இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2009 இதழ் 118  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நூலறிமுகம்!

பெண்களின் ஆளுமைகளை உறுதிப்படுத்தும் வார்த்தைகளாக.. நிவேதினி

- எம்.கே.முருகானந்தன்.-


பெண்களின் ஆளுமைகளை உறுதிப்படுத்தும் வார்த்தைகளாக.. நிவேதினிபெண்களின் குரல் பலதருணங்களில் மௌனமாகவே ஒலிக்கிறது. ஆணாதிக்கத்தால் அமுக்கப்படுகிறது. பெண்களின் ஆதங்கத்தைப் பலரும் புரிந்து கொள்கிறார்கள் இல்லை. புரிந்து கொள்ளப் பிரியப்படுவதுமில்லை. குடும்பம், சமூகம், அரசியல், தேசியம் ஏன் மதங்களில் கூட பெண்களின் உணர்வுகளை உதாசீனப் படுத்துகிறார்கள். நையாண்டி பண்ணுகிறார்கள். மதிப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் என்றும் இவ்வாறு இருந்துவிட முடியாது. கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அவர்கள் குரல் இப்பொழுது பல இடங்களிலும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அடங்கிக் கையேந்தும் குரல்களாக அல்ல, உரிமைக்காகக் ஓங்கி ஒலிக்கும் குரல்களாக. தமது ஆளுமைகளை உறுதிப்படுத்தும் வார்த்தைகளாக.. நிவேதினியும் அத்தகைய ஒரு குரல்தான். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் சஞ்சிகையான நிவேதினி இதழ் 12 படிக்கக் கிடைத்தது. அந் நிறுவனத்தினால் 2007ம் அண்டு கார்த்திகை மாதம் 30ம் திகதியும், மார்கழி 1ம் திகதியும் நடாத்தப்பட்ட கருத்துரைகளின் தொகுப்பாக இந்த இதழ் மலர்ந்துள்ளது.

'தேசியம், மதம், அரசியல் வாழ்வியல் போன்றவற்றில் ஊடுருவி நிற்கும் ஆண் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் பெண் நிலைவாதம்' என்பதே அந்த கருத்தரங்கின் தொனிப்பொருளாக இருந்தது. நவீன இலக்கியத்தில் பெண்களின் குரல் எவ்வாறு ஒலிக்கிறது என்பதை கட்டுரை, கவிதை, நாடகம், நாவல் எனத் தனித்தனியாகவும், வேறுசிலர் பொதுப்படையாகவும் இந்நூலில் பார்க்க முயல்வதை காணமுடிகிறது.

போர் ஓய்ந்துவிட்ட சூழலில் இன்று போருக்கு எதிரான குரல்களும், அது பற்றிய வெளிப்படையான விமர்சனங்களும் தமிழ்பேசும் மக்களிடம் இருந்தும் சற்றுத் துணிவுடன் எழுவதைக் காண முடிகிறது. ஆனால் போர் ஒன்றே தமிழ் மக்களின் இருப்பைத் தக்க வைக்கும், அதன் ஊடாகவே தங்களுக்கு எதிரான அரசியல் ஒடுக்கு முறைகளுக்கு முடிவு காண முடியும் என்று நம்பப்பட்ட சூழலிலும், போருக்கு எதிரான குரல்கள் பெண்களின் கவிதைகளிலிருந்து எழுந்ததை சித்ரலேகா மௌகுரு தனது ஆய்வுக் கட்டுரையில் எடுத்துக் காட்டுகிறார்.

போரினால் விளையும் அர்த்தமற்ற அகால மரணங்கள் போரைக் கொண்டு நடத்துவோருக்கு வெறும் எண்ணிக்கைகள் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கும் அவை ஈடுகட்ட முடியாத துயரங்களாகும். அவ்வகையில் மரணத்தின் வலி பெண்கள் பலரின் கவிதைகளில் பேசப்பட்டன. போர் பற்றிய அவர்களது மன உணர்வுகளும், விசாரணையும், விமர்சனங்களும் கவிதையில் எடுத்தாளப்படுவதை கட்டுரையாளர் குறித்துக் காட்டுகிறார்.

சாதாரண பெண்கள் மட்டுமின்றி களப்போராளிகளாக இருக்கும் பெண்களின் கவிதைகளில் கூட மரணம் தரும் வலி மிக வலுவாக வெளிப்படுவதை ஒரு தற்கொலைப் போராளியின் கவிதையிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். சாதாரண மரணவலியை விட வெளியே சொல்ல முடியாத மரணத்தின் வலி கடுமையானது மட்டுமின்றி அபாக்கியமானதும் கூட.

'குருசேஷத்திரத்தில் கர்ணன் விழ
ஐயோ மகனே என்று குந்தி
ஓடிச்சென்று அணைத்தாளே
ஐயோ ராசா நான் பாவி
என் பிள்ளை என்று சொல்ல
முடியாத பாவியானேன்...' (சன்மார்க்கா 1986)

சந்தேக நபர்கள் மட்டுமின்றி உறவுகளும் குறிவைக்கப்படுகையில், தன் மகன் எனக் கூறி கட்டியழுது துயர் ஆற்ற முடியாத நிலையை இக்கவிதை எடுத்துக் கூற,

யுத்தங்களை நிறுத்துங்கள்
ஒரு தாயாகவும் பெண்ணாகவம்
இனியும் பொறுக்க முடியவில்லை என்னால்..'

என மல்லிகாவும் (1993)

'இன்னுமா தாய்நிலம் புதல்வர்களைக் கேட்கிறது' என ஒளவை (2000) ஓங்கிக் குரல் எழுப்புவதையும், மற்றொரு இடத்தில் மண்ணுக்கான போர் என்ற கருத்தாக்கத்தையே அவர் நிராகரிப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு பேசும் 'போரையும் அரசியல் வன்முறையையும் எதிர்க்கும் பெண் கவிதைக்குரல்' என்ற சித்திரலேகா மௌனகுருவின் கட்டுரை நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

'பெண்நிலைவாதமும் தேசியவாதமும் : ஈழத்துப் பெண் போராளிகளது எழுத்துக்களின் அடிப்படையில் சில புரிதல்கள்' என்பது செ.யோகராசாவின் ஆய்வுக் கட்டுரையாகும். இவர் தனது ஆய்வை கவிதைகளுடன் மட்டுப்படுத்தாது சிறுகதை, நாடகம், நாவல் ஆகியவற்றிற்கும் விஸ்தரிப்பதால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.இவர் தனது ஆய்வின் அவதானிப்பில் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார்

1. தமிழ்ப் பெண்களுள் பலர் தமிழின உணர்வு அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் - குறிப்பிட்ட இயக்கத்தில் இணைந்துள்ளனர்
2. எனினும் ஒருசாரார் சமூக பெண்நிலை பற்றிய பிரக்ஞை காரணமாகவம் சேர முற்படுகின்றனர்.
3. எவ்வாறாயினும் தாம் பெண்(போராளி) என்ற உணர்வுடன் காணப்படுகின்றனர். இதனால் தமது முக்கியத்துவத்தையும் செயற்பாடுகளையும் மனஉணர்வுகளையும் வெளிப்படுத்த முற்படுகின்றளர்.
4. இன விடுதலையுடன் – தமிழீழம் கிடைப்பதுடன் - பெண்களது பிரச்சனைகள் தீருமென்று திடமாக நம்புகின்றனர்.

சுமார் 17 பக்கங்கள் வரை நீளும் கட்டுரை இது. விஸ்தாரம் மட்டுமின்றி ஆழமும், திறனாய்வளர்களுக்கே உரிய பகுப்பு முறையும் கொண்ட சீரிய கட்டுரை எனலாம். இனவிடுதலையுடன் பெண்விடுதலையும் கிட்டுமென அவர்கள் கண்ட கனவுகள் கருகிப் போன இன்றைய நிலையில் அவர்களது உணர்வுகளைப் படிக்கும்போது சற்று மனசு கனக்கவே செய்கிறது.

உதாரணத்திற்கு ஒரு கவிதை

'... இறுகிய உணர்வுகள்
வரிப்புலிக்குள் புகுந்ததனால்
விடுதலையின் சிறகசைப்பு
நாணமும் பாவமும்
தாகமும் காமமும்
காடேறிகளிடம் காட்டிவிட்டோம்.'

'காலக்கனவு: ஒரு பெண்ணிய நாடகத்தின் ஆக்கம்' என்பது பொன்னி அரசு எழுதிய ஒரு சுவையான கட்டுரை. பெண்ணியம் சார்ந்த ஆறு பெண்கள் காலக்கனவு நாடக தயாரிப்பு மற்றும் ஒத்திகைக்காக ஒரு அறையில் சனி – ஞாயிறுகளில் சந்தித்தபோது பெற்ற அனுபவங்களைப் பேசுகிறது.

தேவதாசி வழக்கம், அதற்கான எதிர்ப்பு, உடலுறவுக்காகப் பணி புரியும் பெண்கள், சுயமரியாதைத் திருமணங்கள், தன்னினச் சேர்க்கை, போன்ற பல விடயங்கள் பற்றி அக் குழுவினர்களிடையே எழுந்த கருத்தாடல்கள் சுவையானவை, தெளிவை நோக்கிய பயணங்களாக விரிகின்றன.

'ஒருவருக்கொருவர் சொல்லுவதைக் கூர்ந்து கேட்பதும், அங்கீகரிப்பதும் மதிப்புடன் வாதிடுவதும் முக்கிய முறையாக இருந்தது.' என்கிறார்.

இருந்தபோதும் பெண்ணிய நோக்கத்திற்கான தேடுதலே அடிப்படையாக இருந்தததைக் காணக் கூடியதாக இருந்தது.

'பான்ட் மாட்டிய, கிராப் வெட்டிய நீ தமிழ் பெண் அல்ல... தமிழ் சமூகத்தில் இப்படி இருப்பதில்லை.' எனக் கலாசார பண்பாட்டு முகமூடி அணிந்து பெண்களின் மீது 'கலாசார வன்முறையை' ஏவுபவர்களை எதிர்கொள்வதும், அவர்கள் சவால்களை முறியடிப்பதும் அவர்களது கூடல் நிகழ்வுகளில் அலசப்பட்டிருக்கிறதை அறிகிறோம். ஓன்று கூடல் மற்றும் நாடகப் பயிற்சி நிகழ்வுகள் ஊடாக பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை அலசும் வித்தியாசமான, நுகர்வுக்கு இனிய கட்டுரை இது எனலாம்.

இமையத்தின் 'செடல்' ஒரு மிக அற்புதமான நாவல். மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்தாலும் இன்றும் மனத்தில் நேற்றுப் படித்தது போல நிற்கிறது.

பொட்டுக் கட்டும் வழக்கம் பற்றியும், பாரம்பரிய கூத்தாடி நாடக மரபு, சாதீயம் பற்றியும் மிக ஆழமாகவும் விஸ்தாரமாகவும் பேசும் நாவல் இது. ஒரு களஆய்வுக் கட்டுரையில் காணப்படக் கூடிய பரந்து பட்ட தகவல்களை கொடுத்திருந்தபோதும் மிகவும் அற்புதமாகச் சொல்லப்பட்ட நாவல் என்று மட்டுமே இதை எண்ணியிருந்தேன்.

ஆனால் தாழ்த்ப்பட்ட பெண்கள் எதிர் கொள்ளும் ஆணாதிக்கத்தை மிக அழகாக அலசுகிறார் கட்டுரையாளரான ச.ஆனந்தி. 'பெண்நிலைவாத தலித் பார்வையில் சாதிய ஆணாதிக்கமும் அடையாள அரசியலும்: இமையத்தின் செடல்நாவல் பற்றிய ஒரு வாசிப்பு.'

ஒரு தாழ்தப்பட்ட சாதிப் பெண்ணானவள் அதிகாரம் படைத்த உயர்சாதியினரின் ஆணாதிக்கத்தால் துயருறுவது மட்டுமின்றி, உயர்சாதிப் பெண்களின் கடுமையான அதிகாரப் போக்கையும் எதிர் கொள்ள நேர்கிறது. அதே நேரம் சாதீயம் தாழ்த்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் பொது எதிரியான போதும், பெண்ணானவள் அதற்கு மேலாக தமது சாதிக்குள்ளேயே இறுகி நிற்கும் ஆணாதிக்கத்திற்கும் முகம் கொடுக்க நேர்க்கிறது.

ஆயினும் கல்வியறிவு அற்றவர்களான அவர்கள் பழைய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் எதிர்க்கேள்வி இன்றி ஏற்றுக் கொள்வதால் தாங்கள் தங்கள் சாதீயக் கலாசாரத்திற்குள் ஒருவர் மீது ஒருவர் வன்முறையை பிரயோகிப்பதையும் ஆனந்தி சுட்டிக் காட்டத் தவறவில்லை.

செறிவான தலித்தியப் படைப்புகள் அதிகம் வெளிவருகின்ற இன்றைய சூழலிலும் தலித் பெண்ணியப் பார்வை படைப்பாக்கம் பெறுவது அரிதாகவே உள்ளது. சமூக அக்கறையும் தேடுதலும் கொண்ட வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் செடல்.

அதைத் தொடர்ந்து ஆனந்தியின் கட்டுரையையும் படித்தால் முழுமையான தெளிவும் அனுபவமும் கிட்டும்.

பரபரப்பான சர்ச்சைகளில் பேசப்படும் குட்டி ரேவதியின் கட்டுரை 'தமிழ் உடலரசியலில் மூன்றாம் பரிமாணம்' என்பதாகும். அவர் பேசும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன். அது பற்றிய ஒரு பதிவையும் எனது 'மறந்து போகாத சில' வலைப்பதிவிலும் சேர்த்திருந்தேன்.

கட்டுரையாகப் படிக்கவும் சுவையாக இருக்கிறது. சில உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொற்களை பெண்கள் தமது படைப்புகளில் எழுதும் போது எழுந்த நியாயமற்ற விமர்சனங்களை அவர் காரமாகக் கடிந்தார்.

'உடல் தினவெடுத்து கவிதை எழுதவதாக' ஒரு படைப்பாளியும்,
மற்றொருவர் 'பெண்ணுடல் ஒரு புதிர், அதை எழுத்தில் வெளிப்படுத்துவது பெண்மைக்கு இழுக்கு' என்றார்.

'தமிழின் ஒரே சொல் ஆணால் பயன்படுத்தும் போது அவனது அதிகாரப் பிரயோகமாகவும், பெண் அதே சொல்லைப் பயன்படுத்த இயலாதபடி சமூக இறுக்கமாகவும் வெளிப்படுகிறது. ஆக ஆணின் பயன்பாட்டுக்கு மட்டுமே இருக்கும் சொல்லை நமது பயன்பாட்டு மொழிக்குள் கொண்டுவர வேண்டியிருக்கிறது. மேலும் அந்தச் சொல்லுக்கு வேறு சமூக பண்பாட்டு அர்த்தங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது'

உடலரசியலின் முதல் பரிமாணமாக பெண் தன் உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லும் சுதந்திரத்தையும், இரண்டாவது பரிமாணமாக இன்றை பெண்எழுத்தின் வழியாக போலி பிம்பங்கள் தகர்க்கப்படுவதையும், மூன்றாவதாக 'தற்கால அரசியலுக்கு முரணான தத்துவத்தையும் இயக்கத்தையும் முன்னெடுத்து வருவதைத் தலித் பெண் படைப்பாளிகள் தமது உடலரசியல் வழியாக எதிர்ப்பதாகவும்' கூறுகிறார்.

அனுசூயா சேனாதிராஜா வின் கட்டுரை 'பெண்கள் அனுபவிக்கும் அனர்தங்களை எதிர்கொள்ளல்' என்பதாகும். இது ஒரு துறை சார்ந்த ஆழமான கட்டுரையாகும். ஆனர்த்தங்கள் எவ்வாறானவை, அதனால் ஏற்படும் நலிவுறும் விளைவுகள், பெண்கள் எவ்வாறு அதிகமாகப் பாதிக்கபடுகிறார்கள், அவற்றை நிவர்த்திக்க செய்ய வேண்டியவை போன்றவற்றைப் பேசுகிறது.

'ஏனைய மருத்துவர்கள் பேசத் தயங்கும் விடயங்களையும் இவர் வெளிப்படையாக தனது பதிவுகளில் எழுதுகிறார்' என ஒருவர் எனது hainallama.blogspot.com பற்றி எழுதியிருந்தார்.

இது பாராட்டா கிண்டலா புரியவில்லை.

குட்டி ரேவதி கூறியது போல பெண்கள் எழுதும் போது மாத்திரமின்றி, ஆண்கள் அதுவும் மருத்துவர்கள் சில விடயங்களைப் பற்றிப் பேசும்போதே பலரது புருவங்கள் மேலெழுகின்றன. ஏனெனில் போலியான கலாசார மூடிகள் எம்மீது திணிக்கப்பட்டுள்ளன.

அப்படியான ஒரு விடயத்தை செல்வி திருச்சந்திரன் தனது 'பண்பாட்டிற்கு மறுபக்கங்கள் உண்டு' என்ற கட்டுரையில் மிகவும் அழகாகக் கையாள்கிறர்.

தனது சிறுவயதில் கண்ட ஒரு சம்பவத்தைச் சொல்லி மிகவும் ஆர்வமூட்டும் வகையில் ஆரம்பிக்கும் இக்கட்டுரை தன்னினச் சேர்க்கை பற்றிப் பேசுகிறது. சரித்திரச் சம்பவங்கள், சிறுகதை. திரைப்படம போன்ற பல உதாரணங்கள் ஊடாக அவரது கருத்து ஆணித்தரமாக வெளிப்படுகிறது.

இறுதியில் 'இப்படியான ஒரு பூர்வீக வரலாறும் இருக்கும் விடயத்தை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது.அறிவு பூர்வமாகப் புரிந்து கொள்ள வேண்டும்' என்கிறார். பெண்ணியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை இதுவாகும்.

படைப்புலம் ஊடாகக் பெண்ணியப் பார்வையை காணுகின்ற அனுபவத்தை இந்த நூல் தருவதால் குடும்பத்திலும் சமூகத்திலும் தனது வகிபாகத்தை மீள்மதிப்பீடு செய்ய ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய நூலாகிறது.

செல்வி திருச்சந்திரனை பிரதம ஆசிரியராகவும், தேவகௌரி சுரேந்திரன், மகேஸ் வைரமுத்து, சிவமணி பரராஜசிங்கம் ஆகியோரை ஆசிரியர் குழுவாகவும் கொண்டு நிவேதினி வெளிவருகின்றமை குறிப்படத்தக்கது.

விலை :- ரூபா 250.00

தொடர்புகளுக்கு:-
Women’s Education and research centre
58,Dharmarama Riad
Wellawatta
Colombo 06.
Sri Lanka

- kathirmuruga@hotmail.com

Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்