இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2010  இதழ் 126  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நெடுங்கதை!

புள்ளும், புலவனும்!

- வ.ந.கிரிதரன்
-

அத்தியாயம் ஒன்று: மாடப்புறா !

இலேசாகக் குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. வசந்தகாலத்து மாலைப் பொழுது. நான் வசிக்கும் 'டொராண்டோ' மாநகரிலுள்ள தொடர் அடுக்குமாடிக் கட்டடமொன்றின் 'பல்கணி'க்கு வந்தபொழுது நான் நினைத்திருக்கவில்லை என் வாழ்க்கையின் அடுத்த ஓரிரு மாதங்களுக்கான என்னிருப்பை அந்த 'பல்கணி' விஜயம் மாற்றிவைக்கப் போவதென்பதை. நான் வந்ததென்னவோ தற்செயலானதொரு நிகழ்வுதான். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இந்த வான், உலகு, விரியும் பிரபஞ்சம் .. என விரிந்து, படர்ந்திருக்கும் எல்லாமே தற்செயல் நிகவுகளின் விளைவாக, திட்டமிட்ட விளைவாக அல்ல, உருவானவை தானென்று கூடக் கருத்தொன்று இருக்கின்றதல்லவா.இலேசாகக் குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. வசந்தகாலத்து மாலைப் பொழுது. நான் வசிக்கும் 'டொராண்டோ' மாநகரிலுள்ள தொடர் அடுக்குமாடிக் கட்டடமொன்றின் 'பல்கணி'க்கு வந்தபொழுது நான் நினைத்திருக்கவில்லை என் வாழ்க்கையின் அடுத்த ஓரிரு மாதங்களுக்கான என்னிருப்பை அந்த 'பல்கணி' விஜயம் மாற்றிவைக்கப் போவதென்பதை. நான் வந்ததென்னவோ தற்செயலானதொரு நிகழ்வுதான். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இந்த வான், உலகு, விரியும் பிரபஞ்சம் .. என விரிந்து, படர்ந்திருக்கும் எல்லாமே தற்செயல் நிகவுகளின் விளைவாக, திட்டமிட்ட விளைவாக அல்ல, உருவானவை தானென்று கூடக் கருத்தொன்று இருக்கின்றதல்லவா. அடிப்படைத் துகள்களின் தற்செயல்களிலிருந்து விரியும் நிகழ்வுகளின் தொகுப்பினைத்தானே நாம் திடமாக விரிந்திருக்கும் இந்தப் பொருளுலகாகக் காண்கின்றோம். சரி சுற்றி வளைக்காமல் விடயத்திற்கே வருகின்றேன். விடயத்திற்கு வரும் முன்னர் இன்னும் சிறிது விரிவாக, நான் என்னைப் பற்றிய அறிமுகமொன்றினைச் செய்வது மிகவும் பயனுள்ளதாகவிருக்குமென்பதென் எண்ணமாகவிருப்பதால் அதனையே தற்சமயம் செய்வதென் விருப்பம். தற்செயல் என்றதும் மீண்டும் என் எண்ணத்தில் 'தற்செயல்' என்னுமொரு பாத்திரத்தின் வாழ்வில் நிகழும் தற்செயலான நிகழ்வுகளால் அவன் எவ்விதம் சமுக, அரசியலுலகில் முக்கிய்மானதொரு புள்ளியாக உருமாறி விடுகின்றான் என்பதைச் சித்திரிக்கும் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற அளவில் சிறிய நாவலொன்றின் நினைவில் மனம் சிறிது இலயித்து விடுகின்றது. இப்படித்தான் என் மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றிற்கென முரட்டுக் குதிரையெனத் தறிகெட்டுப் பாய்ந்தோடத் தொடங்கி விடுகிறது. அதனை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. சரி. சரி. மீண்டுமொருமுறை இவ்விதமானதொரு தவறினை விடாமல் என்னைப் பற்றிய குறுகிய அறிமுகமொன்றினைச் செய்ய விழைகின்றேன். எனக்கொரு பட்டப் பெயருண்டு. 'புலவன்' என்று என் பால்ய காலத்து நண்பர்களொருவன் ஆரம்பித்து வைத்ததிலிருந்து இன்றுவரை தொடரும் பெயரது. ஒரு முறை எனக்கும் கவிதை எழுதத் தெரியுமென சவால் விட்டதன் விளைவாக, உடனடியாகவே கவிதையொன்றினை எழுதும்படி பணிக்கப்பட்டேன். அதன் விளைவாக, கவிதையென்று சில அடுக்கு மொழிகளையும், எதுகை - மோனைகளையும் தொகுத்து எடுத்து விட்டதன் விளைவாக, என்னைப் பணித்த நண்பனாலேயே எனக்கு வழங்கப்பட்டபெயர் இன்றுவரை தொடருகிறது. நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ, உண்மையிலேயே எனக்குக் கவிதைகளென்றால் மிகவும் பிடிக்கும். கவிதை மட்டுமல்ல எழுத்தின் ஏனைய வடிவங்களான சிறுகதை, நாவல் இவையெல்லாம் கூட எனக்கு என் சிறு வயதிலிருந்தே மிகவும் பிடிக்கத் தொடங்கி விட்டிருந்தன. இருந்தாலும் கவிதைகளை வாசிப்பதில் இருக்கும் இன்பமே தனி. என் பால்ய காலத்தில் இயற்கை பற்றிய கவிதைகள், மழை, வான் மற்றும் பட்சிகள் பற்றிய கவிதைகள், குறிப்பாக பச்சைக்கிளி, தேன் சிட்டு, குயில், வண்ணத்துப் பூச்சி, மின்மினி, தும்பி , தவளை இவை பற்றிய கவிதைகளெல்லாம் மிகவும். பிடிக்கும். சிறுவர் இதழ்களில் வெளிவரும் இத்தகைய கவிதைகளும், அவற்றிற்காக அழகாக வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும் மிகவும் பிடிக்கும். வளர்ந்திருக்கும் இன்றைய பருவத்தில் கூட சிறுவருக்குரிய கவிதைகளைச் சித்திரங்களுடன் வாசிப்பது சிறு மகிழ்ச்சியைத் தருவதுண்டு. இருந்தபொழுதிலும் தற்போது என் மனம் சிறிது விருத்தியுற்றிருந்ததன் விளைவாக இயற்கை, இருப்பின் இரகசியம், வெடித்து விரிந்தோடும் பிரபஞ்சம், பொருள், சக்தி, வெளி, காலம், ப்ல்பரிமாணங்களெனப் பல்வேறு விடயங்கள் பற்றிய கவிதைகள் , எழுத்துகள் எனக்கு மிகவும் பிடித்தவையாகவிருக்கின்றன. ஆனால் பொதுவாக விஞ்ஞானத்தில் ஞானசூன்யமாக விளங்கும் பல பிரபல படைப்பாளிகள், விமர்சகர்கள் இவர்களில் பலருக்கு இத்தகைய படைப்புகளைப் புரிந்து, விமர்சிக்கும் ஞானம் சிறிதும் கிடையாததால், இது போன்ற படைப்புகள் பெரும்பாலும் அவர்களது கவனத்தைப் பெறுவதில்லை (பிரமிள் போன்ற ஒரு சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆயினும் அவர்களது அறிவுச் செருக்கு சில சமயங்களில் எனக்கு சிறிது சலிப்புடன் கூடிய வெறுப்பினைத்தான் தருகின்றது. பாரதியைப் போன்ற அறிவுச் செருக்கற்ற மாமேதைகளின் படைப்புகள்தான் என்னைக் கவருகின்றன. அறிவுத்தேடல் மிக்க அத்தகைய எழுத்துகளில் தென்படும் தவறுகள் கூட அவர்களின் வளர்ச்சியின் பரிணாம வளர்ச்சியின் அறிகுறிகள்தான் என்பது உடனேயே விளங்கி விடுகின்றது. அத்தகைய மாமேதைகள் தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ள எப்பொழுதே தயங்கியதில்லை. ஆனால், இந்தச் சொற்சிலம்பம் ஆடும் வித்தகர்கள், அறிவுச் செருக்குற்ற ஆணவக்காரர்கள் எப்பொழுதுமே தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ள ஓடியோடி முன்வருவதில்லை. ஆரம்பத்தில் இயன்ற அளவுக்குத் தங்களை நியாயப் படுத்த முயல்வார்கள். தவறை ஒப்புக் கொள்ளுதல்கூட அறிவு வளர்ச்சியின் அறிகுறிதானென்பது இவர்களுக்குப் புரிவதில்லை. ஒப்புக்கொண்டால் ஏதோ தங்கள் கெளரவம் குறைந்துபோய் விடுவதாகக் கருதிக்கொண்டு இவர்களாடும் சொற்சிலம்பங்கள் எப்பொழுதுமே சலிப்பைத்தான் தருவன. இறுதியில் இயலாத கட்டத்தில் இவர்கள் ஒரு கட்டத்தில் தவறை ஒப்புக்கொள்ளத்தான் செய்கின்றார்கள். ஆயினும், அது விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப்போன்றதுதான்). இத்தகைய பாரதியைப் போன்ற படைப்பாளிகளின் படைப்புகள் படித்த மாத்திரத்திலேயே நெஞ்சைத்தாக்கி அண்மித்து விடுகின்றன. அதன் பின் பெரும்பாலும் அவை என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துவரும் அறிவுத் தோழர்களாகி விடுகின்றன. அறிவுத் தாகமெடுத்தலைந்த பாரதியாரின் தத்துவம் மற்றும் இயற்கை பற்றிய கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. குறிப்பாக அவரது 'நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே' என்னும் கவிதையினைக் குறிப்பிடலாம்:

நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றெ பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே -நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதெல்லாம உறுதியில்லை
காண்பது சக்தியாம் -இந்தக் காட்சி நித்தியமாம்


இந்தக் கவிதையினைப் பல்வேறு வழிகளில் விளங்கிக் கொள்ள முடியும். அதுதான் பாரதியின் அறிவுத்தாகமெடுத்தலையும் ஆளுமை. எனக்கு மிகவும் பிடித்த அவனது ஆளுமை. ஊரே திரண்டு எதிர்த்தாலும் தனனறிவுக்குச் சரியென்று பட்டதையே ஏற்றுக் கொள்ளும் அவனது அந்த ஆளுமைதான் அவனது பலம். சரி. மீண்டும் விடயத்திற்கு வருவோம். எதற்காக இவற்றையெல்லாம் இங்கு கூறுகின்றேனென்று வியப்போ அல்லது சலிப்போ அடைகின்றீர்களா? எல்லாம் ஒரு காரணத்தோடுதான். ஏனென்றால் இவையெல்லாம் என் ஆளுமையினை ஓரளவுக்காவது நீங்கள் புரிந்து கொள்வதற்குத்தான். தொடர்ந்து என் கதையினை, என் எண்ணங்களையெல்லாம் வருங்காலத்தில் நீங்கள் அறிந்துகொள்ளப் போகின்றீர்கள். அதற்கு என் ஆளுமையின் ஒரு பக்கத்தையாவது நீங்கள் அறிந்துகொண்டிருப்பது அவசியமாகவே எனக்குப் படுகின்றது. அதனால்தான் எனது இத்தகைய விளக்கங்களெல்லாம். இந்நேரத்தில் பலர் வாசிப்பதை நிறுத்திவிட்டிருப்பீர்கள். அதனைத்தான் நானும் வேண்டுவது. என் ஆளுமையினை விளங்கியவர்கள், ஆர்வத்துடன் விளங்க நினைப்பவர்கள் இவர்களுக்குத்தான் என் அனுபவ்ங்கள் சிறிதாவது சுவையுள்ளதாக, பயனுள்ளதாகவிருக்கும். மற்றவர்களுக்கல்ல. அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்திலேயே விடை கூறிவிடுவதே நல்லது. நண்பர்களே! இதுவரை என்னுடன் பயணித்து வந்ததற்கு நன்றி. போய் வாருங்கள். உங்கள் வாழ்வு நன்கு சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

சரி. இனி மீண்டும் நடைமுறை உலகிற்கு மீண்டும் வருவோம்.

நான் அந்த அந்திப்பொழுதில் 'பல்கணி'யினுள் அடியெடுத்த வைத்தபொழுது கதவு தட்டும் ஓசை கேட்டது. உண்மையில் வந்தவர்கள் என்னிரு புத்திரிகளும்தான். வார நாட்களில் தாயாருடன் காலத்தைக் கழிக்கும் அவர்களிருவரும், வார இறுதி நாட்களில் என்னுடன் பொழுதினைக் கழிக்க வந்துவிடுவார்க்ள். பத்துவருடங்களாகக் காதலித்து, 'அடைந்தால் மகாதேவன்! அடையாவிட்டால் மரணதேவன்' என்று என்னையே ஒற்றைக்காலில் நின்று கட்டியவளுடன் இன்று ஒன்றாக வாழ முடியாத நிலை. அவற்றைப் பற்றி இப்பொழுது கதைத்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. இந்த ஏற்பாடு கூட நாங்களிருவரும் கூடிக் கதைத்து ஏற்படுத்திக்கொண்ட ஒன்றுதான். சமயம் வரும்போது 'சொந்தக் கதை' பற்றி அலசுவோம். அப்பொழுது கடந்த காலத்தைப் பற்றி சிறிது அசை போடுவோம். இப்பொழுது நிகழ்காலத்தில் சிறிது கவன்ம் செலுத்துவோம்.

குழந்தைகள வந்தவுடனேயே தொலைக்காட்சிப் பெட்டியுடனும், இணையத்துடனும் ஒன்றி விட்டார்கள். ஒருத்தி தொலைக்காட்சியில் தனகுப் பிடித்த 'சானலில்' மூழ்கிவிட , இளையவள் இணையத்தில் தனக்குப் பிடித்த 'டிஸ்னி கேம்'ஸுடன் ஒன்றி விட்டாள். நான் மீண்டும் 'பல்கணி'யினுள் நுழைந்தேன். இன்னும் இருண்டிருக்கவில்லை. இன்னும் சிறிது நேரம்தான் நிலைமை முற்றிலும் மாறி விடும். அச்சமயம்தான் என் கவனத்தை அந்த நிகழ்வு கவர்ந்தது. ப்லகணியின் ஒரு மூலையிலிருந்து சிறிது சலசலப்பு. அதனைத் தொடர்ந்து புள்ளொன்று பறந்து சென்று , அருகிலிருந்த மேப்பிள் மரமொன்றின் கிளையொன்றில் போயமர்ந்தது. அது ஒரு மாடப்புறா. அப்பொழுதுதான் கவனித்தேன் அதுவரையில் அந்த மாடப்புறா அமர்ந்திருந்த இடத்தை. சுள்ளிகள் போன்றவற்றால் பெயருக்குக் கூடென்ற பெயரில் மூலையில் காணப்பட்ட சுள்ளிக் குவியலின் மத்தியில் இரு புறா முட்டைகள். 'அடக் கடவுளே' என்று ஒருகணம் கத்திவிட்டேன். உண்மையில் ஆங்கிலத்தில்தான் 'My God' என்றுதான் கத்தினேன். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கொன்று கூற வேண்டுமென்று நினைக்கின்றேன். இந்த என் கதையில் இதுபோன்ற பல சந்தர்ப்பங்கள் வரலாம். என் குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் கதைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் இவ்விதமே பல தடவைகள் மொழிபெயர்த்திருப்பேன். 'பத்தாம் பசலி'த்தனமாகக் கூட அது உங்களுக்குப் படலாம். 'சாரி!' அது உங்கள் சொந்த விடயம். அவற்றினுள் நான் தலையிடுவதற்கில்லை. இதற்கிடையில் நான் 'அடக் கடவுளே' என்று திடீரென , வியப்பு தொனிக்கக் கத்தியதும், அது அறையினுள் தங்கள் தங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்றியியிருந்த என் மகள்மாரின் கவனத்தை ஈர்த்தன. வெளியில் வந்த மூத்தவள்தான் முதலில் கேட்டாள்: "அப்பா! என்ன நடந்தது?' . அதற்கு நான் அதுவரையில் புறா அமர்ந்திருந்த 'பல்கணி' மூலையினைக் காட்டினேன். புறா முட்டைகளைக் கண்ட மகள்மார் இருவருக்கும் ஒரே கொண்டாட்டமாகிப் போய்விட்டது. "ஓ. 'மை காட்' புறா முட்டை" என்று மூத்தவள் கத்தியதும், தொடர்ந்து 'பல்கணி'க்குள் வந்த இளையவளும் அக்காவின் உற்சாக்த்தில் ஒன்றிவிட்டாள்.

எனக்குப் புறாவை நினைக்க ஒரு கணம் வியப்பாக இருந்தாலும், அடுத்த கணமே சிறிது பரிதாபமாகவும் ஏன் சிரிப்பாகவும் கூடவிருந்தது. என்ன துணிவில் தன் வாழ்வின் முக்கியமானதொரு விடயத்திற்காக இந்த மாடப்புறா என் குடியிருப்பின் ஒரு பகுதியினைத் தெர்வு செய்திருக்கின்றது. முதலில் என் சிந்தை அதனது கூட்டின்மீது சென்றது. இந்தப் புறாக்களுக்குக் கூடுகள் கட்டுவதில் அவ்வளவு திறமையில்லை என்பதை இந்தப் புறாவின் கூடே புலப்படுத்தியது. வெறும் சுள்ளிகளையும், பஞ்சு போன்ற சிலவற்றையும் பெயருக்குப் 'பல்கணி; தரையில் ஓரளவுக்கு வட்டமான வடிவத்தில் பரப்பி இந்தப் புறா தன் கூட்டினை எழுப்பியிருந்தது. சின்னஞ்சிறு தூக்கணாங் குருவி எத்தனை திறமையாக அதன் காற்றிலாடும் கூட்டினைக் கட்டுகின்றது. அதன் திறமையில் நூறில் ஒரு பகுதி கூட இந்த மாடப்புறாவுக்கு இல்லையேயென்று பட்டது. அடுத்தது. இந்தப் புறாவின் கூடு அதன் எதிரிகள் எட்டாத தொலைவில் இருப்பது உண்மையில் அதற்குச் சாதகமான அம்சங்களிலொன்றுதான். ஆனால், இந்த'ப்ல்கணி'க்குச் சொந்தக்காரர் எவ்விதம் இவற்றைத் தூக்கி எறியமாட்டார்களென்று அது கருதலாம்? இதற்கிடையில் என் மகள்மாள் இருவரும் இணையத்தில் கூகுள் தேடுதலில் 'மாடப் புறா'க்களின் வாழ்வு பற்றிய போதுமான தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வந்தார்கள். அவர்களிருவரும் இந்தத் தேடுதைல் தேடுபொறியில் புறாக்கள் பற்றிய தேடுதலில் பெரிதும் உற்சாகமாகவே ஈடுபட்டிருந்தார்களென்பதை அவர்களது புன்னகை பூத்த வதனங்களே நன்கு வெளிக்காட்டின. மூத்தவள் மாடப்புறா பற்றித் தான் சேகரித்திருந்த தகவல்களை ஒப்புவிக்கத் தொடங்கிவிட்டாள்.

மூத்தவள்: "அப்பா.... என்னால் நம்பவே முடியவில்லை. மனிதர்களை விட புறாக்கள் அதிக காலமாக இந்தக் கிரகத்தில் வாழுகின்றனவாம்.. சுமார் முப்பது மில்லியன் வருடங்களாக அவை இந்தக் கிரகத்தில் வாழுகின்றனமாம். இத்தனை வருடங்களாகத் தப்பிப் பிழைத்திருக்கும் அற்புதமான பறவைகள்"

அக்காவின் உற்சாகத்திற்குச் சற்றும் குறையாத உற்சாகத்துடன் இளையவள் தன் பங்கிற்குப் பின்வருமாறு கூறினாள்: " புறாக்கள் ஒரே துணையுடன் வாழ்நாள் முழுவதும் வாழும் பற்வைகளாம். இழப்பு ஏற்பட்டால் மட்டுமே இன்னுமொரு துணையினை நாடுமாம்"

இவ்விதமாக அவர்களிருவரும் மாறி, மாறி உற்சாகத்துடன் கூறிய புறாக்கள் பற்றிய விப்ரங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

1. பெண் புறா இரு முட்டைகளை இடுமாம்.
2. மாலையிலிருந்து அடுத்த்நாள் காலை பத்து மணி வரையில் அடைகாக்குமாம்.
3. அதன் பின் ஆண் புறா அந்தப் பணியினை மாலை வரையில் செய்யுமாம்.
4. பதினேழிலிருந்து பத்தொன்பது நாட்களில் குஞ்சுகள் பொரிக்குமாம்.
5. ஆரம்பத்தில் குஞ்சுகள் இறகுகளற்றிருப்பதால் அவற்றைச் சூழலிலிருந்து காப்பதற்காக தாயும் , தந்தையும் மாறி, மாறி அரவணைத்துக் காத்து
நிற்குமாம்.
6. விரைவாகவே , நாளொரு மேனியும், பொழுதொடு வண்ணமுமாகக் குஞ்சுகள் வளருமாம்.
7. ஆரம்பத்தில் தாயும், தந்தையும் குஞ்சுகளுக்கு இரைப்பையில் உருவாகும் பாலினைக் கொடுத்துப் ப்ராமரிக்குமாம்.
8. அதன் பின்னர் ஓரளவு சமிபாடு அடைந்த தானிய வகைகளை உள்ளடக்கிய உணவுகளைத் தாயும், தந்தையும் குஞ்சுகளுக்கு ஊட்டுமாம்.
9. அதன் பின்னர் தாய் அருகிலுள்ள இன்னுமோரிடத்தில் இன்னுமொரு கூடு கட்டி அதிலும் இரு முட்டைகளிட்டு அடை காக்கத் தொடங்கி விடுமாம்.
10. அதன் பின்னர் தந்தைதான் வளரும் குஞ்சுகள் பறக்கும் வரையில் உணவு ஊட்டி வளர்த்து வருமாம்.
11. இவ்விதமாகப் பொரித்த குஞ்சுகள் பறப்பதற்கு நான்கிலிருந்து ஆறு வாரங்கள் வரையில் காலம் எடுக்குமாம்.
12. ஆரம்பத்தில் குஞ்சுகளுடன் அதிக நேரம் கழிக்கும் தந்தை, அவை வளர வளர, அவற்றை அதிக நேரம் தனிமையில் காக்க வைக்குமாம்.
13. குஞ்சுகள் சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கியதும் தந்தையின் கவனம் அடுத்துப் பொரிக்க இருக்கும் குஞ்சுகளின் பக்கம் திரும்பிவிடுமாம்.
14. குஞ்சுகள் பற்க்கத் தொடங்கியதும் கூட மேலும் சிறிது காலம் தந்தை குஞ்சுகளுக்கு உணவூட்டுமாம்.


இரவும், பகலும் அவ்வப்போது நகரின் பல்வேறு பகுதிகளிலும் சஞ்சரிக்கும் புறாக்களைப் பார்க்கும்போதெல்லாம் அவற்றைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொளவ்தில்லை. ஆனால் என் வீட்டின் ஒரு மூலையில் இருப்பிடத்தை அமைத்துக் கொண்ட இந்தப் புறாக்கள் அவற்றின் வாழ்க்கை பற்றி சிறிது அதிகமாக அறிந்துகொள்ள என்னையும், குழந்தைகளையும் தூண்டிவிட்டிருந்தன. இந்தப் புறா முட்டைகள் பொரித்து, குஞ்சுகள் உருவாகி, அவை பறக்கும் வரையில் பாதுகாப்பாகக் கவனிக்க வேண்டுமே என்ற புதியதொரு கவலை வேறு என்னைத் தொற்றிக் கொண்டது. என் கவலையினைக் கண்டு என் மூத்தவளுக்குச் சிரிப்பாக வந்தது.

"அப்பா.. நீ வீணாக மனதை வருத்திக் கொள்ளாதே..." என்றாள்.

"மனம் கேட்குதில்லையே மகளே! " என்றேன்.

அதற்கு இளையவள் கூறினாள்: "அப்பா... முப்பது மில்லியன் வருடங்களாக அவை தப்பிப் பிழைத்து வரும் பறவைகள். அவற்றுக்குத் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளத் தெரியும். நீ உன் கவலையை விடு.."

அவள் கூறுவதும் மிகவும் சரியாகவும், அறிவு பூர்வ்மாகவுமிருந்தது. அப்பொழுது மூத்தவள் "அப்பா... அடிக்கடி அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். இல்லாவிட்டால் சில வேளைகளில் அவை முட்டைகளைக் கைவிட்டு விட்டுச் சென்றாலும் சென்று விடக்கூடும்." என்று புதியதொரு விடயத்தைக் கூறி என் கவலையினை மேலும் அதிகரிக்க வைத்தாள். இயலுமானவரையில் புறாக்களின் வாழ்வு அமைதியாகவும்,  எந்தவித இடையூறுகளுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று அப்பொழுதே முடிவு செய்து கொண்டேன். இதே சமயம் அருகிலிருந்த மேப்பிள் மரத்திலிருந்து அந்தத் தாய்ப் புறா எங்களையே பார்த்துக் கொண்டிருந்ததை மூத்தவள் சுட்டிக் காட்டினாள். இளையவளும் "அப்பா, நாங்கள் எப்போ போவம். வரலாம் என்று பார்த்துக் கொண்டு நிற்கிறது போல் தெரிகிறது" என்றாள். அமைதியாக அடைகாத்துக் கொண்டிருந்த அந்தப் புறாவுக்கு வீணாக இடையூறூ செய்து விட்டேனே என்று பட்டது. அதே சமயம் அந்தப் புறாவின் மேல் சிறிது ஆத்திரமாகக் கூட வந்தது. எதற்காக, எந்த நம்பிக்கையில் இந்தப் புறா இவ்விதம் எந்தவிதப் பாதுகாப்புமில்லாத 'பல்கணி' மூலையில், அரைகுறையாகக் கூடொன்றைக் கட்டி இவ்விதம் என் தலையில் பாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் இந்த இடத்தை நம்பி கூடு கட்டி, முட்டைகளையிட்டுத் தம் சந்ததியினை விருத்தி செய்யும் பொருட்டுக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தப் பட்சிகளின் எதிர்ப்பார்ப்பைக் கலைத்துவிடக் கூடாதென்று அப்பொழுதே முடிவு செய்து கொண்டேன். என்று குஞ்சுகள் பொரித்துச் சுதந்திரமாகப் பறக்க ஆரம்பிக்கின்றனவோ அன்றுதான் எனக்கு நிம்மதி. இந்த விடயத்தில் என் குழந்தைகள் என்னைவிட மிகவும் இயல்பாக இந்த விடயத்தை அணுகினார்கள். "அப்பா.. நீ வீணாகக் கவலைப் படாதே. இவ்வளவு காலமும் இல்லாத கவலை உனக்கெதற்கு. இந்த இடம் இல்லாவிட்டாலும் இன்னோரிடத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அவை தங்களைப் பார்த்துக்கொள்ளும். அவற்றின் வாழ்க்கையில் தலையிடாமல் இருப்பதே நாம் செய்ய வேண்டிய பெரிய உதவி" என்று வேறு எனக்கு அறிவுரை கூறினார்கள்.  [இன்னும் வரும்]

ngiri2704@rogers.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்