அந்த
40 மணி நேரம்..!
- குரு அரவிந்தன் -

‘கப்பலோடு
பதினாறே வயது நிரம்பிய எனது தங்கை
சமந்தாவும் மூழ்கி விட்டாளோ என்ற பயத்தில்
நான் சில நாட்களாக தூக்கத்தையே மறந்து
விட்டேன்’ என்று ரொறன்ரோ பியர்சன் சர்வதேச
விமான நிலையத்தில் சமந்தாவை வரவேற்க
ஆவலோடு வந்த பத்தொன்பதே வயது நிரம்பிய
கிறிஸ்ரினா விம்மி விம்மி அழுதாள்.
‘நேரம் செல்லச் செல்ல நாங்கள் உயிர்
தப்புவோம் என்ற நம்பிக்கைகூட அற்றுப்
போய்விட்டது’ மருண்டு போயிருந்த
சமந்தாவின் அந்த அழகிய கண்களைப்
பார்த்தபோது அவர்கள் ஒவ்வொருவரும் பட்ட
வேதனையின் துயரமும், அச்சமும் அப்படியே
விழிகளில் பிரதிபலித்து நின்றன.
கிறிஸ்டீனாவை மட்டுமல்ல, அவளைப்போல பல
உறவுகளை உறையவைத்த நிகழ்ச்சி ஒன்று சென்ற
புதன்கிழமை யாருமே எதிர்பாராத நேரத்தில்
பிறேசில் நாட்டுக் கரையோர அத்திலாந்திக்
கடலில் நடந்திருந்தது. 40 மணிநேரம் கடலில்
தத்தளித்து உயிருக்குப் போராடிய அந்த
அனுபவம் வாழ்நாளில் என்றும் அவர்களால்
மறக்கமுடியாதது.
கனடாவின்
மிதக்கும் வகுப்புக்கள் என்று
சொல்லப்படுகின்ற உயர்வகுப்பு
மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின்படி எஸ்.
வி. கொங்கோடியா என்ற கப்பலில் நாற்பத்தி
எட்டு மாணவர்கள் சென்ற செப்ரம்பர் (2009)
மாதம் பயணமானார்கள். இவர்களில் நாற்பத்தி
இரண்டு மாணவர்கள் கனடாவைச் சேர்ந்தவர்கள்.
மற்றவர்கள் முறையே அமெரிக்கா,
அவுஸ்ரேலியா, நியூசிலண்ட், மெக்சிக்கோ,
ஐரோப்பா, மேற்கிந்திய தீவுகளைச்
சேர்ந்தவர்கள். பதினோராம், பன்னிரண்டாம்
வகுப்பு மணவர்களும், முதலாம் வருட கல்லூரி
மாணவர்களும் இதில் பயணம் செய்தார்கள்.
பயணத்திட்டத்தின்படி தென்னமெரிக்கா
கரையோரமாகச் சென்ற அவர்கள் பெப்ரவரி மாதம்
(2010) பிறேசில் நாட்டிலிருந்து உருகுவே
நாட்டை நோக்கிப்; பயணம் செய்தார்கள்.
திடீரென ஏற்பட்ட சூறாவளியில் கொங்கோடியா
அகப்பட்டுக் கொள்ளவே, சில நிமிடங்களில்
கப்பல் சாய்ந்து நீரில் மூழ்கத்
தொடங்கியது.
இந்தக் கப்பலில் மாணவர்களோடு
ஆசிரியர்களும், மாலுமிகளுமாக மொத்தம்
அறுபத்தி நான்குபேர் பயணம் செய்தார்கள்.
அவர்களது பாடத்திட்டத்தின்படி ஏற்கனவே
இத்துறையில் பயிற்சி எடுத்திருந்தபடியால்
உடனடியாகவே உயிர் காக்கும் படகில்
ஏறித்தப்பித்துக் கொள்ள அவர்களால்
முடிந்தது. மூன்று படகுகளில் ஒன்று
ஓட்டைப் படகாகையால், படகு மூழ்கிப்போகாமல்
இருப்பதற்காக அதற்குள் நிறைந்த தண்ணீரை
நாற்பது மணிநேரமாக அடிக்கடி அள்ளி வெளியே
ஊற்றிக் கொண்டே இருந்தார்களாம்.
188
அடி நீளமான கொங்கோடியா கப்பல் மூன்று பாய்
மரங்களையும், பதினைந்து பாய்களையும்
கொண்டது. சூறாவளி காரணமாகத் திடீரெனக்
கப்பல் தண்ணீரில் சரிந்து விட்டது. சரிந்த
கப்பலில் தண்ணீர் புகுந்து கொள்ளவே,
அரைமணி நேரத்திற்குள் கப்பல் முற்றாகவே
மூழ்கிவிட்டது. பிறேசில் கரையில் இருந்து
555 கி. மீற்ரர் தூரத்தில் தென்
அத்திலாண்டிக் கடலில் இந்தச் சம்பவம்
நடந்தது. கப்பல் மூழ்கியபோது, ஆபத்து
எச்சரிக்கைச் சமிகைகளைக் கூடப்
பாவிப்பதற்கு அவர்களுக்கு அவகாசம்
இருக்கவில்லை. நான்கு மீற்றர் உயரத்திற்கு
அலைகள் வீசிக்கொண்டிருந்தனவாம். மழையும்,
புயற்காற்றும் அவர்களுக்குப் பயம்
காட்டிக் கொண்டிருந்ததால், படகுகள்
தத்தளிக்கத் தொடங்கின. உயிராபத்தை
உணர்ந்து கொண்டதால், முன் எச்சரிக்கையாகப்
படகில் இருந்த மாணவர்கள் தேவை கருதி மழை
நீரையும் சேகரித்து வைத்திருந்தார்களாம்.
இவர்களது அதிஸ்டம் என்றுதான் சொல்ல
வேண்டும், கப்பலில் பொருத்தப்பட்டிருந்த
தானியங்கி கருவிகள் தாமாகவே செயற்படத்
தொடங்கினவாம். அந்தக் கருவிகளின்
செயற்பாட்டின் மூலம் செயற்கைக்
கோள்களுக்குச் சமிகை அனுப்பப்படவே,
அச்செய்தி கரையோரப் பாதுகாப்புப்
படைக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்ததால்
உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடியதாக
இருந்தது. அப்படி இருந்தும் சுமார் 40
மணித்தியாலங்களின் பின்தான் ஆபத்தில்
சிக்கியவர்களுக்கு உதவி கிடைத்தது.
அதிகாலையில் இந்த விபத்துப் பற்றிய செய்தி
கிடைக்கவே, பிலிப்பைன் நாட்டு சரக்குக்
கப்பல் ஒன்று அவர்களை மீட்கும் பணியில்
ஈடுபட்டது. கடல் கொந்களிப்பு காரணமாக
விபத்து நடந்த இடத்தைச் சென்றடைய
அவர்களுக்கு ஐந்து மணித்தியாலங்கள்
எடுத்தன. இந்த விபத்தில் அகப்பட்ட
அறுபத்தி நான்கு பயணிகளும் அதிஸ்டவசமாக
உயிரோடு மீட்கப்பட்டு விட்டார்கள்.
புதன் கிழமை நடந்த விபத்தில்
அகப்பட்டவர்களை வெள்ளிக்கிழமை
காலையில்தான் மீட்டெடுக்க முடிந்தது. நவீன
தொழில் நுட்பயுகத்தில், கப்பல் மூழ்கிய
இடத்தைக் கண்டுபிடிக்க பிரேசில்
கடற்படையினருக்கு ஏன் 19 மணித்தியாலங்கள்
எடுத்தன என்பது இன்னமும் பதில் இல்லாக்
கேள்வியாகவே இருக்கின்றது. நன்கு பயிற்சி
பெற்ற கடலோடிகள் என்பதால், உடனடியாகவே
நடவடிக்கை எடுத்து எல்லோரையும் அவர்களால்
காப்பாற்றக்கூடியதாக இருந்தது. என்னதான்
அவர்கள் உயிர் தப்பினாலும் அவர்களுக்கு
ஏற்பட்ட அந்த மரணபயம் காலமெல்லாம்
அவர்களைவிட்டுப் போகப்போவதில்லை!
kuruaravinthan@hotmail.com