இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவமபர் 2010  இதழ் 131  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!
நரகத்திற்குச் செல்லும் நான்..

- கறுப்பி -

சில மணிநேரங்கள் கண்களை மூடித் தியானநிலையில் இருக்கும் போது எல்லாமே வந்து விடுகின்றது. வந்தவற்றைக் கண்களைத் திறந்து மீண்டும் ஒரு முறை மீட்டுப் பார்க்க முயல்கையில் ஒன்று மற்ற நிலையே எஞ்சியிருக்கும். சில மணிநேரங்கள் கண்களை மூடித் தியானநிலையில் இருக்கும் போது எல்லாமே வந்து விடுகின்றது. வந்தவற்றைக் கண்களைத் திறந்து மீண்டும் ஒரு முறை மீட்டுப் பார்க்க முயல்கையில் ஒன்று மற்ற நிலையே எஞ்சியிருக்கும். திட்டமிட்டுச் செயல்படுபவர்கைளப் பார்க்கையில் வெறுப்பாக வருகின்றது. முறுக்கிவிட்டது போல் ஒவ்வொருநாளையும் ஒரே மாதிரி, மூன்று நேரம் சாப்பிட்டு, அதற்கிடைப்பட்ட நேரத்தில் வேலையும், உதிரி வேலைகளையும் செய்து முடித்து கட்டிலில் “டாண்” என்று அதே நேரத்திற்குச் சரிந்து, இன்று உடலுறவு கொள்ளலாம் என்று முன் கூட்டியே குறித்து வைத்திருப்பார்களோ என்னவோகம் என்பது இவர்களை இயக்கிக்கொண்டேயிருக்கின்றது. இவர்களும் இயங்கியபடியேயிருக்கின்றார்கள். பின்னர் நான் இப்படித்தான், இப்படித்தான் இருக்கப்போகின்றேன் என்று முடிவெடுத்த பியாராவது அடையாளப்படுத்தவோ, ஒரு கட்டத்துக்குள் அடைத்து விடவோ முயல்கையில் கோபம் வேகமாக வந்து போகின்றது. (போகின்றது என்றவரை சந்தோஷம்தான்) இன்று போல் நாளை வாழ மனம் ஒப்பா என்ற நிலையில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

“சுஷானி” போது இந்தியாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தாலும், உருவம் அதற்குப்; பொருந்தாமல் இருந்தது. நிச்சயமாக ஐரோப்பா அதிலும் குறிப்பாக லண்டனிலிருந்து வந்திருப்பாள் என்று மனதுக்குள் பட்டது. இங்கிலாந்து மக்களுக்கென என் கணிப்பில் இருக்கும் அந்தக் கச்சிதமான உடை அலங்காரம் முழுமையாக அவளிடமிருந்தது. பொன்நிறத் தலைமயிரை கட்டையாக வெட்டியிருந்தாள். மிக நாகரீகமாக உடையணியும் பல்கலாச்சாரப் பெண்கள் மத்தியில், ஒரு அலுவலகத்திற்கேயான ஒழுங்கு முறையான உடையணிந்த அவள் கதைக்கும் போது ஆங்கிலத்தைச் சிரமப்பட்டுத் விழுங்கிய போதுதான் எனக்குள் சந்தேகம் எழுந்தது. எங்கிருந்து வந்திருக்கின்றாய் என்று கேட்டேன். ரஷ்யா, கனடா வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது என்றாள். நான் உடனேயே எழுந்து நின்று விட்டேன்.

விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த போது நாங்கள் சென்ற புகையிரதவண்டி கேரளாவைக் கடந்து செல்கையில் நான் யன்னலால் எட்டி எட்டி எதையோ தேட பொறுமை இழந்த என் கணவன் என்னத்தை அப்படி ஆவலோடு தேடுகிறீர் என்று கேட்டபோது மோகன்லால் அல்லது மம்முட்டி யாராவது கண்ணில் தட்டுப் படுகின்றார்களா என்று பார்க்கின்றேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இப்போது அந்தப் பட்டியலில் மீரா ஜாஸ்மீனும் சேர்ந்துகொண்டிடுள்ளார்.

நான் கலவரம் அடைந்து விட்டேன். “நீ பிறந்த ஊர் எது? யஸ்னயா போல்யனா விற்குச் சென்றிருக்கின்றாயா? “பிளேஸ் வித் த லிட்டில் கிறீன் ஸ்டிக்”; ஐப் பார்த்திருக்கின்றாயா? கேள்விகளை அடுக்கத் தொடங்கினேன். நான் எழுந்து நின்றதையும், என் விசித்திரமான கேள்விகளையும் கண்டு அவளும் கலவரம் அடைந்து என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் என்னை சுதாகரித்த படியே, இல்லை ட்ரோல்ஸ் ஸ்ரோய் என்றால் விசராகும் அளவிற்கு பிடிக்கும். அன்ட்ரூவையும், லெவினையும் உண்மையாக் காதலிப்பவள் நான் என்றால் நம்பவா போகிறாய்?. நான் நினைக்கிறேன் அன்ட்ரூவையும், லெவினையும் லியோ தன்னை வைச்சுத்தான் உருவகப் படுத்தியிருக்கின்றார் என்று. அப்பிடிப் பார்த்தால் உண்மையிலேயே நான் காதலிப்பது லியோவைத்தான் என்று நினைக்கின்றேன் என்றேன்.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே ஒரு லூசிடம் மாட்டிக்கொண்டு விட்டேனோ என்ற பாவனையில் முகத்தைத் திருப்பித் தனக்காக மேசை மேல் வைக்கப்பட்டிருந்த வேலைப் பத்திரங்களைக் கையில் எடுத்துப் புரட்டத் தொடங்கினாள் அவள். நான் அவமதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். என் மேசையின் பக்கம் திரும்பி ஒரு தமிழ் பாடலை முணுமுணுத்த படியே அவள் என் கேள்விகுப் பதில் சொல்லாது திரும்பிக் கொண்டது பெரிய பாதிப்பு ஒன்றையும் எனக்குத் தரவில்லைப் போல் காட்டிக்கொண்டு எனது வேலையில் மிக மும்மரமாக ஈடுபடத் தொடங்கினேன். நான் அவளுக்கு வேலையில் மூத்தவள். வயதில் நிச்சயமாகச் சின்னவளாகத்தான் இருப்பேன் என்றொரு நம்பிக்கை. வேலையில் சந்தேகம் வந்தால் நிச்சயமாக என்னிடம் தான் கேட்க வேண்டும் அப்போது பார்த்துக் கொள்கின்றேன் என்று என் காயப்பட்ட மனதிற்கு ஆறுதல் சொன்னேன். நான் மின்கணனியின் மேல் பார்வையைச் செலுத்தும் போது அவள் என் கடைக்கண் பார்வையில் விழுந்தபடியே இருந்தாள். ஒரு பத்திரத்தை அப்படியும் இப்படியுமாகப் புரட்டிய படி என் பக்கம் திரும்புவதும் பின்னர் அதிகாரியின் அறை பக்கம் பார்வையை ஓட்டுவதுமாகத் தடுமாறிக் கொண்டிருந்தாள். ஒரு கிழமை வேலைப் பயிற்சியை முடித்துக் கொண்டு மிக ஆர்வமாக முதல் நாள் வேலையைத் தொடங்கியவளுக்கு முதல் பத்திரமே சந்தேகத்தை எழுப்பி விட்டிருந்தது. நான் மனதுக்குள் குதூகலித்துக் கொண்டிருந்தேன். வழமையாக மற்றவர்களின் துக்கத்திலோ, சிரமத்திலோ குதூகலிக்கும் வன்மமான மனம் கொண்டவளல்ல நான். இன்று அப்படி உணர்வதில் எனக்குள் சங்கடமான ஒரு சந்தோஷம். சில நிமிடங்களின் பின்னர் என் மனச்சாட்சி என்னைத் தொல்லை செய்தது. நான் மிகவும் மும்மரமாக வேலையில் ஈடுபடுவதுபோல் பாசாங்கு செய்வதால் அவள் என்னைத் தொந்தரவு செய்யத் தயங்குகின்றாள். இல்லாவிட்டால் என்னிடம் ஏதாவது கேட்கப் போய் நான் பதில் சொல்லப்படாத கேள்விகளை மீண்டும் தொடரலாம் என்ற தயக்கம் கூட அவளுக்கு இருக்கலாம். நான் என் முதல்நாள் வேலை அனுபவத்தை மனதுக்குள் ஒருமுறை மீட்டுப் பார்த்தேன். எப்போதுமே என்மேல் அபரிமிதமான நம்பிக்கை கொண்டவள் நான். அதனால் சிலவேளைகளில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொண்டு மூக்கை உடைத்துக்கொள்வதும் உண்டு. ஒருகிழமை வேலைப் பயிற்சியின் பின்னர் இந்த மேசைக்கு நான் அனுப்பப்பட்டு முதல்பத்திரம் என் கைகளுக்கு வந்தபோது நானும் தடுமாறித்தான் போனேன். முதல் பத்திரமே என்னை முழுசிப் பார்த்தது. முதல்கோணல் முற்றும் கோணலாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் நான் முழித்திருக்கையில் நான் கேட்காமலே தானாய் வந்து கைகொடுத்தவர்கள் பலர். இப்போது நான் அனுபவசாலி. பலருக்கு உதவியிருக்கின்றேன். நீ என் பக்கத்து மேசைக்காறி. உனக்கு நான் உதவுவேன் என்ற நம்பிக்கையில் உன்னை ஒருவரும் நாடிவரப் போவதில்லை. என் உதவி உனக்கு நிச்சயம் தேவை என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் நீயாகக் கேட்க வேண்டும் என்று என் குரூரமனம் ஏனோ என்னை உனக்கு நானான உதவுவதை இழுத்துப் பிடிக்கின்றது.

ஏதாவது ஒரு உரையாடலுடன் அவளுக்கு உதவி வேண்டுமா என்றரிந்து உதவு என்று என் நல்ல மனம் உத்தரவிட்டது. நான் ஒரு சுவிங்கத்தை எடுத்து ஒன்றை வாயிற்குள் போட்ட படியே இயல்பாக அவளின் பக்கம் ஒன்றை நீட்டினேன். இப்போதாவது அவள் இறங்கி வந்து என்னிடம் தானாக உதவி கேட்கின்றாளா என்று பார்க்கும் எண்ணத்தோடுதான் நான் அதைச் செய்தேன். அவள் சிநேகிதமாய் சிரித்த படியே ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னாள். எல்லாம் சரியாக இருக்கிறதா? சந்தேகம் ஒன்றும் இல்லையே என்று கேட்டேன். தடுமாறிய படியே பத்திரத்தை என்னிடம் காட்டித் தனக்கான சந்தேகத்தைக் கேட்டாள். நான் சந்தோஷத்துடன் அவளுக்கு விளக்கிக் கூறினேன். அவள் நட்போடு சிரித்த படியே நன்றி சொல்லி விட்டு வேலையை ஆரம்பித்தாள்.

உதவி பெற்றுவிட்டாள். இப்போது அவள் எனக்கு அடிமை. தேத்தண்ணி இடைவேளையில் போது அவளையும் அழைத்துக் கொண்டு ஓய்வு அறையின் பக்கம் சென்றேன். அவள் கண்களில் என்னுடன் உரையாடல் தொடங்குவதற்கான மிரட்சி தெரிந்தது. முதல் முதலில் ஒருவர் அறிமுகமாகும் போது இரண்டு நல்ல வார்த்தை பேச வேண்டும் என்பதை மறந்து நான் கேட்ட கேள்விகளுக்காக இப்போது வருந்தி, “உனக்கு எத்தனை பிள்ளைகள்?, என்ன பிள்ளைகள்?, எத்தனை வயது? என்ற உப்புச்சப்பில்லாத வழமையான கேள்விகளைக் கேட்டு அவளை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தேன். இருந்தாலும் என் முந்தைய கேள்விகளைச் சுற்றியே என் மனம் சுழன்றுகொண்டிருந்தது. தேனீரோடு ஒரு பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டுத் திரும்பவும் எமது இருக்கைக்கு வந்தோம். இப்போது அவள் என்னோடு ஒட்டிக்கொண்டு விட்டாள். கைப்பைக்குள் இருந்து தனது குடும்பப் படத்தை எனக்கு எடுத்துக் காட்டினாள். இரண்டு பெண்பிள்ளைகள். மூத்தவள் அண்மையில்தான் திருமணம் செய்ததாகச் சொன்னாள். மருமகனைத் தனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாள். விட்டால் வேலை எதையும் செய்யாமல் குடும்பக் கச்சேரி நடத்தத் தொடங்கிவிடுவாளோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்க, எனது “சீனியோரிட்டியை” இப்போது காட்டி அவளைச் சிறிது நோகப்பண்ணலாம் என்று என் சாத்தான் மனது சொன்னது. “வேலை நேரத்தில இப்பிடி அளவுக்கு அதிகமாக் கதைக்கக் கூடாது, அதிகாரி கவனித்தால் உனக்குத்தான் பிரச்சனை” என்றேன். அவள் முகம் சுருங்கிக் கொண்டது. உடனே மன்னிப்புக் கேட்டு விட்டு தன்வேலையைத் தொடங்கினாள். எனக்குத் திருப்தியாக இருந்தது. யாரையாவது அதிகாரம் பண்ணும்போது கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான். என் கணவர் எதற்கு வேண்டாததற்கெல்லாம் என்னை அதிகாரம் பண்ணுகின்றார் என்பது இப்போது புரிந்தது.

தொடர்ந்து வந்து நாட்களில் அவள் தனக்கான வேலைத்தள நண்பியாக என்னை வரிந்து கொண்டாள். அவளை நான் வெறும் “தொல்லை” என்பதாய்க் காட்ட முயன்றாலும் அவள் என்னைச் சுற்றிசுற்றி வருவது எனக்கும் பிடித்திருந்தது. எங்கள் ஆங்கில அறிவு ஒருவருக்கொருவர் ஒத்துப் போவதாய் இருந்தது. அவளுடைய உச்சரிப்பு எனக்கு விளங்கவில்லை என்று நக்கலாக நான் சொல்வதுண்டு. புலிக்கு (நாலுகால் மிருகம்) வாலாய் இருப்பதை விடப் பூனைக்குத் தலையாய் இருக்கலாம் என்று மனம் சொன்னது. என் உச்சரிப்பு அவளுக்கும் நகைப்பாய் இருக்கின்றது என்று தெரிந்த போது எனக்குள் கோபம் எழுந்தது. எத்தனை வருடங்கள் கனடாவில் வாழ்ந்தாலும் று க்கும் ஏ க்குமான உச்சரிப்பு வித்தியாசம் விளங்கமாட்டேன் என்கிறது. கனேடியர்கள் முன்நிலையில் சரியாக உச்சரிக்கின்றோமா என்ற தயக்கத்தோடு கதைப்பதை விட அவளோடு கதைப்பது சுலபமாகவிருந்தது. இருந்தும் ஏதாவதொரு காரணம் கண்டுபிடித்து அவளை மட்டம் தட்டி அவள் முகம் சுருங்கிப் போவதைக் கண்டு வக்கிரமாகத் திருப்திப்படுவதுமுண்டு. சிலவேளைகளில் அவள் முகம் சுண்டிப்போவதைக் கண்டு என் மனமும் நொந்து போகும். எதற்காக நான் இப்படி நடக்கின்றேன் என்று என்னை நானே கேட்பதுமுண்டு. அவள் ஒரு பிற்போக்குவாதி முட்டாள்தனமாக எதையாவது புசத்துவாள். நான் ரோல்ஸ் ரோய், தவ்தஸ்வாக்கி, சிமோன்தி பூவா. பிரேட்ய் அது இதுவென்று வாசித்துத் தள்ளும் ஒருமுற்போக்குவாதியாக இருந்துகொண்டு எதற்காக இந்தச் சின்னத்தனம். அவள் பிற்போக்குவாதி குறை உடையவள். நான் முற்போக்குவாதி அனைத்தையும் அறிந்தவள். எனவே குறை உள்ள ஒரு உயிரினத்தை நிறைவான ஒரு மனிதன் காயப்படுத்த மாட்டான் என்று நான் கண்டுபிடித்த தத்துவத்தின் மூலம் எனக்குள்ளேயே “அவளை மனம் நோகப்பண்ண மாட்டேன்” என்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன்.

அவளுக்கும் எனக்கும் சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் போட்டி இருந்தது. சின்னச்சின்ன விஷயங்கள் என்று சொல்வதைவிட உப்புச்சப்பில்லாத விஷயங்கள் என்று சொல்வதுதான் சரி. எப்படிப்பட்ட விஷயங்களுக்குப் போட்டி போடுவது என்று விவஸ்தையே இல்லாமலே போட்டிபோட்டுக்கொண்டிருந்தோம். அவளிலும் பார்க்க எனக்கு சிறிது ஐ.கியூ கூடுதலாக இருக்கிறது என்றே நம்புகின்றேன். எங்கு எப்படி அவளை அடிக்கலாம் என்று புரிந்து வைத்திருந்தேன். எனது சத்யபிரமாணம் அவ்வப்போது மறந்து போகும். ஐம்பதை எட்டிக்கொண்டிருக்கும் இருவருக்கிடையிலும் யாருக்குக் குறைவாக நோய் என்பதில் போட்டி. “நாரி சரியாக நோகுது” என்று அவள் சொன்னால், “நான் நல்ல ஃபிட்” என்று நான் சொல்வேன். “எனக்கு இண்டைக்கு டொக்டரிடம் அப்பொன்ட்மென்ட்” என்று நான் சொன்னால் அவள் கண்கள் மின்ன கத்தை சோகமாக வைத்துக்கொண்டு “உடம்புக்கு என்ன என்பாள்”, அவள் உள்ளம் வேண்டுவது ஏதாவது ஒரு கொடிய நோயைத்தான் என்று எனக்குப் படும், நான் மிக இயல்பாக முகத்தை வைத்து, மார்பகத்தில் தட்டுப்படும் கட்டியால் ஒருகிழமையாகத் தொலைத்த நித்திரையையும் மறைத்து “சும்மா ஒரு செக்கப்” என்பேன். மதியநேரம் சாப்பாட்டு வேளையில் யார் என்ன சாப்பாடு என்பதிலும் போட்டி. மிளகாய்த்தூள் உடம்புக்குக் கூடாது என்பாள் அவள். எங்கள் மசாலாப் பொருட்கள் மேல் மோகம் கொண்டுதான் ஐரோப்பியர்கள் எமது நாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள் அது தெரியுமா உனக்கு என்று அவளை நான் மடக்குவேன். உங்கள் உணவு எந்தவிதமான உப்புச்சப்பும் இல்லாமல் இருக்கிறதே எப்படித்தான் சாப்பிடுகின்றீர்களோ ன்று அலுத்துக் கொள்ளுவேன். என் அதிரடிகள் தாங்காது அவள் மௌனமாவாள். எனக்கும் கவலையாக இருக்கும். வாழ்க்கையில் என் கணவன், குழந்தைகளோடு செலவிடும் நேரத்தைவிட அவளோடு நான் செலவிடும் நேரமே அதிகம். அவளோடு சுமூகமான உறவு ஒன்றை மேற்கொள்வதை விடுத்து எதற்காக இத்தனை காழ்ப்புணர்வு. எங்கள் கணவர்கள் பற்றியும் எங்களுக்குள் போட்டி. இந்த விடையத்தில் நான் கொஞ்சம் “வீக்”. என் முற்போக்குப் பெண்ணியச்சிந்தனை என்பனவற்றில் உணர்ச்சிவசப்பட்டு என் கணவனின் அதிகார குணம் பற்றிப் போட்டு உடைத்து விட்டேன். அவள் நிதானமாக ஒரு சம்மனசுபோல் புன்னகைத்தபடியே “என் கணவன் மிகவும் நல்லவர். அவரைப் போல ஒரு நல்ல கணவன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கின்றேன். நான் வாழ்வில் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். நான் மிகவும் அதிஷ்டசாலி, அதிஷ்டசாலி” என்றாள் கண்களை மயங்குவது போல் மூடி மூடித் திறந்து. எனக்கு யாரோ அம்மிக்குளவியைத் தலையில் தூக்கிப் போட்டதுபோல் இருந்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் உனது குடும்ப அங்கத்தவரைப் பற்றிக் குறைகூறாதே. எல்லா வீட்டின் அலுமாரியிலும் எலும்புக்கூடுகளே உள்ளன, ஆனால் ஒருவரும் கதவைத் திறந்து காட்டப் போவதில்லை. உண்மை பேசுகின்றோம், நேர்மையாக இருக்கின்றோம் என்று முட்டாள் தனமாக உன் அலுமாரியின் எலும்புக் கூடுகளை வெளியே எடுத்துப் போடாதே. எனது சகோதரியின் கூற்று என் மண்டையில் தட்டியது.

சில கிழமைகளுக்கு முன்புதான் ஒரு வெள்ளிக்கிழமை நான் தொலைபேசி மூலம் ஆங்கில நாடகம் ஒன்றிற்கான பற்றுச்சீட்டுப் பதிவு செய்த போது ஒட்டுக் கேட்டவள் போல், நான் தொலைபேசியை வைத்தவுடன் என் அருகில், மிக அருகில் வந்து “எங்கே போகின்றாய்?” என்றாள். “வேலை முடிய நாடகம் ஒன்றிற்குப் போகப் போகின்றேன் வெள்ளிக்கிழமைகளில் பத்து டொலருக்கு டிக்கெட் கிடைக்கும் நீயும் வருகின்றாயா?” என்று கேட்டேன். அதிர்ந்தவள், “தனியாகவா போகின்றாய்?” என்றாள். “ஓம்” என்ற எனது பதில் அவளுக்கு மேலும் அதிர்சியைத் தந்திருக்க வேண்டும், “உன் கணவன் இதற்கெல்லாம் சம்மதிப்பாரா?” என்றாள். “அனுமதி கேட்டால் சம்மதம் கிடைக்காது, அறிவித்து விட்டுப் போகப் போகின்றேன்” என்றேன். அவள் முகம்; சுருங்கிக் கொண்டது. “என் வீட்டில் ஒரு கொலையே விழும் என்றாள்”. அங்கொங்கும் இங்கொங்றுமாக அவளுடனான உரையாடல்களில் இருந்து சேகரித்ததகவல்களின் படி “இப்பிடி ஒரு அருiமாயன(நல்ல) கணவனை அடைய நான் கொடு;த்து வைத்திருக்க வேண்டும்” என்ற “டயலாக்” இற்குச் சிறிதும் பொருந்தாதவர் அவள் கணவன் என்பது என் அனுமானம். இன்று அனைத்தைம் மறந்து தன் கணவனை உயரே உயர்த்திச் சுழற்றுகின்றாள்.

தான் அதிஷ்டசாலி, அதிஷ்டசாலி என்று அவள் கூறியதைத் தொடர்ந்து என் முகம் போன போக்கில் நான் பெரியதொரு தாக்குதலுக்கான வார்த்தைகளைச் சேகரிக்கின்றேன் என்று அவள் ஊகித்துக் கொண்டவளாய் உடனேயே அந்த இடத்திலிருந்து விலகிக் கொண்டாள். என் மனம் பாம்புபோல் சீறிக்கொண்டிருந்தது. “ப்பிச்” வாயுக்குள் முணுமுணுத்துக் கொண்டு இனிமேல் இவளோடு நான் சேரப்போவதில்லை என்று அருவரிப் பிள்ளைகளைப் போல் முடிவெடுத்துக் கொண்டேன். அன்று மீதியிருந்த நாட்களில் வேலையில் என் மனம் ஓடவில்லை. இவளை ஏதாவதொரு வழியில் தாக்கிவிடவேண்டும் என்று என் மனம் திட்டம் போட்டது. அவ்வப்போது என்ன ஆச்சு உன் சத்தியபிரமாணம்? என்று என் சாத்தான் மனம் அடித்துக்கொள்ள, அவளைத் தாக்குவதென்று முடிவெடுத்த பின்னர் அதனைச் சரியென்று சரிப்படுத்துவதற்கான காரணத்தை என் மனம் தேடித் தேடிக் களைத்துப் போனது. கோவத்தால் கனைத்துக் கொண்டிருந்த மனதோடு அன்றைய நாள் முழுக்க அநியாயமாகிப் போக இதன் மிகுதியை வீட்டிற்கும் இழுத்துச் சென்று கணவர், குழந்தைகளிடமும் சீறப் போகின்றேன்.

அதன் பின்னர் அவளைத் தவிர்த்து ஆனால் அவளின் காதுகளில் படும்படி, என் கணவர் எனக்காகச் சாப்பாடு கட்டித்தந்திருக்கின்றார், இன்று நான் போட்டிருக்கும் உடை என் கணவர் எனக்காக வாங்கி வந்தது, நேற்று வேலையிலிருந்து வீட்டிற்குச் சென்ற போது இரவு உணவு மேசையில் மெழுகுதிரி சகிதம் இருந்தது, அருகில் பூக்கொத்து வேறு என்று இல்லாத கற்பனையில் எனது ஒண்டுக்கும் உதவாத கணவனை மற்றவர்களுக்குப் புழுகித் தள்ளிக்கொண்டிருந்தேன். அவர்களும் ஆ.. ஓ.. என்று என் சந்தோஷத்தில் பங்கெடுத்துகொண்டார்கள். “அப்படி என்ன அற்புதம் அவருக்கு நீ செய்து விட்டாய்?” என்ற கேள்வி வேறு, நான் பொய்யாக வெட்கப்பட்டுக் கொண்டேன். சுஷானிக் வாயுக்குள் சிரித்துக் கொள்கின்றாளோ என்ற சந்தேகம் அடிக்கடி எனக்குள் வந்து போகாமலில்லை. என் சின்னத் தனம் என்னைக் கேலி செய்தது. உன் பெண்ணியம் இதுதானா என்ற கேள்வி அடிக்கடி என் மனதுக்குள் எழாமலில்லை.

தொடர்ந்து வந்த நாட்களில் அவளோடு வழமைபோல் நேரத்தைச் செலவிட்டாலும் இருவருக்குமிடையில் ஒரு மௌனப்போர் நிகழ்ந்துகொண்டிருப்பது உணரமுடிந்தது. தாக்குதல் எதிர்த்தாக்குதல் என்று அகோரமாகப் போய்க்கொண்டிருந்தன நாட்கள். அவள் ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்குத் தவறாமல் கோயிலுக்குப் போய் வருவாள் என்பதை அறிந்து கொண்டு “நீ எதற்காகக் கோயிலுக்குத் தவறாமல் போகின்றாய்?” என்று கேட்டு வேண்டுமென்றே அவளை வம்புக்கிழுத்தேன். “என்ன நீ தெரியாத மாதிரிக் கேட்கின்றாய்? நீ எதற்காக உங்கள் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்கின்றாயோ அதே போல்த்தான் நானும் எங்கள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்” என்றாள். “நான் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்வதாக யார் உனக்குச் சொன்னார்கள்?” என்றேன். மௌனமானாள். குழம்பியநிலையில் என்னைப் பார்த்தாள். ஒரு பெண், ஒரு மனைவி, ஒருதாய், கோயிலுக்குப் போகாமலிருப்பது எவ்வளவு சாத்தியம் என்பது அவளது கற்பனைக்கு எட்டாவிடையம். கண்கள் கொஞ்சம் பனித்திருக்க (என் கற்பனையோ என்னவோ) “நீ உங்கள் கோயிலுக்குப் போய்ப் பிரார்தனை செய்வதில்லையா?” என்றாள். இல்லை என்பதாய் நான் தலையசைத்தேன். “அப்ப வீட்டிலா பிராத்திக்கின்றாய்? கோயிலுக்குப் போய்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லைத்தான்” என்றாள் மிகவும் புரிந்துணர்வு கொண்டவள் போல். “நான் பிரார்த்திப்பதே இல்லை, எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, நான் ஒரு நாஸ்த்திகை” என்றேன். அதிர்ந்து போய் நம்பிக்கையின்மையோடு என்னைப் பார்த்தாள். நான் பெருமையாய்ச் சிரித்தேன். அவள் கண்கள் சாந்தமாக மிளிர்ந்தது. மீண்டும் ஒரு சம்மனசு போல்க் காட்சியளித்தாள். பாவப்பட்ட என்னை கடவுள் மன்னிப்பார் என்பது போல் அவள் பார்வை இருந்தது. “ஆண்டவன் அனைவரையும் மன்னிக்கும் அற்புதம் கொண்டவர், சொர்க்கம், நரகம் இரண்டில் எதற்குப் போகப் போகின்றோம் என்பதை நாங்கள் இப்போது பூமியில் வாழும் போதே தீர்மானித்து அதற்கேற்ப எமது வாழ்வை ஒழுங்குபடு;த்திக் கொள்ளுதல் வேண்டும், செய்யும் தவறு...” அவள் முடிக்கு முன்பே குறுக்கிட்டு “தற்போதைய வாழ்க்கையை நரகமாக்கி நான் இறந்த பின்னர் சொர்க்கம் போ வேண்டிய அவசியம் எனக்கில்லை, அதிலும் பார்க்க இப்போது சொர்க்கத்தை அனுபவித்து விட்டு, இறந்த பின்னர் நான் நரகத்திற்கே போய்க் கொள்கின்றேனே, இருந்தாலும் எனக்கு சொர்க்கம், நரகம், அதிலும் நம்பிக்கை இல்லை” என்றேன். தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.

அதன் பின்னர் அவள் என்னை முற்றாகத் தவிர்த்து மற்றய பெண்களோடு நெருங்கிச் செல்வது புரிந்தது. என் ஐ.கியூ மேல் எனக்கே சந்தேகம் எழுந்தது. அவள் என்னைத் தவிர்த்து, மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு எனது நாஸ்திகம் பற்றி வம்பு பண்ணுகின்றாள் என்று வேண்டாத கற்பனை எனக்குள் விஸ்வரூபம் எடுத்தது. நானறிந்து எனது அலுவலகத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஒருவருமில்லை. அந்தப் பேச்சுக்கே அங்கே இடமிருக்கவில்லை. வேண்டுமானால் உன்னுடைய கடவுளிலும் விட என்னுடைய கடவுள் மேல் என்ற விவாதத்திற்கு இடமிருக்கலாம்.

தொடர்ந்த நாட்களில் வெறும் காலை வணக்கத்தோடு எமது நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

2009ம் ஆண்டு பங்குனி மாதத்தில் ஒருநாள், குளிரோடு, சிறிது பனியும் வடிந்து கொண்ருந்தது. தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்திலும் ஈழப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருந்த நாட்கள் அவை. வேலை நேரத்தில் முடிந்தவரை மின்கணனியில் எமது நாட்டு நிலவரம் பற்றி அறிந்து கொண்டிருந்தேன். ஈழ மக்களின் நேரடிப்பாதிப்புக்கள் ஒளிநாடாக்களில் பார்க்க நேரிடுகையில் எழும் உணர்வைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் வேண்டா வெறுப்பாக அலுவலக வேலைளை அளைந்து கொண்டிருக்கும் கண்களும், கைகளும். எனது அலுவலகத்தில் இலங்கையர்கள் ஒருவரும் இல்லாததால், மனம் சோர்ந்து போகும் பொழுதுகளின் நண்பர்களுடன் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடிந்தது.

அன்று எனது அலுவலகம் அமைந்திருக்கும் பெருஞ்சாலையில் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கை கோர்த்து, பாதாகைகள் தூக்கி “எமது தலைவர் பிரபாகரன், எமக்கு வேண்டும் தமிழீழம்” என்று கோஷம் போட்டபடியிருந்தார்கள். நான் தலையைக் குனிந்த படியே அலுவலகத்திற்குள் நுழைந்து எனது இருக்கையில் இருந்த பின்பும் பல மணிநேரமாக எனது பதட்டம் குறையவில்லை.  பதட்டத்திற்கான காரணம் புரியவில்லை. நான் என்றும் உணராத நெஞ்சின் நெருடல் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. வெட்கமா? கவலையா?  இயலாமையா? அவமானமா?. மின்கணனியை அழுத்;திவிட்டு வெறுமனே இருந்தேன். சுஷானிக் வேகமாக வந்தாள். எனது தோளைத் தொட்டாள். “உனது நாட்டில் என்ன பிரச்சனை?,  ஏன் உன் நாட்டு மக்கள் கோஷம் போடுகின்றார்கள்?, நீ இது பற்றி ஒருநாளும் கதைத்ததில்லையே..” அவள் கேள்வி தொடர்ந்து கொண்டேயிருந்தது.  நான் அப்போதிருந்த மனநிலையில் உரையாடலைத் தவிர்க்க எண்ணி, “நீ தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்து அறிந்து கொண்டிருப்பாய் என்று நினைத்தேன்” என்று கூறிவிட்டு எனது வேலையில் கவனம் செலுத்துவது போல் பாவனை செய்தேன். “நீ ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை?, மேலதிகாரியிடம் சொல்லி விட்டு ஒரு மணித்தியாலம் ஆவது போய் வரலாம் தானே” என்றாள். எனக்குள் சினம் எழுந்தது. என் அப்போதான மனநிலை அவளோடு போட்டி போடவோ, விவாதம் பண்ணவோ சுமூமாக இயங்கவில்லை. இல்லை என்பது போல் வெறுமனே தலையை அசைத்தேன். அவளும் விடுவதாயில்லை “ஏன்?” என்றாள். கண்களில் சினம் பொங்க “ உனக்கு எங்கள் நாட்டு அரசியல் பற்றி என்ன தெரியும்?  என்றேன். அவள் மீண்டும் சாந்தமாகக் “கோவிக்காதே ஏதோ கொஞ்சம் விளங்குகின்றது, உன்னில் இருக்கும் அக்கறையில்தான் கேட்கின்றேன், அங்கே வெளியில் அந்தக் குளிருக்குள் நிற்பவர்கள் உன் மக்கள் தானே?, உன் இனம் தானே?, அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை உனக்கும் உள்ளதுதானே?  கதவைத் திறந்து கொண்டு வெளியில் இறங்கினால் நீயும் அவர்களில் ஒருத்தி, பின்னர் ஏன் கலந்து கொள்ளாமல் இங்கே நிற்கின்றாய்? என்றாள். நான் என்னைச் சாந்தப் படுத்திக்கொண்டு “எனக்கு அவர்கள் அரசியலோடு ஒத்துப் போவதில்லை, அவர்கள் செய்யும் போராட்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை, எமது மக்களுக்கான தலைவர் என்று குறிப்பிடும் அவரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றேன். அவள் மௌனமானாள். காலம் நேரம் பார்க்காமல் ஒரு பெரும்தாக்குதலுக்கு அவள் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தாள். கண்களைச் சுருக்கி என்னைச் சிறிது நேரம் பார்த்தாள். பின்னர் குரலைச் செருமிச் சரிப்படுத்திவிட்டு, நிதானமாக “நீ உனது கணவருக்குத் தெரியாமல் சிலவற்றைச் செய்யும் போது எனக்குள் சந்தேகம் இருந்தது, பின்னர் கடவுள் நம்பிக்கையில்லை என்றாய் அதையும் ஒருமாதிரித் தாங்கிக்கொண்டேன், ஆனால் இப்போது உனது மக்களுக்காக முதியவர்கள், சிறுவர்கள் என்று குளிருக்குள் நின்று வாடுகின்றார்கள் இப்போதும் உன் விதண்டாவாதத்தை நீ விடவில்லை. உனது மக்களுக்காகச் சிறிது நேரம் குளிருக்குள் நிற்க உன்னால் முடியவில்லை, உனது மக்களின் பாதுகாப்பிற்காக உன்னால் கடவுளிடம் இரங்கி வேண்ட முடியில்லை. நீயெல்லாம் ச்சீ.. நீ நரகத்திற்குப் போவது நிச்சயம்” பொரிந்து விட்டு தனது இருக்கையை இழுத்து என்னிலிருந்து மிகத் தூரத்தில் முடிந்தவரை தன்னை இருத்திக் கொண்டாள். ஒரு முழுமையான அதிர்வோடு, உடல்விறைக்க நான் அசையாது இருந்தேன்.

karupy01@gmail.com


 
aibanner

 ©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்