இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்: நூல் விமர்சனம்!

குப்பிளான் ஐ.சண்முகத்தின் 'உதிரிகளும்' உதிரிதானா?

- எம்.கேமுருகானந்தன் -

குப்பிளான் ஐ.சண்முகத்தின் 'உதிரிகளும்' உதிரிதானா?சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் கழிந்து விட்டபோதும்,
தமிழகத்துக்கு நிகராகவே ஈழத்திலும் சிறுகதைப் படைப்புலகம் பரிணமித்துவிட்ட போதும், எது நல்ல கதை என்ற தெளிவு இங்குள்ள படைப்புலகிலும், நுகர்வுலகிலும் பரந்தளவில் இல்லாதிருக்கிறது. ஈழத்தின் பல முன்னணிப் படைப்பாளிகளிடம் கூட சிறுகதையின் நவீன வடிவங்கள் அகப்பட மறுத்து, ஏய்த்து நகைக்கின்றன.
அத்திபூத்த மலர்களாக சட்டநாதன், சாந்தன், குந்தவை, எஸ்.எல்.எம்.ஹனிபா போன்ற சிலருடன் திரேசா, திருக்கோவில் கவியுகன், ராகவன் போன்ற இளைய எழுத்தாளர்களும் புதுமையான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றனர். சுவார்ஸமான சம்பவங்களின் தொகுப்பே சிறுகதை என்ற மயக்கம் தீராதிருப்பதன் காரணமாக செய்தி நிருபர்களே படைப்பாளிகளாக வலம் வருகின்ற பாவ பூமி இது.

இந்த வட்டத்திற்குள் அகப்படாமல் தப்பித்து தமக்கென ஒரு தனித்துவமான படைப்பு வெளியை விரித்து வைத்திருப்பவர்களில்
குப்பிளான்.ஐ.சண்முகம் முக்கியமானவர். புகழுக்காகவோ பக்கங்களை நிரப்புவதற்காகவோ, மலர்களில் பெயர் பதிக்க வேண்டும்
என்பதற்காகவோ, நிர்பந்தங்களுக்காகவோ பேனா திறக்க மறுப்பவர் இவர் எனலாம்.

'மாறாக சண்முகனின் கதைகளில் ஒரு அலாதியான புனைகதைப் பெருவெளியினை அவதானிக்கக் கூடியதாக இருப்பதும், ஆழ்ந்த
வாசிப்பில் அந்தப் பெருவெளியினுள் பிரவேசித்து அலைவதனூடகப் பரவசம் எய்த முடிகின்றது என்பதும் முக்கியமானது' என இன்றைய
நம்பிக்கையூட்டும் படைப்பாளியான இராகவன், சண்முகனின் படைப்புகள் பற்றி சத்திய வாக்குமூலம் தருவதும் குறிப்பிடத்தக்கது.

'உதிரிகளும் '' என்ற, நயந்து நினைவூற வைக்கும் தலைப்புடன் கூடிய சிறுகதைத் தொகுப்பை அண்மையில் சண்முகன் தந்துள்ளார்.

அது என்ன உதிரிகளும் '?

'.. நான் முன்னர் எழுதிய 26, 27 கதைகளில் தெரிந்தெடுத்த இருபத்தியொரு கதைகள் எனது முன்னைய தொகுப்புகளான கோடுகளும் கோலங்களும், சாதாரணங்களும் அசாதாரணங்களும் ஆகிய நூல்களில் வெளிவந்துவிட்டன. ஆகவே நான் அப்பொழுது தெரிவு செய்யாதுவிட்ட உதிரிகளும், பின்னர் எழுதிய கதைகளுமே இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன' என தனது சிறிய முன்னுரையில்
விளக்கம் சொல்லி விடுகிறார்.

ஆக, இத்தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்குகின்றன. இவற்றுள் 8 சிறுகதைகள் 1971 க்கு முன் எழுதப்பட்டதாக இருக்க, இறுதி நான்கு சிறுகதைகளான பருவம் தப்பிய மழை, தரு, ஹீரொ, சிதம்பரம் ஆகியன முறையே 1989, 1990, 2005, 2004 ஆண்டுகளில் வெளியாகியுள்ளன.

'கழித்துவிட்ட' உதிரிக் கதைகளாகப் படைப்பாளியான தானே கருதும், இவரது ஆரம்பகாலப் படைப்புகள் உண்மையில் கழிக்க வேண்டிய
கதைகள்தாமா?

அல்ல! என்றே சொல்லத் தோன்றுகின்றது. இவை என்ன கருத்துக்களை எமக்குக் கடத்த முயல்கின்றன? இக்கதைகளை ஆக்கிய போது, எல்லைகளை அறுத்து, வானத்திலும் சஞ்சிரிக்கும், கனவுகளுடன் குலவும் இருபது வயதுகளேயான வாலிபப் பருவத்தில் இருந்திருப்பார். அப்பருவமானது கனவுகளும் லட்சியங்களும் களைபோலச் செழித்து வளரும் சேனைப் பயிர்க் கன்னி நிலம். புத்தம் புதிய உலகை அவாவும்; இளைஞனின் யுகம் அது. அத்தகையவனது படைப்புகளாகவே இவற்றைக் காண்கிறேன்.

உதாரணமாக விமலாவைக் காதலித்து பின் சீலியை மணப்பதும், பிறேமலதாவுடனான காதலில் உறுதியாக நிற்பதும், சுமணாவை மணம் செய்து சந்தோசமாக வாழ்வதும் ஆன மூன்று கதைகள். இவற்றில் சிங்கள தமிழ் கலப்பு மணம் பேசப்படுகிறது. தேசிய ஒற்றுமைக்கு இத்தகைய கலப்பு மணங்கள் வித்திடும் என ஒரு காலத்தில் கனவு கண்ட வாலிபர்களின் உணர்வுகளையே சண்முகனும் பிரதிபலிக்கிறார்.

சாதிய முறையை வெறுத்து அது மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதால் அதை இல்லாதொழிக்க வேண்டும் என அவாவும் ஒரு உயர்சாதி ஆசிரியன். ஆனால் வறுமையில் வளர்ந்தவன். அவனது செய்கைகையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இன்னுமொரு இலட்சியச் சாயமூட்டப்பட்ட கதைதான் 'மாற்றங்கள்'

ப்பிளான் ஐ.சண்முகம்'விசித்திர உலகம்' என்பது உலகத்தவர் கண்களில் விசித்திர மனிதனாகத் தென்படும் மனிதாபம் மிக்க ஒருவன் பற்றியது. பட்டம் பதவிகளை எதிர்பார்க்காது சமூகத்திற்கு உதவிக் கரம் நீட்டும் அவனை, அவனது உதவியால் நிவாரணம் பெற்ற இன்னொருவனே விசித்திர பைத்தியம் என அவனது இறப்பின்போது குறிப்பிடுகிறான். போலியான விழுமியங்கள் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்ட எமது சமூகத்தை நளினமாக விமர்சிக்க முயலும் படைப்பு எனலாம்.

தங்கள் தங்கள் சுயநலத்திற்காக மக்களிடையே வேண்டாத பிளவுகளை ஏற்படுத்தி, அட்டூழியம் செய்பவர்களை நினைத்து நெஞ்சு
கொதிக்கும் ஒருவன் பற்றிய படைப்பு. ஒரே நாடு ஒரே உலகம் என இலட்சிய வேகம் கொள்பவன், சிங்களப் பெண்ணை நேசிப்பதால்
சமூகத் துரோகி என தூசிக்கப்பட்டு தாக்கப்படுகிறான். இருந்தபோதும் 'மனிதன் மத, இன உணர்வுகளால் வெறிகொண்ட வெறியனாக
வாழாது, மனிதனாக வாழ்ந்தால் அவன் உண்மையில் தெய்வமாகிறான்' என்ற கொள்கையில் உறுதியுடன் நிற்பதைச் சொல்லும் கதை 'மனிதன் தெய்வமாகிறான்'.

'பால்வண்ண நிலவு' என்பது முன்பு ஒருத்தியைக் காதலித்து மற்றொரு பெண்ணை மணந்த ஒருவனின் குற்ற உணர்வையும்,
மனைவிக்கு இதைத் தெரிவிக்கும் போது ஏற்படும் உள்ளுணர்வுகளை அலசும் படைப்பு.

உலகைப்பற்றி அக்கறை கொள்ளாது, அழகை ஆராதித்து, கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ஒருவனது மன ஆழங்களை எட்ட முயலுகிறது
மற்றொரு கதை. வாழ்விற்காக கூட உழைக்க விரும்பாது அழகிலும் ரசனையிலும் ஆழ்ந்து கிடக்கும் ஒருவன் உலகியலின்
நிதர்சனத்தைத் தரிசிக்கும் போது ஏற்படும் தாக்கத்தின் அகவுணர்வைப் பேசாது பேசி, எமது கற்பனைக்கு கதவு விரிக்கிறது.
'அவனுக்கென்று ஒரு உலகம்' எனும் இது பேசாஉணர்வுகளைப் பேசும் சொற்சித்திரமா என மயங்கவைக்கிறது.

1971 க்கு முன் எழுதப்பட்ட இவரது கதைகளில் பெரும்பாலானவை கருவைப் பொறுத்தவரையில் அன்றைய பெரும்பாலான
எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருந்து போலவே அக்காலகட்டத்தின் 'ஜனரஞ்சக' விடயங்களான இன ஒற்றுமை, இலங்கை என்ற
தேசப்பற்று, சாதீயம் போன்றவற்றையே பெரும்பாலும் பேசின. இருந்தபோதும் குப்பிளானின் கதை சொல்லும் பாங்கில் அழகியல்
உணர்வும், அகம் நோக்கிய பார்வையும் மேலோங்கி இருப்பதைக் காண்கிறோம். கதைகளின் கரு ஒருபுறமிருக்க கதைக்கு மேலாக மனித உணர்வுகளை,அவனது பாடுகளை, சிந்தனைகளை சொல்லுக்குள் அடக்கும் வாலாயம் அன்றே சித்தித்தவராக இருப்பதால்தான் மற்றவர்களிடமிருந்து அன்றே வேறுபடுவதைக் காண்கிறோம்.

ஆரம்ப காலக் கதைகள் இவ்வாறிருக்க பிற்காலக் கதைகள் எதைச் சொல்கின்றன, எவ்வாறு சொல்கின்றன எனப் பார்ப்பது
சுவார்ஸமானது.

'பருவம் தப்பிய மழையைப் போலவே..' என்பது மழை பற்றிய ஒரு அற்புத சித்திரம்.

மழை ஒரு ஊற்றுப் போன்றது. வானத்தில் இருந்து சிந்தும் ஆகாய கங்கை போலாவது. சொட்டுச் சொட்டாகவோ, சாரல் சாரலாகவோ
கொட்டிச் சிரிக்கும். கற்பனையும் கலையுணர்வும் கொண்டவனின் மனஊற்றையும் மடைதிறக்கும் பேராற்றல் கொண்டது. ஒரு மழை
நாளின் அற்புத அனுபவங்களை நாம் எல்லோருமே அனுபவித்திருக்கிறோம். ஆனால் ஆழ்ந்துணர்ந்து கிளர்வதில்லை. ஆனால் குப்பிளானின் ரசனை சிந்தும் வாக்கியங்கள் எம்மீது சொரிந்து, ஊறிப் பதனப்படுத்தும்போது, மனஊற்றை பெருக்கெடுத்துப் பாய வைக்கிறது.

'சூரியன் முகங்காட்டி சிறிது சந்தோசத்தைக் கொடுத்துவிட்டு- திடீரென சிணுங்கலாக ஆரம்பித்துக் கொட்டும் மழை. இரவின் ஆழத்தில்
சங்கீதம் போல ஒரே சீராகப் பெய்யும் மழையில் ஒரு இதம்..'

'மழையில் காலையில் முழுகல், கிணற்றைச் சுற்றியுள்ள வாழைக்கொல்லையின் இடையே ஓடிய கொடியில் உடுக்கும் சாறத்தையும், துவட்டும் துவாயையும் போட்டுவிட்டால் வாழையிலைகளில் பட்டு ஒன்றாய் உருண்டு திரண்டு வரும் ஓரிரு மழைத் துளிகளைத் தவிர அவை நனையாது .'

'மழையைப் பாராது புறப்பட்டான். முழங்காலளவிற்கு மடித்த முழுக்காற்சட்டை, நீலக்குடை .'

'மழை பெய்து கொண்டிருக்கிற வாரவிடுமுறைகள் இதமானவை போலும் ' மழைக்கால ஓய்வு நாட்கள் ஒரு புதிய மெருகையும்
பரிமாணத்தையும் கொடுக்கின்றன.'

'மழைக்குளிரின் சுகத்தில் விடிய விடிய கதகதப்பான படுக்கையில் புரண்டு படுத்தல் சுகம், மிகு சுகம்'

'வீதி, வீதியோரத்துக் கடைகள், தியேட்டர் எல்லாமே வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. அங்கும் இங்குமாய்த் தென்பட்ட இரண்டொருவரும்,
அந்த மழை நாளில் அப்படி இருப்பதற்காகவே படைக்கப் பட்டவர்களாய்த் தோற்றம் கொண்டார்கள்.'

'மழை பெய்து ஓய்ந்திருக்கின்ற இன்றும் கூட நண்பன் வரலாம். வந்தால் பேசிக்கொண்டே இருக்கலாம். பேச்சு பேச்சு ஒரே பேச்சு..'

'மழை காலப் பொழுதுகள் சந்தோசமானவை என்றாலும்..'

இவ்வாறே சண்முகனுடன் கூடவே நாமும் அந்தச் சந்தோசங்களுள் ஆழ்ந்துவிடுகிறோம். நிச்சமாக இது கிளுப்பான சம்பவங்களையும்,
திடீர்த் திருப்பங்களையும், எதிர்பாராத முடிவுகளையும் அவாவும் வாசகர்களுக்கான படைப்பு அல்ல. படைப்புக்குள் முழ்கி முத்தெடுப்பதில் சுகம் காண்பவர்களுக்கானது.

1990 ல் திசையில் எழுதப்பட்ட 'தரு' ஒரு மிக முக்கிய படைப்பு. கவிதையா கதையா என மயங்கவைக்கும் நடை. ஏனைய பல
கதைகளைப் போலவே இதிலும் மனசோடு இதமாகப் பேசுகிறது.

'இவளை அவள் போக்கிலேயே இயங்கவிட்டு பின் கட்டி இழுப்பதாய், நூல் மாட்டிய பம்பரம்போல் ஓடவிட்டு இழுத்து நிறுத்துவதுமாய் ''
இப்படி இப்படியே, ஆண்களின் அதிகாரமானது பெண்ணின் மீது நிதானமாகவும், தீர்க்கமாகவும் படர்வதைச் சொல்லிச் செல்லும் கதை.
ஆனால் 'அந்தக் காட்டு மனிதனின் வெறித்த பார்வையும் அவனிலான பிறேமியின் வாத்சயல்யமும்' அவனுக்கு 'குளிர் தருவின் கீழும் பாலையின் வெப்பக் காற்று புகுந்தது போல.' தொல்லை கொடுத்தது. அவனால் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் தாங்கவும் முடியாது போயிற்று.

கட்டியக்காரன் நாடகத்தின் இடையே வந்து பேசிவிட்டுப் போவது போலவே கதையின் இறுதியில் நடை மாற்றம். கட்டுரைப் பாங்கு
போல. இது குப்பிளானின் சறுகல் அல்ல. ஒரு புதிய வடிவைத் தேடும் அவாவின் பேறு. வாசிக்க வாசிக்க , மீண்டும் வாசித்துச் செல்ல
புதிய உணர்வுகளை விதைத்துச் செல்லும் படைப்பு. அதனால்தான் போலும் திசையில் வெளிவந்த படைப்பு மீண்டும் மனிதம்
சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது

சிதம்பரம் என்ற இறுதிக் கதை சிதப்பர ரகசியத்தை உள்ளடக்குவது போன்ற இன்னுமொரு வித்தியாசமான படைப்பு.


"உலகின் மூலைமுடக்கெங்கும் 'மனிதரின் வெறிகொண்ட செயற்பாடுகளின்' அனர்த்தங்களினால் பலியாகும் ஆயிரக்கணக்கான பச்சிளம் பாலகர்களின் நினைவுகளுக்கு ..." இந்நூலை அவர் அர்ப்பணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முடிவாக என்ன சொல்லலாம்? 'புறச் சூழலையும் நிகழ்வுகளையும் தனது படைப்புகளில் நுட்பமாய்ப் பதிவு செய்துள்ளாராயினும்,
அடிப்படையில் அவர் ஒரு அகவயவாதி, ஆன்மிக நம்பிக்கையும், மெல்லுணர்வுகளும், அழகியல் ரசனைத் திளைப்பும் கொண்டவர்' என
அ.யேசுராசா பின் அட்டையில் கூறுவது என் எண்ணங்களையும் பிரதிபலிக்கிறது எனலாம்.

அவ்வாறே 'ஒரு தனித்துவமான, வெகு நிதானமான மென்போக்கில் செல்லும் சண்முகனின் புனைகதைகளிலிருந்து அநேகமான
வாக்கியங்கள் எனக்குள் சேகரமாயிருப்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்' என இராகவன் எழுதியது போலவே என்னுள்ளும்
நிறைந்துள்ளது. நிச்சயம் உங்களையும் பற்றிக் கொள்ளும்.

விலை:- ரூபா 120.00

தொடர்புகளுக்கு:-
குப்பிழான்.ஐ.சண்முகன்
'மாணிக்கவளவு'
கரணவாய் தெற்கு
கரவெட்டி

kathirmuruga@hotmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner