இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2009 இதழ் 119  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
ஒரே மாதிரி இரு வேறு 'வடு'க்கள்

ஜெயந்தி சங்கர்


(சிங்கப்பூர் எழுத்தாளர் விழா - 2009 வின் அங்கமாக 31 அக்டோபர் அன்று நடைபெற்ற ஒரு நிகழ்விற்காக தயாரிக்கப்பட்ட ஆங்கில
உரையின் தமிழாக்கம். சீனர் மற்றும் ஆங்கிலேயர்கள் பார்வையாளர்களாக வந்திருந்ததால் கலந்துரையாடலும் ஆங்கிலத்திலே அமைந்தது. )

ஜெயந்தி சங்கர்வணக்கம் நண்பர்களே! இவ்வாண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் கரு Undercovers என்றறிந்த தருணத்திலிருந்து நான் பலவாறாக
சிந்திக்கலானேன். Undercovers என்றால் எனக்கு முயற்சிக்கப்படாத கருக்கள், சொல்லப்படாத சொற்கள், வாசிக்கப்படாத நூல்கள்
அறியப்படாத எழுத்தாளர்கள் என்று பலதும் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் Prisoner of Tehran, Thousand Splendid Suns மற்றும்
Unaccustomed Earth போன்ற பல நூல்கள் குறித்து உங்களுடன் பகிரவென்று முதலில் எண்ணினேன். பிறகு, பெண் நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் எழுதாளர்கள் மற்றும் பெண் பாத்திரங்கள் குறித்து கலந்துரையாட இருப்பதை அறிந்ததுமே அந்தத் தளத்தில் யோசிக்க முற்பட்டேன். கோதைநாயகி அம்மாள் முதல் ராஜம் கிருஷ்ணன், திலகவதி, அம்பை, பாமா, வத்சலா என்று ஏராளமான பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தமிழ் இருக்கின்றன. நான் பெண்படைப்பாளிகளின் தமிழ் சிறுகதைகளை சிறிய அளவில்
அறிமுகப்படுத்தலாம் என்று தீர்மானித்தேன். இருப்பினும், நேற்று வரை எந்தெந்தச் சிறுகதைகளை எடுத்தாள்வதென்ற தெளிவின்றி
இருந்தேன். தமிழில் பெண்ணியப் பிரச்சனைகள் குறித்து மட்டுமின்றி சமூக மற்றும் பொதுப் பிரச்சனைகள் குறித்தும் பெண்
எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல இங்கே உங்களுடன் பரிந்து கொள்ளக்கூடிய தகுதியுடையவை. நேர நெருக்கடிகள் காரணமாக நான் இரண்டே இரண்டு தமிழ்ச் சிறுகதைகளை மட்டுமே இன்றைக்கு உங்களுக்கு எடுத்துக் காட்டவிருக்கிறேன். அதே காரணத்துக்காக நான் இன்றைக்கு தமிழ்ப் புதினங்கள் மற்றும் கவிதைகளுக்குள் போகப் போவதில்லை.

செம்மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழி மிகத் தொன்மையுடையதும் கூட. நவீன தமிழ் இலக்கியம் வெளியுலகில் அடைந்திருக்க
வேண்டிய கவனத்தை அடையாதிப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இன்றைக்கு அவற்றுக்குள் நான் போகப் போவதில்லை. சில
உத்திகளும் செய்நேர்த்திகளும் மேலை நாடுகளில் முயற்சிக்கப்படுவதற்கு முன்பே நவீன தமிழ் இலக்கியத்தில் பரவலாகியுள்ளன. மேற்கில் யாரேனும் ஒரு பெயர் வைத்து அழைத்ததும் தான் இங்கே கவனிக்கவே படுகிறது. வேடிக்கையென்னவென்றால், பெரும்பாலான வாசகர்களுக்கு அவற்றையெல்லாம் யாரேனும் சுட்டிக்காட்டவு வேண்டியிருக்கிறது. தமிழில் வாசிக்காத உங்களில் எத்தனைம்பேர் நம்புவீர்களோ தெரியாது, ஆனால் நவீன தமிலக்கியத்தில் எழுதப்பட்டுள்ள பல சிறுகதைகள் தரத்தில் உலகளவில் பேசப்படும் சிறுகதைகளுக்கு நிகரானவை; சில அவற்றைவிடவும் மேம்பட்டவை. இது என்னுடைய சொந்தக் கருத்து மட்டுமில்லை. இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கனடாவைச் சேர்ந்த சுமதி ரூபன் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உமா மகேஸ்வரி ஆகிய இருவரும் ஒரே கருவை எடுத்து 'வடு' என்ற கனடாவைச் சேர்ந்த சுமதி ரூபன் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உமா மகேஸ்வரி ஆகிய இருவரும் ஒரே கருவை எடுத்து 'வடு' என்ற
ஒரே தலைப்பில் இருவேறு சிறுகதைகளை எழுதியிருப்பது அழகான மிகச் சுவாரஸியமான ஒரு தற்செயல். கதாசிரியர்கள் இருவரும்
சிறுமி ஒருத்தி பாலியல் கொடுமைக்காளாவதைப் பற்றியே எழுதியிருக்கிறார்கள். ஒரே கருவென்ற போதிலும் கதைப் போக்கும் பாணியும் முற்றிலும் வெவ்வேறானவை.  சுமதி ரூபன் தன் சிறுகதையில் மல்லிகா என்ற இளஞ்சிறுமி குடும்ப நண்பராகக் கருதப்படும் நடுத்தர வயதுடைய ஓர் ஆணால் கொடுமைப்படுத்துவதைப் பற்றி எழுதுகிறார். அந்த லண்டன் மாமா வன்முறை வெளித்தெரியாதவாறு மிகச் சாமர்த்தியமாகவும் திருட்டுத் தனமாவும் தன் பாலியல் வக்கிரங்களுக்கு சிறுமியைப் பயன்படுத்துகிறார். அவர் வீட்டுக்கு அடிக்கடி மல்லிகாவை அனுப்பும் அவளுடைய அம்மா பழங்காலத்து அம்மாக்களைப் போலவே மிகவும் வெகுளியாக இருக்கிறார். இப்போது மல்லிகா வளர்ந்து பெரியவளாகி தான் ஒரு மகளைப் பெற்றிருக்கும் நிலையில் அதிக பதட்டத்துடன் இருக்கிறாள். தன் வீட்டில் தங்கியிருக்கும் நேசன் தன் மகள் அஞ்சலியிடம் தவறாக நடப்பானோ என்று மல்லிகாவுக்கு எப்போதும் ஒருவித நெருடல். மல்லிகாவின் குடும்பப் பொருளாதாரம், புதிய புலம்பெயர் நாட்டில் துவங்கியிருந்த புத்தம் புதிய வாழ்க்கை எல்லாமாக அவள் வேலையை உதற விடுவதில்லை. அஞ்சலியைப் பள்ளிக்குக் கூட்டிப்போவது, கூட்டிவருவது, உணவு ஊட்டுவது என்று நேசனின் எல்லா உதவிகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. மல்லிகா அவனது உதவிகளை உள்ளூரப் பாராட்டிய போதிலும் அவளது இளமைப் பருவத்து கசப்பான அனுபவங்கள் அவளைத் தொடர்ந்தும் பதற்றம் கொள்ளவே செய்கின்றன. இளமைக் காலச் சம்பவங்கள் குறித்து, “அம்மாவிடம் சொல்லாமல் நான் இருந்தது சரியா?”, “லண்டன் மாமாவின் தொடுகைகள் என்னுடைய சம்மதத்துடன் நிகழ்ந்தவையா?”, "அந்த எட்டு வயதிலேயே எனக்கு அதெல்லாம் வேண்டியிருந்ததா?", "பயத்தினால் தான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேனா?", "எல்லாமே அவர் கொடுத்த லண்டன் சாக்கலேட்டுகளுக்காக தானா?" என்று குழப்பும் ஏராளமான ஆழ்மனக்கேள்விகள் மல்லிகாவுக்குள்ளும் தொடர்ந்து சுற்றுகின்றன. அப்போது படுக்கையை அவள் நனைத்ததற்கான காரணத்தை அவள் அம்மா கேட்டதில்லை என்றபோதிலும் அஞ்சலி படுக்கையை நனைக்கும் போது அக்கறைமிகுந்த தாயான மல்லிகா அவளிடம் கேள்விகள் பல கேட்டுத் துளைக்கிறாள். கதாசிரியர் ஒரு அம்மாவின் சிந்தனையோட்டத்தையும் உளவியலையும் மிக அற்புதமாகச் சித்தரித்திருப்பார். அக்காலப் பெற்றோருக்கு இவ்வகையான கொடுமைகள் குறித்த அறிவிருந்ததில்லை. ஆனால், அதே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி இக்காலத்து நவீன பெற்றோராகும் போது அக்கறையென்ற பெயரில் தேவைக்கதிக பதட்டம் கொள்கின்றனர். ஒரு சிறுமியோ சிறுவனோ தன் சம்மதமின்றி அந்நியர் தன் அந்தரங்க உடல் பாகங்களைத் தொட்டால் பெற்றோரிடமோ பெரியவர்களிடமோ சொல்ல வேண்டும் என்று இப்போது மல்லிகாவுக்கமட்டுமில்லை அஞ்சலிக்கும் தெரியும். நேசன் அஞ்சலியை ஏதும் செய்தானா இல்லையா என்பது குறித்து சிறுகதை தொடுவதில்லை. சொல்லாத சொற்கள் வாசகனின் சிந்தனைக்கு விடப்படுகிறது. பிள்ளை பெற்றோரிடையே பரவி வரும் விழிப்புணர்வு இவ்வாறான குற்றங்களைத் தடுக்கின்றன என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம். உண்மையில் அவ்வாறான விழிப்புணர்வு குற்றம் செய்ய நினைப்போரையும் ஒரு கட்டுக்குள் வைக்கிறது. மல்லிகா காணும் ஒரு பயங்கரக் கனவிலிருந்து சிறுகதை ஆரம்பிக்கிறது. இலங்கையிலிருந்து லண்டன் மாமாவின் மனைவி கணவனின் திவசத்தன்று, மல்லிகாவை அழைத்து, “இப்படியான கோரச்சாவு அவருக்கு வேண்டுமா? ஒருவருக்கும் தீங்கு நினைக்காத எத்தனை நல்லவர்!”, என்று அழுவதோடு முடிகிறது. சுமதி ரூபனின் கதையின் நடையும் மொழியும் அலங்காரங்களின்றி நேர்தன்மையோடு இருக்கின்றன.

ஒரு கவிஞருமான உமா மகேஸ்வரி தன் சிறுகதையில் தேவைக்கதிகமாகவே வாக்கிய அமைப்பிலும் சொற்களிலும் மொழியிலும் தன் கவனத்தைச் செலுத்தியிருப்பதாக சில வாசகர்கள் உணரக்கூடும்.ஒரு கவிஞருமான உமா மகேஸ்வரி தன் சிறுகதையில் தேவைக்கதிகமாகவே வாக்கிய அமைப்பிலும் சொற்களிலும் மொழியிலும் தன் கவனத்தைச் செலுத்தியிருப்பதாக சில வாசகர்கள் உணரக்கூடும். தன் சிறுகதையில் அவர் பதின் பருவத்தை எட்டிய பின்னரும் மாதவிலக்காகாத ஒரு சிறுமியைப் பற்றி எழுதுகிறார். பெற்றோர் வருந்துகிண்ரனர். பெற்ற தந்தையே மகளை இழிவாகப் பார்ப்பது தான் மிக அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. ஒரு மந்திரவாதியிடம் கொண்டு போய் விடுமளவுக்கு அவர் கொடூரமானவராக இருக்கிறார். மந்திரவாதி மகளின் நிலையைச் சரி செய்வார் என்று நம்பி ஒரு முழு இரவும் அவளைத் தனியாக அங்கே விடுகிறார்கள். இன்றும் உள்ளடங்கிய ஊர்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மற்றும் சடங்குகள் நடப்பது உங்களில் பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கலாம். சூழலும் சடங்குகளும் மிக எதர்த்தமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. வாசிப்போருக்கும் காட்சிகள் கண்முன்னே விரியும். காலையில், பெற்றோர் கூட்டிப்போக வரும்போது மந்திரவாதி அவள் நெற்றியில் விபூதி வைக்க வரும் போது, அவள் அவன் கையைக் குரோதத்துடன் தட்டிவிடுகிறாள். அப்போது தான், “கன்னி ஆவி ஒண்ணு கர்பவாயில அடச்சிட்டிருக்கு. இன்னும் நாலஞ்சி தடவ கூட்டிட்டு வந்த விரட்டிரலாம்", என்று மிகவும் குரூரமாகச் சொல்கிறான். பெரியதொரு பாதகத்தைத் தான் செய்துவிட்டு சிறுமியின் அச்சிறிய செய்கை அவனை உசுப்பி விடுவது தான் எத்தனை பெரிய நகைமுரண்! அந்தச் சம்பவத்தைக் குற்றமாகப் பார்க்காமல் சிகிச்சையாகப் பார்க்கும் கிராமிய மக்களின் அறியாமையை உமா மகேஸ்வரி தன் எழுத்தில் மிக அழகாகக் கொண்டு வருகிறார். சிறுமியின் தாயிற்கு மகளை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு அவள் உடல்முழுவதுமிருந்த காயங்களாலும் காலிடுக்கிலிருந்து வழிந்த உதிரத்தாலும் விஷயம் தெரிகிறது. பதறியபடி, “இனிமே யாராச்சும் கேட்டா ஆயிட்டேன்னு சொல்லிடு”, என்கிறாள். இந்தச் சிறுமிக்கு முதுகில் ஒரு வடு ஏற்பட்டுவிடுகிறது. உமா மகேஸ்வரிக்கு சிறுமியின் மனதில் ஏற்பட்ட வடு மட்டும் போதவில்லை போலும், தன் சிறுகதையை மேற்கொண்டு வளர்த்தெடுக்க. இந்த வடு சிறுகதையின் முடிவில் பின்னவீனத்துவ திருப்பம் கொள்கிறது. இந்தச் சிறுமிக்கு பின்னாளில் மணமாகிறது. ஆனால், சிறுவயது சம்பவம் அவளுக்குள் ரணமாகி நிலைத்து விடுவதால் அவள் இறுதிவரை பூப்பதேயில்லை. கணவன்
அடிக்கடி அந்த வடுவைப் பற்றி கேட்கிறான். அவள் சம்பவத்தைப் பற்றியோ வடு ஏற்பட்ட விதத்தைப் பற்றியோ மூச்சுவிடுவதில்லை.
தன் சிறுவயது குறித்தும் தன் உடல் நிலை குறித்தும் கூட இறுதிவரை அவள் ஒன்றும் சொல்வதில்லை. அவர்களிருவரும் கூடும் முன்னரும் கூடும் நேரங்களிலும் அவள் தன் பயத்தையும் குற்றவுணர்வையும் மிகச் சாமர்த்தியமாகப் பேசி மறைத்து கணவனில் ஒரு இயலாமையையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்திவிடுகிறாள். தன்னால் அவள் உணர்வைத் தூண்ட முடியவில்லை என்று அவனும் குற்றவுணர்வில் புழுங்குகிறான். ஒவ்வொரு முறையும் அவள் அவனை மன்னிப்பதாகச் சொல்லி பெருந்தன்மையோடு தானிருப்பதாகக் காட்டி தனக்குள் ரகசியமாக மகிழ்கிறாள். இந்தப் பாத்திரப்படைப்பு சற்றே விநோதமானது. எப்போதோ எவனோ ஒருவன் செய்த குற்றத்திற்கு இப்போது இவனைப் பழி வாங்குகிறாள். நெடுகிலும் கணவனை 'அவன்' என்றே குறிப்பிடுகிறார். கணவன் என்ற பெயரில் எவனிருந்தாலும் அவளது அணுகுமுறை அப்படித் தான் இருக்குமென்று இதன் மூலம் உமா மகேஸ்வரி சொல்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. சிறுகதையின் முடிவில் முதுகிலிருக்கும் வடு மெதுவாக கட்டிலடியில் பதுங்கி பல நூறாகப் பெருகி நூறு கால்களால் நடனமாடுகிறது. அதை அவள் பயமோ அதிர்ச்சியோ இல்லாமல் பார்க்கிறாள். இதன்மூலம் அவள் மனதில் ஏற்பட்ட வடுவை மட்டுமின்றி ஆழ்மனதில் ஏற்பட்டிடுக்கும் குற்றணர்வு மற்றும் அவமானம் போன்றவற்றையும் அவள் கடக்கிறாள் என்று கதாசிரியர் சொல்வது போலுள்ளது.

இந்த இரண்டு சிறுகதைகளிலும் மிகவும் சுவாரஸியமான விஷயம் என்னவென்றால், நடை, மொழி, சூழல், அணுகுமுறை, வடிவம்,
முழுமை என்று எல்லாவற்றிலும் முற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற அதே வேளையில் கருவும் தலைப்பும் ஒன்றாகவே இருக்கிறது.
உமாவுடைய குரல் சந்தேகமின்றி ஒரு பெண்ணியக் குரல். இருவருமே தன்மை ஒருமையில் எழுதவில்லை. எனினும், பெண் குரல் என்பதில் சந்தேகமில்லை. வட்டாரக் குரலில் கதை சொல்லும் உமா மகேஸ்வரியின் பாத்திரத்தின் மனதில் ஏற்படும் பெரிய காயமும் இயலாமையும் அவளில் பழிவாங்கும் உணர்ச்சியும் சோகமும் விட்டுச் செல்கின்றன. இது இன்னொருவனை அதே போன்றதொரு இயலாமையில் தள்ளுகிறது. இங்கே சோகம் அடுத்தடுத்து பரவுகிறது. ஒரு வித பொதுத்தன்மையைத் தரும் புலம்பெயர் பெண்ணின் குரலில் கதைக்கும் சுமதி ரூபனுடைய கதாப்பாத்திரமான மல்லிகா கசப்பான அனுபவத்திலிருந்து பெற்ற பாடத்தை தான் தாயாகும் போது தன் மகளைக் காப்பதில் கொண்டு விடுகிறது. இங்கே சோகம் ஒரு பாடமாகிறது. இது மிக அழகானது. இருப்பினும், அரிதாகவே நடக்கக் கூடியது. சுமதியின் மல்லிகா அதிருஷ்டசாலி. ஒரு கசப்பான சம்பவத்திலிருந்து மனதில் வெறுப்பும் வெறுமையுமே ஏற்படுமென்பது தான் மிக இயற்கையாகத் தோன்றுகிறது. இங்கே தான் கதையின் நம்பகத்தன்மையில் சுமதியை விட உமா துளி விஞ்சி நிற்கிறார். இத்தனைக்கும், சுமதியின் மல்லிகா பலமுறை தவறான முறையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறாள். உமாவின் கதாநாயகி ஒரே ஒரு முறை கொடுமைப் படுத்தப் பட்டிருக்கிறாள். இதுவே முக்கியமாக கவனிக்க வேண்டியது. எனினும், உமாவின் கதாநாயகி பட்ட வலியை மறுப்பதற்கில்லை. சுமதியுடைய கதை வேற்று மொழிகளுக்கு மொழிபெயர்க்க மற்றதை விட மிக ஏற்றதாகத் தெரிகிறது.

நவீன தமிழிலக்கியத்தில் அதன் செழுமையையும் வேற்றுமைகளையும் விரிந்து பரந்த வெளியையும் காட்டக் கூடிய ஏராளமாக படைப்புக்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றில் 'ஒரே போன்ற வெவ்வேறு தன்மை' கொண்ட பல எழுத்துக்களுக்கு இவ்விரு
சிறுகதைகளும் நல்ல உதாரணங்கள் என்பேன். காலத்தால் முன்னோக்கி யோசித்து நடக்கும், பின்னோக்கி யோசித்து நடக்கும், தன்
காலத்துடன் யோசித்து நடக்கும் எத்தனையோ விதமான துணிச்சலான பெண் பாத்திரங்களை நவீன தமிழிலக்கியத்தில் நாம் காணலாம். தமிழ்ச்சமூகம் எப்படி அனைத்து விதமான பெண்களை உள்ளடக்கியுள்ளதோ அவ்வாறே எழுத்துக்களும் பாத்திரங்களும்
பல்வேறுபட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களும் பெண் பாத்திரங்களும் சமூகம் பரிணாமம் கொள்ளும் போதே தாமும் பல மாற்றங்களைக் கொள்கின்றன.

நவீன தமிழிலக்கியத்தின் ருசியைக் காட்ட எனக்கொரு நல்வாய்ப்பளித்த தேசிய கலைகள் மன்றத்திற்கு என் நன்றிகளைப் பதிகிறேன். நன்றி.

சிறுகதைகள் இடம் பெறும் நூல்: காலச்சுவடு பெண் படைப்புகள் (1994 -2004).  ஆசிரியர்:ராஜமார்த்தாண்டன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம்,
669 கே.பி.சாலை,
நாகர்கோவில் - 629 001
தொலைபேசி : 91-4652-278525.

Email - jeyathisankar@gmail.com
http://jeyanthisankar.blogspot.com

 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்