அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை ஆசிரியரும், மூவினத்தையும் சேர்ந்த கலை, இலக்கியவாதிகளாலும் , கலை இலக்கியப் பேராசிரியர்களாலும் ஆழ்ந்து நேசிக்கபட்ட, அடிநிலை மக்களின் எழுச்சிக்குரலாக திகழ்ந்த டொமினிக்ஜீவா அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஒரு வருடகாலத்தையும் கடந்து நீடித்துச்செல்லும் கண்ணுக்குத் தெரியாத கொரோனே வைரஸ் தொற்று அச்சுறுத்தலினால், சமூக இடைவெளிபேணி வாழவேண்டிய சூழலுக்குள் முழு உலகமும் உள்வாங்கப்பட்டுள்ள பின்னணியில், டொமினிக்ஜீவாவின் ஆளுமைப்பண்புகளை, மாற்றுக்கருத்தியல்கொண்டிருந்தவர்களிடத்திலும் அவர் காண்பித்த மனிதநேய ஜனநாயகப்பண்புகளையும் நினைவுபடுத்தும் வகையில் நேற்று 14 ஆம் திகதி லண்டன் விம்பம் அமைப்பின் சார்பில் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான எம். பௌசர் ஏற்பாடு செய்திருந்த இணையவழி காணொளி அரங்கில் , பிரித்தானியா, கனடா, நோர்வே, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, தமிழ்நாடு, இலங்கை எங்குமிருந்தும் எழுத்தாளர்களும், கலை, இலக்கிய ஆர்வலர்களும் பங்கேற்றனர். டொமினிக்ஜீவாவின் நினைவுகளை பகிர்தலும், அவரது பங்களிப்புகளை கௌரவித்தலும் என்ற தொனிப்பொருளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.


இலங்கையிலிருந்து எழுத்தாளர்கள் ஐ. சாந்தன், சுதர்சன் செல்லத்துரை, மேமன்கவி, மல்லியப்பு திலகர், தமிழ்நாட்டிலிருந்து தோழர் வேலு, பா. செயப்பிரகாசம், லண்டனிலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மு. நித்தியானந்தன், ந. இரவீந்திரன், பிரான்ஸிலிருந்து தர்மினி, ஜெர்மனியிலிருந்து உமா, நோர்வேயிலிருந்து தாஸ் ஆகியோர் உரையாற்றினர்.

டொமினிக்ஜீவாவின் வாழ்க்கைப்பின்புலம், அவரது இலக்கியப்பிரவேசம்- அக்காலப்பகுதியில் நிலவிய சமூக அமைப்பும் சாதீய அடக்குமுறையும், வடபிரதேச பொதுவுடைமை இயக்கத்திற்குள் உருவான பிணக்கும் – பிளவும், கருத்தியல் போராட்டங்கள், இலக்கியத்தில் இழிசனர் வழக்கு குறித்து எழுந்த எதிர்வினைகள், இனவிடுதலைப்போராட்டத்தின் ஊற்றுக்கண், வர்க்கப்போராட்டமும் தமிழ்த்தேசியமும், ஆக்கவிலக்கியத்தில் யதார்த்தப்பண்பும், கற்பனாவாத அம்சமும், மறுமலர்ச்சி காலம், முற்போக்கு இலக்கிய முகாம், போர்க்கால இலக்கியமும் புகலிட இலக்கியமும் முதலான பல்வேறு விடயங்கள் ஜீவா நினைவேந்தல் உரைகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அனைத்து கருத்தியலாளர்களுடனும் ஜீவா, முரண் அறுத்து ஜனநாயப்பண்புடன் இயங்கியதை உரையாற்றியவர்கள் சுட்டிக்காண்பித்தனர்.

டொமினிக்ஜீவா இலங்கையில் மூவினங்களையும் சேர்ந்த படைப்பிலக்கியவாதிகளாலும் புகலிடத்திலிருந்து இலக்கிய செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுபவர்களாலும் ஆழ்ந்து நேசிக்கப்படுவதனால், அவர் உலகப்பொது மனிதனாக திகழ்ந்தார் எனவும் புகழராம் சூட்டப்பட்டார்.

இலங்கை அரசு, டொமினிக்ஜீவா அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் முத்திரை வெளியிடுவதற்கு வலியுறுத்த வேண்டும் எனவும் , அவரது நினைவாக அவர் பிறந்த யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபம் அமைக்கவேண்டும் எனவும் இந்த நினைவேந்தல் அரங்கில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி, கலந்துரையாடலுடன் நிறைவாக நிறைவுபேற்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.முகப்பு