ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் 'நிலக்கிளி'. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல்.

நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார்.

இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன).

இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு 'நிலக்கிளி' என்னும் பறவை பற்றி 'நிலக்கிளி' நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. 'நிலக்கிளி' பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் 'கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது' என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

இந்த முரலிப்பழங்கள் எனக்கு வவுனியாவில் கழிந்த மாணவப்பருவத்தினை ஞாபகத்தில் எழச்செய்வது வழக்கம். வவுனியா மகா வித்தியாலயத்தின் வாசலுக்கு முன்பாகவிருந்த மரமொன்றின் கீழ் ஆச்சிமார்கள் சிலர் கடலை, பல்வகைப்பழங்களென கடகங்களில் கொண்டுவந்து விற்றுக்கொண்டிருப்பார்கள். பருவ மாறுதல்களுக்கேற்ப அவர்கள் கொண்டுவரும் பழங்களின் தன்மையும் மாறுவது வழக்கம். சில சமயங்களில் அவர்கள் 'முதலி'ப்பழம்தான் கொண்டுவருவார்கள். நிலக்கிளி நாவலை வாசிக்கும்மட்டும் அந்த முரலிப்பழங்கள் எனக்கு முதலிப்பழங்கள்தாம். அவ்விதம்தான் நாங்கள் அந்தப்பழங்களை அக்காலகட்டத்தில் குறிப்பிட்டுக்கொண்டிருந்தோம். அக்காலகட்டத்தில் 'முதலி'ப்பழங்கள் கரடிகளுக்கு மிகவும் பிடித்த பழங்களென்று கூறக்கேட்டிருக்கின்றோம். கரடிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களாகிய எங்களுக்கும் மிகவும் பிடித்த பழங்களாக அவை விளங்கினவென்றே கூறலாம்.

'நிலக்கிளி' நாவலில் வாசிப்பவர்களின் மனதையள்ளும் இயற்கை வர்ணனைகள் நிறையவே உள்ளன. அவற்றிலொன்று மாதிரிக்காக: "பதஞ்சலிக்கு தண்ணிமுறிப்புக் கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடர்ந்து கிடக்கும் இருண்ட காடுகள், அவற்றினூடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள், அவற்றின் கரையோரங்களில் கானமிசைக்கும் காட்டுப்பறவைகள் - இவையனைத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆசை! பருவத்தின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கத் தயாராய் இருக்கும் பதஞ்சலி, நடந்து திரிவது கிடையாது. சதா மான்குட்டியின் துள்ளலும் துடிப்புந்தான்! தண்ணிமுறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி, அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒருதடவை நின்றுதான் பின் அடித்துக்கொள்ளும்! அத்தனை கம்பீரம்! "

எனக்கு அந்த நாவலில் பிடிக்காத முக்கியமானதொரு விடயம் நாவலின் நாயகியான பதஞ்சலி சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை இழந்தத்தற்குக் காரணமாகத் தன் அறிவுக்கண்ணைத்திறந்து விட்ட புத்தக வாசிப்பே காரணமென்றெண்ணி அவற்றைத்தீயிட்டு எரித்து விடுகின்றாள். அதனை என்னால் ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் பதஞ்சலி நூல்களை எரிக்கும் காட்சியைப்பற்றி நூலாசிரியர் பின்வருமாறு விபரிப்பார்: " பிரசவப் படுக்கையால் எழுந்தவுடன் அவள் செய்த முதற்காரியம், தனக்கு உலகரீதியான நாகரீகம், பண்பாடு என்ற பலவற்றைக் கூறிப்பலவீனமடையச் செய்த கதைப் புத்தகங்களை அடுப்பில் போட்டுக் கொளுத்தியதுதான்! அவை கொழுந்து விட்டெரிந்து சாம்பராவதற்கு முன்பே, அவள் அவற்றையும், அவை தனக்குக் காட்டிய புதிய உலகத்தையும், அதன் புதிய வாசல்களையும் அறவே மறந்து போனாள்."

அவளுக்கு அறிவுக்கண்ணைக்காட்டிய புத்தகங்கள் அவளைப்பலவீனமடையச் செய்து விட்டதாக ஆசிரியர் விபரிக்கின்றார். அவள் தன்னை மறந்து போனதற்குக் காரணம் புத்தகங்களல்ல. மானுடப்படைப்பின் பல பலவீனங்களே. அவள் புத்தகங்களைப்படித்திருக்காவிட்டாலும் அவள் அவ்விதம்தாம் அச்சூழலில் நடந்துகொண்டிருப்பாள். நாவலிலும் அதற்கான சூழலை ஆசிரியர் விரிவாகவே விபரித்திருப்பார். புயல் வீசுமிரவில் பதஞ்சலியும், ஆசிரியர் சுந்தரலிங்கமும் நிலை தடுமாறுவதை விரிவாகவே விபரித்திருப்பார். உண்மை இவ்விதமிருக்க எதற்காக எழுத்தாளரான ஆசிரியர் புத்தகங்கள் மீது இவ்வளவு வெறுப்பு கொண்டிருந்தாரோ தெரியவில்லை. புத்தகங்களைப்பற்றி வரும் அந்த வரிகளை நீக்கி விட்டாலும் அது நாவலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. எனவே எதிர்காலத்தில் வெளியாகும் 'நிலக்கிளி'யின் புதிய பதிப்புகளில் அவ்வரிகளை நீக்கி வெளியிட்டால் அது நாவலுக்கு இன்னும் வலுச்சேர்ப்பதாகவே அமையுமென்பதென் அபிப்பிராயம்.

'நிலக்கிளி'யுட்பட பல நாவல்கள் அக்காலகட்டத்தில் நூலுருப்பெற்றதற்கு முக்கிய காரணங்களிலொன்று வீரகேசரி பதிப்பகம். அவ்விதம் அவர்கள் வெளியிடுவதற்கு முக்கியமான காரணங்களிலொன்றாக இருந்தது அக்காலகட்டத்தில் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த சிறிமா அம்மையாரின் பொருளாதாரக்கொள்கை. இறக்குமதிகளைக்குறைத்து அனைத்துத்துறைகளிலும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது அவரது பொருளாதாரக்கொள்கை. அதற்குக்காரணம் அவரது கட்சியினருடன் இலங்கையின் பிரபல இடதுசாரிக்கட்சிகளெல்லாம் கூட்டணி அமைத்திருந்ததுதான். விவசாயிகள் தொடக்கம், பதிப்பகங்கள், திரைப் படத்தயாரிப்பாளர்கள் எனப்பல்துறையினரும் இலாபம் அடைந்துகொண்டிருந்தார்கள். யாழ்ப்பாண விவசாயிகள் தொடக்கம், வன்னிக்குப்படையெடுத்து மிளகாய் வைத்து இலாபம் சம்பாதித்த விவசாயிகள் வரை விவசாயிகள் பலர் அக்காலகட்டத்தில் இலாபம் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். அது போல் அக்காலகட்டத்தில் இலங்கையில் பல தமிழ்த்திரைப்படங்கள் (கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன், புதிய காற்று என) வெளியாகி அவற்றில் சில (கோமாளிகள் போன்ற) நூறு நாள்களையும் கடந்து ஓடின. வீரகேசரி பதிப்பகமும் அக்காலகட்டத்தில்தான் ஐம்பது நாவல்களை மாதாமாதம் வெளியிட்டு இலாபம் சம்பாதித்ததுடன் , அதன் மூலம் ஈழத்துத்தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நூல்கள் வெளிவரவும் காரணமாக அமைந்தது. தமிழர்களுக்கெதிரான அரசியல் ரீதியான அடக்குமுறைகளைச் சிறிமா அரசாங்கம் கட்டவிழ்த்து விடாமலிருந்திருந்தால் உண்மையில் நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதொரு காலகட்டமாக அக்காலகட்டம் விளங்கியிருந்திருக்கும்.

'நிலக்கிளி' நாவலைக்கீழுள்ள 'நூலகம்' இணையத்தள இணைப்பினில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/01/93/93.htm

 



சிறிது இலக்கணம் படிப்போமா?


வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்தமிழாசிரியர் கண்ணன்  மாணவனொருவனின் விடைத்தாளைத்திருத்தும்போது அம்மாணவன் எழுதியிருந்த கட்டுரையினைப் படித்தார். படித்தவர் கீழுள்ள வசனங்களைப்பார்த்து ஆத்திரத்துடன் மாணவனைப்பார்த்து "என்ன தமிழ் எழுதியிருக்கிறாய்" என்று கத்தினார். அதற்கு அந்த மாணவன் கூறினான்: "சேர், இலக்கணத்தமிழில் தானே எழுதியிருக்கின்றேன்" என்று கூறிவிட்டு மேலும் சில விளக்கத்தை தன்னை நோக்கிக் கத்திய ஆசிரியருக்குக் கூறினான். அதனைக்கேட்டதும் ஆசிரியர் வெட்கத்தால் கூனிக்குறுகிப் போனார். இது கூடத்தெரியாத நான் எவ்விதம் தமிழாசிரியராக இருக்க முடியும் என்று கூறிவிட்டு மறுநாளே தன் தமிழாசிரியப் பணியைத்தலய் முழுகி விட்டார். ஏன்?

1. காவல்துறய் அதிகாரி திருடனய்க் கய்து செய்தார்.

2. பூனய் கண்ணய் மூடினால் உலகம் இருண்டு போகுமா?

3. தலய் கொடுத்தான் தம்பி.

4. பனய் மரத்தய்க் கற்பகதரு என்பார்கள்.

அந்த மாணவன் கூறிய விளக்கம் இதுதான்:

ஐ என்னும் எழுத்தினை அய் என்று எழுதலாம். அதன்படி

கைது - (க்+ஐ)து = (க்+அய்)து = கய்து.

இது போல் பூனை =  பூனய், காவல்துறை - காவல்துறய், கண்ணை = கண்ணய், தலை = தலய், பனை = பனய், மரத்தை = மரத்தய், திருடனை = திருடனய் என்றும் எழுதலாமே என்று.

ஐ எழுத்துக்குப் பதிலாக சிலர் அய் என்றும் , ஒள எழுத்துக்குப் பதிலாகச் சிலர் அவ் என்றும் எழுதுவதுண்டு. அவர்களது வாதம் ஐ, ஒள ஆகிய எழுத்துகளைத் தமிழிலிருந்து நீக்கி விட வேண்டுமென்பதுதான். இது எப்படி இருக்கு? :-)


The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan' By Gnanaseelan Jeyaseelan

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

தமிழகத்தில் ஆர்.ஶ்ரீனிவாசன் (R.Srinivasan) அவர்களால் வெளியிடப்படும் 'புதிய பனுவல் ( An International Journal Of Tamil Studies )' என்னும் ஆய்விதழில் (Vol 2, No 01 2010) எனது புகலிடப்புனைகதைகளை மையமாக வைத்து The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan' என்னும் ஆய்வுக்கட்டுரையொன்றினை யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஞானசீலன் ஜெயசீலன் அவர்கள் எழுதியிருந்தார். அதற்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வெளியான 'புதிய பனுவல்' ஆய்விதழ் பற்றிய தகவல்களை 'புதிய பனுவல்' இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 'புதிய பனுவல்' இதழ்களை வாங்க விரும்பினால் திரு.R.Srinivasan அவர்களுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளுங்கள். முகநூலில் அவரது அடையாளம் R.Srinivasan. முகநூலில் அவருடன் தொடர்புகொள்ளுவதன் மூலமும் 'புதிய பனுவல்' இதழ்களைப்பெற்றுக்கொள்ளலாம்.: http://www.indianfolklore.org/journals/index.php/Panu/article/view/776/1005