சண்முகதாசனின் நினைவாக…(பகுதி 1) - ஜோதிகுமார் -
- 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா -
அண்மையில், பேராசிரியர் மௌனகுருவின் தலைமையில், சண்முகதாசனின் நினைவு சொற்பொழிவு ஒன்று பேராசிரியர் அகிலன் கதிர்காமரால் நிகழ்த்தப்பட்டது. இதன்போது, மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்களை அவர் கோடிட்டிருந்தார்.
ஒல்லாந்தர் காலம் தொட்டு, ஆங்கிலேயர், அமெரிக்கர் என உலகை ஆண்ட ஆதிக்கச் சக்திகள், மாறி மாறி வந்த ஒரு முதலாளித்துவக் கட்டமைப்பில், எவ்விதம் முன்னோக்கி நகர்ந்தனர் என்பது உரையின் சாரமானது. சுருக்கமாகக் கூறுவதெனில், மூலதனக் குவியல் என்பது, காலத்துக்குக் காலம் நாடுக்களிடைக் கைமாறுவதும் நகர்வதுமாகவே இருக்கின்றது என்பதும், இதற்கமைய அந்தந்த நாடுகள் உலக ஆதிக்கத்தைக் கைப்பற்றுதல் நடைமுறையாகின்றது என்பதுமே உரையானது.
வேறு வார்த்தையில் கூறுவதென்றால், உலகின் ஒருமுனை ஒழுங்கானது (Uni Polar World Order) எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதனை உரையானது தேட முயற்சித்தது எனலாம்.
2
மூலதனக் குவியலானது, ராணுவ வளர்ச்சியினையும் தொழில்நுட்பத்தையும் தனக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டே தனது ஆதிக்கத்தைக் கட்டமைத்து நிலைநாட்டி கொள்கின்றது.
இவற்றுக்கு இடையிலான நெருக்கமானது, மிக கவனமாகப் பரிசீலிக்கத்தக்கது. ஒருவேளை இம்மூன்றுமே ஒன்று சேர்ந்தாற் போல் வளர்வதாயும் இருக்கக் கூடும்.
பல்கலைகழகங்களின் ஸ்தாபிப்பில் இருந்து, விண்வெளியை ஆட்சிப்படுத்துவது முதல், கிட்டத்தட்ட பதினொரு விமானம்தாங்கிக் கப்பல்களை உலகம் முழுவதும் சுற்றி வரச் செய்தும், கிட்டத்தட்ட 750 ராணுவ தளங்களை உலகெங்கிலும் 80 நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்காவானது, இப்படியாய், இன்று தனது உலக ஆதிக்கத்தைக் கட்டமைத்து உள்ளது.