இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2010  இதழ் 132  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நூல் விமர்சனம்!
விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் - தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள்

- அருண்மொழிவர்மன் (கனடா) -

விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் - தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள் விதி என்றால் விதிக்கப்பட்டது என்று எமக்கும் பத்தாம் ஆண்டில் படிப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதே பத்தாம் ஆண்டில் தான் 'நாடென்ப நாடா வளத்த, நாடல்ல நாடவளம் தரும் நாடு' என்பதும் படிப்பிக்கப் பட்டிருந்தது. ஆனால் தேவகாந்தன் தனது விதி நாவலில், நாடியும் வளம் தந்து விடாத நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்களின் கதையைச் சொல்லுவதன் மூலம் புதிய விதி பற்றிச் சொல்லுகின்றார்.

"ஒரு காலத்தில கடவுளால படைக்கப்பட்டது விதி என்ற ஒரு கருத்து இருந்தது. பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் செய்கிற செயல்களின் மூலம் தங்கள் விதியைத் தீர்மாணிக்கிறதான ஒரு கருத்து இருந்தது ....... ஆனால் புதிய விதியோ இந்தச் சமுதாயத்தின் நிலைமை, அமைப்பு, அதன் தத்துவம், நடைமுறை, மரபு போன்றவற்றின் மூலமாக வருவது" (பக்கம் 300)

என்று இந்த நாவலில் வருகின்றது. இதில் கடவுள் அமைத்த விதி தவிர மற்றைய இரண்டு விதிகள் பற்றிய கருத்துக்கள் இன்னும் செறிவாகவும் ஆழமாகவும் பார்க்கப்படும் போது சார்த்தர் - ஃபூக்கோ சொன்ன கருத்துக்களை வந்தடைகின்றன. இதுதான் தேவகாந்தனின் உத்தி. தனது வாசிப்பை, தனது எழுத்துத் திறனுடன் கலந்து தரும்போது நாவலில் அது புனைவொன்றின் ஊடாக நிறைய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றது. இந்த நாவலை கதிர்வேல், தெய்வானையின் கதையாக சொல்லிச் செல்லும்போதே அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைகளின், வாழ்வு பற்றிய ஆசைகளின், அவர்கள் வாழ்ந்த சமூகத்தின், அவர்கள் வாழ்ந்த காலத்தின் வீழ்ச்சியை எந்தத் திணித்தலும் இல்லாமல், போதிக்கும் தொணியும் இல்லாமல் சொல்லிச் செல்கின்றார். அதனால், இது எம்மில் பலருக்கு அதிகம் தெரிந்திராத காந்தீயம் குடியிருப்பு பற்றியும், காந்தீயத்தில் இருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் வாழ்க்கை பற்றியும் நல்லதோர் பதிவாகவும் ஆகிவிடுகின்றது. எனக்கு தெரிந்தவரையில் தமிழ் இலக்கியப் பரப்பில் காந்தீயக் குடியிருப்புகள் பற்றிய ஒரே பதிவும் இதுவே.

ஈழத்தில் இனமுரண்பாடுகள் வெடித்தபோது எல்லாத் தரப்பினராலும் பாதிக்கப்பட்ட, தத்தம் தேவைகளுக்காக மாத்திரமே அரசியல் ரீதியில் உபயோகிக்கப்பட்ட, எல்லாத் தரப்பினராலும் உரிமைகள் நிராகரிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களான மலையகமக்கள் இனப்பிரச்சனையினாலும் வேலை நிமித்தமும் மலையகத்தை விட்டு வெளியேறி "காந்தீயம்" என்ற பெயரில் அரசு சாரா நிறுவனம் ஒன்றால் அமைக்கப்பட்ட குடியேற்றம் ஒன்றில் வசித்துவந்தனர். இது வவுனியாவை அண்டிய பிரதேசத்தில் அமைந்திருக்கவேண்டும். இந்த நாவலின் பதிப்புரையில் சொல்லப்படுவது போலவே இந்தக் குடியேற்றம் அழிக்கப்பட்டதற்கு அரசியல் ரீதியில் வலுவான காரணங்கள் இருந்திருந்தாலும் அவை இன்றுவரை பேசப்படவில்லை. மலையகத்தில் இருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு இந்த காந்தீயக் குடியேற்றத்தில் வசித்துவந்தவர்கள் மெல்ல மெல்ல போரினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் அல்லது எதிர்கொள்ளும் ஒரு உபாயமாக மெல்ல மெல்ல இந்தியாவை நோக்கிப் போகின்றனர். இந்த சூழலை வைத்துப் பின்னப்பட்ட இந்த நாவல் போரினதும் போராட்டத்தினதும் பல்வேறு கூறுகளை தொட்டு அலசுகின்றது. நாவலை படிப்பவர்களுக்கு வரக்கூடிய வாசிப்பனுபவத்தை விமர்சனம் என்ற பெயரில் கூறு செய்யாமல், என் வாசிப்பில் நான் அவதானித்தவற்றைப் பற்றிய கருத்துப் பகிர்தல்களின் தொகுப்பாகவே தொடரலாம் என்று நினைக்கின்றேன்.

கொள்கைக்காக வாழ்தல் என்பது பற்றிய கேள்விகளும் வாதங்களும் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எடுத்த கொள்கை ஒன்றை எல்லாக் காலத்திலும் பின்பற்றுவது எவ்வளவு கடினமோ அது போலவே வாழ்வுடன் ஆடிய பகடையாட்டத்தில் தோற்றுப்போய் கொள்கைகளுடன் சமரசம் செய்யும் ஒருவன் அதன் பின்னர் தான் முன்னர் பழகிய சமுதாயத்தை எதிர்கொள்வதில் உணரும் அவமானமும் எதிர்கொள்ளக் கடினமானதே, நாட்டை விட்டு வெளியேறி இந்தியா செல்பவர்களை எல்லாம் ஏளனம் செய்ய்ம் கதிர்வேலின் பின்னால் பதுளை - வன்னி - இந்தியா என்று பழிப்புக்காட்டியபடியே துரத்தி வருகின்றது காலம். தன் மனைவியிடமே தயக்கத்துடன் தான் இந்தியா செல்வதாக தான் எடுத்த முடிவை கதிர்வேலால் சொல்ல முடிகின்றது. கதிர்வேலிற்கும், தெய்வானைக்கும் நடக்கும் இந்த உரையாடலை இன்றும் கூட நாட்டை விட்டு புறப்பட முடிவெடுத்தவர்கள் எல்லாருமே பிறந்த நாட்டை விட்டு வெளியேற விரும்பாத தமக்கு நெருக்கமானவர்களுடன் நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றனர்.

"ம்ம் நல்லாத்தான் பேசிற, நான் கொள்கை பேசினப்போ நீ நடைமுறையைப் பற்றி பேசின, நான் நடைமுறையைப் பற்றி பேசிறப்போ நீ கொள்கை பற்றிப் பேசிற" (பக்கம் 86) என்று சொல்லும் போது தம் கொள்கைகளை தாமே துறக்கின்றபோது அது பற்றிக் கேள்வி கேட்டால் இப்பத்திய நடைமுறை இதுவென்றும், காலத்தின் கட்டாயம் இதுவென்றும் சொல்லும் அதிகார வர்க்கத்தின் குரலே மீண்டும் கேட்கின்றது. கதிர்வேல் தெய்வானையிடம் இந்தியா செல்வது பற்றிய பேச்சினை எடுக்கின்றபோதே ஒரு தகவலாகத்தான் அவளுக்கு அதனை அறியத்தருகின்றானே அன்றி அது பற்றி அவளிடம் கலந்து கதைத்து முடிவெடுப்போம் என்று அவன் துளிகூட எண்ணவில்லை. இந்தப் பேச்சின் முடிவில் தெய்வானையை சமாதானப் படுத்த "நிரந்தரமாகவே விட்டிட்டுப் போகப் போறமா ? காலம் சீர்படுகிற வரைக்கும்தானே?" என்று கதிர்வேல் சமாளித்தது போல எம்மில் பலரும் ஏதோ ஒரு காலப்பகுதியில் சமாளித்துத்தானே இருக்கின்றோம். பிறிதொரு நாட்டில் குடிஉரிமை பெறவே மாட்டோம் என்ற கொள்கையத் தூக்கி அப்படியே லேக் ஒன்றாரியோவில் வீசிவிட்டு கனேடிய தேர்தல்களில் வாக்களிப்பது பற்றி கவலைப்படவும் கனேடிய அரசியலில் ஒரு கனேடியராக அக்கறை கொள்ளவும் காலம் தானே எம்மைப் படிப்படியாக நகர்த்தி வந்திருக்கின்றது. தான் எடுத்த இந்த முடிவால் கதிர்வேலுவிற்கு தன் மீதே ஒரு தப்பபிப்பிராயம் இருக்கின்றது. அந்த தப்பபிப்பிராயமே அவனை தான் நாடு விட்டு செல்வதாக எடுத்த முடிவினை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விடாமல் தடுக்கின்றது. நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு அவ்வளவு எதிர்ப்பு காட்டியவன் அவன். ஆனால் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஒரு நாட்டில் இருந்து வெளியேறுபவர்களைப் பார்த்து அவர்களை கொள்கையின் பேரால் மறுபடி தூக்கிலேற்றுவதன் பின்னால் எவ்வளவுக்கு நியாயம் இருக்கின்றது என்பதையும் பார்க்கவேண்டியே இருக்கின்றது.

இந்தியாவில் கதிர்வேல் சந்திக்கின்ற திருநீலன் என்பவர் ஒரு உண்மையான பாத்திரமாக இருப்பின் அவர் எழுதிய கட்டுரைகளை படித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசையை கதிர்வேலிற்கும் திருநீலனிற்கும் இடையில் நடக்கின்ற உரையாடல் ஏற்படுத்தி இருக்கின்றது. தனது தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி, கடத்தல் தொழில்களில் ஈடுபட்டு, படோபமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இருக்கின்ற ஒரு சூழலில் கதிர்வேல் சொல்கிறான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சும், ஜனநாயக் தொழிலாளர் காங்கிரஸும் தோட்டத் தொழிலாளிகள் நலனுக்காக உழைக்கவில்லை என்பதாலேயே தொழிற்சங்க நடவடிகைகளில் இருந்து தான் ஒதுங்கியதாயும், அதன் பின்னர் வடக்கில் இருந்த இனவாத அரசியலே தான் வடக்கை விட்டு வெளியேற காரணம் என்றும் கூறுகிறான். இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் , ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸும் தோட்ட தொழிலாளிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என்பதையும் வடக்கில் அதுவும் நாவலில் பிறிதொரு அத்தியாயத்தில் சொல்லப்படுவது போல யாழ்ப்பாணத்தவர்கள் இனவாதமும், பிரதேசவாதமும் பார்த்தார்கள் என்றும் இன்றுவரை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் முழுமையாக ஒப்புக் கொள்ளும் அதே நேரம் மார்க்சியமே சர்வரோக நிவாரணி என்பதை இன்றுவரை ஆணித்தரமாக நம்புகின்ற மார்க்ஸியவாதிகள் (அண்மையில் கூட ஒரு மார்க்ஸீயவாதி மார்க்சியமே உலகின் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வென்பது விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்று நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் அதே ரொரன்றோவிலே ஒரு மேடையில் பேசியிருந்தார்), கம்யூனிஸ்டுகள் தமது சர்வரோக நிவாரணத்தை அந்தப் பிரதேசங்களில் பாவிக்காமல் வெளியேறுவது மருத்துவர்கள், இந்த பிரதேசத்தில் நோயாளிகள் அதிகம் இருக்கின்றனர் எனவே நான் இந்த ஊரில் வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று சொல்லி வெளியேறுவதைப் போல ஆகாதா? என்ற சந்தேகமே எழுகின்றது. ஈழப்போராட்டத்தில் சென்ற ஆண்டில் ஏற்பட்ட பேரழிவுகளின் பின்னர் மார்க்ஸியம், கம்யூனிசம் பற்றிய கதையாடல்களும் பிரச்சாரங்களும் பலமடங்கு அதிகரித்துள்ளன. மார்க்ஸியமும் தனக்கான சந்தையைப் பார்த்து கடை விரிக்கின்ற முதலாளித்துவ கூறிற்கு பலியாகிவிட்டதோ என்று கவலையாக உள்ளது. அண்மையில் ஈழத்தில் இருக்கும் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார் "இப்ப இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் எல்லாரும் வீட்டில் இருந்து ஆளுக்கொரு விறகுக் கட்டையை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக போராடவேண்டும் என்று". நான் மார்க்ஸியத்தை முற்று முழுதாக நிராகரித்துப் பேசவில்லை, ஆனால் மார்க்ஸியத்தை ஒரு மதம் போல ஆக்கிக்கொண்டு, அதில் எந்த மாற்றத்தையும் சேர்த்துக்கொள்ளவிடாமலும், தாம் வாழும் காலத்துக்கும், தாம் வாழும் இடத்திற்கும் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில், நிலப்பிரபுத்துவ முறை கொடிகட்டிப்பறந்த காலத்தில் எழுதப்பட்ட மார்க்ஸியக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் பொருந்தும் என்றும் கிஞ்சித்தும் அக்கறைப்படாமல் பேசுபவர்களை நினைக்க பயமாக இருக்கின்றது. இந்த நாவலில் புரட்சி, பொதுவுடமை, மக்கள் போராட்டம் என்றெல்லாம் பேசுவோரைப் பார்த்து திருநீலன் சொல்லும் கருத்துக்கள் முக்கியமானவை. எடுத்ததெற்கெல்லாம் இரஸ்யப் புரட்சி, என்றும் பிரெஞ்சுப் புரட்சி என்று கதைக்கத் தொடங்குபவர்களில் பலர் புரட்சிகள் பற்றிய அடிப்படையான புரிதலே இல்லாமல் புரட்சி என்பது ஏதோ ஒரு கணத்தில் தோன்றுவது எனபது போன்ற பாவனையுடனேயே பேசத் தலைப்படுகின்றனர். விதி நாவலில் திருநீலன் இந்த வழக்கத்தை கிண்டல் செய்வதுடன் ஈழத்தில் அப்போது இயங்கிக்கொண்டிருந்த இயக்கங்களின் போதாமை பற்றியும் மெள்ள விமர்சிக்கிறார்.

"புரட்சியா? பொதுவுடமையா? மக்கள் போராட்டமா? என்ன தம்பி சொல்கிறீர்? பல இயக்கங்களுக்கு அந்தச் சொல்லுகளைத்தவிர வேறொன்றும் தெரியாதே! ...................... தம்பி புரட்சி எண்டது சும்மா திடீரென்று ஏற்படுற விஷயமில்லை. இப்ப பாரும், அடுப்புப் புகட்டிஅல் ஒரு மரத்துண்டு இருக்கிறதாய் வைச்சுக் கொள்ளுவம். அந்த மரத்துண்டு என்ன மாதிரி வெப்பத்தில வெந்து வெந்து, தன் முழு ஈரப்பதனையும் இழந்து, தண்ட மரமெண்ட உடல் தாதுவையும் இழந்து கருகி, எண்டைக்கோ ஒரு நாள் பொறி பட்டு பக்கென்று நெருப்புப் பிடிச்சு எரியுமோ, அது மாதிரியானதுதான் மக்கள் போராட்டம் - புரட்சி என்பதும். வேதனைப்பட்டு வேதனைப்பட்டு, இனி மேல் பொறுக்க ஏலாதெண்ட நிலைமையில் ஏற்படுகிற கொந்தளிப்பு மட்டும்தான் அப்படியொரு புரட்சியாய் இருக்க முடியும். அப்பப்ப ஏற்படுகிற அடிதடி, வெட்டுக்குத்து, மானபங்கம் எல்லாம் புரட்சியை ஏற்படுத்தாது. அதுக்காக போன ஜூலையுக் நடந்த கொடுமையை நான் குறைவா மதிப்பிடேல்ல. எண்டாலும் புரட்சிக்கு - மக்கள் போராட்டத்துக்கு - அது போதாது. காலகாலமான அநீதி, கொடுமை வேணும். அந்த உத்தரிப்பில மக்கள் எல்லாரும் இனமத மொழி பேதம் கடந்து அமைப்பு ரீதியாய் ஒண்டுபடவேண்டும். அதுக்கு பிறகுதான் புரட்சி ஏற்பட முடியும், வெற்றி பெற முடியும்"

அதே நேரம், எல்லா இன மத மொழி பேதம் கடந்து மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்றூ சொல்லும் போது உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்தின் சாயல் கேட்கவே செய்கின்றது. ஈழத்தின் என்றைய நிலையை வைத்துப் பார்க்கின்ற எமது தலைமுறையினருக்கு இது போன்ற நம்பிக்கைகள் வருவதற்கான சாத்தியங்கள் பூஜ்ஜியத்துக்கு மிக அருகாகவே இருக்கின்றன.

கற்பு என்ற பெயரில் மிகப்படுத்தபட்ட ஒரு சிந்தனையை இன்னமும், இத்தனைகால போராட்ட அனுபவங்களின் பின்னரும் சுமந்து கொண்டிருப்பது தமிழ் சமூகத்தின் அவலங்களில் ஒன்று. பாலியல் பலாத்காரம் ஒன்றுக்கு உட்படுத்தப்பட்ட தெய்வானையை, தன் பொறுப்பில்லாத்தனமும், கையாலாகாத்தனமும் ஒன்று கூடிய நேரம் ஒன்றில் கதிர்வேல், அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி கேலி செய்கிறான். அண்மையில் வெளியாகிய அங்காடித்தெரு திரைப்படத்தில் வந்த வசனம் போலவே தெய்வானை அப்போதே இறந்துவிடுகிறாள், அதன் பின்னர் அவள் உடல் மட்டுமே உயிர்வாழுகின்றது. ஆனால் நாவலில் கதிர்வேல் இந்தச் சம்பவமும், அதனால் படிந்த கடக்க முடியாத நினைவுகளுமே தான் தெய்வானை கருவுற்றிருந்தபோது பொறுப்பில்லாமல் திரிந்ததற்கும், அவள் குழந்தை இறந்து பிறந்தபோது மகிழ்ந்ததற்கும், இந்தியா வந்து சேர்ந்ததற்கும், அதிகமாக குடிக்க தொடங்கியதற்கும் காரணம் என்று நியாயப்படுத்துகிறான். நாவலில் வரும் பாத்திரம் செய்கின்ற வாதம் இதுவென்றாலும், இது போன்ற நாயக தியாகங்களை அதிகம் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த எம்மில் ஒரு சிலர் அப்பப்பா என்ன தியாகம் என்று உச்சுக் கட்டவும் கூடும். தான் எடுக்கும் முடிவுகளிற்கும், தவறுகளிற்கும் பொறுப்பேற்காத அயோக்கியத்தனத்தையே இது வெளிப்படுத்திகின்றது. துரதிஸ்டவசமாக இந்தக் கதிர்வேல் மாத்திரம் இல்லாமல் எம் தலைமுறையில் நிறையப்பேரும் இது போன்ற நியாயப்படுத்தலின் வழியேதான் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

80களில் கெட்டாலும் ஆண் மக்கள் என்று பாலகுமாரன் ஒரு சிறுகதை எழுதினார். அதில், திருமணத்திற்கு புறம்பாக தன்னிலும் வயது மிகக் குறைவான ஒரு இளைஞனுடன் ஒரு பெண் உறவு வைத்திருக்கின்றாள். இது அந்தப் பெண்ணின் கணவனுக்குத் தெரிந்துவிடுகிறது. முதலில் கோபம் கொள்ளும் கணவன் அவளை அடித்து விடுகின்றான். பின்னர் அவளை மன்னித்துவிடுகிறான். ஆனால் அவளோ தன் வயற்றில் வளாரும் கருவை கலைக்கு முயன்று அதன் தொடர்ச்சியாக இறந்தும்விடுகிறாள். கருக்கலைக்க அவள் சொல்லும் காரணம் "அந்தப் பையன் கறுப்பு" என்பது. அவளின் கணவன் அந்தப் பையனின் எதிர்காலம் கருதி அவன் இந்த விடயத்தை மறைத்துவிடுகின்றான். இறுதியில் அவன் மனைவியை நோக்கி இப்படி சொல்லுவான்,

"ஒரு வேளை நல்ல ஆண் மனசுதான் த்ன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் வளருமோ, வெட்டு விழுந்த பின்னும் துளிர்க்குமோ, சகதியில் விழுந்து, புரன்டு க்ஷணத்தில் தன்னைச் சரியாக்கிக் கொள்ளுமோ, சியாமளி, அடுத்த ஜென்மத்தில் ஆணாய்ப் பிற, ஆண் பிள்ளை குணத்தோடு பிற"

இந்த நாவலில் வரும் கதிர்வேலும் இன்னுமொரு கெட்டாலும் ஆண் மக்கள் சுவாமிநாதனின் வார்ப்பாகவே தெரிகின்றான். (இந்த நாவல் வெளிவந்த தொகுப்பிற்கு முன்னுரை எழுதிய கமலஹாசன் இதை நேர்மையாகவே சுட்டிக் காட்டி, "மனைவி தவறு செய்தாள் என்பதற்காக புருஷனை பாராட்டுவது உத்தமமாகாது. பெண்ணுக்கு உண்டான நடைமுறை நிர்ப்பந்தங்களைப் புறக்கணித்து விட்டு ஆணைத் தட்டிக்கொடுப்பது சரியில்லை. பாலகுமாரன் ஆணாக இருப்பதால் இது நேர்ந்து விட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்" என்று எழுதி இருந்தார். அது போலவே ஜெயகாந்தனும் இது பற்றி கடுமையான கருத்துக்களை தெரிவித்ததாக பாலகுமாரன் அவர் எழுதிய முன்கதைச்சுருக்கத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்.)

சென்ற ஆண்டு வெளியான காலம் இதழில் இளங்கோ எழுதிய ஹேமாக்கா என்றொரு கதை வெளியாகி இருந்தது. பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் திருமணமான பின்னர், அவளது கணவன் "இந்திய‌ன் ஆமி உம்ம‌ளை கெடுத்த‌து ப‌ற்றி இதுவ‌ரை ஏன் என்ன‌ட்டை சொல்லேலை என்டு ம‌ட்டுந்தான் கேட்ட‌னான் வேறொன்றுமே கேட்க‌வில்லை. ஒன்டுமே பேசாம‌ல் இருந்த‌வா இப்ப‌டிச் செய்வா என்டு நான் க‌ன‌விலையும் நினைத்துப் பார்க்க‌வில‌லை" இந்த நாவலில் கதிர்வேல் தெய்வானையைப் பார்த்து "அன்னிக்கு அவங்கள் செய்ததெல்லாத்தையும் அனுபவிச்சியா" என்கிறான். எல்லாப் போராட்டங்களிலும் ஆணுக்கு ஏணியையும் பெண்ணுக்கு பாம்பையும் மட்டுமே சமுதாயம் பரிசளித்திருக்கின்றது.

தேவகாந்தனின் கதாகாலம் பற்றி முன்னர் ஒரு பதிவெழுதி இருந்தேன். அப்போது நிறையப் பேர் அந்தப் புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்த போதும் தமக்கு புத்தகம் கிடைக்கவில்லை என்றார்கள். இந்த விதி நாவலும் கூட நீண்ட காலமாக விற்பனைக்கில்லாமல் இருந்து இப்போதுதான் புதிய பதிப்பு வெளிவந்திருக்கிறது. இது போல ஈழத்து எழுத்தாளார்களின் முக்கிய புத்தக்ங்கள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு, பரவலாக வாசகர்களை சென்றடையும் ஒரு சூழல் உருவாகவேண்டும். இடையில் ஏற்பட்ட சிறிய தேக்கத்தில் இருந்து மீண்டு, புதிய படைப்புகளையும் பதிப்புகளையும் வெளியிடும் வடலி, புதிதாக செயற்ப்ட ஆரம்பித்திருக்கும் இலக்கு (இவர்கள் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட உள்ளதாக அறிகிறேன்), தொடர்ந்து இயங்கிவரும் காலம் வெளியீடுகள் மற்றும் ஏனைய ஈழத்தமிழரின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்கள் இந்தப் பணியை செய்யும் என்று நம்புகின்றேன்.

suthan258@gmail.com
November 17, 2010


 
aibanner

 ©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்