இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2008 இதழ் 107  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
பயனுள்ள மீள்பிரசுரம்: 'பூ வனம்' வலைப்பதிவிலிருந்து...
"ஜீவகீதம்" ஜெகசிற்பியன்!

- ஜீவி -


ஜெகசிற்பியன்!அது 1957-ம் ஆண்டு. 'ஆனந்தவிகடன்' நடத்திய அதன் வெள்ளிவிழா போட்டியில் இரு முதற்பரிசுகளை தன் சிறுகதைக்காகவும், சரித்திர நாவலுக்காகவும் பெற்றவரைத் தமிழ் எழுத்துலகும், பத்திரிகை படிக்கும் வாசகர் வட்டமும் வியப்புடன் நிமிர்ந்து பார்த்தன.
ஜெகசிற்பியன் தமிழ் பத்திரிகைகளின் வெகுஜன வாசகர்களுக்கு அறிமுகமான ஆரம்பக்கதை இதுதான். பரிசு பெற்ற சிறுகதையின் பெயர்: "நரிக்குறத்தி". வெளியூர்களில் நாடோடிகளாகச் சுற்றித் திரியும் அந்த சமூக ஆண்களும், பெண்களும் பாசிமணி, ஊசி, மணிமாலை விற்கத் தனித்தனியாகச் சென்றாலும், சூரியன் மலைவாயில் விழும் மாலை நேரத்திற்குள் பெண்கள் தங்கள் இருப்பிடம் வந்துவிட வேண்டும். இது அந்த சமூக கட்டுப்பாடு. பாடிகோடியும், ஆடிகோடாவும் தம்பதிகள். பாசி, மணிமாலை ஏந்தி விற்கச்சென்ற புதுமணப்பெண் பாடிகோடி, ஆற்றில் திடீர் வெள்ளம் பிரவாகமாய் பொங்கி எழ அக்கரையில் மாட்டிக்கொண்டு இக்கரை வர முடியாமல் தவிக்க, நொப்பும் நுரையுமாக சுழித்து ஓடுகின்ற ஆற்றின் கரையின் இருமருங்கிலும் இருவரும் அலமந்து ஓடியாடி, இரவு முச்சூடும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிற விதமாய், "ஆடிகோடா..பாடிகோடி.." என்று ஓலமிட்டது, ஆண்டுகள் பல ஓடிப் போயினும், இப்பொழுதும் சிந்தையில் ஒலிக்கிறது.. கொஞ்சம் கொஞ்சமாக,இரவு அந்தப் பகுதியைத் தன் இருட்டில் விழுங்கத் தொடங்க பின்னிரவும் நெருங்க..நெருங்க..நரிக்குறத்தி' சோகமுடிவைக் கொண்ட ஜெகசிற்பியனின் பேசப்பட்டக் கதை.

சரித்திர நாவலுக்கான முதற்பரிசைத் தட்டிச்சென்ற "திருச்சிற்றம்பலம்" நாவல், ஓவியர் கோபுலுவின் படங்களுடன் அற்புதமாக ஆனந்தவிகடனில் வெளிவந்து படிப்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தில்லை நடராஜர் ஆலயத்தை விரிவுபடுத்திப் பெரிதாகக் கட்ட விரும்பிய அநபாய குலோத்துங்கச் சோழன், கோயிலிலிருந்த கோவிந்தராஜப் பெருமாளை அகற்றிக் கடலில் அமிழ்த்த முயல, அரச குலப் போட்டிப் பங்காளிகள் அந்த நிகழ்ச்சியை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சிபீடத்தைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சியாய் சைவ-வைணவ பூசல்கள் கிளப்பபடுகிற பின்னணியில் பக்தியும், காதலும் பின்னிப் பிணைந்த நாவல். ஏழிசை வல்லபி, காடவராயர், பரிவாதினி, காளத்தி தேவன் போன்ற மறக்க முடியா பாத்திரப் படைப்புகள்.

ஜெ.சி.யின் முத்திரை பதித்த இன்னொரு சரித்திர நாவல், "நந்திவர்மன் காதலி".ஜெ.சி.யின் முத்திரை பதித்த இன்னொரு சரித்திர நாவல், "நந்திவர்மன் காதலி". அதன் தொடர்ச்சியாக "மாறம் பாவை" தவிர, "நாயகி நற்சோணை", "ஆலவாய் அழகன்" (ஆனந்த விகடன்) "மகரயாழ் மங்கை", "பத்தினிக்கோட்டம்" என்று நினைவுக்கு வரக் கூடியதாக நிறைய எழுதியிருக்கிறார் ஜெகசிற்பியன். கடந்தகால சரித்திரப் பின்னணி கொண்டு சரித்திர நாவல்களைப் படைத்தவர், நாட்டு நடப்புகளை நிலைக்களனாகக் கொண்டு, மிகச் சிறந்த சமூக நாவல்களையும் படைக்கத் தவறவில்லை.

நில உடமை சமூகப்பிரதிநிதிகளின் பேராசைகளையும், கூலி விவசாயிகளின் அல்லாடலையும் நெஞ்சம் கனக்கச் சொல்லும் "மண்ணின் குரல்", கல்கியில் தொடராக வந்த "சொர்க்கத்தின் நிழல்", "ஜீவகீதம்", "கிளிஞ்சல் கோபுரம்", அன்றாடங்காச்சிகளின் அவலவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் "காணக் கிடைக்காத தங்கம்",மறக்கவே முடியாத "இனிய நெஞ்சம்" ஆகியவை அவரது ஆத்மார்த்த நாவல்கள். தொழிற்சங்கம்--தொழிலாளர் அவர்தம் வாழ்க்கைச் சிக்கல்கள் என்று நிஜத்தின் சாயலாய் ஜெகச்சிற்பியன் படைத்த "இன்று போய் நாளை வரும்" நாவலில் சமூகத்தின் மீதுள்ள அவரது பார்வையை தீட்சண்யமாய் பதிந்திருக்கிறார். அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கை நிலையை உரத்த குரலாய் பிரகடனம் பண்ணியது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் ஏழைமக்களின் மீது எல்லையற்ற பரிவு காட்டுகிற ரட்சகராய் அவர் திகழ்ந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

நாடக உலகையும் மறந்து விடாமல், அவர் படைத்திட்ட, "சதுரங்க சாணக்கியன்" என்கிற நீண்ட நாடகத்தைச் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மகாகவி பாஸனின் மாணவியான கெளதமி என்னும் நாட்டிய நங்கை, சாணக்கியரைக் காதலிப்பதும், அது பற்றி அறியாத சந்திரகுப்தன் கெளதமியைக் காதலிப்பதும் இந்த நாடகத்தின் முடிச்சு. அரசியல் சதுரங்க விளையாட்டில், இது பற்றி ஏதும் அறியாத சாணக்கியன், சந்திரகுப்தனின் மறுப்பையும் மறுத்து, செலூகஸ் நிகேடாரின் அருமைப் புதல்வி, டயோபான்டீஸை அரசியல் காரணங்களுக்காக சந்திர குப்தனுக்கு திருமணம் செய்விக்கிறான். எல்லா சிக்கல்களும் கொண்ட, சாதுர்யமாக எழுதப்பட்ட இந்த நாடகம் ஜெகசிற்பியனின் எழுத்தாற்றலைப் பறைசாற்றும்.

தமிழின் புதின, சிறுகதை படைப்பிலக்கியத்தில் ஜெகசிற்பியன் வாழ்ந்த காலத்தில் சிறப்பாகச் சாதித்திருக்கிறார் என்பது வரலாற்று
உண்மை. காந்தீயத்திலும், சர்வோதய சிந்தனைகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இவர், இந்த தேசத்தின் சகல
உன்னதங்களுக்கும் அந்தக் கொள்கைகளே வழிநடத்தி இட்டுச் செல்லும் என்று மனதார நம்பி, அவற்றை எழுத்திலும்
பிரதிபலித்திருக்கிறார். அவர் சமகாலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டு, வாசகர்கள் சுலபத்தில் புரிந்து கொள்கிற மாதிரி நிகழ்கால சமூகப்போக்குகளை அதன் வடுக்களைப்பற்றி துணிந்து எழுதியவர் ஜெகசிற்பியன் என்பது அவருக்கே உரிய பெருமை.

ஜெ.சி.யின் சிறுகதைகள் விதவிதமானவை. வெவ்வேறு குணாம்சங்களைக் கொண்டவை. சமூக வார்ப்புகளுக்கு வண்ணம் தீட்டிய கலைஞன் அவர். அந்தச் செயலையும், தன் சொத்தாக அவர் தன்னகத்தே கொண்டிருந்த ஆழ்ந்த பரிவுணர்வுடன் செய்திருக்கிறார்.
அதனால், அவரது கதாபாத்திரங்கள் நாம் சகஜமாகத் தெருக்களில் சந்திக்கிற சாதாரண மனிதர்களாய் இருந்த போதிலும், அவர்களது
பாசாங்கற்ற உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துகின்ற தன்மை கொண்டிருக்கும்.

தான் வேறு மதத்தைச் சார்ந்தவராய் இருந்தும், இந்து, பெளத்த, சமண மதங்களின் தாத்பரியங்களைத் தனக்குள் ஆழ்ந்து
உள்வாங்கிக்கொண்டு, அந்தந்த கோட்பாடுகளின் மீது மிகுந்த மரியாதையுடனும், ஆழ்ந்த புலமையுடனும் தனது நாவல்களில் அவற்றைப் பிரதிபலித்த ஜெகசிற்பியனின் மாண்பு போற்றத்தக்கது.

ஜெகசிற்பியனுக்கு அவரது 53-ம் வயதில் வாழ்க்கை முடிந்து விட்டது. சற்றேறக்குறைய 30 ஆண்டுகளின் இலக்கியப் பணிக்கு
முற்றுப்புள்ளி.

ஒழுக்கம், சான்றாண்மை, மொழிப்பற்று, தேசிய உணர்வு போன்ற உன்னத இலட்சியங்களின் பிரதிநிதியாய் எழுத்துலகில் சாதித்துக்காட்டிய ஒரு தமிழ் எழுத்தாளரின் நினைவுகளை, காலச்சுவட்டின் புரட்டிப் போடும் மாற்றங்களிலும் மறந்து விடாமல் போற்றிப் பாதுகாப்பது நமது கடமை.

நன்றி: ஜீவியின் 'பூ வனம்' வலைப்பதிவு.
http://jeeveesblog.blogspot.com/2008/02/blog-post_22.html

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner