கடலும் கப்பலும் கரையாத சோகமும் வணங்கா மண் - நூன்முகக் குறிப்பு! - முனைவர் செல்லத்துரை சுதர்சன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை, இலங்கை.-
இந்து சமுத்திரக் கப்பற் பாதையின் மத்தியில் அமையும் தீவாகவும், தென்மேல் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலங்களில் கப்பல்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்கக்கூடிய திருகோணமலைத் துறைமுகம் முதலாய இயற்கைத் துறைமுகங்கள் கொண்டதாகவும் அமையும் பல அம்சங்கள் இலங்கையின் கேந்திரநிலையின் முதன்மையைப் புலப்படுத்தும். இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகிய வட மாகாணமானது, கிழக்கு மாகாணம் போலவே, தமிழர்களின் பூர்வீக வாழிடம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கொண்டது வட மாகாணம். இவற்றுள், யாழ்ப்பாணம் நீங்கிய ஏனைய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நிலப்பகுதியே, வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. மூன்று பக்கம் நீராற் சூழப்பட்டதும், இலங்கைத் தீவின் வடமுனையில் உள்ளதுமான நிலப்பகுதி. மூன்று பக்கமும் நீர் சூழ்ந்திருப்பதால் ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனப்படுகிறது. வெளிநாட்டார் பயணக் குறிப்புகளில் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தீபகற்பம் என்றே அது குறிப்பிடப்படுகிறது. இலங்கைத்தீவு, ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனும் தனது தலையை இந்து சமுத்திரத்தில் வைத்துப் படுத்திருப்பதுபோல் காட்சியளிக்கும். யாழில் வல்ல ஒரு பாணனுக்குப் பரிசாக வழங்கப்பெற்றமையால் யாழ்ப்பாணம் எனப் பெயர் சூடியது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தை, இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுடன் தொடுக்கும் நிலப்பகுதியாக விளங்குவது, ஆனையிறவு. இத்தகைய புவியியல் அமைவு காரணமாக, யாழ்ப்பாணம் தனித்த பல சிறப்பியல்புகளை வரலாற்று ரீதியாகப் பெற்றிருந்தது.