இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நூல் அறிமுகம்!
கவிஞர்.கி.பி. அரவிந்தனின் இருப்பும் விருப்பும்

- பொன்னையா கருணாகரமூர்த்தி -


ஈழத்தின் விடுதலை வேண்டி எழுபதுகளில் புறப்பட்ட போராளிகளில் ஒருவரும், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பரப்பில் நன்கறியப்பட்ட கவிஞருமான கி.பி.அரவிந்தன் தனது தமிழக நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களினதும், அவ்வப்போது வெளிச்சம், பாலம் ஆகிய பத்திரிகைகளுக்கும் வழங்கிய பேட்டிகளினதும் தொகுப்பு இது.  ஈழத்தில் விடுதலை இயக்கங்கள் எதுவும் முகிழ்க்க முன்னரே ஈழத்தின் முதல் போராளியான தியாகி சிவகுமாரனுடன் தோழனாகத் தன் போராட்ட வாழ்வை ஆரம்பித்துவிட்ட இவரின் இச்சிறிய கைநூலைப் படிப்பவர்கள் ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளையும், அவர்தம் கனவுகளையும், ஈழத்தின் ஆரம்பகால அரசியல்-போராட்ட வரலாற்றையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்ஈழத்தின் விடுதலை வேண்டி எழுபதுகளில் புறப்பட்ட போராளிகளில் ஒருவரும், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பரப்பில் நன்கறியப்பட்ட கவிஞருமான கி.பி.அரவிந்தன் தனது தமிழக நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களினதும், அவ்வப்போது வெளிச்சம், பாலம் ஆகிய பத்திரிகைகளுக்கும் வழங்கிய பேட்டிகளினதும் தொகுப்பு இது.  ஈழத்தில் விடுதலை இயக்கங்கள் எதுவும் முகிழ்க்க முன்னரே ஈழத்தின் முதல் போராளியான தியாகி சிவகுமாரனுடன் தோழனாகத் தன் போராட்ட வாழ்வை ஆரம்பித்துவிட்ட இவரின் இச்சிறிய கைநூலைப் படிப்பவர்கள் ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளையும், அவர்தம் கனவுகளையும், ஈழத்தின் ஆரம்பகால அரசியல்-போராட்ட வரலாற்றையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

பிரித்தானியர்களின் ஆட்சிவழங்கிய சோல்பரி அரசியலமைப்பிலிருந்து ஈழத்தமிழனின் சுருக்கமான அரசியல் வரலாறு பேசப்படுவதாக நூலின் ஆரம்ப பகுதியும் , ஆயுதப் போராட்டங்கள் முகிழ்த்த வரலாறைப் போராட்டத்துடன் இயைந்த வாழ்வைத்தேர்ந்த ஒரு போராளியாக சகபயணியாக அவதானியாக ஆர்வலனாகப் பேசும் பேட்டிகளும் கட்டுரைகளுமாக நூலின் இடையும் கடையும் அமைந்துள்ளது சிறப்பம்சம்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இயங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், என்.எம்.பெரேராவின் சமசமாஜக்கட்சியும், கொல்வின் ஆர். டி. சில்வாவின் இலங்கை பொதுவுடமைக்கட்சியும் இணைந்த சுதந்திர ஐக்கியக்கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் 1972 ம் ஆண்டு இலங்கையின் அரசியலமைப்பு மாற்றி எழுப்பட்டது. அதில் சிங்களமே ஆட்சிமொழி, பௌத்தத்துக்கு முதலிடம் என்று தமிழருக்கு விரோதமான பல அம்சங்கள் இருந்தன. முரண்நகை என்னவென்றால் இந்த அரசியலமைப்பின் முதன்மை வரைவாளராகப் பணியாற்றியவர் அப்போதைய இலங்கைப் பொதுவுடமைக்கட்சியின் பொலிட்பீரோத்தோழர் கொல்வின் ஆர். டி. சில்வா.

இலங்கையின் பொதுவுடமைக்கட்சி கம்யூனிஸ்ட் கட்சி என்றே தன்பெயரை வைத்துக்கொண்டிருந்தாலும் பன்முகப்பட்ட பார்வையற்றிருந்த அதன் தலைவர்கள் குறிப்பாக கொல்வின் ஆர். டி. சில்வா சிங்கள-பௌத்த-தேசியத்தினுள் விலைபோன துர்நிகழ்வுகளை மீண்டுமொருமுறை இங்கே கவிஞரின் வரிகளில் படிக்கையில் எம் ஆறாத ரணங்களில் மீளவும் வலியுண்டாகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் ஒரு முனைவர். திஸ்ஸா விதரணபோல, ஜே.ஆர்.ஜெயவார்தனவிடமும் ஆனந்த.டி.அல்விஸ் (ஓய்வுபெற்ற நீதியரசரும்) என்று சற்றே தர்க்கரீதியாகச் சிந்திக்கவல்ல ஒரு சிந்தனைவாதிகள் இருந்தனர். ஆனால் இவர்கள் எவரையும் அவர்கள் தலைவர்கள் செயற்பட அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கையின் ஆட்சித்தலைவர்கள் தங்களது முதல் விலங்குகளை தங்கள் மந்திரிகளின் மதியையும்-கைகளையும்-வாய்களையும் சேர்த்துப் பூட்டவே முதலில் பயன்படுத்தினர் என்பதே வரலாறு.

எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயகாவின் தனிச்சிங்களப் பிரகடனம். தமிழரசுக்கட்சியின் சாத்வீக சத்தியாக்கிரகப் போராட்டங்கள், இனக்கலவரங்கள், சுதந்திர ஐக்கியக்கூட்டமைப்பு அரசு செய்த புதிய அரசியலமைப்பு, (அதைத்தொடர்ந்தான தமிழர் விடுதைலைக் கூட்டணியினரின் வட்டுக்கோட்டைத்தீர்மானம் சொல்லப்படவில்லை) திம்புப்பேச்சுவார்த்தையில் எமது கோரிக்கைகள், இந்திய இராணுவத்தின் வருகை, அத்தேசம் எமது விடுதலையில் போட்ட முட்டுக்கட்டைகள் என்பனவற்றைக் கோர்வையாக அழகாகக் கூறிச்செல்கிறார்.

புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழனின் பார்வையில் கலைஞர் கருணாநிதி பற்றியதான ஒரு விமர்சன நூலை ஆக்குவதற்காக சென்ற ஆண்டின் (2008) இறுதிவரையிலும் பல குறிப்புகளைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். ஆனால் 2009ன் ஆரம்பத்தில் தமிழினப்படுகொலைகள் உச்சக்கட்டத்திலிருந்த காலகட்டதில் தனது முழு அரசியல் பலத்தையும் பிரயோகித்து இப்பேரழிவைத்தடுத்து நிறுத்தியிருக்கவேண்டிய முக்கியதருணத்தில் கருணாநிதி தனது ஆட்சியைக்காப்பாற்றிக்கொள்வதில் கவனமாயிருந்துகொண்டு ஆடிய நாடகங்களால் ஒவ்வொரு ஈழத்தமிழனின் மனத்திலிருந்தும் தூக்கி எறியப்பட்டபோது நானும் எனது குறிப்புகளைக் குப்பையில் சேர்த்துவிட்டேன். நெஞ்சுக்கு நீதிகோரிய மனிதர் ’ஈழத்தமிழர்கள் ஒற்றுமையாயில்லை’ என்று வேதம்பேசுவதுபற்றி கவிஞரும் வருத்தப்படுகிறார். லெபனானுக்குச் சென்ற கவிஞர் பலஸ்தீன அகதிகளின் முகாம்களைப் பார்வையிட்டதுடன், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அரஃபாத் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பைப்பெறுகிறார்.

கி,பி. அரவிந்தன்கி,பி. அரவிந்தனின் விபரிப்புகளிலிருந்து அவரது அம்மா எனக்கு மிகவும் உயர்ந்து பெண்களில் மணியாகத் தோன்றுகிறார். தமிழ்க்குடும்பங்களில் தலைமகன்களுக்கு எப்போதும் பொறுப்புக்கள் அதிகம் என்பது நாம் அறிந்ததுதான். பொதுவாழ்வில் இறங்குபவருக்கு முட்டுகட்டைகள்போட இதுபோன்று ஆயிரம் விஷயங்கள் இருக்கும் உயர்கல்வியைத் தேடவேண்டிய காலத்தில் வீட்டைஉதறிவிட்டு தீவிர அரசியலில் இறங்கி தேசத்துக்கான பிள்ளையாகத் தன்னை அர்பணித்துக்கொண்ட கி.பி.அரவிந்தனை மீண்டும் குடும்பத்துள் அணைத்துச் சீராட்டும் அவர் அம்மா மிகமிகமிக அசாதாரணமானவர். இன்னும் கவிஞருக்கு பெரியாரையும், அம்பேத்காரையும் பற்றிய அறிமுகங்கள் அவரது தந்தையின் மூலமே கிடைக்கப்பெறுகின்றன என்பதுவும் அவருக்கு வாய்த்த அசாதாரண வாழ்க்கைச்சூழல் என்பேன்.

நான்கூட தியாகி சிவகுமாரனின் சமகாலமாணவனாக இருந்தும் அவன் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த காலங்களில் அவனைத் தூர இருந்தே (இரு அர்த்தங்களிலும்) பார்த்துவிட்டேன். இத்தனை தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் தொலைநோக்கும் அவனுக்குள் இருந்தது என்கிற விஷயம் அவனது தற்கொடைக்கு முன்னால் எம்மால் உணரப்படாதுபோனதை இப்போது நினைத்தாலும் துக்கமே மேவுகிறது.

இன்னும் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அவ்வந்நாடுகளின் மொழியைபூரணமாக கற்பதில் பாதகமாயிருந்த அவர்தம் மனஅவசங்கள், எப்போது பிடித்து அனுப்புவார்களோவென்கிற திடுக்காட்டம், நிம்மதியின்மையன்ன வாழிடக்காரணிகளையும், இப்போது அவர்தம் இளைய தலைமுறையினருக்கு சாதகமாகியிருக்கும் பன்மொழியறிவையும் அதனால் முழுத்தமிழ்ச்சமூகமும் அடையவிருக்கின்ற நன்மைகளையும் சிறப்பாகவே எதிர்வுகூறியிருக்கிறார் கவிஞர்.

கவிஞர் நினைத்தால் அவரால் எப்போது வேணுமாகிலும் பிரெஞ்சுக்குடிமகனாகிவிட முடியும். ”ஆனால் அப்படி ஏற்பேனாயின் அதன் வரலாற்றினதும் கொடியின் மீதுமுள்ள இரத்தக்கறைகளுக்கும் சாட்சியமாவேன். எனது ஈழத்தின் குடிமகனாவதன் மூலம் மட்டும் எனது அகதிநிலையை மாற்றவிரும்புகின்றேன்.” என்று தன் கனவுகளை விரிக்கிறார். இன்னும் இறுதிவரையிலும் இலங்கைக்குடிமகனாகவே வாழவிரும்பும் அவரது மனஓர்மம் என்னைப்புல்லரிக்கவைக்கின்றன.

அவரைப்போலவே நானும் இறுதிவரை இலங்கையனாகவே வாழவிரும்பி எனது 30 வருட அகதிவாழ்வில் 29 வருடங்கள் இலங்கையனாகவே வாழ்ந்தேன். சென்ற ஆண்டு இலங்கைக்கு ஒரு திருமணத்துக்காகச் சென்றிருந்தபொழுது நான் இருந்த பகுதி காவல் நிலையத்தில் என்னைப் பதிவுசெய்ய மறந்துவிட்டதால் கொழும்பின் ஒவ்வொரு சந்திலும், கண்காணிப்பு நிலையங்களிலும் காவல்துறையினர் என் இருப்பிடப்பதிவைக்கேட்டுத் தொந்தரவு செய்தனர். ’ so Called எந்தேசத்தில் என்னால் என் இஷ்டப்படி நடமாடமுடியவில்லையே இது ஏன்?’ என்று அவர்களிடம் கேட்டதற்கு. ’நாங்கள் இருக்கின்ற சட்டத்தின் நடைமுறையைக் கண்காணிப்பு செய்பவர்களேயன்றி அவற்றை மாற்றியமைக்கும் அதிகாரம் எதுவும் தங்களுக்குக்கிடையாது’ என்றனர். மறுநாள் காவல்நிலையத்தில் என்னைப் பதிவு செய்யலாமென்று போனேன். என்னைப்பதிவு செய்யமுடியாதென்றார்கள். காரணம் கேட்டபோது ’ நான் இலங்கைக்குள் வந்து ஐந்து நாட்களுக்குள் என்னைப்பதிவு செய்திருக்கவேண்டுமாம். இனிமேல் பதிவுசெய்ய தம் சட்டத்தில் இடமில்லையாம், கூடவே இராணுவத்தினர் வந்து உன்னைக் கைதுசெய்துகொண்டுபோனால் மேற்கொண்டு தம்மாலும் ஒன்றுஞ்செய்யமுடியாது’ என்றும் பயங்காட்டினர். என்னை என் இஷ்டப்படி நடமாட அனுமதிக்காத இந்நாட்டின் பிரஜை என்று சொல்லிக்கொள்வதில் இன்னும் எனக்கென்னதான் பெருமை? எனக்கேற்பட்ட மனவுளைச்சலில் ஜெர்மனி திரும்பியவுடன் முதற்காரியமாக அதன் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தேன். இங்கே கவிஞரின் வைராக்கியத்தை பார்க்கையில் எனக்கு எனக்குள் நாணமிகவாகிறது!

பலமுறை சிறையின் கம்பிகளை முத்தமிட்ட இப்போராளி ” இனி ஒரு ஆயுதப்போராட்டம் இலங்கையில் வேண்டாம் அது சாத்தியமில்லை” என்பதுவும், சிறிதோ பெரிதோ எதுகிடைத்தாலும் அதைப்பெற்றுகொண்டு அதிலிருந்து அடுத்தகட்டத்துக்குப் போராடவேண்டும் என்பவர்களை எதிர்ப்பதுவும் தனியீழப்போராட்டமும் பாலஸ்தீனப்போராட்டத்தைப்போல ஒரு தீராதகதையாகத்தான் ஆகிவிடப்போகிறதோ என்கிற பயத்தை இலேசாக மனதில் ஏற்படுத்துகின்றன.

இன்னும் கவிஞர் கி.பி. அரவிந்தன் தன் விபரிப்புகளில் பேறன் ஜெயதிலக, சத்தியசீலன், ச. ஞானமூர்த்தி போன்றோர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுச் செல்கிறார். இவர்கள் யார் என்கிற விபரங்களையும் அடிக்குறிப்பிலாவது சேர்த்திருந்தால் கற்றலின் ஆர்வலர்களுக்கு இன்னும் உதவியாக இருந்திருக்கும். இன்னும் பழைய கட்டுரைகளை/கடிதங்களை இப்போது பதிப்பிக்கையில் புலம் பெயர்ந்துவாழும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கைகளை தற்காலத்துக்கு அமைய திருத்தியிருக்கவேண்டியதும் அவசியம். ஆசிரியர் ஜெர்மனியில் இடம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை நாற்பதினாயிரம் எனக்குறிப்பிட்டுள்ளார். ஜெர்மன் தமிழாலயங்களில் மட்டும் பதினையாயிரம் சிறார்கள் கல்விகற்கின்றனர். இன்னும் தனியீழத்திர்மானத்தை ஆதரித்து இருபத்துமூவாயிரம்பேர் இவ்வாண்டில் வாக்களித்துள்ளனர். ஜெர்மனியைப் பொறுத்தவரையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையின் சரியான புள்ளிவிபரம் எவரிடமும் இல்லையாயினும் பெரியவர்கள் குழந்தைகளுமுட்பட இங்கே ஒரு அறுபதினாயிரம் பேர்களாவது இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். இன்னும் கனடாவிலும், ஐக்கிய இரச்சியத்திலும் முறையே மூன்று இலக்ஷம்பேர் என்று சொல்லப்படுகிறது.

ஒரு நெடிய காலவெட்டுமுகத்தில் இலங்கைத்தமிழரின் சரித்திரத்தையும் அவர்தம் கனவுகளையும் தன்கவித்துவ மொழியில்கூறும் கி.பி. அரவிந்தனின் இந்நூலின் பிரதி புவிக்கோளம் முழுவதிலும் பரவலாக வாசிக்கப்படவேண்டுமென்பது என் விருப்பம்.

karunah08@yahoo.com
01.02.2010 Berlin

*ஒரு திருத்தம்:
பொன்னையா கருணாகரமூர்த்தி எழுதியுள்ள, கவிஞர் கி. பி. அரவிந்தனின் 'இருப்பும் விருப்பும்" என்ற கட்டுரையில் காணப்படும் பிழையான தகவலுக்கான ஒரு திருத்தம்... ..

கொல்வின் ஆர். டி. சில்வா பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். இது பிழையான தகவலாகும்.
கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா இலங்கை பொதுவுடமைக் கட்சியைச் (கம்யுனிஸ்ட் கட்சி) சேர்ந்தவரல்லர். அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்பதே சரியாகும். டாக்டர் எஸ். ஏ. விக்ரமசிங்கா, பீற்றர் கெனமன் போன்றோரே பாராளுமன்றப் பொதுவுடமைக் (கம்யுனிஸ்ட் கட்சி) கட்சித் தலைவர்களாவர்.

-
வி. ரி. இளங்கோவன். vtelangovan@yahoo.fr


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்