இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2007 இதழ் 92  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
வ.ந.கிரிதரன் கவிதைகள்!
வ.ந.கிரிதரன் கவிதைகள் 27! அவ்வப்போது இணைய இதழ்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த கவிதைகளில் எனக்குப் பிடித்த சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன். சிறுவனாகவிருந்தபோது சுதந்திரனில் வெளிவந்த 'பொங்கலோ பொங்கல்' கவிதையே அச்சில் வெளிவந்த எனது முதற்கவிதை. அதன்பின் ஆரம்பத்தில் பல ஆரம்பகாலக் கவிதைகள் பல வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன், நுட்பம், ஈழமணியெனப் பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. கனடாவிலும் பலவேறு பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பின்னர் பதிவுகள், திண்ணை, தட்ஸ்தமிழ், ஆறாந்திணை, வார்ப்பு ஆகிய இதழ்களிலும் பல கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

1. அலைகளுக்கு மத்தியில் அலையென அலைதல்!
- வ.ந.கிரிதரன் -


நீர்த்துப் போன அலைகளும்,
வீர்யம் நிறைந்தவையுமாக,
மிகச்சாதாரணமான ஒலி அலைகள் தொடக்கம்
மின்காந்த அலைகள், வானொலி அலைகளென
(காமா, அகச்சிவப்பு, புற ஊதா, X-கதிரெனப் பலப்பல)
அலைகளால் நிறைந்து கிடக்கின்றதிந்தப்
பிரபஞ்சத்துப் பெருவாவி.

பரந்து, பொசிந்து, வியாபித்துக் கிடக்குமிந்த
அலைகளில் இருக்கிறது இந்தப் பிரபஞ்சத்தின்
இது நாள் வரையிலான வரலாறு.

வரலாறென்றால் எனக்கு மிகவும்
பிடித்தமானதொரு துறை.

வரலாற்றினை ஆய்வு செய்தல்
எப்பொழுதும் சலிப்பினைத்
தருவதில்லை; மாறாக
வியப்பினைத்தான்.

எங்கோவொரு தொலைவிலொரு
ஆத்மா (இருக்கும் பட்சத்தில்
அல்லது உண்மையாகவிருக்கும்
பட்சத்தில்)
இதனூடு காலத்தின் பரிணாம வளர்ச்சியினை
அல்லது இந்த அண்டவெளியின்
இதுவரையிலான அன்றாட நடப்புகளை,
போர்களை, உணர்ச்சி வெடிப்புகளை,
துக்கத்தினை, மகிழ்ச்சியினையெல்லாம்
அறிந்து கொள்ளும் பக்குவம்பெற்றிருக்கும்
பக்குவமடைந்திருக்கலாம்;

அதன் மூலம்
வியப்பும், திகைப்பும் அடைந்து கொண்டிருக்கலாம்
இங்கு நான், இப்பொழுது, இக்கணத்தில்
அடைந்து கொண்டிருப்பதைப் போல.

வியப்பாக இருக்கிறது அலைகளின்
ஆற்றலை எண்ணுகையில்.

அலைகளின் வேகம் பற்றித்தான்
இதுவரையில் பிரமித்திருந்தேன். ஆனால்
இப்பொழுதுதான் அவற்றின்
மறுபக்கத்தின் மகி¨யெனை
பிரமிப்பிலாழ்த்திக் கொண்டிருக்கின்றது..

இந்த வகையிலவை வெறும்
வரலாற்றுச் சுவடுகள் மட்டுமல்ல.

காலத்திரையினில் விரிந்திடுமவற்றின்
விசும்புக் காட்சிகள் தொடர்ந்தும்
வியப்பினையே தருகின்றன.

அலைகள்தானெத்தனை வியப்பானவை;
புதிரானவை.

அலைகளுக்குள் ஆடுமென்னிருப்பும்
வியந்தபடி, அறிய முனைந்தபடி
ஆடிடும்
இன்னுமொரு அலையென
அலைந்தபடி.

நன்றி: பதிவுகள், திண்ணை.

2. விசும்பும், தொலைநோக்குதலும்!
வ.ந.கிரிதரன்


தொலைநோக்கிகள் தொலைவுகளை
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?
இருப்பியங்குதற்கும் இங்கவை
இருக்கும் அதிசயந்தானென்ன!

எனக்கு நினைவு தெரிந்த
நாளிலிருந்து
-முற்றத்தில் அப்பாவின் 'சாற'த்தொட்டிலில்
மல்லாந்திருந்து இரசித்த அன்றிலிருந்து -
நானும்
தொலைவுகளை இதனூடு
மேய்ந்துகொண்டுதான் வருகின்றேன்
ஒருவித அறிவுப் பசிகொண்டு.
அடங்கவில்லை அந்தப் பசி
இன்றுவரை.

இருந்தும் பால்வீதிகளில் பயணித்தலிலுள்ள
ஆர்வம் மட்டும் அணைந்திடவில்லை.
ஒவ்வொருமுறையும் வியப்புடனும், ஆர்வத்துடனும்,
மர்மங்களை அவிழ்த்துவிட முடியாதாவென்றொரு
நப்பாசையுடனும் நானும்
முயன்றுகொண்டுதானிருக்கிறேன்; தொலை நோக்கிக்
கொண்டுதானிருக்கிறேன்.
ஓடு 'சடசட'க்கக் கொட்டும் மழைபோல்
என் நெஞ்சு கவர்ந்த மேலுமொரு
விடயமிது.
எத்தனைமுறை பெய்தாலும் அலுக்காத மழைபோல்
எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவில்லை
எனக்கு.

நீண்டு,கவிந்த இரவு.
வியாபித்திருக்கும் விரிவிசும்பு.
இயன்றபோதெல்லாம்
நோக்கிக் கொண்டிதானிருக்கின்றேன்.
இருக்கும்வரை நோக்கிக் கொண்டுதானிருப்பேன்.
தொலைநோக்கிகள் தொலைவுகளை
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?
இருப்பியங்குதற்கும் இங்கவை
இருக்கும் அதிசயந்தானென்ன!

நன்றி: பதிவுகள், திண்ணை.

3. இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு!
- வ.ந.கிரிதரன் -


படைப்பின் நேர்த்தியெனைப்
பிரமிக்க வைத்திடுதல்போல்
பாரிலெதுவுமில.

வீழும் மலர், ஒளிரும் சுடர்,
துணையில் களிப்புறும் இணை,
நிலவுமனைத்திலுமிங்கு
நிலவும் நேர்த்தியென்
நினைவைக் கட்டியிழுத்தல்போல்
நினைவெதுவுமில.

முறையெத்தனையெனினும்
மறையாத நினைவுப் புயல்!

இருப்பு, இன்னும் புதிர் மிகுந்து
இருந்திடுமோ? இல்லை
இதுவும் 'நிச்சயமற்றதொரு
தற்செயலின்'
சாத்தியம் தானோ?

இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!

நன்றி: திண்ணை, பதிவுகள்.

4.இயற்கையொன்றி இருத்தல்!
- வ.ந.கிரிதரன் -


விரிந்திருக்கும் வெளியில் விரையுமிந்தக்
கோளின் வனப்பும், கதியும்,
உயிரின் இருப்பும், அதற்கான சாத்தியமும்,
விந்தைக்குரியவை; அற்புதமானவை என்று
வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம்.

சிலவேளைகளில் விருட்சங்களின்
இயல்பும் வாழ்வும் என் சிந்தையில்
பொறியேற்படுத்துவதுண்டு.
அப்பொழுதெல்லாம் அவற்றின் வாழ்க்கை
பற்றிச் சிறிது ஆழமாகச் சிந்திப்பேன்.
ஒளியும், வளியும் விருட்சத்தின்
இருப்பு; எம்முடையதைப் போல.
ஒன்றின் கழிவில் அடுத்ததன்
உயிர்ப்பு.
விருட்சத் தோழரைப் போல்
வாழுதற்குணவு தயாரித்தல் சாத்தியமா?
என்று அப்பொழுதெல்லாம்
சிந்திப்பேன்.
அதற்குரிய ஆற்றல் எம்முள் உண்டா
என்று அப்பொழுது நான்
ஆழமாக யோசிப்பேன்.
இருதயத் துடிப்படக்கி
இருத்தல் இலகுவானதா
என்றெல்லாம் சிந்தனைகள்
இறக்கை விரிக்கும் சமயங்களவை.
மாரித்தூக்கத்தின் சாத்தியம்
மிருகங்களுக்கு மட்டுமா
சாத்தியம்? என்றும் அப்பொழுது
எண்ணுவேன்.
அவை மட்டும் சாத்தியமானால்
- ஆம் அதற்குரிய சாத்தியங்கள்
விந்தைகள் நிறைந்த,
புதிர்களின்னும் புதிர்படாத,
இருப்பில் நிறையவே
இருக்கின்றதனதான். -
இருப்பிற்காகக் கொல்லுதல் தவிர்த்து,
இருப்புக்காக விருட்சமழித்து,
இயற்கையொன்றி இருந்திடுமொரு
இருப்பில்தான்
எத்துணை வனப்பு! எத்துணை களிப்பு!

நன்றி: திண்ணை, பதிவுகள்.

5. நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
-வ.நகிரிதரன் -


உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன்காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று.பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்துவிடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவமும்
உண்டு; புரியுமா?

வெளியும், கதியும், ஈர்ப்பும்
உன்னை, உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில்
சுயாதீனத்துடன்
பீற்றித் திரிவதாக உணரும்
உன் சுயாதீனமற்ற,
இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?

இடம், வலம் , மேல், கீழ்.
இருதிசை, நோக்கு கொண்ட
பரிமாணங்களில் இதுவரையில்
நீ
ஒருதிசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?
உன் புதிரவிழ்த்துன்
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?

இரவி , இச் சுடர் இவையெலாம்
ஓய்வாயிருத்தலுண்டோ? பின்
நான் மட்டுமேன்?

நீ எத்தனை முறைத்தான்
உள்ளிருந்து
எள்ளி நகைத்தாலும்
மீண்டும் மீண்டும்
முயன்று கொண்டேயிருப்பேன்.
நீ
போடும் புதிர்களுக்கு
விளக்கம் காணுதற்கு
முயன்று கொண்டேயிருப்பேன்.

வேதாளங்களின் உள்ளிருந்து
எள்ளி நகைத்தல் கண்டும்
முயற்சியில்
முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்
மட்டும்தானா?

நன்றி: பதிவுகள், திண்ணை

6.விருட்சங்கள்!
- வ.ந.கிரிதரன் -


திக்குகளெங்கும் ஓங்கி வளர்ந்த விருட்சங்கள்!
எண்ணிலடங்கா விருட்சக் காட்டினுள்
தன்னந்தனியாக நான்
நடந்து கொண்டிருக்கின்றேன்.
வனமெங்கனும் கவிந்து கிடக்குமொரு
மோனம்.
கோடை வெயிலின் சுட்டெரிப்பில்
தகித்துக் கிடக்கும் விருட்சங்கள்
தகிப்பினை வாங்கித் தரும்
தண்மையின் கீழ் என் பயணம்
தொடரும்.
அமைதியான,
ஆரவாரமற்ற பெருந்தியாகம்!
பலன் கருதாப் புரியப்படும்
பணி!
எத்தனை விந்தையான உயிரினங்கள்!
அத்தனைக்குமோர்
ஆதரவு! அரவணைப்பு!
ஓங்கிய விருட்சங்களுக்குள்
ஒரு கோடி பிரிவுகள்! ஆயின்
ஒற்றுமையாய் ஒருமித்தவை தரும்
தண்நிழல்!
பிரமிப்பில் தொடருமென் பயணம்.
ஆறறிவு பிளந்து வைக்கும் மண்ணில்
கீழறிவின் பேரறிவு!
நன்மைக்காய்த் தனை மறக்கும்
இன்மனத்தினிருப்பிடமாயிவ்
விருட்சங்கள்!
தமையழித்த போதும்
தண்தரும் விருட்சங்கள்!

நன்றி: பதிவுகள், திண்ணை

7. விண்ணும் மண்ணும்!
வ.ந.கிரிதரன்


விரிந்து கிடக்குமிந்த விசும்பு
ஓர் உளவியல் நிபுணரைப் போல்
பலருக்கு அறிவுரை பகரும் அதிசயத்தினைப்
பார்த்து ஒவ்வொரு முறையும்
அதிசயித்துப் போகின்றேன்.

'வானத்தைப் போல்.....'
அப்பொழுதெல்லாம் இவ்விதம் நான்
எனக்குள்ளேயே அடிக்கடி கூறிக்
கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சியில்
பூரித்துப் போகின்றேன்.

இவ்விதமான வேளைகளில் ஒரு மாபெரும்
நூலகத்தினைப் போல் இந்த வானம்
எவ்வளவு விடயங்களைத் தன்னுள்
தாங்கி வைத்திருக்கின்றதென்பதை
உணர்ந்து கொள்கின்றேன்.
கற்பதற்கெவ்வளவு உள.
கற்பதற்கெவ்வளவு உள.
காலவெளி நூலகத்தில்தான்
கற்பதற்கெவ்வளவு உள.

அளவுகளுக்குள்ளிருந்து
ஆகாயம் பார்க்கும் மண்பார்த்து
அப்பொழுதெல்லாம் இந்தவான்
தனக்குள் நகைத்துக் கொள்ளுமோ!

அப்பொழுதெல்லாம் கீழ்க்கண்டவாறு
நினைத்துக் கொள்வேன்:
'படைகளுக்குள்ளோரிருப்பு! மேலும்
படையெடுப்பெதற்கு?'

ஆகாயத்தின் இயல்புகளில் சில:
அகலம்! விரிவு!
அவை கூறும் பொருளெம்
அகம் உணர்தல் சாத்தியமா?
'அகத்தின் விரிவில், அகலத்தில்
மண்ணிலின்பம்! அட மானுடரே!'

தன்னியல்பினுள் விடைபொத்தி வைத்திருக்கும்
விசும்பு மண்ணின் கேள்விகள்
அனைத்துக்கும்.
விண்ணிலிருந்து மண்
கற்பதற்கு நிறைய உள.
கற்பதற்கு நிறைய உள.

8. முதற்காதல்!

அதிகாலைகளில் ஆடி அசைந்து
அகமசைத் தாயிழையவள்
சென்றதெல்லாம்,
பொட்டிட்டுப் பின்னலிட்டு
நிலம் பார்த்து
நடைபயின்று நங்கையவள்
நடந்ததெல்லாம், இன்றும்
நனவிடைதோய்கையில்
நினைவுக்கு வருவதுண்டு.

பிள்ளைப் பிராயத்தில் அவள்
பெண்மை கண்டு மயங்கினான்
மாகவி.
முதற்காதல் வயப்படாத
மனிதருளரோ?

வாழ்வேயொரு போராய்
வாழ்வேயொரு புயலாய்
மாறிடாது
நந்தவனமாயிருக்குமொரு
பொழுது. ஆங்கு பூத்திடும்
அற்புதமானதொரு பூவோ
முதற்காதல்!

பெரும்பாலும் முதற்காதல்
முற்றுப் பெறுவதில்லை;
அதனால் தான் அது
முதற்காதல்! இல்லாவிடினது
இறுதிக் காதலுமன்றோ!

9.ஞானம்!
- வ.ந.கிரிதரன் -


நேரம், சூழல், இடம்
இவையெல்லாம் சரியாக
அமைந்து விடவேண்டும்
சிந்தை குடையும் சில
சிக்கல்களை அவிழ்ப்பதற்கு.
அப்பொழுதுதான் அதுவரை
புதிராய்த் தெரிந்ததெல்லாம்
'ப்பூ' இவ்வளவுதானா
என்றிருக்கும்.
பிரமிப்பில் அத்தகைய தருணங்களில்
நான் ஆழ்ந்து விடுவதுண்டு.
அறிவின் தெளிவெனை
புடமிட்டு வைத்துவிடும்
தருணங்களவை.
புரியாதவற்றைத் தெரிதற்கு
நான் இப்பொழுதெல்லாம்
முன்புபோல் குத்துக்கரணங்களடித்து
முயல்வதில்லை. கூடிவரும் பொழுதுகளிற்காகவும்,
பொருந்தியதொரு சூழலுக்காகவும்,
அமைந்தவோரிடத்துக்காகவும்
நான் இப்பொழுது காத்திருக்கப்
பழகிவிட்டேன்.

10.நகரத்து மனிதனின் புலம்பல்
- வ.ந.கிரிதரன் -


மரங்களிலிருந்து 'காங்ரீட்' மரங்களிற்கு...
குரங்கிலிருந்து மனிதனிற்கு...
ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு...
பரிணாம நிகழ்வு, வளர்ச்சி
என்கின்றது
முந்தாநாள் சந்திரனில் கால் பதித்தவனின்
சுற்றம்.
இதற்கொரு விளக்கம் வேறு...
ஒளியையுறுஞ்சுதலென்பது இவ்விரு
விருட்சங்களிற்கும் பொதுவான செயலென்று
கருத்தியல் வேறு.
உறுஞ்சுதலிலொன்றெனினுமிவை
உம்மைப்போல் விருட்சத்தோழரே!
உணவைப் படைப்பதில்லையே?
உயிரையெமக்குத் தருவதில்லையே?
தோழரே! நீரோ மேலும்
நிழலைத்தந்தீர்! உமது
காயைத்தந்தீர்! கனியைத்தந்தீர்.!
இலையைத்தந்தீர்!
இறுதிலும்மையே தந்தீர்!
ஆனால்.......
நவீன விருட்சங்களிவை
தருவதென்ன?
'நன்றி மறத்தல்' நம்மியல்பன்றோ?
நன்றியை மறந்தோம்.
நண்பருனது தொண்டினையிகழ்ந்தோம்.
இதனால்
இன்றெமக்கு
இரவு வானத்துச் சுடரையும்
நிலவுப்பெண்னின் எழிலையும்
பாடும் புள்ளையும்
இரசிக்கும்
உரிமை கூட
மறுதலிக்கப் பட்டு விட்டது.
உம்மையிழந்ததினால்
இந்த மண்ணும்
உலர்ந்து போனது.
'எரியுண்ட தேச'மென்பதாக
இன்று
எமது கிரகமும்
'எரியுண்ட கிரகம்'
என்பதாச்சு.

11.எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..
- வ.ந.கிரிதரன் -


முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன். எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய். ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளில் அல்லது கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்...
அல்லது
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி அறியாமையில்...
ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்!
அது போதும்!

12.பேய்த்தேர்!
- வ.ந.கிரிதரன் -


விரிந்து கிடக்குமிந்த இருத்தல்
பாலையெனக் கொதிக்கும். வெறுமைக் கனல்
தகிக்கும்.
இதற்குளுந்தன் நடனம் மட்டும்
இல்லையென்றால்
பசுமையற்றுக் கிடந்திடுமிந்தத்
தரை. நீயோ
தொலைவில் மட்டுமே
ஆடுகின்றாய்?
நெருங்கிடின்
நிலைகுலைய வைத்தெனைத்
தொலைவுநாடி ஓடுகின்றாய்
ஆடுதற்காய். ஏனுந்தன்
தொலைதூர நடனம்?
அருகில் வந்துனது ஆட்டம் காணுதற்கு
ஒருவழி சொல்வாய் ஆயிழையே!
பொய்யிலொளிரும் மெய் நீ.
மெய்யென நிலைத்திடச்
சாத்தியமேதுமுண்டோ?
மெய்யற்றதொரு பொய்யால்
மெய்சிலிர்க்க வைத்து விட்டுப்
போகின்றாய் பைங்கிளியே!
என் பாதையிலே
எத்தனை முறை முயன்றிடினும்
முயற்சி ஏன் திருவினையாவதில்லை
உன் விடயத்தில் பெண்ணே! ஏன்?
இருப்பின் பொருளறிந்தேன்
கனலுக்குள் கனவாகும்
உந்தனிருப்பில் பேய்த்தேரே!

13.நடிகர்கள்!
வ.ந.கிரிதரன்


இந்த நாடக மேடையில்
நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்
அழுவதா சிரிப்பதா என்று
சில நேரங்களில் தெரிவதில்லை.
இவர்களுக்கோ தாங்கள் பிறவி
நடிகர்கள் என்ற அடிப்படை
உண்மை கூடத் தெரியவில்லை.
தாங்கள் நடிப்பதில்லை என்று கூறிக்
கொண்டே நடித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களில் ஒருவன் என்ற வகையில்
என்னையும் சேர்த்துத் தான்
கூறுகின்றேன்.
எவ்வளவு தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் இவர்கள்.
எவ்விதமாகவெல்லாம் இவ்வளவு
தத்ரூபமாக இவர்களால்
முகபாவங்களைக் காட்ட முடிகின்றது?
உருகுவதிலாகட்டும் அசடு வழியக்
குழைவதிலாகட்டும்
என்னமாய் ஜமாய்த்து விடுகின்றார்கள்?
இந்த நாடக மேடையிலிருந்து
விடுபட வேண்டுமென்று தான்
இத்தனை நாளாக முயன்று
கொண்டிருக்கின்றேன்.
திமிர் பிடித்தவன். மரியாதை தெரியாதவன்.
கர்வம் கொண்டவன். வாழத் தெரியாதவன்.
எல்லா நடிகர்களும் ஒன்று சேர்ந்து
கத்துகின்றார்கள்.
நடிக்கவில்லையென்று கூறிக் கொண்டே
நடிப்பவர்கள் கூறுகின்றார்கள்
ஓரளவாவது நடிப்பதைத் தவிர்க்க முனையும்
என்னைப் பார்த்துப்
'பார் இவனது அபாரமான
நடிப்பை'யென்று.
என்ன நடிகர்களிவர்கள்?
தங்கள் நடிப்பை விட
என் நடிப்பு அபாரமானது
என சான்று வழங்கும்
பெருந்தன்மை மிக்க
மகா பெரிய நடிகர்களே!
உங்கள் பெருந்தன்மைக்காக
உங்கள் கருணைக்காக
உங்கள் அனைவருக்கும்
எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்
உரித்தாகுக.
மகாபெரும் கவிஞராக, அற்புதப்
படைப்பாளியாக, மூதறிஞராக,
அதிமேதாவியாக,சமூகத்
தொண்டராக, தலைவராக
எத்தனை விதமான வேடங்களில்
நீங்கள் வெளுத்துக் கட்டுகின்றீர்கள்!
உங்கள் வாயால் கிடைக்கும் பாராட்டு
வசிட்டர் வாயால் கிடைத்தது போல்
எத்துனை பெருமை மிக்கது. அதற்காக
எனது ஆயிரம் ஆயிரம் கோடி
நன்றிகள்!
இந்த நாடக மேடையில் முற்றாகவே
நடிப்பை ஒதுக்கி விடுவதென்பது
இயலாததொன்று என்பதை உணர
முடிகின்றது. இருந்தாலும்
நடிப்பதைக் குறைத்துக் கொள்ளத்
தான் முயன்று கொண்டிருக்கின்றேன்.
அதனைக் கூட நடிப்பாகக் கருதி விடும்
அற்புதமான நாடக மேடையிது.
இங்கு நடைபெறும் நாடகங்கள்
அனைத்துமே திரை விழும் வரை
தான். விழுந்த பின்னும்
நடிப்பில் தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் நாடகத்தைத்
தொடரத் தான் செய்வார்கள்.
இந்த நாடக மேடையில்
நடிப்பதென்பது மட்டும்
தான் நித்தியம்.சாசுவதம்.
நிரந்தரமானதொரு திரை
என்று ஒன்று உண்டா
இதன் நிரந்தரத்தை
நிரந்தரமின்மையாக்க?
யாருக்கும் தெரியாது? அவ்விதமொரு திரை
இருக்கும் பட்சத்தில்
அவ்விதம் விழும் திரை கூட
இன்னுமொரு பக்கத்தில்
ஆரம்பமாகுமொரு நாடகத்தின்
தொடக்கமாகவிருக்கலாம்?
யார் கண்டது?
பாத்திரங்களிற்கா
குறைவில்லை?
ஆக,
இருக்கும் வரை
நடித்துக் கொண்டேயிருப்போம்.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

14.நகர் வலம்
- வ.ந.கிரிதரன் -


பெரு
நகரின் இருண்டதொரு
அந்தியில் தொடங்கினேன்
என்
நகர் வலத்தை ஒரு
மன்னனைப் போல.
சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும்
ஓர் எருமையைப் போல்
புரண்டு புரண்டு குளித்துக்
கொண்டிருந்தது
நகரம்.

வீதிக் கால்வாய்கள் வழியாக
மெதுமெதுவாய்
நகர்ந்து கொண்டிருந்த
வாகனப் பாம்புகளை
அவை வயிற்றில் சுமப்பவர்களை
வியப்புடன் ஒருவித அருவருப்புடனும்
பார்த்துக் கொண்டிருந்தனர்
நகரத்து மாந்தர்.

உயரமான, பழையதொரு
கோதிக் பாணியில் அமைந்திருந்த
கிறித்தவ ஆலயமொன்றின்
உச்சியில் வாசம் செய்யும் புறாக்கள்
சில பறப்பதும் சிறகுகளை
உதறுவதுமாக பறவைகளின்
இருப்பின் சாட்சியாகச்
சோர்ந்து கிடந்தன.
இரவின் கருமையை கார்
மேகங்கள் மேலும் அதிகரித்துப்
பார்வைப் புலத்தினைப்
பழுதாக்கின.

அழகான பெண்கள் அலங்கரித்தபடி
கரைகளில் நின்றபடி
கால்வாய்களில் நகரும் பாம்புகளையும்
அவற்றில் பயணித்தவர்களையும்
ஆர்வத்துடன் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
இந்த இரவு முழுக்க
இவர்களது பொழுது
இவ்விதமே கழியும்?

ஆகாயமே கூரையாக
வாழும் ஊர் உலாத்தி மனிதர்கள்
உற்சாகம் குன்றி
நகரின் நடுநடுவே தெரியும்
நந்தவனங்களில்
போர்வைகளிற்குள்
நடுங்கி, முடங்கிக்
கிடந்தனர் எந்தவிதக்
கணப்புமின்றி.

கிளப்புகளில்
களியாட்டம் தொடங்கி விட்டது. மேடைகளில்
ஆண்கள், பெண்கள்
ஆடைகளின்றி ஆடினர்
முலைகளைக் குறிகளைக்
குலுக்கியபடி. பாயும் மதுவெள்ளத்தில்
நீந்தி நீந்தி
மூழ்கினர் நகரத்தின் பெருங்குடி
மக்கள்.

போதை வஸ்த்து, பியர், விஸ்கி
பொங்கி நகரை வெள்ளக்த்தில்
மூழ்க வைத்தன. திருடர்கள்
கன்னக்கோல் வைத்தழகு
பார்க்கத் தொடங்கினர்.
துப்பாக்கிக் கரங்கள் நீண்டு
நகரைச் சுற்றி வளைக்கத் தொடங்கி
விட்டன.

பகல் முழுக்கச் சட்டங்கள் இயற்றிவர்கள்,
உரிமை பற்றி வாய் கிழிய முழங்கியவர்கள்,
பார்களில், ஓட்டல்களில் சல்லாபித்துக்
கிடந்தனர்.

நகரை நோக்கி
இன்னும் பலர் படையெடுப்புகள்
நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
ஆலைகளில், உணவகங்களில்
இன்னும் மனிதர்கள்
உழைத்துக் கொண்டுதானிருந்தார்கள்
எந்தவித களிப்புமின்றி
இருப்பிற்காக ஆனால் பெருங்
கனவுகளுடன்.

களியாட்டமிடும் நகரை
ஓரமாக ஒதுங்கி நின்று
பார்த்து
ஏக்கத்துடன் சோகித்துக் கிடந்தன
கிராமங்கள்.

நகரத்தின் விளையாட்டைச்
சகிக்க முடியாத விண்மீன்கள்
தங்களை மூடித் தொலைந்து
போயின எங்கோ.
விரிந்து கிடந்த
பெருவானோ
எந்தவிதச் சலனமுமின்றி
மெளனித்துக் கிடந்தது
இது வழக்கமானதொரு நிகழ்வு
போல.

சுடர்களற்ற
இந்த இரவில்,
இந்த மழையில்
எதற்காக நான்
என் நகர்வலத்தை
ஆரம்பித்தேன்?

நன்றி: திண்ணை, பதிவுகள்.

15.அனகொண்டா
வ.ந.கிரிதரன்


அடாது மழை
விடாது பெய்து கொண்டிருந்த
நேற்றிரவு நானொரு கனவு
கண்டேன்.
வழக்கம் போல்
இம்முறையும் தனது அகன்ற
வாயினை விரித்தபடி
அதே அனகொண்டா.
விண்ணளாவ வியாபித்து
விரிந்திருக்கும் அதன் வாய்
எனக்கு அச்சத்தினை
மூட்டியது. அதன்
துரத்தலிலிருந்து
தப்புதலென்பது வழக்கம் போல்
இம்முறையும்
இயலாத செயல்களில் ஒன்றாகவே
ஆனது.
எனது கால்களும் கூட
நிலை பெயர்தலை
நினைக்க மறந்தன.
எதற்காக இந்த அனகொண்டா
என்னை எப்பொழுதுமே
துரத்துகிறது?
இதனிடமிருந்து எனக்கு
மீட்சி
எப்பொழுது?
அவ
தரிப்பிலிருந்து
தரிப்புவரை
அகன்ற தன் வாயினை
அகலத் திறந்தபடியிந்த
அனகொண்டா
இது போலெப்பொழுதுமே
வரத்தான் போகின்றது
போல் தெரிகிறது.
அகன்று பெரு வெளியெங்கும்
வியாபித்துக் கிடக்கும்
இதன் பார்வையிலிருந்து
ஒரு போதுமே தப்புதலென்பது
முடியாது போல் தான்
படுகிறது.
அனகொண்டாவுடன்
வாழப் பழகிக் கொள்வதைத் தவிர
வேறெதுவுமொரு வழி
இருப்பதாகத் தெரியவில்லை
கனவில் மட்டுமல்ல
நனவிலும்தான்.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

16.கிணற்றுத் தவளைகள்!
- வ.ந.கிரிதரன் -


தவளைகளின் கொட்டம் தாங்க முடியவில்லை.
கிணற்றை விட்டு வெளிவர
மாட்டோமென்று அடம் பிடிக்கின்றன.
சில தவளைகளுக்கோ வார்த்தைகளென்றால்
அவ்வளவு உயிர். மழைக்காலங்களில் அவை இழுக்கும்
ஆலாபனையிருக்கிறதே! வார்த்தைகளை வைத்து
மாயாஜாலம் காட்டுவதில் வல்லவை அவை. மேற்படி
தவளைகள் சில வேளைகளில் அறிதலுக்காக
மிகவும் பிரயத்தனம் செய்கின்றன.
ஆயினும் 'வெளிவருத'லென்பது அவற்றுக்கு
வேப்பங்காய் தான்.
புறம் விரிக்குமென்பதறியாத அவை
அறிதலின் உச்சியில் நின்று
ஆனந்தக் கூத்தாடுவதாகக் கனவுகள்
காணுகின்றன. தமக்குள் அடிக்கடி மோதிக் கொண்டபோதும்
ஒரு விடயத்தில் மட்டும் அவை பெரிதும் ஒற்றுமையாக
இருக்கின்றன. அது....
இருப்பை நிலை நாட்டுவதிலுள்ள ஆர்வம்.
தம்மிருப்பை உறுதி செய்வதில் அவை
பெரிதும் ஒற்றுமையாகவிருக்கின்றன.
ஆயினும் ஒற்றுமையின் பலம் கொண்டு
வெளிவர மட்டும் அவை சிறிதும்
முயல்வதில்லை.
கிணற்றுத் தவளைகளின் இருப்பு
அவற்றின் பரிதாப நிலையினைப்
புலப்படுத்தும். வெளி விரிந்து கிடப்பதை
அவை அறியவில்லை. இருந்தும் அவை
மிகவும் சந்தோஷமாகத்
தானிருப்பதாகத் தெரிகின்றது.
போதுமென்ற மனதில் பொன் செய்து
வாழும் தவளைகள்!

நன்றி: திண்ணை, பதிவுகள்.

17. தேடல்கள்!
- வ.ந.கிரிதரன் -


எப்பொழுதுமென் நெஞ்சில் களியை
ஊட்டுவனவாகக் கீழுள்ளவற்றினைக்
கூறிடலாம்.
நல்ல நூல்கள்; நதி;கடல்;
மலை;சுடர்;புள்;மரம்;காற்று...
இது போல் பலப் பல. இவை
எனக்குப் படைப்பின் அதிசயத்தை,
அற்புதத்தினைப் போதிக்கின்றன.
அகக் கண்களை எல்லைகள் கடந்து
நோக்கத் தயார் செய்து விடுகின்றன.
எப்பொழுதுமே
அறிதலுக்கும், புரிதலுக்குமாக
தேடுமென் நெஞ்சத்தின்
தாகம் இச்சிறுகணவிருப்பில்
அடங்கிப் போகப் போவதில்லை
என்பதும் புரிந்துதானிருக்கிறது.
இருந்தும் இயன்றவரை
வினாக்களுக்குரிய விடைகளை
நாடித் தொடருமென் தேடல்
தொடரத் தான் போகின்றது.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

18.இருப்பதிகாரம்
- வ.ந.கிரிதரன் -


[நிலை மண்டில ஆசிரியப்பா!]
வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்
அதனை யடக்க மற்றோ ரண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு.
இதுவும் நிசமா நிழலாக் கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்!
இருப்பு அறிந்திட தேடித் தொடரும்
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!
இதனை அறிதல் புரித லெவ்விதம்?
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்?
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய்
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம்
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்?
செயற்கை சமைத்திட சிந்தை தந்த
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட
பண்பினால் தானோ பாரினில் பகைமை?
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை
வந்திடு மென்றால் அதுவே போதும்.

வேறு....

அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்
சிந்தை யிழந்து இருத்த லின்பம்!
இரவில் வானில் நீந்தும் மீன்கள்
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும்.
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும்
படைப்பின் திறனை பறையே சாற்றும்.
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும்.
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும்
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும்.

உறவினை உதறி யுண்மை அறிதல்
துறவென ஆயிடு மதனா லதனை
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே
உண்மை காணலே சிறந்ததோ தறியேன்.
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன்.
உளையு முளத்தின் உளைவை எவ்விதம்
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?

நன்றி: திண்ணை, பதிவுகள்.

19. சுடர்ப்பெண்கள் சொல்லும் இரகசியம்?

இருண்ட அடிவானை நோக்குவீர்.
ஆங்கு
இலங்கிடும் சுடர்ப்பெண்கள்
உரைத்திடும்
இரகசியம் தானென்ன?
புரிந்ததா?
புரிந்திடினோ, பின்னேன்
நீவிர் புழுதியில் கிடந்துருள்கின்றீர்?
சாக்கடையில்
புழுத்துளம் வேகுகின்றீர்?
சூன்யத்தைத்
துளைத்து
வருமொளிக்கதிர்கள்.
நோக்குங்கள்!
நோக்குங்கள்!
நோக்கம் தான்
தெரிந்ததுவோ?
தெரிந்துவிடின்
போக்கற்ற பிறவியெனப்
புவியில்
தாக்குண்டலைகின்றீரே? ஏன்?
'அஞ்சுதலற்ற கதிர்கள்.
அட,
அண்டத்தே யார்க்கும்
அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி கோடியாண்டுகள்
ஓடியே வந்தோம். வருகின்றோம். வருவோம்.
காலப் பரிமாணங்களை
வெளியினிலே
காவியே வந்தோம்.
சூன்யங்கள் கண்டு
சிறிதேனும்
துவண்டுதான் போனோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர்
எம்முன்னே
மிஞ்சி நிற்பவர் தானுண்டோ?
தெரிந்ததா? விளக்கம்
புரிந்ததா?
தெரிந்திடினோ? அன்றி
புரிந்திடினோ?
உரிமையற்ற புள்ளெனவே
உழல்கின்றீரே யிவ்வுலகில்.
அட,
துள்ளியெழத் தான்
மாட்டீரோ? புத்துலகம்
சமைத்திடத்தான்
மாட்டீரோ?
புரிந்ததா? சுடர்ப்பெண்கள்
பகரும் இரகசியம்
புரிந்ததா?

நன்றி: திண்ணை, பதிவுகள், தாயகம்

20. விடிவெள்ளி

அதிகாலை மெல்லிருட்
போதுகளில்
அடிவானில் நீ
மெளனித்துக் கிடப்பாய்.
படர்ந்திருக்கும் பனிப்போர்வையினூடு
ஊடுருவுமுந்தன்
நலிந்த ஒளிக்கீற்றில்
ஆதரவற்றதொரு சுடராய்
நீ
ஆழ்ந்திருப்பாய்
விடிவு நாடிப் போர் தொடுக்கும்
என் நாட்டைப் போல.
விடிவின் சின்னமென்று
கவி
வடிப்போர் மயங்கிக்கிடப்பர்.
ஆயின்
சிறுபோதில்
மங்களிற்காய் வாடிநிிற்கும்
உந்தன்
சோகம்
புரிகின்றது.
அதிகாலைப் போதுகளில்
சோகித்த
உந்தன்
பார்வை படுகையிலே
என் நெஞ்சகத்தே
கொடுமிருட் காட்டில் தத்தளிக்கும்
என் நாட்டின்
என் மக்களின்
பனித்த பார்வைகளில்
படர்ந்திருக்கும் வேதனைதான்
புரிகின்றது.
என்றிவர்கள் சோகங்கள்
தீர்ந்திடுமோ?
என்றிவர்கள் வாழ்வினில்
விடிவு பூத்திடுமோ?
விடிவினை வழிமொழியும்
சுடர்ப்பெண்ணே!
வழிமொழிந்திடுவாய்.

நன்றி: திண்ணை, பதிவுகள், தாயகம்

21. இயற்கைத்தாயே!

போதுமென்றே திருப்தியுறும்
பக்குவத்தைத் தந்துவிடு!
தாயே! இயற்கைத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்.
விதியென்று
வீணாக்கும் போக்குதனை
விலக்கி விடு.
மதி கொண்டு
விதியறியும்
மனத்திடத்தை
மலர்த்திவிடு.
கோள்கள், சுடர்களெல்லாம்
குறித்தபடி செல்வதைப்போல்
வாழும் வாழ்வுதனை
என் வாழ்நாளில் வளர்த்துவிடு.
தாயே! இயற்கத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்...

நன்றி: திண்ணை, பதிவுகள், தாயகம்

22. எங்கு போனார் என்னவர்?

அன்றொரு நாள் பின்னிரவில்
ஆயுதம்தனையேந்திப்
போனவர் என்னவர் தான்.
போனவர் போனவரே.
போராடிச் சாவதுவே
மேலென்று போனவரை
யாரேனும் பார்த்தீரோ?
பகைவன்தன்
போர்க்களத்தே போனாரோ?
அன்றி
'பூசா'வில் தான் புதைந்தாரோ?
உட் பகையால்
உதிர்ந்தாரோ?
உடல் படுத்தே மடிந்தாரோ?
போனவரை
யாரேனும்
பார்த்துவிட்டால் சொல்வீரோ?
அன்னவரை
எண்ணியெண்ணி
அகமுடையாளிருப்பதாக.
மன்னவரின் நினைவாலே
மங்கையிவள் வாழ்வதாக...

நன்றி: திண்ணை, பதிவுகள், தாயகம்

23. விழி! எழு! உடைத்தெறி!

தளைகள்!தளைகள்!தளைகள்!
எங்குமே..நானாபக்கமுமே..
சுற்றிப் படர்ந்திருக்கும்
தளைகள்!தளைகள்!தளைகள்!
சுயமாகப் பேசிட,
சிந்தித்திட,
உன்னையவை விடுவதில்லை.
நெஞ்சு நிமிர்த்தி
நடந்திட அவை சிறிதும்
நெகிழ்ந்து கொடுப்பதில்லை.
உள்ளும் புறமும்
நீ
உருவாக்கிய
தளைகள்.
இன்றுனை இறுக்கி
நெருக்கி
உறுஞ்சிக் கிடக்கையில்..
விழி! எழு! உடைத்தெறி!
உன் கால்களை,
உன் கைகளை,
உன் நெஞ்சினைப்
பிணைத்து நிற்கும்
தளைகளை
விலங்குகளை
உடைத்துத் தள்ளு!
வேரறுத்துக் கொல்லு!

நன்றி: திண்ணை, பதிவுகள், தாயகம்

24. ஆசை!

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும்
ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல்
அடியேனின் வழக்கமாகும்.
கருமைகளில்
வெளிகளிலே
கண் சிமிட்டும் சுடர்ப்
பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.
நத்துக்கள்
கத்தி விடும்
நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.
பரந்திருக்கும் அமைதியிலே
பரவி வரும்
பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி
பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.
இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால்
அடியேனின்
இஷ்ட்டமாகும்.

நன்றி: திண்ணை, பதிவுகள், தாயகம்

25. இயற்கையே போற்றி!

எங்கும் வியாபித்து, எங்கும் பரந்து
எங்கனுமே,
சூன்யத்துப் பெருவெளிகளும்
சுடர்களும், கோள்களும்,
ஆழ்கடலும், பாழ் நிலமும்,
பொங்கெழி லருவிகளும்,
பூவிரி சோலைகளும்,
இன்னும்
எண்ணற்ற , எண்ணற்ற கோடி
கோடி யுயிர்களுமாய்
வியாபித்துக் கிடக்கும்
பரந்து கிடக்கும்
இயற்கைத் தாயே! உனைப்
போற்றுகின்றேன். நானுனைப்
போற்றுகின்றேன்.
பொருளும் சக்தியுமாய்
சக்தியே பொருளுமாய்
E=M(C*C)
இருப்பதுவே யில்லாததாய்
இல்லாததே யிருப்பதுவாய்
உண்மையே பொய்மையுமாய்
பொய்மையே உண்மையுமாய்
நித்தியமே அநித்தியமுமாய்
அநித்தியமே நித்தியமுமாய்
புதிர்களிற்குள் புதிராகக்
காட்சிதரும் இயற்கைத்தாயே! உனைப்
போற்றுகின்றேன்!நானுனைப்
போற்றுகின்றேன்.

நன்றி: திண்ணை, பதிவுகள், தாயகம்

26. தனிமைச் சாம்ராஜ்யத்துச்
சுதந்திரப் பறவை.


தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே. இசை
பாடிடுமெழிற் புள்ளெனவே.
கட்டுக்களற்ற உலகில்
கவலைக் காட்டேரிகள் தானேது?
சட்டங்களற்ற வுலகில்
சோகங்கள் தானேது?
ஒளித்தோழர்கள் வெட்கி
ஒளிந்தனரென் பறத்தலின் பின்னே.
பிரபஞ்சத்து வீதிகளில்
பறந்து மீள்கையில் படர்வது
பெருமிதமே.
நோக்கங்கள் விளங்கி விட்ட வாழ்வில்
தாக்கங்கள் தானேது? அன்றி
ஏக்கங்கள் தானேது?
தனிமைகளின் சாம்ராச்சியங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே.இசை
பாடிடுமெழிற் புள்ளெனவே.

நன்றி: திண்ணை, பதிவுகள், தாயகம்

27. அதிகாலைப் பொழுதுகள்!

அதிகாலைப் பொழுதுகள்
அழகானவை.பிடித்தமானவை. சில
அதிகாலைப்பொழுதுகளில்
அப்பாவின் தோளில் சாய்ந்தபடி
அடிவானச் சிவப்பு கண்டு
அதிசயித்திருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம் விண்ணில்
அழகாகக் கோடிழுக்கும்
நீர்க்காகத்தின்
நேர்த்தி கண்டு
நினைவிழந்திருக்கின்றேன்.
இன்னும் சில
அதிகாலைப் பொழுதுகளோ
அற்புதமானவை. விடாது பெய்த
இரவின்
அடை மழையில்
குட்டைகள் நிரம்பியதில் வாற்பேத்தைகள்
கும்மாளமிடும்.
பெரும்பாலான
அதிகாலைப் பொழுதுகளில்
நகரிற்குப் படையெடுப்பர்
நம் தொழிலாள வீரர். அவர்தம்
விடிவு வேண்டி
அச்சமயங்களீல்
ஆவேசம் அடைந்திருக்கின்றேன்.
விரகத்தால் துடிக்கும் பனைப்பெண்டிர்;
மூசிப் பெய்யும் மாசிப்பனி;
பனிதாங்கும் புற்கள்; புட்கள்.
இவையெல்லாம்
அதிகாலைப் பொழுதுகளிற்கு
அழகூட்டின. ஆயினெப்பொழதுமே
அதிகாலைப் பொழுதுகள்
அது போன்றே யிருந்ததில்லை. சில
அதிகாலைப் பொழுதுகள்
அவலத்தைத் தந்திருக்கின்றன.
அப்பொழுதெல்லாம்
எரிந்து கன்றி யுப்பிய
உடல்களை
அதிகாலைகளில் கண்டிருக்கின்றேன். இரவின்
அனர்த்தங்களை அவை சோகமாக
எடுத்துரைக்கும்;மெளனமான சோகங்கள்.
இப்பொழுதெல்லாம்
அதிகாலைப் பொழுதுகள் முன்புபோல்
இல்லை தான். அவை
அழகாகவுமில்லை.
அவலட்சணமாகவுமில்லை. அவை
அற்புதமாகவுமில்லை. ஏன்
ஆபத்தாகக் கூடத் தெரிவதில்லை.
எத்தனை தரம் தான்
'காங்ரீட்' மரங்களையும்
கண்ணாடிப் பரப்புக்களையும்
பார்ப்பது?
இப்பொழுதெல்லாம்
அதிகாலைப் பொழுதுகள்
சலிப்பைத் தருகின்றன,
போரடிக்கின்றன.
இருந்தாலும் இன்னமும்
'விடிவை' எதிர்வு கூற மட்டும்
அவை தயங்குவதேயில்லை.

நன்றி: திண்ணை, பதிவுகள், தாயகம், ஆறாந்திணை

28. இரவு வான்!

விரிந்து,பரந்து, இருண்டு இரவு
வான் முடிவிலியாய் முடிவற்றுத்
தெரியும்; விரியும்; புரியுமா ?
பார்வைப் புலனின் புலப்படுத்துதல்
இரவு வானின் இருப்பின்
உண்மையையா ?
இருண்டிருக்கும் இந்த வான்
இயம்புவதிலேதும் இரகசியம்
தானுண்டோ ? நெஞ்சேயறி.
காண்பதெல்லாம் காட்சிப்
பிழையென்று காட்டுமோவிந்த
இரவு வான்.

ஒளிர்சுடரொவ்வொன்றும்
ஒளிவருடப் பிரிவினில்
ஒளிரும்; ஒரு கதை பகரும்;
விரியும் விசும்பும் விடை சொல்லி
விரியும்; காலத்தின் பதிவுகளைக்
காட்டிடுமொரு காலக் கண்ணாடியா
இந்த இரவு வான் ?

முடிந்தவற்றை, மடிந்தவற்றைக்
காவிவரும் ஒளிச்சுடர்கள்.
புராதனத்துப் படிமங்கள் தாங்கி நிற்குமேயிந்த
இரவு வான்;
சுடர்கோடியிருந்தும்
இருண்டிருக்கும் இரவு வான்;
அழிவு, தோற்றம், வளர்ச்சி பல
புலப்படுத்தும் இரவு வான்.

நத்துகள் கத்திடுமொரு
நள்ளிரவில்
நிலாகண்டு, அதன் வனப்பில்
நெஞ்சிழந்து, நெகிழ்ந்து
கிடக்கையிலும், வெளிபோல்
உள்ளுமொரு இரவு வானாய்
இருக்குமிந்த நெஞ்சும்
காலத்தினடுக்குகளைச்
சுமந்தபடி சாட்சியாக.

- திண்ணை, பதிவுகள்

29. சொப்பன வாழ்வினில் மயங்கி.....

இரவில் மட்டும் பூத்திடும்
தாமரைகளா!

யார் சொன்னது
வருடத்தில் ஒரு முறைதான்
கார்த்திகைத் திருவிழா
வருமென்று ? இங்கு ஒவ்வொரு
இரவும்
திருவிழாதானே ?

யார் சொன்னது நட்சத்திரங்கள்
கொட்டிக் கிடப்பது
விண்ணில் மட்டும் தானென்று ?
இந்த
மண்ணிலும் தான்.

சுடர்களை மறைத்தன
நகரத்துச்
சுடர்களே. மரங்களை
மறைத்தன நகரத்து
மரங்களே.

சுடரிழந்த விண்ணை
ஈடு செய்யவா
சுடர் கொடுத்ததிந்த
மண். நகரத்து மண்.
மரமிழந்த மண்ணை
ஈடு செய்யவா
மரம் தந்ததிந்த
விண். நகரத்து விண்.

மண்ணில் வேரறுத்ததாலோ
விண்ணில் வேர் பதிக்கவெழுந்தன
இந்த மரங்கள்!அடைய வந்த
புட்கள் புல்லாகிப் போன
விந்தையென்னே!

விரையும் பேராறுகளை,
கணமேனும் ஆறுதலற்றோடும்
பெரு நதிகளை நீங்கள்
வேறெங்காவது கண்டதுண்டா ?

உங்கள் வேகத்தைக் கண்டு
வெட்கப்பட்டுத தானோ
இருக்கும் ஒன்றிரண்டும்
ஓடையாகி ஓரத்தில்
ஒதுங்கினவோ ?

சொப்பன வாழ்வினில் மயங்கி
நகரத்துச்
சொப்பன வாழ்வினில் மயங்கி
உனை மறந்தோம் ? இயற்கை
உனை மறந்தோம். நாம்
உனை மறந்தோம்.

திண்ணை, பதிவுகள்

30. களு(ழு)த்துறை!

நேற்றுத் தான் அவன்
விடுதலையாகி வந்திருந்தான்.
இரு வருடங்கள் அவனுக்கு
இரு யுகங்களாகக் கழிந்திருந்தன.

நண்பனே! அவர்கள் உன்னை ,
உன் தோழர்களை
என்னவெல்லாம் செய்தார்கள் ?

உன் தோழர்கள் அங்கு
என்னவெல்லாம் செய்வார்கள் ?

காலத்தினையெவ்விதம் கழிப்பரோ ?

ஆசனத்துள் 'எஸ்லோன் ' வைத்து
அதனுள் முள் வைத்து
இழுத்த இழுப்பினில் நண்பன் ஒருவனின்
குடலே காணாமல் போனதுவாம்.
நண்பன் கூறினான்.
குடல் காணாமல் போனவன்
இன்னும் பால்பவுடர்
கலந்து தான் உணவருந்துகின்றானாம்.
நண்பன் மேலும் சொன்னான்.

துளையிடும் கருவியால்
ஒருவன் குதியினைத்
துளையிட்டதில் அவன்
தொலைந்தே போனானாம்.
நண்பன் சொன்னான்.

கற்பனையும் கனவுகளுமாக
வந்த பிஞ்சொன்று
'பிந்துனுவ 'வில்
பஞ்சாகிப் போனதுவாம்.

இது போல் பல, பல...
இன்னும் பல, பல...
நண்பன் சொன்னான்.

'நான் தப்பி விட்டேன். ஆனால்..அவர்கள்.. '
நண்பன் சொன்னான்.

வெளியில் வீசும்
புயலில் அவர்கள்
மறக்கப் பட்டுப் போனார்களா ?
வருடங்களெத்தனை அவர்
வாழ்வில் வந்து போயின ?
அவர்கள் உள்ளே இருப்பது
யாராலே ? யாருக்காக ?
எதனாலே ? எதற்காக ?

கூற்றுவனின் வாசலிலே
குற்றமற்றவர் சுற்றமிழந்து
இன்னுமெத்தனை நாள் வாடுவதோ ?
குரல் கொடுப்பார் யாருளரோ ?
யாருளரோ ?

[ *இலங்கை தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் பலர் களுத்துறை வெலிக்கடைச் சிறைச்சாலையுட்படப் பல சிறைச்சாலைகளில் வருடக் கணக்கில் ,நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப் படாமல், கைதிகளாகத் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றார்கள். இவர்கள் அடையும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர் 'பிந்துநுவ ' போன்ற சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப் பட்டுமுள்ளார்கள். அண்மையில் கூட இவர்கள் தமது இரத்ததில் கடிதம் எழுதி நீதி கேட்டிருப்பதாகப்பத்திாிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன.]

திண்ணை, பதிவுகள்

31. ஞானச்சுடரே! நீ எங்கு போயொளிந்தனையோ?

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.

இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு
வட்டங்கள். இன்
அதிகாலைப் பொழுதுகளா ?
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?

ஞானத்தினிறுமாப்பில்
ஆகாசக் கோட்டை கட்டும்
நெஞ்சினிலோ....
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?

விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்!போர்!போர்!

ஆ....

வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?

ஆ..அந்த

அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
ஞானச்சுடரே! நீ

எங்கு போயொளிந்தனையோ ?
நீ! எங்கு போயொளிந்தனையோ ?
நீ! எங்கு போயொளிந்தனையோ ?

திண்ணை , பதிவுகள்

32. கவலையுள்ள மனிதன்!

எனக்குச் சாியான கவலை.
எதற்கெடுத்தாலும்
எப்பொழுதும்
ஒரே கவலை தான்.
கவலைக்கொரு எல்லை
வேண்டாமா ?
என்ன செய்வது ?
குப்புறப் படுத்தால் பின்னால்
வானமே இடிந்து விழுத்து
விட்டாலென்ற கவலை.
அதற்காக மல்லாந்து படுக்கவா
முடிகிறது. முடிந்தால்
விழுகிற வானத்தைத்
தாங்குவதெப்படி என்கிற
கவலை.
யாருக்குத் தான் என் கவலை
புரியப் போகின்றதோ ?
சும்மாவா சொன்னார்கள்
அனுபவித்துப் பார்த்தால் தான்
தெரியும்\அவரவர் கவலை அவரவருக்குப்
புரியுமென்று.

திண்ணை, பதிவுகள்


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner