ஜேவிபி, ரணில், தமிழ் அரசியல், இந்தியா - ஒரு பார்வை! - ஜோதிகுமார் -
1
அண்மையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு விடயங்கள், முக்கியமானவையாக காணப்படுகின்றன:
I. இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டம்.
II . மாலைத்தீவிலிருந்து இந்திய இராணுவத்தின் வெளியகற்றல்.
இலங்கையின் சுதந்திர தினமானது ஒரு கரிநாளாக வட-கிழக்கால் பிரகடனப்படுத்தப்பட்டது தெரிந்த ஒன்றே.
பொதுவில், மேற்படி கரிநாள் எதிர்ப்பில், மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ளாத நிலையில், முக்கியமாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், சுமந்திரன் போன்றோர் மேற்படி எதிர்ப்பில் பங்குபற்றாத நிலையில், மக்கள் சாரிசாரியாக கலந்து கொள்வார் என எதிர்ப்பார்ப்பது அசட்டுத்தனம் மிக்கதுதான். ஆனால் அப்படியே இந்த தலைவர்கள் கலந்திருந்தாலும,; மக்கள் கலந்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கின்றது.
ஆனால் விடயத்தின் முக்கியத்துவமானது, மட்டக்களப்பில் காட்டப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வேலன்சுவாமிகளுக்கும், சாணக்கியருக்கும் இடையே இடம்பெற்ற சண்டை பொருத்தே களைகட்டியது. வடக்கிலிருந்து, வேலன்சுவாமிகள் அவர்கள், கிழக்கில் களமிறக்கி விடப்பட்டது என்பது வெறும் ஆதரவு சம்பந்தப்பட்டது மாத்திரம் அல்ல, ஆனால் ஆழ்அரசியலை உணர்த்தக் கூடிய ஒன்றே.