இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2009 இதழ் 118  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர் கட்டுரை: உளவியல்!

மன அழுத்த மேலாண்மை – 3 :  உடல்-மன தொடர்பும், நோய் எதிர்ப்பு சக்தியும்

- டாக்டர். B. செல்வராஜ் Ph.D.
(முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை)நமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது
நமக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகள் எல்லாமே உடலியல் கோளாறுகளால் ஏற்பட்டவை என்று கூற முடியாது. நமக்கு ஏற்படும் மனப்பிரச்சனைகளும் நம் உடலில் நோய்களை தோற்றுவிக்கலாம். ஏனெனில் நம் உடலின் செயல்பாடுகளுக்கும் நம் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் ஆழ்மனதில் அடக்கி வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளும் எண்ணங்களும், மனதிற்கு வலியை ஏற்படுத்தும் விஷயங்களும், இன்னபிற மன அழுத்தத்தை உண்டாக்கும் நிகழ்வுகளும் நம் உடல் செயள்பாடுகளின் மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு அறியவருவதற்கு முற்பட்ட தொடக்க காலத்தில் சில வித்தியாசமான நோயாளிகளை சந்திக்க வேண்டி வந்தது. உதாரணமாக, ஒரு பெண் தனக்கு பூக்களைக் கண்டாலே உடலில் அரிப்பு ஏற்படுவதாக கூறிக் கொண்டு உளவியல் மருத்துவரை சந்தித்தார். அப்பெண் அதற்கு முன்பு வேறு பல தோல் நோய் நிபுனர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களால் அப்பெண்ணின் உடலில் பூக்களைக் கண்டால் அரிப்பு ஏற்படுவதற்கான உடலியல் அடிப்படையை கண்டறிய முடியவில்லை. நோய் குணமாகாத இந்த சமயத்தில் தான் அப்பெண் உளவியல் மருத்துவரை அணுகியிருக்கிறார். 

அப்பெண்ணிடம் பேசி பல விவரங்களைத் தெரிந்து கொண்ட உளவியல் மருத்துவர் அவரை ஒருவாரம் கழித்து மீண்டும் வரச் சொன்னார். இம்முறை உளவியல் மருத்துவர் அப்பெண்ணிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது எதேச்சயாக ஒரு கொத்து பூக்களை எடுத்து தன் மேசையின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு பேச்சை தொடர்ந்தார். அதுவரை இயல்பாகப் பேசிக் கொண்டு இருந்த அப்பெண் பூங்கொத்தை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு மெதுவாக உடல் அரிப்பு ஏற்பட்டு சொரிய ஆரம்பித்தார். 

அப்போது உளவியல் மருத்துவர் அப்பெண்ணிடம் “நீங்கள் சொரிந்து கொள்வதை சற்றே நிறுத்துங்கள், உங்களுக்கு பூக்களைக் கண்டால் தானே அலர்ஜி ஏற்படும். இதை கையில் வாங்கிப் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே பூங்கொத்தை அப்பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தார். அப்பெண் பூங்கொத்தை தொட்டுப்பார்த்த போது தான் தெரிந்தது அவையாவும் உண்மையான பூக்கள் இல்லை என்பது. அவையாவும் பிளாஸ்டிக் பூக்கள். பூக்களுக்குத்தான் அலர்ஜி ஏற்படுகிறது என்பது உண்மையானால் பிளாஸ்டிக் எப்படி அலர்ஜியை உண்டாக்கும் என்று கேட்ட உளவியல் மருத்துவர் அப்பெண்ணுக்கு நோயின் மன அடிப்படையை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார். 

அப்பெண் காதல் திருமணம் செய்து கொண்டவர். கணவர் மிகவும் அன்பானவர். தன் மனைவியின் மேல் உயிரையே வைத்திருந்தார். அவ்வப்போது அவருக்கு தன் மனைவியின் மீதான அன்பு மிதமிஞ்சிப் போய்விடும். அவ்வாறு அன்பு மிகுதியாகும் போது அதற்கு அடையாளமாக ஒரு சிவப்பு ரோஜாவை தன் மனைவிக்கு பரிசாக வழங்குவார் அவ்வளவு அன்பான கணவர் வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அப்பெண்ணும் விவாகரத்தான நாள்முதல் தன் கணவனையும் அவன் சம்பந்தப்பட்ட நினைவுகளையும் வெறுக்க ஆரம்பித்தார். 

