இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2008 இதழ் 106  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

நினைவுகளின் தடத்தில் - (19 & 120)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன் -நாங்கள் மதுரை போனதும் வாடகைக்குக் குடிபுகுந்த காமாட்சி புர அக்ரஹாரம் என்ற தெரு இன்னொரு விஷயத்திற்கும் என்
நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் அந்த காரணம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது எனக்குத் தெரியாது. அனேகமாக உண்மை இல்லை என்றே நினைக்கிறேன். காமாட்சிபுர அக்ரஹாரத்தினுள் நுழைந்தவுடனேயே அதன் இடது புறத்தில் காணும் முதல் வீடு முழுத்திண்ணையையும் அடைத்து கம்பி போட்டிருக்கும். கதவைத் திறந்து படியேறினால் திண்ணை. திண்ணையில் அகல் விளக்குப் பிறைக்கு மேல் ஏ. வைத்தியநாதய்யர் என்று கறுப்பு பலகையில் வெள்ளை எழுத்துக்களில் எழுதியிருக்கும். அப்போது அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. பின்னர் தான் மதுரை ஏ.வைத்தியநாதைய்யர் பற்றித் தெரிந்து கொண்டேன். அவர் பற்றியோ, அவர் காலத்தில் அவர் ஆற்றிய புரட்சிகர செயல்கள் பற்றியோ இப்போதெல்லாம் யாரும் பேசுவதில்லை. ஏ.வைத்தியநாதய்யர் என்ற பெயர் முடிவு பெறும் விதம் காரணமாக அது பற்றி பேசுவது இக்காலத்தில் விரும்பப் படுவதில்லை. ஒதுக்க வேண்டும் என்று யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் சொல்லப்படாமலேயே, தாக்கீது ஏதும் பிறப்பிக்காமலேயே புரிந்து கொண்டு செயல்படுத்தப்படும் ஒதுக்கல் இது. இன்னும் எத்தனையோ இம்மாதிரி ஒதுக்கல்கள், நடந்த சரித்திரத்தை இல்லையென பாவனையில் நடந்து கொள்ளுதல், அது பற்றிப் பேசுவதே, நடந்ததைச் சொல்வதே, அங்கீகரிக்க மறுப்பதைச் சுட்டுவதே, ஜாதி வெறியாக குற்றம் சாட்டப்படும். இதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு முக்கால் நூற்றாண்டு கால அரசியல். ஆனாலும் சில வருடங்களுக்கு முன் சோ.தருமன் தன் எழுத்துக்களின் உந்துதல் பற்றி சாஹித்திய அகாடமியில் பேசும்போது, ஏ.வைத்தியநாதய்யர் அந்நாட்களிலேயே தலித்துக்களுக்காகப் போராடியதை யார் மறக்கமுடியும்? என்று ஒரு முக்கிய கேள்வியை முன் வைக்கிறார். மறக்க என்ன, மறுக்கவும் முடியும் தமிழ் நாட்டு அரசியல் அதற்கு இடம் கொடுத்துள்ளது. வெகு அபூர்வமாக, அவரிடமிருந்து ஏ.வைத்தியநாதய்யர் பற்றியும் அவரது அரசியல் சமூக பங்களிப்பு பற்றி ஒரு இளைய தலைமுறை பேசியது எனக்கு மிக மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

இதெல்லாம் போகட்டும். ஆனால் அது மதுரை தான் என்றாலும், நான் பேசிக்கொண்டிருப்பது 1946-ம் வருட சம்பவங்கள் பற்றி என்ற போதிலும், அந்த வீட்டின் பெயர் பலகை என் நினைவுகளை பழம் சரித்திர நடப்புகளுக்கு என்னை இழுத்துச் சென்று, இன்றைய அவலங்களைப் பற்றி எண்ணவைக்கும் அந்த பெரிய மனிதரைக் குறிப்பது தானா என்பது தெரியாது. ஆனாலும் அந்த பெயர்ப்பலகை தாங்கிய வீடு இருந்த தெருவில் நான் வசித்தது சில மாதங்களேயானாலும், இன்னமும் அது என் நினைவில் இருக்கச் செய்துள்ளது, நியாயத்தோடோ, நியாயமற்றோ, அந்தப் பெயரின் மகத்துவம் காரணமாகத்தான். இன்றும், 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நீண்ட காலம் இடை நின்றபோதிலும், மதுரை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு மயிர்ச் சிலிர்ப்புடன் தான் அந்த நினைவுகள் வருகின்றன என்றால் அதற்கு சரியாகவோ தவறாகவோ உறவு கொண்டுவிடும் சில பெரிய மனிதர்கள் தான். பெரியவர்கள் என்றால் அவர்கள் மரியாதைக்குரியவர்கள். தம் தடங்களை தமிழ் வாழ்க்கையில் பதித்தவர்கள். இன்று சில தடங்கள் அழிகின்றன. சில அழிக்கப்படுகின்றன. நான் மதுரையில் இருந்த அந்த கிட்டத் தட்ட ஒரு வருட காலத்தில் பல நிகழ்வுகள் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. அருணா ஆஸ·ப் அலியின் பேச்சைக் கேட்க தமுக்கம் மைதானத்திற்குப் போனதும், அந்தக் கூட்டம் புரிந்து கொள்ளாத ஹிந்தியிலேயே பேசி அருணா ஆஸ·ப் அலி அக்கூட்டத்தை மழையில் கலையாது கட்டுப்படுத்தியது பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். பி.ராம மூர்த்தியும், கே.டி.கே தங்கமணியும், மோகன் குமார மங்களமும் பேசக் கேட்பது அன்று எனக்கு ஒரு புது அனுபவம் மாத்திரமல்ல ஒரு அசாதாரண
அனுபவமும் கூட.

இன்னோரு அசாதாரண சம்பவமும் நேர்ந்தது. ஒரு நாள் பாட்டி கேட்டாள், "சாமா எங்கேடா, இன்னமும் வரக்காணமே?" எனக்குத் தெரியாது என்றேன். "ஏண்டா கூட சேர்ந்து வரலையா?" என்று அதட்டினாள் பாட்டி. "என்னம்மா, தினமுமா சேர்ந்து வரோம்? வருவாளா இருக்கும்." என்றேன். ஆனால் சின்ன மாமா வரவில்லை. அன்று இரவு வரை வரவில்லை. பாட்டி தவித்துப் போய்விட்டாள். என்னை ஸ்கூலுக்குப் போய் தேடச் சொன்னாள். மாமாவின் மாமனார் இருக்கும் லக்ஷ்மி நாராயணபுர அக்கிரகார வீட்டுக்குப் போய் சொல்லச் சொன்னாள். அங்கிருந்த ராஜா, அம்பி என்று அழைக்கப்படும் ரங்கநாதன், மாமியின் அண்ணா தம்பிகள் அவர்கள், எல்லோரும் எங்கெங்கோ வெல்லாம் தேடினார்கள். ஒன்றும் பயனில்லை. சின்ன மாமா ஒட்டுதலாக இருந்தவர், அவரை விட கொஞ்சம் வயதில் பெரியவரான ராஜா தான். எப்போதாவது எங்காவது வெளியே சுற்றுவதென்றால் அவர்கள் இருவரும் தான் சேர்ந்துகொள்வார்கள். நான் பொடியன். என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நாட்கள் ஓடின. சின்ன மாமா வரவில்லை. நிலக்கோட்டையில் இருந்த மாமாவுக்கு எப்படி செய்தி போயிற்று என்பது எனக்கு இப்போது நினைவில் இல்லை. என் கண்முன் இப்போது ஒடும் சித்திரம், "பகவானே ஏன் இப்படி என்னைப் போட்டு வதைக்கறே? நான் என்ன பாவம் பண்ணினேன்?" என்று மாமா அவ்வப்போது வாய் குழறிய காட்சி தான். அவருக்கு வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. வத்தலக்குண்டில் படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணினே. என்னாலே முடியாட்டாலும், சரி,. கடனோ ஒடனோ வாங்கி, உன் இஷ்டத்துக்கு மதுரையிலேயே படின்னு இங்கே குடி வச்சா இப்படி பண்ணீட்டயேடா?" என்று மனம் குமுறியது அவருக்கு.

இடையில் பக்கத்தில் இருந்தவர்கள் யார் யாரோ ஜோஸ்யர் பெயரையெல்லாம் சொல்லி, சின்ன மாமா ஜாதகத்தைக் கொடுத்து பார்க்கச் சொல்லலாம் என்றார்கள். யார் கண்டார்கள்? என்ன தோஷமோ, என்ன தசையோ, நல்ல ஜோஸ்யர், சொன்னது பலிக்கும். அதையும் பார்த்துட்டா தேவலை" என்றார்கள். பாட்டிக்கு எப்படியாவது எங்கே இருக்கான்னு தெரிந்தா போறும். நல்லபடியா திரும்பி வந்துட்டா போறும் என்று இருந்தது. ஏதோ எங்கோ எப்படியோ ஒரு நம்பிக்கை துளிர்த்தால் போதும். தெரிந்த இடங்களில் உறவினருக்கெல்லாம், சுவாமி மலை, உமையாள்புரம், பாபுராஜபுரம் என்று எங்கெங்கோவெல்லாம் கடிதம் எழுதினார் மாமா. ஒரு நாள் யாரோ எங்கோ பார்த்ததாகச் சொல்லவே, திருச்சியோ திண்டுக்கல்லோ, எனக்கு சரியாக நினைவில் இல்லை, உடனே அந்த இடத்துக்கு ஓடினார். சரி அப்படி பார்த்தே இருந்தாலும், எங்கேயென்று தேடுவது? அலைந்து கொண்டே இருக்க முடியுமா என்ன. என்னவோ ஒரு ஆதங்கம். எப்படியாவது கிடைத்துவிடமாட்டானா என்று. பயந்த சுபாவமும், சுவாமி பக்தருமா? கேட்கவேண்டியதில்லை. நினைத்த கோவிலுக்கெல்லாம் போவார். அர்ச்சனை செய்வார். கண்மூடி உருகுவார்.

கடைசியில் அவரது பிரார்த்தனைகளுக்கும், பாட்டியின் வேதனையைக் காணத் தாளாது தானோ என்னவோ, சின்ன மாமா திருவாரூர் தியாக ராஜ உத்சவத்திற்குப் போயிருப்பதாகவும் உத்சவம் முடிந்த பிறகு வந்துவிடுவதாகவும் ஒரு செய்தி கிடைத்தத்து. . எப்படி செய்தி வந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இனி சின்ன மாமா மதுரையில் படிப்பைத் தொடர்வது என்பது சாத்தியமில்லை என்பது நிச்சயமாயிற்று. மதுரையில் தொடர்வது அனாவசிய செலவு, அதற்கு அவசியமும் இல்லை என, மாமா பாட்டியை அழைத்துக்கொண்டு நிலக்கோட்டை போனார். அந்த வருடத்தில் மிகுந்த கொஞ்சம் மாதங்களுக்கு நான் பரிட்சை முடியும் வரை ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு மாமாவின் மாமனார் வீட்டில் தங்குவது என்றும், ஏற்பாடு செய்யப்பட்டது. ஹோட்டல் என்றால் உண்மையில் அது ஹோட்டலே அல்ல. வடக்கு வெளி வீதியில், சிம்மக்கல்லிலிருந்து கொஞ்ச தூரம் சேதுபது ஹைஸ்கூல் நோக்கி நடந்தாலே ஒரு பெரிய வீடு. அங்கு வெளியூரிலிருந்து வந்து மதுரையில் தனியாக தங்கி இருக்கும் அலுவலகர்களுக்கு மாத்திரம் இரண்டு வேளை சாப்பாடு. காலையிலும் இரவிலும். மாதக் கணக்கு வைத்துக்கொள்பவர்களுக்கு மாத்திரம். ஒரு வசதிக்காகத் தான் அதை ஹோட்டல் என்று சொன்னேன். இப்போது மெஸ் என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் அந்த பெயர் புழக்கத்தில் இருக்கவில்லை. அந்த மெஸ் முதலாளி, என்னைப் பார்த்து, ' சின்ன பையன். படிக்கிற பையன். காலம்பற சாப்புட்டுட்டு ஸ்கூலுக்குப் போனா மத்தியானம் பசிக்காதோ?. அப்பறம் என்னத்தைப் படிக்கிறது?. மத்தியானம் கொஞ்சம் மோர் சாதமா வந்து சாப்புட்டுக்கட்டும். மத்தியான வெயிலுக்கு குளிர்ச்சியா இருக்கும். அதுக்கு நீங்க ஒண்ணும் தனியா காசு கொடுக்க வேண்டாம்" என்று சொன்னார். மாமா அவரது கஷ்டகாலத்தில் இந்த மாதிரி இதமான வார்த்தைகளை எதிர்பாராத இடத்தில் கேட்டதும் ரொம்பவும் மனம் நெகிழ்ந்துவிட்டார்.

சின்ன மாமாவுக்கு சங்கீதத்தில் அவ்வளவு ஈடுபாடு வந்தது எப்படி என்பது இப்போது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அப்போது யாரும் அதுபற்றி கேட்டுக்கொண்டதில்லை. ஏனெனில், மாமியைத் தவிர எங்கள் குடும்பத்தில் யாருக்கும் சங்கீதத்தில் ஈடுபாடு இருந்ததில்லை. தஞ்சாவுர்க் காரர்களேயானாலும். நான் அதற்குப் பிறகு கும்பகோணத்தில் படிக்க உடையாளூர் போய்விட்டேன். படிப்பு முடிந்ததும், வேலை தேடி வடக்கே வந்துவிட்டேன். இடையில் விடுமுறை நாட்களில் ஊருக்குத் திரும்பிய போது சின்ன மாமாவைப் பார்க்க நேரிட்ட போது அவர் பேச்சில் அவ்வப்போது சங்கீதம் பற்றி பிரஸ்தாபங்கள் வரும். மனித மனம் எவ்வளவு விசித்திரமான குணங்கள் கொண்டது, அப்படியொன்றும் சட்டென புரிந்துகொள்ள முடியாதவாறு எவ்வளவு ஆழமானது, சில சமயங்களில் நாம் நினைத்தும் பார்க்காத ஆச்சரியங்களையெல்லாம் நம் முன்னால் வைத்துவிடும் என்பது நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கும்.

வெங்கட் சாமிநாதன்/25/3/08

 


நினைவுகளின் தடத்தில் - (20)

- வெங்கட் சாமிநாதன் -

வெங்கட் சாமிநாதன் -இனி சின்ன மாமா திருவையாறு தியாகராஜ உற்சவம் முடிந்து திரும்பி வந்தாலும், மதுரையில் படிப்பைத் தொடர முடியாது. மாமா, காமாட்சி புர அக்ரஹாரத்தில் குடியிருந்த இடத்தைக் காலி செய்து பாட்டியை நிலக்கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். நான் கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் லக்ஷ்மி நாராயணபுர அக்கிரஹாரத்தில் மாமியின் வீட்டார் குடியிருந்த வீட்டிற்கு மாறினேன். அங்கிருந்து கொண்டு, மாமா ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு அந்த வருட படிப்பை முடிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

அந்த வீடு மூன்றோ நான்கோ குடித்தனங்களைக் கொண்டதாக இருந்தது. ஒரு நீண்ட நடைபாதை வாசலிலிருந்து கிணற்றடி வரை நீண்டு செல்லும். மாமியின் வீட்டார் இருந்த பகுதி வீட்டின் கடைசியில் கிணற்றடியை ஒட்டிய கடைசிப் பகுதி. அந்த கடைசிப் பகுதியில் நடைபாதையை ஒட்டிய சமையலறை, பின் வீட்டின் நடு ஹாலிலிருந்து படியேறி மேல் சென்றால் மாடியில் ஒரு விஸ்தாரமான அறை. இவ்வளவே அவர்கள் புழங்கக் கிடைத்த இடம். நடு ஹாலுக்கு மற்ற குடித்தனக் காரர்கள் வந்து உட்கார்ந்து பேசிக் கொள்ளலாம். திண்ணை பொது இடம் என்பது போல அது. ஆனால் யாரும் அதிக உரிமை கொண்டாடக் கூடாது. மாமியின் பிறந்த வீட்டில் நிறையப் பேர் இருந்தார்கள். மாமியின் அம்மா அதற்கு சில வருடங்கள் முன்னமேயே காலமாகிவிட்டிருந்தார். மாமியின் அப்பா, இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். சகோதரர்களில் ஒருவர் மாமிக்கு அண்ணா. மற்றவர் தம்பி. மூன்று சகோதரிகளும் மாமிக்கு இளையவர்கள். இவ்வளவு பேருடன் நானும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டேன். இவ்வளவு பேரும் அங்கு எப்படிக் காலந்தள்ள முடிந்திருக்கிறது என்று இப்போது நினைக்க ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. வேறு யார் வீட்டினுள்ளும் நான் உள்ளே நுழைந்து பார்த்ததில்லையென்றாலும், அனேகமாக எல்லா வீடுகளும் இப்படி பல குடித்தங்கள் நெருக்கி அடித்துக்கொண்டு வாழும் 'ஸ்டோர்ஸ்" என்றே சொல்லப்பட்டதால், மதுரையில் அந்த நாற்பதுக்களிலேயே நடுத்தரக் குடும்பங்கள், சொந்த வீடில்லாதவர்கள் வாழ்க்கை இப்படியாகத் தொடங்கிவிட்டது போலும்.

அவ்வளவு நெருக்கடியிலும், நானும் அவர்கள் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டதில் அவர்கள் யாரும் முகம் சுளித்ததாக எனக்குத் தோன்றவில்லை. எல்லோரும் என்னிடம் மிக அன்பாகத் தான் இருந்தார்கள். மாமியின் அடுத்த தங்கை, ஒன்றிரண்டு வயது இளையவர், சரஸ்வதி, அப்போது 27-28 வயதினராக இருப்பார். சேதுபதி ஹைஸ்கூலுக்கு எதிரே இருந்த ஒரு பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு என்னைச் செல்லமாகக் கேலி செய்வதில் ரொம்ப விருப்பம். அது எனக்குப் பிடித்தும் இருந்தது. மாமியின் மாமா எப்போதும் சமையலறைக்கு எதிரான நடைபாதையில் சுவரோரமாகப் போட்டிருக்கும் பெஞ்சில்தான் உட்கார்ந்திருப்பார். இனிப்புப் பண்டங்களில் அவருக்கு பிரியம் அதிகம். நிறைய இனிப்பு சாப்பிடுவார். அப்போது அவருக்கு வயது அறுபதுக்கு மேல் ஒன்றிரண்டு கூடவே இருக்கும். இனிப்பு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு திகைத்து விட்டால், "ஏதாவது காரமா இருந்தா கொடேன்," என்று கேட்பார். ஒன்றும் இல்லையென்றால், "தோசை மிளகாய்ப்பொடி இரூக்குமே" என்று கேட்பார். அதில் கொஞ்சம் தொட்டு நாக்கில் திகைப்பு நீங்கி காரம் ஏறிவிட்டால் போதும், மறுபடியும் இனிப்பு சாப்பிடக் கேட்பார். அந்த வயதில் அவ்வளவு இனிப்பு சாப்பிட்டும் சர்க்கரை வியாதி என்பதையே அந்நாட்களில் நாங்கள் கேள்விப்பட்டது கூட இல்லையே என்று இப்போது நினைத்தால் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொவ்வொரு சமயம் "வாடா, இப்படீ காலாற போய்ட்டு வரலாம்" என்று என்னை அழைத்துக்கொண்டு, அவர் வேலை பார்த்த மாவட்ட கல்வி அதிகாரி (District Education Officer) அலுவலகத்திற்குப் போவார். அங்கு தன் பழைய சகாக்களுடன் பழைய கதைகள், புதிய கதைகள் பேசிக்கொண்டிருப்பார்.

மாமியின் அடுத்த தங்கை எனக்கு ஒத்த வயதினள். செல்லம் என்று பெயர். கடைசித் தங்கை எனக்கு ஆறு வயது சின்னவள். மாமியின் அண்ணா, ரங்கநாதன், அவரை எல்லோரும் அம்பி என்று தான் அழைப்பார்கள். அந்த வீட்டிலேயே அவர் தான் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். வேறு யாராலும் செய்ய முடியாத காரியம் என்றால், அம்பியிடம் தான் முறையிடுவார்கள். அந்தக் காரியம் முடிந்து விடும். எப்படி என்று யாரும் அறிய ஆர்வம் கொண்டதில்லை. காரியம் முடிந்துவிட்டதா, சந்தோஷம். அவரால் முடியும். அது போதும். அப்போது எல்லா பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிறைந்த காலம். சக்கரையா, அரிசியா, எது வேண்டுமானாலும், அவரிடம் சொன்னால் போதும். கிடைத்துவிடும். கேட்கும் அளவு இல்லாவிட்டாலும், ஏதோ கிடைத்து விடும். 'அம்பி கிட்டே சொல்லப்படாதா?" என்று எல்லோரும் ஏதோ தாம் தான் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டதான தொனியில் கேட்பார்கள். அதே போல் அம்பியும், 'என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதோ?" என்று கேட்பார் கொஞ்சம் அக்கறை தொனிக்க. அடிக்கடி அவர் என்னை சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு போவார். "வாடா சினிமா பார்த்துட்டு வரலாம்" என்பார். அவர் கூடப் போனால் ஓசியில் சினிமா பார்ப்பது மட்டுமல்லாமல், சினிமா ஆரம்பிக்குமுன், ஹோட்டலில் சூடாக தோசை வேறு வாங்கிக் கொடுப்பார். அங்கிருந்த ஐந்தாறு மாதங்களில் நான் தோசை சாப்பிட்டது, அம்பியுடன் சினிமாவுக்குப் போன சமயங்களில் தான். அவர் வேறு யாரையும் அழைத்துப் போனதாக எனக்கு நினைவில் இல்லை. அவர் எங்கு போகிறார் என்ன செய்கிறார் என்று யாரும் அந்த வீட்டில் அவரைக் கேட்டதும் இல்லை. வெகு சுதந்திரப் பிறவி. அவர் அதிகம் படித்தவரில்லை. ஏதோ ஒரு கோவாப்பிரேடிவ் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். எந்த காரியமும் செய்வதில் சமர்த்தரானது மற்றவர்களைப் பிரிமிக்கத்தான் வைத்தது. மற்றவர் ராஜா என்பவர். அப்போது தான் தன் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு ஏதோ அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். என்ன அலுவலகம், என்ன வேலை என்பதெல்லாம் நினைவில் இல்லை. அவரும் என்னைச் சினிமா பார்க்க அழைத்துச் செல்வதுண்டும். என் இப்போதைய ஞாபகத்தில், அவருடன் ஏதும் தமிழ்ப்படம் பார்த்ததாக நினைவில் இல்லை. அந்நாளைய பஸ் ஸ்டாண்டிற்கும் ரயில் நிலயத்திற்கும் இடையில் ரீகல் என்றோ என்னவோ பெயரில் ஒரு தியேட்டர் இருந்தது. அதில் காலையில் ஆங்கிலப் படங்கள் தான் திரையிடுவார்கள். அங்கு போய் படங்கள் பார்த்த நினவில் இருந்தாலும் படங்களின் பெயர்கள் ஒன்றும் நினைவில் இல்லை. ஆனால் சித்ரலேகா என்றோ என்னவோ ஒரு தியேட்டர் தெற்கு வீதிகள் ஒன்றில் இருந்தது. அதில் ஹிந்தி படங்கள் திரையிடுவார்கள். அங்கு தான் அந்நாட்களில் மிகவும் பிரபலமான ரத்தன், அன்மோல்கடி இரண்டும் பார்த்தது நினைவில் இருக்கிறது. அந்த படங்களின் ஹிந்தி பாட்டுக்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பைத்தியமாகத்தான் ஆக்கின. உடனே தமிழ் படங்களில் எல்லாம் அதே ஹிந்தி மெட்டுக்களில் தமிழ் பாட்டுக்கள் சரமாரியாக வர ஆரம்பித்தன. அன்மோல் கடி படத்தில், சுரையாவோ, லதா மங்கேஷ்கரோ ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகனாகி வருவதற்கு முன்னரே கோலோச்சிய நூர்ஜஹான் பாடி நடித்திருந்தார். அவரும் ரத்தன் படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்வர்ணலதா என்பவரும் அடுத்த வருடம் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதும், பாகிஸ்தான் பிரஜைகளாயினர். இவர்களில் முக்கியமாக நூர்ஜஹான் பாகிஸ்தானிய சினிமா ரசிகர்களின் 'கனவுக்கன்னியாக' மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் அடுத்தடுத்து வந்த ராணுவ ஆட்சித் தலைவர்களுக்கும் பிரியமானவராக இருந்தார் என்று சொல்லப்பட்டது. நூர்ஜஹான் பின்னர் தொன்னூறுகளில் ஒரு முறை இந்தியா வந்திருந்தார். அப்போது அவரோடு கதாநாயகராக நடித்திருந்த திலீப் குமார் பழம் நாட்களையும், நூர்ஜஹானின் இசைக்கு இந்திய மக்கள் ஏங்கியதையும் நினைவு கூர்ந்து மிக மனம் நெகிழ அவருக்கே உரிய மிக அழகான உருதுவில் பேசினார். திலீப் குமாரின் உருதுவைக் கேட்பதும் கூட ஒரு சுகமான அனுபவம் தான். ஆனால் மதுரை நாட்களில் இதெல்லாம் நான் தெரிந்தவனில்லை.

மதுரையில் தனியாக இருந்த போது நிறைய ஊர் சுற்றுவது எனக்குப் பிரியமான விஷயமாக இருந்தது. சேதுபதி ஹைஸ்கூலில் சேர்ந்ததும், ஒரு பரி¨க்ஷ வைத்தார்கள். பரி¨க்ஷயில் தேறினால் அரைச் சம்பளம் கொடுத்தால் போதும். அப்போது சம்பளம் ருபாய் மூன்றோ என்னவோ சரியாக நினைவில் இல்லை. ஒன்றரை ரூபாயோ, இரண்டு ரூபாயோ மாமாவின் செலவில் மிச்சம் பிடித்துக் கொடுத்ததில், மாமாவுக்கும் சந்தோஷம். அங்கிருந்த மாமியின் குடும்பத்தினரிடமும் என் மதிப்பு உயர்ந்திருந்தது. அதனால், நான் ஊர் சுற்றிக்கொண்டிருந்ததை யாரும் கவலைப்படவில்லை. நவராத்திரி வந்து விட்டால், மதுரையில் எனக்குத் தெரிந்த எல்லாக் கோயில்களுக்கும் போய்விடுவேன். மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஆரம்பித்து, வடக்கு மாசி வீதியிலோ என்னவோ இருந்த கிருஷ்ணன் கோவில், பின் தல்லா குளத்திலோ அல்லது சொக்கி குளத்திலோ இருந்த பெருமாள் கோவில் என அலைந்து கொண்டிருப்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்திருப்பார்கள். எனக்கு அவற்றை ஒன்று விடாமல் பார்த்து விடவேண்டுமென்ற ஆர்வம். நிறைய கூட்டங்கள் நடக்கும். பி.ராம மூர்த்தி, மோகன் குமார மங்கலம், அருணா ஆசப் அலி, எனச் சிலர் பேசிய கூட்டங்கள் தான் இப்போது நினைவில் இருக்கின்றன. வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில், வீட்டுக்கும் சிம்மக்கல்லுக்கும் இடையில் ரோடில் ஒரு பெயிண்டிங் கடை இருக்கும். அதில் ஒருவர் சினிமா பானர், விளம்பர போர்ட் எல்லாம் வரைந்து பெயிண்ட் செய்து கொண்டிருப்பார். அங்கு போய் உட்கார்ந்து விடுவேன். அவர்கள் பெயிண்ட் செய்வதை அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். யாரோ சின்னப் பையன் ஆர்வமாகப் பார்க்கிறான். அடிக்கடி வந்து இப்படி உட்கார்ந்து விடுகிறான். என்று இருந்து விடுவார்கள். சித்திரம் வரைகிறவர் சில சமயம் என்னைப் பார்த்து ஒரு புன்முறவலோடு ஏதோ சொல்வார். கேட்டுக்கொண்டிருப்பேன்.

மாமியின் வீட்டில் எல்லோரும் பிரியப்படும்படி நான் இன்னொரு காரியமும் செய்து வந்தேன். அது ஒன்று தான் அவர்களுக்கு என்னால் ஆன காரியம் என்று நினைக்கிறேன். நான் காலையில் சற்று சீக்கிரமே கிளம்பி மாமா ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுத் தான் பள்ளிக்குப் போவேன். அது சேதுபதி ஹைஸ்கூல் இருந்த வடக்கு வெளி வீதியிலேயே பாதி தூரத்தில் இருந்தது. மத்தியானம் மறுபடியும் அந்த மெஸ்ஸ¤க்கு வந்து மோர் சாதம் சாப்பிட்டுப் போவேன். வெயிலுக்கு மிக சுகமாக இருக்கும். அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரும் பெரியவர்கள். நான் ஒருத்தன் தான் சின்னப் பையன். அங்கு எல்லோரும் என்னிடம் மிகப் பிரியமாக இருப்பார்கள். வாசலில் உட்கார்ந்திருக்கும் முதலாளி, "என்னடா சாப்பிட்டயா? " என்று விசாரிக்கத் தவறமாட்டார். பின் இரவு எட்டு மணிக்கு சாப்பிடப் போவேன். ஒவ்வொரு சமயம் சரஸ்வதி "இன்னிக்கு என்னடா சாப்பிட்டே, ஏதாவது ஸ்பெஷல் உண்டா? என்று சிரித்துக்கொண்டே கேட்பாள். நானும் சொல்வேன். "உனக்கென்னடா குறைச்சல். அதிர்ஷ்டக்காரன். தினம் தினம் விருந்து சாப்பாடுன்னா சாப்பிடறே?" என்று விளையாட்டாக கேலி செய்வாள். மற்றவர்களும் அதில் சேர்ந்து கொள்வார்கள். ஒரு நாள் இந்த மாதிரியான விசாரிப்பில் "இன்றைக்கு வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு கறியும்" என்று சொன்னபோது அங்கு ஒரே பரவசம். "ஏண்டா வெங்காய சாம்பார் எப்பவாவது போடுவாளா, இல்லை வாராவாரம் உண்டா?" என்று கேட்டாள் சரஸ்வதி. சனிக்கிழமை சனிக்கிழமை ராத்திரிக்கு வெங்காய சாம்பார் தான் வழக்கம்" என்றேன். "அட தடியா அதை முன்னாலேயே சொல்லக்கூடாதோ. ஏண்டா வெங்காய சாம்பார் பண்ற அன்னிக்கு சாப்பாட்டை இங்கே வாங்கிண்டு வந்துடேண்டா, எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம், என்ன சொல்றே, எங்களுக்கும் வெங்காய சாம்பார் தருவியா இல்லே நீயே தான் சாப்பிடுவியா? என்று சரஸ்வதி கேட்டதும், அடுத்த சனிக்கிழமை கேட்டுப் பார்க்கிறேன் என்று சொன்னேன். நான் மெஸ் முதலாளியிடம் இன்னிக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துடுங்கோளேன். அங்கேயே மத்தவாளோடே சேர்ந்து சாப்பிடலாம்னு சொல்றா" என்றேன். "எதுக்குடா, வெங்காய சாம்பார்னு அவா கிட்டே சொல்லிட்டயோ, அவாளுக்கும் வேணுமாக்கும்" என்று சிரித்துக்கொண்டே கேட்டார். சரி போ என்று சொல்லி "டேய் இவனுக்கு சாப்பாடு கட்டிக்கொடுத்துடு இன்னிக்கு, கொஞ்சம் சாம்பார் கூடக்கொடுத்துவிடு. இல்லாட்டா இவனுக்குக் கிடைக்காது" என்று உத்தரவும் போட்டு விட்டார். அன்றிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் வெங்காய சாம்பார் தனியாக ஒரு பாத்திரத்தில் கூடக் கொடுப்பார்கள். எல்லோருக்கும் குஷி தான். சனிக்கிழமை ராத்திரி சாப்பாடு எப்போது வரும் என்று எல்லோரும் காத்திருப்பார்கள். ஆனாலும் அங்கு இருந்தது ஆறு பேர். என் ஒருத்தன் சாப்பாட்டுக்கு கிடைக்கும் வெங்காய சாம்பார் எவ்வளவு தான் கூடக் கொடுத்தாலும், ஏழு பேரை எப்படித் திருப்திப் படுத்த முடியும்? சனிக்கிழமை இரவுச் சாப்பாட்டின் போது நான் அங்கே ஒரு ஹீரோ தான். இப்படி கொஞ்ச வாரம் நடந்து வந்த பிறகு ஒரு நாள் சரஸ்வதி தான் சொன்னார். "ஏண்டா கொஞ்சம் கூடக் கேட்டு வாங்கிவரப்படாதோ!" என்று. நானும் சொன்னபடி கேட்கும் நல்ல பிள்ளையாக மெஸ் முதலாளியிடம், "சாம்பார் கொஞ்சம் கூடக் கொடுக்கச் சொல்லுங்கோ" என்றேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து, பரிமாறுகிறவரைக் கூப்பிட்டு, "இவனுக்கு சாம்பார் கொஞ்சம் கூட வேணுமாம்டா." என்று சொன்னார். பரிசாரகரும் என்னை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். உள்ளே போனதும், "அவர் கிட்டே ஏண்டா போய் சொன்னே. நான் தான் உனக்கு நிறையவே கொடுக்கறேனே. போ. வழக்கத்தைவிட இன்னும் கூடவே இருக்கு சாம்பார். எடுத்துண்டு போ. இனிமே ஏதாவது வேணும்னா என்னைக் கேளு, அவர் கிட்டே போய்க் கேட்காதே. அப்பறம் போறபோது அவருக்குத் தெரியாம எடுத்துண்டு போ. அவர் பாத்தா சத்தம் போடுவார். "கூடக் கொடுன்னா, எவ்வளவுடா கொடுப்பே ஒரு பையனுக்கு சாப்பிடறதுக்குன்னு" விவரம் தெரியாத பிள்ளையா இருக்கியே" என்று அவர் சொன்னபோது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அங்கு எல்லோரையும் போல அவரும் என்னிடம் மிக பிரியமாக இருப்பவர்.

வெங்கட் சாமிநாதன்/25.4.08
vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner