இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
 யூலை 2007 இதழ் 91 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
தொடர்நாவல்!
காதலன் - 4 & 5!
- மார்கெரித் த்யூரா -
தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -

மார்கெரித் த்யூரா (1914-1996)
எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, 'காதலன்'(L'Amant - The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.

http://www.diplomatie.gouv.fr/label_france/ENGLISH/LETTRES/DURAS/duras.html

காதலன் - 4

எனது இளைய சகோதரன் 1942ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்திருந்தான். 1932ம் ஆண்டிலிருந்து 1949ம் ஆண்டுவரை சைகோனில் இருப்பதென்பது பெண்மணியின் திட்டம். இளைய சகோதரின் இறப்பு அவள் வாழ்க்கையை முடக்கிவிட்டது. அவள் வார்த்தையில் சொல்வதென்றால், 'வீடு, வீட்டை விட்டால் இளைய சகோதரனின் கல்லறை,' முடிந்தது. பிறகு ஒருவழியாக பிரான்சுக்குத் திரும்பினாள். நாங்கள் இருவரும் திரும்பவும் சந்தித்தபோது என் மகனுக்கு இரண்டுவயது. இச்சந்திப்பு கூட காலம் கடந்ததே. அவளது மூத்த மகனைத் தவிர்த்து, எங்களை இணைக்க வேறு விஷயங்கள் இல்லை என்பதால், எங்கள் சந்திப்பு அர்த்தமற்றது என்பதைப் பார்த்த்வுடனேயே புரிந்துகொண்டோம். 'லுவார்-எ-ஷேர்'(Loire-et-Cher) என்ற இடத்தில் பதினான்காம் லூயிகாலத்து அரண்மனை மாதிரியான ஓர் இடத்தைப் பிடித்து தன் வாழ்நாளின் எஞ்சிய நாட்களை அங்கே கழிப்பதென்று, வேலைக்காரி 'தோ'வுடன் குடியேறினாள். .அங்கும் இரவென்றால் அவளுக்குப் பயம், வேட்டைக்கான துப்பாக்கியொன்றை விலைகொடுத்துவாங்கி பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டாள். மேல்மாடியிலிருந்த மச்சுகளில் 'தோ' காவல் இருந்தாள். தனது மூத்த மகனுக்கு ஆம்புவாஸ்(Amboise) அருகே சொத்தொன்று வாங்கினாள். அங்கு சுற்றிலும் ஏறாளமாய் மரங்கள். ஆட்களை ஏற்பாடுசெய்து மரங்கள் முழுவதையும் வெட்டிச் சாய்த்தான். பாரீஸில் இருந்த பக்காரா சூதாட்டவிடுதிக்குச் சென்றான். ஒர் இரவிலேயே மரத்தை விற்றுச் சம்பாதித்த பணம் அத்தனையும் தொலைந்தது. கணத்தில் நினைவுகள் வேறுதிசைக்கு பயணிக்க, எனது விழிகள் கண்ணீரில் மிதக்கின்றன, அக்கண்ணீருக்கு மூலம் எனது சகோதரனாக இருக்கலாம். மரங்களையும், அதற்குண்டான பணத்தினையும் இழந்தபிறகு நடந்த சம்பவம் நினைவில் இருக்கிறது. 'மோன் பர்னாஸில்'(Montparnasse) லா கூப்போல்(La Coupole)1 எதிரே, மோட்டார் வாகனத்திற்குள் அவன் படுத்துக்கிடந்தாய் நினைவு. அதுத் தொடர்பாக வேறு எதையும் நினைவுபடுத்த இயலவில்லை. பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பதை அறிந்திராத ஐம்பது வயது குழந்தையான மூத்தமகனுக்கென்று, அவ்வளவு பெரிய கோட்டையை வைத்துக்கொண்டு அவள் செய்த காரியங்கள் கற்பனைக்கு எட்டாதது. கோழிக்குஞ்சுகள் பொறிக்கவென்று எந்திரங்கள் வாங்கினாள், கீழே இருந்த பெருங்கூடமொன்றில் அவற்றைப் பொருத்தினாள். திடுமென்று, அருநூறு குஞ்சுகள், நாற்பது மீட்டர் பரப்பளவுகெண்ட கூடம் கோழிக்குஞ்சுகளால் நிறைந்தன. எந்திரத்தின் வெப்ப அளவை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாததால் குஞ்சுகளின் அலகுகள் பொருத்தமின்றி இருந்தன, அவைகளை மூட இயலாலாமல் குஞ்சுகள் தவித்தன, பசியில் வாடின. கோழிக்குஞ்சுகள் பொறிக்க இருந்த நிலையில் கோட்டைக்குச் சென்ற ஞாபகம், அதன்பிறகு செத்துக்கிடந்த குஞ்சுகளும், அவற்றுக்கான தீனியும், கெட்டு துர்நாற்றமெடுத்தபோது அங்கு மறுபடியும்போயிருக்கிறேன், வாந்தி எடுக்காமல் அப்பொழுது சாப்பிட்டதில்லை.

இறுதிக்காலத்தில், குளிர் கடுமையாக, உரைபனி நிலையை எட்டும் சமயங்களில், கீழ்த்தளத்திலிருந்த அவளது பெரிய அறையில், அவளது பிள்ளைகளெனச் செல்லமாகச் சொல்லிக்கொண்ட நான்கு அல்லது ஆறு ஆடுகளோடு எப்போதும் நித்திரைகொள்வாள், தோ'வுக்கும் அச் செல்லப்பிள்ளைகளுக்கும் இடையில் ஒருநாள் அவள் 'செத்துக் கிடந்ததும் நினைவில் இருக்கிறது.

