இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2010  இதழ் 128  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
“நீரின்றி அமையாது உலகம்............“

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுகோட்டை


தண்ணீர் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். தண்ணீர் கிடைக்கும் தன்மையைப் பொறுத்தே தாவர வகைகளும், மனித வாழ்க்கை முறைகளும் செம்மையாக அமையும். உயிரினக் கட்டுப்பாட்டிற்கும் பரவலுக்கும் தண்ணீர்மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. இதனைக் கருத்தில் கொண்டே வள்ளுவப் பெருந்தகையும்,

“நீரின்றி அமையாது உலகம் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு“
  என்று குறிப்பிடுகிறார்.

நீரும் நிலமும்
இவ்வுலகம் 3/4 பங்கு நீரால் சூழப்பெற்றுள்ளது. இதனை, “ஆழிசூழ் உலகம்“ என்று கம்பர் குறிப்பிடுகின்றார். இந்நிலத்தில்,

“கடல் 97.2%
பனியாறு 2.10%
நிலத்தடிநீர் 0.62%
நன்னீர் ஏரிகள் 0.009%
உப்புநீர் ஏரிகள் 0.008%
மண்நீர் 0.005%
வளிமண்டல நீர் 0.001%
ஆற்று நீர் 0.0001%“

என்ற அளவில் நீர் வளம் உள்ளதாகச் சூழலியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்நீர் வளத்தில் நாம் சிறிதளவையே பயன்படுத்த முடிகிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் தண்ணீர் உள்ள இடங்களுக்கு அருகாமையிலேயே வாழ்ந்தனர். ஆற்றின் கரையோரங்களில் தான்மனித நாகரிகம் தோன்றி வளர்ச்சியடைந்த்து. அதனால் தான் ஆற்றினை மனித நாகரித்தின் தொட்டில்கள் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆறுகளின்றேல் மனித நாகரிகம் வளர்ச்சியடைந்திருக்க இயலாதென்பதனை நாம் இதிலிருந்து தெளிவாக உணரலாம்.

நீரின் முக்கியத்துவம்
உலகில் உணவு உண்ணாமல் இருந்திடலாம். ஆனால் நீர் அருந்தாமல் இருத்தலியலாது. தண்ணீர் தரணியின் உயிர்களுக்கு உயிர். அஃதின்றேல் இவ்வுலகில் மனிர்களும், தாவரங்களும், பிற உயிர்களும் தோன்றி வாழ இயலாது. இதனை உணர்ந்தே வள்ளுவப் பெருந்தகையும், ‘‘வான் சிறப்பு“ என்ற அதிகாரத்தில் நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

உலகின் ஆதாரம் நீர்
உலகம் நீரின்றி இராது. ஒழுக்கமும் நீரின் அடிப்படையில் தான் அமையும். பரிமேலழகர், “நீரின்றி அமையாது உலகாயின் எத்திறத்தார்க்கும் மழையின்றி ஒழுக்கம் நிரம்பாது என உரைப்பாரும் உளர்“ என தனது உரையில் நீர் உலக ஒழுக்கத்திற்கு அடிப்படை என்பதைக் குறிப்பிடுகிறார். ஆள்வோர் நிலைத்த புகழ் பெற வேண்டுமெனில் நீர் வளத்தைப் பெருக்க வேண்டும். குளத்தை வெட்டி, நீர் வரும் வழிகளை தூர் வாரி, ஏரிகளை அமைத்து நீர் வளத்தைப் பெருக்கி உலகத்தை வாழ வைத்தல் வேண்டும் என்று புறநானூற்றுப் புலவர் மன்ன்னிடம் நீரின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி புகழ் பெறும் வழியைக் கூறுகின்றார். இது எக்காலத்திற்கும் பொருந்தும் கூற்றாகும். பண்டைக்கால சோழ மன்னர்கள் அதிகப் புகழ் பெற்றதற்குக் காரணம் அவர்கள் நீர் வளத்தைப் பெருக்கி சோழ நாடு சோறுடைத்து எனும் பெயர் ஏற்படும்படி செய்தனர் என்கிறார் அறிஞர் சதாசிவபண்டாரத்தார்.

உணவும் நீரே, உயிரும் நீரே
தண்ணீர் உணவாகவும் பயன்படுகின்றது. உணவை உருவாக்கவும் பயன்படுகிறது. உயிர்களின் வலிமையாகவும் விளங்குகிறது. அதனால்தான் வான்சிறப்பில் வள்ளுவர்,

“துப்பார்க்குத் துப்பாயத் துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாயத் தூஉம் மழை“


என்று மழைநீரைப் புகழ்ந்து கூறுகிறார். தண்ணீர் உலகில் கிடைப்பதற்கு அடிப்படைக் காரணம் மழைநீரே காரணமாகும். அதனால் வள்ளுவர் அடிப்படையாக விளங்கக் கூடிய வானைச் சிறப்பித்து அதன் பெருமையை உணர்த்துகிறார். தண்ணீரின் முக்கியத்துவத்தை,

‘வரப்புயர நீர் உயரும், நீர்உயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடிஉயரும், குடிஉயரக் கோன் உயருவான்“


என ஔவையார் வலியுறுத்துகிறார்.

நெல் உயர்வதும், மக்கள் வாழ்வில் உயர்வதும், மக்களை ஆளும் மன்ன்ன் உயர்வதும் எதனால்? நீரால் அன்றோ? ஔவையாரின் கூற்றில் தண்ணீரின் முக்கியத்துவம் தெற்றென விளக்கமுறுவதைக் காணலாம்.

மற்ற சோழ மன்னர்களை விடஇன்றளவும் அதிகம் மக்களால் பேசப்படுபவன், நினைக்கப்படுபவன் கரிகாற் சோழன்தான். ஏனெனில் ‘கல்லணையைக்‘கட்டி நீர் வளம் பெருக்கித் தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் வண்ணம் செய்தவன் அவனே. இதனை,  ‘‘குளம் தொட்டு வளம்பெருக்கி“ எனப் பட்டினப்பாலை நவில்கிறது.

தானத்திற்கும், தவத்திற்கும் அடிப்படை
பிறர்க்கு உதவி செய்வதற்கும், இறைவனைக் குறித்துத் தவம் இருப்பதற்கும் அடிப்படையாக விளங்குவதும் தண்ணீர்தான். நன்கு மழை பெய்து குளங்களிலும், ஏரிகளிலும் நீர் பெருகி வயலில் விளைச்சல் அதிகமானால் மக்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைவர். மேலும் தம்மாலான உதவிகளைப் பிறர்க்குச் செய்வர். கோவில்களில் இறைவனுக்கு எப்போதும் சிறப்பாக விழாவெடுப்பர். ஊரே விழாக்கோலமாக விளங்கும். மழை பொய்த்து நீரின்றி வளம் சுருங்கினால் மக்களுக்குப் பிறர்க்கு உதவ்வேண்டும் என்ற எண்ணமும், இறைவனுக்கு உதவ்வேண்டும் என்ற எண்ணமும் இறைவனுக்கு விழா எடுத்து வணங்க வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழாது போய்விடும். அதனால் தான் வள்ளுவர் இதனை நன்கு உணர்ந்து வானம் வழங்காவிடில், “தானம், தவம் இரண்டும் தங்கா வியனுலகம்“ என்று குறிப்பிடுகின்றார். இக்குறள் தண்ணீரின் முக்கியத்துவத்தைத் தெளிவுற விளக்குகின்றது.

உயிர்களின் தோற்றத்திற்கு அடிப்படை
உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரி தண்ணீரில் தான் தோன்றியது. அமீபா என்பது முதலில் தோன்றிய ஒரு செல் உயிரியாகும். அதிலிருந்து பிரிந்து வளர்ச்சியடைந்த ஒரு செல் உயிர்த் தாவரம் கிளாமிடா மோனாஸ் என்பதாகும். அதிலிருந்து பின்னர் ஒவ்வொன்றாக செல் வளர்ச்சியடைந்து வேறு வேறு உயிரினங்களாகப் பரிணமித்தன என்று பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் தந்தையாக விளங்கும் சார்லஸ் டார்வின் உயிரினத்தோற்றம் எனும் தமது நூலில் விவரித்துச் செல்கிறார். தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் குழந்தை முதல் மண்ணிலிருந்து தொன்றும் உயிர்கள் வரை அவற்றின் தோற்றத்திற்கு அடிப்படையாக விளங்குவது தண்ணீரேயாகும். நீரின்றேல் உலகில் உயிர்கள் தோன்றஇயலாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

தண்ணீர் – சாவா மருந்து
மழை பெய்வதால் தண்ணீர் கிடைக்கிறது. அத்தண்ணீரால் உலக உயிர்கள் வாழ்க்கின்றன. அதனால் தண்ணீர் மருந்தாக விளங்குகின்றது. இயற்கை மருத்துவத்தில் தண்ணீர் வைத்தியம் என்ற மருத்துவமுறை ஒன்றுள்ளது. இதில் தண்ணீரேநோய் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறது. அதனால் தான் வள்ளுவரும் தண்ணீரை ‘அமிழ்தம்‘ என்று குறிப்பிடுகின்றார். அமிழ்தம் உண்டாரை வாழ வைப்பது போன்று இவ்வுலக உயிர்கள் தண்ணீரை அருந்தி உயிர் வாழ்கின்றன. இத்தண்ணீரை‘சாவா மருந்து‘ எனக் குறிப்பிடுகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். உணவின்றி தண்ணீரை மட்டும் அருந்தி உலகில் உயிர் வாழலாம் என்று இயற்கைநெறி மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதுவும் இன்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிலும் – நீரும்
நமது நாட்டின் பொருளாதாரம் விவாசாயத்தைச் சார்ந்தே அமைந்துள்ளது. உழவர் பெருமக்கள் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். உழவர் பெருமக்கள் சிறப்பாக உழவுத்தொழிலை மேற்கொள்ள வேண்டுனில் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும். நீரில்லையெனில் விவசாயம் செய்ய இயலாது. நிலம் வறண்டு உணவுப் பஞ்சம் ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் குன்றிப் போய்விடும். உழவுக்கு அடிப்படையாக விளங்குவது தண்ணீரே ஆகும். மேலும் சாயப்பட்டறை தோல் பதனிடும் தொழிற்சாலை, எரிசாராயத் தொழிற்சாலை, சேமியா உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் போன்றவை தண்ணீரை நம்பியே உள்ளன. தண்ணீர் இல்லையெனில் இவைபோன்ற தொழிலகங்கள் மூடப்பட்டுவிடும்.

நீர் மின்சாரம் முழுவதும் ஆற்று நீரையே நம்பி உள்ளது. மழையின்றி ஆறுகளில் தண்ணீர்வரத்துக் குறைந்துவிட்டால் நீர்மின்சாரம் தயாரிப்பு முடங்கிவிடும். அதனாலேயே வள்ளுவர் உயிர்களை வாழவைப்பதும் நீர். பெய்யாது உயிர்களைக் கெடுப்பதும் நீர் எனத் தெளிவுறுத்துகிறார்.

தண்ணீரில் சிக்கனம்
பண்டைக் காலத்திலிருந்தே நம்முன்னோர் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி வந்துள்ளனர். கிராமப்புறங்களில் பெண்பார்க்கச் செல்லும்போது பெண் அதிகம் செலவு செய்பவளா அல்லது சிக்கனமானவளா என்பதை அறிந்து கொள்ள ஒரு செம்பில் தண்ணீரைக் கொடுத்து கால், கை, முகம் கழுவி வருமாறு கூறுவர். செம்பில் நீரை வாங்கிக் கொண்டு சென்ற பெண் கால்,கை முதலியவற்றை சுத்தம் செய்துவிட்டு மீதி நீர் கொண்டு வந்தால் அவள் குடும்பத்திற்கேற்ற, சிக்கனமாக வாழத் தெரிந்த பெண் என்று முடிவு செய்து அவளைத் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்வர். அப்பெண் செம்பு நீர் முழுவதையும் காலிசெய்துவிட்டு கால் கை முழுதும் சுத்தம் செய்யாது அறைகுறையாக வருவாளாயின் அவள் அதிகம் செலவு செய்பவள் எனத் தீர்மானித்து அவளைப் பெண் கொள்ளத் தயங்குவர்.

இப்பழக்கத்திலிருந்து தமிழக மக்கள் நீரை மற்ற பொருள்களைப் போல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்திருந்தமையை நன்கு அறிந்து கொள்ளலாம்.

கிராமப்புற நீர் மேலாண்மை
கிராமங்களில் நன்கு மழைபெய்து ஏரி, குளங்களில் நீர் நிரம்பி விட்டால் கிராம விவசாயிகள் ஒன்று சேர்ந்து வயல்களில் முறைவைத்து நீரினைப் பாய்ச்சுவதற்கு “நீர்பாய்ச்சுபவர்” ஒருவரை நியமிப்பர். அவ்வாறு நீர் பாய்ச்சுபவருக்கு, ‘நீர்ப் பாய்ச்சு‘ என்று பெயரிட்டு வழங்குகின்றனர். நீர்பாய்ச்சுபவரே அனைத்து நிலங்களுக்கும் பயிர்களின் நிலையறிந்து தண்ணீர் பாய்ச்சுவார். அவருக்கு நிலத்தில் விளையும்நெல்லில் குறிப்பிட்ட ஒரு பகுதியைக் கூலியாகக் கொடுப்பர்.

அதேபோல் தற்போது அரசால் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ள, ‘ஜீவன் தாராக் கிணறு‘ திட்டத்திலும் இந்த வகையான நீர் மேலாண்மை கிராமங்ளில் பின்பற்றப்படுகிறது. ஏரி, குளம், கிணறு இவற்றில்உள்ள நீரினைப் பொறுத்து விவசாயம் செய்யும் நிலப்பரப்பு சாகுபடி செய்யப்படும் பயிர் போன்றவற்றை கிரமா மக்கள் முடிவு செய்வர். அதன்படியே பயிரிடுவர்.இம்முறையானது மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள கிராமப் புறங்களில் நடைமுறையிலுள்ளது.

விவசாயத்தில் நீர் சிக்கனம்
வயலில் வாய்க்கால்கள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வாறு தண்ணீர் பாய்ச்சப்படும்போது நீர் அதிக அளவில் வீணாகிறது. இதனைத் தடுக்க மோட்டார்இணைப்பில் பிவிசி குழாய் மூலம் தண்ணீரை நேரடியாக வயலில் பாய்ச்சலாம். இதன் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது.

சொட்டுநீர்ப் பாசனம்
இஸ்ரேல் போன்ற நாடுகளில் உழவர்கள் இந்த வகையான பாசன முறையைக் கையாண்டு குறைந்த நீரைக் கொண்டு அதிக நிலப்பரப்பில் பயிர் செய்துலாபம் ஈட்டி வருகின்றனர். நமது நாட்டிலும் சில ஊர்களில் மட்டுமே இவ்வகையான பாசன முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனை அனைவரும் பின்பற்றினால் குறைந்த நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிகப் பயன்பெறலாம்.

தெளிப்பு நீர்ப்பாசனம்
விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனம் செய்யும் வழிமுறைகளில் இப்பாசன முறையும் ஒன்றாகும். இதன்மூலம் தண்ணீரானது சிறு குழாய்களில் வேகமாக வயலில் உள்ள பயிர்களின் வேர்களில்படும்ப்படி நீர் தெளிக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாவதுஇல்லை. அதிக நிலப்பரப்பில் இந்தப் பாசனமுறையைக் கையாண்டு பயிர் செய்யலாம். இதுவும் நமது நாட்டில் சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

குறுகிய காலப் பயிர்
நீண்ட காலப்பயிராக இருப்பின் அதற்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும். அதனால் தண்ணீர் அதிகம் தேவைப்படாத வறட்சியைத் தாங்கும் குறுகிய காலப் பயிர்களை விவசாயிகள் பயிரிடுதல் வேண்டும். இதன்மூலம் குறைந்த தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது. நீரும் சிக்கனப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.

பயிர் சாகுபடி முறையை மாற்றல்
நமது விவசாயிகள் தண்ணீரிருப்பை உணர்ந்து கொள்ளாமல் மூன்று போகமும் பயிரிட்டுத் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மழை பெய்யாத காலங்களில் அதிக அளவில் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். இதனால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து 600 அடி 700 அடிகளுக்குச் சென்று விடுகிறது. இதனால் கடல்நீர் நிலத்தடிநீருடன் கலந்துவிட வாய்ப்பும் உள்ளது. அதனால் மழைபெய்யாத காலங்களில் விவசாயிகள் முப்போக, இரு போகச் சாகுபடிமுறையைக் கைவிட்டு நீரிருப்பைக் கவனத்தில் கொண்டு ஒரு போகம் மட்டும் பயிர்செய்து நிலத்தடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம்.

மறுசுழற்சி முறை (Recycling method)
வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தக் கூடிய கழிவுநீரைத் தூய்மைப்படுத்தி அதனை மறுசுழற்சி முறையில் விவசாயத்திற்கும், நமது அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். வீட்டுக் கழிவு நீரைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டம் அமைக்கலாம். நகரச் சாக்கடைக் கழிவுநீரை அணைகட்டி ஓரிடத்தில் தேக்கிவைத்து அதிலிருந்து நீர் மின்சாரம் தயார் செய்து மின்தேவையைப் பூர்த்தி செய்யலாம். மேலும் அந்தநீரை விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்யும்போது கிடைக்கும் திடக்கழிவு வயலுக்கு நல்ல உரமாகப் பயன்படுகின்றது. பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் நீர்சிக்கனம் ஏற்படுவதுடன்நீர் வீணாவது தடுக்கப்படுகிறது.

வீட்டிலும் நாட்டிலும் நீர் மேலாண்மை
வீட்டில் உள்ள குழாயைத் திருகிவிட்டு நீரை விணாக்குதல் கூடாது. ஏனெனில் பத்தாண்டுகளுக்கு முன்பு குடிநீர் அனைத்து ஊர்களிலும் தாராளமாக, தூய்மையாக்க் கிடைத்த்து. பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவினாலும், உலகமயமாக்களின் விளைவாலும் இன்று தண்ணீர் பாட்டில்களிலும், பாலிதீன் பைகளிலும் அடைக்கப்பட்டு 1லிட்டர் ரூ15முதல் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களில் 1குடம் நீர் ரூ.10முதல் ரூ30வரையிலும் விற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நாம் தண்ணீரின்மதிப்பை உணர்ந்து அதனை முறையாகச் சிக்கனத்துடன் பயன்படுத்தாமையே காரணமாகும். மாநகராட்சி, ஊராட்சி, குழாய்களிலும் தண்ணீர் மக்களால் வீணடிக்கப்படுகிறது. இவ்வாறு நடவாமலிருக்க மக்களிடமும் ஆட்சியாளர்களிடமும் தண்ணீர் சிக்கனம், தேவை இக்கணம் என்ற விழிப்புணர்வு வேண்டும் இவ்விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த இயலும்.

நீர் வேட்டைக்காரர்கள்
உலகின் அனைத்து நாடுகளுக்கிடையே வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளை நிவகிப்பதற்காக 1905-ஆம் ஆண்டு உலக வணிக நிறுவனம் உருவாக்கப்பட்டது. பல்வேறு பெருட்கள் உணவு, காப்புரிமைஈ அறிவுசார் காப்புரிமைகள், சேவைகள் உள்ளிட்ட கூறுகள் குறித்து முடிவு செய்யப்பட்டன. ஆனால் உலக வர்த்தக நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் படிப்படியாக அரசாங்கங்களின் அதிகாரங்களைக் குறைத்துத் தனியார் நிறுவனங்களுக்குஅந்த அதிகாரங்களை வழங்குவதுதான்இதன் பல்வேறு ஒப்பந்தங்களில் ஒன்று தண்ணீர் பற்றியது. தண்ணீரும் வியாபாரத்திற்குரிய ஒரு பொருளாக அங்கீகரிக்கப்பட்டு உலக வர்த்தக நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்குட்பட்டது.

1885-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் விட்டல் கிரேண்ட் கம்பெனிக்கு கனிச்சத்து (மினரல் வாட்டர்) நீர் கண்டெய்னர்களில் அடைத்து விற்பதற்கான உரிமம் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்கும் வழக்கம் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. 1970-ஆம் ஆண்டுகளின் தொடக்க கட்டத்தில் ஏறக்குறைய 10கோடி லிட்டர் தண்ணீர் பாட்டல்கள் விற்பனை செய்யப்பட்டது. 2006-ஆம் ஆண்டில் இந்நீரின் அளவு 2000 கோடி லிட்டராக அதிகரித்தது. 320 கோடி லிட்டர் பயன்படுத்தும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. மெக்சிக்கோ நாட்டில் 200கோடி லிட்டரும் சைனா மற்றும் பிரேசில் நாடுகளில் 140 கோடி லிட்டரும் ஜெர்மனியில் 125 கோடி லிட்டரும் விற்பனையாகின்றன. (ஆதாரம். உங்கள் நூலகம், ஜுன்’10இதழ் ப.,13)

வானத்தில் இருந்து பொழியும் மழைநீரை பாட்டில்களில் அடைத்துப் பெட்ரோலைப் போன்று நான்கு மடங்கு விலைக்கு கனிச்சத்துநீர் நிறுவனங்கள் அதை விற்பனை செய்கின்றன. இந்தியாவில் ஒரு லிட்டர் பாலின் விலையைவிட ஒரு லிட்டர் கனிச்சத்துநீரின் விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத் தக்கது. உலக அளவில் தண்ணீர்த் தொழில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அமெரிக்காவின் தண்ணீர்ச் சந்தை ஆண்டுதோறும் 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

நீர்ப் போராட்டம்
உலகின் அனைத்து நாடுகளிலும் நீர் விற்பனையைத் தனியார் நிறுவனங்கள் ஏற்று நடத்துவதற்கு எதிர்ப்புத் தோன்றியுள்ளது. தண்ணீரைப் பாட்டில்களில் அடைத்து விற்கும் நிஞவனங்களுக்கு இந்தியா மற்றும்பாகிஸ்தான் நாடுகளில் எதிர்ப்பு அதிகரித்து வருவது நோக்கத்தக்கது. பூமியில் ஏற்படும் மாற்றங்கள், இயற்கை மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக நிலத்தடிநீரின் இருப்பும், ஆறுகளில் உள்ள நீரிருப்பும் குறைந்து வருகிறது. நாம் சரியாகவும், முறையாகவும் தண்ணீரைப் பயன்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில் தண்ணீருக்காகப் போராட்டங்கள் ஏற்படும் சூழல் தோன்றும்.

உலகில் உள்ள அனைவரும் இணைந்து நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றிக் கொள்ளாவிடில் உலகெங்கிலும் நீருக்காகப் போராட்டங்களும், போர்களும் ஏற்படும் நிலை உருவாகும். இப்போதே நீருக்காக ஒவ்வொரு நாட்டிலும், இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் நீர்ப் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீரின்மையாலும், நீரினைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு நீர் மாசடைவதாலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் சில பகுதிகள், சீனா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதைக் காணலாம். சைனா நாட்டில் உள்ள மாங்கோலியா, நிங்க்ஸியா மற்றும் கான்சு ஆகிய மாநிலங்களில் பாலைவன அகதிகள் உருவாகி வருவதை அந்நாட்டு அறிவியல் அறிஞர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். ஈரான் நாட்டில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகி வருகின்றன. நைஜீரியா நாட்டில் ஆண்டுதோறும் 3500 சதுர கிலோமீட்டர் அளவிலான நிலப்பகுதி பாலைவனமாக மாறிவருகிறது. இவற்றையெல்லாம் உணர்ந்து மனித குலம் நடந்துகொள்ள வேண்டும்.

நதிநீர் பகிர்வு
எதிர்காலத்தில் நீருக்காகவே உலகப்போர் மூளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் தண்ணீர்ப் பிரச்சனை அதிகப்படியாகப் பெருகி வருகிறது. இந்தியாவும் தனது நதிநீரை பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் இந்தியாவில் மாநிலங்களுக்குள் நதிநீர் தாவாக்கள் தீர்க்கப்படாமலிருக்கின்றன. நமக்குக் கிடைக்கும் நீரை சம்மாகப்பகிர்ந்து கொண்டு அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால் நமது நாடு உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கும்.

தண்ணீர் சேமிப்பில் பொது மக்களின் பங்கு
தண்ணீர் சேமிப்பில் பொது மக்களுக்கு முக்கியப் பொறுப்பும் கடமையும் உள்ளது எனலாம். தண்ணீர் சேமிப்பதனைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. மழைநீர் பாதுகாப்பும், சேமிப்பும்
2. ஆற்று நீர்ப் பாதுகாப்பும் சேமிப்பும்
3. நிலத்தடிநீர் பாதுகாப்பும், சேமிப்பும்

மழைநீர் பாதுகாப்பும், சேமிப்பும்
மழையின்றி உலகில் நீரில்லை. இதனை முதன் முதலில் உலகிற்குக் கூறிய மெய்ஞ்ஞானி திருவள்ளுவராவார். அவரே “ நீரின்றி அமையாது உலகெனின்..“ என்று மழையைக் குறித்து வான்சிறப்பில் தெளிவாகக் கூறுகிறார். இது ஒரு அரிய தத்துவமாகும். கடலில் இருக்கும் நீர் நிலத்திற்கு அடியில் இருக்கும் குகைகள் வழியாக நிலத்திலிருந்து மலைப் பகுதிகளை அடைந்து அங்கு மலைகளின் அழுத்தம் காரணமாக ஊற்றாக வெளிவருகின்றது என்ற நம்பிக்கை மேலை நாடுகளில் நிலவி வந்தது. இந்த நம்பிக்கையைப் பிளாட்டோவும் கொண்டிருந்தார். ஓரளவிற்கு மேலநாட்டு அறிஞர்களில் மழைஒன்றே நீருக்குத் தோற்றுவாய் என்ற கருத்தை முதலில் உணர்ந்தவர் லியோனாடோடாவின்ஞ்சி என்பவராவார். பிற்கால அறிஞர்களில் இக்கருத்தைக் கூறியவர் பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பாலிசி ஆவார். இத்தகைய மழை நீரை வீணாக்காமல் சேமித்தல் வேண்டும் என்கிறார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி.

·வீடுகளிலும், அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்தல்.  ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் போன்றவற்றில் தூர்வாருதல், நீர் வரும் வாரிகளைச் சுத்தப்படுத்தி வைத்தல் போன்றவை பொதுமக்களின் கடமையாகும்.

பொதுமக்களின் பங்கு
பொதுமக்களில் பலர் சுயநல வேட்கையால் நீர்பிடிப்புப் பகுதிகளல் பலவற்றைத் தூர்த்து வீடுகள் கட்டிக் கொண்டனர். இதனால் மழைநீர் தேங்க வழியின்றி வீணாகப் போவது உறுதியாகும். மேலும் மழைக்காலங்களில் மழைநீரைச் சேமிக்க இயலாது போய்விடும். அதனால் ஏரிகள், குளங்கள், போன்றவற்றைப் பொதுமக்கள் ஆக்கிரமித்தல் கூடாது. நகர்ப்புறத்தில் உள்ள குளங்களில் குப்பைகளைக் கொட்டி அதனைப் பாழடையச் செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் தேங்கும் மழை நீர் கெடுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும். மழைநீர் உயிர் நீர் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

“மாமருந்தோ மழை வானளித்த விருந்தோ,
வாழ்வளிக்கும் வள்ளலோ மழை“

என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றிற்கேற்ப மக்கள் மழைநீரைச் சேமிக்க வேண்டும். மழைபெய்யும் காலங்களில் குளம், ஏரி, கண்மாய்களில் நாம் மழைநீரைச் சேமிக்காது விட்டுவிடுவதால் பின்னாளில் குடிநீர்ப் பஞ்சத்திற்கும். உணவுப் பஞ்சத்திறட்கும் உள்ளாகிறோம்.

பிளாஸ்டிக், பாலித்தீன் (ஞெஞிழி) பொருள்களைத் தவிர்த்தல்
பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் நிலம் கெடுகிறது. பாலிதீன் பைகள் நிலத்தில் கிடந்து மழைநீர் நிலத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து மழைநீரை வீணாக்குகிறது. அதனால் பொதுமக்கள் பாலித்தீன் பைகளைத் தவிர்த்தல் வேண்டும்.இஸ்ரேல் பொன்ற நாடுகளில் பெய்யும் குறைந்த மழைநீரைச் சேமிப்பதில் அரசும் மக்களும் இணைந்து செயல்படுகின்றனர். அதுபோன்று நமது நாட்டிலும் நாட்டுணர்வுடன் மழைநீர் சேரிப்பதில் ஆர்வம் காட்டுதல் வேண்டும். அதனால் அனைவரும் நலம் பெறுவர்.

மக்களே மராமத்துப் பணிகளைச் செய்தல்
பார்வை தெரியாத நிலையிலும் தண்டியடிகள் நாயனார் திருவாரூரில் உள்ள கமலாலயம் உனும் திருக்குளத்தைத் தூர்வாரிப் பெரிதாக்கினார். இச்செய்தியைப் பெரியபுராணம் சிறப்பாக எடுத்தோதுகிறது. அவரைப் போன்றே பொதுமக்களும் நமக்குநாமே திட்டத்தின் அடிப்படையில் அவரவர் ஊர்களில் உள்ள குளம், ஏரி, கண்மாய்போன்றவற்றைத் தூர்வாரி மழைபெய்யும்போது தண்ணீரைச் சேமிக்கலாம். இவ்வாறு தண்ணீரை இராமநாதபுரத்தில் சேமித்த்தால் அங்கு நிலத்தடி நீர்மட்டம் கூடி உள்ளது என நிலவியலறிஞர்கள் கூறிஉள்ளனர். மக்கள் பொறுப்புணர்வுடன் ஏரிகளையும், குளங்களையும் தூர்ந்து போகவிடாமல் பாதுகாத்து மழைநீரைச் சேகரித்தல் வேண்டும்.

ஆற்றுநீர் சேமிப்பு
ஆற்றில் நீர் பெருக்கெடுத்தோடி வரும் காலங்களில் அதனைக் குளம், ஏரி, கண்மாய்களிலும், அணைகளிலும் தேக்கி வைத்து மழையில்லாக் காலங்களில் குடிக்கவும், பிறவற்றிற்கும் பொதுமக்கள் பயன்படுத்தலாம். ஆற்றில் மணலை அதிகஅளவில் அள்ளுவதால் நிலத்தடிநீர்ப்பிடிப்புத் திறன் குறையும் வாய்ப்புள்ளது. அளவாக மணலை அள்ள வேண்டும்.

கழிவுநீரைக் கலக்க விடக்கூடாது
ஆறுகளிலும், பெரிய ஏரி, குளங்களிலும் பொதுமக்கள் கழிவுநீரைக் கலக்கும்படி செய்து விடுகின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசடைந்து உள்ள நீரையும் பயன்படுத்த இயலாது வீணாகப் போகிறது. “சகோதரா! ரிஷிகேச கங்கை நினைவிருக்கிறதா? உள்ளே பத்தடி ஆழத்தல் ஓடும் மீன்களின் செதிகளையும் எண்ணிவிடக்கூடிய அளவுக்குத் தெளிந்து பாயும் நீரநிற நீர்கொண்ட அற்புதச் சுவையுள்ள நீர் கொண்ட பனிக்கட் போன்று குளிர்ந்த நீர் கொண்ட வசீகரமான நீர் கொண்ட அந்தக் கங்கை“ என சுவாமி விவேகானந்தரால் வருணிக்கப்பட்ட புனிதமான கங்கை ஆறு மனிதக் கழிவுகள் கலக்கும் சாக்கடையாக மாறி வருகின்றது. இதனைப் பொதுமக்கள் உணர்ந்து அதனைத் தடுத்து கங்கைநீரை மாசுபடாத புனித நீராக மீண்டும் ஆக்கல் வேண்டும். தொழிற்சாலைக் கழிவுநீரைச் சுத்தம் செய்யாமல் ஆற்றில் கலக்கவிடுவதால் அணைகளில் தேக்கி வைக்கப்பட்ட குடிநீர் விஷமாக மாறி பயன்படுத்த இயலாமல் போய்விடுகிறது. நொய்யலாற்றில் கழிவு நீர் கலந்த்தால் அந்நீர் மாசடைந்து பயன்படுத்த இயலாநிலைக்குப் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் இதனால் ஏற்படும் விபரீதங்களைஉணர்ந்து ஆற்றைப் பாதுகாத்து தண்ணீர் மாசடையாமல் சேமித்தல் வேண்டும். நீர் சேமிக்கும் அணைக்கட்டுக்களையும், ஏரிகளையும் பாதுகாத்தல் வேண்டும்.

இந்தியாவில் ஆறுகள் மாசடைவதற்கு முக்கிய மூலமாக இருப்பது வீட்டுச் சாக்கடைநீரும், தொழிற்சாலைக் கழிவுநீரும் ஆகும். கங்கை ஆற்றுக் கரைகளில் அமைந்துள்ள 25 நகரங்களில் நாளொன்றுக்கு 1400 மில்லியன் லிட்டர் சாக்கடைநீர் வெளியேறுகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 7 சதவித நகரங்களில் மட்டுமே வீட்டுச் சாக்கடை நீர் ஆற்றில் கலப்பதற்கு முன்னதாகத் தூய்மைப்படுத்தப்படுகிறது. சென்னையில் அழகிய ஆறாக விளங்கிய கூவம் இன்று சாக்கடை நதியாக மாறிவிட்டது. இதற்குப் பொதுமக்களும், தனிநபரின் லாபநோக்கும் தான் காரணங்களாகும். மக்கள் இதனை உணர்ந்து சாக்கடை நீரை அரசு கூறும் வண்ணம் தூய்மைப்படுத்தி ஆற்றில் கலக்கச் செய்து இருக்கும் நீரைப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும். சேமிக்கவும் வேண்டும்.

நிலத்தடிநீர் சேமிப்பு
ஆறு, குளம் ஏரிகளில் நீரில்லையெனில் அடுத்து மக்கள் நாடுவது நிலத்தடி நீரையே! பல இடங்களிலும் பலகாலங்களிலும் மக்கள் நிலத்தடிநீரையே நம்பியுள்ளனர். விவசாயிகள் பெரும்பாலான சமயங்களில் நிலத்தடிநீரையே நம்பி விவசாயத்தை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு கிணறுகளை வெள்டி உழவுத்தொழிலை மேற்கொண்டவர்கள் பின்னர் ஆழ்குழாய்க் கிணறுகளை அதிகம் தோண்டி நிலத்தடிநீரைப் பயன்படுத்துகின்றனர். நிலத்திலிருந்து அதிக நிரு உறிஞ்சப்படுவதால் நீர் மட்டம் குறைந்து நிலம் வறண்டுவிடுகிறது. அதனாலேயே அரசும் அதிக அளவு ஆழத்தில் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தல் கூடாது என்று சட்டமும் கொண்டு வந்த்து. நிலத்தடிநீர், ஆறுகளிலும், வாரிகளிலும் மணல் அள்ளப்படுவதாலும் குறைகின்றது. மணல் திருட்டைப் பொதுமக்கள் தடுத்து நிலத்தடிநீரைச் சேமிக்க முன் வரவேண்டும். கிணற்றுக்கு அருகில் கசிவுநீர்க் குட்டைகளை அமைத்து அதன் மூலமும் நிலத்தடிநீரைப் பொதுமக்கள் சேமிக்கலாம். அனைவரும் இவ்வுலகில் வாழ வேண்டும் எனில் அனைவருக்கும் பொதுவானதாக நீர் ஆக்கப்பட வேண்டும். திறமையான நீர் மேலாண்மை அமைதல் வேண்டும்.

நீரின் அருமையை உணர்ந்து அதனைப் பாதுகாப்பதற்கு அனைவரும் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீரின்றி அமையாது உலகம் என்பதை உணர்ந்து அனைத்துலக மக்களும் செயல்படவேண்டும். ஊர்கூடித் தேரிழுத்தால் நன்மை உண்டாகும். அனைவரும் சேர்ந்து முயன்றால் மாசற்ற நல்ல நீரைப் பெற்று நோயின்றி நலமுடன், மகிழ்வுடன் வாழலாம். நீர் வளத்தைப் பராமரிப்போம். நில உலகில் நீண்ட நாள் வாழ்வோம்.

malar.sethu@gmail.com


 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்