சிவப்பு ரோஜாக்களை பார்க்கும்போதெல்லாம் தன் கணவனின் நினைவுக்கு வரும். சில மாதங்களுக்குப் பிறகு சிவப்பு ரோஜாக்களைப் பார்த்தாலே இலேசாக உடல் அரிக்க ஆரம்பித்தது. கைவிட்ட கணவனின் மீது ஏற்பட்ட வெறுப்பும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தமும் நாளடைவில் எந்த பூக்களைப் பார்த்தாலும் உடல் அரிப்பை உண்டாக்க ஆரம்பித்தது. 

உளவியல் மருத்துவர் அலர்ஜிக்கான மன அடிப்படையை விளக்கி அதிலிருந்து வெளிவருவதற்கான ஆசோசனைகளையும் வழங்கிய பின் அப்பெண்ணின் அலர்ஜி மெதுவாக குறைந்து குணமாகிவிட்டது. 

இது போன்றா பல உடல்-மன தொடர்புடைய பிரச்சனைகள் சைக்கோ-நீயூரோ-இம்யூனாலஜி என்ற புதிய துறை ஒன்று உருவாவதற்கு காரணமாக அமைந்தன. தற்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கும் இத்துறை மன அழுத்தமும் மனப்பிரச்சனைகளும் நம் உடலின் நோய் எதிர்ப்பு திறனில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை விரிவாக ஆராய்கிறது. நம் உடலுக்குள் நுழையும் வைரஸ், பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளை எதிர்த்துப் போராடும் நம் உடல் செல்களின் ஆற்றலே நோய் எதிர்ப்பு திறன் என்பப்படும். இத்திறனை நம் மனம் அதிகப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம். 

நோய் எதிர்ப்பு திறனின் மீது மனதின் தாக்கத்தை அறிய எலி ஒன்றைக் கொண்டு உளவியல் அறிஞர்கள் சோதனை ஒன்றை நடத்தினார்கள். சோதனையில் முதலில் எலியின் மீது மின்விசிறியின் காற்று படும்படி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எலிக்கு அலர்ஜி உண்டாக்கும் மருந்து ஊசி ஒன்று போடப்பட்டது. உடனே எலிக்கு தோல் அரிப்பு ஏற்பட்டு சொரிந்துகொள்ள ஆரம்பிக்கும். இவ்வாறு பல முறை தொடர்ந்து செய்யப்பட்டது. ஒரு நிலையில் மின் விசிறியின் காற்று பட்டவுடனேயே ஊசி போடாமலேயே எலிக்கு அலர்ஜி ஏற்பட்டது. இச்சோதனையிலிருந்து நம் மனமே உடலில் நோயை உண்டாக்கலாம் என்றும். மனதினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 

உங்கள் மகன் அல்லது மகளுக்கு தேர்வு முடிந்த பின் அன்று மாலையிலிருந்து அல்லது அடுத்த நாளிலிருந்து சளி பிடித்தல் அல்லது தொண்டையில் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வருவது ஆகியவை தேர்வு அவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள நல்ல அறிகுறிகளாகும். பெரியவர்களுக்கும் கூட ஏதாவது பெரும் பிரச்சனை ஏற்படும்போது தன் சக்தியெல்லாம் திரட்டி அப்பிரச்சனையை சமாளித்து விடுவார்கள். பிரச்சனை முடிந்தவுடன், அப்பாடா பிரச்சனையை முடித்து விட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு சளி பிடித்து மூக்கில் தண்ணீராக ஒழுக ஆரம்பித்துவிடும். இதுவும் பிரச்சனையால் மன அழுத்தம் ஏற்பட்டதையும் அதனால் நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ள சரியான அறிகுறியாகும். 

*        *           * 

மன அழுத்தத்தினால் உண்டாகும் உடல் நோய்கள் 

இடி இடித்தால் மழை பெய்யும் என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போன்று மன அழுத்தம் ஏற்பட்டாலும் உடல் நோய்கள் உண்டாக்கூடும் என்பது உளவியல் வல்லுநர்களால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பின்வரும் நோய்களுக்கு காரணம் பெரும்பானமையான சமயங்களில் மன அழுத்தமே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.  

அந்நோய்களாவன: 

·      தொடர் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி, அவ்வப்போது ஏற்படும் தலைவலி வயிற்று வலி

·          உயர் இரத்த அழுத்தம்

·          உள்ளங்கை ஜில்லென்று ஆகிவிடுதல்

·          நெஞ்சு கரிப்பு

·          புளித்த ஏப்பம்

·          வேகமாக சுவாசித்தல்

·          திடீரென ஏற்படும் வயிற்றுப் போக்கு

·          இதயத்துடிப்பு அதிகரிப்பு

·          கை நடுக்கம்

·          வாயுக் கோளாறுகள்

·          அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்துக் கொண்டே போதல்.

·      கால் பாதங்கள் வியர்த்து செருப்புக்குள் ஈரமாதல், உள்ளங்கைகள் வியர்த்துப் போதல்.

·          முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தது போல் தோல் எண்ணெய்ப் பசையுடன் இருத்தல்

·          முகத்தில் முகப்பருக்கள் அளவுக்கு அதிகமாக் தோண்றுதல்

·          உடலில் சக்தியே இல்லாதது போன்றும், எப்போதும் படுத்துக்கொண்டே இருக்கலாம் என்ற உண்ர்வு

·          பெருமூச்சு வாங்குவது, வாய் அடிக்கடி வறண்டு போதல்

·          தீராத முதுகுவலி

·          கழுத்து இறுக்கம் மற்றும் கழுத்தில் ஒரு பக்கம் வழி

·          நெஞ்சு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு

·          மலச்சிக்கல் (பெரும்பாலும் வீட்டின் மூத்த பிள்ளைகளுக்கு மலச்சிக்கல் இருக்கும்)

·          இரவில் தூங்கும் போது பற்களை நறநறவென கடித்துக்கொண்டே உறங்குவது. (இதற்கு பிரக்ஸிஸம் என்று பெயர்)

·          தலை சுற்றல், மயக்கம், அதிர்ச்சியான விஷயத்தை கேட்டவுடன் மயங்கி விழுந்துவிடுதல்

·          அலர்ஜி உள்ளிட்ட தோல் நோய்கள்.

·          மூட்டுவலி

·          ஆஸ்துமா

·          பெண்களுக்கு தோன்றும் மாதவிடாய் கோளாறுகள்

 இந்த நோய்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல நோய்களும் மன அழுத்தத்தினால் ஏற்படுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மன அழுத்தத்தின் காரணமாக மட்டுமே எல்லா நோய்களும் ஏற்படுகின்றன எனக் கூற இயலாது. உடலியல் காரணிகளாலோ, மன அழுத்தத்தினாலோ அல்லது இரண்டின் காரணமாகவோ இந்த நோய்கள் ஏற்படலாம். 

மன அழுத்தத்திற்கும் உடல் நோய்களுக்கும் உள்ள தொடர்பு, தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்ற பழமொழியைப் போன்றது. மனதில் ஏற்படும் பிரச்சனை உடலில் ஓர் நோயாக வெளிப்படலாம்.                               

*      *      *

 மன அழுத்திகள் 

மன அழுத்தத்தை உண்டாக்கும் விஷயங்களை மன அழுத்திகள் என்கிறோம். சூழ்நிலைச் சேர்ந்த ஓர் விஷயமோ அல்லது சமூகப்பிரச்சனை ஒன்றோ அல்லது உங்களைச் சார்ந்த விஷயம் ஒன்றோ மன அழுத்தியாக மாறி உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். 

வாழ்க்கையில் ஒருவர் மிகமிக அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவது எப்போது தெரியுமா? தன் வாழ்க்கைத் துணை இறந்து போகும்போதுதான் தாங்கமுடியாத மன அழுத்தத்திற்கு கணவனோ மனைவியோ ஆளாகிறார்கள். அதைப் போன்று மன அழுத்தம் தரும் விஷயம் வாழ்க்கையில் எதுவுமில்லை. 

விவாகரத்து, திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து போதல் போன்றவைகள் வாழ்க்கைத் துணைவரின் இறப்புக்கு இறப்புக்கு அடுத்தபடியாக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. 

தொழிலை மாற்றுவது, பெரிய அளவில் கடன் வாங்குவது, வீட்டை மாற்றுவது, மகன், மகள் ஆகியோர் படிப்பு, தொழில் காரணமாக வீட்டை விட்டுச் செல்வது, நண்பரின் மரணம் ஆகியவை அளவான மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நடுநிலையாளர்கள். 

ஒருநாள் ஓய்வு ஆனந்தமாக இருக்கும். இரண்டு நாள் விடுமுறை இன்பத்தை கொடுக்கும். மூன்று நாள் விடுமுறையை சமாளித்து விடலாம். ஒரேயடியாக ஏழு நாள் விடுமுறை விட்டால் என்ன செய்வது? எப்போது விடுமுறை முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறதல்லவா? இதுவும் ஒருவகையான மன அழுத்திதான். 

தீபாவளிக்கு துணி மணி, பட்டாசுகள் வாங்கி பலகாரங்களை பக்கத்து வீட்டுடன் பகிர்ந்துண்டு பண்டிகையை முடிப்பதும் ஒரு அளவுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்.  

“நோ ப்ரீ லெப்ட்என்று அறிவிப்பு இருந்தாலும் இந்த நேரத்தில் போலீஸ் இருக்கவா போகிறார்கள் என்று நினைத்து சிக்னலை மதிக்காமல் இடதுபக்கம் திரும்புவீர்கள் திரும்பியவுடன் தப்பிக்கவே முடியாத இடத்தில் நின்று கொண்டு காவலர் உங்களை ஓரம்கட்டி சாவியை எடுத்துக் கொள்வார். பின்னர் அபராதம் கட்டி அந்த இடத்தை விட்டு செல்வதும் ஓர் மன அழுத்திதான். இதுவே குறைந்த மன அழுத்தத்தை உண்டாக்கும் மன அழுத்தி எனலாம். 

*         *      *

அன்றாட அவலங்கள் 

மன அழுத்திகள் மட்டுமே உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன என எண்ண வேண்டாம். வேறு பல விஷயங்களும் நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

 வங்கியிலிருந்து பணம் எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு வருகிறீர்கள். வரும் வழியில் கீழே கிடக்கும் பத்து ரூபாய் உங்களுடையதா சார்? என ஒருவர் கேட்கிறார். குனிந்து பார்த்து ஆசையின் காரணமாக ‘ஆமாம் என்று சொல்லி அதை எடுக்க முயலுகிறீர்கள். அந்த நேரம் பார்த்து சரேலென உங்கள் கைப்பையை பிடுங்கிக் கொண்டு கில்லாடித் திருடன் ஓடி விடுகிறான். இப்போது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதா?

 உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் இடத்தில் ஓரடி தள்ளி வந்து காம்பவுண்ட் சுவர் கட்டிக் கொள்கிறர். அதோடு விடாமல் அன்றாடம் ஒரு பிரச்சனையை கிளப்பிப் கொண்டிருக்கிறார்.  

தொடர்ந்து சிகரெட் புகைக்கும் ஒருவர் ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும்போதும் எனக்கு புற்றுநோய் வந்து விடுமோ என்று மனதில் பயந்துகொண்டே புகைக்கிறார்.

 மேலே கண்ட நிகழ்ச்சிகள் யாவும் ஒருநாளோடு நின்று விடாமல் தொடர்ந்து உங்கள் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே இந்த அன்றாட அவலங்கள் மிகுந்த மன அழுத்தத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் மிகக் கடுமையான பின்விளைவுகளும் ஏற்படும். 

எப்போதும் வாழ்க்கை அவலங்கள் நிறைந்ததாக மட்டுமே இருபதில்லை. இரவு முடிந்தால் பகல் என்பது போல் நிச்சயம் நல்ல நிகழ்ச்சிகளும் வாழ்வில் இருக்கின்றன. உங்கள் நண்பர்களோடு இரண்டு நாள் ஆனந்தமாக இன்பச்சுற்றுலா சென்று வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அந்த இரண்டு நாளும் உங்கள் குடும்ப கவலைகள், தொழில் பிரச்சனைகள், உடல் உபாதைகள் மனக்குழப்பங்கள் யாவும் மறந்து போகும் திரும்பி வரும்போது மனம் இலேசாகி புதிய மனிதனாய் திரும்பி வருவீர்கள். 

இதுபோன்ற நல்ல நிகழ்வுகள் இருந்தால் மனம் ஆரோக்கியமாக இருக்கும். நமக்கு ஏற்படும் மன அழுத்தமும் அவ்வப்போது குறைக்கப்பட்டு விடும். எனவே இது போன்ற விஷயங்களில் நாம் சற்று அக்கறை காட்ட வேண்டும்.

*         *             *

மனவடுக்கள் 

2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் நாள் அமெரிக்க மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். உலக வர்த்தக மையத்தின் மிக உயர்ந்த கட்டிடங்கள் விமானம் மோதவிட்டு தாக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். ஏற்பட்ட இழப்புகளைத் தவிர இன்றளவும் நம்மையும் அமெரிக்க மக்களையும் துன்புறுத்திக் கொண்டு இருப்பது அதனால் ஏற்பட்ட மன அழுத்தம்தான்.  

மக்கள் மிகுந்த பயத்துக்குள்ளாகி அதன் காரணமாக அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு வெளியிடங்களுக்கு பயணம் செய்தவர்களே மிகக் குறைந்து போயினர். அந்த அளவுக்கு இனம் புரியாத பயமும் மன அழுத்தமும் அவர்களை ஆட்கொண்டது.  

தன்னைச் சார்ந்தவர்களையும் தன் உறவினர்களையும் பறி கொடுத்தவர்கள் அவர்கள் இல்லாமல் வாழக்கற்று கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதிர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட மன அதிர்வுகளும் மன அழுத்தமும் இனிவரும் ஆண்டுகளிலும் தொடரும். அவ்வளவு விரைவில் அவைகள் மனதை விட்டு நீங்காது.  

நம் நாட்டிலும் ஏற்பட்ட சுனாமி இயற்கைப் பெரிடர் பல லட்சக்கணக்கன மக்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்தியது. இறந்தவர்கள் ஏராளமானோர். தன் கண் எதிரிலேயே தன் கணவனையோ மனைவியையோ அலை இழுத்துச் சென்றதை கண்டவர் எண்ணற்றோர். மனைவியையும் குழந்தைகளையும் அல்லது கணவணையும் குழந்தைகளையும் அலைக்கு இரையாக்கி கொடுத்தவர் கணக்கிடலங்காதவர். இது தவிர தன் உறவினர்கள் மற்றும் உடைமைகளை இழந்தவர் எத்தனையோ பேர். கண் முன்னால் தன் ஊரே அழிவதைக் கண்டவர் சிலரும் உள்ளனர்.  

இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டலாம் ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அதிர்ச்சியை நம்மால் சரி செய்ய இயல்வது கடினம். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் பல ஆண்டுகளுக்கு அவர்கள் மனதில் இருந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையில் பல கெட்ட விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.  இவைகள் மன வடுக்கள் என்றழக்கப்படுகின்றன.

 அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள், சுனாமி, பூகம்பம், பெரும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரழிவுகளும் போரினால் ஏற்படும் விளைவுகளும் உண்டாக்கும் மன அழுத்தம் மனதை விட்டு நீங்க நீண்ட நாள் எடுத்துக் கொள்கிறது அல்லது நீங்குவதே இல்லை. இவற்றிற்கான சிகிச்சை முறைகளும் மன அழுத்தத்தை போக்க இயலுவதில்லை.

*       *       *

saireader@gmail.com

கடந்தவை
மன அழுத்த மேலாண்மை – 1 - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி,கோவை) - ..உள்ளே
மன அழுத்த மேலாண்மை – 2 :  மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் ....  டாக்டர். B. செல்வராஜ் ..உள்ளே


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்