அங்கே இங்கேயென்று அலைவதை விடுத்து ஓரிடமாக, அதாவது எங்கள் குடும்பப் பிரச்சினைகளை எல்லாம் முடித்துவிட்டு அக்கடாவென்று கடைசியாகத் தங்கப்போன லுவார் பிரதேசத்து இருப்பிடத்தில்தான் அவளுடைய பைத்தியக்காரத் தனமான நடவடிக்கைகளை முதன் முதலாக கொஞ்சம் அதிகப்படியாக புரிந்துகொள்ள முடிந்தது. நான் சொல்வதை உறுதிபடுத்துவதுபோல என் கண்முன்னே பைத்தியம் பிடித்தவள்போல என் அம்மா. 'தோ'வும், சகோதரனும், அவளது பேய்க்குணங்களுக்குப் பழகியிருந்தார்கள். ஆனால் நான், அவளை அப்படியான நிலையில் அதற்குமுன்பு கண்டதில்லை. ஆனால் அவள் மன உளைச்சலுடன் இருந்திருக்கிறாள் என்பது உண்மை, சொல்லப்போனால் அது அவளுடைய இரத்தத்தில் கலந்திருந்தது, இடையில் பீடித்த நோய் என்று சொல்லிவிட முடியாது, பிறவி குணம். அவளது ஆரோக்கியமே அதில்தான் என்றாயிற்று, துணைக்கு 'தோ'வும், மூத்த மகனும். அவர்கள் அன்றி வேறொருவர் அவளைப் புரிந்துகொண்டதில்லை. எந்நேரமும் சிநேகிதர்கள் சூழ இருப்பாள், அவர்கள் நீண்டகால நண்பர்கள், நித்தம் நித்தம் இணைந்துகொள்கிற புதியவர்களுக்கும் குறைவில்லை, பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார்கள், தொடக்கத்தில் அவர்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களோடு சம்பந்தப்பட்டவர்களாக இருந்தனர், பிறகு தூரன்(Touraine)பக்கமிருந்தும் நண்பர்கள் கிடைத்தார்கள், அவர்களில் பலர் காலணி நாடுகளிலிருந்து பணிஓய்வு பெற்றுத் திரும்பியவர்களாக இருப்பார்கள். அவளைச்சுற்றி எப்போதும் மனிதர்கள் இருக்கும்படி பார்த்துக்கொண்டாள், அவர்களுக்கு வயது வரம்பென்று எதுவுமில்லை. சாதுர்யமானவளாக அவள் இருக்கிறாள் என அதற்குக் காரணம் சொன்னார்கள், இயல்பாகவே அவளிடம் ஒட்டிக்கிடத்த உற்சாகத்தின் விளைவாக மிகுந்த சுறுசுறுப்புடன் இருந்தாள்.

ஹனாய் வீட்டுக்கூடத்தில் எடுத்த நிழற்படத்தில், விரக்தியுடன் அவள் இருப்பதை படம் பிடித்தது யாரென்று நினைவில் இல்லை. ஒரு வேளை எனது தந்தை எடுத்த கடைசி படமோ? அந்த நேரம் ஒரு சில மாதங்களில், உடல்நிலைகாரணமாக அவர் பிரான்சுக்குத் திரும்ப அனுப்பப் படவிருந்தார், இதற்கிடையில் ப்னோம்- •பென்(Pnom-Penh) நகரத்திற்கு, புதிய பணியொன்றிர்க்கு நியமனம் செய்யப்பட இரண்டு மூன்று வாரங்கள் அங்கே தங்கவும் வேண்டியிருக்கிறது. பிரான்சுக்குத் திரும்பிய ஒருவருடத்திற்குள் இறந்து போகிறார். அவருடன் திரும்புவதற்கு அம்மா மறுத்து விடுவாள், இருந்த இடத்திலிருந்து வேறெங்கும் போகக்கூடாது என்றிருந்தாள். அங்கேயே தங்கிவிடுகிறாள். 'போனம்-•பென்'னில் பலரும் வியந்த எங்கள் வீட்டிலிருந்துப் பார்த்தால், மீகாங் நதிக்கரையில், ஏக்கர் கணக்கில் அமைந்து பார்ப்பவரை அச்சுறுத்திய- அம்மாவுக்கும் பயமிருந்தது- பூங்காவுக்கிடையே கம்போடிய நாட்டு மன்னருக்குச் சொந்தமான பழைய அரண்மனை தெரியும். குறிப்பாக இரவு வேளைகளில் அப்பூங்கா மிகவும் பயமுறுத்தும். நாங்கள் நால்வரும் ஒரே கட்டிலில் படுப்பது வழக்கம். எங்களிடத்தில், இரவென்றால் தனக்குப் பயம் என்பாள். அப்பா இறந்துபோன சேதி அவளுக்குத் தெரியவந்ததும் அந்த வீட்டிலிருந்தபோதுதான். அன்றையதினம் நள்ளிரவு, ஒரு பறவை அசாதரணமாக குரலெழுப்பி அப்பா பணிபுரிந்த அரண்மணையின் வடபகுதி அலுவலக திசைக்காய் மறைந்ததை பார்த்திருக்கிறாள். மறுநாள் காலையில் தந்தை இறந்ததாக தந்தி வருகிறது. அதுபோலவே அப்பா இறப்பதற்கு ஒரு சில நாட்கள் இருக்கையில் மற்றொன்று நடந்தது. நடு நிசி, அம்மா நின்றுகொண்டிருக்கிறாள், எதிரேப் பார்க்க அப்பாவும், தாத்தாவும் அதாவது அம்மாவின் அப்பாவும்-நின்று கொண்டிருக்கிறார்கள். விளக்கை ஏற்றுகிறாள். அவர் போகவில்லை, அரண்மனையின் விசாலமான கூடத்தில் மேசையருகே நிற்கிறார், அவளை அவர் பார்க்கிறார். அப்போது கேட்ட அலறல் -ஒரு வித அபாய அறிவிப்பு போல- இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. பிறகு எங்களை எழுப்பியவள், நடந்ததைச் சொன்னாள், அவர் உடுத்தியிருந்தவிதம் அதாவது வழக்கமாய் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் அணிகிற சாம்பல் வண்ண சூட்டில்; அவர் நின்றிருந்த விதம்; அவளை நேராகப் பார்த்தது; ஒன்றுவிடாமற் கூறினாள். " நான் சின்னப்பெண்போல மாறி இருக்கிறேன், அவரை அழைக்கிறேன், சிறிதளவும் பயமில்லை", இவைகளெல்லாம் அவள் கூறிய வார்த்தைகள். மாயமாய் மறைந்த உருவத்தைத்தேடி ஓடி இருக்கிறாள். எந்தத் தேதியில் எந்த நேரத்தில் பறவையையும், உருவங்களையும் பார்க்க நேர்ந்ததோ, அந்தத் தேதியில், அதே நேரத்தில்தான் இருவரும் இறந்திருந்தார்கள். அச் சம்பவத்திலிருந்து, மரணம் உட்பட அனைத்து விஷயங்களிலும் அம்மாவுக்குள்ள ஞானத்தை உணர்ந்து அவளை மதிக்கத் தொடங்கினோம்.

தனது சொகுசுக்காரிலிருந்து மிடுக்காக உடையணிந்திருந்த மனிதன் இறங்குகிறான். பிரிட்டிஷ் சிகரெட் ஒன்றை புகைக்கிறான். ஆண்களுக்கான தொப்பியும், மின்னும் காலணிகளுமாக நிற்கிற சிறுமியைப் பார்க்கிறான். அவளை நோக்கி மெல்ல நடந்து வருகிறான். அம் மனிதனிடத்தில் ஒருவித மரியாதைகலந்த வியப்பு, புன்னகைக்கவில்லை. முதலில் அவளிடம் சிகரெட் ஒன்றை நீட்டுகிறான், அவனது கரம் நடுங்குகிறது. இருவருக்கும் இடையில் இனப்பாகுபாடு இருக்கிறது, அவன் வெள்ளையன் இல்லை. பேதத்தைக் கடந்தாகவேண்டும், எனவே அவனது உடலில் நடுக்கம். தனக்கு புகை பிடித்து பழக்கமில்லை என்பதால் அவள் அவனிடம், நன்றி, வேண்டாம் என்கிறாள், அவளிடத்திலிருந்து வேறு வார்த்தைகள் இல்லை. என்னை அமைதியாக இருக்கவிடு, என்றெல்லாம் அவனிடத்தில் அவள் சொல்லவில்லை. எனவே அவனுக்குக் கொஞ்சம் துணிச்சல் வந்தது, தான் கனவுலகத்தில் இருப்பதுபோல உணர்வதாக சொல்கிறான். அவளிடம் பதிலில்லை. பதில் சொல்லி என்ன ஆகப்போகிறது? சொல்வதற்கும் என்ன இருக்கிறது? அவள் மௌனமாக இருந்தாள். அவன் அவளிடம்," எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்?", என்று கேட்கிறான். அவள், " சாடெக்கிலுள்ள பெண்கள் பள்ளியின் ஆசிரியை மகள்", எனப் பதிலிறுக்கிறாள். அவன், அப் பெண்மணியைப் பற்றியும், கம்போடியாவில் அவள் சொத்தொன்று வாங்கி, அதுமுதல் சந்தித்துவருகிற சங்கடங்களை அறிந்திருப்பதாகவும் கூறிவிட்டு, தான் சொல்வது சரிதானே என்று கேட்கிறான். அதற்கு அவள், 'சரிதான்', என்கிறாள்.

தொடர்ந்து, தோணியில் அவளை மாதிரியான ஒருபெண்ணைப் பார்ப்பது மிகவும் அபூர்வம் என்கிறான். அதிலும் அதிகாலை நேரத்தில், வெள்ளையர் இனத்து இளம்பெண், உள்ளூர் மக்கள் உபயோகிக்கிற பேருந்து ஒன்றில் பயணிக்கும் அதிசயம் அன்றாடம் நடப்பதல்லவென்றும், அவள் அணிந்திருக்கும் தொப்பி பொருத்தமாக, சொல்லப்போனால், மிகமிகப் பொருத்தமாக, வித்தியாசத்துடனும் ரசிக்கக்கூடியதாகவும் இருக்கிறது, என்கிறான். "ஆண்களுக்கான தொப்பியாகக்கூட இருக்கட்டுமே, அதானலென்ன?", என வியப்பில் ஆழ்கிறான். உண்மைதான் நினைத்ததைச் சாதிக்கலாம், அவளது அழகிற்கு அத்தனை பலமிருக்கிறது.

இப்போது அவள் முறை, அவன்மீது பதித்த பார்வையைத் திசைதிருப்பும் எண்ணமில்லை. அவன் யாரென்று கேட்கிறாள். பாரீஸில் தனது கல்வியை முடித்துவிட்டுத் திரும்பி இருக்கிறேன், என்கிறான். அவனும் சாடெக்கில்தான் வசிக்கிறான், வேறெங்கே? நதிக்கரையை ஒட்டி, நீலவண்ணத்தில் செராமிக் இழைக்கபட்ட பால்கணியும், பெரிய தளமுமாக இருக்கிற வீடொன்றில்தான் அவனும் இருக்கிறான். அவனது பூர்வீகம் பற்றிய கேள்விக்கு, சீனாக்காரனென்றும், அவனுடைய குடும்பத்தவர் •பூ-ஷ¥வென் என்ற சீனநாட்டின் வடபகுதியிலிருந்து வந்தவர்கள் என்கிறான். என்னுடன் சைகோன் வருவதற்குச் சம்மதமா? எனகேட்க, அவள் மறுக்கவில்லை. தனது வாகன ஓட்டியை அழைத்து இளம்பெண்ணுடைய உடமைகளை பேருந்திலிருந்து எடுத்து கறுப்பு நிற வாகனத்தில் வைக்குமாறு கட்டளை இடுகிறான்.

காலனி நாட்டில் சாதாரண மற்றும் நடுத்தரவர்க்க மக்களுக்காக வீடு, மனை வாங்குவதும் விற்பதுமான தொழில்கள் அனைத்திலும் பிறரை நுழையவிடாமல் காலூன்றி இருப்பவர்கள்- சீனர்கள். அந்தச் சிறுபான்மை கூட்டத்தில் ஆக, இவனும் ஒருவன். மீகாங் நதியூடாக அன்றைய தினம், சைகோன் சென்றுக்கொண்டிருந்தான்.

கறுப்பு நிற வாகனத்திற்குள் அவள் நுழைகிறாள். வாகனத்தின் கதவு மூடிக்கொள்கிறது. திடுக்கென்று, மெலிதாக ஒருவித அச்சம், சோர்வு, மெல்ல மெல்ல நதிமீதி பரவியிருந்த வெளிச்சம் மங்கிவருவதுபோலத் தோற்றம், ஒருவித நிசப்தம், அதுகூட மென்மையாகவே உணரப்படுகிறது, பிறகு எங்கும் தெளிவற்ற காட்சிகள்.

இனி உள்ளூர்மக்கள் பயணிக்கிற பேருந்து எனக்கு ஒத்துவராது. விடுதியிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்கு போகவும் வரவும், சொகுசு வாகனமொன்று வைத்துக்கொள்வேன். இரவு உணவிற்கு, நகரத்திலுள்ள மிகவும் ஆடம்பரமான இடங்களுக்குச் செல்லக்கூடும். நித்தம் நித்தம் என்னால் செய்யப்படுபவைகளுக்கும்; செய்ய மறந்த அல்லது வேண்டாமென்று ஒதுக்கியவைகளுக்கும்; என்னால் ஏற்றுக்கொள்ளபட்ட நல்லது கெட்டதுகளான அதாவது பயணம் செய்த பேருந்து, சிரித்து என்னோடு மகிழ்ந்த பேருந்து ஓட்டுனர், பின் இருக்கையில் அமர்ந்தபடி வெத்திலைமெல்லும் கிழவிகள், லக்கேஜ் காரியரில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள், சாடெக் குடும்பம், அங்குற்ற வேதனைகள், அதன் ஈடிணையற்ற அமைதி, என அனைத்திற்கும் மேலே குறிப்பிட்ட, அதாவது இரவு உணவுக்கென்று செல்லும் சொகுசுவிடுதிகளிற்தான் வருந்தியாகவேண்டும் என்பதால், அங்கு அடிக்கடி செல்வேன்.

அவன் பேசியபடி இருந்தான். கவர்ச்சிகரமான பாரீஸ் பெண்கள்; திருமணம்; வெடிகுண்டுகள்; லா கூப்போல்(La Coupole)1; விருப்பத்துடன் சென்ற லா ரொத்தோந்து(La Rotonde)2; இரவு விடுதிகள் மற்றும் இதுதான் வாழ்க்கை என்பது மாதிரி ஆடம்பரங்களும், உல்லாசங்களும் என்றிருந்த இரண்டுவருட பாரீஸ் வாழ்க்கை; அவனுக்கு அலுத்துவிட்டதாம். அவனுடைய உரையாடல், செல்வ செழிப்பை உணர்த்திற்று, தொடர்ந்து செவிகொடுத்துக்கேட்டால் அவன் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் என்பது தெரியவரலாம், மிகவும் கவனத்துடன் சொல்வது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள். நிறுத்தாமல் தொடர்ந்தான். அவனது தாயார் இறந்துவிட்டாள். வீட்டுக்கு ஒரே பிள்ளை, இருக்கிற சொத்துகள் அனைத்திற்கும் இவன் ஒருவன்தான் வாரிசு, அதற்கு உரிமையென்று சொல்லிக்கொள்ள இப்பொதைக்கு உயிரோடிருக்கும். அவனுடைய தந்தை மட்டுமே. அவர், அல்லும் பகலும் கஞ்சா புகைத்துக்கொண்டு நதியைப்பார்த்தபடி இருப்பார், கட்டிலில் இருந்தபடி, சொத்துகளைப் பராமரித்து வருகிறார். அவள், 'புரிகிறது', என்கிறாள்.

சடெக்கில் இருக்கும் ஆரம்பச் சுகாதாரவிடுதியொன்றைச் சேர்ந்த வெள்ளைத் தோல்கொண்ட விபச்சார சிறுமியை, தன் மகன் மணப்பதற்கு அந்த நபர் அனுமதிப்பார் என்று நினைக்கவில்லை.

காட்சி, கைப்பிடி கம்பிக்கருகே நிற்கிற வெள்ளைக்கார சிறுமியை நெருங்கியதற்கு முன்னால் தொடங்குகிறது, அதாவது தனது கறுப்பு நிற சொகுசுக் காரிலிருந்து அவன் இறங்கும் நேரத்தில், அதாவது அவளை நோக்கி அவன் நடக்க ஆரம்பித்த பொழுது, அதாவது தன்னை நெருங்கிற அவனிடத்தில் ஒருவித அச்சம் தலைகாட்டுகிறது என்பதை அவள் உணர்ந்த மாத்திரத்தில்.

தொடக்கத்திலேயே, இவளுடைய தயவில்தான் அவன் இருக்கிறான் என்பதுபோல உணருகிறாள். சந்தர்ப்பம் அமையுமானால் அவனைப்போலவே வேறுசிலரும் அவளது தயவுக்காக காத்திருக்கக்கூடும், என்பதும் தெளிவு. தனது தேவைகள் சிலவற்றை அவளால் மட்டுமே பூர்த்திசெய்து கொள்ள முடியும் என்ற நிலையில் இதுவரை காலம் கடத்திவந்தாள், அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. நடப்பது எதுவும், அம்மாவுக்கோ, சகோதரர்களுக்கோ எட்டாமற் பார்த்துகொள்ளவேண்டும் என்பதில் கூட அன்றையதினம் அவள் தெளிவாக இருந்தாள். கறுப்புநிற மோட்டார் வாகனத்தில் அமர்ந்தாளோ இல்லையோ, முதன்முறையாக மட்டுமல்ல நிரந்தரமாகத் தனது குடும்பத்தைவிட்டு விலகுகிறாள் என்பதை உணர முடிந்தது. அவளுக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய அவர்களுக்கு இப்பொழுது உரிமையில்லை. யார் வேண்டுமானாலும் அவளைத் தொடலாம்; எவர் வேண்டுமானாலும் அவளைத் தூக்கிச் செல்லலாம்; யார் வேண்டுமானாலும் அவளைக் காயப்படுத்தலாம், எவர் வேண்டுமானாலும் அவளைக்கெடுக்கலாம், அம்மாவுக்கும் சரி, என் இரு சகோதரர்களுக்கும் சரி அதைத் தெரிந்துகொள்ள அவசியமில்லை. அவர்கள் தலைவிதி அப்படி கறுப்புவண்ன சொகுசுக் காரில் அதற்காக வேண்டிய அளவு கண்ணீரும் சிந்தியாயிற்று..

சிறுமி சற்று நேரத்தில் உறவு கொள்ள இருந்தவன், தோணியில் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன், அவள் வாழ்க்கையில் குறுக்கிட்ட முதல் ஆண்.

1. La Coupole- பாரீஸில் மோன்பர்னாஸ்பகுதியைச் சேர்ந்த மிகபெரிய விடுதி -
2. La Rotonde, பாரீஸில் மோன்பர்னாஸ்பகுதியைச் சேர்ந்த உணவு விடுதி

காதலன் - 5

அவளது முதல் அனுபவத்திற்கான அந்நாள் அத்தனை சீக்கிரம் அமையும் என நினைத்ததில்லை, அது ஒரு வியாழக் கிழமை. உயர்நிலைப் பள்ளியிலிருந்து விடுதிக்குத் தனது காரில் அழைத்து செல்ல அவன் நாள் தவறாமல் வருவான். ஒரு வியாழகிழமை பின்நேரம் விடுதிக்கு வந்திருந்தான். அவளைத் தனது கறுப்புகாரில் அழைத்து போனான்.

சீனர்கள் நிறைந்த ஷோலென்(Cholen) நகரம், மத்திய சைகோனோடு அதனை இணைப்பது அமெரிக்காவிலிருப்பதுபோல ஓர் அகன்ற சாலை, அதிற்றான் டிராம்கள், மோட்டார் வாகனங்களும், கை ரிக்ஷாக்கள் என அனைத்தும் போகவேண்டும், அங்குதான் எனது முதல் அனுபவம். பிற்பகலின் ஆரம்பம், விடுதிப் பெண்கள், வெளியிற் செல்ல அனுமதிக்கப்படும் நேரம், அதனை இவள் பயன்படுத்திக்கொண்டிருந்தாள்.

பார்க்க நவீனமாக இருந்த, நகரத்தின் தென் பகுதி. உள்ளிருந்த தளவாடங்கள்: ஆடம்பரமாக இருக்கவேண்டுமென்று அவசரகதியில் வாங்கிப் போடப்பட்டவையாக இருக்கவேண்டும். அவள் எண்ணத்தைப் புரிந்துகொண்டவன்போல, 'இவைகள் எனது தேர்வல்ல', என்றான். தனி அறையில் போதிய வெளிச்சமின்றி இருந்தபோதிலும், சன்னலைத் திறவென்று அவனை இவள் வற்புறுத்தவில்லை. இன்னதென்று விவரிக்க இயலாத உணர்வுகள், சூழலுக்கு இணங்கும் பக்குவம், நிராகரிக்கும் மனமில்லை, ஒருவேளை அவளுள் சுரந்த இச்சை அதற்குக் காரணமாக இருக்கலாம். முதல்நாள் மாலை, வரமுடியுமா என்று அவன் கேட்ட உடனேயே, சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆக அவளது விருப்பத்துடனே வந்திருக்கிறாள். நடப்பதனைத்தும், நேற்றுவரை இவள் காத்திருந்ததும், தனக்கு என்ன நேரும் என இவள் நினைத்ததுமன்றி வேறல்ல என்கிறபோதும், இலேசாக ஒருவிதம் பயம். அவளது எண்ணமெல்லாம் அறையை தன்னுள் அடக்கிய இறைச்சலும், வெளிச்சமுமான வெளி உலகினைப் பற்றியதாக இருக்க, அவன் உடலில் நடுக்கம். முதலில் அவள் பேசட்டும் என எதிர்பார்த்தவன்போல, அவளைப் பார்க்கிறான், ஆனால் அவள் மௌனமாக இருக்கிறாள். அவனுக்கும் அவளது ஆடைகளை அவிழ்க்கும் எண்ணமேதும் தனக்கில்லை என்பதுபோல சிலைபோல நிற்கிறான். மெல்ல அவள் அருகில் வந்து, 'உன்னை வெறித்தனமாக நேசிக்கிறேன்', என முணுமுணுத்தவன் மீண்டும் அமைதியாய் இருக்கிறான். இவளிடத்தில் அதற்கான பதிலில்லை. 'உன்னிடத்தில் எனக்கு அப்படியொன்றும் பிரியமில்லை', எனச்சொல்லி இருக்கலாம், இல்லை, சொல்ல இல்லை. ஒன்று மட்டும் உடனடியாக தெரிந்துகொள்ளமுடிந்தது, 'அவளை அவனுக்குப் புரியாது, இப்போதுமட்டுமல்ல, ஒருபோதும், அவளைப் புரிந்துகொள்ள அவனால் இயலாது, தப்பான காரியங்களை அறிந்துகொள்வதற்கான வழிமுறைகளோ, அதற்கான ஞானமோ அவனுக்குப் போதவே போதாது. தெரிந்துகொள்ளவேண்டியவள் அவள், எனவே விளங்கிக் கொள்கிறாள். அவனது அப்பாவித்தனம் சடாரென்று எதையும் ஒளிக்காமல் விளங்கப்படுத்துகிறது. தோணியில் அவனைப் பார்த்தவுடனேயே அவளுக்குப் பிடித்திருந்தது. ஆம், இதோ இக்கணத்திலுங்கூட அவனைப் பார்க்க மகிழ்ச்சி, ஆக இவள்தான் செயல்படுத்தவேண்டும்.

அவனிடத்தில், "என்னை நீ விரும்பித்தான் அழைத்து வந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை, பிற பெண்மணிகளிடம் எப்படி நீ நடத்துவாயோ அதுபோல என்னையும் நடத்தினாற் போதும், அதற்கு என்னை நீ விரும்பவேண்டும் என்று அவசியமல்ல. அவன் முகம் வெளிறிப்போனது, "உனக்கு வேண்டியதெல்லாம் அதுதானா", கேட்கிறான். "ஆம் அதுதான்", என்பது அவளது பதிலாக இருக்கிறது. முதன் முறையாக, அவனுடைய அறையில், நெருக்கடிக்கு உள்ளானான், அதை அவனால் ஒளிக்க முடியவில்லை. தன்னை ஒருபோதும் அவள் விரும்பமாட்டாள் என்பதை, ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டானாம், சொல்கிறான். சொல்லட்டுமென்று காத்திருக்கிறாள். முதலில் அப்படியா? எனக்குத் அது தெரியாதே, என்றவள், அவன் பேசட்டும் என்பதுபோல பின்னர் அமைதியாக இருந்தாள்.

உன்னிடத்தில் கொண்டுள்ள வெறித்தனமான இக் காதலன்றி, இப்போதைக்கு எனக்கு வேறு துணையில்லை, என்கிறான். தானும் தனித்து இருப்பதை உணர்வதாக அவனிடம் சொல்கிறாள். எதனுடன் என்று அவள் சொல்லவில்லை. வேறொருத்தர் பின்னால் நீ போவதைப்போலத்தான், என்னைத் தொடர்ந்தும் வந்திருக்கிறாயா? அவன் கேட்கிறான். இதுவரை ஒருவரை அவரது இருப்பிடம்வரைத் தேடிசென்ற அனுபவம் எனக்கில்லை என்பதால், என்னால் அதற்குப் பதில் சொல்ல இயலாதென்கிறாள். "பேசிக்கொண்டிருக்க வேண்டாமே, வழக்கமாக உனது அறைக்கு அழைத்து வரப்படும் பெண்களிடம் எப்படி நடந்துகொள்வாயோ, அப்படி நடக்கவேண்டுமென்பதுதான் எனது விருப்பமும், தயவு செய்து உடனே ஆரம்பி", அவனிடம் கெஞ்சுகிறாள்.

அவளுடைய கவுனை வேகமாக உருவி, எறிகிறான். பருத்தியினால் ஆன வெண்மை நிற உள்ளாடையையும் உருவிப் போட்டவன், நிர்வாணமாக இருந்தவளைக் தூக்கிச் சென்று கட்டிலிற் கிடத்தினான். பிறகு? பிறகென்ன கட்டிலின் மறுபக்கம் திரும்பி உட்கார்ந்துகொண்டு விம்முகிறான். அவள் பொறுமைசாலி, சகித்துக்கொள்கிறாள், மெதுவாக தன் பக்கம் கொண்டுவந்தள், அவனது ஆடைகளை அகற்றத் தொடங்கினாள். கண்களை மூடியபடி, அவசரமின்றி நிதானமாக அதைச் செய்கிறாள். அவளது செய்கைக்கு உதவ முற்படுபவன்போல அவன் பாவனை செய்கிறான். நான் பார்த்துக்கொள்கிறேன், நீ அமைதியாய் இரு, நானே செய்ய வேண்டுமென்று எனக்கு ஆசை, என்றவள் அவ்வாறே செய்தாள், ஒன்றன் பின் ஒன்றாக அவனது ஆடைகளை நீக்கினாள். இவள் கேட்டுக்கொண்டதின் பேரில், உறக்கத்தில் இருப்பவளை எழுப்பிவிடக்கூடாது என நினைத்தவன் போல, கவனமாக மெல்ல இடம் மாற்றிப் படுக்கிறான். உடலின் மேல்தோலானது மிகவும் இனிமையாக இருக்கிறது. உடல்? மெலிந்திருக்கிறது, எளிதில் நோயில் விழக்கூடிய தகுதிகளுடன், அல்லது நாட்கள் பலவாக நோயிற் கிடந்து தேறிவரும் உடல்போல, பலமற்றவனாக, தசைகளில் திரட்சி அற்று, முகத்தில் உரோமமின்றி, 'குறி'யைத் தவிர ஆண்மைக்கான வேறு அடையாளங்களின்றி, அத்தனை பலவீனமாக இருந்தான். பிறர் அவனை எளிதாக இளப்பத்துடன் பேசவும், அதுகுறித்த வேதனைகளை சுமக்கவும் உரியவன்போலிருந்தான் அவனது முகத்தை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏன் அவனையே அவள் பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மாறாக மிருதுத் தன்மைக்காக அவனது ஆண் குறியையும், அதன் சருமத்தையும் தொட்டுப் பார்க்கிறாள், அதன் மஞ்சள் நிற மினுமினுப்பிற்காகவும், அறிந்திராத அதன் புதுமைக்காகவும் வருடிக்கொடுக்கிறாள். அவன் செருமிக்கொள்கிறான், கண்ணீர்விட்டு அழுகிறான், ஏதோ அசாதாரண காதல் வயப்பட்டவன்போல.

அழுதபடி காரியத்தில் இறங்குகிறான், ஆரம்பத்தில் வலி தெரிந்தது, பின்னர் அதன் இடத்திற்கு வேறொன்று, பரவசத்தின் உச்சநிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவளாக, மெல்ல விலகிக்கொள்கிறாள்.

அது கடல்போல, வடிவமென்று ஏதுமில்லை, அல்லது இதுதான் என்று ஒப்பிடமுடியாதது

இச்சம்பவத்திற்கான காட்சிப் படிமம், முன்னதாகவே தோணியில் தன்னை அரங்கேற்றிக்கொண்டிருக்கவேண்டும்.

மீண்டும் அணிந்த காலுறைகளுடன், பெண்மணி அறையை கடந்து செல்லும் காட்சி. பார்க்க, அவளிடத்தில் சிறுமி ஒருத்திக்கானத் தோற்றம். அவளது புதல்வர்கள் அதற்கான காரணத்தை அறிவார்கள். அவளுடைய மகளுக்கு, என்ன நடக்கிறது என்பது இதுவரை தெரியாது. தங்களுடைய தாயாரைப்பற்றி ஒன்றாக அமர்ந்து பேசிய வழக்கமில்லை, குறிப்பாக அவளைப் பற்றி அறியவந்த இறுதிகாலத்து, தீர்மானமான தகவல்கள், அவளுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளிக்குக் காரணமாகி இருக்கின்றன என்பதுபற்றிகூட அவர்கள் உரையாடியதில்லை.

கலவியினால் கிடைக்கக்கூடிய பரவசத்தின் உச்சநிலை அனுபவத்தினை அவள் அறிந்தவளல்ல.

இரத்தம் வருமென்று எனக்குத் தெரியாது. உனக்கு வலிக்கிறதா என்று கேட்கிறான், இல்லை என்கிறேன், தான் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாகச் சொல்கிறான்.

இரத்தத்தைத் துடைக்கிறான். பின்னர் தண்ணீர் கொண்டு, கழுவ, செய்வதனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தன்னைப்பற்றிய பிரக்ஞையின்றி என்னிடம், விரும்பும் வகையில் மீண்டும் இணைந்துகொள்கிறான். எங்கள் அம்மா விதித்திருந்த தடைகளைமீறி நடப்பதற்கான வலிமையை எங்கிருந்து பெற்றேனென்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். மிகவும் அமைதியாக, எடுத்த முடிவில் உறுதியுடன், இக்காரியத்தில் நான் இறங்க எதுகாரணமாக இருக்கலாம்.

இருவரும் ஒருவரையொருவம் பார்த்துக்கொண்டோம். என்னைக் கட்டி அணைக்கிறான். எதற்காக நீ வந்தாய்?- கேட்கிறான். வேறுவழியில்லை, அப்படியான நெருக்கடியிலிருக்கிறோம், -என்பது எனது பதில். இருவரும் முதன்முறையாக தயக்கமின்றி உரையாட முடிகிறது. எனக்கு இரண்டு சகோதர்கள் இருக்கிறார்களென்றும், கையில் சுத்தமாக பணமின்றி, தரித்திரர்களாக வாழ்க்கையை நடத்துகிறோம், என்றும் கூறுகிறேன். அவன் எனது மூத்த சகோதரனை அறிவானாம். கஞ்சா புகைக்குமிடங்களில் அவனை சந்தித்து இருக்கிறானாம். எங்கள் அம்மாவிடம் இருப்பதெல்லாம் கஞ்சா புகைத்தே தீர்ந்துபோகிறது, வேலைக்காரர்களைக்கூட எனது சகோதரன் விட்டுவைப்பதில்லை. ஒரு சில நேரங்களில், அவனுக்கு கஞ்சா விற்பவர்கள் அம்மாவைத்தேடி வீடுவரை வருவதும் நடந்திருக்கிறது. அவனிடம், அணைகள் குறித்தும் பேசுகிறேன். தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதால், அம்மா வெகு சீக்கிரம் இறக்கக்கூடும் என்கிறேன். இன்றைக்கு எனக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைக்குக்கூட அம்மாவின் சமீபத்தில் இருக்கிற மரணம் காரணமாக இருக்கலாம்.

அவனது தேவையை உணருகிறேன். எனக்காக மனம் இளகினான். நான், "வேண்டாம், எனது அம்மாவைவைத் தவிர்த்து ஒருவரும் பரிதாபமான நிலையில் இல்லை, எனவே இரக்கப் பட வேண்டாம்", என்கிறேன். "நீ வந்ததற்கு, என்னிடமுள்ள பணம்ந்தானே காரணம்", என்றான். நான், "உனது பணத்தையும், உன்னையும் சேர்த்தே விரும்பினேன், உன்னை பார்த்தபோது, காரில் ஏற்கனவே அதாவது பணத்திற்கான அடையாளத்துடன் அமர்ந்திருந்தாய், நீ வேறொருவனாக இருந்திருந்தால், எனது முடிவு என்ன என்பதுபற்றியெல்லாம், சொல்லத் தெரியாது", என்றேன். "உன்னை என்னுடன் அழைத்துச் செல்ல விருப்பம், நீ இல்லாமல் புறப்படுவதில்லை என்றிருக்கிறேன், வருகிறாயா?", கேட்கிறான். "நான் வருந்தியாகவேண்டும், அதற்குள் அம்மாவைப் பிரிந்து உன்னுடன் வர சாத்தியமில்லை", என்கிறேன். "உன்னை அழைத்துச் செல்ல எனக்குக் கொடுப்பினை இல்லையென்றுதான் நினைக்கிறேன்", என்றபோதிலும், எனது எதிர்பார்ப்பை உணர்ந்தவனாகப் பணம் கொடுக்கிறான். அவன் மறுபடியும் கால்களை நீட்டிப் படுத்துக்கொள்கிறான். மீண்டும் பேச்சின்றி இருவரும் மௌனமாக இருக்கிறோம்.

அறைக்கு வெளியே நகரத்தில் அப்படியொரு இரைச்சல், செவிடாக்கவேண்டுமென்று தீர்மானித்து, திரைப்படமொன்றினை அதிக சத்தத்துடன் வைத்திருப்பதைப்போல எனது நினைவில் இன்றைக்கும் ஒலிக்கிறது. 'அறைக்குள் இருள், எங்களுக்கிடையே உரையாடலில்லை, சுற்றிலும் நகரத்தின் கூச்சலும் குழப்பமும். மூட்டை முடிச்சுகளுடன் நகரத்தில், நகரத்தின் இரயிலொன்றில் பயணித்த உணர்வினை, இன்றைக்கும் நினைவில் கொள்ள முடிகிறது சன்னலுக்குக் காற்றுவாரிப்பலகையும், இலைக்கதவும்(1) இருந்தன, கண்ணாடிகளில்லை. இலைக்கதவுகளில், வெளியே நடைபாதை தளத்தில் நடந்துபோகின்றவர்களுடைய நிழல்கள். சனசந்தடி மிகுந்த நகரம். நிழல்கள் சாளரத்தில்வெளிப்படும் சூரியக் கதிர்களினால் ஒரே அளவாக துண்டாடப் படுகின்றன. மரத்தாலான பாதணிகள் எழுப்பும் ஓசை, தலையில் இடிக்கிறது. சீனர்கள் உரத்துப் பேசுகின்றவர்கள், பாலைநிலமக்கள் மொழிகளைக் கையாளுவதைப்போல, நம்பமுடியாதவகையில், அந்நியத்தன்மை அம்மொழிக்கு இருப்பதாக நினைக்கிறேன், அதை உறுதிபடுத்தும் வகையில் குரல்கள், காதினைக் கிழிக்கின்றன.

அந்தி சாயும் நேரம், சாலைகளிலும், நடைபாதைகளிலும் வருகின்ற குரல்கள் சிறிதுசிறிதாக, இன்னதென்று பிரிக்கவியலாதபடி அதிகரிப்பதைவைத்து, தெரிந்து கொள்ளமுடிகிறது. இன்பத்தைத் துய்ப்பதற்கான நகரம், இரவானால், அதன் மூழுவீச்சும் தெரியவரும். சூரியன் மேற்கில் மறையட்டுமென காத்திருந்ததுபோல இரவு வாழ்க்கை தொடங்கிவிட்டது. எங்களுடையக் கட்டிலை, நகரத்தினின்று, சன்னலும் அதிலிட்டிருந்த முரட்டுப் பருத்தித் துணியிலான இலைல்கதவும் பிரிந்திருந்தன. பிற மனிதர்களிடமிருந்து எங்களைத் தனிமைப்படுத்தவென்று வேறு கடினமானப் பொருட்களில்லை. வெளி மனிதர்கள் எங்கள் இருப்பினை அறிந்திருக்கமாட்டார்கள். ஒளிக் கதிர்கள், குரல்கள், மக்கள் நடமாட்டங்கள் என்பவற்றிலிருந்து, எச்சரிக்கைஒலி வாகனங்கள் உடைந்த குரலில்; எதிரொலிகளின்றி; சோகத்தின் உச்சியில் வீறிடும் சத்தம் போன்று; ஏதோவொன்று காதில் விழுகிறது.

இப்போது அறைக்குள் சர்க்கரைப் பாகின் மணம், வேர்க்கடலைகளை வறுக்கும் மணம், சீனர்களுடைய சூப்பின் மணம், தீயில் வாட்டிய இறைச்சிமணம்., புற்கள், மரியுவானா, ஹசீ£ஷ், மல்லிகை, தூசி, சாம்பிராணி குச்சிகளின் மணம், விற்பனைக்காக சட்டிகளில் நெருப்பைச் சுமந்தபடி வீதிகளில் அலைபவர்கள் ஏற்படுத்துகிற விறகுக் கரியின் மணம் என அனைத்தையும் நாசிக்குள் உணரமுடிகிறது. இந்நகரத்தின் மணமென்பது, இங்குள்ள குக்கிராமங்களிலும், காடுகளிலும் வீசுகிற மணத்திற்குச் சமம்.

(தொடரும்)

1. மதுரமொழி வலைத்தளத்திற்கும், திரு. மதுரபாரதிக்கும் நன்றிகள்

nakrish2003@yahoo.fr


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner