வ.ந.கிரிதரனின்
27 சிறுகதைகள்!
- இம்முறை ஒரு பதிவுக்காக பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, ஆனந்தவிகடன்,
மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகளை
வாசகர்களுக்காக இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த
சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த
மண்ணைப் பற்றிப் பேசுபவை. -
1. சீதாக்கா!
-வ.ந.கிரிதரன் -
1.
இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால்
இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை
கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப்
புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று
ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ்
டிரைவரொருவன் நின்றிருந்தான்.
"ஆம். நண்பனே. என்ன விடயம்" என்றேன்.
"நல்லதாகப் போய் விட்டது. நான் மான்ரியாலிருந்து வந்த பஸ் டிரைவர். என்னுடைய
பஸ்ஸில் ஒரு ஸ்ரீலங்காத் தமிழ்ப் பெண்ணொருத்தி வந்திருக்கிறாள். அகதியாக வந்தவள்.
இங்கு அவளுக்கு யாரையுமே தெரியாது. உன்னால் முடிந்தால் உதவ முடியுமா?"
"தாராளாமாக "வென்றேன்.
"மிகவும் நன்றி நண்பனே!" என்றவன் பயணிகள் தங்கியிருக்கும் கூடத்திற்குச் சென்று
சிறிது நேரத்தில் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.
"நண்பனே! இந்தப் பெண்ணுக்குத் தான் உன் உதவி தேவை" என்றவாறு அழைத்து வந்த பெண்ணைப்
பார்த்த எனக்கு வியப்புத் தாளவில்லை.
"சீதாக்கா" என்று கத்தியே விட்டேன்.
சீதா அக்காவுக்கும் என்னைக் கண்டதில் அளவிடமுடியாத வியப்புத் தான். எதிர்பாராத
சந்திப்பல்லவா. மான்ரியால் பஸ் டிரைவருக்கு நன்றி கூறினேன். அவனும் " உனக்கு முன்பே
இவளைத் தெரியுமா? நல்லதாகப் போய் விட்டது. எல்லாம் கடவுள் அருள்" என்று கூறி
விட்டுச் சென்றான்.
"சீதாக்கா நம்பவே முடியவில்லையே! "யென்றேன்.
"எனக்கும் தான் மாது. பார்த்து எவ்வளவு நாளாச்சு " என்றாள் சீதாக்கா.
சீதாக்கா உண்மையிலேயே நல்ல வடிவு தான். அதிகாலையில் எழுந்து, கோலம் போட்டு.
அருகிலிருக்கும் பிள்ளையார் கோயில் சென்று கோயில் ஐயருக்கு வேண்டிய உதவிகளெல்லாம்
செய்து வருவதையெல்லாம் வியப்புத் ததும்ப பார்த்துக் கொண்டிருப்பேன். ஊரில் யாருக்கு
என்ன உதவியென்றாலும் உதவி செய்யத்
தயங்காத உள்ளம் சீதாக்காவினுடையது. ஆண்பிள்ளையில்லாத குடும்பம். வயதான தாயையும்
பார்த்துக் கொண்டு, ஊரிலிருந்த நெசவு சாலையில் வேலை பார்த்துக் கொண்டு, எந்தவிதமான
சூழல்களையும் துணிவாக ஏற்றுக் கொண்டு வளையவரும் சீதாக்காவைப் பார்க்கும் போதெல்லாம்
பெருமையாகவிருக்கும். சீதாக்காவுக்கு எப்பொழுதுமே துணை நான் தான். நூல் நிலையம்
போகும்போது என்னைத் தான் எப்பொழுதும் கூட்டிச் செல்வாள். சீதாக்காவும் என் மூத்த
அக்காவும் நல்ல சிநேகிதிகள். இருவருக்குமிடையில் நாவல்களைப் பரிமாறுவது நான் தான்.
கல்கி, விகடனில் வந்த தொடர்கதைகளை அழகாகக் கட்டி வைத்திருப்பாள். ஜெயகாந்தன்,
உமாசந்திரன், நா.பார்த்தசாரதி, அகிலன், கல்கி, ஜெகசிற்பியன் நாவல்களென்றால்
சீதாக்காவுக்கு உயிர். ஆனால் ..சீதாக்கா பாவம். இவ்வளவு அழகிருந்தும்,
குணமிருந்தும் அவளுக்குக் கல்யாணம் மட்டும் ஆகவேயில்லை. இந்த ராஜகுமாரியைக்
கூட்டிக் கொண்டு போக எந்த ராஜகுமாரன் வரப் போகின்றானோவென்றிருக்கும். நான் ஊரில்
இருந்த வரையில் ஒரு ராஜ குமாரனுக்கும் அந்த அதிருஷ்ட்டம் வாய்த்திருக்கவில்லை.
எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். அதன்
பிறகு இப்பொழுதுதான் பத்து வருடங்கள் கழித்து சீதாக்காவைக் காண்கின்றேன்.
"சீதாக்கா நம்பவே முடியவில்லையே" என்றேன்.
"எனக்கும்தான் மாது. நம்பவே முடியவில்லை. நான் நம்புகிற கதிர்காமக் கந்தன் என்னைக்
கை விடவில்லை" என்றாள் சீதாக்கா.
"சீதாக்கா எப்ப ஊரிலையிருந்து வந்தனீங்கள்"
"அது பெரியதொரு கதை. ஆறுதலாகச் சொல்லுகிறன். அது சரி நீ எப்ப கனடா வந்தனீ.
ஜேர்மனியிலை நிற்கிறதாகவல்லவா கேள்விப்பட்டனான்"
"ஜேர்மனியிலைதான் இருந்தனான். போன வருஷம் தான் இங்காலை வந்திட்டேன். அங்கும்
பிரச்சினைகள் தானே. நாங்களிருந்த இடத்திலை நாசிகளின்ற கரைச்சல் வேறு. மற்றது
அங்கிருந்தால் 'பேப்பரும்' இலேசாகக் கிடைக்காது "
குடியுரிமைக்கான பத்திரங்களை 'பேப்பர்' என்றுதான் பொதுவாகக் கூறுவது வழக்கம்.
"இங்கே யாரோடை இருக்கிறாய் மாது"
"நானும் ஒரு நண்பனுமாக அபார்ட்மெண்ட் எடுத்து இருக்கிறம். கோப்பி ஏதாவது குடிக்கப்
போறீங்களா சீதாக்கா"
இருவருமாக அருகிலிருந்த டோனட் கடையொன்றுக்குச் சென்று காப்பி அருந்தி விட்டு எனது
இருப்பிடம் நோக்கிப் பயணித்தோம். பாவம் சீதாக்கா. ஊரில் இருந்த போதெல்லாம அவளுக்கு
ஏதாவது உதவிகள் செய்ய வேண்டெமென்று நினைப்பேன். ஆனால் அதற்கான வசதிகள்
என்னிடமிருக்கவில்லை. ஆனால் இம்முறை எனக்கு அதற்கான வசதிகள் நிறையவேயிருக்கின்றன.
சீதாக்காவுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென மனதினுள் முடிவு செய்து
கொண்டேன்.
'டொன்வலிப் பார்க்வே'யில் அதிகாலையென்ற படியால் வாகன நெரிச்சல்
அவ்வளவாகவிருக்கவில்லை. மெல்லிய குளிர்காற்றில் விரைவதே சுகமாகவிருந்தது.
"சீதாக்கா நேராக ஊரிலிருந்தா வாறீங்கள்.."
"அது ஒரு பெரிய கதை. நானும் அவருமாக ஊரிலையிருந்து போன மாசம் ஒரு ஏஜெண்ட்டோடை
வெளிக்கிட்டனாங்கள். அவரை சிங்கப்பூரிலை விமான நிலையத்திலை நிற்பாட்டிப்
போட்டாங்கள். இனி இங்கையிருந்து கொண்டு தான் அவரைக் கூப்பிட முயற்சி செய்ய
வேண்டும்"
என்ன! சீதாக்காவுக்குக் கல்யாணம் ஆகி விட்டதா? நிம்மதியாகவிருந்தது.
"சீதாக்கா எப்ப உங்களுக்குக் கல்யாணம் நடந்தது? எனக்குத் தெரியாதே."
"போன வருஷம் தான். அவர் எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்திலை வாத்தியாராகவிருந்தவர்.
வெளியூர்க்காரர். எங்களுடைய வீட்டிலைதான் சாப்பாடு. அப்ப ஏற்பட்ட பழக்கம் தான்.
நல்ல மனுஷண்டா மாது"
சீதாக்காவின் முகத்தில் வெட்கத்தின் சாயை படிந்தது.
"ஒன்றுக்கும் கவலைப் படாதையக்கா. எப்படியாவது அவரை இங்கே கூட்டி வந்து விடலாம்"
என்று சீதாக்காவுக்கு ஆறுதல் கூறியபொழுது மனதினுள் எப்படியாவது இம்முறை
சீதாக்காவுக்கு உதவி செய்ய வேண்டுமென முடிவு செய்து கொண்டேன். அவளுக்குத் திருமணம்
செய்து வைக்க உதவ வேண்டுமென எண்ணியதுண்டு. அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.
ஆனால் இப்பொழுதோ அவளை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைக்க ஒரு சந்தர்ப்பம்
கிடைத்திருக்கிறது. கட்டாயம் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
2.
"சீதாக்கா, இவன் தான் என் 'ரூம்மேட்' சபாபதி. உன்னை மாதிரித்தான் சரியான சாமி
பைத்தியம். சபா! சீதாக்கா எங்களுடைய ஊர் தான். பஸ் டேர்மினலிலை தான் சந்தித்தனான்.
கொஞ்ச காலத்திற்கு எங்களுடன் தான் தங்கப் போகின்றா"
"ஹலோ. உங்களைப் பற்றி இவன் அடிக்கடி கதைப்பான் "
சபாபதிக்கும் சீதாக்காவுக்கும் உடனடியாகவே ஒத்துப் போய் விட்டது.
"மாது! உனக்கு நல்லதொரு நண்பன் வாய்த்திருக்கிறான்" என்று மனம் நிறைந்து
பாராட்டினாள்.
சீதாக்கா வந்ததிலிருந்து எங்களுடைய அபார்ட்மெண்ட்டின் கோலமே மாறி விட்டது.
அதுவரையில் பிரம்மச்சாரிகளுக்குரிய வகையில் அலங்கோலமாகக் கிடந்த அப்பார்ட்மெண்ட்
தலைகீழாக மாறி விட்டது. அபார்ட்மென்டிற்கே ஒருவித வடிவும் ஒழுங்கும் வந்து விட்டது.
அதிகாலையிலேயே எழுந்து விடும் சீதாக்கா டேப்பில் எம்.எஸ்.சின் சுப்ரபாதத்தினைப்
போட்டு விடுவாள். குளித்து விட்டு எந்த வித விகல்பமுமில்லாமல் குறுக்குக்
கட்டுடனேயே உலராத கூந்தல் தோள்களில் புரண்டபடியிருக்க அபார்ட்மெண்ட் முழுக்க
சாம்பிராணி புகையை பரப்பி விடுவாள். அதுவரை அழுது வடிந்து கொண்டிருந்த
அபார்ட்மெண்ட்டிற்கே ஒருவித லக்சுமிகரக் களை வந்து விட்டது. என்னைவிடச்
சபாபதிக்குத் தான் சரியான சந்தோசம். தன்னைப் போலொரு சரியான சாமிப் பைத்தியம் வந்து
விட்ட மகிழ்ச்சி அவனுக்கு.
நான் சீதாக்காவை இங்கு அனுப்பிய முகவருடன் தொடர்பு கொண்டு அவளுடைய கணவர் பற்றிய
தகவல்களைப் பெறு முயன்றேன். அதில் வெற்றியும் கண்டேன். அவளது கணவன் இன்னும்
தன்னுடைய பராமரிப்பில் தான் இருப்பதாகவும், அவனை எப்படியும் கனடா அனுப்புவது தனது
கடமையென்றும் அவன் உறுதி தந்தான். சீதாக்காவையும் அவளது கணவனுடன் கதைப்பதற்கு
ஒழுங்குகள் செய்தான்.
"இஞ்சேருங்க! நீங்க ஒன்றுக்கும் கவலைப் படாதையுங்கோ. நான் சொல்லுவேனே மாது. அவனும்
இங்கு தான் இருக்கிறான். அவனுடன் தான் தங்கியிருக்கிறன். நான் நம்பியிருக்கிற
கதிர்காமக் கந்தன் என்னைக் கை விடேல்லை. உங்களையும் கெதியிலை கொண்டு வந்து சேர்த்து
விடுவான். மாது. அவர் உன்னோடையும் கொஞ்சம் பேச வேண்டுமாம்"
என்று தொலைபேசியைத் தந்தாள் சீதாக்கா.
"மாது! மெத்தப் பெரிய நன்றி. நீங்க செய்த உதவியை மறக்க மாட்டோம்" என்று அவளது கணவன்
மன நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தான்.
"நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ அங்கிள். எப்படியும் கெதியிலை இங்கை வந்து
விடுவீங்கள். சீதாக்காவைப் பற்றிக் கவலையே பட வேண்டாம்" என்று அவருக்கு
உறுதியளித்தேன்.
3.
நாட்கள் சில விரைவாக சென்று மறைந்தன. மாதங்கள் சிலவும் கடந்து சென்றன. சீதாக்காவின்
கணவர் விடயத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டாம் முறையும்
ஏதோ தடங்கல். சீதாக்கா முகத்திலும் சில வேளைகளில் கவலை படரத் தொடங்கியது.
"சீதாக்கா! ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ. எப்படியும் அவர் கெதியிலை வந்து
விடுவார்" என்று ஆறுதல் கூறினேன்.
ஏன் தான் கடவுள் சீதாக்காவை இப்படிப் போட்டுச் சோதிக்கின்றாரோ என்றிருக்கும்.
இதற்கிடையில் எனக்கும் ஊரில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து முடிந்திருந்தன.
பெண்ணைப் பார்ப்பதற்காக என்னைக் கொழும்பு விரைவில் வரும்படி அக்கா கடிதம்
போட்டிருந்தா. கனடா மாப்பிள்ளையென்றபடியால் கொழுத்த சீதனாமாம். பெட்டையும் நல்ல
வடிவாம். சிவப்பாய் தக்காளிப்பழம் மாதிரி. தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்கள் மாதிரி
கனவுகளில் மிதக்க ஆரம்பித்தேன். இவ்விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில்
தான் நான் சபாபதியிலேற்பட்டிருந்த மாற்றத்தினை அவதானிக்கத் தொடங்கினேன். அடிக்கடி
ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்பொழுதெல்லாம் அநேகமாக அப்பார்ட்மென்டே கதியாகக்
கிடக்கத் தொடங்கினான். அதிகாலையே சீதாக்காவுடன் சேர்ந்து எழுந்து விடத்
தொடங்கினான். குறுக்குக் கட்டுடன் சாம்பிராணித் தட்டுடன் வரும் சீதாக்காவின் மேல்
அவனது கண்கள் இரகசியமாக மேயத் தொடங்கியதைத் தற்செயலாக அவதானித்தேன். ஓரிரவு வீடு
அபார்ட்மெண்ட் திரும்பிய பொழுது வீடியோவில் தமிழ்த் திரைப்படமொன்று ஓடிக்
கொண்டிருந்தது. சீதாக்கா சோபாவில் சாய்ந்து நித்திரையாகிக் கிடந்தாள். படம்
பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கிப் போயிருக்க வேண்டும். அவளது சேலை கூட
இலேசாகி மார்பிலிருந்து விலகிக் கிடந்தது. இதனை உணராமல் தூங்கிக் கிடந்தவளை
வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த் சபாபதி என்னை கண்டதும் சிறிது திகைத்தவனாகத்
தனது பார்வையினை மாற்றினான். எனக்கு முதல் முறையாகக் கவலையேற் பட்டது.
சீதாக்காவுக்கு இவனாலேதாவது மனக் கஷ்ட்டங்களேற்பட்டு விடக் கூடாதேயென்று மனம்
தவித்தது. சபாபதி நல்லவன்.ஆனாலும் பருவக் கோளாறு. தவறிழைக்க மாட்டானென்று பட்டது.
ஆனால் ..எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? சீதாக்காவை அவளது கணவருடன்
சேர்த்து வைக்கும் மட்டும் அவளைப் பாதுகாத்து வைக்க வேண்டுமேயென்று மனது கிடந்து
அடித்துக் கொண்டது.
இதற்கெல்லாம் முடிவு....சபாபதியை வெளியே அனுப்புவது தான். இவன் என் நீண்ட கால
நண்பனல்லவே, கனடாவிற்கு வந்த இடத்தில் அறிமுகமானவன் தானே. ஒரு நாள் அவனைத் தனியாக
அழைத்துக் கொண்டு அருகிலிருந்த டோனட் கடைக்குச் சென்றேன்.
"இங்கை பார் சபா. உன்னோடைத் தனியாக ஒரு விசயம் பேச வேண்டும்"
'என்ன? ' என்பது போல் அவன் என்னை நோக்கினான்.
"இஞ்சை பார் சபா. நான் சுத்தி வளைக்க விரும்பவில்லை. இனியும் நீ என்னுடன் இருப்பதை
நான் விரும்பவில்லை. சீதாக்கா போகும் மட்டுமாவது நீ என்னுடனிருப்பதை நான்
விரும்பவில்லை. உனக்கு விளங்குமென்று நினைக்கிறேன். இந்த அபார்ட்மெண்டுக்கு நீ
வரும் போதே ஒரு மாதம் நிற்கிறனென்று தான் நீ வந்தனீ. நானும் விரைவிலை கல்யாணம்
செய்யவிருக்கிறன். அதன் பிறகு என்னுடைய மனுசியும் வந்து விடுவாள். நீ வேறை
அபார்ட்மெண்ட் பார்க்கிறது நல்லது..."
சபாபதி இதற்கேதும் மறுப்புத் தெரிவிக்காதது எனக்கு ஆச்சர்யமாகவிருந்தது. அடுத்த
வாரமே அவன் இடம் மாறி விட்டான். சீதாக்காவுக்குக் கூட வியப்பாகவிருந்தது. "ஏன்
கெதியிலை மாறிவிட்டான். உங்களுக்கிடையிலை ஏதாவது பிரச்சினையோ?' என்று கேட்டாள்.
4.
சபாபதியின் அமைதிக்கான காரணம் விரைவிலேயே விளங்கி விட்டது. அபார்ட்மெண்ட் மாறிய
வேகத்திலேயே அவன் எனக்கும் சீதாக்காவுக்குமிடையில் தொடர்பு இருப்பதாக கதையினைப்
பரப்பி விட்டான். நான் இதனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இவன் இவ்வளவு நஞ்சு
மனம் கொண்டவனாக இருப்பானென்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. எனக்கு என்னைப்
பற்றிக் கவலையேதுமில்லை.ஆனால் இவற்றால் சீதாக்காவுக்கு ஏதாவது பிரச்சினைகளேதாவது
வந்து விடக் கூடாதேயென்று மனம் கிடந்து தவித்துக் கொண்டது. இதற்கு என்ன
செய்யலாமென்று மூளையைப் போட்டுக் குடைந்தது தான் மிச்சம். இதற்கிடையில் இதன்
முதலாவது விளைவாக அக்காவின் கடிதம் வந்திருந்தது.
" தம்பி, உனக்குப் பேசிய கல்யாணம் முறிந்து விட்டது. உனக்கும் எங்களுடைய
சீதாக்காவுக்கும் தொடர்பாமென்று யாரோ கதை கட்டி விட்டிருக்கிறாங்கள் போலை.
அவங்களுடைய காதுகளுக்கும் அந்தக் கதை போய் விட்டது. இந்தச் சம்மந்தம்
வேண்டாமென்றிட்டாங்கள். நான் சொல்லுறனென்று குறை நினைக்கதையடா. பனை மரத்தினடியில்
நின்று பால் குடிச்சாலும் கள்ளு குடிக்கிறதாத் தானிந்த உலகம் சொல்லும். உன்னை
எனக்குத் தெரியும். சீதாவை எனக்குத் தெரியும். ஆன இந்த உலகத்துக்கு இதெல்லாம்
விளங்கவாப் போகுது. நீ சீதாவுக்குத் தனியாக அபார்ட்மெண்ட் பார்த்து வைக்கிறதுதான்
உனக்கும் நல்லது. அவவுக்கும் நல்லது. அவளின்ற புருசனுக்கும் இந்தக் கதை போய் ஏதாவது
பிரச்சினை வரக் கூடாது பார்"
இவ்விதம் எழுதியிருந்தாள். எனக்குக் கவலை கவலையாகவிருந்தது. சீதாக்காவை நினைத்தால்
தான் பாவமாயிருக்கு. பாழாய்ப்போன் சீதனப் பிரச்சினையால் தள்ளிப் போய்க்கொண்டிருந்த
அவளுடைய நல்ல காலம் அவளைப் புரிந்து கொண்ட ஒரு இராமன் அவளுக்குக்
கிடைத்திருக்கிறான். சீதாப் பிராட்டியையே இந்தப் பாழாய்ப் போன ஊர் விட்டு
வைக்கவில்லையே. அக்கினி குளிக்கவல்லவா வைத்து விட்டது. பாவம் சீதாக்கா. இவளை
மட்டும் சும்மா வைத்து விடுமா?
5.
அன்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஒரு முடிவுடன் வந்து
கொண்டிருந்தேன். என்னுடன் வங்கியில் வேலை பார்க்கும் சக நண்பியான யோகமாலா அவளும்
தாயுமாகத் தான் அண்மையில் வாங்கிய 'கொண்டோ'விலையிருக்கிறாள். அவளுடன் இப்பிரச்சினை
பற்றிக் கதைத்ததில் அவள் சீதாக்காவை அவள் கணவர் வரும் மட்டும் தன்னுடன் வந்து
தங்கியிருக்க உதவுதாக உறுதியளித்தாள். அதற்குப் பதிலாக என்னால் முடிந்த அளவுக்கு
அவளுக்கு வாடகை தருவதாக நானும் உறுதியளித்தேன். இது பற்றி சீதாக்காவுடன் கதைக்க
வேண்டுமென்று முடிவு செய்தேன். எப்படித் தொடங்குவது என்பது தான் தெரியவில்லை. ஒரு
களங்கமில்லாத நட்புக்குக் கூடக் களங்கம் கற்பித்து விடுகின்றதே இந்த உலகம். ஊரில்
தான் பிரச்சினை என்று வந்தால் இங்கும் நாட்டு நிலைமகளால் ஓடி வந்த சீதாக்காவுக்கு
உதவக் கூட முடியாமலிருக்கிறதே.
அபார்ட்மெண்ட் வந்த எனக்கு முதலில் அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக வந்து கதவைத்
திறக்கும் சீதாக்காவைக் காணவில்லை. அபார்ட்மெண்ட் இருளில் மூழ்கிக் கிடந்தது.
லைற்றைப் போட்டேன். சீதாக்காவைக் ஓரிடத்திலும் காணவில்லை. அப்பொழுதுதான் மேசையில்
விரித்து வைக்கப் பட்டிருந்த கடிதத்தினை அவதானித்தேன். அவசரமாக எடுத்துப்
பிரித்தேன். சீதாக்கா தான் எழுதியிருந்தாள்.
"மாதவா! நான் இப்படி சொல்லிக் கொள்ளாமல் போவதற்காகக் கோபிக்க மாட்டாயென்று
நினைக்கிறேன். இன்று என்னுடைய கணவர் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தார்.
அப்பொழுதுதான் உன்னையும் என்னையும் சேர்த்துக் கதை கட்டியிருந்த விசயம் பற்றிக்
கூறினார். அவரது கவலையெல்லாம் உன்னைப் பற்றித் தான். அவருக்கு என்னைப் பற்றி
நல்லாத் தெரியும். இந்தக் கதைகளைப் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார். எனக்கு
இப்பிடியொரு நல்ல புருசன் கிடைத்தது கதிர்காமக் கந்தனின்ர அருளால் தான். உன்னுடைய
அக்காவும் இன்று பகல் போன் பண்ணியிருந்தா. அப்பத் தான் எனக்கு உன் கல்யாணம் நின்ற
விசயமே தெரியும். நான் இங்குள்ள சுப்பர்மார்க்கட்டிலை அடிக்கடி சந்திக்கிற
மட்டக்களப்புப் பெட்டையொன்று தனியாத் தான் அபார்ட்மெண்ட் எடுத்துத்
தங்கியிருக்கிறா. அவ ஒவ்வொரு முறை சந்திக்கிற போதும் தன்னுடன் வந்து விடும்படி
கேட்கிறவ. அவவுடன் போவதாக முடிவு செய்து விட்டேன். என்னாலை உனக்கு வீணாகப்
பிரச்சினைகளேதாவது வந்து விடக் கூடாது பார். உன்னுடன் நேரிலை இதை கூற எனக்குத்
துணிவில்லை. அதுதான் கூறாமலே போகின்றேன். நான் உனக்குப் பிறகு ஆறுதலாகப் போன்
எடுக்கிறேன்...இப்படிக்கு... சீதாக்கா" என்றிருந்தது.
தொப்பென்று சோபாவில் போய்ச் சாய்ந்தேன். ஊரில் இருந்த மட்டும் ஒரு ராஜகுமாரி போல்
வளைய வந்து கொண்டிருந்த சீதாக்காவுக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தமாக
இருக்கும். அன்னிய நாட்டிலாவாது ஒரு சந்தர்ப்பம் வந்ததேயென்று சந்தோசப் பட்டால்
அதற்கும் கொடுத்து வைக்கவில்லையேயென்று கவலையாகவிருந்தது. நாட்டு நிலைமைகளால்
உறவுகள் பிரிபட்ட நிலையில் வந்திருந்த சீதாக்காவுக்கு உதவுதற்குக் கூட இந்தப்
பாழாய்ப்போன சமுதாயம் விட்டு வைக்க மாட்டெனென்கிறதே. எத்தனை நாட்டுக்குத் தான்
புலம் பெயர்ந்து போயென்ன? புலன் பெயர்ந்தோமா?
நன்றி: திண்ணை, பதிவுகள். 'சீதாக்கா'
சிறுகதை பற்றிப் பரிமாறப்பட்ட கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.
அன்புள்ள கிரிதரன், திண்ணை மின்னிதழில் உங்களுடைய சீதாக்கா கதையைப் படித்தேன். மிக
நன்றாக இருந்தது. கடைசி வரியில் கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்கத்தக்கது.
பாராட்டுக்கள். அன்புடன் மதுரபாரதி
"சீதாக்கா": உலகின் நல்ல மனிதர்களை; நற்சிந்தனைகளை என்று தன் "சீதாக்கா" கதையில்
காட்டியிருக்கும் வ.ந.கி. இக்கதையை எழுதிய நேரத்தில் கொஞ்சம் உறங்கியிருந்தால் அவர்
உடல் நலத்திற்கு நன்மையளித்திருக்கும். அயோக்கியனாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும்
அறை நண்பனைத் தவிர மற்றெல்லாப் பாத்திரங்களும் சுத்த யோக்கியர்களாக
சிந்திக்கிறார்கள். அப்படியானால் இன்றைய சமூகத்தில் இந்த யோக்கியர்களைக் காண்பதே
அரிதாகி விட்டதா? கதை சொல்லியுடனோ அல்லது அறை நண்பனுடனோ சீதாக்கா ஏன் உறவுவைக்கக்
கூடாது? "கண்காணிப்புச் சமூகம்" என்கிற "தற்கற்பிதக் தனங்கள்" எல்லாம் மீண்டும்
மீண்டும் விலங்கிடவே பயன்படலாம். பாதை மாறிகள், அயோக்கியர்கள், எதிரோடிகளுக்கு உள்ள
தற்துணிச்சல் இல்லாததற்கு யோக்கியர்கள் கவலை கொள்ளவெண்ண்டும். வ.ந.கி. யின் எழுத்து
நடையில் மாற்றமிருக்கிறது. கதையின் ஓட்டம் தடையற்று வழுக்கிச் செல்கிறது. கருவின்
அழுத்தங்கள் கூடுகின்றபோது நல்ல கதைகளை வ. ந.கி. யால் எழுதமுடியும்! -செங்கள்ளுச்
சித்தன் (திண்ணை விருந்தினர் பக்கத்தில்)-
சித்தரின் திண்ணை படைப்புகள் பற்றிய கருத்துகளிற்காக நன்றிகள். சீதாக்கா பற்றிய
அவரது கருத்துகளில் 'சீதாக்கா ஏன் கதை சொல்லியுடன் அல்லது நண்பனுடன் உறவு வைத்துக்
கொள்ளக் கூடாது?' எனக் கேள்வியொன்றையும் எழுப்புகின்றார் சித்தர்? ஏன் சித்தர்
இவ்விதம் கேள்வி எழுப்புகின்றார்? 'சொம்பு போல் குடிவைக்குள்ளே சோறு போல்
கொதிக்கும் கள்'ளை மாந்திய மயக்கத்தில் அவர் இவ்விதம் கேள்வி கேட்கின்றாரோ
நாமறியோம்? ஆனாலும் அந்தக் கேள்வியின் அரத்தமற்ற தன்மையினை யாம் புரிவோம். ஒரு பெண்
என்றால் அவள் இன்னொரு ஆணுடன் புணர்வதைத் தான் பலர் தவறாகப் பெண் உரிமையென விளங்கிக்
கொண்டிருக்கின்றார்கள் பலர் என்பது போல் எனக்கொரு சந்தேகம். சித்தருக்கும்
அவ்விதமொரு எண்ணப் பாங்குள்ளதோ தெரியவில்லை. இந்தக் கதையில் வரும் சீதாக்கா ஒரு
இரக்கத்திற்குரிய பாத்திரம். சமூகத்தில் நிலவுகின்ற சீதனப் பிரச்சினையால்
அழகிருந்தும் குணமிருந்தும் இவளது கல்யாணம் பல வருடங்களாகத் தடைப்பட்டு
விட்டிருந்ததொரு நிலையில் புலம் பெயர்ந்தவளையும் சோதனைகள் பல வடிவங்களில்
தொடர்கின்றது? அன்புக்குரிய கணவனை இன்னுமொரு நாட்டில் இழந்த நிலையில் ஆதரவற்றதொரு
சூழலில் அன்னிய நாட்டில் புகல் தேடும் இவளது நிலையினை உணர்ந்து கொள்ளாமல் எதற்காக
இவளை இவ்விதமானதொரு கோணத்தில் சித்தர் பார்க்கின்றாரோ? பெண் என்றால் அவள் வெறும்
புணர்விற்குரியதொரு பண்டம மட்டும் தானா? இக்கதையில் வரும் சீதாக்கா உண்மையில்
கொடுத்து வைத்தவள். உண்மையில் இது போன்ற பல உண்மைச் சம்பவங்களில் பெண்கள் பலர்
சீரழிக்கப் பட்டிருப்பதையே அவர்களது குடும்பங்கள் சிதறிக்கப் பட்டிருப்பதையே
காணமுடிகின்றது. இவையெல்லாம் பெண்களை வெறுமனே பாலியல் தேவைகளைத் தீர்ப்பதற்குரிய
பண்டங்களிலொன்றாகக் கருதி அணுகியதால் வந்த வினைகளென்பது எனது கருத்து. ஆனால்
மேலுள்ள கதையில் வரும் சீதாக்கா கொடூர சிந்தையுள்ளதொரு கணவனிடமிருந்து விலகியோடி
வந்து இன்னுமொரு துணையினைத் தேடுபவளாக இருந்து அதனை மறுத்திருந்தால் சித்தர்
கூறுவதில் நியாயமிருக்கக் கூடும்? - மாயவன் -('திண்ணை' விருந்தினர் பகுதியில்)
அம்பி மாயா! சித்தன் "சீதாக்கா" குறித்து எழுதியதில் 50% சரியென்றே அடியேனுக்குப்
படுகிறது.ஆனாலும் பெண்ணுரிமைப்போர் என்பதை கட்டற்ற பாலுறவாகவும், எதுக்கெடுத்தாலும்
ஆண் சொல்வதை எதிர்க்கவேண்டும் என்றும், இன்னும் எத்தனையோ வல்லடிவழக்குகளாகவும்
ப்ரிந்துவைத்துக்கொண்டு செயற்படும் நாரீமணிகளையும், அவர்தம் பக்கவாத்தியங்களையும்
நினைக்க சிரிப்புத்தான் வருகிறது..!இதே போல இலக்கியத்தில் ஒரு கோஷ்டி இருக்கிறது.
ஒரு மாஜிக்கல் கதை, ஒரு பின்நவீனக்கதை, ஒரு ஒருபாலுறவுக்கதை, என்று செருப்புக்கேற்ப
காலைத் தறிப்பவர்கள் காட்டும் சர்க்கஸ் பெரிய தொந்தரவு. மற்றும் உன் "சீதாக்கா"
கதையை ஒரு பாட்டியோ, அல்லது வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு கதைகாவியோ
ரெலிபோனில் மற்றவருக்கு அளக்கக்கூடும்.... இதில் கதையம்சம் இருக்கிறது கலைத்துவமோ,
பாத்திரங்களின் பன்முக வெளிப்பாடுகளோ ஒன்றுமேயில்லையே. சற்றுச் சிந்தித்துப்பார்
மகனே!! -பிரியா (திண்ணை விருந்தினர் பகுதியில்)-
சீதாக்கா கதை புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்லை என்பதையே அதன் மையக் கருத்தாக
எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர். பெண்ணியமோ, பெண் பிரச்சனைகளோ பேசுவதாக இல்லை அந்த கதை.
அப்படிப் பேச முயன்றிருந்தால் சீதாக்காளின் சிந்தனையிலிருந்து கதை வந்திருக்கும்.
இது கதை சொல்லி (ஓர் ஆண்) அவர் பார்வையிலிருந்தே வந்திருக்கின்றது. சீதாக்கா
பார்வையிலிருந்து வந்திருந்தால் சீதாக்கா தன் மேல் தவறான பார்வை செலுத்தும் அறைத்
தோழனை தானே உணர்ந்து தனது நடவடிக்கையைச் செய்திருப்பாள். சீதாக்கா எல்லாவற்றுக்கும்
ஆணை எதிர்பார்த்து இருப்பவளாகச் சித்தரித்திருக்க மாட்டர். புலம் பெயர்ந்தாலும்
புலன் பெயரவில்ல என சொல்ல வந்த விசயத்தில் ஆசிரியர் வெற்றி கண்டிருக்கிறார். ஆனால்
அதில் வரும் பெண் உணர்வுகள் மறைக்கப்பட்டது வருத்தமே -திலகபாமா ( சிவகாசி)-
சீதாக்கா எல்லாவற்றுக்கும் ஆணை எதிர்பார்த்து இருப்பவளாகச் சித்தரித்திருக்க
மாட்டர்.' எனத் திலகபாமா கூறுவது தவறு.
இக்கதையில் வரும் சீதாக்கா இறுதியில் தனித்தே முடிவு எடுக்கின்றாள். அவ்விதம் அவள்
எடுக்கும் முடிவு அவளாகவே எடுக்கும் முடிவு. அதற்குக் கூட அவளுக்கு இன்னுமொரு
பென்ணே உதவுகின்றாள். எந்த வொரு ஆணையும் சார்ந்து அவளது முடிவு இருக்கவில்லையே. அதே
சமயம் திலகபாமா கதை 'புலம் பெயர்ந்தும் புலன் பெயராத' தமிழ் மக்களின் நிலையினைக்
கூறுவது எனக் கூறுவதும் சரிதான். அதே சமயம் பிரியர் படைப்பு பற்றிக் கூறுவதில்
எனக்கு உடன்பாடில்லை. எந்தவொரு படைப்பிலுமே முழுமை இல்லை. இயற்கையின் படைப்பான
எம்மிலும் தான். ஆனால் மனிதர் படைக்கும் எழுத்துப் படைப்புகளில் மட்டும் பலர்
முழுமையைத் தேட விளைகின்றார்கள். ஒரு படைப்பு பல்வேறு காரணங்களுக்காக
புரியப்படலாம். சுவைக்கப் படலாம்.சில படைப்புகளில் கதையமசம் சிறந்திருக்கலாம்.
சிலவற்றில் அழகியல் அமசம் சிறந்திருக்கலாம். சிலவற்றில் கூறப்படும் பொருள்
சிறந்திருக்கலாம். ஆனால் ஒரு படைப்பில் எல்லாமே முழுமையாக , அனைவரது பார்வையிலும்,
அமைந்து இருப்பதில்லை. ஒருவருக்கு அவ்விதம் அமைந்திருப்பதாகப் பட்டால்
இன்னொருவருக்கு அவ்விதம் அமைந்திருப்பதில்லை. சித்தரிற்கு அதன் நடை
பிடித்திருக்கின்றது. பிரியருக்கு அதில் கதையம்சம் இருப்பதாகப் படுகின்றது.
திலகபாமாவுக்கு அது கூற வந்த பொருள் பற்றியும் அதன் வெற்றி பற்றியும் ஒருவித
கருத்து இருக்கின்றது. மதுரபாரதிக்கு கதை 'நன்றாக' வந்திருப்பதாகப் படுகின்றது.
உதாரணமாகப் பிரியருக்கு ஆழ்வார் பிரசுரங்களில் அளவற்ற பிரியம் இருக்கும். ஆனால்
அனவருக்கும் அவ்வாறே இருப்பதில்லையே. இந்நிலையில் இவ்வுலகில் 'முழுமையற்ற
படைப்பினில் முழுமையைத் தேடும் மூடர் நாம்' என்று படுகின்றது. அதற்காக 'சீதாக்கா'
ஒரு சிறப்பான கதையென்று வரிந்து கட்டிக் கொண்டு வாதாட நான் இங்கு வரவில்லை. அதில்
பலமுமிருக்கலாம். பலவீனமுமிருக்கலாம். ஆனால் ஒரு சிலரையாவது அது பற்றிக் கருத்துக்
கூற அது நிர்ப்பந்தித்துள்ளது. அந்த வகையில் அதற்கும் ஒரு வெற்றியுண்டு என்றே
படுகின்றது. -மாயவன் -(திண்ணை, விருந்தினர் பகுதியில்)
Dear Giritharan, I read your "Seetha Acca" short story and am very much
impressed. You have written nicely, what is happening in our society in the
western world today. With regards, Rajah. (பதிவுகள் கடிதங்களிலிருந்து)
நன்றி: பதிவுகள் மார்ச் 2002; இதழ் 27.
2. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.
- வ.ந.கிரிதரன் -
ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன
நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில்
ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை
நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித
'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக
நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும்
'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது.
'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை'
இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம்
வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும்.
இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும்
அவன் சிந்தித்துக் கொள்வான்.
'ஓல்ட்வெஸ்டன்' றோட்டைக் கடந்து 'கீல் இண்டர்செக்ஷ'னையும் கடந்து கார் விரைந்தது.
இடப்புறத்தில் 'கனடாபக்கர்ஸி'ன் 'ஸ்லோட்டர்' ஹவுஸ்' பெரியதொரு இடத்தைப்
பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு
போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.
பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க
நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும்
கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். 'இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி
மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்'. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த 'டிரபிக்'
தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி
விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான்.
பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான்.
ஸ்டியரிங்கில் மெல்லியதொரு உதறல் நேற்றிலிருந்து. அதனைக் காட்டத்தான் பொன்னையா
விரைந்து கொண்டிருந்தான். 'நேரங் கெட்ட நேரத்திலை இதென்ன டிரபிக் புளக்..'
இவ்விதம் எண்ணியபடி டிரபிக் தடைப்பட்டதற்குக் காரணம் என்னவாகயிருக்குமென் எதிரே
நோக்கினான்.
இதற்குள் றோட்டுக் கரையில் சனங்கள் விடுப்பு விண்ணானம் பார்க்கக்
கூடத்தொடங்கிட்டுதுகள். இந்த விஷயத்தில் எல்லா மனுஷருமே ஒன்றுதான். எதிரே அவன்
பார்வையை மறைத்தபடி கனடா பக்கர்ஸிற்குச் சொந்தமான பெரிய 'ட்றக்'கொன்று நின்றதால்
இவனால் ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.
றோட்டுக் கரையில் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த சைனாக்காரனொருவனைப்
பார்த்து ''ஏ..மேன் ..வட்ஸ் த மாட்டார்? வட்ஸ் கோயிங் ஓன்..." பலமாகக் கத்தினான்.
அதற்கு அந்தச் சைனாக்காரன் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்
''பீவ்..எஸ்கேப்..ஸ்லோட்டர்.." என்றான்.
அருகிலிருந்த வெள்ளையனொருவன் சைனாக்காரனின் ஆங்கிலத்தைக் கேட்டுச் சிரித்தான்.
இவனுக்கும் சிரிப்பாகவிருந்தது. ஆனால் அந்த ஆங்கிலம் கூட விளங்கியது. மாடொன்று
ஸ்லோட்டர் ஹவுஸ்ஸிலிருந்து தப்பி வந்து விட்டது என்பதைத்தான் அந்த சைனாக்காரன்
அவ்விதம் கூறினான் என்பதும் விளங்கியது.
மரணத்திலிருந்து தப்பிவந்த அந்த இனந்தெரியாத மாட்டின் மேல் ஒருவித பரிதாபம்
தோன்றியது. அநுதாபம் படர்ந்தது. காரை வெட்டி றோட்டுக்கரையோரம் நிறுத்தி விட்டு
பொன்னையா காரை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கும் சனங்களில் ஒன்றானான். 'ஸ்ட்ரீட்
கார்' செல்லும் இருப்புப் பாதையின் மேல் , சுற்றிவர வேடிக்கை பார்த்தபடி
நிற்பவர்களைப்பார்த்து முறைத்தபடி அந்த மாடு நின்றது. அதன் கண்களில் மரண பயம்
கவ்விக் கிடந்ததை இவன் உணர்ந்தான். அதைப் பார்க்கப் பாவமாயிருந்தது.
பொன்னையாவிற்குக் கவலை தோன்றியது.
உருண்டு திரண்டு கொழுகொழுவென்று வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்தது. அருகில் சென்று
பிடிக்க முனைந்த கனடா பக்கர்ஸ் ஊழியர்களைப் பார்த்து முறைத்தது. முட்டுவது போல்
பாசங்கு செய்து முரண்டு பிடித்தது. அருகில் ஒருவரையும் வரவிடாமல் தடுத்து வைப்பதில்
ஓரளவு வெற்றி கண்டிருந்தது.
எவ்வளவு நேரத்திற்குத்தான் அதனால், அந்த ஐந்தறிவு உயிரினால், தாக்குப் பிடிக்க
முடியும்? 'மட மாடே! மனிதனுடன் போட்டி போட்டு உன்னால் வெல்ல முடியுமா என்ன?'
திடீரென பொன்னையாவிற்குச் சிந்தையில் ஒரு எண்ணம் எழுந்தது.
'இந்த மாட்டின் மனநிலை என்னவாயிருக்கும்?' அருகிலுள்ள ஸ்லோட்டர் ஹவுஸிற்குள்
வெட்டுப் படுவதற்காகக் காத்து நிற்கும் ஏனைய மாடுகளின் ஞாபகமும் எழுந்தது.
'இவ்விதம் தப்பிவர இந்த மாடு எவ்வளவு கஷ்ட்டப் பட்டிருக்கும்?'
'கிடைத்த சுதந்திரத்தின் நிரந்தரமற்ற தன்மையைப் பாவம் இந்த மாட்டால்
உணரமுடியவில்லை..அதனால்தான் தன்னுயிரைக் காத்துக்கொள்ள கிடைத்த அற்ப
சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மாடு வீராவேசத்துடன் முயல்கிறது..'
ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை...'இந்த மாட்டைப் போன்ற நிலையில்
இருப்பவர்கள் எத்தனை பேர்?..அரைகுறையாகத் தப்பி மீண்டும்
அகப்பட்டவர்கள்..தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்...'
மீண்டும் கவனம் மாட்டின் மேல் திரும்புகின்றது. இன்னமும் அது மூர்க்கத்துடன் தன்னை
நெருங்குபவர்களை எதிர்த்து நிற்கின்றது. யாரும் நெருங்காத சமயங்களில் ஒருவித சோகம்
கலந்த பாவத்துடன் அமைதியாக ஒருவித பயத்துடன் நிற்கிறது.
அதன் கண்களிருந்து மெல்ல மெல்ல இலேசாகக் கண்ணீர் வடிகிறது..எதை நினைத்து அழுகிறது?
தன் பரிதாபகரமான நிலையை நினைத்தா?தன்னை சமாதியாக்குவதற்குக் கங்கணம் கட்டி நிற்கும்
மனிதர்களால் தனக்கேற்பட்ட நிராதரவான நிலையை உணர்ந்தா? ஏன் அது அழுகிறது?
திடீரெனப் பொன்னையாவிற்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 'ஏன் இந்த மாட்டிற்குரிய
விலையைக் குடுத்து, இதன் உயிரைக் காப்பாற்றினாலென்ன? ஊரிலையென்றாலும் வீட்டு வளவிலை
போய்க் கட்டி வைக்கலாம்...இங்கு எங்கு போய்க் கட்டி வைப்பது..?
அப்பார்ட்மென்றிலையா..?அப்படித்தான் காப்பாற்றினாலும் இந்த ஒரு மாட்டைக்
காப்பாற்றுவதால் மட்டும் இதன் நிலையில் இருக்கின்ற ஏனைய மாடுகளின் பிரச்சினை
தீர்ந்து விடுமா..?'
இதற்கிடையில் யாரோ மாடு டிரபிக்கிற்குத் தடையாயிருப்பதை பொலிஸிற்கு அறிவித்து
விட்டார்கள் போலும்.. 'எமர்ஜன்ஸி பிளாஸிங் லைட்'டுடன் 'சைரன்' முழங்க பொலிஸ்
காரொன்று விரைந்து வந்து இறங்கியது. இரு பொலிசார் இறங்கினார்கள். கயிரொன்றில்
வளையம் செய்து சிறிது நேரம் முயற்சி செய்தார்கள். பலனில்லை. மாடு மிகவும்
உறுதியாகவே எதிர்த்து நின்றது. இதற்கிடையில் விஷயத்தை மோப்பம் பிடித்துப்
பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சிக்காரர்களென்று கமராக்களுடன் கூடி விட்டனர்.
மாடு தன்னுயிரைக் காப்பதற்கானதொரு போராட்டத்தில், ஜீவமரணப்
போராட்டத்திலீடுபட்டிருக்கின்றது. இதை அடக்க, வேடிக்கை பார்க்க, படம் பிடிக்க ஒரு
கூட்டம். ஒன்றிற்கும் செயல் பட முடியாத , இயலாத கூட்டம். தானும் அக்கூட்டத்தில்
ஒருவன் என்பதை நினைக்கையில் பொன்னையாவிற்குத் தன்மேல் ஒருவித வெறுப்புக்கூடத்
தோன்றியது.
தங்கள் முயற்சி சிறிது தோல்வியுற்றதைக்கண்ட பொலிஸார் தங்களிற்கு கூடிக்
கதைத்தார்கள். இதற்குள் வீதியில் இரு திசைகளிலும் வாகனங்கள் பெருமளவில் முடங்கத்
தொடங்கிவிட்டன.
தொலைவிலிருந்தவர்கள் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணத்தை அறியாத நிலையில்
ஹோர்னகளை மாறிமாறி அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நிலைமை கட்டுமீறுவதைப் பொலிஸார்
உணர்ந்தார்கள்.
இறுதியில் மாட்டுப் பிரச்சினை ஒரு முடிவிற்கு வந்தது.
ஆறறிவுப் பிராணியின் முன்னால் சுதந்திர வேட்கை நசுக்கப் பட்ட நிலையில்
'ட்ரான்குலைசரா'ல் மயக்கப்பட்டு சாய்ந்த மாட்டைத் தூக்கிய கனடாப் பக்கர்ஸ்
ஊழியர்கள் அதனை 'ஸ்லோட்டர் ஹவுஸி'ற்குள் கொண்டு சென்றார்கள்.
ஒருவழியாகப் போக்குவரத்துச் சீர்பட்டது. சனங்கள் ஒவ்வொருவராகக் கலையத்
தொடங்கினார்கள்.
பஞ்சாப்காரன் திட்டப் போகின்றானென்ற நினைப்புடன் தன்காரில் பாய்ந்தேறினான்
பொன்னையா. கூடவே அடிக்கடி மிருகங்களை வதைப்பதாகக்கூறி வழக்குப் போடும் 'ஹியுமேன்
சொசைடி'யின் ஞாபகமும் வந்தது. சிரிப்பு வந்தது.
சிறிது போராடித் தோல்வியுற்ற மாட்டின் நிலைமை அநுதாபத்தை தந்தாலும் அதன் சுதந்திர
வேட்கையும் அதற்காக அது போராடிய தீவிரமும் அதன் மேல் ஒருவித பக்தியை, பெருமிதத்தை
ஏற்படுத்தியது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அன்றிலிருந்து பொன்னையா மீண்டும்
முழுச் சைவமாகிவிட்டான்.
[இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம்
பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு
வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]
நன்றி: பதிவுகள் யூலை 2000; இதழ் 7. , திண்ணை
3. நீ எங்கிருந்து வருகிறாய்?'
- வ.ந.கிரிதரன் -
கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான
தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம்
என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும்
ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று
ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது
அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும்
அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின்
தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட
அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய
சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக
போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின
நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையும்தவிர வேறு யாருமே
அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த
வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்கிமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்:
"இன்று வழமைக்கு மாறாகக் குளிர் மிக அதிகம்!"
இங்கு ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது அதிகமாகக் காலநிலையினைப் பற்றி அல்லது
'ஹாக்கி' அல்லது 'பேஸ் பால்' விளையாட்டு பற்றியுமே அதிகமாக உரையாடிக் கொள்வார்கள்.
வருடம் முழுவதும் மாறி மாறிக் காலநிலையினைக் குறை கூறல் பொதுவானதொரு விடயம்.
"உண்மைதான். ஆனாலும் எனக்கு இந்தக் குளிரைத் தாங்க முடியும். ஆனால்.. இந்த உறைபனி
(Snow) இருக்கிறதே... அதனை மட்டும் தாங்கவே முடியாது.." என்று இவன் பதிலுக்கு
உரையாடலினைத் தொடர்ந்தான். அதற்கு அந்த வெள்ளையினத்தவன் சிரித்தவனாகத் தொடர்ந்தான்:
"நீ வெப்பமான நாட்டினில் பிறந்தவன் அதுதான். ஆனால் எனக்கு இந்த
உறைபனியில்லாவிட்டால் இருக்கவே முடியாது. இதற்குள்ளேயே பிறந்து, வளர்ந்து, விளையாடி
வளர்ந்தவர்கள் நாம்... அது சரி..."
இவ்விதம் அவன் கூறிச் சிறிது நிறுத்திய பொழுது உடனடியாகவே இவனுக்கு அவன் அடுத்து
என்ன கேள்வி கேட்கப் போகின்றானென்பது தெரிந்து விட்டது. இருபது வருடங்களாக இந்த
மண்ணில் இருக்கிறானல்லவா. இது கூடத் தெரியாமல் போய் விடுமாவென்ன?
"ஏ! நண்பனே! நீ அடுத்து என்ன கூறப் போகின்றாயென்பது எனக்குத் தெரிந்து விட்டது..."
என்று இவன் கூறவும் அவனது முகத்தில் சிறிது வியப்பு படர்ந்தது.
"நீ என்ன சோதிடனா எதிர்காலத்தை எதிர்வு கூறுவதற்கு?"
"நான் சோதிடனல்லன். ஆனால் இந்த மண்ணுடனான எனது பிணைப்பும் சொந்தமும் எனக்கு இந்த
விடயத்திலெதிர்வு கூறும் வல்லமையினைத் தந்து விட்டன. அது சரி.. 'நீ எங்கிருந்து
வந்தாய்" (Where are you from?') என்பது தானே நீ கேட்க எண்ணிய வினா?"
அதற்கு அவன் சிரித்தபடியே பதிலிறுத்தான்: "நீ நன்றாகவே கனடாவினைப் பற்றிக்
கற்றறிந்து விட்டாய்."
"உண்மைதான். ஏனெனில் நான் இந்த நாட்டுக் குடிமகனல்லவா!" என்றான். இந்தக்
கேள்வியினை, 'நீ எங்கிருந்து வருகிறாய்?' என்னும் வினாவினை, அவன் இந்த மண்ணில்
காலடியெடுத்து வைத்த நாட்களிலிருந்து எதிர்கொண்டு வருகின்றான். இளையவர்,
முதியவரென்ற பாகுபாடின்றி அவன் அனைவரிடமிருந்தும் அவ்வப்போது எதிர்கொண்டு
வருகின்றான். அவன் வந்த பின் இந்த மண்ணில் அவதரித்தவர்களும் வளர்ந்து பெரிதாகி
அவனிடம் இந்த வினாவினத் தொடுக்கத் தொடங்கி விட்டார்கள். அண்மையில் அவனிடம் மட்டுமே
கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இந்த மண்ணில் பிறந்த அவனது
வளர்ந்து விட்ட அவனது குழந்தையிடமும் கேட்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். வந்த
புதிதில் அவன் இந்தக் கேள்வியினை ஒருவித ஆர்வத்துடன் எதிர்நோக்கினான். தன்னைப்
பற்றி அறிய இவர்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வமென்று மகிழ்வுற்றான். எனவே
அப்பொழுதெல்லாம் அவனது இதற்கான பதிலும் விரிவானதாகவே இருக்கும். தன் நாட்டைப்
பற்றி, மக்களைப் பற்றியெல்லாம் விரிவாகவே அலுக்காமல், சலிக்காமல் அவன்
பதிலுறுப்பான். இப்பொழுதெல்லாம் அவனுக்கு அந்த ஆர்வமில்லை. ஆரம்பத்தில் ஆர்வமாககப்
பதிலிறுத்தவன் அதன் பின் பதிலிறுப்பதலில் ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான்.
வினாத்தொடுப்போருக்குப் பூகோள சாத்திரம் கற்பிக்கத் தொடங்கினான். இந்தக் கேள்வி
எதிர்பட்டதுமே அவன் பின்வருமாறு தனது பதிலைக் கேள்வியொன்றுடன் ஆரம்பிப்பான்.
"இதற்கான பதிலை நீ அறிய வேண்டுமானால்.. அதற்கான எனது பதில். ஊகி என்பதுதான்.."
"ஓகே.. ஊகிப்பதா.. சரி..எங்கே முகத்தைக் காட்டு பார்ப்போம்.... " என்பார்கள்.
இவனும் முகத்தைக் காட்டுவான். உரையாடல் தொடரும்.
"பார்த்தால்... கயானா.. அல்லது கிழக்கிந்தியனைப் போல் தெரிகிறாய்... ஓகே. நீ
இந்தியனா.." என்பார்கள்.
இவன் அதற்குக் கீழுள்ளவாறு பதிலிறுப்பான்:
"நீ நன்கு நெருங்கி விட்டாய்... ஆனால் நான் இந்தியனில்லை... ஆனால் எனது மண்
இந்தியாவுக்கு மிக அண்மையிலுள்ளது..."
"ஓகே.... பாகிஸ்த்தானா.. "
"அதுவுமில்லை.... " என்பான்.
"பங்களாதேஷ்.." என்பார்கள். அவ்வளவுதான் அதற்குமேல் பெரும்பாலோருக்கு வேறு
நாடுகளின் பெயர்களே தெரிவதில்லை. இவனும் விட மாட்டான்.
" சரி.. உனக்கு நான் சிறிது உதவி செய்கிறேன்.. தயாரா" என்பான்.
அவர்களும் அடுத்த கட்டத்திற்குத் தயாராவார்கள்.
"அது ஒரு அழகான தீவு.. ஆங்கிலேயர்களின் முக்கியமான காலனிகளிலொன்று."
" நீ என்னை நல்லாவே சோதிக்கிறாய்... இனி நான் பூகோள சாத்திரம் இதற்காகவே படிக்க
வேண்டும்..." என்று கூறியபடியே மண்டையினைப் போட்டு உடைத்துக் கொள்வார்கள்.
இறுதியில் இவனும் மனமிரங்கிப் பதிலிறுத்து விடுவான். பின்னர் அதிலும் இவனொரு
சிறியதொரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான். இறுதியாகப் பதிலிறுப்பதைத் தவிர்த்துப்
பின்வருமாறு கூறுவான்: 'உனக்கு உண்மையிலேயே இதற்கான பதில் தேவையென்றால்.. வீடு
சென்றதும் உலக வரைபடத்தை எடுத்துப் பார் புரிந்து கொள்வாய்... இந்தியாவின் தெற்குப்
புறமாக உள்ள தீவு என்னவென்று அறிய முயற்சி செய். பதிலை நீயே கண்டு கொள்வாய்....'
"......."
"என்ன சிந்தனையிலாழ்ந்து விட்டாய்? என் கேள்விக்கென்ன பதில்?" என்றான் அவன்.
"நண்பனே! இதற்கான பதிலுனக்குத் தேவையென்றால்... என் கேள்விக்கு நீ பதில்
தரவேண்டும்."
"உன் கேள்வியா? நீ தான் கேள்வியே கேட்கவில்லையே... கேட்காத கேள்விக்கு எவ்விதம்
பதில் தரமுடியும்? "
"அவசரப்படாதே... இனிமேல் தான் கேட்கப் போகின்றேன்... நீ தயாரா?'
"நான் தயார். நீ தயாரென்றால் சரிதான்..."
"நீ எங்கிருந்து வருகின்றாய் நண்பனே! "
" நானா.... தொடராண்டோவின் கிழக்குப் பகுதியிலிருந்து வருகின்றேன்.."
"நான் அதைக் கேட்கவில்லை.."
"பின் எதைக் கேட்கிறாய்.."
"உன் மூலமென்ன.. நீ எங்கிருந்து வந்தாய்... இந்த மண்ணுக்கு..."
" நீயென்ன விளையாடுகின்றாயா... இது நான் பிறந்த மண்... "
"நான் அதைக் கேட்கவில்லை.... உன்னுடையா மூலமென்ன.. ஆதியில் உன் குடும்பத்தவர்
எங்கிருந்து வந்தார்கள்... அது உனக்குத் தெரியும் தானே..."
"ஓ.. அதுவா... அவர்கள் ஒண்டாரியோ மாநிலத்தில் வடக்கிலுள்ள தண்டர்பேயிலிருந்து
வந்தவர்கள்....."
"அதையும் நான் கேட்கவில்லை... அது சரியான பதிலுமல்ல.... " என்றான். கேள்வி கேட்டவன்
முகத்தில் சிறிது பொறுமையின்மை, ஆத்திரம் பரவியதை இவன் அவதானித்தான். அது அவன்
குரலிலும் தொனித்தது.
" நீ என்னுடன் விளையாடுகிறாய். நான் யார் தெரியுமா? இந்த மண்ணின் குடிமகன். என்னைப்
பார்த்து நீ கேலி செய்கிறாய்.."
" நண்பனே... பொறு.. அவசரப்படாதே... நீ இன்னுமென் கேள்விக்குப் பதில் கூறவில்லை.
நான் கேட்டதென்னவென்றால்.... உன் தாத்தா, பாட்டி அவர்கள் எங்கிருந்து
வந்தார்கள்..."
அவன் கூறினான்: " இந்தக் கேள்வி மூலம் நீ என்னை அவமதிக்கின்றாய்.. கனடியக்
குடிமகனொருவனை நீ அவமதிக்கின்றாய்.... அது உனக்குத் தெரிகிறதா?"
"எனக்கு நன்றாகவே தெரிகிறது. உனக்குத் தெரிந்தால் சரிதான்" இவ்விதம் கூறிவிட்டு
அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த போக்குவரத்து வண்டியில் ஏறுவதற்குத் தயாரானான்
இவன்.
நன்றி:இசங்கமம் http://www.e-sangamam.com/who.asp
பதிவுகள் டிசம்பர் 2004; இதழ் 60, திண்ணை
4. தேவதரிசனம்!
வ.ந.கிரிதரன்
கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின்
கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா உண்மையில்
நகரின் இன்னுமொரு தெருவிளக்காகத் தொலைவில் தெரிந்தது. அருகில் கட்டிலில் குழந்தையை
அணைத்தபடி தூங்கிக் கிடந்த மனைவியின்மேல் ஒருகணம் பார்வை பதிந்து மீண்டது. மீண்டும்
ஜன்னலினூடு விரிந்து கிடக்கும் இரவு வான் மீது கவனம் குவிந்தது. வழக்கம் போல்
தத்துவ விசாரம். அர்த்தமேதுமுண்டா? வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்த
சித்தார்த்தன் துறந்து சென்றான். துறத்தல்தான் கேள்விக்குரிய பதிலா? அப்பொழுதுதான்
அந்த அதிசயம் என் கண் முன்னால் நிகழ்ந்தது. எனக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில்
என்னருகில் இன்னுமொரு மனித உருவமிருப்பதை அப்பொழுதுதான் அவதானித்தேன். வியப்புடன்
ஒருவித திகிலும் கலந்ததொரு உணர்வு மேலிட வினவினேன்:
"யார் நீ? எப்பொழுது இங்கு வந்தாய்?"
"நான்?" இவ்விதம் கேட்டுவிட்டு ஒரு கணம் அந்த அந்நியன் சிரித்தான். தொடர்ந்தான்:
"விபரிப்பதற்கு அதுவொன்றும் அவ்வளவு சுலபமல்ல நண்பனே! உனக்குப் பொறுமையிருந்தால்
சிறிது விளக்குவேன்."
நான் அந்தப் புதியவனை மெளனமாக எதிர்நோக்கி நின்றேன். அவன் தொடர்ந்தான்.
"என் கால்களைப் பார்க்கிறாயா?" இவ்விதம் கூறியவன் தனது ஆடைகளைச் சிறிது
உயர்த்தினான். எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. அங்கு பாதங்கள் நிலத்தைத் தொடாமல்
அந்தரத்தில் மிதந்ததை அவதானித்ததின் வியப்பின் விளைவே எனது ஆச்சரியத்துக்குக்
காரணம்.
வந்தவன் தொடர்ந்தான்" "இப்பொழுது என் கண்களைச் சிறிது நேரம் பார்." பார்த்தேன்.
ஏற்பட்ட வியப்பு தொடர்ந்தது. அங்கு அசைவற்ற கண்களைக் கண்டேன்.
வந்தவன் மேலும் தொடர்ந்தான்: "இப்பொழுது உண்மை புரிந்ததா?"
நான் சிறிது தடுமாறினேன்: "அப்படியென்றால் நீ.. நீங்கள் தேவர்களில் ஒருவரா?"
அவன்: "பரவாயில்லை! நீ தேவனென்றே கூறலாம். அப்படித்தான் உன்னவர்கள் என்னைக்
கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள என்னை அறிந்தது பூரணமற்றது. கட்டுக் கதைகளால் இட்டு
நிரப்பி விட்டார்கள். அறியாததனாலேற்பட்ட விளைவு. உனக்கு உண்மை பகர்வேன். நீ
அதிசயித்துப் போவாய். புரிந்து கொள்வாய். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். மேலும்
நீ காணும் இந்த உருவம் கூட எனது உண்மையான உருவமல்ல. நான் உன்னுலகுனுள் அடியெடுத்து
வைக்கும் சமயங்களிலெல்லாம் இது போன்றுதான் வருவது வழக்கம். சில சமயங்களில் நான்
ஆணாகவும் வருவேன். வேறு சில சமயங்களில் நான் பெண்ணாகவும் வருவேன். இன்னுமோர் சமயம்
நான் ஆணும் பெண்ணும் கலந்த உருவுமெடுப்பேன்."
அவனே தொடர்ந்தான்: "உண்மையில் உன்னால் ஒருபோதுமே ஒரு நிலைக்குமேல் என்னை அறியவே
முடியாது. இருக்கும் உன் அறிவின் துணையுடன் ஓரளவு புரிய மட்டும் தான் முடியும்."
"எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.." எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது.
"உனக்கு உண்மையில் புரிந்தால் மேலும் குழம்பி விடுவாய்."
"குழப்பமா?"
"ஆம்! கூறுகிறேன் கவனமாகக் கேள்."
சிறிது நேரம் இருவருக்குமிடையில் மெளனம் நிலவியது.
அவனே தொடர்ந்தான்: " நண்பனே! நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே. இந்த வெளி. கழித்துக்
கொண்டிருக்கின்றாயே இந்த நேரம். உண்மையில் இந்தப் பரிமாணங்களுக்குள் சிக்கிக்
கிடக்கும் உன்னால் எவ்விதம் உண்மையினை அறிதல் சாத்தியம். உண்மையில்
இன்னுமொன்றினையும் அறிந்தால் .."
"அறிந்தால்..."
"உண்மையில் இந்தப் பிரபஞ்சம். நீ காணும் இந்தப் பிரபஞ்சம். நான் என் ஓய்வு
நேரத்தில் உருவாக்கியதொரு விளையாட்டு. உன்னைப் போல் தான் நானும் என் இருப்பினைப்
பற்றிய விசாரங்களுக்குள் சிக்கிக் கிடந்த வேளை விடை புரியாமல் தவித்த போது ஏற்பட்ட
வெறுப்பின் விளைவாக என் முழு அதிகாரத்தின் கீழுள்ளதொரு உலகினைப் படைக்க
விரும்பினேன். அதன்பொருட்டு நான் உருவாக்கிய விளையாட்டே நீ காணும் இந்தப் பூவுலகு;
அண்டசாரசரங்கள்..எல்லாம். புரிந்ததா?"
"புரியவில்லையே நண்பனே?"
"நீ பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றாய். அவற்றைக் கடந்தவன் நான். உனது
பரிமாணங்களுக்குள் நீ கணினி விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவதைப் போல் நான் என்
பரிமாணங்களுக்குள்ளிருந்து உருவாக்கிய விளையாட்டுத்தான் நீ வாழும், நீ காணும், நீ
உணருமிந்த உலகு. உன்னவரைப் பொறுத்த அளவில் நான் தேவன். கடவுள். எது எப்படியோ... உன்
பரிமாணங்களை மீறியவன் நான். ஆயின் எனக்கும் சில எல்லைகள் உண்டு. உன்னைப் போல் தான்
என் பரிமாணங்களுக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்த வரையில் எனக்கும்
ஒன்றுமே தெரியாது. அதற்காகவே என் இருப்பும் கழிந்து கொண்டிருக்கிறது. உன்னைப் போன்ற
முப்பரிமாணப் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்குள்ளும் என்னால் உடனடியாக உன்னையொத்த
வடிவினை எடுத்து மிக இலகுவாக உட்சென்று பங்கு பற்ற முடியும். உண்மையில் உன்னுடன்
இங்கு உரையாடிக் கொண்டிருப்பபதைப் போன்றதொரு தோற்றம |