இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2008 இதழ் 104  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

அரசியல்!

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று: 1958!

- குரு அரவிந்தன்-


இலங்கைத் தீவு!குரு அரவிந்தன்கத்தியின்றி இரத்தமின்றி சாத்வீகமான முறையில் போராடித் தமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையோடுதான் தமிழர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அகிம்சை என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியாத பேரினவாதிகள் திடீரெனக் கத்தியைத் தூக்குவார்கள் என்று அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது என்று யாரோ சொன்னார்கள். சுதந்திரம் யாருக்குக் கிடைத்தது என்பதே அப்போதைய கேள்விக்குறியாய் இருந்தது. உண்மையிலேயே பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களே இதனால் பயன்பெறத் தொடங்கினார்கள். சிறுபான்னை இனத்தவரான தமிழர்களுக்கு எதிரான இனத்துவேசத்தின் முதற்கட்டமாக 1949ல் இலங்கையில் குடியுரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு என்ற சட்டத்தைக் கொண்டுவந்து எமது உடன் பிறப்புக்களான மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தெடுத்தார்கள். இதனால் 1947ல் எட்டு அங்கத்தவர்களைக் கொண்டிருந்த மலையகத் தமிழ் மக்களால் 1952ல் ஒரு இடத்தைக்கூடப் பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் அரசியலில் இருந்து அவர்கள் முற்றாக ஒதுக்கப்பட்டார்கள். அடுத்த கட்டமாக அப்போது பிரதமராக இருந்த டி. எஸ். சேனநாயக்காவால் கிழக்கு மாகாணத்தில் இருந்த தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பறிக்ப்பட்டு நன்கு திட்டமிட்ட முறையில் சிங்களக் குடியேற்றங்கள்
நடைமுறைப் படுத்தப்பட்டன. கல்லோயா, அல்லை, கந்தளாய் போன்ற பகுதிகள் சிங்களக் குடியேற்றங்களாய் மாற்றப்பட்டு சிங்களப்
பெயர்களும் சூட்டப்பட்டன. இதனால் தமிழர்களுக்கான பிரதேச ரீதியிலான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. சுதந்திரமடைந்த பத்து வருடங்களுக்குள் பேரினவாதிகளான சிங்கள அரசியல் வாதிகள், சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்களுக்கு எதிரான அத்தனை இனத்துவேச நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, தமிழர்களை மும்முரமாக அரசியலில் இருந்து ஓரம்கட்டத்
தொடங்கினார்கள்.

1956ம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் அப்போது பிரதமராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகாவால் சிங்களம்
மட்டும் இலங்கையின் அரசாங்க மொழியாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. பிரித்தாளும் தந்திரத்தில் நல்ல அனுபவம் கொண்ட
பிரித்தானியர்கள் நினைத்ததுபோலவே ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் எதிர்பார்த்ததுபோல அவர்களுக்குச் சாதகமாய் இலங்கையில் தொடர்ந்து கொண்டிருந்தன. பிரித்தானியரிடம் கற்ற அரசியல் பாடங்களையே இலங்கை சுதந்திரம் அடைந்தபின் சிங்கள அரசியல் வாதிகளும் பின்பற்றத் தொடங்கினர். ஈழத் தமிழர்களை ஏமாற்றுவதில் அவர்களிடம் கற்ற பிரித்தாளும் தந்திரத்தையே இன்றுவரையும் பாவித்து அதையே அரசியலிலும் கடைப்பிடித்து வருகின்றனர். எதிரிக்குள் இருக்கும் எதிரியை இனங்கண்டு, அவர்களின் பலவீனம் என்ன என்பதை அறிந்து, அதைத் தீர்த்து வைப்பதன் மூலம் அவர்களைத் தங்களோடு அணைத்துக் கொள்வது போன்ற நயவஞ்சக நடிப்பில் சிங்கள அரசியல் வாதிகள் நீயா நானா என்று போட்டிபோட்டுத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டனர். எம்மவர்கள் மட்டுமல்ல, மலையக, முஸ்லீம் அரசியல் வாதிகளும் தெரிந்தும் தெரியாமலும் இவர்களின் குள்ள நரித் தந்திரத்தில் பலியாகிக் கொண்டே இருந்தார்கள். இதற்கு இன்னுமொரு காரணம் இருந்தது. பிரித்தானியரிடம் அடிமைகளைக இருந்ததாலோ என்னவோ அந்த காலகட்டத்தில் வாழ்ந்த படித்த சில தமிழர்களிடம் கூட, அடிமைத்தனம் குடியிருந்தையும் நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இன்றும் தமிழன் எழுச்சி காணமுடியாமல் இருப்பதற்கு இந்த அடிமைப்புத்தியும், தங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அவர்களின் சுயநலமும்தான் முக்கிய காரணமாகும் என்பதை புத்திஜீவிகள் எல்லோரும் நன்கு புரிந்து கொள்வார்கள். அதனால்தான் எந்த சிங்கள அரசியல் கட்சி பதவிக்கு வந்தாலும் தமிழர்களை முடிந்தவரை பலவீனப் படுத்துவதையே அவர்களின் முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்ததை அவதானிக்கலாம். தமிழர்களுக்கு எதிரான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது எதிர்க்கட்சியாக இருந்தலும்சரி அவர்கள் உள்ளுக்குள் ஒன்றுபட்டே செயலாற்றினர். தமிழர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்து நடைமுறைப் படுத்தப்படும் போதெல்லாம் இந்தவிடையத்தில் மட்டும் எதிர்கட்சி எப்பொழுதும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே நடந்து கொள்ளும் ஏனென்றால் தமிழர்களைப் பொது எதிரிகளாகவே இவர்கள் எப்பொழுதும் நினைத்தார்கள். தமிழர்கள் திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள் மேலே வந்தால் தங்களை ஒரேயடியாய் ஒதுக்கிவிடுவார்கள் என்ற சாதாரண வேண்டாதவொரு பயம் எப்பொழுதும் இவர்களுக்கிடையே இருந்து கொண்டிருந்தது. பணமும், பதவியும் கொடுத்து தமிழர் என்று சொல்லப்படுகின்ற சுயநலவாதிகள் சிலரை அவ்வப்போது விலைக்கு வாங்கி ஏமாற்றி விடுவதால் தான் �ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகின்ற� கதையை, பல தடைவ ஏமாற்றப்பட்டும் எம்மவர்களால் கொஞ்சம்கூட இதுவரை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.

காந்தியத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ஈழத்தமிழர்கள் உண்ணா விரதம் இருப்பதன் மூலம், தமிழ் மொழி மீது அவர்களுக்கு இருந்த
அதீத பற்றையும், அதேசமயம் சிங்கள மக்களுக்குத் தமிழ் இனத்தின் ஒட்டுமொத்தமான எதிர்ப்பையும் அகிம்சை முறையில்
காட்டவிரும்பினர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அகிம்சை முறையைப் பின்பற்றிய தலைவர்களையே தங்கள் ஆதர்சத்
தலைவர்களாக ஏற்றுக் கொண்டு, வன்முறையை முற்றாக வெறுத்த ஈழத்தமிழ் அரசியல் வாதிகளும் அதையே இங்கும் பின்பற்றினார்கள்.
சுதந்திர வேட்கை கொண்ட அனேகமான ஈழத்தமிழர்களின் வீடுகளில் மகாத்மாகாந்தி, பட்டேல், நேரு, சிதம்பரனார், பாரதியார், அரவிந்தர்,
தாகூர், ராஜாஜி, பெரியார், அண்ணாத்துரை போன்றோரின் படங்கள்தான் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஒரு சிலரின் வீடுகளில்
மட்டும் சற்று வித்தியாசமாய் நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ், வாஞ்சிநாதன் போன்றோரின் படங்களும் சுவரை அலங்கரித்த
வண்ணமிருந்தன.

கொழும்பு கோட்டைப் பகுதியில் கோல்பேஸ் திடலைப் பாரத்தபடி பழைய பாராளுமன்றம் அமைந்திருந்தது. பிரித்தானியர் காலத்தில்
கட்டப்பட்ட பழைய கட்டிடமே தொடர்ந்தும் இலங்கைப் பாராளுமன்றமாகப் பாவிக்கப்பட்டது. பன்னிரண்டு பாராளுமன்ற தமிழ்
அங்கத்தவர்களின் தலைமையில் சுமார் இருநூறு தமிழ் ஆர்வலர்கள் சிங்களம் மட்டும் அரசகருமமொழிச் சட்டத்திற்கு எதிராக உண்ணா
விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். �கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது� என்றதுபோல அவர்கள் நிராயுதபாணியாய்
சத்தியாக்கிரகம் என்ற சத்தியத்தை நம்பி அமைதியான வழியில் போராட்டத்தில் குதித்தார்கள். அமைதியான முறையில், அகிம்சை என்ற ஆயுதத்தால் பெரும்பான்மை இனத்தவரின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும் என்று இவர்கள் நம்பினார்கள். ஆனால் விளைவுகளோ எதிர் மாறாக இருந்தன. அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்திய இந்தக் கூட்டத்தை சிங்கள வெறியர்கள் கற்களால் தாக்கத் தொடங்கினர். ஆனாலும் இரத்தம் வழிய வழிய அவர்கள் எடுத்துக் கொண்ட லட்சியத்தை அடைவதற்காக அங்கேயே, அந்த இடத்திலேயே தொடர்ந்தும் அகிம்சையைக் கடைப்பிடித்த வண்ணம் உட்கார்ந்திருந்தார்கள். பௌத்தர்களான பெரும்பான்மை இனத்தவரான சிங்களவரின் மனங்களில் அன்பு என்றால் இன்ப ஊற்று, அன்பு என்றால் உலக ஜோதி, அன்பு என்றால் உலக மகாசக்தி என்ற மதக்கோட்பாடுகள் நிச்சயம் குடிகொண்டிருக்கும், அகிம்சைவாதிகளை, சாத்வீகத்தின் உண்மைத்தன்மையை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று இவர்கள் நம்பினார்கள்.

அன்றே அந்த நம்பிக்கையைச் சிங்கள அரசியல்வாதிகள் வீணாக்கி விட்டார்கள். அகிம்சை முறையைக் கடைப்பிடித்து, உண்ணாவிரதம்
இருக்கும் இவர்கள் எதற்கும் அசையமாட்டார்கள் என்பதை உணர்ந்த காடையர் கூட்டம் வெறிகொண்டெழுந்து தடிகளாலும்,
பொல்லுகளாலும் மீண்டும் கூட்டத்தில் புகுந்து தாக்கத் தொடங்கினர். இதை எல்லாம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும்
பொலிசார் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்ததால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து வீதிவழியே சென்ற தமிழர்களும், பேருந்துகளில், தொடர்வண்டிகளில் சென்ற தமிழர்களும் வெளியே இழுக்கப்பட்டுத்
தாக்கப்பட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளில் இருந்த பொருட்கள் கேட்டுக் கேள்வியின்றிக் காடையர்களால் கொள்ளை
அடிக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை, மட்டக்கிளப்பு, கல்லோயா, கந்தளாய்ப் பகுதிகளில் உள்ள தமிழர்கள்
மிகவும் மோசமாகத் தாக்ப்பட்டார்கள். இதுவரை காலமும் வெறும் வாய் வார்த்தைகளால் தழிழர்களை மிரட்டிக் கொண்டிருந்த சிங்கள
அரசியல் பேரினவாதிகள் தமிழர்களைக் கொலை செய்யும்படி காடையர்களைத் தூண்டிவிடவும் துணிந்தார்கள். இலங்கையின்
சரித்திரத்தில் முதன் முதலாக இனத்துவேசம் காரணமாக நிராயுதபாணியான தமிழர்கள், சிங்கள வெறியர்களால் ஆங்காங்கே படுகொலை செய்யப்பட்டனர். எந்தவித கட்டுப்பாடும் இன்றி சுமார் பத்து நாட்கள்வரை நடந்த இந்த இனவொழிப்பு நடவடிக்கையில் சுமார் நூற்றி ஐம்பது தமிழர்கள்வரை சிங்கள இனவெறியர்களால் அடித்தும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார்கள். இதுவரை காலமும்
சொத்துக்களையே இழந்து கொண்டிருந்த தமிழர்கள் இந்த காலகட்டத்தில் உயிர் இழப்புக்களையும் சந்திக்கத் தொடங்கினர்.

தமிழ் மக்கள் ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போராட்டத்தால் சிங்கள அரசியல் வாதிகள் ஆட்டம் கண்டு போயிருந்தனர். இதுவரை
காலமும் ஒற்றுமையாக இருந்த தமிழ் சிங்கள உறவுகளில் பங்கம் விளைவிப்பதன் மூலம் இவர்களிடையே வேற்றுமையை
வளர்க்கலாம் என்ற நோக்கத்தோடு பிரித்தாளும் தந்திரத்தை இனத் துவேசத்தின் மூலம் கையாளத் தொடங்கினர். 1956ல் ஒரு
முளையாகக் கிளம்பிய இனத் துவேசம் 1958ல் ஒரு விருட்சமாக கிளைபரப்பி நின்றது. சிங்கள இனத்துவேச வாதிகள் இதற்கு நன்கு
உரமூட்டியிருந்தார்கள்.

1958 மே மாதம் 22ம் திகதி வவுனியா மாவட்டத்தில் சில தமிழர்கள் கொள்ளையடிக்கப்பட்டு அடித்தும் வெட்டியும்; கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து பொலநறுவா, கிங்குறாக்கொட போன்ற இடங்களில் வசித்த தமிழர்கள் மோசமாகத் தாக்ப்பட்டனர். மே மாதம் 25ம் திகதி பொலநறுவா மாவட்டத்தில் மட்டும், கரும்புத் தோட்டத்தில் வேலை செய்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள்; வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன ஒழிப்பு நடவடிக்கை நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் பரவத் தொடங்கியது. மே மாதம் 28ம் திகதி கொழும்பின் தெற்குப் பகுதியில் உள்ள பாணந்துறை என்ற இடத்தில் இருந்த இந்துக் கோயிலின் மதகுருவை சிங்களவெறியர்கள் பெற்றோல் ஊற்றி உயிரோடு எதித்த சம்பவம் எல்லோர் மனதையும் அதிரவைத்தது. மனித நேயமுள்ள எந்த ஒருவனாலும் இப்படி ஒரு செய்கையைச் செய்யமுடியமா என்ற கேள்வி அப்போதுதான் எல்லா இன மக்களிடையேயும் எழுந்தது.

வீடு வாசல் உடமைகளை இழந்த சுமார் 12,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். அன்றுதான் ஈழத்தமிழர்களுக்கான அகதி வாழ்க்கை முதன்முதலாக ஆரம்பமானது. அகதிகளுக்கான கப்பல் பயணமும் அப்போதுதான் முதன் முதலாக ஆரம்பமானது. சுமார் 9500
தமிழர்கள்வரை கப்பல் மூலம் கொழும்பில் உள்ள அகதி முகாமில் இருந்து அவர்களது பாரம்பரிய பிரதேசமான யாழ்ப்பாணத்திற்கு
அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆபத்திற்கு ஒதுங்குவதற்காகவாவது தங்களுக்கென்று ஒரு பாரம்பரிய நிலம் இருக்கிறதே என்பதில்
தமிழர்கள் அன்று ஓரளவு நிம்மதியும் ஆறுதலும் அடைந்தார்கள். ஆனாலும் காலவோட்டத்தில், அந்த நிம்மதியையும் சிங்கள
பேரினவாதிகள் உடைத்தெறிந்து விடுவார்கள் என்று அப்போது அவர்கள் நினைத்திருக்கவில்லை.

அன்று அகிம்சை முறையில் அமைதியாகப் போராடி உரிமைகளை வென்றெடுக்கப் புறப்பட்ட நிராயுதபாணிகளான சில தமிழர்கள்,
பேரினவாதிகளால் தாக்கப்பட்டபோது, அகிம்சைமீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டார்கள். சிங்கள அரசியல் வாதிகளின்
செய்கைகளினால் மனமுடைந்துபோன சூழ்நிலைக் கைதிகளான தமிழ் அரசியல்வாதிகள் சாத்வீகம் என்பது நடைமுறைக்குச் சரிப்பட்டு
வரமாட்டாது என்பதை கடந்தகாலங்களில் ஏற்பட்ட தமது அனுபவங்கள் மூலம் நன்றாகவே உணர்ந்து கொண்டார்கள். உரிமைகள் முற்றாக மறுக்ப்பட்ட நிலையில், குட்டக்குட்ட இனியும் குனிந்து கொண்டிருக்க முடியாது என்ற நிலைப்பாட்டோடு சில இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகிம்சைப் பாதையை விட்டு விலகத் தொடங்கினார்கள்.

kuruaravinthan@hotmail.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner