logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)
ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                 Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2003 இதழ் 44 - மாத இதழ்
 விளம்பரம்
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? ads@pathivukal.com
Computer Image
Computer Training!
[விபரம் உள்ளே]
தமிழ் எழுத்தாளர்களே!..
அன்பான ணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 
DownloadTamil Font
மண்ணின் குரல்.. 
மண்ணின் குரல் நூல் வெளி வந்து விட்டது. நூலினை வாங்க விருப்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: editor@pathivukal.com
இணையத்தில் உழைப்போம்!
எமது சேவை...
விரைவில் பதிவுகள் புதுப் பொழிவுடனும் மேலும் பல புதிய அம்சங்களுடனும் வெளிவரவுள்ளது.

வர்த்தகர்களே! உங்கள் விளம்பரங்களைப் பதிவுகள்ில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பதிவுகளில் விரைவில் மின்னஞ்சல் நண்பர்கள் பகுதி தொடங்கவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

ணையத் தளங்களை வடிவமைக்க , கிராபிக்ஸ் உருவாக்க எம்மை நாடுங்கள். மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.     editor@pathivukal.com

இலக்கியம்
சாகாத இலக்கியத்தின் 
சரித்திர நாயகன் - 4

அந்தனி ஜீவா

[ 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ] 

முதல் சந்திப்பு......(தொடர்ச்சி)

A.N.Kanthasamiஅவரது நட்பு எனக்கு ஏற்பட்டது அறுபதுகளில். பின் அவரின் அடுத்த காலம் வரை அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். அவரைச் சந்திக்கும் பொழுதெல்லாம் எழுத்துலக இடர்பாடுகளையும் பத்திரிகைத்துறை அனுபவங்களையும் அடிக்கடி கூறுவார். இலங்கை சமசமாஜக் கட்சியின் முழுநேரத் தொண்டனாக நான் பணியாற்ரிய வேளையில் தொழிற்சங்கப்  பரிவில் வெளிவந்த 'ஜனசக்தி' பத்திரிகையில் நான் ஆசிரியராகப் பணியாற்றியபொழுது, பத்திரிகை அமைப்பு முறைகளைப் பற்றி அரிய ஆலோசனைகள் கூறி எனது ஒரு வழிகாட்டியாக அமைந்தார்.

ஈழத்துத் தேசிய பத்திரிகைகளில் பணியாற்றும் பலர் அ.ந.க.வுடன் தொடர்புள்ளவர்களே. தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மாத்திரமன்றி ஆங்கில, சிங்களப் பத்திரிகையாளர்களுடனும் நல்ல தொடர்புடையவர் அ.ந.க என்பது நாடறிந்த உண்மையாகும்.

கவிதையும் கந்தசாமியும்...

கவிதையின் மூலம் இலக்கிய உலகில் காலடிச் சுவடுகளைப் பதித்த அ.ந.க. கவிதைத் துறையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் 'கவீந்திரன்' என்ற பெயரில்தான் நிறைய கவிதை எழுதினார். கவிதை இலக்கியத்தில் அதிக ஈடுபாடுள்ள அ.ந.க 'இலங்கை எழுத்தாளர் சங்க வெளியீடான' 'புதுமை இலக்கியம்' இதழில் கவிதையைப் பற்றி எழுதியுள்ளது....

"எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் முதலில் செய்யுள் தோன்றிய பின்னர் தான் வசனம் தோன்றியிருக்கிறது. தமிழ் இலக்கியம் இதற்கு விதிவிலக்கல்ல. வள்ளுவர், கம்பர், இளங்கோ வளர்த்த கவிதை தமிழின் மடியில் பிறந்ததுதான்.  இன்றைய வசனத் தமிழ் தென்னகத்தில் போலவே ஈழத்திலும் வசன இலக்கியத்தில் முன்னோடியாகப் பன்னெடுங்காலம் கவிதைத் தமிழ் முழங்கி வந்திருக்கிறது.  வசன இலக்கியம் நேற்றுப் பிறந்த பிள்ளை. அதன் சரிதம் கைப்பிடிக்குள் அடங்கும்.  மிகச் சுருங்கிய சரிதம். ஆனால், இலக்கிய உலகின் அரசியாகிய கவிதைத் தேவியோ நீண்டகாலம் வாழ்ந்தவள். காவியத்தின் சரிதை காலச் சேற்றில் ஆழப் புதைந்து கிடக்கிறது.  நீண்ட அதன் சரித்திரத்தை நிமிர்த்தி நிறுத்திக் கணக்கிடுவது  இலகுவான காரியமல்ல. கடினமான அப்பணியை எதிர்காலத்தில் யாராவது நிறைவேற்றுவர்.

செந்தமிழின் பொற்காலம் எனப் புகழப்படும் சங்க காலத்தில் கூட ஈழத்துக் கவிதையின் நன்மணம் கடல் கடந்து பரவிருந்தமைக்குப் போதிய சான்றுகள் உள்ளன. தமிழ் கூறும் நல்லுகம் முழுவதிலும் நடைபெற்ற  இலக்கிய முயற்சிகளின் போக்கை எடுத்து விளக்க நற்றிணை, குறுந்தொகை,அகநாநூறு ஆகிய நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார் எழுதிய அழகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தைக் கடந்து நிற்கிறார். தமிழ் இலக்கியத்தின் சுவையறிந்து போலும் அவர் மேலிட்டு நீலக்கடல் அதனைப் பெரும்பாலும் உட்கொண்டு விட்டது. பெரியதொரு கவிஞர் பட்டியலில் எஞ்சியிருக்கும் ஒரு சில நூற்றுவரில் பூதந்தேவனார் ஒருவர். ஆனால் அவர் மட்டுந்தானா முன்னாளில் தமிழ்க் கவிதைச் சங்கூதிய பெருமகன்? இன்னும் பலர் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களைப் பற்றி நாம் இன்று ஒன்றும் அறிய முடியாதிருக்கிறது."

ஈழத்துத் தமிழ்க் கவிதையைப் பற்றிக் கூறிப் பெருமைப்படும் அ.ந.கந்தசாமி 'உலகப் படத்தில் சிறு புள்ளியாக விளங்கும் இலங்கையில் சிறுபான்மையினராக விளங்கும் தமிழ் பேசுவோர் கவிதையின் மீது கொண்டிருக்கும் ஆர்வமும்  தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் ஆற்றும் தொண்டும் வியக்கக் கூடியனவாகும்" என்று அடிக்கடி கூறுவார்.

கவிதையைப் பற்றிக் கதையளப்பதுடன் நில்லாது கவிதைத் துறையில் தம் கைவண்ணத்தையும் காட்டியுள்ளார்.  'எதிர்காலச் சித்தன் பாடல்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'சத்திய தரிசனம்' ஆகியவை பலரால் பாராட்டப்பட்டவை.

ஆவேச அம்மானை
1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய 'பாவோதல்'  நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய 'கடவுள் என் சோர நாயகன்' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கண்பதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். பல கவிதை அரங்குகளின் தலமைப் பீடத்தை அலங்கரித்துள்ளார் அ.ந.க.

தேசபக்தன் பத்திரிகையில் 'கசையடிக் கவிராயர்' என்ற பெயரில் ஈழத்து இலக்கிய உலகில் நடைபெறும் திருகுதாளங்களையும் காசு கொடுத்து உண்மைப் படைப்பாளிகளின் படைப்புகளை வாங்கித் தம் சொந்தப் பெயரில் புத்தகமாகப் போடும் நபுஞ்சகத்தனத்தைக் கடுமையாகச் சாடினார்.

இதனால் இலக்கிய உலகில் அ.ந.கந்தசாமியைக் குறை கூறுவதைத் தொழிலாகச் சில உதிரிகள் மேற்கொண்டனர். 'கசையடிக் கவிராயர்' என்ற பெயரில் எழுதிய கண்டனக் கவிதைகலில் கூட தன் இனத்தைச் சார்ந்த கவிஞர்களை மறந்துவிட்ட இலக்கிய விமர்சகர்களைப் பார்த்து 'நற்கவிஞன் பீதாம்பரனை மறந்தாயோ?' என ஆத்திரக்கொண்டு ஆவேசத்துடன் அம்மானை பாடுகிறார்.

இதைப் போன்று தமிழகத்தின் புதுமை இலக்கியத்தின் விடிவெள்ளியாகிய புதுமைப் பித்தனும் இது போன்ற கவிதைகளை எழுதியுள்ளார். அவர் பாடியதில் ஓரிரு வரிகள் பின்வருமாறு-
'...மேல் நோக்கிக் 
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறு தமிழ் பாட்டாச்சே!
முட்டாளே! இன்னமுமா பாட்டு?'
என்று பாடியுள்ளார்.

இலக்கிய மலடர்
கசையடிக் கவிராயர் பெயரில் அ.ந.க எழுதிய பாடல்கள் இலக்கிய மலடர்களுக்குச் சாட்டையடிகளாக விழுந்தன.  எழுத்தாளர் தேசிய கீதத்தை எழுதிய பெருமை இவரையே சாரும். அந்தக் கவிதை இலங்கை முற்போக்குச் எழுத்தாளர் சங்கத்தின் அகில இலங்கை எழுத்தாளர் மாநாட்டின்போது வெளியிடப்பெற்ற 'புதுமை இலக்கியம்' சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கவிதையை 'கவீந்திரன்' என்ற பெயரில் அ.ந.க எழுதியுள்ளார்.  புதுமை இலக்கியம் மலர்களில் இதே கவிதை தொடர்ந்து எழுதப் படுகிறது. அந்த எழுத்தாலர் கீதத்தின் சில வரிகளை இங்கு குறிப்பிடுவது  சிறப்பாகும்.

'எழுத்தெனும் சங்கம்
ஒலித்திடுகின்றது
உழுத்திடும் உலகம்
ஒழிந்திடவே'

- சங்கு முழங்குது என முழங்கும் அ.ந.க

'சுரண்டல் மிகுந்தது
சூழ்ச்சி நிறைந்தது
இருண்ட இச்சமுதாயம்!
வறண்டு கிடந்திடும்
மக்களின் துன்ப,
வதைகள் ஒழித்திடுவோம்.!...'

புது அமைப்பும் நிறுவிடுவோம் எனச் சுரண்டலும் சூழ்ச்சியும் நிறைந்த இச்சமூக அமைப்பைப் பேனா முனை கொண்டு ஒழித்துப் புது அமைப்பை அமைக்க அறைகூவி அழைத்திடும் கவிஞர் தமிழ் இலக்கியத்தின் மூத்த பரம்பரையைச் சேர்ந்த கம்பன்,வள்ளுவனை இனங்கண்டு இப்படிக் கூறுகிறார்.

'கம்பன் - வள்ளுவன்
காளமேகம் வழி
வந்தவர் நாமன்றோ...?
கீரன் ஒளவை
இளங்கோ பெற்ற
கீர்த்தி நமதன்றோ?
நாவலன் - பாரதி 
சோமசுந்தரன்
நமது இனமன்றோ?-இஅவர்
யாவரும் காட்டும்
வழியே நமது
இலக்கிய நல்வழியாம்! அவ
வழியே சென்று
ஒளிசேர் தமிழை
விழி போற் காத்திடுவோம்'

காவிய மன்னர்களின் பெருமையைச் செப்பிய அ.ந.க மீண்டும் பாடுகிறார்.

'...
வானவில் வர்ணம் ஏழு
வளைவதைக் கண்டிடுவீர்.
கானகத்தில் கனிகள் ஆயிரம்
காற்றில் அசைவதைப் போல்
பூங்காவனத்தில் ஆயிரம் ஆயிரம்
பூக்கள் மலர்வதைப் போல்
புத்தம் புதிய கருத்துகள் ஆயிரம்
நித்தம் பெருகவென..'

எனக் கூறும் அ.ந.கந்தசாமி 'நமக்குத் தொழில் கவிதை. நாட்டிற்குழைத்தல். இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்று ஞாபகப் படுத்துகிறார்.

அ.ந.கந்தசாமியின் கனவு பொய்த்து விடவில்லை. அவர் வாழ்ந்த காலத்திலே அது நனவாகிக் கொண்டிருந்தது. எத்தனை எத்தனை கவிஞர்கள் தோன்றி நித்தம் நித்தம் ஆயிரம் கவிதைகள் படைத்தவண்ணம் இருக்கிறார்கள்.  தமிழ் நாட்டுக் கவிஞர்களைக் கூட விஞ்சும் அளவுக்குக் கவிதை வானில் உலா வருகிறார்கள். பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதைகள்  வளர்ச்சிக்கு ஈழத்தவர்களே சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் எனத் தமிழகப் படைப்பாளிகளே பாராட்டுகின்றனர். 

[* ஈழத்தில் தீண்டாமைப் பேய் தாழ்த்தப்பட்ட குடிமகனொருவனை வில்லூன்றி மயானத்தில் பலி கொண்டபொழுது அதனை முதன் முறையாகக் கண்டித்து 'வில்லூன்றி மயானம்' கவிதை படைத்தவர் அ.ந.க. என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூருவது பொருத்தமானதே. வீரகேசரியில் 'வெண்பா எழுவது எப்படி?' என்றொரு தொடரினையும் அ.ந.க எழுதியுள்ளதாக அறிகின்றோம். அ.ந.அகவின் கவிதைகள் சிலவற்றை பின்வரும் இணையத் தளத்தில் வாசிக்கலாம்.
http://www.geotamil.com/pathivukal/poems_ank.html ]

அ.ந.க.வின் கவிதைகள் சில....

சிந்தனையும் மின்னொளியும்
சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு  வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?

-அறிஞர் அ.ந.கந்தசாமீயின் ஆரம்பகாலக் கவிதையியிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-

எதிர்காலச் சித்தன் பாடல்
எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான் 
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன் 
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருனையூறும் 
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான் 
"எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங் 
கேன்வந்தாய் இவன்காணும் பலவுமுன்னை 
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே 
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான். 

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன் 
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச் 
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும் 
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே 
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை 
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக் 
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான் 
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன். 

"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா 
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர் 
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால் 
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா 
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில் 
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும் 
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன் 
காசினியின் பண்பிதனைக் கானப் பா நீ. 

வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை 
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன் 
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில் 
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு 
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம் 
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும் 
நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே" 

அண்டுபவர் அண்டாது செய்வதேது 
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன் 
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல் 
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று 
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த 
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும். 
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும் 
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா. 

அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம் 
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும் 
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம் 
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம் 
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச் 
சமானர்கள் மனிதகுலம் என்ற இன மென்பார் 
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம் 
அத்தனையும் ஒழிந்து  விடும் எதிர்கால உலகில். 

செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும் 
செகமெல்லாம் ஒருமொழியே தலை  தூக்கி நிற்கும். 
நந்தமிழர் இனம் இனஞ்சாகும் பிற இனமும் சாகும் 
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும். 
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில் 
எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு 
அந்த மொழி தானப்பா அரசாகும் உண்மை 
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல். 

நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச்  சீறி 
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின் 
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும் 
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார். 
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை 
இம்மியள வேணும்பி  மானமில்லா மூர்க்கன் 
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம். 
நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றுனிகழ்த்திடுவார். 

பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன் 
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன். 
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம். 
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே 
வெறிமிகுந்த நிகழ்காலத்   தீதுணரமாட்டார் 
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார் 
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும்  விளைப்பவர் 
ஐய்யய்யோ இவர்மடமை எனென்ன்று சொல்வேன். 

புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன் 
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து 
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன். 
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து 
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய 
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க 
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே 
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன். 

காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த 
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய் 
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர். 
ஞானத்தைக் கான்பாரோ? காணார்களப்பா 
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால் 
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார் 
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக்  கொன்ற 
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு 
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன் 
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக் 
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று. 
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும் 
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும் 
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு 
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்? 

வள்ளூவர் நினைவு
வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி 
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில் 
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும் 
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர் 
விள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம் 
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவியல் மன்றில் 
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு 
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து. 

பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில் 
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே? 
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி 
பரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன் 
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை 
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான் 
பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை 
பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே. 

மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள
மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்
விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர் 
வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம் 
இதமாக இல்வாழ்வில் காணுமிவை மூன்றும் 
இனிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார் 
இதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம் 
இவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம். 

வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம் 
வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே 
வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர் 
வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது 
1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) 
உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார் 
பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் 
பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன். 

வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார் 
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன் 
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று 
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு. 
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர் 
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு 
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே? 
அவிவிதமேல் சாய்காந்த ஆண்டவனும்" என்றார். 

நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன் 
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம் 
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்! 
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்! 
திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!
தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!
இசைநூலை நாமிழந்தோம் நாடகமும் இழந்தோம்
ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.
 

கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்
கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்
கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை
கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!
கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த
காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக்
கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று
கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?

நீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம் 
நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம் 
பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப் 
பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து 
ஊரிடத்தே எஞ்சிநின்றால் அஃதொன்று போதும் 
உற்றகுறை எங்களுக்கு இல்லை ­வன் யாதும் 
நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க 
நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க. 

கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.

செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின் 
சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட 
பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் இங்கு 
பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற 
நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீீர் 
நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற 
மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி 
மகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடூழி வாழி. 

-வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை

நான் செய் நித்திலம் 
வானிலோர் முத்தினை வைத்திழைத் ததுபோல் 
வளர்மதி தவழ்ந்தது; மாடியின் மீதுயான் 
இப்பி ஒன்றில் முத்தொன் றிட்டனன்; 
கழிந்தது; கழிந்தபின் என்மனை விளங்கக் 
கண்ணன் போலொரு கனிவாய்க் குழந்தை 
வந்தது; வந்தபின் வாணிலா முகத்தென் 
மனையாள் அதைஎன் மடியிடைக் கிடத்தி 
ஈரைந்து திங்களின் முன்னால் ஒருநாள் 
நீங்கள் செய்த நித்திலம் இதுவே. 
என்று கூறி மகிந்தனள்; அவள் கண் 
ஓரம் கண்டேன்; ஒளிமுத் தொன்று 
அங்கு துடித்ததும் கண்டனன்; அவள் விழி 
தொட்டேன்; முத்துத் தீய்ந்தது; மகிழ்ச்சியில் 
உள்ளத்திப்பியில் உதித்துக் கண்வழி 
வந்தஅம் முத்தில் வையகத் தின்பம் 
யாவும் கண்டனன்; அம்முத்தெனது 
மடியிடைக் கிடந்த மணிமிசை விழுந்திட 
மணியை எடுத்துநான் மலர்க்கரம் தடவி 
உச்சி மோந்தே உளம்மகிழ்ந் திட்டேன். 
நான் செய் நித்திலம் தேன் செய்ததுவே!

வில்லூன்றி மயானம்
நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில் 
நாம் கண்ட  ஈமத்தீ வெறுந்தீ அன்று 
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக் 
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள் 
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும் 
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க் 
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும் 
வல்லதொரு புரட்சித்தீ  வாழ்க வஃது. 

மக்கள்குல மன்றோநாம் மரமோ கீிழாம் 
மாடுகளோ விலங்குகளோ கூறும் என்று
திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத் 
தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு 
மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி 
மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத் 
திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச் 
சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி. 

கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது. 
கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ? 
பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள் 
பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார் 
வாழியரோ வரப்போகும் நவயு கத்தின் 
வளக்காலை இளம்பருதி வரவு ணர்த்தும் 
கோழியது சிலம்பலிது  வெற்றி ஓங்கல் 
கொள்கைக்காதரவு, நல்குவோம் நாம். 

பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று 
பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின் 
பரம்பரையாய்ப்  பேணிடினும் தீயதான 
பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும் 
சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச் 
சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச் 
சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின் 
சிரங்கொய்தே புகைத்திடுவோம் வாரீர் வாரீர். 

அன்னையார் பிரிவு
ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத 
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச் 
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம் 
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்; 
இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய் 
அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்; 
இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை 
ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே! 

பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப் 
பண்புடைய பிதாவென்றும் அம்மையாரைச் 
சீருதவும் செவ்வியளாம் மாதாவென்றுஞ் 
சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று 
நீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை 
தனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம் 
பாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து 
பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்! 

மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற 
காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த 
பேரிடிபோல் வந்ததையோ! அன்னை யாரின் 
பிரிவுதனை என்னசொல்வேன்; காந்தியாரின் 
சீரினிய பத்தினியே! சிறப்பின் மிக்க 
கஸ்த்தூரி  யன்னாய்! எம் கருத்தே! கண்ணே! 
பாரினிலே யெமைவிட்டும் சென்றாய்! இஃதோ 
பண்புடையார் செயல்? நம்மை மறந்தாய் கொல்போ? 

சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும் 
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம் 
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள் 
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று 
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப் 
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்! நல் 
மாதரசே! மாதர்களை முன்னே வைத்தாய் 
உன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ?

மாம்பொழிலாள் நடனம்.
மத்தள மெத்த முழங்க முழங்க
மாங்குயி லோஎனக் கீதம் இசைக்க
தத்தரி நெடுங்கண் திசைகளில் ஓடத்
தாம்தீம் ததிங்கின தோம்தோம் என்று
முத்தன மூரல் மென்மதி சிந்தி
முனிவரும் தங்கள் யோகம் மறப்ப
பத்தரை மாற்றுத் தங்கம் அனையாள்
பாரத சாத்திரச் சதிர்பயின் றாளே.

கட்டிள மெல்லுடல் கைகள் அசைய
கமல்பொற் பாதச் சலங்கை கிலுங்க
மொட்டிள முலைகள் முந்திடக் கன்னி
மோகன மெல்லிசை தானும் அசைய
பட்டுடை காற்றில் விசிறி அலைய
பார்ப்பவர் நெஞ்சினிற் காதலை மூட்டி
கட்டுட லாளந்த மாம்பொழி லாள்தன்
கண்களை வீசிச் சதிர்இடுகின்றாள்.

ஆடகப் பொன்னணி மன்னிடக் காலில்
அழகு சிலம்பு புலம்பிட நங்கை
நாடக மாடுதல் கண்டிடு நம்பியர்
நங்கையின் வேல்விழி உண்டிடுகின்றார்
கூடுதல் வேண்டிக் குமைந்திடு கின்றார்
குறிதவ றாதே ஐம்மலர் மன்மத
வேடுவன் வீசிடு வெங்கணை தன்னால்
வெய்துயித் திட்டார் வெந்திடுகின்றார்.

கோல்வளை வேல்விழி கொன்றிட லாலே
குமரர்கள் கோதையின் தாமரை போலும்
கால்தனில் நூபுரக் கிண்கிணி யாகி
கன்னியின் மெல்லுடல் தழுவ நினைந்தார்.

கன்னிகை யாளோர் கதிரொளி மின்னல்
காசினி வந்தே ஆடுதல் போல
புன்னகைப் பூவினை அள்ளி எறிந்து
புதுநட மிடுமக் காட்சியைக் கண்டு
மன்னவன் விச்சவி மகிபனின் மைந்தர்
மையலில் மூழ்கித் தனித்திட லானார்
மின்னிடை யாளின் பொன்னணி மேனி
முயங்கிட வேண்டி மயங்கிநின் றாரே.
 

சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் -1...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் -2...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் -3...உள்ளே
 

[ தொடரும் ]
முகப்பு|கவிதைகள்|கனடியத் தமிழ் லக்கிய   பக்கம்
காப்புரிமை :  வ.ந,கிரிதரன் 2000