற்றிருந்தால், காணும் பொருளெல்லாம் 
            மாயை என்பதை அவர் ஏற்றிருந்தால் நிச்சயம் அவர் ஒரு 
            கருத்துமுதல்வாதியாகத்தான் தென்பட்டிருப்பார். ஆனால் அதே சமயம் 
            காண்பவற்றையெல்லாம் மாயையென்றும் நான் கருதவில்லையென்கின்றார். 
            அவ்விதமாயின் அவர் காண்பவற்றை உண்மையென நம்பும் பொருள்முதல்வாதியா 
            என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அவர் 'ஆனால் அவை நமக்கு அளிக்கும் 
            தோற்றம், அப்பொருட்களின் உண்மை அல்ல. இத் தோற்றம் நம்மைச் சார்ந்த , 
            நம்புலன்களைச் சார்ந்த கருத்து. அந்த உண்மையை அதன் முழுமையில் நாம் 
            அறிய முடியுமா என்பது சந்தேகமே.' என்றும் கூறுகின்றார். ஆழ்ந்து 
            நோக்கினால் இதுவும் சரிதான். நாம் காண்பது , உணர்வது, கேட்பது, 
            மணப்பது, சுவைப்பது எல்லாமே புலன்களின் மூலம் ஒருவரது மூளைக்குள் 
            சென்று அங்கு அதன் செயற்பாடுகள் மூலம் விளங்கிக்கொள்ளுமொரு 
            செயற்பாடுதான். அப்படியென்றால் நாம் காணும் எல்லாமே, அனைத்துமே நம் 
            மூளையின்னுள்ளிருந்து உருவாகுமொன்றா? அப்படியாயின் அதற்கும் வெளியில் 
            உண்மையொன்றென்று ஒன்று உண்டா? அதனால்தான் 'நாம் காணும் பொருட்களெல்லாம் 
            மாயை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவை நமக்கு அளிக்கும் தோற்றம், 
            அப்பொருட்களின்
 உண்மை அல்ல. இத் தோற்றம் நம்மைச் சார்ந்த , நம்புலன்களைச் சார்ந்த 
            கருத்து. அந்த உண்மையை அதன் முழுமையில் நாம் அறிய 
            முடியுமா என்பது சந்தேகமே' என்று வெ.சா. சந்தேகத்தைக் கிளப்பும்போது 
            அது நியாயமாகவே படுகிறது. ஏனெனில் புலன்களின் 
            செய்றபாடுகளின் மூலம் மூளையில் உருவாகும் இப்பிரபஞ்சம் பற்றிய 
            விம்பமானது தர்க்கரீதியாகப் பார்ப்போமானால் உண்மையா என்று கூட எமக்குத் 
            தெரியாது. ஏனெனில் எல்லாமே புலன்களைச் சார்ந்திருப்பதால் அவற்றை 
            மீறியோர் உண்மையிருக்க முடியுமென்பதை நிரூபிக்கவே முடியாது. வெ.சா.வும் 
            இவ்விதம் சிந்தித்திருக்கின்றார். அதனால்தான்'நம்புலன்களைச் சார்ந்த 
            கருத்து. அந்த உண்மையை அதன் முழுமையில் நாம் அறிய முடியுமா என்பது 
            சந்தேகமே. உண்மையை அறிவது அறிவினால் மட்டும் சாத்தியமில்லை' என்று 
            அவரால் கூறிட முடிகிறது. இதனால்தான் கடவுளென்றொரு மேலானதொரு சக்தி 
            இல்லையென்று நம்பும் விடயத்திலும், எல்லாமே மாயை அல்ல என்பதை நம்பும் 
            விடயத்திலும் பொருள்முதல்வாதியாகத் தென்படும் அவர் 'ஆனால் அவை நமக்கு 
            அளிக்கும் தோற்றம், அப்பொருட்களின் உண்மை அல்ல. இத் தோற்றம் நம்மைச் 
            சார்ந்த , நம்புலன்களைச் சார்ந்த கருத்து. அந்த உண்மையை அதன் 
            முழுமையில் நாம் அறிய முடியுமா என்பது சந்தேகமே.' என்று கூறும்பொழுது 
            காண்பதையே உண்மையென்று அடித்துக் கூறுமொரு பொருள்முதல்வாதியாக அவரைக் 
            காண முடியவில்லை. பொருள்முதல்வாதியாக மட்டுமவர் இருந்திருந்தால் 
            புலன்களுக்கு அப்பாலும் பொருள்மயப்பட்டதொரு உலகம் இருக்கிறதென்பதில் 
            அவருக்குச் சந்தேகம் வந்திருக்கக் கூடாது. ஆக அவர் ஒரு சமயம் 
            பொருள்முதல்வாதியாகத் தென்படுகின்றார். அடுத்த கணமே 'ஆனால் அவை நமக்கு 
            அளிக்கும் தோற்றம், அப்பொருட்களின் உண்மை அல்ல.' என்று கூறும்பொழுது 
            அவ்விதம் இல்லாமலும் இருக்கின்றார். ஆயினும் அடுத்துவரும் அவரது 
            கூற்றுகளான 'புலன்களை, தர்க்க அறிவை மீறிய உள்ளொளி மூல உண்மையைக் 
            காண்பதும் சாத்தியமே.' என்பதும், 'புலன்கள் சிந்தனைக்கு வழி 
            வகுக்கின்றன. புலன்கள் மூல்ம்தான் சிந்தனை சாத்தியமாகிறது முதலில். 
            சிந்தனை மட்டுமல்ல. பல்வேறு மனநிலைகளும் கூடத்தான். ஆனால் ஒரு 
            கட்டத்தில் அவை புலன்களை மீறி ஜீவிக்க ஆரம்பிக்கின்றன. அதே போல் இதற்கு 
            எதிராக மாற்றுப் பிரவாகம் உண்டு. சிந்தனையும் மனநிலைகளும் புலன்களின் 
            இயக்கத்திற்கும் காரணமாகின்றன' அவரை ஒருவிததில் கருத்துமுதல்வாதியாகக் 
            காட்டுகின்றன. ஏனெனில் உள்ளொளியென்று அவர் கூறுவது புலன்களை மீறியது. 
            அதே போல் 'சிந்தனை மட்டுமல்ல. பல்வேறு மனநிலைகளும் கூடத்தான். ஆனால் 
            ஒரு கட்டத்தில் அவை புலன்களை மீறி ஜீவிக்க ஆரம்பிக்கின்றன' என்று 
            கூறும்பொழுது அக்கூற்றும் அவரையொரு கருத்துமுதல்வாதியாக்கக் 
            காட்டுகின்றன. புலன்களை மீறுமொரு சக்தியாக இங்கு சிந்தனை அதாவது 
            கருத்து குறிப்பிட்ப்படுகின்றது. இது , அதாவது பொருளை மீறியதொரு சக்தி 
            என்னும் நிலைப்பாடு, கருத்து முதல்வாதிகளினுடையது. இங்கு 
            கருத்துமுதல்வாதியாகக் காணப்படும் வெ.சா. 'நான் நாஸ்திகன். கடவுளை 
            நம்புகிறவனில்லை' என்னும் போதும், 'நாம் காணும் பொருட்களெல்லாம் மாயை 
            என்று நான் நினைக்கவில்லை' என்று குறிப்பிடும்போதும் 
            கருத்துமுதல்வாதியாகத் தென்படவில்லை. ஆக அவர் தன்னைப்பற்றிக் 
            குறிப்பிட்ட 'நான் கருத்து முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? 
            இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்னும் கூற்றுச் சரியானதுதான். 
            இப்பொழுது இன்னுமொரு கேள்வி எழுகின்றது. அப்படியாயின் வெ.சா.வின் 
            அவ்விதமான கூற்றுக்கள் நுஃமான் கூறுவது போல் 'பேதமை'யானதுதானா? 
            'தத்துவ விசாரத்தைப் பொறுத்தவரை இதுவும் அல்லாத அதுவும் இல்லாத 'அலி' 
            பிறவிகள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை:' என்பதும் சரியான 
            நிலைப்பாடுதானா?' ஏதாவதொரு நிலைப்பாடொன்றினை எடுக்க வேண்டுமென்பது 
            கட்டாயம்தானா? இச்சமயத்தில் மகாகவி பாரதியையும் சிறிது நினைவு கூர்தல் 
            பொருத்தமானதே. பாரதியின் மிகவும் புகழ்பெற்ற கவிதையொன்றுண்டு. அது 
            'நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானா? பல 
            தோற்ற மயக்கங்களோ? என்று தொடங்கும் கவிதை. அதன் முழு வடிவம் கீழே:
 
 நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
 சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
 கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
 அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
 
 வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
 கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
 போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
 நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?
 
 கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
 கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
 சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
 சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
 
 காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
 வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
 காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
 காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.
 
 மேற்படி கவிதையில் ஆரம்பத்தில் பாரதி 'நிற்பது, நடப்பது, பறப்பது ஆகிய 
            உயிரினங்களெல்லாம் வெறும் சொற்பனந்தானா? வெறும்
            பல்தோற்ற மயக்கங்கள் மட்டும்தானா?' என்று வினா எழுப்புவான். அவ்விதம் 
            எழுப்பியவன் தொடர்ந்தும் 'வானகம், இளவெயில்,
            மரங்களெல்லாம் வெறும் கானல்தானா? காட்சிப் பிழைதானா? சென்றவையெல்லாம் 
            கனவு போல் சென்று மறைந்ததனால் தான் வாழும் 
            இந்த உலகும், ஏன் தானுமே கனவுதானோ?' என்றும் சிந்தனையைத் 
            தட்டிவிடுவான். இறுதியில் 'சோலையிலுள்ள மரங்களெல்லாம்
            தோன்றுவதோர் விதையிலென்றால், அதனைப் பொய்யென்று சொல்லலாமோ?' 
            என்றெதிர்க் கேள்வியெழுப்பி இறுதியில் 'வீண்படு 
            பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமா? ஆகக் காண்பதுவே உறுதி கண்டோம். 
            காண்பதைத்தவிர எதுவும் உண்மையில்லை' என்று 
            கூறுவான். இந்த விடயத்தில் பாரதி ஒரு பொருள்முதல்வாதியாகத் தெரிவான். 
            இந்த விடயத்தில் அவன் கருத்துமுதல்வாதியல்லன்.
            ஆனால் அடுத்தவரியிலே 'காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்' 
            என்னும்போது அவன் குறிப்பிடும் சக்தி என்பது என்ன 
            என்றொரு கேள்வி எழுகிறது. அவன் கண் முன்னால் காணப்படும் பொருளுலகைத் 
            தவிர வேறொரு சக்தியுள்ளதா? அவ்விதமான 
            சக்தியும் பொருளும் ஒன்றென்று கூறுகின்றானா? அதாவது அந்தச் சக்தியானது 
            தனித்தும், பொருளாகவும் ஒரே சமயத்தில் சமயங்கள் 
            கூறுவதுபோல் உருவமாகவும், அருவமாகவும், அரு-உருவமாகவும் உள்ளதொன்றா 
            என்றொரு கேள்வியும் எழுகிறது. அவ்விதம் அவன் 
            கூறுவானாயின் பொருள் தவிர்ந்த இன்னொரு சக்தியும் உண்டென்ற அர்த்தத்தில் 
            அவன் கருத்துமுதல்வாதியாகவும் கருதப்படவேண்டும். அந்த அர்த்ததில் அவன் 
            பொருள்முதல்வாதியல்லனென்றும் கருதலாம். தொடர்ந்து அவனது இன்னொரு 
            கவிதையான 'அல்லா' என்றொரு கவிதையில் 'பல்லாயிரம் பல்லாயிரம் 
            கோடியண்டங்கள்/ எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளிவானிலே/ நில்லாது 
            சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்' என்று 'கூறுவதைக் கவனிக்கும்போது 
            அவன் நம் முன்னால் விரிந்திருக்கும் பொருள் உலகைப் படைத்தது அதனினும் 
            வேறானதொரு சக்தியென்பதை நம்புமொருவனாகத் தென்படுவான். இவ்விதமே 'அறிவே தெய்வம்' என்றொரு 
            கவிதையில் 'உள்ளத னைத்திலு முள்ளொளி யாகி/ யொளிர்ந்திடு மான்மாவே - 
            இங்குக்/ கொள்ளற்கரிய பிரமமென் றேமறை/கூவுதல் கேளீரோ?' என்றும் 
            'ஒன்றுபிரம முள்ளதுண்மை யஃதுன்/ உணஎவெனக் கொள்வாயே' என்றும் கூறுகையில் 
            கருத்துமுதல்வாதியாகவும் தென்படுவான். ஆக மகாகவி பாரதியையும் 
            ஒருவிதத்தில் கருத்துமுதல்வாதியாகவும், பொருள்முதல்வாதியாகவும், 
            மறுபுறத்தில் கருத்து முதல்வாதியல்லாதவனாகவும், 
            பொருள்முதல்வாதி அல்லாதவனாகவும் வெ.சா. தன்னைப் பற்றிக் 
            குறிப்பிடுவதைப் போல குறிப்பிடலாம். இந்த விடயத்தில் பாரதியை 
            நோக்கியும் அவனது மேற்படி கவிதையின் பொருளையிட்டு நுஃமான் கூறுவது போல் 
            அது 'பேதமை'யானதுதானா? தத்துவ விசாரத்தைப் பொறுத்தவரை இதுவும் அல்லாத 
            அதுவும் இல்லாத அலி பிறவிகள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை:' 
            என்பதும் சரியான நிலைப்பாடுதானா என்ற தர்க்கச்சிறப்பு மிக்க 
            கேள்வியொன்றினை எழுப்பலாம். உண்மையில் பாரதியின் மேற்படி நிலைக்குக் 
            காரணம் அவனது பேதமையல்ல. அறிவுத் தாகமெடுத்து அலையும் அவனது உள்ளத்தில் 
            அதன் விளைவாக எழுந்த கேள்விகளின் விளைவேயெனபது வெள்ளிடைமலை. மேற்படி 
            முரண்பட்ட நிலை போன்ற பலவற்றை அவனது படைப்புகளில் ஒருவரால் கண்டு 
            பிடிக்க முடியும். அவையெல்லாம் அவனது மேதமையின் வளர்ச்சிப் 
            படிக்கட்டுகள்தான். பாரதியின் மேற்படி கவிதையைப் போன்றதுதான் 
            வெ.சா.வின் மேற்படி கட்டுரையும் அதிலவர் வந்தடையும் 'நான் கருத்து 
            முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' 
            என்னும் முடிவும். உண்மையில் மேற்படி அவரது நிலையும் பாரதியைப் போல் 
            அறிவுத்தாகமெடுத்து அலையும் அவரது நிலையினைத்தான் குறிக்கிறதென்று 
            கொள்வதுதான் சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும்.
 
 பொதுவாக மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து வெ.சா. பற்றி நாம் வரக் கூடிய 
            முடிவுகளில் முக்கியமானவையாகப் பின்வருவனவற்றைக்
            குறிப்பிடலாம்:
 
 1. வெ.சா. எதிர்ப்பது மார்க்சியத்தையல்ல. அதன் கட்சி அரசியலைத்தான். 
            அது கலைகளில் போடும் கட்டுப்பாடுகளைத்தான். அத்தகைய 
            கட்டுப்பாடுகள் கலைப்படைப்புகளின் கலைத்துவமற்றதாக்கி வெறும் 
            பிரச்சாரமாக்கி விடுமென்று கருதுவதனால்தான் அவர் அத்தகைய 
            கட்சிக் குறுக்கீட்டை அவர் எதிர்க்கின்றார். இது அவரது கருத்து. 
            எல்லோரும் ஒரே கருத்தைத்தான் வைத்திருக்க வேண்டுமென்று 
            எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனையாற்றல், 
            தேடல், அறிவு, சூழல், கிடைக்கும் அனுபவம் 
            போன்றவற்றிற்கேற்ப ஒவ்வொருவிதமான முடிவு அல்லது கருத்து இருக்கும். 
            இருக்கலாம். அது இயல்பானதொன்றுதான். அதை மறுக்க 
            விரும்பினால் ஆரோக்கியமாக விவாதிக்கலாம். அதுவே சரியான நாகரிகமடைந்த் 
            மனிதரின் நிலைப்பாடாகவிருக்க முடியும்.
 
 2. வெ.சா. மார்க்ச், எங்கெல்ஸ் மீதும் அவர்களது கோட்பாடுகள் மீதும் 
            நன்கு மதிப்பு வைத்திருப்பவர். ஆனால் அவை உருவான 
            காலகட்டத்திற்குரியவை. இன்று நிலவும் சமுதாயப் பொருளியற் சூழலுக்கேற்ப 
            அவற்றிலும் மாறுதல்கள் செய்யப்பட 
            வேண்டுமென்பதையும் அவ்ர் வலியுறுத்துபவர்.
 
 3. பாரதியைப்போல் வெ.சா.வும் மூடநம்பிக்கைகளை வெறுப்பவர். அதனால்தான் 
            தன்னையொரு நாஸ்த்திகவாதியென்று அவரால் 
            குறிப்பிட முடிகிறது.
 
 4. இருப்பைப்பற்றி பாரதியைப் போன்று தத்துவத் தேடல் மிக்கவர். 
            பேராசிரியர் நா.வானமாலையின் கட்டுரைக்கு எதிர்ப்பாக அவர் எழுதிய 
            கட்டுரைகள் அதனைத்தான் எடுத்தியம்புகின்றன. கருத்துமுதல்வாதம், 
            பொருள்முதல்வாதம் பற்றிய அவரது எண்ணங்கள் அதற்கு நல்ல 
            உதாரணங்களாகவுள்ளன.
 
 ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடியான் அறிஞர் அ.ந.கந்தசாமி 
            இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் கால் பதித்தவர். அவர்
            'ஈழத்து சிருஷ்டி இலக்கியத்துக்கு குழி தோன்றும் முயற்சி' என்னும் 
            கட்டுரையில் ('தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்'- தொகுப்பு:
            சுபைர் இளங்கீரன்; சவுத் ஏசியன் புக்ஸ் பதிப்பகம்; மே 1993) ஈழத்திலும் 
            தென்னகத்திலும் சிருஷ்டி இலக்கியத்துறையில் ஈடுபட்டுத் 
            தமிழுக்குப் பயனுள்ள சேவை செய்து வருபவர்களாக கலை கலைக்காகவே என்று 
            கலைப் பிரக்ஞையுடன் இலக்கிய சிருஷ்டியில்
            ஈடுபட்டுள்ளவர்கள் (க.நா.சு தொடக்கம் கனக செந்திநாதன் வரையிலானவர்கள்), 
            கலை ஒரு பொழுது போக்குச் சாதனம் என்ற
            கருத்துடையவர்கள் (கல்கி, நாடோடி தொடக்கம் யாழ்ப்பாணத்துத் தேவன் 
            வரையிலானவர்கள்), மற்றும் கலையை ஒரு சமுதாய
            சக்தியாக, கலையை ஓர் ஆயுதமாகக் கருதுபவர்கள் (சிதமபர ரகுநாதன் தொடக்கம் 
            டானியல் வரையிலானவர்கள்) ஆகிய மூன்று 
            பிரிவினர்களைக் குறிப்பிடுவார். பின்னர் அவர்களைப் பற்றிக் 
            குறிப்பிடும் அவர் 'இந்த மூன்று பிரிவினருக்குள்ளேயும் பலவிதமான 
            கருத்து வேறுபாடுகள் உண்டு. அவற்றுள் சில ஆழமான தத்துவப் பிரச்சினைகள் 
            என்பதையும் நாம் பூசி மெழுக விரும்பவில்லை.
            இருந்தபோதிலும் இந்த மூன்று சாராருக்கும் இடையில் ஒரு முக்கியமான 
            பொதுத்தன்மையும் இழையோடிக் கொண்டிருக்கிறது என்பதை 
            நான் இங்கு வற்புறுத்த விரும்புகிறேன். அந்தப் பொதுத்தன்மை 
            என்னவென்றால் தமிழ் வளர்கிறது, தமிழை எம்மால் வளர்க்க முடியும்,
            தமிழ் காலத்துக்கேற்ப மாறுதல் அடைந்து செல்லவல்லது என்பது போன்ற 
            எண்ணங்களில் இவர்களுக்குள்ள அசையாத ஈடுபாடாகும். 
            இந்த நம்பிக்கைகளை தரும் மனோ ஆரோக்கியம்தான் இவர்களை சிருஷ்டி 
            இலக்கியத்துறையில் உற்சாகத்தோடு இறங்கச் செய்கிறது'
            ('தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்' ;பக்கம் 36)
 
 அ.ந.க.வின் இத்தகைய மனநிலை ஆரோக்கியமானது. அவரொரு 
            மார்க்சியவாதியாகவிருந்தபோதிலும் இவ்விதமாக ஏனைய இலக்கியப்
            போக்குள்ளவர்களின் பங்களிப்புகளையும் அங்கீகரிக்க முடிகிறது. 
            இத்தகையதொரு மனோபாவம் தமிழ் இலக்கிய மற்றும் 
            கலைத்துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். இவர்களுக்கிடையில் பல்வேறு 
            முரண்பாடுகள் மற்றும் தத்துவச் சிக்கல்களிருந்த 
            போதிலும் இவர்கள் அனைவருமே ஆரோக்கியமான பங்களிப்பினைத் தமிழ் கலை, 
            இலக்கியத் துறைக்கு வழங்கியவர்கள். வழங்குபவர்கள். இந்த 
            நிலையில் வெங்கட் சாமிநாதன், கலாநிதி கைலாசபதி , பேராசிரியர் 
            நா.வானமாமலை போன்றோரின் வாதங்களெல்லாம் ,             முரண்பாடுகளெல்லாம் தமிழ்க் கலை, இலக்கியத் துறைகளை வளம்படுத்தின; 
            வாசகர்களின் சிந்தனைக் குதிரைகளைத் தட்டி விட்டன.       இதே சமயம் வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பானது இன்னுமொரு வகையிலும் 
            மிகவும் முக்கியமானது. கடந்த ஐம்பது வருடங்களாகத்             தாங்கிப் பிடிக்க எந்தவிதமான கட்சியோ, ஸ்தாபனமோ 
            (முற்போக்கிலக்கியக்காரர்களுக்குள்ளது போன்று) இல்லாததொரு நிலையில்,
            
            தன்னந்தனியாகத் தன் பரந்த வாசிப்பு, கலைகள் பற்றிய விரிவான 
            புரிந்துணர்வு, இரசனை மற்றும், தேடல் மிக்க சிந்தனையின் 
            விளைவாகத் தன் கருத்துகளைத் துணிச்சலுடன் எடுத்தியம்பி வந்தவர். 
            யாருக்குமே அடிபணிந்தவரல்லர். சரியென்று பட்டதை நேருக்கு 
            நேராகவே அடித்துக் கூறும் ஆற்றல் மிக்கவர். ஆளுக்காள் துதிபாடி 
            வட்டங்களை உருவாக்கி, ஒருவரையொருவர் துதிபாடித் தம்மிருப்பை 
            நிலைநாட்டிட முனையுமொரு சூழலில், தன் அறிவை மட்டுமே மூலதனமாக்கி, 
            எந்தவித விளைவுகளையும், பயன்களையும் 
            எதிர்பார்க்காமல் , தனக்குச் சரியென்று பட்டதை வெளிப்படுத்தி வந்தவர்; 
            வருகின்றவர். திரு வெ.சா.வின் பங்களிப்பு தமிழ்க் கலை 
            இலக்கியத்துறையில் என்றென்றும் நன்றியுடன் நினைவுக்கூரப்படுமொரு 
            பங்களிப்பென்று துணிந்து கூறலாம்.. .
 
 உசாத்துணை நூல்கள்:
 1. 'கலை உலகில் ஒரு சஞ்சாரம்' - வெ.சாமிநாதன் (சந்தியா பதிப்பகம்; 
            2004)
 2. 'விவாதங்கள் சர்ச்சைகள்' - வெ.சாமிநாதன் (அமுதசுரபி பதிப்ப்கம்; 
            டிசம்பர் 2003)
 3. 'அகமும் புறமும்' - தொகுப்பு: சோலைச் சுந்தரப்பெருமாள் (நிவேதிதா 
            பதிப்பகம்; 2008)
 4. 'மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்'- எம்.ஏ.நுஃமான்( அன்னம் 
            பதிப்பகம்; சிசம்பர் 1987)
 5. 'இன்னும் சில ஆளுமைகள்' - வெ.சாமிநாதன் (எனி இந்தியன் பதிப்பகம்; 
            டிசம்பர் 2006)
 6. 'புதுசும் கொஞ்சம் பழசுமாக..' - வெ.சாமிநாதன் (கிழக்கு பதிப்பகம்; 
            ஜூன் 2995)
 7. பாரதியார் கவிதைகள் (மணிவாசகர் பதிப்பகம்; பெப்ருவரி 2000)
 8. 'தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்' -தொகுப்பு- சுபர் இளங்கீரன் 
            ( சவுத் ஏசியன் புக்ஸ்; மே 1993)
 9. 'தமிழ் நாவல் இலக்கியம்'- பேராசிரியர் கைலாசபதி (குமரன் பப்ளிஷர்ஸ்; 
            ஏப்ரல் 1999)
 |