இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2010  இதழ் 126  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

‘பள்ளி சென்று பயிலா பல்கலைக்கழகப் பேராசிரியர்…’’
- முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை -

பண்டிதமணி மு. கதிரேசனார்இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, வெளியில் எங்கும் செல்ல இயலாமல், கல்வி கற்பதில் தமக்கிருந்த ஆர்வத்தால் தாமே முயன்று படித்து, தமக்கேற்பட்ட ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள உடல்நிலையோ, பொருள்நிலையோ இடங்கொடா நிலையில், செல்வர் ஒருவரின் நட்பைப் பெற்று வளர்த்துக் கொண்டு, அவர் வாயிலாக ஒரு சபையினை உருவாக்கித் தமிழகத்தில் உள்ள அறிஞர்கள் அனைவரையும் தம்மிருப்பிடத்திற்கு வரவழைத்துத் தமிழ் வளர்த்த சான்றோர் தான் பண்டிதமணி மு. கதிரேசனார் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழிலக்கிய வரலாற்றை வளப்படுத்திய பெருமக்களுள் பண்டிதமணி குறிப்பிடத்தக்கவர். வடமொழியும், தமிழும் வல்ல இவர் ஏழு மாதங்கள் கூட பள்ளி சென்று கல்வி பயிலாமல் 12 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து தமிழ்த் தொண்டாற்றிய அரும்பெரும் சான்றோராக விளங்கினார.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டியில் 16.10.1881-ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை முத்துக்கருப்பன் செட்டியார் அவர்களுக்கும், சிவப்பி ஆச்சி அவர்களுக்கும் மகனாகப் பண்டிதமணி கதிரேசனார் பிறந்தார்.. பண்டிதமணி அவர்கள் சிறுவயதிலேயே பொருளீட்டுவதற்காக இலங்கை சென்றார். இலங்கை சென்ற மூன்றாண்டுகளில் இவருடைய தந்தையார் இறந்த செய்தி வந்தது. உடல்நலிவுற்ற பண்டிதமணியார் மனமும் நலிவுற்று தாய்நாடு வந்து சேர்ந்தார்.

தந்தையின் இறப்பிற்குப் பிறகு குடும்பப் பொருப்பை பண்டிதமணியே ஏற்று நடத்த வேண்டியதாயிற்று. அப்பொழுது பண்டிதமணிக்கு வயது 14 ஆகும். இவரைப் பற்றியிருந்த இளம்பிள்ளை வாதத்தின் தாக்குதல் அதிகமானதால் இவரது இடக்காலும் இடக்கையும் வலுக் குறைந்தன. ஊன்றுகோலின் உதவியால் அவர் நடந்தார். உடல் வளம் குன்றியிருந்ததை ஈடு செய்யும் வகையில் இவரது உள்ளம் அறிவுத்துறையில் ஈடுபட்டது. இந்த ஈடுபாடு தமிழ்மொழி வளர்ச்சிக்குத் துணையாய் அமைந்தது எனலாம். யாருடைய உதவியுமின்றி தம் வழிபடு கடவுளாகிய விநாயகப் பெருமானையே ஆசிரியராக நினைத்துப் பல நூல்களைத் தாமே கற்று வந்தார். இதற்கு மகா வித்துவான் அரசஞ்சண்முகனார் உதவியாக இருந்தார். மேலும் இவருக்குக் கந்தசாமிக் கவிராயர், சுந்தரேசுவர ஐயர் ஆகியோருடைய நட்பும் வாய்த்தது.

உடல் அமைப்பின் குறைவால், பண்டிதமணி அவர்கள் வாழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பண்டிதமணி நாற்காலியில் அமரந்த நிலையிலேயே இருப்பார். அவரைக் காண வருவோர் எதிரிலுள்ள நாற்காலிகளில் அமர்வர். இடையில் ஒரு மேசை இருக்கும். நூல்கள் திறந்த வண்ணம் எப்போதும் மேசை மீது இருப்பதுண்டு. பேராசிரியர் ஒருவர் மாணவர்க்குப் பாடங்கூறும் வகுப்பறையின் காட்சியை அவர்கள் இருக்கும் இடத்தில் காணலாம். திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக இருந்த அம்பலவாண தேசிகர் அவர்களும் பண்டிதமணி அவர்களும் இனிய நண்பர்களாக இருந்தனர். முதல்முறை அவர்களைக் காண நேர்ந்தபோது, பண்டிதமணி அவர்கள் மகா சன்னிதானம் அவர்களுடைய பாதத்தில் விழுந்து வணங்கினர்கள். அப்போது, அவர்களுடைய கைப்பிரம்பு வழுக்கியதால், பண்டிதமணி கீழே விழுந்துவிட்டார். மகா சன்னிதானம் உடனே எழுந்து வந்து பண்டிதமணியைத் தாங்கினார். அப்போது பண்டிதமணி, ‘‘பக்தர்களாகிய நாங்கள் தவறுவதும் சன்னிதானங்கள் தாங்குவதும் இயல்புதானே’’ என்று சிலேடை நயத்தோடு குறிப்பிட்டார். மேலும், ‘கம்பர் யார்?’ என்ற கிளர்ச்சி தமிழகத்தில் நடைபெற்றபோது, ‘கம்பை உடையவன் கம்பன், அவ்வகையில் பார்க்கும்போது யானே கம்பன்’’ என்று பண்டிதமணி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள் .

சோழவந்தானூர் மகாவித்துவான் அரசஞ்சண்முகனார் பெரும்புலவராகத் திகழ்ந்தார். இவரைப் பண்டிதமணி அவர்கள் தம் ஆசிரியராகவே கருதினார். ஆனால் சண்முகனார் பண்டிதமணியைத் தம் நண்பராகவே மதித்தார். சண்முகனார் பல நாட்கள் மகிபாலன் பட்டியிலேயே தங்கி இலக்கண இலக்கியக் கடலில் மூழ்கி பண்டிதமணி அவர் களையும் மூழ்குவித்தார். அந்நாட்களில் பண்டிதமணியின் தாயார் சிவப்பி ஆச்சி அவரகள் சண்முகனாரைத் தம் பிள்ளைகளில் ஒருவராகக் கருதி நடத்தினார். வடமொழியைக் கற்க விரும்பிய பண்டிதமணி தருவை நாராயண சாஸ்திரியார் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஐந்தாண்டுகள் வடமொழி பயின்று அதில் புலமை பெற்றார்.

அரசஞ்சண்முகனார் பொருளின்றித் துன்புற்றபோது, அவருக்குப் பண்டிதமணி பெரும்பொருள் வழங்கியதுடன், இலங்கையில் அவருக்குப் பொருள் சேகரிக்கவும் துணைபுரிந்தார். அரசஞ்சண்முகனார் வாயிலாகப் பண்டிதமணிக்கு மு.ரா.கந்தசாமிக் கவிராயர் அறிமுகமானார். செட்டிநாட்டில் பீமகவி என்பார் மதிக்கத்தக்க ஒரு புலவராக விளங்கினார். அவருடன் பண்டிதமணி நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.

பீமகவியின் சொற்பொழிவு ஒன்றில் காணப் பெற்ற குறைகளையெல்லாம் தொகுத்து வித்தியாபானுவில் பண்டிதமணி விரிவாக எழுதினார். இதைப் படித்து வெகுண்ட பீமகவி பண்டிதமணியின் மீது மானநட்ட வழக்குத் தொடுத்தார். வழக்கில் எதிரத்துப் பேச ஆங்கிலமும் தமிழும் அறிந்த ஒரு வழக்கறிஞரைப் பண்டிதமணி தேடினார். அப்போது சோமசுந்தர பாரதியார் என்னும் வழக்கறிஞரைத் தம் கட்சியை எடுத்துரைக்கப் பண்டிதமணி ஏற்பாடு செய்து கொண்டார். பாரதியாருக்கும் பண்டிதமணிக்கும் அன்று தொடங்கிய நட்பு நாற்பது ஆண்டுகாலம் பண்டிதமணியின் இறுதிநாள்வரை வளரந்தது. தமக்கும், பண்டிதமணிக்கும் இருந்த தொடர்பினை, ‘‘என் நெடு வாழ்க்கையில் முதலில் ஆங்கிலமின்றித் தமிழில் பேசியறியாத என்னைத் தாய்மொழியில் தமிழர் கூட்டத்தில் பேச வைத்து, அத்துறையில் ஊக்கித் தமக்கு இனிய குழுவில் என்னையும் சேர்த்து அன்பு காட்டிப் பண்டிதமணி அவரகள் அறிஞருலகில் எனக்கும் இடம் தந்தார்கள்’’ என்று சோமசுந்தர பாரதியார் குறிப்பிடுகிறார்.

பண்டிதமணி 1906-இல் அரசஞ்சண்முகனாரிடமிருந்து அறிமுகக் கடிதம் பெற்று நாகபட்டினம் சென்று மறைமலையடிகளைச் சந்தித்து நட்புக் கொண்டார். பண்டிதமணியிடம் கொண்டிருந்த நட்பினைப் பற்றி, ‘‘தங்களை நண்பராகப் பெற்றது எனது புண்ணியத்தினையே மிகவியந்து நமது நட்பின் கெழுதகைமை எழுமை எழுபிறப்பும் செழிப்புறுகவெனத் திருவருளை வேண்டி வழுத்துகின்றேன்’’ என்று மறைமலை அடிகள் குறிப்பிடுகிறார்.

இராமநாதபுரத்தில் மகாவித்துவான் ரா. இராகவ ஐயங்கார் அவர்களைப் பண்டிதமணி சந்தித்தாரகள் இராகவ ஐயங்கார் பண்டிதமணியைப் பாண்டித்துரைத் தேவர்க்கு அறிமுகம் செய்து வைத்தார். பண்டிதமணியின் புலமையை உணர்ந்த பாண்டித்துரைத் தேவர், அவரை மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவலர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டார். பண்டிதமணி தாம் வாழும் பகுதியில் தமிழினை வளர்ப்பதற்கு ஒரு கிளை வேண்டுமென்று கருதி, தமது எண்ணத்தினை வள்ளல் பழநியப்பரிடம் எடுத்துரைத்தார். இதன் பயனாக, மேலைச்சிவபுரியில் வள்ளல் பழநியப்ப செட்டியார் அவர்கள் பண்டிதமணியின் தூண்டுதலினால் 13.05.1909-ஆம் ஆண்டு சன்மார்க்க சபையினைத் தோற்றுவித்தார்.

சபையின் ஒரு பகுதியாகிய கணேசர் செந்தமிழ்க் (கலாசாலை) கல்லூரியும், தொல்காப்பியனார் நூல் நிலையமும் நிறுவப் பெற்றன. கணேசர் செந்தமிழ் கலாசாலை மாணவரகளுக்குத் தேர்வு நடத்தும் பொறுப்பை அரசஞ்சண்முகனாரும், பண்டிதமணியாரும் மேற்கொண்டனர். பண்டிதமணியின் நூல்கள் வெளிவர சன்மார்க்க சபை பெரிதும் துணைபுரிந்தது. இங்ஙனம் பண்டிதமணி சபையை வளர்க்க, சபை அவரை வளர்த்தது.

தமிழிலும், வடமொழியிலும் புலமை மிக்கவராகப் பண்டிதமணியார் விளங்கினார். அவரின் வடமொழிப் புலமையை, அவரது மொழிபெயர்ப்பான, கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், மண்ணியல் சிறுதேர், சுலோசனை(சிறுகதை), சுக்கிரநீதி உதயண சரிதம், மாலதீ மாதவம், பிராதப ருத்திரீயம் (நாடகங்கள்) ஆகிய நூல்களே தெளிவுறுத்துகின்றன. உரைநடைக் கோவை, (சமயக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள்), திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகியவற்றிற்கு எழுதப்பட்ட கதிர்மணி விளக்க உரை, உள்ளிட்ட பல நூல்களையும் பண்டிதமணி அவர்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சன்மார்க்க சபையின் வாயிலாக வெளியிடப்பட்டன.

1910-இல் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயரவர்கள் சுதேசி நிதி சேர்த்தபோது பண்டிதமணி கதிரேசனார் செட்டி நாட்டில் அந்நிதிக்குப் பணம் திரட்டிக் கொடுத்துதவினார். 1914-இல் தமிழ் இலக்கிய ஏடுகளைத் தேடிப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டாக்டர் உ.வே.சா அவர்களுக்குப் பண்டிதமணி பேருதவியாக இருந்தார். இதன் விளைவாக இருவரும் மிக நெருங்கிய நண்பர்களானார்கள். பண்டிதமணி ஐயரவர்களை தமது ஊருக்கு அழைத்துச் சென்று தமது இல்லத்தில் விருந்தளித்து உளம் மகிழ்ந்தார்.

பண்டிதமணி கதிரேசனாரின் புலமையைப் பாராட்டி, டாக்டர் உ.வே.சாவின் தலைமையில் ரா. இராகவ ஐயங்கார் பாராட்டு வழங்க 1925-ஆண்டு அவருக்கு, ‘‘பண்டிதமணி’’ எனும் பட்டம் சன்மார்க்க சபையால் வழங்கப் பெற்றது. பிற்காலத்தில் சென்னையில் கூடிய தமிழ்ப்புலவர் மநாட்டில் முதுபெரும்புலவர் எனும் பட்டமும், 1942-இல் அரசாங்கத்தால் மகா மகோபாத்தியாயர் பட்டமும், குன்றக்குடி ஆதினத்தால் சைவசித்தாந்த வித்தகர் பட்டம் உள்ளிட்ட பல பட்டங்கள் இவருக்கு வழங்கப் பெற்றாலும் சன்மார்க்க சபையால் வழங்கப்பெற்ற, ‘பண்டிதமணி’ எனும் பட்டமே இயற்பெயர் போன்று இன்றும் நின்று நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. பண்டிதமணி, சபையின் வளர்ச்சியே தம் வளர்ச்சியாகக் கருதி அதன் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் உழைத்தார். அவரது அனைத்து முயற்சிகளையும் வரவேற்று அவற்றுக்குப் பழநியப்பர் உறுதுணையாக இருந்தார். பண்டிதமணியால் வளர்க்கப்பெற்ற இக்கல்லூரி பலநிலைகளில் வளர்ச்சிபெற்று இன்று 100 ஆண்டுகளைக் கடந்து, செந்தமிழ்ப் பயிர்வளர்க்கும் கலைக்கோவிலாகத் திகழ்ந்து வருகிறது.

1934-ஆம் ஆண்டில் கதிரேசனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குப் பேராசிரியராகப் பணியாற்றச் சென்றார். அங்கு, தமிழ்ப் பேராசிரியராகவும். தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராகவும் 12 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பண்டிதமணி அண்ணாமலைநகரில் மணிவசாக மன்றத்தையும், தில்லைத் தமிழ்க் கழகத்தைதையும் நிறுவி செந்தமிழ்ப் பயிர் வளர்த்தார். அக்காலத்தில் பண்டிதமணி கதிரேசனார் தலைமையேற்று பல மநாடுகளையும் விழாக்களையும் நடத்தினார். பிற அறிஞர்களின் தலைமையிலும் கலந்துகொண்டு அரிய கருத்துக்களை வழங்கினார்.

ஒருமுறை மறைமலையடிகளின் தலைமையில் பண்டிதமணி கரந்தையில் பேசும்போது, மறைமலையடிகள் தமது தலைமை உரையில், சங்க நூல்களெல்லாம் தனித்தமிழ் நூல்கள், அவை வடசொற் கலப்பு இல்லாதவை என்று குறிப்பிட்டார். பின்னர் பேசிய பண்டிதமணி, கலித்தொகையில், ‘‘தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் நீமடுத்து’’ என முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் என்று வடசொற்கள் வந்திருக்கின்றனவே’’ என்றார். மறைமலையடிகள் தேவாரத் திருவாசகங்கள் தனித்தமிழில் ஆக்கப்பட்டனவென்று கூறினார். உடனே,

‘‘சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்’’

என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் முதற் பதிகத்தில் சலம், தூபம் இரண்டும் வடசொல் என்பதை எடுத்துக்காட்டி இவ்வாறு பல இடங்களில் வடசொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதைத் தெரிவித்தார். மறைமலையடிகள் கோபமாய் மேசையைக் குத்தினார். ‘‘எனக்கும் ஒரு மேசை போட்டிருந்தால் இதைவிட வலுவாகக் குத்தி மிகுதியான ஓசையை எழுப்பியிருப்பேன் என்று பண்டிதமணி கூறினார். இங்ஙனம் பண்டிதமணி யாராக இருப்பினும் தமது கருத்தினைத் தெளிவாக அஞ்சாது எடுத்துரைப்பார்.

கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களிடம் பண்டிதமணி அவர்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. கவிமணிக்கும் பண்டிதமணி மீது அன்பும், பெருமதிப்பும் இருந்தது. பண்டிதமணியைப் பற்றி பாடிய பாடலில் கவிமணி,

‘‘முற்றிமுதிரும் அன்பாலே
மூவர தமிழும் பயில் நாவான்
சுற்றம் தழுவும் குணசீலன்
தூய நெறிகண் டொழுகிடுவான்
கற்ற பெரியோன் கதிரேசன்
கடவுளருளால் வாழியவே’’

என்று வாழ்த்துகிறார்.

பண்டிதமணி கதிரேசனார், மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுடைய குடும்பத்திற்குப் பொருளுதவி தேவைப்பட்டபோது முயற்சி செய்து பொருள் சேர்த்துக் கொடுத்தார். டாக்டர் உ.வே.சா. அவர்களுக்கும் பல உதவிகளைப் பண்டிதமணி செய்தார். 21.6.1925 - இல் டாக்டர் உ.வே.சாமிநாதஐயரவரகள் இதற்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில், ‘‘முன்பு பிள்ளை அவர்களுடைய குடும்பக் கவலையைத் தீர்த்தீர்கள். இப்போது அவர்களுடைய மாணாக்கனது கவலையைத் தீர்த்தீர்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கதாகும்.

இங்ஙனம் புலவராகவும், புரவலராகவும் இருந்து தமிழ் வளர்த்த பண்டிதமணியார் 2.4.10.1953-ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்து இறைவனடி சேர்ந்தார். 1948 - இல் அவர் எழுதத் தொடங்கிய திருவாசக உரைமுற்றுப் பெறாமலேயே அவர் இறந்தார். இதனைக் கவிமணி,

‘‘பத்தரெலாம் பாராட்டும் பணடித மாமணிநீ
அத்தன் திருவடிக்கா ளாயினையோ-நித்தமவர
கற்றுக் களிக்கும் கதிரமணி நல்விளக்கம்
முற்றுப் பெறுவதன் முன்’’ (கவிமணியின் சமரகவி)

என்று குறிப்பிட்டுப் பாடினார். பாருள்ளளவும் பண்டிதமணியின் புகழும், தமிழ்ப்பணியும் தமிழுறவோர் நெஞ்சத்தில் என்றும் நீங்காது நிலைத்திருக்கும்.

malar.sethu@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்