இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2006 இதழ் 77 - மாத இதழ்!
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்...
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் 
கவிதைகள் நாற்பது-2!

- சி. ஜெயபாரதன், கனடா -

மரபில் விளையாடி
புதுமைப் பூச்சூடி,
நடந்த இளங் கவிதை 
நவீனப் புயலில் சிக்கி விட்டது!....
மடக்கிய வரிகளுக்குள் 
அடங்குமோ ஓர் கவிதை? 
- வைகைச் செல்வி -

எது கவிதை? என்ன செய்யும் கவிதை?

Vikaichelviகவிதை எதுவென்று வைகைச் செல்வியே தன் கவிதை ஒன்றில் கூறுகிறார். "ஒரு கவிதையும்... பல கவிதைகளும்" என்னும் தலைப்பில், நவீனக் கவிதைகள் இடியாப்ப இழை போல், வரிகள் ஒன்றை ஒன்று ஊடுறுவிப் பின்னிக் கொண்டு உட்கருத்து விளங்காமல் சிக்கலானவை; படிப்போருக்குப் பொருள் மயக்கம் அளிப்பவை;  வரிகளை மடக்கி, மடக்கி எழுதுவதா கவிதை என்று கேட்கிறார் வைகைச் செல்வி.  கவிதைகளின் வரிச் சொற்கள் செங்கல் சுவர்போல் அணிவகுத்துக் கட்டப் படாமல், தெளிந்த சிற்றோடை போல் நெளிந்தோடியும், சிரித்தோடியும் கலைத்துவ மணம் பரப்ப வேண்டும்.  வரிகளின் மொழிகள் நளினமாகத் தாளமுடன் நடனமாடி நாதசுரக் கீதம் போலும், வீணையின் நாதம் போலும் ஒலித்து நெஞ்சில் அரங்கேற வேண்டும்.  வெறும் சொற்களை மட்டும் சுடவிட்டுப் பட்டாசு போல் வெடிக்க விட்டால் பார்க்க விந்தையாகவும், வேடிக்கையாகவும் மனதைத் துள்ள வைக்கும்!  ஆனால் அவை எல்லாம் ஒளியற்று விண்ணில் புகையாக மறைந்து, மண்ணில் குப்பையாக நிறைந்து மாசுகளாக மண்டிக் கிடப்பவை!   

எது கவிதை என்னும் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலிதுதான்:  கவிதை என்பது,

உள்ளத்தைப் படமெடுத்துக் காட்டுவது!
உலகத்தை விழித்திரையில் நாட்டுவது!
வெள்ளத்தைச் சிற்றோடையில் கூட்டுவது!
வெண்ணிறத்தைப் பன்னிறத்தில் தீட்டுவது!

பொய்யுலகைக் கண்முன்னே காட்டுவது! 
பூரணத்துவம் நோக்கிக்கை நீட்டுவது!
மெய்யுலகைத் தூண்டிலிட்டு மீட்டுவது! 
மேம்பாட்டை மின்னல்போல் ஊட்டுவது! 

கவிஞர் திலகம் புகாரியின் "அன்புடன்" வலையிதழில் எழுந்த "எது கவிதை" என்ற கேள்விக்கு நான் எழுதிய பதிலுடன் பின்னாங்கு வரிகளைச் சேர்த்துள்ளேன்.  

கவிதையின் தனித்துவப் பண்பு சுருங்கச் சொல்லி சுவையை அளித்தல்.  காவியக் கம்பரின் இராமகதை போல், சமீபத்தில் நீண்ட கவிதை வடிவில் எழுதப் பட்டது, கண்ணதாசன் படைத்த ஏசு பெருமான் வரலாறு.  பத்து அல்லது இருபது வரிகளில் ஒரு கவிதை தன் முழுக் கருத்தை முரசடிக்க முடிய வில்லை யென்றால், ஐம்பது வரிகளில் அது உறுதியாகக் கூற முடியாமல் தவியாய்த் தவிக்கும்!  தற்காலச் சிறு கவிதைகள் நீண்டு போனால், இரண்டு முறைகளில் அவற்றின் அழுத்தமும், நளினமும் குன்றி விடுகிறது!  நேரமின்றி நோக்கும் கண்கள் விரைவாய் நுகரும் நீண்ட வரிகளில், உட்கருத்துத் தண்ணீராகித் தளர்ந்து கரைந்து விடுகிறது!  

மூச்சை எடுத்துக் கொண்டு கடைசியாக ஐம்பதாவது வரியைப் படிக்கும் போது, ஐந்தாவது வரி என்ன சொல்லியது என்பது மறந்துபோய்த் தொடர்ச்சி அறுபடுகிறது!  முடிவில் கவிதை என்ன சொல்லியது என்பது புரியாமல் கண்கள் மேலும், கீழும் தாவி மனம் குழம்பி விடுகிறது!  அவ்விதச் சிரம மின்றி வைகைச் செல்வியின் படைப்புக் கவிதைகளோ அவர் தன் உள்ளக் கடலில் மூழ்கி எடுத்தெழுதிய சின்னஞ்சிறு முத்துக்கள்!  உதடுகள் உதிர்க்காத, உள்ளம் கனலாய் வெளிவந்து ஊட்டிய விழித்திரை மொழிகள்!  உள்ளம் படமெடுத்துக் காட்டிய வெண்திரைக் காட்சிகள்!  பசுமரத்து ஈட்டிபோல், படிப்போர் உள்ளத்தில் பாய்ந்து தைத்துக் குருதியுடன் கலந்து கொள்பவை!    

சர்க்கஸ் விளையாட்டு போல் வார்த்தைகளை பல்டி அடிக்க வைத்து, அந்தரத்தில் தொங்கும் வளையங்களில் தாவி ஊஞ்சல் ஆடுவதா கவிதை?  வார்த்தைகளின் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வதா கவிதை?  இரண்டு மணிநேரம் சர்க்கஸ் ஆட்டத்தைக் கண்டு நாம் பிரமித்தாலும், வெள்ளித் திரையில் உள்ளத்தைத் தொடும் ஒருகலைக் காட்சிபோல், சர்க்கஸ் ஆட்டம் பல்லாண்டு காலம் மனதில் நீடிப்ப தில்லை!  சுருங்கச் சொல்லிக் கதை புனையும் கவிதை ஒரு குட்டித் திரைப்படம்.  கருத்தாட்சி [Theme], சொல்லாட்சி [Word Power], நடையாட்சி [Style], அணியாட்சி [Simile, Metaphor, Allegory, Alliteration, Antithesis, Irony, Personification (Figure of Speech)] மூலம் உள்ளத்தைக் கவர்ந்த கவிதை, நமது நினைவில் அழியாதவாறு ஓட்டிக் கொண்டு விடுகிறது!  அத்தகைய கலைப் படைப்பு நியதிகளைக் கையாண்டு எழுதப் பட்டவையே, வைகைச் செல்வியின் காவியக் கவிதைகள்!  அவரது கவிதைகளில் வரும் வார்த்தைகள் வெறும் குட்டிக்கரணம் போடவில்லை!  சொற்களின் வயிற்றைக் கீறி, சுவைப்போரின் நெஞ்சைப் பிளக்கவில்லை!  வார்த்தைகள் சிலம்பாட்டம் ஆடாமல், சிந்துபாடிக் கோலாட்டாம் ஆடுகின்றன!  

வைகைச் செல்வி கையாளும் கவிதை நடை தென்றல் நடை.  வான மண்டலத்தில் மேகங்கள் நகர்வதைப் போல் வரிகள் மிதந்து செல்கின்றன!  கவிதை மொழிகள் அன்ன நடை போடுகின்றன!  கராத்தே முறையில், கவிதை வரிகள் காலைத் தூக்கிப் படிப்போரை எட்டி உதைக்காமல், கசப்பையும் கனிவோடு சொல்கின்றன!  புதுக் கவிதைகள் போல் சொற்கள் சடுகுடு பாடிக் கபடி ஆடாமல், நீரின் மீது படகுபோல் மெதுவாய்த் தானாய்ப் போகின்றன. துப்பாக்கி ரவைகள் போல் சுட்டுத் தள்ளி மனத்தில் புரட்சி செய்தாலும், புதுக் கவிதைகளின் வரிகள் ஏனோ மனதில் பதிந்து கொள்வதில்லை!  காரணம் புதுக் கவிதைகள் பலவற்றின் பொருள் பளிச்செனத் தெரியாமல் புதிராகப் பதுங்கிக் கொண்டிருப்பதால்தான்!  தேவையற்ற அமங்கலச் சொற்களைப் புகுத்திக் கொண்டு, படிப்போரை அதிர்ச்சியிலும், அருவருப்பிலும், ஆங்காரத்திலும் அவரது கவிதைகள் தள்ளுவதில்லை;  ஆணும், பெண்ணும், சிறுவரும், வயோதிகரும் அவரது கவிதைகளைப் படிக்கலாம்.  படிப்போர் கவனத்தை ஈர்க்கவும், பணப் பெட்டியை நிரப்பவும், பகட்டாக அவரது கவிதைக் காவியம் படைக்கபட வில்லை!  

வைகைச் செல்வியின் கவிதைகள் தனித்துவம் கொண்டவை.  கலைத்துவம் செழித்தவை. உண்மைக் கருத்துக்கள் கவிதைக்கு ஆத்மாக உள்ளொளி காட்டிப் புறவொளி வீசுகின்றன.  கவிதைகள் யாவும் தனித்துவ முறையில் தாமாக நம்முடன் உரையாடுகின்றன.  வைகைச் செல்வியின் எந்தக் கவிதையும் சங்கு ஊதி உரத்த குரலில் பிறருக்கு உபதேசிக்க வில்லை!  ஒரு கவிதை சங்கை வாயில் வைத்துக் கொண்டு சிங்கம் போல் உறுமிக் கர்ஜிக்கும் போது அதன் சப்தம் செவிப்பறையில் விழுவதற்குப் பதிலாக அதைக் கிழித்துப் போட்டு மூளையில் பதியாமல் நழுவுகிறது.  சொல்லாமல் சொல்லும் நெறியும், செய்யாமல் செய்த உதவியும் என்னாளும் மறக்கப் படுவ தில்லை.  வைகைச் செல்வியின் வரிகள் வாழ்க்கை நெறியைச் சொல்லாமல் சொல்கின்றன.  ஒவ்வொரு கவிதையும் அவரது மனதைக் கண்ணாடி போல் காட்டுகிறது. "அம்மி" என்னும் அவரது கவிதைக் கோப்பு வழக்கம் போல் பெண்களின் பிரச்சனைகளைக் கும்மி அடிக்காமல், பளிச்செனக் கண்ணில் மின்னல்போல் வெட்டி அதிர்ச்சி கொடுக்கிறது. கண்ணில் விழும் இல்லறத் தூசுகளை மெல்லவே காட்டுகிறது!  ஆண்-பெண் நட்பு உறவுகளில் அனுதினம் முட்களாய்க் குத்திவரும் முள்வேலிகளைக் காட்டுகிறது!  சூழ்வெளி மாசுகளை அகண்ட வெண்திரையில் ஒளிபெருக்கிக் காட்டுகிறது! 

வைகைச் செல்வியின் கவிதைகள் சில நமக்குக் கதை சொல்லுகின்றன!  சில நாடகமாய் கண்முன் நடக்கின்றன! சில புயல்போல் நெஞ்சைத் தாக்குகின்றன! சில தென்றல் போல் மேனியைத் தழுவுகின்றன! சில கவிதைகள் நெஞ்சை முள்ளாய்க் குத்துகின்றன!  மெய்த்துவ வாழ்க்கை முறைகளை மெல்லிய நடையில் சொல்லுகின்றன. சில கவிதைகளில் முடிவில் வரும் ஓரிரு வரிகளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது!  சொற்கள் எளிதாக இருந்தாலும், தெளிவாகத் தெரிந்தாலும் வரிகள் ஒட்டு மொத்தமாய் என்ன உரைக்கின்றன என்று புரியாமலும் போகலாம்!

பெண்மையும், விடுதலையும்!

கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் சொல்கிறது.  ஆனால் வைகைச் செல்வி, "உள்ளே ஒரு வானவில்" என்னும் கவிதையில்:

தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்,
இல்லையெனில் மரண வேதனை! 
தாழ் திறக்கா விட்டாலும்
மரண வேதனை! 
அந்திப் பொழுதின் வானவில்! 

பரிதி மறையும் போது செவ்வானின் சிவப்பொளி பட்டால், அந்திப் பொழுதின் வானவில் எந்த நிறத்தில் ஒளிக்கும்!  நிச்சயம் ஏழு நிறங்களைக் காண முடியாது!  வெண்ணிற ஒளி ஒன்றுதான் மழைத்துளிகளின் ஊடே நுழையும் போது பன்னிற வானவில் தோன்றும். செந்நிற ஒளியில் வானவில்லின் கண்சிவந்து போகும், கதவு திறக்கும் என்று காத்திருக்கும் மங்கையின் விழிகளைப் போல்!   

பகலென்று தெரிந்தால், 
சிறகுகளை விரிக்கலாம்!
இரவென்று தெரிந்தால் 
கூட்டுக்குள் ஒடுங்கலாம்!   

அந்திப் பொழுதாய் இருந்தாலும்,
சில்லென்ற குளிர்காற்றும், 
சிங்காரப் பூமணமும்,
உன் முத்தம் தந்திடுமோ?

கால மயக்கத்தில் 
கண் விழித்துப் பார்க்கையில் 
பகலா, இரவா ஏதும் புரியவில்லை! 
அந்திப் பொழுதின் வானவில் .....

செந்நிறத்தில் மங்கிக் கலங்கிப் போயிருக்கும் மங்கையின் மதி மயக்கத்தைக் காட்டுகிறார்.  

பெண்டிர் விடுதலையைப் பற்றிக் குறிப்பிடும் போது, பாரதத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆண், பெண் அனைவரும் அடிமைகளாய்ச் சிறையிலிருந்தோம்!  காந்தி, நேரு, பட்டேல், பாரதியார் வீர சுதந்திரம் வேண்டிப் போராட நம் நாட்டில் சுதந்திரச் சூரியன் உதித்துச் சிறைக் கதவுகள் திறந்தன!  ஆனால் இந்திய சமூதாயத்துக்கு முழு விடுதலை கிடைக்க வில்லை!  உண்மையாகக் கிடைத்தது பாதி விடுதலையே!  அதுவும் யாருக்குக் கிடைத்தது?  பாதித் தொகையான ஆடவருக்கு மட்டுமே!  மீதித் தொகையானப் பெண்டிருக்கு?  விடுதலைக்குப் பதில் ஆடவரின் தடுதலை பெண்ணுக்குக் கிடைத்தது!  பெண்களின் விடுதலை களவாடப் பட்டு, இரண்டு மடங்கு அசுர பலத்துடன் ஆதிக்கம் செலுத்தும் ஆடவருக்குப் பெண்கள் அடிமைகள் ஆக்கப் பட்டார்!  அன்னியனுக்கு அடிமையாய் இருந்த பெண்டிரினம், இப்போது ஆடவருக்கு அடிமை ஆகி யிருக்கிறது! இவ்வுலகம் ஆடவரின் உலகம்! ஆடவர்களால் உண்டாக்கப் பட்ட உலகம்!  ஆடவருக்காக உண்டாக்கப் பட்ட உலகம்!  பாரத தேச வீடுகளின் கூரையைப் பிரித்துப் பார்த்தால் இப்போதும் பெரும்பான்மையான வீடுகளில், பெண்கள் இரண்டாம் வகுப்புப் பிறவிகளாகத்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள்.  பிறருக்குத் தெரியாமலும், வெளியே சொல்ல முடியாமலும் பல்லாயிரக் கணக்கான பாரதப் பெண்டிர், ஆடவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு அடிமைகளாய், சேடிகளாய்ப் பணிசெய்து மெªனக் கண்ணீர் விட்டு ஊமைகளாய் நெஞ்சுக்குள்ளே அழுது கொண்டிருக்கிறார்கள்!  

அன்று
அடிமைச் சிறையில் இருந்தோம்.
காந்தியும், நேருவும், பட்டேலும், ....
பாரதியாரும்,
வீர சுதந்திரம் வேண்டிப்
(போராட)
(சிறைக்) கதவுகள் திறந்தன!
தலைமறைகள் கடந்தோட
(பெண்களாகிய) நாங்கள்,
இன்றும் சிறையில்தான்!
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்,
சாவி 
எங்களிடமே உள்ளது! 

பாரத தேசத்தில் பூரண சுதந்திரம் அடைந்தவர் மெய்யாக ஆடவர் மட்டுமே!  தேவையான மானிட உரிமைகளுக்குப் போராடி ஏமாற்றம் அடையும் பெண்டிருக்கு எப்படிக் கிடைக்கும் விடுதலை?  எப்போது கிடைக்கும் உரிமைகள்?  அடிமைப் பட்ட பெண்ணுலகம் வீறுகொண்டு எழுந்து சிறைக் கதவுகளை படாரென்று உடைக்கவோ அல்லது பூட்டைக் கிளிக்கென்று திறக்கவோ அவரிடமே உறுதியும், சாவியும் உள்ளது என்று சுட்டிக் காட்டுவது அவரது புரட்சி மனதை வெளிப்படுத்துகிறது.  ஆனால் வல்லமை பெற்ற ஆணாதிக்க உலகம் பெண்களின் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கண்ணைக் கட்டி, கையைக் கட்டி, காலைக் கட்டிச் சாவியைக் களவாடி, நெஞ்சுறுதியை நசுக்கி வருகிறது என்பது கட்டுரையாளர் கருத்து!     

"உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ?" என்னும் கவிதையில் வாழ்வின் இன்ப துன்பங்களில் ஒன்றான ஆண்-பெண் நட்பைப் பற்றி அஞ்சாமல் நெஞ்சுறுதியுடன் கூறுகிறார்.  தாமரை இலைமேல் ஒட்டாமல் உருளும் நீர்த்துளி போல், ஆணும் பெண்ணும் தோழமை உணர்வோடு பழக முடியும் என்பதை, வெகு, வெகு அழகாகக் கூறுகிறார்!  வாழ்க்கையில் தந்தை, தமையன், கணவன், புதல்வனைத் தவிர பிரியமான மற்றோர் அன்னிய ஆடவனுடன் உரையாடுவது, உறவாடுவது, உலவி வருவது முற்றிலும் தவறு;  அதுவும் நட்பு என்பது அறவே கூடாது என்னும் பாட்டி காலப் பழைய கோட்பாடுகள் நாட்டை விட்டு நழுவிச் செல்லும் காலமிது!  ஆணும், பெண்ணும் தாமரை இலை மீதோடும் தண்ணீர் போல், ஒட்டாமல் உறவாடலாம், உரையாடலாம், ஒன்றாகப் பழகிக் கொள்ளலாம் என்ற மனிதப் பண்பு நியதி அவரது கவிதைகளிலும், கதைகளிலும் ["தாயின் மடியில்"] கனிவாக வெளிப்படையாகக் காணப்படுகின்றன.

(தொடரும்)

கடந்தவை:
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது-1...உள்ளே

++++++++++++++++++++++++
வைகைச் செல்வியின் "அம்மி" 
கவிதைத் தொகுப்பு, காவ்யா வெளியீடு, 
[முதல் பதிப்பு: டிசம்பர் 2002], விலை ரூ.40 
14. முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை: 600 024  
++++++++++++++++++++++++


சி. ஜெயபாரதன்
jayabarat@tnt21.com  [S. Jayabarathan (April 3, 2006) Rivised]

 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
aibanner