இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2010  இதழ் 132  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்

இலங்கை புதிய ஜனநாயக மார்க்சிச - லெனினிசக் கட்சியின் பொதுச் செயலர். தோழர். சி.கா.செந்திவேல் அவர்களின் தமிழ் முற்போக்குத் தேசியர்களுக்கான அறைகூவல்...

உலக அரசியலில் தமிழ்ச் சமூகத்தள அசைவுகள் - மாற்றங்களுக்கு ஏற்ப, காலத்தின் தேவைகருதி புலம்பெயர் தமிழர்களின் சிந்தனை செயலுக்கான, பன்முகச் சமூகப் பார்வைகொண்ட இலக்கியர் - கலைஞர் - அரசியலர் - போராளியர் - ஊடகவியலர்களை டென்மார்க் - தமிழ் இலக்கியமன்ற செயற்பாட்டிலுள்ள தலைவர். த.தர்மகுலசிங்கம், செயலாளர். எம்.சி.லோகநாதன் ஆகியோர், மாற்றம் என்பது மட்டுமே மாறாது என்ற நியமத்தின் பயன் கருதி, அவ்வப்போது மேற்சொன்ன மேலாளர்களை அழைத்துவந்து, கருத்தரங்கங்களை அமைத்து பொதுக் கருத்துப் பரவலாக்கத்துக்கான கருத்தாடல்களை, டென்மார்க்கின் புலம்பெயர் தமிழர் மத்தியில் பல ஆண்டுகளாக செவ்வனே செயற்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில், மக்கள் கருத்தாடலுக்கான வயன் நகரின் லிணரோவ் மண்டபத்தில் அமைந்த, "தோழர் சண்முகதாசன் அரங்கத்தில்" ஐந்து தசாப்தகால முற்போக்குத் தேசிய இடதுசாரி அரசியற் புலத்தைக் கொண்ட, இலங்கை புதிய ஜனநாயக மார்க்சிச - லெனினிசக் கட்சியின் பொதுச் செயலர். தோழர். சி.கா.செந்திவேல் அவர்கள், 13.11.2010 அன்று வருகைதந்தார். அந்த மக்கள் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தாடலில், அவர் வழங்கிய பேருரை, சபையோரின் கேள்விகள் - கருத்துகளின் சாரம் இங்கு பதிவாகிறது.

இக் கருத்தரங்கில் கடந்தகால ஈழப்போராட்ட அரசியற் பின்னணி கொண்ட பலர் கலந்துகொண்டனர். இதுவரை இலங்கை வரலாற்றில் தேசிய ரீதியாக ஒடுக்கப்பட்டு - அடக்கப்பட்ட அனைத்து இன மக்களின் போராட்டங்கள் கண்ட தோல்விகள் பற்றிய தமது கட்சியின் பார்வையினையும், ஈழத் தமிழரின் விடிவுபற்றிய எதிர்கால நோக்குகளையும் மிக விரிவாக தோழர். சி.கா.செந்திவேல் அவர்கள் தனது கருத்தில் தெரிவித்தார். (சில ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கின் கொல்ஸ்ரப்புறோ நகரில் இடம்பெற்ற கருத்தாடலுக்கு வருகைதந்து, அன்றைய ஈழ அரசியல் நிலை பற்றியும், இப்படியான போராட்ட நகர்வுகள் எப்படியாக அமையும் என்பதன் அரசியல் எதிர்வுகளையும் எமது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு வழங்கியவர் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும்)

நூறு மலர்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் எனும் தோழர். மாவோவின் பார்வையில் "சமகால அரசியலும் கருத்தாடலும்" என்றதான அவரது பேருரையின் ஆரம்பமாக, சேர்.பொன்.இராமநாதன் காலத்திலிருந்து அடுத்தடுத்த தொடராக வந்து, சொந்த மக்களையே ஏய்த்து, ஆங்கில மகாராணியின் மந்திரக்கோல் தன்னிடம் உள்ளதாக, நவ காலனித்துவச் சுத்துமாத்துகள் செய்து, பிற்போக்குத் தேசியவாத அரசியல் நடாத்தியவர்கள் முதல், கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு முடங்கிப்போன தமிழ்க் குறுந்தேசியவாத த.ஈ.வி.புலிகளின் ஆயுத பலத்திற்கு அப்பால், அவர்களுடன் இணைந்து சென்ற, இழுத்துச் செல்லப்பட்ட தமிழ் மாந்தரை, பௌத்த சிங்களத் தேசிய வல்லாதிக்கம் உலக வல்லாதிக்க சக்கதிகளின் துணையோடு, பட்டியாக இன அழிப்புச் செய்ய இடம் வைத்த ஈழத் தமிழ் தேசியக் கட்டுமானத்தின் உட்பரிமாணத்தை அவர் மென்மையாக உடைத்து, அதன் பொட்டுக்கேடுகளை விபரித்துக் காட்டினார். அதற்குள் அடங்கிக் கிடக்கும் சாதி, மத, வர்க்க, இன முரணுக்கான விழுமியங்களை செவ்வனே எடுத்து விளக்கினார்.

தொலை நோக்கற்ற அத்தனை தமிழ் அரசியல் வியாதியர்களில் இருந்து, அவர்களின் எச்ச சொச்சங்களுடன் அலைகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் போன்ற மேட்டுக்குடி அரசியல் வாதிகளுக்கு எதிராகவும், பாசிக்காரருடன் கூட்டுச் சேர்ந்து கும்மாளமிடும் தமிழ்க் குழுக்களைச் சாடியதோடு, மேலாதிக்க வாதிகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட அனைத்து இன மக்களின் விடிவுக்கான பல்தேசிய சுயநிர்ணயக் கருத்துகளை முன்வைத்தார்.

இலங்கை புதிய ஜனநாயக மார்க்சிச - லெனினிசக் கட்சியின் நாடுதழுவிய, சமூக மாற்றத்துக்கான செயற்பாடுகள் பற்றியும், ஆண்டகைகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்தியல் - செயற்பாடு - தோழமைகளின் பாரிய இழப்புகள், விடிவுக்கான மாற்றங்கள்;, தாம் நடாத்திவரும் ஊடக கருத்தாடல், கருத்துப் பரவலாக்கம், வரலாற்றுப் பதிவுகள் என அவரது குரல் சிறப்பாகத் தெறித்தது. இவ்வகை சமூக மேம்பாட்டுக் கருத்துகளின் போராட்ட வடிவங்களால் மட்டுமே சமநீதி கொண்ட சமூக மாற்றத்துக்கான விடிவினைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது, வலதுகுறைந்த இடதுகளின் மத்தியில் ஐனநாயகப் பன்முகப் பார்வை கொண்டோரும், கலந்து கொள்ளக்கூடிய முற்போக்குக் கட்டமைப்பைக் கொண்டதான, இலங்கை புதிய ஜனநாயக மார்க்சிச - லெனினிசக் கட்சியின் ஐனநாயகப் போராட்டத்துக்கான மக்கள் சக்தியைத் திரட்டும் அறைகூவலாகவும் அவரது முற்போக்குத் தேசியக் கருத்தியலான பேச்சின் அடிநாதமாக அமைந்தது.

த.ஈ.வி.புலிகளின் ஈழ விடுதலைக்கான ஆயுதப் போரட்டத்தில், கிளிநொச்சியின் வீழ்ச்சியுடன் பு.ஐ.கட்சி தமது அரசியல் ஏடான ~புதிய பூமி பத்திரிகையில் த.ஈ.வி.புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொது மக்களை விடுவிக்குமாறும், இராணுவ அரங்குகளை உடைத்து புலிகளை வெளியேறுமாறும், அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அக் கருத்தின்மேல் த.ஈ.வி.புலிகள் கரிசனை காட்டி, அந்த மக்களை சுயமாக வெளியேற அனுமதித்திருந்தால், அந்த இறுதிக்கால யுத்தத்துக்குள் அழித்துத் தொலைக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேலான உயிர் இழப்புகளை தவிர்த்திருக்கலாம்.

முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட அந்தப் போராட்ட அழிவுகள், இழப்புகளுக்கான குற்றச் சுமத்தலை தனித்து த.ஈ.வி.புலிகளின் மீது சுமத்த முடியாது. இந்த யுத்த வியூகங்களை நகர்த்தியோருடன் அவர்களுக்கு உறுதுணை புரிந்த புலம் பெயர் தமிழர்களும், அந்தப் போராட்டத்தை இணைந்து நடாத்தியவாறே எதிர்த் தரப்பின் சதிகளுக்குச் சோரம் போனவருடன், சிறிலங்கா - இந்திய அரசுகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கும் அத்தனை பேரையும் சார்ந்ததாகும் என்றார்.

"அதிகாரப் பரவலாக்கம் " - "அதிகாரப் பகிர்வு " என்பதில், பல்தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் "அதிகாரப் பகிர்வு " அனைத்து இன மக்களுக்கும் கிடைக்கவேண்டும். முற்போக்கு தேசிய சிந்தனை கொண்ட இடதுசாரிகளே இக் கருத்துகளை முன்வைத்துப் போராடுகிறார்கள். கடந்தகால தமிழ்க் குறுந்தேசிய அரசியலர்களின் எச்ச சொச்சங்கள்தான் இந்த ~நாடு கடந்த தமிழீழ அரசு| ஆகும். இந்த அரசும் எமது மக்களுக்கு எதனையும் தரப்போவதில்லை.

தொப்புள்கொடி உறவு என்று உரிமை கொண்டாடும் இந்தியாவின் பின்னணி பற்றியும், சீனா - பாக்கிஸ்தான் - ரஷ்யா - கியூபா போன்ற நாடுகள் சிறிலங்காவின் இன அழிப்புக்கு எப்படியான பின்னணி வகித்தன என்பதையும், சீனா - ரஷ்யா இந்த இரு நாடுகளின் இடதுசாரியம், இந்த வலதுசாரி வல்லரசுகளால் சிதைக்கப்பட்டு, வலதுகளின் ஆட்சியரசியல் நடப்பதனால், நாம் அந்த நாடுகளை இடதுசாரிய நாடுகள் எனப் பார்ப்பது தவறு என்றார். இதற்குப் பின்னணியாக இருக்கும் அமெரிக்கா, புலிகளை கூண்டோடு அழிப்பதற்கான ஆழமான பின்பலத்தைக் கொண்டிருந்தது என்பதையும் அவர் விபரித்தார்.

ஒரு தலைவன் வருவான், எம்மைக் காப்பாற்றுவான் என்ற தமிழினத்தின் அறியாமையே, ஆயுதமேந்திய புலிகளும், அதே வகையிலான மற்றய இயக்கங்களுமாகும். இன்று இலங்கையின் அரசியலில் சதிராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வரதராஜப்பெருமாள், டக்ளஸ், பிள்ளையான் உட்பட இப்படியான அனைவருடைய கரங்களும் இரத்தம் தோய்ந்த கரங்களே ஆகும். இவர்கள் மக்களுக்கான அரசியலை எப்படித் தமது இரத்தம் காய்ந்த கரங்களால் முன்னெடுக்க முடியும் என்பது கேள்விக்குறியாகும்.

நாம் வாழ்கின்ற சிறீலங்கா என்பது ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடு அல்ல. மக்களை மதிக்காத தமது அரசியலைத் தொடர்கின்ற இனவாத நாடு அது. அத்துடன் ஏனைய நாடுகளின் உற்பத்தி - விற்பனையில் வாழும், உலக சந்தைப் பொருளாதாரத்திற்கு மோசம்போன நாடாகவே அது தொடர்கிறது.

இவ்வளவு பிரச்சனைகளைக் கற்றுக்கொண்ட பின்புகூட அந்த அரசு, அரசியல் அதிகாரப் பகிர்வுக்குத் தயாரில்லை. அதிகாரப் பரவலாக்கம் செய்வோமென ஆங்காங்கே சில பொம்மைப் பொறுப்புளை கொடுத்துவிட்டு நற் தீர்வுக்கான எந்தவித மாற்றத்துக்கும் தயாரில்லாது, தனது பரம்பரை ஆட்சியை தக்க வைத்திருக்கும் செயலே மகிந்த ராஜபக்ஷ நடாத்தும் ஆட்சியாகும். தமது சொந்த இனமான 80 ஆயிரம் சிங்கள இளைஞரையே கொன்று வீசிய சிங்களப் பாசிசம், சிறிய இனமான தமிழர்களை என்ன செய்யும் என்பதை நாம் தொலை நோக்குடன் முன்பே உணர்ந்திருக்க வேண்டும்.

இந்த இனவாத அரசுடன் உறவு கொள்ள, புலிகளின் ஒரு பிரிவினர் இன்று கொழும்புக்கு ஓடுகிறார்கள். இன்னொரு பிரிவினர் இந்தியாவுக்கு ஓடுகிறார்கள். இது எவ்வகையான அரசியல். இதைவிடவும் கேடுகெட்ட அரசியல் என்ற ஓர் அரசியல் இருக்க முடியுமா? இத்தனை அவலங்களுக்கும் முக்கிய காரண கர்த்தாவான இந்தியா, ஈழத் தமிழருக்கு என்ன செய்தது என்பதுபற்றி நன்கு தெரிந்தும், இந்தியாவை தமது தொப்புள்கொடி உறவென்கிறார்களே?

விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் நாடுகடந்த தமிழீழ அரசு என்பதில், அந்த அரசு அமைவதில் சிங்கள இனவாத அரசுக்கும், இந்திய வல்லாதிக்க அரசுக்கும் ஒரு வகையான மகிழ்ச்சியையே கொடுக்கும். புலிகளின் தனிநாட்டு கோரிக்கை இன்னமும் முடியவில்லை என்பதற்கு இவர்களையே உதாரணமாக காட்டுவார்கள். தொடர்ந்து அவசரகால சட்ட நீடிப்பு, கைதுகள், கொலைகள் போன்ற நித்திய இன அழிப்பை சிங்கள அரசு தொடரும். அதற்கான காரணமாக இந்த நாடுகடந்த தமிழீழ அரசையே காரணம் காட்டும். நாட்டில் உள்ள அப்பாவிகள் தொடர்ந்தும் துன்பம் அனுபவிக்கவே இவர்களுடைய இந்தச் செயல் காரணமாகிறது. புலிகள் மீதான தடையை நீடித்து, தமிழ் மக்களை மீண்டும் பழிவாங்க, இந்தியாவுக்கும் ஒரு பிடிமானமாக இவர்களுடைய முயற்சி அமைகிறது.

"நாடுகடந்த தமிழீழ அரசு" வெளிநாடுகளில் அமைத்துள்ளதைக் காரணங்காட்டி, இலங்கையிலும் இப்படியான ஓர் தமிழீழ அரசு அமைக்க வழிசெய்யலாம் என்று கனடாவில் கூறினார்கள். இதை மகிந்த ராஜபக்ஷவிடம் காட்டியா அமைக்கப் போகிறீர்கள் என்று அங்கிருந்த பெண்மணி மறுபடியும் அவரிடம் கேட்டார். புலிகள் என்ற ஆயுதம்தாங்கிய பெரிய இயக்கம் போராடியபோதே சிங்கள இனவாத அரசு எதையும் கொடுக்க முன்வரவில்லை. நாடுகடந்த அரசைக்காட்டியா உரிமை பெறமுடியும்?

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது புலிகள் செய்த மிகப்பெரும் தவறாகும். இன்று அகதிகளாக வாழும் முஸ்லீம்களின் அடுத்த தலைமுறை சுமார் 20 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே வாழ்கிறது. அவர்கள் புலம் பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறைபோல் யாழ்ப்பாணத்திற்கு பார்வையாளராகவே வருவார்கள். முஸ்லீம்கள் தமது வாழ்விடங்களில் மறுபடியும் குடியேறுவதற்கு சிங்கள அரசு இதுவரை எதையுமே செய்யவில்லை.

சீனா - இந்தியா - ரஷ்;யா - பாகிஸ்தான் - அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் இந்தப் போரில் முக்கிய பாத்திரம் வகித்தன. இவர்களுடைய நோக்கங்களுக்காக ஈழத் தமிழர்கள் அநியாயமாக பலியானார்கள். புலிகள் அமெரிக்க சார்புடையவர்கள் என்பதால் அவர்கள் இலங்கையில் இருக்கக் கூடாது என்று இந்தியா கணக்குப் போட்டது. 2001 ற்குப் பிறகு ஆயுதமேந்திய அமைப்புக்கள் இருக்கக் கூடாது என்று அமெரிக்கா கருதியது. இந்த இரு சக்திகளும் புலிகளுக்கு எதிரானபோது முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமென்று வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கேற்ப நடாத்தப்பட்ட போர் கடைசியில் மீண்டும் தொடங்க முடியாது ஒரு கட்டத்தில் முடங்கிப்போனது.

ஆனால் தொடர்ந்து ஒடுக்கு முறைக்குள்ளாகும் மக்கள் ஐந்தோ, பத்தோ அல்லது இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துக்கூட மறுபடியும் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தினை எழ வைக்கலாம் ஆனால் அது புலிகள் போல தப்பான கோணத்தில் எழுகிறதா அல்லது மக்கள் சக்தியாக எழுகிறதா என்பதைப் பொறுத்தே அதன் அழிவும் ஆக்கமும் தீர்மானமாகும்.

ஏனெனில் தமிழின மக்கள் மந்தை நிலைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்று கேட்காமல் ஒன்றன் பின் மற்றயது கூட்டமாகப் போகும் குணம் கொண்டவை செம்மறிகள். வெள்ளாட்டு மந்தைகள் அலைந்து போய் தனித்தனியாக மேய்பவை. இந்த மந்தைகளை மேய்ப்பது மிகவும் கடினம். ஆனால் செம்மறிகளை மேய்க்க ஒருவன் போதும். அதனால்தான் ஒரு தலைவன் வருவான் என்று எமது தமிழர்கள் பாடித் திரிகிறார்கள். ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை என்ற காசியானந்தனின் வரிகளை பாருங்கள் எந்தக் காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மேட்டுக்குடிகளை தவிர. தமிழரை ஆண்டவன் எவன்? இவனா மறுபடியும் ஆளப்போகிறான் இப்படியான பிற்போக்குத் தனமான எண்ணங்களின் பின்னால் மந்தை நிலைப்பட்டது தவறாகும். இவற்றினை அறிந்து காலத்தையும் சூழலையும் உணர்ந்து தமிழ் மக்கள் அனைவரும் சரியான ஓர் மாபெரும் சக்தியாக மலர வேண்டும். தோல்வியடைந்த புலிகளை குத்திக்காட்டி பேசுவதில் யாதொரு பயனும் கிடையாது. இலங்கைவாழ் தமிழ் மக்களிடையே பெரும் அரசியல் வெற்றிடமும் விரக்தியுமே இருக்கிறது. அதனை புலம்பெயர் ஈழத் தமிழரிடமும் காணக்கூடியதாக இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் 80 வீதமான மக்கள் நடந்து முடிந்த தேர்தலுக்கு வாக்களிக்கவே போகவில்லை. வெறும் ஒன்பதாயிரம் வாக்குகளை வைத்து தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்கிறது கூட்டமைப்பு. மறுபடியும் சேர். பொன்.இராமநாதன் காலத்துக்குள் போய் குளிர்காய ஆசைப்படுகிறார் சம்மந்தர். கூட்டமைப்பை மன்மோகன் சிங் பாராட்டியதாக மாவை சேனாதிராஜா கூறுகிறார் என்றால் அந்த வெட்டங்கெட்ட செயலை புரியாது கூட்டத்தில் இருந்தவர்கள் கைகளை தட்டுகிறார்கள். கடந்த ஒரு வருடத்துக்குள் இந்தியா செய்ததையே மறந்த தமிழனுக்கு பழைய வரலாறுகள் எப்படித் தெரியப்போகிறது.

இனப்பிரச்சினை என்ற விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அதைத் தீர்க்காமல் வேறு நியாயங்களைப் பேசுவது அர்த்தமற்றது. இது குறித்து தமது கட்சி முன்வைத்துள்ள நான்கு அம்சக் கோரிக்கையையும் அதன் உப பிரிவுகளையும் எடுத்துரைத்தார்.

பதிவுகளுக்கு அனுப்பியவர்: யோகன் கண்ணமுத்து ashokyogan@hotmail.com


 
aibanner

 ©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்