இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2009 இதழ் 113  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

முல்லை அமுதனின் 'இலக்கியப் பூக்கள்' ஓர் அறிமுகம்!

- பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
-

முல்லை அமுதனின் 'இலக்கியப் பூக்கள்' ஓர் அறிமுகம்!முல்லை அமுதன்இங்கிலாந்து தேசத்தில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்தி ஈழத்துத் தமிழ் அறிஞர்களினதும், எழுத்தாளர்களினதும் படைப்புக்களை அனைத்துலக ரீதியில் அறிமுகப் படுத்திவரும் பிரபல எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்கள் தொகுத்தளித்திருக்கும் இலக்கியப் பூக்கள் என்னும் நூல் சென்னை காந்தளகத்தின் தயாரிப்பில், “காற்றுவெளி” வெளியீட்டகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கின்றது. ஈழத்தின் சிறந்த தமிழ் அறிஞர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பெருமைக்குரிய பத்திரிகையாளர்கள், இணையற்ற இலக்கிய வாதிகள், வியக்க வைத்த சாதனையாளர்கள், என்றவாறு மகத்துவம் மிக்க நாற்பத்து நான்கு மனிதர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பெரும்பாலானவை அவர்களது வரலாறுகள் என்றே சொல்லலாம். இந்த நாற்பத்து நான்கு பேரையும் பற்றி முப்பத்தியிரண்டு எழத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். வரலாற்றில் வாழ்பவர்கள் மட்டுமன்றி அவர்களைப்பற்றி எழுதியுள்ள முப்பத்தியிரண்டு பேரில் பெரும்பாலானவர்களும் பிரபலமான எழுத்தாளர்களே.

இந்த நூலைப் படிக்கும் போது, நயம்பட எழுதப்பட்ட நல்ல சிறுகதைகளை வாசிக்கும் உணர்வு உண்டாகின்றது. சுவையான ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கினால் எப்படி முழுவதையும் படித்து முடிக்காமல் வைப்பதற்கு மனம் வருவதில்லையோ அதைப்போல, இந்த நூலும் உள்ளது. சிலரின் வாழ்வின் நிகழ்வுகளை அறியும்போது, எவ்வளவு மகத்தான மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படுகின்றது. மற்றும் சில தகவல்கள் திகைப்பைத் தருகின்றன. ஓவ்வொரு கட்டுரையும் நாவலொன்றின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் போன்று உள்ளது என்று சொல்லலாம். அல்லது ஒரு சிறுகதைத் தொகுதியில் அடங்கியுள்ள பல சிறுகதைகளைப்போல என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லாக கட்டுரைகளும் இதயத்தைத் தொடுகின்றன. வாழ்க்கைக் குறிப்புக்களைத் தாங்கிய கட்டுரைத் தொகுதியொன்று இவ்வாறு மனதைக் கவர்வதென்பது அவ்வளவு சாதாரணமான விடயமல்ல.

நூலின் கடைசி இரண்டு பக்கங்களில் அந்த நாற்பத்து நான்கு பெரியார்களதும் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த ஆண்டுகள் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளன. மிகவும் பயனுள்ள தகவல். அந்த அட்டவணையை நோக்கினால் ஒரே பார்வையிலேயே காலத்தால் முந்தியவர்கள் யாவர், பிந்தியவர்கள் யாவர், சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் யாவர் என்பன போன்ற தகவல்களை அறியமுடிகின்றது. அத்துடன் அளப்பரிய ஆற்றலுடன் விளங்கி, மிகப்பெரிய சாதனையாளர்களாகத் திகழ்ந்த சிலர் மிகக் குறைந்த காலமே இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறார்கள் என்னும் வேதனை தரக்கூடிய விபரத்தையும் கணக்கிட்டுக் காணமுடிகின்றது. நாற்பத்து நான்கு சாதனையாளர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒருபகுதியினர் ஐம்பத்து ஆறு வருடங்களுக்கும் குறைவான காலமே வாழ்ந்துள்ளனர். அவர்களில், மு.தளையசிங்கம், அங்கையன் கயிலாசநாதன், சுபா~; சந்திரபோஸ், செ.கதிர்காமநாதன் ஆகிய நால்வரும் நாற்பது வயதிற்கும் குறைவான தமது ஆயுட்காலத்தில் தமது சாதனைகளால் ஈழத் தமிழினத்தின் இலக்கிய வரலாற்றில் காலத்தால் அழிக்கமுடியாத பக்கங்களில் இடம்பிடித்திருப்பதை எண்ணிப் பார்க்கும் போது மேலும் பல ஆண்டுகள் அவர்களுக்கு வாழக்கிடைத்திருந்தால், ஈழத்தமிழ் இலக்கியம் இன்னும் பயன்பெற்றிருக்குமே என்ற எண்ணத்தால் நம் இதயம் வலிக்கிறது. அதிலும், ஒருகாலத்தில் வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டு, ஈழத்தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் பெரிதும் சிலாக்கியப்படுத்தப்பட்ட, “நான் சாகமாட்டேன்” என்ற மொழிபெயர்ப்பு நாவலைத் தமிழ் உலகுக்கு அளித்த செ. கதிர்காமநாதன் அவர்கள், முப்பது ஆண்டுகள் வரையே இவ்வுலகில் வாழ்ந்தமையை அறியும்போது சில நிமிடங்கள் நாம் செயலற்றுப்
போய்விடுகின்றோம்.

பிறந்த ஆண்டு அடிப்படையில் காலத்தால் முந்தியவர்களில் இருந்து கட்டுரைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் பிறந்த ஆண்டுக் கணக்கை அறிந்து கொள்ளமுடியாத நிலையில், சங்க காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ஈழத்துப் பூதந்தேவனார் அவர்களைப் பற்றிய கட்டுரை முதலாவதாக இடம்பெற்றுள்ளது. 1848 ஆம் ஆண்டு பிறந்த உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அவர்களைப்;பற்றிய கட்டுரை இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது. 1975 ஆம் அண்டு பிறந்த சுபாஸ் சந்திரபோஸ் பற்றி, 44 ஆவதாகக் கடைசிக் கட்டுரையாக அமைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டில் பிறந்து, எழுத்தாளராக மலர்ந்து, கல்விமானாகச் சிறந்து, இலங்கை நிருவாக சேவையிலே உயர்ந்து, 1972 ஆம் ஆண்டில் இவ்வுலக வாழ்வைத் துறந்து, முப்பது வயது வரையே வாழ்ந்த செ.கதிர்காமநாதன் அவர்களைப் பற்றிய கட்டுரை முப்பதாவது கட்டுரையாக அமைந்திருப்பது வியப்பைத் தருகின்றது.

“ஈழத்து முன்னோடித் தமிழ்ப் பெரும் புலவர், ஈழத்துப் பூதன்தேவனார்” என்ற கட்டுரையை மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள் எழுதியுள்ளார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ் அறிஞரான இந்த ஈழத்துப் பூதன்தேவனாருடைய பாடல்கள் சங்க இலக்கியங்களிலே இடம்பெற்றுள்ளன என்ற தகவல் இந்தக் கட்டுரையிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களான நற்றிணையில் இரண்டு பாடல்கள், குறுந்தொகையில் நான்கு பாடல்கள், அகநானூறில் மூன்று பாடல்கள் என்று ஆகமொத்தம் ஒன்பது பாடல்கள் இவரது புலமைக்குச் சான்றாக உள்ளன. பூதன்தேவனார், ஈழத்துப் பூதன்தேவனார், மதுரைஈழத்துப் பூதன்தேவனார் என்று மூன்று பெயர்கள் வௌ;வேறு இடங்களில் அறிஞர்களால் குறிப்பிடப்பட்டு வந்தாலும் இந்த மூன்று பெயர்களுக்கும் உரியவர் ஒருவரே என்பதையும், அவர் ஈழத்தில் தமிழ் அறிஞராக விளங்கிய பூதன்தேவனாரே என்பதையும், அவர் தமிழகம் சென்று தமிழகப் புலவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும், மதுரைத் தமிழ்ச்சங்க விழாவிலே பாண்டிய மன்னன் பசும்பூட் பாண்டியனால் “மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்” என்று வரவேற்று அழைக்கப்பட்டார் என்பதையும் கட்டுரை ஆசிரியர் தர்க்க முறையிலே நிறுவிப் பதிவு செய்துள்ளார்.

மாபெரும் தமிழ் அறிஞராக விளங்கிய, உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை அவர்களதும், அவரின் பிள்ளைகளான பண்டிதர் ம.வே.திருஞான சம்பந்தப்பிள்ளை, குருகவி ம.வே.மகாலிங்கசிவம் ஆகியோரதும் வரலாறுகளை வாசிக்கும்போது, அவர்களது பரம்பரையில் புலவர் ம.பார்வதிநாதசிவம், அவரின் மகன் கவிஞர் ம.பா.மகாலிங்கசிவம் என்றவாறு உரையாசிரியரின் நான்காவது தலைமுறையும் தமிழ் அறிஞர்களாகத் திகழ்ந்து தமிழ்ப்பணி புரிந்து வருகின்ற பெருமை மிக்க தகவலையும் காணமுடிகின்றது. தமிழ் மக்களால் பெரும்பாலும் அறியப்பட்டவர்களும், தமிழ் எழுத்தாளர்களாலும், பேச்சாளர்களாலும் அடிக்கடி நினைவுபடுத்தப்படுபவர்களுமான சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேரறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார், இரசிகமணி கனக செந்திநாதன், பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா முதலியோரைப்பற்றி மட்டுமன்றி, இன்றைய தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் நன்கு அறிந்திராத தமிழ் அறிஞர்கள் சிலரைப்பற்றியும் கட்டுரைகள் இந்த நூலிலே இடம்பெற்றுள்ளன. அந்தக் கட்டுரைகளின் மூலம் அந்தத் தமிழ் அறிஞர்களின் புலமைச் சிறப்புக்களை அறியமுடிகின்றது. இவர்களைப் போல இன்னும் எத்தனையோ தமிழ் அறிஞர்கள் ஈழத்திலே வாழ்ந்திருக்கின்றார்கள், எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கிறார்கள், அளவற்ற தமிழ்ப்பணிகளைப் புரிந்திருக்கின்றார்கள். இதுபோன்ற நூல்களின் மூலமே அவர்களைப்பற்றியெல்லாம் ஆவணப்படுத்த முடியும், உலகுக்கு அறியத்தர முடியும்.

அவ்வாறே, புகழ்பெற்ற எழத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாக, கவிஞர்களாக விளங்கி இன்றும் மக்களிடையே மிகவும் பிரபல்யம் மிக்கவர்களாகத் திகழும் அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, தில்லைச்சிவன், வரதர், நந்தி, சொக்கன், யாழ்வாணன், ஏ.ஜே.கனகரட்ணா, அப்பச்சி மகாலிங்கம், மு.தளையசிங்கம். பிரமிள், செ.கதிர்காமநாதன், அங்கையன் கைலாசநாதன், செ.யோகநாதன், செம்பியன் செல்வன், சிலோன் விஜேந்திரன், நாவண்ணன், ராஜசிறீகாந்தன், சி.புஸ்பராஜா, முல்லையூரான், சுபாஸ் சந்திரபோஸ் என்பவர்களைப்பற்றிய வரலாறுகளையும், தமது நினைவுகளையும் எழுத்தாளர்கள் இந்த நூலிலே கட்டுரைகளாகத் தந்திருக்கின்றார்கள். மிகப்பெரிய சட்ட அறிஞராகத் திகழ்ந்து, 1978 அம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையினுள்ளே பார்வையாளராக நுழைந்து, அமைதியாக அமர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக எழுந்து. மூன்று நிமிடங்கள் ஈழத்தமிழர் பிரச்சினையை அதிரடியாக மொழிந்து உலகத் தலைவர்களையெல்லாம் வியந்து நிற்க வைத்த கிருஸ்ணா வைகுந்தவாசன் அவர்களைப்பற்றிய கட்டுரையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

நவரச நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய இளவாலை விஜயேந்திரன் அவர்கள் ஆசுகவி கல்லடி வேலப்பிள்ளை அவர்களின் பேரன் என்பதாலோ என்னவோ நினைத்தவுடன் கவி இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர். தமிழகத்தில் வாழ்ந்தபோது கலையுலகத் தொடர்பினால் சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்பட்டவர். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றவர். திரைப்பட முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தந்தை சைவசமயத்தவர், தாயார் கிறீஸ்தவர், மனைவி இஸ்லாமியர் என்று மும்மதங்களோடும் தன் வாழ்வை இணைத்துக்கொண்ட சிலோன் விஜயேந்திரன் சிலகாலம் இஸ்லாமிய மதத்தினைத் தழுவி இஸ்லாமியராகவும் வாழ்ந்தவர் என்ற தகவல்களைத் தருகின்றார் அவரைப்பற்றிய கட்டுரையை எழுதியிருக்கும் தமிழறிஞர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள்.

மிகப்பெரிய எழுத்தாளராக விளங்கிய அ.செ.முருகானந்தன் அவர்கள் பற்றி எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை நெஞ்சை உருக்குகின்றது. ஈழத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் அந்த மாபெரும் எழுத்தாளரை உருக்குலைய வைத்த சோகக்கதை, அந்தநிலையிலும் அவரை ஏமாற்றிய இன்னுமோர் எழுத்தாளரின் துரோகச் செயல், இறுதிக்காலத்தில் முதியோர் இல்லமொன்றில் அவர் வாழவேண்டி ஏற்பட்ட அவல நிலை என்று பல்வேறு துன்பங்களினிடையே அந்த இலக்கியவாதியின் வாழ்வு நகர்ந்திருப்பதை அந்தக்கட்டுரையின் மூலம் அறிய முடிகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த மருத்துவர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள், நந்தி என்ற பெயரில் எழத்துலகில் தன்னிகரற்று விளங்கியவர். அவரின் இலக்கிய வரலாற்றை எழுதியிருக்கிறார், ஈழத்துநால்களைப் பதிவுசெய்யும் திட்டத்தினைப் பாரிய அளவில் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் என். செல்வராஜா அவர்கள்.

பதினெட்டுக்கும் மேற்பட்ட புனைபெயர்களிலும். தனது சொந்தப் பெயரிலும் ஏராளமாக எழுதிக் குவித்து, ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்த்த மூதறிஞர் சொக்கன் அவர்களைப்பற்றி, கடந்த வருடம் இலண்டனில் இயற்கை எய்திய அமரர் சிவலிங்கம் சிவபாலன் எழுதியுள்ளார். சொக்கன் அவர்களைப்பற்றிய பல்வேறு அறிஞர்பெருமக்களின் விதப்புரைகளையும், கட்டுரைகளையும் பட்டியல்போட்டுத் தந்துள்ளார் கட்டுரையாளர். சொக்கன் அவர்களைப்பற்றிய அந்தப் பட்டியல் நம்மைச் சொக்கவைக்கிறது.

ஈழத்தமிழ் இலக்கியத்தை, தமிழக இலக்கியவாதிகளையும், இலக்கிய ஆர்வலர்களையும் வியப்போடு நோக்கவைக்கும் அளவுக்கு உயர்ந்த இலக்கியவாதிகளாகத் திகழ்ந்த பலரைப்பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையெல்லாம், இன்றைய புகழ்பூத்த எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். இந்த அறிமுகக் கட்டுரையில் மற்றைய பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களோடு மேலும், மட்டக்களப்பைச் சேர்ந்த இலக்கியமணி அன்புமணி அவர்கள், கனடாவில் வாழும் மாபெருங்கவிஞர் கந்தவனம் அவர்கள், இலக்கியவாதி வ.ந.கிரிதரன் அவர்கள், இலக்கியவாதி என்.கே.மகாலிங்கம் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் கால.சுப்பிரமணியம் அவர்கள், பிரான்சு தேசத்தில் வாழும் பிரபல எழத்தாளர் வண்ணை தெய்வம் அவர்கள், மா.கி. கிறிஸ்ரியன் அவர்கள், டென்மார்க்கில் வசிக்கும் பிரபல கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள், யேர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி.ஜெயா நடேசன் அவர்கள், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் அறிஞர் இ.க. கந்தசுவாமி அவர்கள், இலங்கையிலிருந்து கவிஞர் கருணகரன் அவர்கள், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் இ.நடராசா அவர்கள், நாடகாசிரியர் நவாலியூர் நடேசன் அவர்கள், கோப்பாய் சிவம் அவர்கள், பரம்பரைத் தமிழ் அறிஞர் ம.பா.மகாலிங்கசிவம் அவர்கள், கல்விமான் அனு.வை.நாகராஜன் அவர்கள், தம்பு சிவசுப்பிரமணியம் அவர்கள், காசிநாதர் சிவபாலன் அவர்கள், திருமதி. ஜெயமணி கனகரெத்தினம் அவர்கள், மற்றும் பண்டிதர் வடிவேலு அவர்களின் மகள், திருமதி. இராதாதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள், இலண்டனில் வாழும் எழுத்தாளர்கள் மு.புஸ்பராஜன் அவர்கள், திருமதி. நவஜோதி ஜோகரட்ணம் அவர்கள், மற்றும் இந்தியாவில் வாழும் யாழ்வாணனின் மகன் கண்ணதாசன் அவர்கள் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஈழத்தமிழ் வரலாற்றின் பக்கங்களில் நிலைத்த இடம்பெறத்தக்க விபரங்களைக் கொண்டு விளங்குகின்றன. இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் வெறும் வரலாற்று நிகழ்வுகளை மட்டுமன்றிக் காலத்தின் போக்குக்கேற்ற கருத்துக்களையும் கட்டுரையாளர்கள் ஆங்காங்கே விதைத்துள்ளார்கள். உதாரணமாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

“நாவற்குழி மண் தமிழீழத்திற்கு அளித்த மாபெரும் சொத்து பண்டிதர் சு.வே.” என்ற தலைப்பிலே, இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2007 ஆம் ஆண்டு உயிரிழந்த பண்டிதர் சு.வேலுப்பிள்ளை அவர்களைப் பற்றி இந்த நூலின் தொகுப்பாசிரியரான முல்லை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில்,“தமிழர்களில் சு.வே.போன்ற பல எழுத்தாளர்களையும், புத்திஜீவிகளையும், அறிஞர்களையும் போராட்டத்தினாலும், திட்டமிட்ட மருந்துத் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை, வறுமை, சுகாதாரச் சீர்கேடுகள் என்பவற்றால் காலத்திற்கு முன்பே இழந்துகொண்டிருக்கின்றோம். இருக்கும் காலத்திலும் அவர்களின் வளர்ச்சிகள் ஏதோ ஒரு விதத்தில் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஏனையோர்களையும் சிந்திக்க இடமளிப்பதில்லை. தமிழர்களுக்கு இந்நிலையிலிருந்து எப்போது விடிவு கிடைக்குமோ?” என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார். கிருஸ்ணா வைகுந்தவாசன் பற்றிய கட்டுரையில், கட்டுரையாளரான அவரது மனைவி மகேஸ்வரி வைகுந்தவாசனின் கருத்து இப்படியிருக்கின்றது:

“உலகநாடுகளின் தலைவர்களின் செவிகளில் இது (அவரது பேச்சு) முறையாக அன்று ஏறியிருந்தால், 30 ஆண்டுகளின் பின்னர், இன்று இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாகவும். மனித உரிமை மீறல் தொடர்பாகவும், தமது கருத்தை இன்று நேர்மையாக முன்வைக்க முனையும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளை, பயங்கரவாதிகள் எனவும், தமிழர்களிடம் கையூட்டுப் பெறுபவர்கள் எனவும் கேவலமாகவும். துணிச்சலாகவும் குற்றச் சாட்டுக்களை இலங்கை அரசத் தலைவர்கள் விடுக்கும் நிலைமை ஏற்பட்டிராது” “என் இனமே என் சனமே..என்னை உனக்குத் தெரிகிறதா” என்பன போன்ற எண்ணற்ற பாடல்களை எழுதிய கவிஞர் நாவண்ணன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதியுள்ள மட்டுவில் ஞானக்குமாரன் ஓரிடத்தில், “ குண்டுகளை நிரப்பிக்கொண்டு களத்திலே நிற்கும் போராளிகளுக்கு அருகிலே நின்று தனது பேனாவின் தண்டுக்கு மை நிரப்பிக்கொள்ளும் ஒரு படைப்பாளி” என்று அருமையாகக் குறிப்பிடுகின்றார்.

இந்தக்கட்டுரைகளை எழுதியுள்ள முப்பத்தியிரண்டு பேரைப்பற்றிய குறிப்புக்களும் நூலின் இறுதியில் அவர்களது நிழற் படங்களுடன் தரப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புக்களை வாசித்தபோதுதான் இரத்தினச்சுருக்கம் என்றால் என்ன என்பதை உணரமுடிந்தது. அவ்வளவு சுருக்கமாக, அற்புதமாக ஒவ்வொருவரைப் பற்றியும் குறிப்புக்களைத் தந்திருக்கிறார் தொகுப்பாசிரியர் முல்லை அமுதன் அவர்கள். எவ்வித காய்தல். உவத்தலும் இன்றி கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தவித அரசியல். சமூக. சமய வேறுபாடுகளும் இன்றி அறிஞர்கள், சாதனையாளர்கள். எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வகையான நூல் ஒன்று வெளிவந்த பின்னர் அவரைப்பற்றி எழுதவில்லை. இவரைப்பற்றிய கட்டுரை நூலில் இடம் பெறவில்லை என்றெல்லாம் எழக்கூடிய எதிர்ப் புகைச்சல்களுக்கு இடம் ஏற்படாதவகையில் தொகுப்பாசிரியர் முல்லை அமுதன் அவர்கள் தனது, “என்னுரை” என்னும் சின்னதோர் ஒருபக்கக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“எதிர்பார்த்த கட்டுரைகள் பாகுபாடின்றிக் கிடைக்க வாசல் திறந்திருந்தோம்........எனினும் பாகம் இரண்டில் அவர்களின் கட்டுரைகள் வரும் என்கிற நம்பிக்கையுடன் பாகம் ஒன்று வெளிவருகிறது.” தொகுப்பாசிரியரின் அந்தக் குறிப்பு இந்த முயற்சியிலே அவர் எவ்வளவு கரிசினையோடு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகின்றது.

எனவே, இன்னும் தொகுதிகள் வெளிவரும். விடுபட்டுப்போன சாதனையாளர்கள் பற்றிய விபரங்கள் அவற்றில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு எழத்தாளர்கள் அவருக்குக் கைகொடுத்து உதவவேண்டும். தானாக ஒரு நூலை எழுதுவது இலகுவானது. அது ஒருவரது அறிவின்பாற்பட்ட விடயம். அதற்கான அறவும், ஆற்றலும் உள்ளவர்களால் அது முடியும். தரமாக இருந்தால் வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும், வரலாற்றில் நிலைக்கும். ஆனால், பலரது ஆக்கங்களைத் தொகுத்து வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்க வேண்டி எற்படும். இலக்கியத் தொடர்பு இல்லாதவர்களின் எதிர்ப்புக்களைக்கூட எதிர்நோக்க வேண்டிவரும். அவை எல்லாவற்றையும் தாண்டி இப்படியொரு அற்புதத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ள முல்லை அமுதன் அவர்களின் தமிழ்ப்பணி உலகத் தமிழர் வரலாற்றில் உன்னத இடத்தைப் பெறும். உலகத்தில் தமிழ் உள்ளளவும் நிலைக்கும். வாழ்க தமிழ்.


பிற்குறிப்பு:-இந்த நூலை விரித்ததுமே எதிர்பாராத இன்ப உணர்ச்சி எனக்கு எற்பட்டது. காரணம் என்னவெனில் முதலாவது கட்டுரையை எழுதியிருப்பவர் மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள். எனது நனவிலம், கனவிலும் காலமெல்லாம் நின்று நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கும் அவர் பட்டிருப்பு மத்திய மாவித்தியாலயத்திலே ஒன்பதாம் வகுப்பிலிருந்து எனக்கு உயிரினவியல் அசிரியராக வாய்த்தவர். விஞ்ஞான ஆசிரியரான அவர் என்னுள்ளிருந்த தமிழை இனம்கண்டு களம் அமைத்துக்கொடுத்தவர். வற்புறுத்தி ஊக்கம் கொடுத்தவர். எனது பதினைந்தாவது வயதிலேயே சுதந்திரன் பத்திரிகையில் நிருபராகச் சேர்த்துவிட்டவர். “உயிர்ப்பு” என்ற பாடசாலையின் சஞ்சிகையில் ஆசிரியராகப் பதவியளித்தவர். எழுத்துத் துறையில் என் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டவர். யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் அவரைக் கண்டு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. அவரது கட்டுரையைக் கண்டதும் அவரையே கண்டதுபோல உள்ளம் களிநடம் புரிந்தது.

mullaiamuthan_03@hotmail.co.uk


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner