இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2010  இதழ் 130  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சூழலைப் பாதுகாப்போம்!
மீள்பிரசுரம்: பூவுலகு வலைப்பதிவு
வீட்டைச் சுற்றியும் காட்டுயிர்

- சு.தியடோர் பாஸ்கரன்

சு. தியடோர் பாஸ்கரன்சூழலைப் பாதுகாப்போம்!தொட்டகுப்பி கிராமம். பெங்களூருவின் மேற்குக் கோடியில், நகரில் ஒரு காலையும் மற்றொன்றைக் கிராமச் சூழலிலும் ஊன்றிக் கொண்டிருக்கின்றது. சில மாதங்களுக்கு முன் இங்கு ஒரு வீடு கட்டி (‘அமராவதி’) குடியேறினோம். புது வீட்டில் முதன் முறையாகத் தூங்கியபோது கொஞ்சம் பயமாகவும் மனம் கலக்கமாகவும் இருந்தது. தானும் அவ்வாறு உணர்ந்ததாக சில தினங்கள் கழித்து திலகா என்னிடம் பகிர்ந்து கொண்டார். எப்போதுமே பெருநகரின் பல வித ஒலிகளுக்கிடையே உறங்கிப் பழகிப்போன எங்களுக்கு கிராமப்புறத்தின் அமைதி சிறிது அச்சமூட்டுவதாக இருந்தது. எங்கள் செல்லப் பூனை மைக்கண்ணி புது வீட்டிற்கு வந்த நாளில் ஓடிவிட்டதும் சஞ்சலத்திற்கு ஒரு காரணம். ஒரு கண்ணைச் சுற்றிக் கருவட்டம் கொண்ட மைக் கண்ணி சென்னை திருவான்மியூரின் ஒரு தெருப்பூனை. எங்கள் வீட்டில் வந்து மீன் சாப்பிட்டுப் பழகி எங்களைத் தத்து எடுத்துக் கொண்டது. அதை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்து இங்கு கொண்டு வந்தோம். திறந்தவுடன் விட்டது ஓட்டம். என்னால் முடிந்தவரை அதன் பின்னால் ஓடிப்பார்த்தேன். முடியவில்லை. பூனையில்லாமல் இந்த வீட்டினுள் நுழையமாட்டேன் என்ற திலகாவை ஆசுவாசப்படுத்துவது சிரமமாயிருந்தது. பூனைகள் வழி கண்டுபிடித்து திரும்பிவிடும் அம்மா என்ற எலெக்ட்ரீஷியனின் சமாதானமும் எடுபடவில்லை.

இந்த ஊர் இன்னும் கிராமமாகவே இருக்கின்றது. காலையில் பால்காரர் அப்போதுதான் கறந்த நுரை ததும்பும் பாலை இன்னும் லேசாக வெதுவெதுவென்றிருக்கும் ஒரு போனியில் கொண்டு வந்து தருகின்றார். சலவைக்காரர் சித்தையா வளர்க்கும் இரண்டு கழுதைகளின் குட்டி எங்கள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. இரண்டு சண்டைக் கோழிகளையும் அவர் வளர்க்கின்றார். அடுத்த முறை பக்கத்துக் கிராமத்தில் நடக்கவிருக்கும் கோழிச் சண்டைக்கு என்னைக் கூட்டிப் போவதாகக் கூறியிருக்கின்றார். கிராமத்தின் நடுவில் விமானமில்லாத ஒரு விஜயநகர் காலத்து சிவன் கோவில். கோஷ்டங்களிலிருந்த சிற்பங்கள் இன்று ஒன்று கூட இல்லை. எந்த நாடுகளின் அருங்காட்சியகங்களில் அவை காட்சிப்பொருட்களாக இருக்கின்றனவோ? கோவிலின் அர்த்த மண்டபத்தில் ஒரு சிறு மார்க்கெட்டே செயல்படுகின்றது. தினமும் காலையில் அங்கு சென்று ஒரு இளநீர் குடிப்பதுடன் எனது நடைப்பயிற்சி பூர்த்தியடைகின்றது.

காலையில் நடைப்பயிற்சிக்கு நான் இங்கே ஒரே தடத்தில் நடக்க வேண்டியதில்லை. நாளுக்கு ஒரு வழியாக மண் சாலை, ஒற்றையடிப் பாதை, ஏரிக்கரை எனச் சுற்றலாம் (cross country walking). ஆனால் பட்டி நாய்கள் மீது சற்று கவனமாக இருக்க வேண்டும். மரங்கள் இங்கு சகட்டு மேனிக்கு வெட்டப்படுகின்றன என்றாலும் இன்னும் பல இடங்களில் மரங்கள் தோப்புகளாக நிற்கின்றன. அதிலும் கிராமதேவதைக் கோயில்களைச் சுற்றி தொன்மை வாய்ந்த மரங்களைப் பார்க்கலாம். மா, பலா, அரசு, ஆல் போன்ற மரங்களும் வெகு உயரமாக, வேறு எங்கும் பார்க்கமுடியாத அளவு உயர்ந்து நிற்கின்றன. நம் நாட்டில் இருவகை ஆலமரங்கள் உண்டு. பொதுவாக நாம் காணக்கூடியது, விழுதுகள் உள்ள Ficus benghalensis என்ற வகை. அடையாறு ஆலமரம் இந்த வகையைச் சார்ந்ததுதான். Ficusmysorensis என்ற விழுது இல்லாத ஒரு வகை ஆலமரத்தை இந்தப் பகுதியில் காணமுடிகின்றது. பழம் மஞ்சளாக இருக்கும். புளியமரங்கள் பரந்து, மரவிதானம் சிதைக்கப்படாமல் முழுமையாக கம்பீரமாக நிற்கின்றன. வேம்பன் அரிதாக இருக்கின்றது. வீட்டில் எப்படியாவது ஒரு வேப்பமரத்தை நட்டுவிட வேண்டும் என்று போகுமிடமெல்லாம் வேப்பங்கன்று ஒன்றை திலகா தேடிக்கொண்டிருக்கின்றார். வறண்ட பிரதேசத்தில்தான் வேப்பமரம் செழித்து வளரும். சௌராஷ்ட்ராவில் இவை உயர்ந்து வளர்வதைப் பார்க்கலாம். காந்திநகரில் (குஜராத்தின் தலைநகர்) ஆயிரக்கணக்கில் வேப்ப மரங்கள் உள்ளன. டெல்லியில் உள்ள பார்லிமென்ட் சாலையில் இருபுறமும் நிழல் தந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மரங்கள் வேம்பன்தான்.

எங்கள் வீடு கிழக்குப் பார்த்தது. காலையில் நாளிதழ்களை எடுக்க கதவைத் திறக்கும்போது நேர் எதிரில் ஒரு பாதாம் மரத்தினூடே செம்பந்தாக கதிரவன் எழுவது தெரியும். ஒருநாள் கேட்டிற்கருகில் நாங்கள் நட்டிருக்கும் மூங்கில் புதரில் ஒரு பச்சைநிற சிலந்தி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. பச்சை சிலந்தி? ஓடிப் போய் அலமாரியிலிருந்து க்ரியாவின் SPIDERS: An Introduction என்ற நூலைப் புரட்டிப் பார்த்தேன். அந்த சிலந்தியின் பெயர் Green Iynx. இது ஒரு வலைபின்னாத சிலந்தி என்ற விவரமும் கிடைத்தது. மூடுபனி அடர்ந்திருந்த ஒரு காலை, அருகிலுள்ள செடி கொடிகளில் பல சிலந்திக் கூடுகளைக் காணமுடிந்தது. பனித்துளிகள் ஒட்டிக்கொள்வதால் அவை வெண்மையாக மெல்லிய வெள்ளி இழைகளில் பின்னினாற் போல் காட்சியளித்தன. மூன்று வகையான சிலந்திகளை நாங்கள் அடையாளம் காண முடிந்தது.

வீட்டிற்குள்ளும் ஒரு சிலந்தி உண்டு. Jumping Spider என்று குறிப்பிடப்படும் இந்த சின்னஞ்சிறு சிலந்தி தத்தித் தத்தி நகரும். எனவே அந்தப் பெயர். நீங்கள் பார்த்ததற்குள் சிறிய சிலந்தி இதுவாகத்தான் இருக்கும். நாங்கள் குடியேறிய இரண்டாம் மாதம் முதன்முதலில் வீட்டினுள் ஒரு பல்லியின் குரலை வீட்டில் கேட்டபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பல்லி குரல் இ¢ல்லாமல் வீடா? இந்தப் பல்லி இப்போது வரவேற்பறையிலுள்ள அச்சுதன் கூடலூரின் அரூப ஓவியத்தின் பின் குடியிருக்கின்றது. இரவானதும் விட்டில்பூச்சி ஏதாவது கண்ணில் தென்படுமா என்று எட்டிப் பார்க்கின்றது. சற்றும் தீங்கிழைக்காத வீட்டுப் பல்லி. இதைப்பற்றித்தான் சத்திமுத்தப்புலவர் ‘நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி பாடு பாத்திருக்கும் என் மனையாள்’ என்று எழுதினார். ஊழிகாலமாய் மனிதருடன் வாழும் ஒரு உயிரி இது. அண்மைக்காலத்தில் இதற்குப் பள்ளி மதிய உணவு காண்ட்ராக்டர்கள் கெட்ட பெயர் வாங்கிக்கொடுக்கிறார்கள். சாம்பாரில் பல்லி விழுந்து உணவு கெட்டு விட்டதென்று திருப்பி பதில் சொல்ல முடியாத இந்தப் பல்லி மேல் பழிசாத்துகிறார்கள். அதைப் பத்திரிகைகளும் அப்படியே போட்டுவிடுகின்றன. பல்லிக்கு நச்சு கொஞ்சமும் கிடையாது. பெரிய பல்லியான உடும்பின் இறைச்சியை இன்றும் இருளர்கள் உண்கிறார்கள்.

வீட்டின் முன்னுள்ள ஒரு பாதாம் மரத்தின் காய்களைத் தின்ன இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு குரங்குக் கூட்டம் வருகின்றது. எங்கள் நாய்கள் அல்லியும் பாரியும் தலைதெறிக்க குரைத்து வீட்டைச் சுற்றி ஓடினால் வானரங்கள் வந்து விட்டதென்று அர்த்தம். அவைகளுக்கு எட்டாத உயரத்தில், சுவற்றில் அவை உட்கார்ந்து நாய்களுக்கு எரிச்சல் ஊட்டும். நம் ஊர்க்குரங்குகளுக்கு Bonnet macaque என்று பெயர். தலையில் ஒரு தொப்பி போட்டது போல் மயிர் அமைந்திருப்பதால் இந்தப் பெயர். இவைகளைத் தென்னிந்தியாவில் மட்டுமே காணமுடியும். வட இந்தியாவில் இவைகளுக்குப் பதில் Rhesus macaque என்ற குரங்கு இருக்கின்றது.

இங்கு எப்போதும் ஏதாவது ஒரு பறவையின் குரல் கேட்டுக்கொண்டிருக்கும். காலையில் ஒரு முரசு கொட்டுவது போல் பும் பும் என்ற செம்பூத்தின் குரல் கேட்கும். அதை எளிதாகப் பார்க்கவும் முடிகின்றது. வீட்டின் பின்புறம் காபி குடித்துக்கொண்டே நாளிதழ்களைப் புரட்டும் போது, முன்னே உள்ள முருங்கை மரத்திலுள்ள சிறு மஞ்சள் வண்ணப் பூக்களின் தேனைத் தேடி இருவகையான தேன் சிட்டுகள் வருகின்றன. பின்னர் இரு வாலாட்டிக் குருவிகள் வருகை தருகின்றன (‘அவள் பெயர் தமிழரசி’யில் வரும் குண்டியாட்டிக் குருவிகள்தான்). தரையில் இறங்கியவுடன் வாலை மேலும் கீழுமாக வேகமாக ஆட்டும். தலைக் கனம் மிகுந்த இந்த பட்சி, தன்னைப் பூமி தாங்குமா என்பதையறியத் தான் வாலை ஆட்டிப் பார்த்து உறுதி செய்து கொள்கிறது என்பது ஐதீகம். தமிழ்நாட்டில் வண்ணாந்துறைகளில் இவை காணப்படுவதால் இதற்கு வண்ணாத்திக் குருவி என்றும் ஒரு பெயர் உண்டு. மாங்குயில், மணிப் புறாவை அடிக்கடி காண முடிகின்றது. இந்த இடத்தில் உட்கார்ந்தபடியே இதுவரை முப் பத்திமூன்று வகைப் புள்ளினங்களை நாங்கள் பதிவு செய்திருக்கின்றோம். செம்பருந்து போல சில அரிய பறவைகளும் அவ்வப்போது தென்படுகின்றன. முன்னிலவு நாட்களில் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டெழும் ஆள்காட்டிக் குருவியின் குரலைக் கேட்கலாம்.

வீட்டின் முன்புறத்தில் பூந்தோட்டமும் பின்புறம் காய்கறித் தோட்டமும் போட்டிருக்கின்றோம். மூன்றாவது மாதம் முதலே எங்களுக்கு வேண்டிய காய்கறிகள் இந்தத் தோட்டத்திலிருந்து கிடைக்கின்றன. 3 கிலோ வெள்ளரிக்காயைப் பார்க்க பக்கத்து வீட்டு ஆட்கள் வந்தனர். படம் எடுத்து மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்பினோம். பூந் தோட்டத்தில் பல பட்டாம்பூச்சிகளைப் பார்க்கலாம். பட்சிகளுக்கு தனித்தனி பெயர் இருப்பதுபோல் தமிழில் வண்ணத்துப் பூச்சிகளுக்குப் பெயர்கள் இல்லை. ஆங்கிலப் பெயர்களைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கின்றது. தோட்டத்தில் மானர்க் (Monarch), காமன் மார்மன் (Common Mormon) போன்ற பட்டாம்பூச்சிகளை அடிக்கடி காண முடிகின்றது. சில இன பட்டாம் பூச்சிகள் பறவைகள் போல வலசை போகும் பழக்கம் உடையவை. ஒரு மாலை வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது காமன் ஜெசபெல் (Common Jezebel) எனும் மஞ்சள் சிவப்பு பட்டாம்பூச்சிகள் ஆயிரக் கணக்கில்..ஆம் ஆயிரக்கணக்கில் தான்... காற்றில் மிதந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. கார் ஜன்னல் கண்ணாடியில் வந்து மோதி பல விழுந்தன. உருவில் பட்டாம்பூச்சி போலயிருக்கும், ஆனால் இரவில் நடமாடுவது விட்டில்பூச்சி (moth). இது தன் இரு இறக்கைகளை மூடாமல் சுவற்றின் மேல் விரித்துப் பரப்பி வைத்திருப்பது அதை அடையாளம் காட்டும்.

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒருநாள் இரவு, வீட்டின் பின்புறம் இரு மரங்களுக்கிடையே நூற்றுக்கணக்கான மின்மினிப் பூச்சிகளைப் பார்த்தோம். சீரியல் செட் மாதிரி அவை விட்டு விட்டு ஒளிர்ந்தன. இது ஒரு சிறிய வண்டுதான். இனப்பெருக்கக் காலத்தில் தனது ஜோடியை ஈர்க்க இந்த ரசாயன ஒளியை அது உமிழ்கின்றது. ஒன்றிரண்டு மின்மினிப் பூச்சிகளைப் பலமுறை பார்த்திருந்தாலும், இவைகளை ஒரு கூட்டமாக என் வாழ்வில் இதற்கு முன் ஒருமுறைதான் கண்டிருக்கின்றேன், நாகர ஹொளே காட்டில்.

மைக்கண்ணி கதையை முடிக்கவில்லையே? அடுத்த நாள் மதியம் பாத்திரங்கள் கழுவும் இடத்திற்குச் சென்ற திலகா அங்கே பேசினுக்கு அடியில் மைக்கண்ணி, முந்தைய இரவு மழையில் நனைந்ததால் நடுங்கிக் கொண்டு ஒரு மூலையில் இருந்ததைக் கண்டு கூவியே விட்டார். எலெக்ட்ரீஷியன் சொன்னது சரிதான். அதன் பின்னர் பூனை இந்தச் சூழலுக்கு நன்கு பழகி விட்டது. வெளியே சுற்றிவிட்டுத் தூங்க வீட்டிற்கு வந்து விடுகின்றது. சில சமயம் வயல் எலி ஒன்றைக் கொண்டு வந்து நாங்கள் பார்க்கும் இடத்தில் எங்களுக்குக் காணிக்கை போல போட்டு விடுகின்றாள். வயல் எலி பழுப்பு வெண்மையாக இருக்கும். ரோமப்போர்வை மிருதுவாகப்பட்டு மாதிரி இருக்கும்.

இந்த வீட்டிற்கு வந்த மூன்றாம் நாள் இரவு பத்து மணிக்கு மேல், காரை உள்ளே கொண்டு வந்து நிறுத்த விளக்கைப் போட்டேன். தூரத்தில் ஒரு நரி ஒளிக்கற்றையின் குறுக்கே போவதைக் காண முடிந்தது. சில இரவுகளில் இவை ஊளையிடுவதைக் கேட்டிருக்கின்றோம். இன்னும் சில ஆண்டுகளில் நரி, ஆள் காட்டிக் குருவி, வயல் எலி, மின் மினிப்பூச்சிகள் எல்லாமே இங்கு அற்றுப்போய்விடும். இன்று நாங்கள் காண்பது துரிதமாக மறைந்து கொண்டிருக்கும் இந்தியக் காட்டுயிரின் ஒரு மின்னல் வெட்டுத் தோற்றமே என்ற உணர்வு அவ்வப்போது தலைகாட்டுகின்றது.

மூலம்: உயிர்மை
நன்றி: பூவுலகு வலைப்பதிவு poovulagu.blogspot.com/2010/04/blog-post.html


 
aibanner

 ©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்