இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2009 இதழ் 114  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

பெண்ணின் உடல்மொழி

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்.

அண்மையில் குறிப்பிட்ட ஒரு பேட்டிக்காக, இவளிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி , ஏனோ இவளை மிகவும் யோசிக்க வைத்தது. கேள்வி---பெண்களின் உடல்சார்ந்த மொழியை இலக்கியமாகக் கொடுக்கும்போது, வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்களே, அதுகுறித்த மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா?
இவள்--புதுமை என்பதால் மட்டும் வாசகர்கள் விரும்பிப் படிக்கவில்லை. பெண்களின் உடல்மொழி சுவாரஸ்யம் என்பதாலும் படிக்கிறார்கள். அதுவே சொல்லப்படும் விதத்தில் சொல்லும்போது, நடையழகின் லயத்துக்காகவும் , வாசிப்பு சுவாரஸ்யத்துக்காகவும் கூடத்தான் வாசிக்கிறார்கள். பெண்மொழியில் உடல் பற்றிய பார்வை, நடை எப்படி விழுந்திருக்கிறது என்றறியும் ஆவலுக்காகவும் தான் வாசிக்கிறார்கள் என்பதை எப்படி மறந்து போனீர்கள்? மாற்றுக்கருத்தா?ஹ்ம்ம்----இலக்கியத்தில் illusion and reality யில் கதை புனைந்த அனுபவமுள்ளவள், என்பதால், மாற்றுக்கருத்தில் நுழைய ஞான் விரும்பவில்லை.

இப்படி இன்னும் கூட சில வரிகள் . கேள்வியைச் சார்ந்த நிலையில் பேசினேன் தான். ஆனால்பேட்டி முடிந்து ,சில நாட்களாகியும் இக்கேள்வி ஏனோ என்னை, சிந்தனையில் முட்டிபோடவைத்து, கிளறிக்கொண்டேயிருந்தது.

பெண்கள் எழுத்து, நூற்றாண்டுகால வரலாறு சார்ந்தது.கிருபை சத்யனாதன், விசாலாட்சிஅம்மாள்,, வை.மு. கோதைனாயகி, கு.ப. சேது அம்மாள். மூவாலூர் ராமிம்ருதம்மாள்.போன்றோர் முதல் கட்ட எழுத்தாளர் என்றால், அடுத்து எழுத வந்தவர்கள் , கிருத்திகா, குமுதினி, லக்‌ஷ்மி, அனுத்தம்மா, குயிலி ராஜேஸ்வரி,கோமதிசுப்ரமணியம், மூன்றாவது காலகட்டத்தில் ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, வாஸந்தி,உஷாசுப்ரமணியம், இந்துமதி, பிறகு வந்தவர்கள்தான், அம்பை,காவேரி, சிவகாமி, பாமா, உமா மகேஸ்வரி,அமரந்தா, இனி அக்கறை வாழ் எழுத்தாளர்கள், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்,காஞ்சனா தாமோதரன், சுமதி ரூபன், கமலாதேவி எனப் பட்டியலிட்டால் எழுத கை வலிக்குமளவுக்கு பட்டியல் நீண்டு கொண்டே தான் போகிறது. இன்று பெண் எழுத்தாளர்கள் நிரம்ப பேர் இலக்கியம் படைக்க வந்துள்ளார்கள், அருமையாகவும் சில, பல, நல்ல எழுத்துக்களை ஆய்வுக்கு தெறிவு செய்யவும் முடிகிறது. முதலில் பெண்ணியல் வாத எழுத்துக்களை நாம் எப்படி காண்கிறோம்.conservative feminism--பாணியில் வந்த தைகளுக்கும்.யதார்த்தத்தில், புனைவுகளைக்கொண்டு வரும் கதைகளுக்கும் இடையே உள்ள அகழியும் கூட யோசிக்கவே வைக்கிறது.எந்த அளவுக்கு நவீனத்துவத்திலிருந்து முன்னேபோய்விட்டோம். நவீனகாலம் என்று எதைக்கருதுகிறோம், என்று புரிந்து கொண்டபிறகு post modernism, பற்றி பேசலாமே என்ற ப்ரக்ஞையற்று எழுதுபவர்களை , பட்டியலில் சேர்க்கமுடியவில்லை. பொதுவாகவே பெண் எழுத்தாளர்களால், புதிய மாற்றத்தைக் கொண்டு வந்ததாகவோ, ஆண்களுக்கீடான, சக்தி வாய்ந்த எழுத்துக்களைக்
கொண்டு வந்ததாகவோ இல்லையே என்ற குற்றச்சாட்டு, இப்பொழுது, தேய்ந்து, மறைந்து விட்டது.மதம், சார்ந்த நமது வாழ்க்கை மரபுகள், நாம் கொண்டிருக்கிற பாரம்பரிய மதிப்பீடு,, இவைகளை எல்லாம் மீறிய ஒரு தெளிவான மாற்றம் எழுத்தில் கொண்டு வர வேண்டுமாயின், முதலில் என்டெ கேள்வி, Are they learned? பதில் ஆம் எனில் ஆஹா! நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெறும் என அறுதியிட்டுக் கூறலாம். [அடடா, ஒன்றை மறந்து போனோமே, ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், சுயபச்சாபத்தில் கதைபுனைவது, மற்றவர் எழுத்தைச் சார்ந்து அதேபோல் எழுத முயன்று,பின் ஓரளவு தேறி எழுதுவது, அதுவும் இல்லையென்றால் அவர் எழுதுகிறாரே,ஏன் எனக்கு எழுதத் தெரியாதாக்கும்? என்ற போட்டாபோட்டி மன நிலையில் எழுதுவது, இன்றேல், இலக்கிய அடிப்படை என்றால் என்னவென்றே தெரியாமல்,மொழியில் வல்லுனர் என்ற அலட்டலில் மட்டுமே கதை புனைய வரும் ஜம்பங்கள், ஹ்ம்ம்------, இப்படியெல்லாம் ஜிகினாப்பூச்சு போர்த்திக்கொண்ட , அனாமத்துக்களின் எழுத்துக்கள் பாமரர்களிடம் கூட எடுபடுவதில்லை.] கனவாய் மழையாய்,சுயம்புவாய்,இலக்கியம் மலரவேண்டும். அப்படிப்பட்ட கதைகளில் உயிர்னாடி, உக்கிரமாய் பேசாவிடினும், சிந்தனையில் சீரிளம் புத்தாக்கம் நம்மை ஆட்கொள்ளவே செய்கிறது.

இனி இந்தபெண் எழுத்தை பெண்கள் மட்டும் தான் எழுத முடியுமா? ஏன் ? ஆண்கள் எழுதியதைல்லையா? ஏனில்லை என்று பளிச்சென்று, மின்னல் போல் துலங்கிய நினைவாஞ்சலிக்கு, ஷொட்டு கொடுத்துக் கொண்டே,. நினைவலையைப் புரட்டினால்,
பட்டுப் பட்டாய் சில கதைகள் நினைவில் வருகிறது. பெண்கல்வி,பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறை, குழந்தைமணக் கொடுமை, பாலியல் பலாத்காரம்,பெண்ணின் கைம்பெண்பிரச்சினை, பிள்ளைப்பேறும் அறியாமையும் தான் பெண்ணை அடிமைப்படுத்தும் இயற்கைக்காரணிகள்,எனும் நிலையில் பெண்விடுதலைக்காக, எழுதப்பட்ட பெண்ணிய எழுத்துக்கள் நிரம்பவே வருகிறது. ஆனால் பெண்ணியல் பிரச்சினைகளை, ஆண்களும் கூட மிக அழகாக, நெகிழும் வகையில் ,உறுத்தாத நடையழகில் எழுதியுள்ளார்கள். பாரதியாரின் காந்தா மணி, ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம், புதுமைப்பித்தனின் சாப விமோசனம், சிட்டியின் கெளரவ நாசம், , நா.பார்த்தசாரதி,ஜெயந்தன், நா.கண்ணன்.,பிரபஞ்சன், எனப்பட்டியலிட்டால், முற்றுப்புள்ளியே இல்லை. மணக்க மணக்க எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் என்னைக்கவர்ந்த பல கதைகளில், சில கதைகளை மட்டுமே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆடவ எழுத்தில் பெண்ணின் பால் உள்ள பரிவும் ,நெகிழ்வும் ,பெண்ணை அடிமைப்படுத்தியதால் ,ஏற்பட்ட தார்மீகக் கோபம் ,எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்றுணரும்போது, சக மனுஷ்ய எழுத்தின் மீது வரும் மரியாதையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. முதலில் மணிக்கொடி எழுத்தாளர் அமரர் சிட்டி அவர்களின் பெண்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கெளரவ நாசம் எனும் அருமையான கதையைக் காண்போம்.

ஆண்களின் பார்வையில் பெண்மை

அமரர் சிட்டி அவர்களின்” கெளரவ நாசம்” எனும் சிறுகதை எந்த ஆண்டில் எழுதப்பட்டது, என்ற தகவல் சரியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் 40, 50, ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டது என்று மட்டும் யூகிக்க முடிகிறது. ஆச்சர்யமே ஆங்குதான். இந்த எழுத்தாளர் அந்தக்காலகட்டத்திலேயே , குழந்தை மணத்தை எப்படி எதிர்த்திருக்கிறார், பாரதி கண்ட பெண் விடுதலைக்காக, எப்படியெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார், என்பதை நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது. திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் மணம் செய்த லெட்சுமியின் தவிப்பும், ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டோம் என்ற அகந்தையிலேயே, லெட்சுமியை அலட்சியப்படுத்தும் பெற்றோரோடு சேர்ந்து கொண்டு துள்ளும் ராஜகோபாலனுமே கதை மாந்தர்கள். பருவம் வருமுன்னேயே தாலி கட்டிக்கொண்ட லெட்சுமி,பருவம் வந்தபின்னும் கணவன் வீட்டார், தன்னை வந்து அழைத்துப்போகாததால்,, பெற்றோருக்கும் கண்வன் வீட்டாருக்குமிடையே, ஏற்பட்ட மனத்தாங்கலால்,.அவமானத்தோடு, ஊராரின் முன்னே இப்படி வாழாவெட்டியாய் வாழ்வதைவிட உயிர் விடுதலே மேல் என, சாவைத்தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் தற்கொலை செய்வதற்கு முன் அந்தப்பேதைப்பெண் , துணிச்சலோடு கண்வனுக்கு ஒரு கடிதம் அனுப்ப, அக்கடிதமே அவளுக்கு வாழவை மீட்டுத்தருவதாக , மிக அழகாக, எழுதப்பட்டுள்ள கதை இது. பெண்ணுக்கு கல்வியறிவும் துணிச்சலும் எவ்வளவு முக்கியம், என்பதை, கடிதம் படித்த ராஜகோபாலன் பதறித்துடித்து ஓடிவரும் கட்டத்தில், [தன்னைத்தற்காத்துக் கொள்வதற்காவது,] நம்மையும் பதறிப் பதறி கதையைப்படிக்க வைக்கும், ஆசிரியரின் கதை சொல்லும் னேர்த்தி வெகு சொகுசு. முழுக்க முழுக்க பெண் விடுதை பேசும் கதை இது. பெண்பால் ஏற்பட்ட பரிவினை, நெகிழ்வை, எந்த வார்த்தை ஜாலமோ, அலங்கார முலாம் பூச்சுகூடஇன்றி, மிக இயலபாகப் பேசும் இக்கதை, தமிழிலக்கியத்தில் எந்தபெண் எழுத்தாளருமே பெருமிதப்படவேண்டிய கதை , என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லலாம். ஸ்ரீமான் சிட்டி அவர்கள் வாழும் காலத்தில் அவரை சந்தித்த பெண்கள் பேறு பெற்றவர்கள்.

அடுத்து வருவது மலையாளத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர் காரூர் நீலகண்டம் பிள்ளையின் மர பொம்மைகள், .இன்றைய எழுத்தாளர்களாகிய, நம்மில் பலரும் எழுதத் தயங்கும், முற்றிலும் புதிய கோணத்தில், உரையாடல் வழி கதை மாந்தர்களை நகர்த்திச்செல்லும் நகாசு வேலைப்பூச்சு, வெறும் புதிய உத்திமட்டுமல்ல. பூரணத்தில் மாற்று கோணமாகவும் நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சிறுகதை இது. வாசிக்கத்தொடங்கும் போது கவர்ச்சியோ,சுவாரஸ்யமோ, இல்லையெனினும். 2ம் பக்கத்தாளை நகர்த்திய பின்னர் ,கதையிலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை.மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்,வாசற்படியில் நின்று கேட்கும் கேள்விகட்கு, வீட்டினுள்ளிலிருந்து வரும் பெண்ணின் பட், பட், டென்ற உடனடி பதிலும்,அக்கேள்வி, பதிலினூடேயே, மர பொம்மை செய்து ஜீவித்து வரும், அவளது சோகவாழ்வை, செப்புப்பட்டயமாய், நம் முன்னே கொண்டுவருவதில் எழுத்தாளரின் வெற்றியை சம்மதித்தே ஆகவேண்டும். அவளது அவலம் புரிந்து விடை பெறும்போது , அவள் தனது அன்றாட வாழ்வின் ஜீவனோபயமான ஒரு மரபொம்மையை அவனுக்குக் கொடுக்கிறாள்..ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு, அடியும் உதையுமாக சீரழிந்து,, இனியும் மிருகமான உன்னோடு வாழ மாட்டேன்,, என்று வெளியேறிய அவளின் கோபம் போலவே,அவள் கொடுத்த பொம்மையின் முகமுமிருப்பது கண்டு அவன் முகம் வாடுகிறது. .உடனே ஒரு காகிதத்தை எடுத்து, அவளிடம் நீட்ட,, அச்சு அசல் அப்படியே, அவள் உருவம் .பேசிக்கொண்டிருக்கும் போதே,அவளது உருவத்தை, அச்சாக அப்படியே வரைந்திருக்கிறான்.. மகிழ்ந்து போன அவள் உள்ளே போய், பகவதி தவம் செய்யும், அழகான பொம்மையை கொண்டு வந்து அவனிடம் நீட்ட, மகிழ்ச்சியோடு விடை பெறுகிறான், அந்த ஓவியன். இரண்டு கலைஞர்களின் சந்திப்பை ஒரு நிமித்தமாய்,அதிலேயே நிறைவு பெறும் அந்த பேதமையை கட்டுசெட்டோடு சொல்லி முடிக்கும் கதை. பெண் எப்படிப்பட்ட அவலம் நிறைந்த வாழ்வில் உழன்றாலும் பெண் எப்போதுமே பெண்ணே, என னாசூக்காய் சொல்லும் பதிவு இது. வந்தவனும் கலைஞனே, அதிலும் ஓவியன் என்றறியும்போது, கோபம் போய் அவள் மகிழ்ந்து நிற்கும் காட்சியில், ஓவியனின் தோழமையில் ஆண்மையின் கம்பீர்யத்துக்கு நிறைவாக ஒரு சல்யூட் அடிக்கத்தோன்றுகிறது.

நா. கண்ணனின் ’ சிறுகதைத்தொகுப்புக்கு, இரா.முருகன் அழகான முன்னுரை கொடுத்திருக்கிறார். அதில் ஒரு வரி, இப்படி வரும். நல்லவேளை கண்ணன் ஜெர்மனி போனார், என்று----அத்தொகுப்பிலுள்ள ”நெஞ்சு நிறைய’ , சிறுகதையை, படித்தபிறகு மீண்டும் இவ்வரிகளைப் படித்தபோது, ஏனோ இரா.முருகனுக்கு சபாஷ் போடாமலிருக்க முடியவில்லை.என்ன பொருத்தமான உவமை,> ஒரு நூலுக்கு பொருத்தமான முன்னுரையின் தேவையை , வஞ்சகமேஇன்றி, கொடுத்துள்ளார், இரா.முருகன். பின் என்ன சார்? ஐரோப்பிய நாட்டில் வாழும் இளைஞன் என்ன இப்படி அனியாயத்துக்கு, நல்லவராக இருக்கிறார்? இருக்கலாமோ? என்ன? கதை, வசனம் புரியவில்லையாக்கும்? வெள்ளைக்காரத் தோழியைக் காணச் செல்லும், கதை நாயகனுக்கும் தோழிக்குமிடையே நிகழும் பரிமாணத்தின் அனுபவமே கருவூலம்..கணவனைப்பிரிந்து ஒரு பெண்குழந்தையோடு வாழும் , தோழியைக்காண நம் கதை நாயகன் செல்லும் அதே தினத்தன்று தான் ,தோழியின் முன்னாள் கணவன், தன் காதலியோடு வர ,அதற்கான முஸ்தீப்புகளில் இவன் காணச்சென்ற தோழி இருக்க, குழந்தையோடு அமரும் நாயகன், அந்தப்பெண்குழந்தை அவர்கள் நாட்டில் தவறே இல்லாத, குழந்தைகளின் பாலியல் படம் காட்டும் புத்தகத்தை , சர்வசாதாரணமாக புரட்டிக்கொண்டிருக்க, தர்ம சங்கடத்தில் நெளிகிறான். குழந்தையே ஆனாலுமவள் பெண்தானே எனும் , சங்கோஜம். மாலை புதுக்காதலியோடு வரும் முன்னாள் கணவனை, தோழியும், குழந்தையும், இவனுமாக வரவேற்கும் சூழல், கதை படிக்கும் நமக்குத்தான் சோகமே தவிர, அந்த நாட்டின் கலாச்சாரத்தில் இதொன்றும் பொருட்டே அல்ல, என்பதுபோல், கதை போனாலும் சராசரி இந்தியப்பெண்ணால் அந்தக்காட்சியை எந்த அளவுக்கு ஜீரணிக்க இயலும் என்று யூகிக்கலாம். அதுவும் காதலி சகஜமாக இருக்க அடிக்கடி, முத்தமிட்டு, முத்தமிட்டு அவளை சகஜமாக்க முயலும் தந்தையை, அந்தப் பெண்குழந்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். ஆச்சு போச்சு.! என்று எப்படியோ அவர்கள் விடைபெற்றுச்செல்ல, தோழி குழந்தையோடு அறைக்குள் தூங்கச் செல்ல,, தனியாகத் தூங்கி எழும் கதை நாயகன், காலையில் எழுந்து பார்க்கும்போது, சுருண்டு தூங்கும் இரண்டு பூஞ்சிட்டுக்குழந்தைளாய் மட்டுமே அவர்களைக் காண்கிறான். தானே போய் காப்பிபோட்டுக்கொண்டு வந்து, அவளுக்கும் கொடுத்து, தானும் குடிக்கும் போது தார்மீகத்தின் உன்னதம் நம்மை, ஸ்தம்பிக்க வைக்கிறது. அக்கறைவாழ் ஆண்களில் பெரும்பாலோர், தானே சமைப்பதும் சாய போட்டுக்குடிப்பதொன்றும் புதுமையல்ல , என்றாலும் அதிதியாய் சென்ற வீட்டில் தோழிக்கு காப்பி போட்டுக் கொடுக்கும் ஆதுரத்தில் இந்த கதை மாந்தனை கை குலுக்கத்தோன்றுகிறது. அதைவிட விசேஷம் , விடைபெறும்போது இந்த அன்பான நண்பனுக்கு நெஞ்சார அணைத்து , பிரியா[பிரியத்தோடு] விடை கொடுக்கும் , தோழியின் அணைப்பு ரொம்ப நேரத்துக்கு, நெஞ்சிலேயே நிற்பதாக கதை முடிகிறது. ஆணாதிக்கம், ஆண்போராளிகள், பெண் விடுதலையின் உச்சமே, நாங்கள்தான் என்றெல்லாம், பம்மாத்து இலக்கியம் படைக்கவரும் அத்தனைப்போலிகளையும் வெட்கித்தலை குனியவைக்கும் அற்புதமான சிறுகதை இது. .கதைமாந்தனின் அன்பியலில், தோழி மட்டுமல்ல, கதை வாசிக்கும் எந்தப்பெண்ணுமே விகசிக்கும் படையல் இது. இதுபோல் ப்ரபஞ்சன், குஷ்வந்த் சிங், மாத்வ ராயன், எனப்பலரும் பெண்மையைப்போற்றிய சங்கீர்த்தனங்களை , தொடர்வோமே.??

பெண்ணியலில் பூம் பின்னல்

தமிழ்ச்சிறுகதைகளை உலக அளவுக்கு எடுத்துச் சென்றவர் , புதுமைப்பித்தன் எனில்,ஜெயகாந்தனின் இலக்கியப்பிரவேசம் தமிழ்க்கூறு நல்லுலகுக்குக் கிட்டிய மாபெறும் பேறு, என்பதில் ஐயமேயில்லை. பிராமணர்கள் கூட எழுதாத, பிராமண வாழ்வியலை, எவர் மனதும் புண்படாதபடி அற்புதமாக எழுத்தில் கொண்டுவந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே. பின் நவீனத்துவத்தின் உச்சம் என சொல்லிக் கொள்ளும் எழுத்தாளர்களைக் கூட, ஜெயகாந்தனின் பின்வரவாகவே கருத வேண்டியுள்ளது. புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம், அகிலனின் எரிமலை, ஜெயந்தனின் மொட்டை, ப்ரபஞ்சனின் நேற்று மனிதர்கள், குஷ்வந்த் சிங்கின் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த ’அனைத்தும் கடந்து,’ எனும் பஞ்சாபிக்கதை,சிந்தி மொழியில் ராம் பாட்டியாவின், ”காதலினால்”, எனும் ஆண்பெண் உளவியல் ப்ரச்சினையை மயிலிறகால் வருடும் கதை, வண்ணனிலவனின் 2 பெண்கள், , என அன்றிலிருந்து இன்றுவரை, ஆடவ எழுத்தாளர்களின் பெண்பால் பற்றிய பல பல கதைகள் , அக்கறையோடு கூர்ந்து கவனிக்க வைப்பவை.

இலா.வின்சென்ட் தமிழில் அதிகம் கேள்விப்பட்டிராத பெயர்.தமிழிலக்கிய பர பரப்பில், சிற்றிதழில் மட்டுமே எழுதியவராக அறியப்படும், இலா. வின்சென்ட்,டின்” ரவுக்கை” சிறுகதையைபடித்தபிறகு, அக்கதையின் பிரமிப்பிலிருந்து மீண்டெழவே சில நிமிடங்கள் பிடித்தது. இன்று வெகுஜன பத்திரிகைகளில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் பலரும் கவனிக்கத்தவறும், அல்லது கைவிடும் உத்தி உருவகம். ஒரு சிறுகதைக்கு, உத்தி, உள்ளீடு, எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், புனைவியல் இலக்கியத்துக்கு உருவகம். கதை புனையும்போது இஷ்டத்துக்குப்போய் முடிக்காமல், கதையின் தொடக்கமும் முடிவும் வருமுன்னே, இடையிலான பயணத்தில் கதைச்சூழலை, பூம்பின்னல்போல் உருவாக்கி எடுத்ததில் ரவுக்கை அருமையான சிறுகதை. ரவுக்கையே அணியாத ஒரு கிராமத்தின் கட்டுப்பாட்டையும் மீறி, காலேஜில் படிக்கும் தாய்மாமனும் ,அவளுக்காகப் பேசிவைத்துள்ள அவளது முறைப்பையனுமான முத்துசாமி , பொம்மக்காவுக்கு யாருமறியாமல் ரவுக்கையும் பிராவும் வாங்கிக்கொடுக்க, மாமனின் ஆசையை மீறமுடியாமல், அவனுக்காக ரவுக்கை போட்டுக்காட்டுகிறாள் பொம்மக்கா. முத்துசாமி ஆசையோடு அவளைப்புகைப்படம் எடுக்க, அது அவள் அம்மாவின் கையில் மாட்டி, அடிஅடியென பொம்மக்காவை போட்டுபுரட்டியெடுக்கிறாள் அம்மாக்காரி [கிராமத்தின் கட்டுக்கோப்பை மகள் குலைத்துவிட்டாளாம்.]
முத்துசாமி பிடிவாதமாக ரவுக்கை அணியும் பெண்ணைத்தான் கட்டுவேன் என்று தீர்மானித்து,அசலூரில் போய் மணந்துகொண்டு திரும்ப, ஊரேகூடி அவர்களை குற்றவாளியாக்க, எரிமலையாய், வந்து நிற்கிறாள் பொம்மக்கா. ’ஆம்பிளையாயிருந்தா என்னை ரவுக்கை போட வச்சு கட்டியிருக்கணும்.அதுக்குத் துப்பில்லாம,எங்கேயோபோய் ஒருத்தியைக் கட்டியிருக்காரு. இதுக்குப்போயி ஒரு பஞ்சாயத்து,--தூ !!!,எனக் கூட்டத்தையும் முத்துசாமியையும் பார்த்துக் காறி உமிழும் பொம்மக்கா, அங்கேயே மாமன் வாங்கிகொடுத்த ரவுக்கையை அணிய முற்பட, பளார் பளாரென பொம்மக்காவை அறைந்த தாயைதள்ளிவிட்டு, தாய் எழுந்து வருவதற்குள்,பிராவை மாட்டி, ரவுக்கையை, போட்டு விடுகிறாள் பொம்மக்கா, எனக் கதை முடிகிறது. என்ன அழகான கதையிது, கட்டுசெட்டான வாக்கிய கொஞ்சல்களும், தொட்டுதொட்டு போகும் கதைப்பின்னலும் மிகவும் கவர்கிறது. ரவுக்கை அணியாத கிராமங்களும் தமிழ் நாட்டிலுண்டு, அங்கே ஒரு இளம்பெண்ணின் ரவுக்கை அணியும் தாகம்,அதுவும் ஆசைப்பட்ட மாமனுக்காக, அவள் படும் துயரம்,அப்படியும் அவளைப்புறக்கணிக்கும் மாமன்காரனை நோக்கி வீசும் கோபாக்னி, ஒட்டுமொத்த, ஆண்வர்க்கத்தையே சாடுகிறது. இலா.வின்சென்ட்டின் நுணுக்கமான பார்வையில் வரிக்குவரி, நம்மை வெலவெலக்க வைக்கிறது. சிற்றிதழிலும் அருமையான எழுத்தாளர்களின் கதைகள் மலர்கிறது. இந்த எழுத்தாளர் இன்னும் கூட சற்று முயன்றால், இவர் தமிழிலக்கியத்தில் நிச்சயம் முத்திரை பதிப்பார். அடுத்து காஷ்மீரிமொழியில் ஹரிகிருஷ்ண கெளல்லின் ”சூரிய ஒளியில்”சிறுகதையில், வயதான கிராமத்து மூதாட்டி, கிராமத்தில் வாழும், ஏழ்மையில் உள்ள மூத்த மகனிடமிருந்தும், முதியவள் சதா மூதேவி எனத்திட்டும் ,அவன் மனைவியிடமிருந்தும்,, ஒரு மாறுதலுக்காக, டில்லியிலுள்ள இளைய மகனின் வீட்டிற்கு வருகிறாள். அங்கு வெயில் அவ்வளவு இதமாக இருக்கிறது.கிராமத்தின் குளிர் இல்லை. வறுமை, தட்டுப்பாடு, எதுவுமே இல்லையென்றாலும் ,இளைய மருமகளின் விட்டேற்றித்தனம்,மேல்தட்டு நாகரீகம்,ஒவ்வாமை,, என எல்லாமாக அலைக்கழிக்க, அப்பொழுதுதான்மூத்தமகனின் அன்பு, வசதிக்குறைவால் வாடும் பேரனின் ஏக்கம், மூதேவி எனக்கரித்துக்கொட்டிய மருமகளின் அடங்கிப்போகும் குணம்,பணிவு, , எனும் அந்த ஏழ்மையே தான் தனக்குப் பொருத்தமான இடம் என, கிராமத்துக்குப்போக முடிவெடுக்கிறாள். ஆனால் போவதற்குமுன், கொஞ்சம் வெயிலை மட்டும் கொண்டுபோக முடிந்தால் என, ஏங்குவதாக கதை முடிகிறது. ஆற்றொழுக்கான ஆங்கில நடையில், நெஞ்சைத்தழுவும் சிறுகதை இது. இப்படிப்பல ஆண்கள், பெண்களைப்பற்றி எழுதியிருந்தாலும், பெண்கள் பெண்களைப்பற்றி எழுதும் எழுத்தைப் படிக்கும்போதுள்ள சுகமே அலாதிதான்.தமிழில் இன்று எத்தனை பேருக்குத் தெரியுமோ,கமலா மார்க்கண்டேயா, எனும் பெயர். இவர்தான் முதன்முதலாக , தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒடுக்கப்பட்டவரின் அனீதியை, , ஒரு பெண்ணின் பார்வையில் எழுதி சலசலப்பைக்கொண்டுவந்தவர். தலித் இலக்கியம் ஒரு தலித்தால் மட்டுமே எழுதமுடியும் எனும் கூற்றை, இரண்டு துண்டாக முறித்துப் போட்டவர் கமலா மார்க்கண்டேயா, எனும் பிராமணப்பெண். ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினையை, உணர்வுகளை, வாழ்க்கை அவலத்தை,எழுதுவதுதான் தலித் இலக்கியமெனில், 1970ல் இவர் எழுதிய,இரு கன்னியர் எனும் நாவலை ப்புறந்தள்ளவே முடியாது. ஆங்கிலத்தில் வெளிவந்த Nectar in a sieve பற்றி, N.Y.Times, இப்படி எழுதுகிறது. probably the ablest indian novelist now writing in english.... author of the finest novel by an indian i have ever read,very mooving....[N.Y.Times.] என் மேனியைத்தீண்ட, கணவரின் விரல்கள் துடிதுடிப்பதைக்கண்டு, என்னுடைய அங்கங்கள் மலர்ந்து கொடுத்தன., என ஏழைகளுக்கே எளிதாகக் கிடைக்கும் சுகத்தை மறைக்காமல் எழுதியுள்ளார்.வயிற்றுப்பட்டினியால் வழிதவறிப்போனதை நியாயப்படுத்தி கதை நாயகிக்காக இப்படி எழுதுகிறார். இன்றைக்கு, நாளைக்கு என, இனி ஒவ்வொரு நாளும் இப்படித்தான், இனியும் பட்டினி கிடக்க என்னால் முடியாது., எனும் குருதி கொப்புளிக்கும் வரிகளால் சமூகத்தின் மீது வீசும் பகிரங்கக் குற்றச்சாட்டில்,கமலா மார்க்கண்டேயாவின் தனி முத்திரையைக் காணலாம். இரு கன்னியர்கள் எனும் இன்னாவல், சென்னைப்பல்கலைக்கழகத்தில் கல்லூரிப்பாடமாக வைக்கப்பட்டு, பிறகு அரசு தடை செய்துள்ளது, வியப்பாக உள்ளது. இன்று பெண் எழுத்துக்கள் என்ற பெயரில் வரும் அழிச்சாட்டியத்தையெல்லாம், இதுவன்றோ, நவீனத்துவம் என, கொண்டாடலாமாம். ஆனால் கதைனாயகியே கதை சொல்வதுபோல் சமுதாய நிர்வாணத்தை தோலுரித்துக்காட்டிய இன்னாவல் அன்று தடை செய்யப்பட்டுள்ளது புரியாத புதிரே. கமலாமார்க்கண்டேயா, டெய்லர் எனும் ஆங்கிலேயரை மணந்து தற்போது லண்டனில் வசித்துவருகிறார், அவருக்கு எண்டெ மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

பெண்ணலம் பேசுதல் காண்மின்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, கல்கியின் சிவகாமியின் சபதம், காலம் வரை தமிழுக்கு அருந்தொண்டாற்றி, 115 நாவல்களை எழுதி,னாவல் இலக்கியத்துக்கு உரம்கூட்டி, மர்மனாவல் துறையிலும், புதிய ஒளியை அறிமுகப்படுத்திய ஒரே பெண் எழுத்தாளர், வை.மு. கோதைனாயகி அம்மாள் மட்டுமே. பெண்கல்வி கடும் எதிர்ப்பிலிருந்த காலத் திலேயே,26 ஆண்டுகட்கும் மேலாக எழுத்துப்பணி, 10,000பிரதிகட்குமேல் விற்ற ஜெகன்மோகினி பத்திரிகையை 34 ஆண்டுகளாக, நடத்திவந்தவர், 1937லிருந்து சொந்த அச்சகமும் வைத்திருந்த பெருமையாளர், சுதந்திரப்போராட்டத்தில் 1932ல் சிறைசென்றவர், சங்கீத அகடெமியில் இசைக்கச்சேரி நடத்தியவர்,என இவ்வளவு சிறப்பும் பெற்ற, ஏன், பெண்கள் மறுமலர்ச்சிக்கே முன்னோடியாகத் திகழ்ந்த இப்பெண்மணியை, இலக்கிய உலகம் இருட்டடிப்பு செய்தே இவ்வளவுகாலமும் இருந்திருக்கிறது.

அண்மையில்தான் இவருக்கு ஏதோ விருதுகொடுக்க அரசு மனம் கனிந்ததாம். பல ஆய்வாளர்களின் கட்டுரையில் கோதை நாயகி அம்மாவின் பெயரைக்காணவே முடியவில்லை. எந்த அரசியல்வாதியும் பெண்விடுதலைக்காகப் போராடிய,இந்த அம்மையாரின் பெயரை நினைவுகூர்ந்ததுகூட இல்லை. இலக்கியவாதிகளிடையே உள்ள காழ்ப்புணர்ச்சியும், அரசியல்வாதிகளுக்கே இயல்பான, சுயனலத்தாலேயே இவரது தியாகம் கூடப் பேசப்படாமல் போய்விட்டது தான் நெஞ்சில் உறையும் சோகம்.

டாக்டர் ல்க்‌ஷ்மி-- இந்தப்பெயர் கூட தமிழிலக்கியத்தில் தவிர்க்க இயலாத பெயரே.சுயசரிதம் எழுதிய எழுத்தாளர்களில், கமலாதாஸ்,அம்ருதாப்ரீதம்,போன்று,லக்‌ஷ்மியின் சத்தியசோதனை கவனிக்கப்படவேண்டிய நூல்.இன்றைய அம்பை, காவேரி, சிவகாமி, பாமா, வின் வீச்சுபோல அன்றைய லக்‌ஷ்மியின் எழுத்தின் வீர்யம் ,ஆண், பெண், என்றபாகுபாடே இன்றி,வாசகர்களை ஈர்த்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாவல்கள்,ஆயிரத்துக்கும் மேற்பாட்ட சிறுகதைகள், , சில மருத்துவ நூல்களும் கூட எழுதியுள்ள,லக்‌ஷ்மியின் ஒரு காவிரியைப்போல், நாவலுக்கு,சாகித்ய அக்டெமி பரிசு கிடைத்துள்ளது. இன்றைய அசுர இலக்கிய வளர்ச்சிக்கு முன்னேயும், அப்படியொன்றும் இவரது எழுத்துக்கள் மங்கிவிடவில்லை.இன்றும் சிங்கை நூலகங்களில் பல இல்லத்தரசிப்பெண்களால்,இவரது நூல்கள், விரும்பிப்படிக்கப்படுவதே கூட இவரது எழுத்தின் ஈர்ப்புக்கு, ஒரு சான்று.

கடந்த நூற்றாண்டில், 1960களில் பெண்ணின் பால்விழைவு குறித்து, அன்றைய வாழ்வியலின் கண்ணோட்டத்தில், தேர்ந்த புனைவோடு கதை சொல்பவர் அண்மையில் மறைந்த கிருத்திகா அம்மா.இவரது மற்ற நூல்களை விட,வாசவேஸ்வரம் அன்று பேசப்பட்ட நாவல் என்பதில் ஐயமேயில்லை. பின் நவீனத்துவம் அன்று அதிகம் அறிமுகமாகாத காலகட்டத்தில், பழுக்கக் காய்ச்சிய உரைவடிவமாக கருவூலத்தை எதிர் பார்க்கமுடியவில்லை., எனினும் மணமான பெண்ணின், உணர்வுகளுக்குக் கொஞ்சமும் மதிப்பு கொடுக்காத கணவன்மார்களாக வரும் சந்திரசேகர அய்யர் ஒருபுறம், காலையிலிருந்து மாலைவரை தூங்கி , இரவில் படு சுறுசுறுப்பாய், சீட்டாடவும் ,ஊர்சுற்றவும், கிளம்பும் சுப்பையா மறுபுறம், என ஊரே ரத்தம் உறிஞ்சப்பட்ட ஆண்களாய், மந்தபுத்தி மக்காளர்களாய், ரோகிணிக்கு தோன்றுகிறது . பிச்சாண்டி மட்டும் வாட்டசாட்டமாய், கரணை, கரணையாய் காலும் கையுமாய் ,நடமாடும் போக்கிரி. ஆனாலும் இவன்தான், ரோகிணியின் உள்ளம் கவர் கள்வன் .கற்புனெறிக்கு மட்டுமே பாஸ்மார்க் போடும் கதைசொல்லிகள் வாழ்ந்த காலகட்டத்தில், கிருத்திகா அம்மா துணிகரமாக எடுத்தாண்ட உத்தி அசர வைக்கிறது.

கதைபேசவில்லை.தொட்டுத்தழுவவில்லை. மனதால், கண்களால் , மட்டுமே இருவரும் உருகி வழிகிறார்கள். சந்திர சேகர அய்யரை, சுப்பையாவே கொலை செய்தாலும் ,பழி பிச்சாண்டிபேரில் விழ, கொலையுண்டுகிடக்கும் கணவனையும் மறந்து, பாட்டாவிடம் பிச்சாண்டிக்காகப் பேசவரும் ரோகிணியின் பரிதவிப்பில், அலக்க, மலக்க, கதை சுவாரஸ்யமாகவே போகிறது. இன்னாவலில் கதாகாலக்‌ஷேப தாத்தா சுப்புக்குட்டியும், நள்ளிரவில் சுண்டலோடு சின்னப்பெண் ஆனந்தாவைத் தேடிப்போவதும் அதுக்குக்கூட, மனைவியை தைரியமாக ஆளத்தெரியாமல், பயந்து, பயந்து , தொட்டு, சட்டென்று திரும்பிக் கொள்ளும் சுப்பையாவை,சீ, தூ, என வெறுப்பை உமிழும் விச்சு,என, -------இப்படி, இப்படியாய், கதை --------ம் ம் ம் ம், ஆச்சர்யம் தரும் ஒரே விஷயம், இன்னாவல் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்டாலும், இன்றும் வாசிக்க முடிகிறது என்பதே, நாவலின் இருத்தல்தானே?

காவேரியின் “ இந்தியாகேட், ”பிராமண சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தை அப்பட்டமாய் தோலுரித்துக்காட்டும் , புனைவு. பெண்ணடிமைத்தனத்தை மெளனமாக வாள் கொண்டு வெட்டும் இக்கதையை பெண்கள் மிகவும் நேசிப்பர். படித்து, கணவனைப்போலவே பாங்கில் உத்தியோகம் பார்க்கும் பெண்ணை , புகுந்த வீட்டினர் செய்யும் அதிகாரமும், படிப்பறிவில்லா, மற்ற மருமகள்களைப்போலவே, ஆண்கள் சாப்பிட்ட மிச்ச எச்சிலும்,பானையின் அடி வண்டலையும், வழித்துப்போட்டு சாப்பிட வேண்டிய கண்றாவியில், வாயிலெடுக்கவருகிறது, என்ற கதாசிரியரின் வரிகளில், நமக்கும் குமட்டிக்கொண்டு வருகிறது. இருண்ட குக்கிராமத்தில் புக்கக வீட்டின் , ஆணாதிக்கம் இப்படியென்றால், வாழ்க்கைத்துணைவனாக வந்தவனோ, டில்லியில் அவளுடன் வீட்டுவேலையிலோ,மன ஆறுதலிலோகூட, எதிலுமே பட்டுக்கொள்ளாமல்,அவள் வாங்கும் சம்பளத்துக்கும், அவள் உடலுக்கும் மட்டுமே, உரிமை கொண்டாடும் ,வெட்கம் கெட்ட ஒரு பேடியிடமிருந்து, துணிகரமாக பிரிந்து போக முடிவெடுக்கிறாள். தனிவீடு வாங்கி சுதந்திரமாய் வாழும் முடிவை, அவள் தீர்மானிப்பதிலிருந்து,இன்றைய பெண்களை, கல்வியும் உத்தியோகமும், மரபு பேசும் மெளடீகத்திலிருந்து, எப்படிக் காப்பாற்றுகிறது, என்பதை விளக்கும் அருமையான கதை இது. விறு விறுப்பும், சுவாரஸ்யமும் , பக்கத்துவீட்டு சம்பாஷணையை, சர்வ சாதரணமாய் சுவைப்பதுபோல்,கதையை கொண்டுபோகும் இயல்பு இக்கதையின் சிறப்பு. இதுவே கதாசிரியையின் வெற்றியும் கூட.

கன்னடத்தில் வெளிவந்த ’செளகந்தியின் சுவகதங்கள்” எனும் சிறுகதை , அண்மையில் படித்ததில் என்னை மிகவும் கவர்ந்த கதை. சுவகதம் என்றால் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பேச்சு, என்று கன்னடத்தில் விளக்கம் தருகிறார் ஆசிரியை வைதேகி. தங்கைகளுக்குத் திருமணமாகியும், செளகந்திக்கு மட்டும் திருமணமாகாமல் நின்றுபோக, யாரையும் காதலிக்கவும் தெரியாமல், வாழ்ந்து தொலைக்கும் அவள், உணர்வுகளைக் கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளாமல்,வியூகம் அமைத்து தாக்கும் சமுதாயக்கூட்டிலிருந்து, மூச்சுமுட்டிவெளியேறி, தனித்து வாழப்போகுமிடத்தும், கொண்டுவிடவரும் தந்தை,செளகந்தியை வாயில் விரலை வைத்தால்கூட கடிக்கத்தெரியாது, எனும் பாணியில் வீட்டுக்காரியிடம் அறிமுகப்படுத்திவிட்டுப்போக,தனித்துக்கிடக்கும் இரவுகளில் எல்லாம் காத்திருக்கிறாள் செளகந்தி உறங்காது., -- இன்றாவது ஏதாவது நடக்குமா? வீட்டுக்காரியும் ஒருனாள் மகள் வீட்டுக்குப் போய்விட,படப்டப்போடு காத்திருக்கிறாள். நள்ளிரவு, பின்னிரவும் கழிந்து, விடியல் ஜாமம் 5 மணிக்குக் கதவு தட்டும் சத்தம் கேட்டு, போதையோடு கதவைத் திறக்கிறாள் செளகந்தி. வாசலில் நிற்பது அப்பா. பின்னால் அம்மா.எதிரில் சாலை கறுப்பாக நஞ்சேறிக்கிடப்பதாய் கதை முடிகிறது. மரபு ரீதியிலான வாழ்க்கையில் அமிழ்ந்து, சுய தாபத்தையும் இச்சையையும் கூட அடக்கி,அந்த சிக்கலிலிருந்து விடுபட முயலும், யதார்த்தத்தை, துளிகூடப் பிசிறாமல், வெகு நுட்பமாய் சித்தரிக்கும் இச்சிறுகதையை எழுதியவர், வைதேகி எனும் பெயரில் எழுதும் ஜானகி ஸ்ரீனிவாசமூர்த்தி. குடும்பத்தின் ஆணாதிக்க சூழலில் சிக்கி, வெளியேற முடியாமல் தவிக்கும் பெண்களின் மன உளைச்சலை, சின்ன சிடுக்கும் இன்றி , மிக அழகாய் எழுதியுள்ளார் வைதேகி , கன்னடத்தில் , மலயாளத்தில், என எந்த மொழியில் எழுதினாலும் தரமான எழுத்தை வெண்சாமரம் வீசி வரவேற்கவேண்டாமா? ஒவ்வொரு எழுத்தாளரும் தடவிப்பெண் நலம் பேசுதல் காண்மின்!!!

பெண்ணின் பெருந்தக்க

டால்ஸ்டாய், ஹெர்மன் மெல்வில்,டால்ஸ்தாவ் வெஸ்கி, ப்லாபர்ட், இப்படி ஒரு பத்து நாவலாசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எல்லாம் முதல் தரமான எழுத்தாளர்கள் என்றால், ஞான் மூன்றாம்தர எழுத்தாளனே, என்று தன்னைப்பற்றி, ஒரு ஆங்கில எழுத்தாளர், கூறியுள்ளார்.

மரபற்ற மரபின் எச்சங்களாக உதிரும் பேதைமையை, அப்படியே எழுத்தில் கொண்டுவரும் ,சில எழுத்தாளர்களின் மொழியழகில், சில கதைகள் வெற்றி பெறுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவே இலக்கியம், என்ற இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பைத்தான் அவ்வப்போது திருத்த வேண்டியுள்ளது.எந்த நல்ல சிறுகதைக்கும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் , தகுதியும் , பெருமளவில் உலக நடப்பைச் சார்ந்திருக்கும் தன்மையும், இருத்தல் வேண்டும்.

சமூகப்பிரக்ஞையை அலசுவதும், மண்ணின் விழுமியம் கோலோச்ச எழுதுவதும், மட்டுமல்ல இலக்கியம். .தன்னுடைய சிந்தனையை வாசகர்களிடையே, கதையாடலாகக் கொண்டு வரும்போது, சமகாலப் பிரக்ஞையை, கதைமாந்தர்களின் உணர்வுகளோடு,, அப்படியே உள்வாங்கி எழுதும்போதுதான் , அந்த எழுத்து வாசகனை சென்றடைகிறது.

19ம் நூற்றாண்டில்தான் அசாமிய மொழியில் நவீன இலக்கியம் தோன்றியது. 1947க்குப்பிறகுதான் ஒரியாவில் புதுக்கவிதையே பிறந்தது.கமலாதாஸ், அம்ருதா பிரீதம் போன்றோர், சமுதாய எதிர்ப்பை மீறியும் ,மரபைமீறிய வாழ்க்கையே வாழ்ந்தாலும், இலக்கியத்தில் அவர்களின் கடுமையான உழைப்பே அவர்கள் பேசப்பட்டதற்குக் காரணம். தாய்மொழியான பஞ்சாபியில் எழுதுவதைவிட , இந்தியிலும் ஆங்கிலத்திலும், எழுதியதாலேயே, அம்ருதா பிரீதத்தின் எழுத்து கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் பன்முகப்பார்வை, அல்லது அதுபற்றிய அறிவின் அலசல் மிக முக்கியம். அருந்ததிராயின் சின்னத்தெய்வங்கள் கூட மலையாளிகளிடையே பெரும் எதிர்ப்பை ஈட்டிய நாவலே.

சிரியன் கிறிஸ்டியன்களின் வாழ்வியலை,துளிக்கூட ஒளிக்காமல் , துணிகரமாய் தன் இலக்கியம் மூலம் உலகுக்கு எடுத்துரைத்தவர் அருந்ததிராய். இந்த நிதர்சன எழுத்தில், [தலீத்தியத்தை அறிமுகப்படுத்தும் ]சிவகாமி,பாமா, போன்றோருக்கும் பங்குண்டு.அம்பையின் எழுத்தில் ஆண், பெண் என்ற வேறுபாட்டை அறிவுபூர்வமாகத் தகர்த்து,ஆக்கபூர்வமான படைப்பாற்றலில் துலங்கும் அழகைக் காணலாம். இதுவே அவரது பலமும் கூட. பெண்ணியல்வாதத்தை முன்னிலைப்படுத்தும் எழுத்தை,ராஜம் கிருஷ்ணன் , அம்பை, காவேரி, வாஸந்தி, திலகவதி,,தொட்டு, இன்றைய உமா மஹேஸ்வரி வரை, அந்தந்த காலகட்டதுக்கே உரிய,பரிமாணங்களோடு இயைந்தே எழுதியுள்ளார்கள், என்பதையும் மறுப்பதற்கில்லை.

1915க்கும் 1917க்குமிடையில் குளத்தங்கறை, அரசமரம் எழுதிய, வ.வே.சு. ஐயரின் எழுத்துக்கள்தான் , தமிழ்ச்சிறுகதை சரித்திரத்தைத் தொடங்கியது.பாரதிக்குப் பிறகு, புதுமைப்பித்தன், கு.ப.ரா,மெளனி,பி,எஸ்.ராமையா, ந.பிச்சைமூர்த்தி, சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், ல.ச.ரா. சுந்தர ராமசாமி,  தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுஜாதா,பிரபஞ்சன், ஜெயமோகன், அழகிய பெரியவன் , என இன்று எழுதித் தீர்க்கவே முடியாத, எழுத்தாளர்களிடையே, நவீன இலக்கிய அலசலுக்கே, முன்னோடியான க. நா.சு.--,அவர் மறைந்தாலும் , அவரது இடத்தை இம்மியும் குறைக்காமல் , நிரப்பிவரும் வெங்க்ட் ஸ்வாமினாதன் போன்ற ஆய்விலக்கியவாதிகளின் தரமான அலசல்தான் இன்று பலரையும் , திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஆண்கள் என்றாலே அறிவியல் , பெண்கள் என்றாலே சமையல்கட்டு,,என்ற காலம் மலையேறிவிட்டது. தொழில்னுட்பம் முன்னேறிவிட்ட இன்றைய காலகட்டத்தில்,ஆணுக்கு சரினிகர் சமமாக,கல்வியிலும், அலுவலகத்திலும் கிடுகிடுவென முன்னேறியுள்ள பெண்களை சமுதாயம் புதிய பார்வையோடு வரவேற்கிறது. பாரதி, பெரியாரின் பெண்ணியப்பார்வை, நடைமுறையிலும் பெண்களின் முன்னேற்றத்துக்கு பாதை வகுக்கத் தொடங்கியபின்னர், எழுத்தாளர்களின் பேனாவும் தன் பங்குக்கு வஞ்சகமின்றி உழைத்துள்ளது. யுனெஸ்கோ நிறுவனம் 1975ம் ஆண்டைப் பெண்கள் ஆண்டாக , அறிவிக்கத் தொடங்கியபின்னர், எல்லா இடங்களிலும் பெண்கள் அமைப்புக்களும், பெண்கள் சார்ந்த விழிப்புணர்வுத்திட்டங்களும்,, பெண் சுதந்திரத்துக்கான, நல்லியக்க அமைப்புக்களும் , இன்றைய பெண்களுக்கு அசாத்திய, தன்னம்பிக்கையை வளர்த்து விட்டதும் கூட சுடரொளியே.

ஆணுக்கு சரி நிகர் சமமாக பேசக்கூடத்தயங்கிய காலகட்டம், இன்றைய இளையரிடையே, நகைச்சுவை விருந்தாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. திருமணங்களில் கூடதுன்பம் தோய்ந்து , வெளியேறத்தெரியாமல், உழன்று கிடந்த நிலையல்ல இன்று.வேண்டாமென்றால், சட்டம் மூலம், பேசிப்பிரிந்து போகும் சுதந்திரம் இன்றைய பெண்களுக்குண்டு. இன்னும் ஒருபடி மேலே போய், தாலிகட்டிக் கொள்ளாமலே, {சேர்ந்து வாழ்தல்}-[living together]வாழ்ந்து பார்த்து விட்டு,பிடிக்காவிட்டால், தக்‌ஷணமே பிரிந்து செல்லும் வாழ்வியலையும்,இலக்கியவாதிகள் தங்கள் எழுத்துக்களில், நவீனத்துவ பார்வையில் எழுதுகிறார்கள். ஒரு பெண்ணின் நெருக்கடியான தருணங்களை,சிறுமை, பெருமைகளை,பண்டைய கலாச்சாரங்களிலிருந்து, இன்றைய கலாச்சாரம் வரையுள்ள பார்வையைக்கூட,பன்முகப்பார்வையாய் , அந்தந்த மொழிக்கே உரித்தான லாவகத்தோடு எழுதியுள்ள, ஆண், பெண் எழுத்துக்களின் மீது பெருமிதமே ஏற்படுகிறது. ஆண்கள் எழுத்தைவிட, சில பெண்ணிய எழுத்துக்களில்,ஜாதக தோஷம், வரதட்சிணைக்கொடுமை, பெண்சிசுக்கொலை, ஆணாதிக்க எதிர்த்தல்,, வலிந்து திணிக்கப்பட்ட அடிமைத்தனத்துக்கு எதிரான போர்க்குரல்,கற்புகுறித்த எள்ளல்,என எல்லாமே வீர்யம் மிக்க கோஷங்களாகவே ஒலிக்கிறது.

பெண் சிந்திக்கக் கற்றுக்கொண்டாள்.சுதந்திரமான காற்றை சுவாஸிக்கக் கற்றுக் கொண்டாள்.கடந்த நூற்றாண்டின் பிற்பகுதிக்குப்பிறகு, ஆண்களை விட பெண்களின் பெண்ணியல் எழுத்துத்தான் தீவிரமடைந்துள்ளது. இலக்கியம் வழி சில்லென்ற தென்றல் காற்றை சுகமாய் சுதந்திரமாய் அனுபவிக்கும், அனைத்துப்பெண்களுக்கும் இந்த சாஹித்யக்காரியின் மனமுவந்த வாழ்த்துக்கள்

kamaladeviaravind@hotmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner