இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

ஊழிக்கூத்து: 'நாடக வெளி' வழங்கும் தமிழ் நாடகம்1
எழுத்து, இயக்கம் - வெளி ரங்கராஜன்!

- லதா ராமகிருஷ்ணன் -


ஊழிக்கூத்து: 'நாடக வெளி' வழங்கும் தமிழ் நாடகம்1வெளி ரங்கராஜன்இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைத்துறைகளைச் சேர்ந்த 'தூய' படைப்பாளிகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனதார விரும்பி அதற்கான முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருபவர் வெளி ரங்கராஜன். எதிரெதிர் துருவங்களாக இயங்கி வரும் படைப்பாளிகளையும் தன் அன்பாலும், தோழமையாலும் ஒன்றிணைத்து செயல்பட வைக்கக் கூடியவர். அதேசமயம், கலை,  படைப்பிலக்கியம் குறித்த தனது கறாரான பார்வைகளை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாமலும் இயங்கி வருபவர்.

'தூய' என்ற வார்த்தை நவீன இலக்கியம் பற்றிய ஒரு எதிர்மறைக் கருத்தாக்கமாக, 'அரசியல் கலப்பற்ற' என்ற அர்த்தத்தில், அதன் மூலம், 'சமூகப் பிரக்ஞை' அற்ற என்ற குறிப்புணர்த்துவதாய், பயன்படுத்தப்ப்பட்டு வருகிறது. உண்மையில், 'தூய படைப்பு' என்று எள்ளப்படுவதில் நடப்புச் சூழலும், சமூகமும், அரசியலும் உள்ளார்ந்து கட்டமைந்திருப்பதை அகல்விரிவாகப் பகுத்துப் பேசும் திறனாய்வு> முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே சரி.

லதா ராமகிருஷ்ணன்மற்ற மாநிலங்களைப் போலன்றி தமிழ்நாட்டில் நவீன இலக்கியம், நவீன நாடகம், நவீன ஓவியம் முதலியவை தனித்தனித் தீவுகளாய் இயங்கி வருவதாய் வெளி ரங்கராஜனுக்கு நிறையவே வருத்தமுண்டு. இளைய தலைமுறை எழுத்தாளர்கள் ஏராளமானோர்க்கு ரங்கராஜனின் தோழமை கணிசமான தெம்பையும், உத்வேகத்தையும் அளிப்பது. நவீன நாடகங்கள் உருவாக்கி, அரங்கேற்றுவதோடு நின்று விடாமல் இலக்கியம், சமூகம் சார்ந்தும் தொடர்ந்தரீதியில் இயங்கி வருபவர்; எழுதி வருபவர். கடந்தவருடம் கவிஞர் சதாரா மாலதி இறந்தபோது அவருக்கான தகுந்த அஞ்சலியாய் கன்னட நாடகம் 'மாதவி'யிலிருந்து சதாரா மாலதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த ஒரு பகுதியை நாடகமாக வடிவமைத்து அரங்கேற்றினார். அன்று அல்லயன்ஸ் •ப்ராங்கேஸ் வளாகத்தில் இரண்டாம் மாடியில் உள்ள அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது.

30.3.08 அன்று, அட்சயபாத்திரத்தோடு மக்களின் பசியாற்றுவதே தன் கடமையென்று புறப்படுவதற்கு முன்பான மணிமேகலையின் மனப்போராட்டத்தை, 'காயமே இது பொய்யடா' என்று ஒருபுறமும், மறுபுறத்தில் காதலும், காமமும் கவர்ந்திழுக்க, அலைக்கழியும் மணிமேகலையின் மனவலியை'ஊழிக்கூத்து' என்ற நாடகமாக வடிவமைத்து அல்லயன்ஸ் •ப்ராங்கேஸ்' அரங்கில் நிகழ்த்தினார் வெளி ரங்கராஜன். அரங்கில் நிறைந்திருந்த பார்வையாளர்களில் ஓவியக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள், தேர்ந்த ரசனையுள்ள பார்வையாளர்கள், நாடகப் பயிற்சி மேற்கொண்டிருப்பவர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் இடம்பெற்றிருந்தனர். சிறு சலசலப்பும் இல்லாமல் அரங்கம் மேடைநிகழ்வில் கவனத்தை ஒன்றச் செய்திருந்தது.

மணிமேகலை, அவள் தோழி சுதாமணி ஆகிய இருவருக்கிடையேயான உரையாடல்கள், மணிமேகலையின் அழகில் மயங்கி உதயகுமாரன் அவளையே சுற்றிச்சுற்றி வருவது, தனது மனம் அவன் குறித்து சஞ்சலம் கொள்வது பற்றி சுதாமணியிடம் மணிமேகலை எடுத்துரைப்பது, மணிமேகலா தெய்வம் மணிமேகலையை ஆறுதல்படுத்துவது, இறுதியில் அவன் இறந்து போக, மணிமேகலை அரற்றுவது, அவளிடம் மணிமேகலா தெய்வம் அட்சயபாத்திரத்தைத் தருவது - என நாடகத்தில் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஒலி-ஒளி, இசை, நாட்டியம் எல்லாமே மிகையற்று, நாடக நிகழ்வுகளோடு (உட்குறிப்புகளோடும்) பொருந்தியமைந்திருந்தது.

நடனக் கலைஞரும் நடனம் கற்பிப்பவருமான தேவி மணிமேகலையின் வேடம் ஏற்று அருமையாக நடித்திருந்தார். அவருடைய நடனப் பயிற்சியும், தேர்ச்சியுமாக, அவர் ஏற்றிருந்த மணிமேகலை கதாபாத்திரத்தின் அலைக்கழிப்பை அவரால் அற்புதமாக வெளிப்படுத்த முடிந்தது. மணிமேகலையும், சுதாமணியும் வாழ்வின் நிலையாமையைக் கண்டுணர்வதாய் அமைந்த'வெண்திரை-நிழலாட்ட, பேய்நடனங்கள் பிரத்யேகமாய் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. உதயகுமாரனாக நடித்த கார்த்திகேயனின் தோற்றமும், நேர்த்தியான ஒப்பனையும் அவரை அழகிய இளவரசன் பாத்திரத்திற்குப் பொருத்தமாக்கிக் காட்டின. மணிமேகலா தெய்வமாக நடித்த சந்திராவின் அசைவுகள் மிதத்தலை, பறத்தலை வெகு இயல்பாய் பிரதிபலித்துக் காட்டின! ப்ரஹத்வனி' என்ற அமைப்பைச் சேர்ந்த உஷா நரசிம்மனும், பிறரும் ஒரு சில வாத்தியக்கருவிகளை மட்டுமே கையாண்டு காட்சிகளுக்கேற்ற நேர்த்தியான இசையை வழங்கினர். நாடகம் முடிவடைந்த பின், நாடக உருவாக்கத்தில் இடம்பெற்ற எல்லாக் கலைஞர்களையும் மேடைக்கு வரவழைத்து அவர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் வெளி ரங்கராஜன்.

ஊழிக்கூத்து நாடகத்திற்கான அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த சிறுகுறிப்பு இது :

நமது காப்பியங்கள் குறிப்பிட்ட மையச் சரடுகளை இலக்காகக் கொண்டு இயங்குவது போன்ற தோற்றங்களை உருவாக்கினாலும் அவைகளுக்கு இடையே பலவாறாகப் பிரிந்து செல்லும் சிறுகதையாடல்களும் பாத்திரங்களின் இயக்கங்களும் சார்புகள் கடந்த ஒரு வாழ்வுணர்வை சாத்தியப்படுத்தி ஒரு இலக்கியப் படைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன. அவைகளின் ஊடாக வெளிப்படும் மனித உயிர்களின் வேட்கைகள் சார்ந்த போராட்டங்கள் தமக்குரிய உயிரோட்டம் கொண்டு முடிவற்றதாகவும், கட்டுகள் அற்றதாகவுமே சித்தரிப்பு கொள்கின்றன. வாழ்வின் அழகியல் சார்ந்த எல்லா நிலைப்பாடுகளும் அந்தப் போராட்டத்தில் கூர்மை அடைவதையும் அவை வலுவான குரல்களில் வெளிப்படுவதையும் இங்கு நாம் தொடர்ந்து அவதானிக்க முடியும். அவ்வகையில் தன்னுடைய பாரம்பரியத்தால் உருவான சுயம் சார்ந்த உடல் கொண்டாட்ட மனநிலைக்கும், சூழல் வலியுறுத்தும் உடல் துறவு மனநிலைக்கும் இடையே ஊடாடும் மணிமேகலை அவைகளைக் கடந்து செல்லும் முயற்சியில் தன்னுடைய சமூகப் பரிமாண விழைவுகளின் ஒரு இலக்கை நாடுகிறாள். மணிமேகலையைப் பின்தொடரும் பல்வேறு வேட்கைகள் பல நிர்பந்தங்களை அவளுக்கு உருவாக்கினாலும் தெளிவையும், தீர்மானத்தையும் நோக்கிய அவள் பயணம் முடிவற்றதாக இருக்கிறது. வேட்கைகளும் நிர்ப்பந்தங்களும் நிறைந்த பெண் மாதிரியின் ஒரு சமகாலக் குறியீடாக மணிமேகலையின் சித்திரம் விரிவு கொள்கிறது. நடன உடலும், தீவும், நீரும், நனவிலி மனத்தின் தொன்ம மாதிரிகளாய் உருக்கொள்கின்றன.

மேற்கண்ட குறிப்பில் உள்ளதுபோல் ' மணிமேகலையின் சித்திரம் ஒரு சமகாலக் குறியீடாக போதிய அளவு அழுத்தத்தோடு விரிவு பெறவில்லை என்று தோன்றுகிறது. நாடகம், அதன் காலவெளியில் நடந்தேறுகிறதே தவிர அதை சமகாலத்தோடு இணைக்கும் உரையாடல்களோ, சம்பவங்களோ இடம்பெறுவதில்லை. மேலும், அட்சயபாத்திரம் என்ற positive element நாடக இறுதியில் முதன்மைப்படுத்தப் படுவதாலும் மணிமேகலையின் துறவுநிலை கேள்விக்குட்படுத்தப்படாமல் போய்விடுவதாகத் தோன்றியது. பொதுவாகவே நவீன நாடகங்களில் பாத்திரங்கள் பேசும் தொனியும், பாங்கும் ஒரேமாதிரியாய், வழக்கொழிந்ததாய் இருப்பதும் நாடக நிகழ்வுகளை சமகால வாழ்விலிருந்து விலக்கி வைப்பதாய் தோன்றியது.

இவற்றையெல்லாம் மீறி ஊழிக்கூத்து ஒரு நிறைவான கலானுபவத்தை மனதில் தருவிக்கத் தவறவில்லை.அந்த நிறைவமைதியை ஆழ உள்வாங்கி அனுபவிக்கும் பொருட்டு அரங்கத்திலிருந்து நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திற்கு நடந்தே வந்தேன்! மணிமேகலா தெய்வமாய், அட்சயபாத்திரமாய் காற்று கூடவே வந்தது! 'நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளையென்ற நாளிருக்கு, வாழ்ந்தே தீருவோம்", 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற எனக்குப் பிடித்த திரைப்படப் பாடல்களையெல்லாம் சன்னக் குரலில் சந்தோஷமாக வாய்விட்டுப் பாடிக்கொண்டே அந்த இருளில், விடுமுறை நாளென்பதால் நெரிசல் குறைவாக இருந்த சாலையோரமாய் நடந்து சென்றது சுகானுபவமாக இருந்தது! வீடு வந்து சேர்ந்ததும் 'நாடகம் பார்த்த அனுபவத்தை கவிதையாக்கிவிட வேண்டும்' என்ற அலைக்கழிப்பு மனதை ஆட்கொண்டது!.

கவிதை

மணிமேகலைக்கு...

- ரிஷி -


சிநேகிதியா, சகோதரியா, சின்னவளா, பெரியவளா..
மணிமேகலை...
நீ யார் எனக்கு...?

மனதிற்குள் அந்த வினா
மீண்டும் மீண்டும் விரியும்
ஒரு தொலைதூரக் கனாவாய்...

காலம் விட்டுக் காலம் தாண்டி வந்து
தானமளிக்க வேறுசில கைகளோடு
என் கைகளையும் நீ தேர்ந்தெடுத்த காரணமென்ன..?
உண்மை-
இச்சைகளில் நாமெல்லோரும் பிச்சைக்காரர்களே.
மிச்சம் மீதி வைக்காமல் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட
யாருக்கும் முடிவதில்லை.
தேரோட்டத்தில் சாரதியும், சக்கரக்கால்களில்
அரைபடுபவருமாய்
ஒரு என்றுமான இருவேடங்களில்
திரும்பத் திரும்ப அரங்கேறிக் கொண்டிருக்கிறோம்.
காட்சிகள் மாறுகின்றன
திரை ஏறியவாறும் இறங்கியவாறும்...

முதலிரண்டு வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களுக்கு
அட்சயபாத்திரத்திலிருந்து அள்ளித் தந்தபடி
நீ என்னை நோக்கி முன்னேற -
எழுந்து ஓடிவிட வேண்டும் போலும்,
உன்னை எதிர்கொண்டு வணங்கவேண்டும் போலும்
மனதில் ஒரு பரிதவிப்பு...

புன்சிரிப்போடு நீ தந்த அன்பிற்கு
நன்றி சொல்லவும் மறந்து போய்
அமர்ந்தது அமர்ந்தபடியிருந்த என்
கண்கலங்கித் தழுதழுத்ததில்
கையில் நீ இட்டதைக் காண இயலவில்லை.
நீ வழங்கிய சோறு ஒரு குறியீடாக...

ஒருசேரக் குவிந்த என் உள்ளங்கைகளில்
நிரம்பியவை திடமோ, திரவமோ அல்ல;
அருவங்கள்!
காற்றைப்போல் இருப்பு கொண்டவை; இழந்த பல
நேற்றுகளை மீட்டெடுத்துத் தருபவை!

நலங்கெடப் புழுதியில் எறியப்பட்ட வீணைகளெல்லாம்
தானாக இசைக்கத் தொடங்கிய தருணம் அது!

அரங்கின் இறுதிவரை அமர்ந்திருந்த அனைவருக்கும் நீ
அட்சயபாத்திரத்திலிருந்து அள்ளியள்ளித்
தரவேண்டும் என்ற விழைவு ஒரு வலியாக
என்னை ஊடுருவ,
என் முன்னம் கண்ட முதுகுகளின் மனங்களுக்குள்
எளிதாக நுழைய முடிவதாய் ஒரு உணர்வு
காடெனப் பரவியது உள்ளே!

அத்தனை நெருக்கத்தில் அட்சயப்பாத்திரத்தைப் பார்த்ததில்
பித்தானது நெஞ்சம்!

பாய்ந்து அதைப் பறித்துக் கொண்டு போய்
இல்லாதாருக்கெல்லாம் வேண்டுமளவு தரவேண்டுமென
பரபரக்கும் மனமே
பதிலுக்கு என்னால் உனக்குத் தர முடிவது.

ramakrishnanlatha@yahoo.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner