இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
 பெப்ருவரி 2008 இதழ் 97 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
தொடர்நாவல்!
காதலன் - 10 & 11!
- மார்கெரித் த்யூரா -
தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -

மார்கெரித் த்யூரா (1914-1996)
எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, 'காதலன்'(L'Amant - The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.

http://www.diplomatie.gouv.fr/label_france/ENGLISH/LETTRES/DURAS/duras.html

அத்தியாயம் -12

ஹெலென் லாகொனெல் நல்ல வளர்த்தி, ஆனால் அவள் ஓர் அசடு. அவளுடைய சரீரம் ஒரு சில பழங்களின் மேற்தோல்போல
அத்தனை மென்மையானது. சட்டென்று அதன் இருப்பை உணரமுடியாது. மிகைப்படுத்தி சொல்வதுபோல இருக்கிறதா? உண்மையும் அதுதான். பொறாமையில் அவளை எவரேனும் கொன்றாலும் ஆச்சரியமில்லை. அவளுடையக் கைகளைக் கொண்டே அவளுடைய கழுத்தை நெறிக்கலாம் என்பதைப்போன்ற வித்தியாசமான கனவுகளில் நம்மை ஆழ்த்தக்கூடியவள். தனது பலத்தை அறிந்திராத, தனது அருமை பெருமைகளை உணர்ந்திடாத- நினைத்துபார்க்காத, பிசையுங்களென்று கைகளையும், உண்ணென்று வாயையும் அழைக்கும், மிக
மென்மையான கோதுமை மா அவள். கடவுளைக்குறித்து மிக ஆழமாக அறிந்துணர்வதற்காக ஒவ்வொருநாளும் சீனர்கள் நகரத்திலிருந்த அறையொன்றிர்க்குச் செல்வதும், அங்கே எனது மார்பிரண்டும் ஒருவனால் உண்ணப்பட்டதில்லையா, அதுபோலவே எனக்கும் ஹெலேன் லாகொனெல், மார்பகங்களை உண்ண விருப்பம். சன்னமான கோதுமைமாவினாலான அவளுடைய மார்பகங்கள் உண்ணப்படவேண்டியவை.

ஹெலென் லாகொனெலிடம் கொண்ட தாபம் என்னை முடக்கிப் போட்டிருக்கிறது, உடல்மீதான இச்சையில் தவிக்கிறேன். இனி
ஒவ்வொரு இரவும் தவாறாமல் அவளையும் அங்கு அழைத்து போகவேண்டும், கண்களை மூடி, கலவியின் உச்சத்தில் கத்துவதில்
என்னை மறக்கவேண்டும். என்னை சந்தோஷபடுத்தியவனுக்கு, ஹெலெனைக் கொடுக்க விரும்பினேன், இப்போது அவள் முறை. என் கண் முன்னே, எனது இச்சைகளை அவள் நிறைவேற்றுவாள், என்னுடைய இடத்தில், அவள் இருந்துகொண்டு தன்னைத் தருவாள். அவளுடைய உடல் ஊடாக, அவளுடைய சரீரத்தின் வழியாகத்தான், அவன் தருகின்ற இன்பம் என்னைச் சேர்ந்தாகவேண்டும், அதுபோதும். பிறகென் உயிர் பிரிய சம்மதம்.

அவளுடைய உடலென்னவோ கொலென் பிரதேசத்து மனிதனுடல்போலத்தான் இருக்கிறது, ஆனால் அவளுடைய இருத்தல் எங்கும் பரவிக்கிடக்கிற சூரிய ஒளி, சூதுவாதற்றது- செய்யும் பாவனைகளில், விடும் கண்ணீரில், உள்ள குறைபாடுகளிள், வெளிப்படுத்தும் அறியாமைகளில், ஒவ்வொன்றிலும் தனதன்றி வேறொன்றை முன்னிலைப்படுத்தாதது. ஹெலென் லாகொனெல் யாரென்று
நினைக்கிறீர்கள், இன்னதென்று விவரிக்கவியலாதவகையில், ஆகக் கடுமையானதொரு பரவசத்தில் என்னைக் கொண்டுபோய் நிறுத்துகிற, சீன- கொலென் பிரதேசத்து விந்தை மனிதன் இருக்கிறானில்லையா, அவனுடையக் கூட்டத்தைச் சேர்ந்தவள்தான் இவளும்.

ஹெலென் லாகொனெல்லை மறக்கவில்லை. என் உடலை வதைத்த மனிதனையும் இன்றுவரை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். நான் புறப்பட்டபொழுது, அதாவது அவனைப் பிரிந்து வந்தபிறகுங்கூட, இரண்டாண்டுகாலம் ஆண் துணையின்றி இருந்திருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறதில்லையா? பிறருக்காக அல்ல. உண்மையில் எனக்கு நானே நேர்மையாக இருக்கவேண்டுமென்று ஏற்படுத்திக்கொண்ட ஒழுங்கு.

இன்னமுங்கூட அவர்களில் ஒருத்தியாக நான் இருக்கிறேன், நான் வாழ்ந்த இடமென்று சொன்னால் அதைத்தான் குறிப்பிடவேண்டும்.
அதனுடைய மலட்டுத் தன்மையில், மிருகத்தனமான அதன் போக்கில், அதன் அட்டூழியத்தில் ஒருவித பாதுகாப்பினை, அதாவது
எதிர்காலத்தில் நான் எழுதுவதற்குத் தேவையான நம்பகத் தன்மையை கொடுத்த இடம். எத்தனையோ இடங்களிருக்க, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை நினைவு கூறவைக்கும் இடம். மணிக்கணக்கில் கொலென் பிரதேசத்து ஜாகையில் இருந்திருக்கிறேன், ஒருபோதும் இருண்டுக் கிடந்ததில்லை எந்நேரமும் புத்தம்புது ஒளிவெள்ளத்தில் மூழ்கிக்கிடப்பதான பிரமை. மூச்சைத் திணறவைக்கும்
இடம்., மரணத்துடன் கைகுலுக்குமிடம், வன்முறைக்கான இடம், உடல்வலி, நம்பிக்கையின்மை, இழிவு என்று எதற்கும் அதை நினைவில் கொள்ளலாம், அதுதான் கொலென், நதியின் மறுபக்கத்தில் இருக்கிறது. அங்கே செல்ல நதி¨யைக் கடக்கவேண்டும் அவ்வளவுதான்.

ஹெலென் லாகொனெல் என்ன ஆனாளென்று எனக்குத் தெரியாது, இறந்துமிருக்கலாம். அதாவாது நான் பிரான்சு திரும்புவவதற்கு மிகவும் முன்பாக, உணவு விடுதியைவிட்டு முதலில் வெளியேறியவள் அவள். தலா என்ற ஊருக்குப் புறப்பட்டுச் சென்றாள். அங்கே அவளை வரச் சொன்னது அவளுடைய அம்மா. எனது ஞாபகக்குறிப்பின்படி, தனது திருமணத்திற்காக தலா சென்றிருக்கவேண்டும். பிரான்சிலிருந்து யாரேனும் புதிதாக வந்திருக்கவேண்டும், அந்நபரை அவள் சந்தித்திருக்கக் கூடும். ஒருவேளை ஹெலென் லாகொனெல்லைக் கட்டாயமாக
அவளுடைய அம்மா புறப்பட்டுவரச்சொன்னதின் அடிப்படையில் எனக்கேற்பட்ட ஊகத்தை உண்மையென்று நினைக்கிறேனோ என்னவோ?. எனது நினைவில் பிழையிருக்கவும் வாய்ப்புண்டு.

நான் சொல்லிக்கொண்டுவரும் உண்மைகளில் 'எப்படி, எதுவாக' எனபதெல்லாங்கூட அடங்கி இருக்கின்றன. ஆம். கஞ்சா புகைப்பதற்காக, வேலைக்கார பயன்களிடமும் அவன் திருடுகிறான். எங்கள் அம்மாவைத் திருடுகிறான். அலமாரிகளை அலசுகிறான். திருடுகிறான். சூதாடுகிறான். ஆந்த்ர்- தே-மேர்(Entre-Deux-Mers) என்ற இடத்தில் இறப்பதற்கு கொஞ்சம் முன்பாக, அப்பா வீடொன்றை வாங்கி இருந்தாள். எங்களுக்கென்று இருந்த ஒரே சொத்து. கடன்களை அடைக்கலாமென்று அம்மா அந்த வீட்டை விற்கிறாள். போதவில்லை. ஒவ்வொருமுறையும் அதுதான் நடந்திருக்கிறது. கூப்போல் சூதாட்ட விடுதி வாடிக்கையாளர்களுக்கு என்னை விற்கவும் முயற்சிக்கிறான். அவன் சாப்பிட்டானா, அவன் நன்றாய் தூங்கினானா, அவன் பெயர் சொல்லி அழைப்பதை காதில் வாங்கினானா, என்பதற்காகவே அம்மாவுக்கு உயிர்வாழ விருப்பம். ஆம்பூவாஸ் பக்கத்தில் அவனுக்கென்று வாங்கிய சொத்து, அவளது பத்தாண்டுகால சேமிப்பு. ஒரே இரவில் அதை அடைமானத்திற்கு வைத்தாயிற்று. வட்டி கட்டிகொண்டிருக்கிறாள். பிறகு, நான் இதற்கு முன்பு குறிப்பிட்டதுபோல அங்கிருந்த அத்தனை மரங்களும் கபளீகரம் செய்யப்பட்டன. அது நடப்பதற்கும் ஓர் இரவுதான் தேவைபட்டது. இறக்கும் தறுவாயிலிருந்த அம்மாவைத் திருடினான். அலமாரிகளைத் திறந்து எல்லாவற்றையும் அலசிக்கொண்டிருக்கிற ஒருவன், எப்படி மறைத்துவைத்திருந்தாலும் எங்கே வைத்திருந்தாலும், அது விரிப்புகளின் மடிப்புகளாக இருக்கட்டும், ரகசிய மறைவிடங்களாக இருக்கட்டும், மோப்பம் பிடித்துவிடுவான். திருமண உறுதிப்பாட்டுமோதிரங்கள்( எங்கள் வீட்டில் அவை எண்ணிக்கையில் அதிகம்), நகைகள், உணவுப் பொருட்கள் என்று எதையும் விட்டுவைப்பவனில்லை, திருடுகிறான். தோ, வேலைக்கார பையன்கள், எனது இளைய சகோதரனென்று பேதமின்றி திருடுவான். என்னிடத்தில் திருடியது அதிகம். எந்த நேரமும் அம்மாவின் உயிர்போகலாம் என்ற நிலைமையில் வீடெங்கும் இழவின் சாயல், வக்கிலோடு வந்து நிற்கிறான். மரணத் தறுவாயில் செய்யவேண்டியதாம், தள்ளிப்போடக்கூடாதாம், சொல்கிறான். 'எழுதப்படும் உயில் சட்டப்படி செல்லாது' என்று வக்கில் சொல்கிறார். என்னைப் பலிகொடுத்து, அவனுக்குச் சாதகமாக அம்மா நடந்துகொண்டதுண்டு. கேட்டால் நகைப்பீர்கள், நிறைய விஷயங்களில் எனக்கும் அவனுக்கும் பேதம்பார்த்திருக்கிறாள். அதன் விளவுகளை தெளிவாய் உணர்ந்தின் அடிப்படையில் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். உடன்படுவதாக எழுதி கையெழுத்து இடுகிறேன். ஒப்பதல் தந்தேன். "நன்றி" என்று எனது சகோதரன் உச்சரித்தபோது தலை தாழ்ந்திருந்தது. பொறுப்பானவன். மரணத்தறுவாயில் செய்யவேண்டியது எதையும் தள்ளிப்போடக்கூடாதில்லையா, கண்ணீர் சிந்துகிறான். பாரீஸ் நகர விடுதலைக்குப்பிறகு, மிதிப்(Midi) பகுதியில் முந்தைய அரசாங்கத்திற்கு துணைபோனவர்க¨ளையெல்லாம் புதிய அரசாங்கம் தேட ஆரம்பித்தது. எங்கே ஒளிவதென்று தெரியவில்லை, என்னைத் தேடிவருகிறான். எதையும் முழுவதுமாக, நான் தெரிந்துகொண்டவளில்லை, ஏதோ ஒரு ஆபத்திலிருந்து தப்ப நினைக்கிறான் என்பது உறுதி. மனிதர்களைk காட்டிக்கொடுத்திருக்கலாம், அதாவது யூதர்களைப் பற்றிய தகவலைச் சொல்லியிருக்கலாம். அவன் எதையும் செய்யக்கூடியவன். உங்கள் உயிரைவாங்கிய மறுகணம் அல்லது உங்கள் உதவிக் கட்டாயம் தேவை என்கிறபோதெல்லாம் நல்லவன், மிகுந்த நேசம் காட்டக்கூடியவன். எனது கணவரைக்கூட நாஜிகள் கைது செய்து, முகாமுkகென்று இரயிலேற்றப்பட்டார். அதற்காக மிகவும் வருந்துகிறான். மூன்று நாட்கள் எனது வீட்டில் தங்குகிறான். மறந்துபோனேன். வெளியிற்செல்கிறபோது பாதுகாப்புடன் பூட்டிவைக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கிருப்பதில்லை. அவன் தேடுகிறான். எனது கணவர் திரும்பவந்தால் உதவுமென்று அரிசி, மற்றும் சர்க்கரைக்கான கூப்பன்களை பத்திரமாக வைத்திருந்த நேரம். கையிற்கிடைக்க அவற்றை எடுத்துக்கொள்கிறான். பிறகு எனது அறையிலிருந்த ஒரு சிறிய அலமாரியையும் குடைகிறான். அதற்குப் பலனிருக்கிறது. எனது மொத்த சேமிப்பும் -ஐம்பதாயிரம் பிராங்- இப்போது அவன் கையில். ஒரே ஒரு பிராங்கைக் கூட விட்டுவைக்கவில்லை. திருடிய பொருட்களோடு எனது அப்பார்ட்மெண்ட்டிலிருந்து வெளியேறுகிறான். அவனை மறுமுறைபார்த்தபோது நான் வாய்திறக்கவில்லை. அவனுக்கு அது மிகவும் அவமானத்திற்குரியது, அதைபற்றிபேச என்னாலும் முடியாது. போலியான உயில் தயாரிப்பிற்குப் பிறகு, பதினான்காம் லூயி காலத்து கோட்டை என்று எங்களால் உருவகிக்கப்பட்ட சொத்தும் அநியாயவிலைக்குப் போனது. அம்மா இறக்குந் தறுவாயில் போலி உயில் தயாரித்து என்னை ஏமாற்றி கையொப்பம் வாங்கியதைப்போலவே, கோட்டைவிற்பனையிலும் நடந்துகொண்டான்.

அம்மா இறந்ததிலிருந்து தனிமனிதனாக அவன் வாழ்கிறான். அவனுக்கென்று நண்பர்களில்லை. சில நேரங்களில் "வேலை"க்கென்று சில பெண்களை அவன் உடன் வைத்திருந்தான், மோம்பர்ணாஸ் அதற்கு உகந்ததாக இருந்தது. அவர்கள் வேலை ஏதும் செய்யாமலும் இருந்தார்கள், குறைந்தபட்சம் ஆரம்பத்தில். சில வேளைகளில் ஆண்கள் சிலரையும் அவனுடன் கண்டிருக்கிறேன், அதற்கான ஊதியத்தை அவர்கள்தான் கொடுக்கவேண்டும். மிகக்கடுமையான தனிமையில் அவன் வாடினான் என்று சொல்லலாம்., வயதுக் கூடக்கூட அவனுடைய தனிமையின் வெளியும் வளர்ந்தது. அவனொரு போக்கிரி அவ்வளவுதான். பெரிய குற்றங்களென்று எதையும் செய்ததில்லை. சுற்றி இருப்பவர்களை பயமுறுத்தவேண்டும், அவனுக்கான எல்லை குறுகியது, அதைத் தாண்டிச் செல்ல அவன் நினைத்ததில்லை. அவனுடைய அசலான ராச்சியத்தை தொலைத்ததென்னவோ எங்களிடத்தில்தான். நீங்க நினைப்பதுபோல ஊரே பயப்படுப்படியான ரவுடி இல்லை, ஒரு குடும்பத்தை பயமுறுத்திய வம்பன், போக்கிரி, அலமாரிகளைக் குடைபவன், இரக்கமற்ற கொலைகாரன், வெட்கங்கெட்ட பிறவி. ஆதரவற்று, பிறர் தூற்றும்படியாக, அச்சத்துடன் வாழும் எல்லா போக்கிரிகளையும் போலவே அவனும் வாழ்ந்தான். ஆம் அவன் பயந்து வாழ்ந்தான். என் அம்மாவின் மரணத்திற்குப் பிறகு ஒரு புதிராக இருக்கிறான். உதாரணத்திற்கு தூர் நகர் காப்பி பாரில், அங்கு வேலை செய்யும் பையன்களோடும் (குதிரைகளில் பணங்கட்ட அவர்கள் வேண்டியிருந்தது) பாரின் பின்புறமிருந்த இடத்தில் சீட்டுக்கட்டு விளையாடும் ஒயின் குடியர்களிடமும் அவனுக்குச் சிநேகிதம் இருக்கிறது. இவனும் அவர்களில் ஒருவனாக மாறிக்கொண்டிருக்கிறான், நிறைய குடிக்கிறான், கண்கள் சிவந்திருக்கின்றன, வாய் கோணிக்கொண்டு போகிறது. தூர் நகரில் அவனுக்கென்று ஒன்றுமில்லை. இருந்த இரண்டு பெரிய அசையா சொத்துக்களும் கடனில் மூழ்கின. ஓராண்டுகாலம், பொருள்களைபோட்டு வைப்பதற்காகவென்று அம்மா ஒரு சிறிய இடத்தை வாங்கிப்போட்டிருந்தாள், அங்கே தங்கிக்கொள்கிறான். ஒருவருடகாலம் சாய்வு நாற்காலியொன்றில் அமர்ந்தபடி தூங்கிக் கழிக்கிறான். போனால் போகிறதென்று வீட்டில் அனுமதிக்கிறோம், ஒரு வருடம் எங்களோடு இருக்கிறான், பிறகு வெளியில் தள்ளி
கதவைச் சாத்துகிறோம்.

அத்தியாயம் -13

அடைமானத்தில் இருந்த சொத்தை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் ஓராண்டுகாலம் அவன் வழியில் முயற்சித்தான். அம்மா பாதுகாத்துவைத்திருந்த பொருட்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகச் சூதாட்டத்தில் தொலைந்தன: வெண்கலத்தாலான புத்தர் சிலைகள், பித்தளை பொருட்கள், கட்டில்கள், அலமாரிகள், விரிப்புகள்... என்று சொல்லிக்கொண்டுபோகலாம். இனி சூதாட ஒன்றுமில்லை என்று
ஒருநாள் ஆனது. தோளில் ஒரே ஒரு கோட் கிடந்தது, விரிப்போ, போர்வையோ வேறு துணிகள் கூட இல்லை. ஒற்றை மனிதனாக அவன் மாத்திரம் இருக்கிறான். அடுத்த ஒருவருடத்திற்கு யாருமற்ற அநாதையாகிறான். கதவுகள் அடைக்கப்படுகின்றன. பாரீஸிலிருந்த ஒன்றுவிட்ட சகோதரனுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதுகிறான். அவர்கள் வீட்டில் மேல் மாடியில், அந்தக்காலத்தில் வேலைக்காரர்களின் உபயோகத்துக்கென இருந்த அறை, காலியாக இருக்க இவனுக்கு ஒதுக்கினார்கள். ஐம்பதுக்கு கூடுதலான வயதில் முதன்முறையாக அவனுக்கென்று வேலையும் கிடைக்கிறது, அவன் வாழ்க்கையிற் தொட்ட முதல் ஊதியம், கடல் தொடர்பான காப்புறுதி நிறுவனமொன்றில் ஏவலர் பணி. பதினைந்து ஆண்டுகள் அங்கே இருந்தான் என நினைக்கிறேன். அதன் பிறகு மருத்துவமனையில் சிலகாலம் இருந்தான். அங்கே இறக்கவில்லை. அவனுடைய அறையில் இறந்துபோனான்.

என் அம்மா, தனது மூத்தமகனைக் குறித்து பேசுவது குறைவு. அவனை பற்றிய புகார்களை அவள் சொன்னதில்லை. வீட்டு அலமாரிகளை குடைபவனைக் குறித்து ஒருவரிடமும் பேசியதில்லை. அவற்றையெல்லாம் குற்றமென்று கருதிய தாய்க்குலத்தின் ஆதரவில் இருந்தவன் அவன். அவற்றை மறைத்துவைக்க மிகவும் பாடுபட்டாள். தான் புரிந்துகொண்ட அளவிற்கு தனது மகனைப் பரிந்துவைத்திராத பிறரிடத்தில் அவனைப்பற்றிபேசுவது அறிவுடமை ஆகாதென்று அவள் நினைத்திருக்கக்கூடும். தனது மகனைப் பற்றி பேசுவதற்குரிய ஒரே நபர் கடவுள் என்பதில் தீர்மானமாக இருந்தாள். அவளுக்குக்கென்று கவைக்குதவாத சிலபுலம்பல்கள் இருந்தன, அதாவது அவன் மட்டும் நினைத்திருந்தால், மூன்று பிள்ளைகளில் அதிபுத்திசாலியாக இருந்திருக்கலாம். மிகப் பெரிய கலைஞனாக வந்திருப்பான், வியக்கத்தக்கவனாக விளக்கியிருப்பான் என்றெல்லாம் சொல்லித் திரிவாள். அவனும் தனது தரப்பில் அவள்மீது அன்புள்ளவனாக நடந்துகொண்டான். எங்கள் மூவரில், அம்மாவை அதிகம் நேசித்தவனென்றால் அது அவன்தான். அவளை இனி இல்லையென்று நன்கு புரிந்துவைத்திருந்தவனும் அவன் ஒருவன்தான். ஒர் ஆண்பிள்ளையிடத்தில் அதனை எதிர்பார்க்கலாம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது என்றவள், அந்த அளவிற்கு ஆழமான அன்பினை, ஓர் உள்ளுணர்வை அவன்மீது வைத்திருந்தாள்.

ஒருமுறை இருவரும் சந்திக்க நேர்ந்தது. இறந்துபோன சகோதரனைக் குறித்து பேச்சுவந்தது. அவன்: " நம்முடைய தம்பி போலோவுக்கு நேர்ந்தது கொடூரமான மரணம், எத்தனை பயங்கரம்!" என்றான். கணத்தில், எங்கள் உறவின் சாட்சியாக, காட்சியொன்று கண்முன்னே விரிகிறது: சாடெக்கில் சாப்பிடும் காட்சி, உணவு உட்கொள்ளூம் அறையில் நாங்கள் மூவருமாக மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்களுடய வயது அப்போது பதினெட்டும் பதினேழுமாக இருந்தது. அம்மா எங்களுடனில்லை. நானும், இளைய சகோதரனும் உணவருந்தப் பார்த்துக்கொண்டிருந்தவன், தனது கையிலிருந்த முற்கரண்டியை வைக்கிறான். எனது இளைய சகோதரனை மாத்திரம் வெகு நேரம் அவதானிக்கிறான். சட்டென்று ஆனால் மிகவும் நிதானமாக, நாகரீகமற்ற சொற்களை உபயோகித்து பேசுகிறான். பேச்சு சாப்பாட்டைப் பற்றி இருந்தது. உணவென்றால் அளவாய் சாப்பிடவேண்டும், இப்படிக் கொட்டிக் கொள்ளக்கூடாது என்கிறான். என் இளைய சகோதரனிடத்திலிருந்து பதிலேதுமில்லை. அவனது கவனம் உணவில் இருக்கிறது; தொடர்ந்து," இருக்கிற பெரிய இறைச்சி துண்டுகளெல்லாம் யாருக்கென்று நினைக்கிறாய், எனக்கு, அதை மறரந்திடாதே", என்கிறான். உடனே நான் குறுக்கிட்டு, "எதற்காக உனக்கு மட்டும்? எனக் கேட்கிறேன். அதற்கு அவனிடத்தில், "அது அப்படித்தான்", என்று பதில் வருகிறது. கோபத்தில் நான், " நீ செத்தொழியணும்", அதுதான் என் விருப்பம் என்கிறேன். அதற்குப் பிறகு எனக்குச் சாப்பிட விருப்பமில்லை., எனது இளைய சகோதரனும் எழுந்துகொண்டான். அவன் கைவிரல்களை மடக்கியபடி காத்திருக்கிறான். இளைய சகோதரன் வாயைத் திறந்து ஒரே ஒரு வார்த்தை சொன்னாற்கூடப் போதும், அவனது மூடிய கை, இளைய சகோதரனுடைய முகத்தில் இறங்க மேசைக்குமேல் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் அவன் வாய் திறக்கவில்லை. முகம் வெளுத்துப் போனது, இமைமயிர்களுக்கிடையில் அழுகைக்கான ஆரம்பம்.

அவன் இறந்த நாள் சோகமானது, ஏப்ரல் மாதம், ஒரு வசந்தகாலத்தில் நடந்தது. எனக்கு தொலைபேசியில் செய்தி கிடைத்தது: 'அவனுடைய அறையில் தரையில் இறந்து கிடக்கிறான்', வேறு வார்த்தைகள் இல்லை. அவனுடைய வரலாற்றின் கடைசி அத்தியாத்தில் மரணம் சற்று முன்பாகச் சம்பவித்துவிட்டதென நினைக்கிறேன். அவன் உயிரோடிருந்தபோதே, அதாவது எனது இளைய சகோதரன் என்றைக்கு இறந்தானோ அன்றையதினமே மரணத்தைத் தயார்படுத்தியாயிற்று, காலத்தை மேலும் கடத்தக்கூடதென்பதற்பாக இறந்திருக்கிறான்.' 'எல்லாம் முடிந்தது' என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

அவனை தன்னோடு புதைக்கவேண்டுமென்பது அவளுடைய ஆசை. அந்த இடத்தைப்பற்றியோ, அந்தக் கல்லறை பற்றியோ எனக்குத் தகவல்களில்லை, ஆனால் 'லுவார்' என்று ஞாபகம். ஆக, விருப்பப்படி ஒரே கல்லறையில் அங்குதானிருக்கிறார்கள். அவர்கள் இரண்டுபேர்மாத்திரம், அப்படித்தான் சொல்லவேண்டும். நம்மை போதுபோதுமென்று சொல்லவைக்கிற கோலாகலக்காட்சி.

வருடம் முழுக்க அந்தி சாய்வது மட்டும் குறித்த நேரத்தில் நடந்தது. வருவதே தெரியாது. சூரியன் சட்டென்று விழுந்ததுபோல இருக்கும். மழைக்காலங்களில், வாரக்கணக்கில், நிலவொளிகூட புகமுடியாதபடி, சீரான மேகமூட்டம் வானமெங்கும் பரவி ஆக்ரமித்திருக்க, அதனைப் பார்க்கவே முடியாது. அதற்கு நேர்மாறாக வறட்சிகாலத்தில் ஆகாயம் நிர்வாணமாக இருந்தது, முழுமையாக தன்னைக் காட்டிக்கொண்டது. அந்த நாட்களில், நிலவில்லாத நாட்களிலுங்கூட இரவுகள் பிரகாசமாகத் தெரிய, அதற்கு ஈடாக நிழல்கள் தரை, தண்ணீர், சாலைகள், சுவர்கள் என்று எங்கும் படிந்துக்கிடந்தன.

பகற்காலத்து வேதனைகள் இன்றைக்கும் நினைவில் இருக்கின்றன. சூரியஒளி, வண்ணங்களை சோபை இழக்கச் செய்தது, காலிலிட்டு மிதிக்க அவை நொறுங்கின. இரவுவேளைகளில், எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, ஆகாயத்தைக்காட்டிலும், அதன் நீலம் வெகுதூரத்தில், அத்தனைப் படிமங்களுக்கும் பின்னே, உலகின் பின்புலத்தினை போர்த்தி பாதுகாத்தபடி இருந்தது. வானம், எனக்கு நீலத்தைக் கடக்கிற நிர்மலமான ஒளித்தடம், அத்தனை வண்ணங்களுக்கும் மேலாக நடைபெறுகிற கசப்பான சங்கமம். வின்லோனில் இருந்த நாட்களில், சோதனையான நேரங்களில், அம்மா குதிரைவண்டியில் கிராமப்புறங்கபகுதிக்குச் சென்று, வறட்சிகால இரவை பார்ப்பது வழக்கம். அவ்வாறான இரவுகளின் அனுபவங்களைப் பெற்றதும், அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த பெண்மணியை அம்மாவாகபெற்றதும் அரியதொரு வாய்ப்பு. நிர்மலமான திரையில், அசைவற்ற, அமைதியான சுழலில், விண்ணிலிருந்து ஒளிஅருவி விழும். வெளியெங்கும் நிறைந்திருக்கும் நீலவண்ணத்தை கையில் ஏந்துவோம். நீ..லம். பரவிக்கிடக்கும் பிரகாசமான ஒளிவெள்ளத்தில் ஆகாயத்தைபார்க்க, அதனிடத்தில் ஒருவித அமைதியற்றத் தன்மையினை, படபடபப்பினை உணரலாம். பார்க்குமிடமெல்லாம் ஒளிவெள்ளம். நதியோரங்களில் ஆரம்பித்து, எங்கள் கண்ணுக்கெட்டியதூரம் எங்கும் பிரகாசம். ஒவ்வொரு இரவும் வித்தியாசமானது, அவை ஒவ்வொன்றும் ஒரு கால அளவீடு. இரவுகள் எழுப்பும் சத்தமிருக்கிறதே அது நாட்டுப்புறங்களில் திரிகிற நாய்களுடைய குரைப்பாக இருந்தது. ஒருவித புதிர்நிலை கர்ஜனை. இரவின் வெளியும், காலமும் முழுவதுமாக தீரும்வரை, இடைவிடாமற் கிராமங்கள் தோறும் அவை முறைவைத்து குரைத்துக்கொள்ளும்.

இலவங்கம் மற்றும் ஆப்பிள்மர நிழல்களின் காரணமாக கறுப்புமை வழியும் தடங்கள். ஆடுதல் அசைதலற்ற சலவைக்கல்போல தோட்டம். வீடுகூட, ஏதோ கல்லறையை நினைவுபடுத்தும்படி இருக்கும். என் கரத்தைப் பிடித்தபடி நடந்துவந்த என் இளைய சகோதரன் வெறிச்சோடிகிடந்த வீதிக்காய் திறந்துகிடந்த வெளிக்கதவை ஒருவித உந்துதலோடு பிரமை பிடித்தவன்போல பார்க்கிறான்.

அத்தியாயம் -14

ஒருமுறை, எனது காதலனுடைய கறுப்புவண்ண கார் பள்ளிக்கெதிரே வந்துநின்றபோது பார்க்கிறேன், அதில் அவனுடைய டிரைவர் மட்டுமே இருக்கிறான். தகப்பனாருக்கு சுகவீனமென்றும் அதனால் இளைஞன் சடெக்வரை சென்றுள்ளதாகவும் அறிகிறேன். அதுவரை சைகோனில் தங்கி, விடுதியிலிருந்து பள்ளிக்குக் கொண்டுபோய் விடவும், பிறகு அங்கிருந்து விடுதிக்கு அழைத்துவரவும் டிரைவருக்கு உத்தரவுபிறப்பிக்கபட்டிருக்கிறது; அடுத்த ஒரு சில நாட்களிலேயே சின்ன முதலாளியைக் காரில் பழையபடி பார்க்க முடிகிறது. கறுப்பு வாகனத்தின் பின்னிருக்கையில் வழக்கம்போல அமர்த்திருக்கிறான், பார்வைகளை தவிர்க்க நினைத்ததுபோல முகத்தைத் திரும்பிக்கொள்கிறான், காரணம் வேறொன்றுமில்லை, அவனுக்கு வழக்கம்போல அச்சம். இருவரும் தழுவிக்கொள்கிறோம், வார்த்தைகளேதுமில்லை, பள்ளிக்கெதிரே இருக்கிறோம் என்பதைக்கூட மறந்தவர்களாய் முத்தமிட்டுக்கொள்கிறோம், முத்தமிடுகையில் அழுகிறான். தகப்பனாருக்கு ஆயுள் கெட்டி, அத்தனை சீக்கிரம் இறப்பதாக இல்லை. எஞ்சியிருந்த ஒரே நம்பிக்கையும் இல்லையென்றாகிவிட்டது. அவரிடம் கேட்டிருக்கிறான். எனது சரீரத்தோடு இன்னும் கொஞ்ச காலம் இணைந்திருக்க தயவுசெய்யவேண்டுமென மன்றாடியிருக்கிறான், அவரிடத்தில் தான் என்ன சொல்லவருகிறேன் என்பதைப் கட்டாயம் புரிந்துகொள்ளவேண்டும் என்றிருக்கிறான், அம்மனிதருக்கும் தனது நீண்ட நாள் உயிர்வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதுபோன்ற காதல் அனுபவம் கிட்டியிருக்கவேண்டும், இல்லையென்று சொல்லமுடியாது, இப்போது அவருடைய மகனுக்கு நேர்ந்திருக்கிறது, மறுப்பேதுமின்றி அப்படியான வாய்ப்பொன்றினை அவனுக்கும் அனுமதிக்கவேண்டும் அதுதான் முறை, அதாவது அவருக்கு நேர்ந்த அதே அனுபவத்தை- பைத்தியக்காரத்தனத்தை- வெள்ளையரின சிறுமி பிரான்சுக்கு திரும்பும்வரை, அவள் மீதான முட்டாள்தனமான காதலைத் தொடர்வதற்கான கால அவகாசம் அநேகமாக இன்னும் ஓராண்டுகாலம் அவனுக்கு வேண்டும், அந்த ஓராண்டுகாலத்திற்கு அவளோடுதானிருப்பான், தடுக்கக்கூடாது, அவனது காதலும் ஆகப் புதிதாய், மிகுந்த வலி¨கொண்டதாய், ஒவ்வொருதடவையும் மிகுந்த ஆக்ரோஷமான அநுபவத்திற்குரியதாய் இருக்கிறது. அவன் சரீரத்தைத்பிரிவதென்பது மிகுந்த வேதனைதரக்கூடியதாக இருக்கிறது இனி அப்படியான வாய்ப்பு அமையாதென்பதை அவனும் சரி அவனது தகப்பனும் சரி அறிந்தே இருந்தார்கள். 'நீ செத்துத் தொலைந்தால் நிம்மதி'யென' அவனது தகப்பனார் பலமுறை வருந்தியதாகவும் அறிகிறேன்.

ஜாடிகளிலிருந்த புதுத்தண்ணீரை உபயோகித்து ஒன்றாக இருவரும் குளித்தோம், இறுகத் தழுவினோம், நிரந்தரப் பிரிவென்பதுபோல தழுவுகிறபோது மீண்டும் அழுதோம்., எங்கள் தழுவலில் வேதனைகளே மிஞ்சின. பிறகு, எனது முறை நான் பேசவேண்டும் பேசினேன், எதற்கும் வருந்தாதே என்றேன். 'நான் ஓரிடமாக இருக்க முடியாதவள், எங்கு வேண்டுமானாலும் புறப்பட்டுப்போகலாம்', என்றெல்லாம் ஏற்கனவே அவனிடத்தில் பல முறை நான் கூறியிருந்தத நினைவுபடுத்தினேன். எல்லாம் முடிந்தது, இனி அதைபற்றியெல்லாம் நினைவு படுத்தி என்ன ஆகப்போகிறது, என்றான் அவன். பிறகென்ன? எனக்கென்னவோ உனது தந்தையின் முடிவு சரியாகப் படுகிறதென்கிறேன். அவனோடு இங்கேயே தங்குவதென்பது என்னால் ஆகாது, அதையும் தெரிவித்தேன், ஆனால் அதற்கான காரணத்தைச் சொல்ல எனக்கு இயலவில்லை.

வேன்லொங்கின் நீண்ட வீதிகளிலொன்று, மீகாங் நதிக்கரையில் முடிந்திருந்தது. இரவு வேளைகளில் வெறிச்சோடிகிடக்கும் சாலைகளில் அதுவுமொன்று.. அன்றிரவும் வழக்கம்போல, மின்சாரம் தடைபட்டு, வீதி இருளில் மூழ்கிக் கிடக்கிறது. எல்லாவற்றிர்க்கும் அதுதான் ஆரம்பம்.. கேட் பின்புறம் மூடிக்கொள்ள சாலையில் கால்களை வைக்கிறேன், விளக்குகள் அணைகின்றன. ஓடுகிறேன், இருளென்றால் எனக்கு அப்படியொரு பயம் அதனால் ஓடுகிறேன். ஓட்டத்தின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அப்போதுதான் அதை உணர்கிறேன், யாரோ என்பின்னால் ஓடிவருகிறார்கள், ஆமாம், என்னால் உறுதியாகச் சொல்லமுடியும், யாரோ ஒருவர், நான் ஓடிவந்தப் பாதையைலிருந்து விலகாமல் என்பின்னால் ஓடிவருகிறார். நிற்க பயந்து, ஓடியபடி திரும்புகிறேன், பார்க்கிறேன். நல்ல உயரமான நடுத்தரவயது பெண்மணி, ஆனால் அநியாயத்திற்கு மெலிந்திருந்தாள் ஏதோ பிணத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறது. வெற்றுகால்கள். என்னை எப்படியும் பிடித்துவிடவேண்டும் என்பதுபோல ஓடிவருகிறாள். அவள் யாரென்று புரிந்துகொண்டேன். எங்கள் முகாம் பக்கம் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். வேன்லொங்கைச் சேர்ந்த பைத்தியக்காரி. அவள் பேசக் கேட்டதில்லை, இதுதான் முதல் முறை. இரவு நேரங்களில்மட்டுமே அவள் பேசுவாள் என்று கேள்வி, பகல்நேரங்களில், வீதியிலேயே உறக்கிக்கிடப்பாள். அதோ அந்தத் தோட்டத்துக்கு எதிரில் உறங்கப் பார்த்திருக்கிறேன். எனக்குப் புரியாத மொழியொன்றில் கூச்சலிட்டபடி ஓடி வருகிறாள். உதவிக்கு யாரையாவது கூப்பிடலாமா என்றால், அதற்கும் துணிச்சலில்லை, அப்படியொரு பயம். எனக்கு அப்போது எட்டு வயது இருக்கவேண்டும். அவளது பேய்ச்சிரிப்பும், சந்தோஷக் கூச்சலும் காதில் ஒலிக்கிறது, சந்தேகமில்லை, அவற்றுக்கு நான்தான் காரணம். எனது பயமும் ஓட்டமும், அவளுக்கு விளையாட்டாய் தெரிகிறது. அச்சமே பிரதானமாக இருப்பதுபோல நினைவு. எனது புரிதல், எனது பலம் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட நினைவென்று சொல்வதுகூட முழுமையானதாகாது. அப்பெண்மணி என்னை இலேசாகத் தொட்டிருந்தாலுங்கூட, ஒரு பிணத்தைப்போல என் பங்கிற்கு பைத்தியகாரத்தனமாய் அவளைத் தொட்டுவிளையாடியிருப்பேனென்று உறுதியாகச் சொல்லமுடியும், அந்தவகையில், இன்றைக்கும் அந்நினைவு சிதைவுறாமல் முழுமையாக என்னிடத்தில் இருக்கிறது. அருகிகிலிருந்த தோட்டத்துக்குள் புகுந்து ஓடி தோட்டத்துக்குச் சொந்தமான வீட்டின் படிகளைப்பிடித்து மேலே ஏறியதும், அந்த வீட்டின் நுழைவாயிலில் சுருண்டு விழுந்ததும் ஞாபகத்தில் இருக்கிறது. அதன் பிறகு என்ன நடந்ததென்று சொல்லத்தெரியாமலேயே நாட்கள் பல கழிந்தன.

எனது வாழ்க்கையின் கடைசிகாலத்தில் மறுபடியும் அப்படியொரு அச்சத்தினை நான் சந்திக்க நேர்கிறது. அது அம்மாவுடயை உடல்நிலை சீர்குலைந்திருந்த நாட்களில் ஏற்பட்டது. அவளது உடல் நிலைகுறித்தோ, அதன் காரணமாக அவளது பிள்ளைகளுக்கும் அவளுக்கும் ஏற்படவிருந்த பிரிவினைக்குறித்தோ இன்றைக்கும் நினைவில்லை. அம்மாவுக்கு ஏதேனும் நடந்தால் என்ன ஆகும், என்பதற்காக அவளது உடல்நிலையைப்பற்றி அன்றைக்கு தெரிந்துகொள்வது அவசியமென்று நினைக்கிறேன், அதுவும் தவிர அவளுடைய அன்றைய உடல் நிலையைக்குறித்து அபிப்ராயம் சொல்ல எனது சகோதரர்களுக்கும் போதாது.

நிரந்தரமாக நாங்கள் பிரிவதற்கு ஒரு சில மாதங்களே இருந்த காலம், பின்னிரவு நேரம், சைகோன் நகரத்தில், டெஸ்ட்டார் தெருவிலிருந்த எங்கள் வீட்டு வெளிதளத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறோம். தோ வும் எங்களோடு இருந்தாள். நான் அம்மாவைப் பார்க்கிறேன், மிகுந்த சிரமத்திற்குப்பிறகே அவளை அடையாளம் காண முடிந்தது. ஆனால் அடுத்தகணம், சட்டென்று, குழம்பிப்போகிறேன், அவள்தானா என்ற சந்தேகம், மறுகணம் என் அருகில், சற்றுமுன்புவரை அம்மா இருந்த இடத்தில் வேறொரு பெண்மணி. ஆனால் அவள் என் அம்மா அல்ல, சாடையில் அவளைபோல தோற்றமிருந்தாலும், ஒருபோதும் அவளாக இருந்தவளல்ல, இவள் சுகவீனமுற்றிருந்தாள். பார்வை பூங்காவின் திசைக்காய் இருந்தது. உடனடியாக நிகழவிருக்கும் சம்பவமொன்றை எதிர்பார்த்ததொரு பார்வை, அதை ஊகிக்க இயலாதவளாக நான் இருந்தேன். அம்மாவின் தோற்றத்திலும், பார்வையிலும் இளமையைக்காணலாம் , அடுத்தவர் அறியக்கூடாதென்பதுபோல வழக்கமாகப் பதுக்கிவைக்கும் சந்தோஷமும் உண்டு, மொத்தத்தில் அவள் தேவதை. தோ அருகில்தானிருந்தாள். எனினும், அவளுக்கு நான் கண்ட எதுவும் கண்களில்படவில்லை போலிருக்கிறது. அன்றைக்கு என் கண்களில் பட்ட பீடையிடத்தில், அம்மாவுக்கென்று நான் வர்ணித்த இளமையின் சாயலோ, தோற்றமோ, பிறர் அறியா சந்தோஷமோ இல்லை. எனக்கு நேர்ந்த இந்த அனுபவம், அநேகமாக அம்மா அமரும் இடத்தில் அவளும் வந்தமர்ந்த அதேநேரத்தில் ஏற்பட்டிருக்கலாம்., தவிர அம்மாவன்றி வேறொரு பெண்மணி, அம்மாவின் சாயலில் இருக்கமுடியாதென்றும் தெரியும். வேறொருவரால் நிரப்பமுடியாத அந்த அடையாளம் திடீரென்று எங்கோ தொலைந்துபோனது, அதை மீட்கும் வகையின்றி நானிருந்தேன், அவள் மீண்டும் எழுந்து வருகிறாள். அக்காட்சியைத் தக்கவைத்துகொள்வதற்கான வழிதெரியவில்லை. பைத்தியகாரிபோலானேன், கத்தி ஊரைகூட்டவேண்டும் போலிருக்கிறது, ஓலமிட்டேன், குரல் பலவீனமாய் ஒலிக்கிறது, விவரித்த அத்தனைக் காட்சியும் பனிப்பாளமாய் பரவிக்கிடக்க, அதில் பிணம்போல் உறைந்து கிடக்கிறேன், பனிப்பாளங்களை உடைத்து என்னை மீட்க யாரேனும் வரமாட்டார்களாவென்று அபயக் குரல் எழுப்பினேன்.
அம்மா திரும்பவும் வந்தாள்.

நகரத்திலிருந்த அத்தனைபேரையும் அந்தப் பிச்சைக்காரியாக மாற்றினேன், நகரத்தில், வயற்காடுகளில், சியாம் நதியை ஒட்டிய பாதைகளில், மீகாங் நதிக்கரைகளில் கண்ட பிச்சைகாரிகளெயெல்லாம் அவளாக மாறிப்போனார்கள். என்னை அச்சுறுத்தும் எவரும் அவள்தான், அப்படித்தான் உருவெடுத்தார்கள். எங்கிருந்தோவெல்லாம் வருகிறாள். கல்கத்தாவில் காணக்கூடியவள், அங்கிருந்தே வந்திருக்கவேண்டும். எங்கள் பள்ளிவிளையாட்டுத் திடலிலிருந்த ஆப்பிள் மற்றும் இலவங்க மர நிழலில் எந்நேரமும் உறங்கிக்கிடந்தாள். அந்நேரங்களில் அவள் அருகிலிருக்கும் அம்மா புழுக்கள் தின்ற, ஈக்கள் மொய்க்கும் அப்பெண்மணியின் பாதங்களுக்கு சிசுருட்ஷை பண்ணுகிறாள்

அவளருகிலேயே கதையின் நாயகியான சிறுமி, கடந்த இரண்டாயிரம் கி.மீட்டர்தூரம் அவளை சுமந்து வந்திருக்கிறாள். இனி அச்சிறுமி அவளுக்குவேண்டியதில்லை, அவளைத் தானம் செய்கிறாள், இந்தாப் பிடி, வாங்கிக்கொள். எனக்கு பிள்ளைகளில்லை, அப்படிச் சொல்லிக்கொண்டு எவரும் கண்ணிற்படக்கூடாது, செத்தொழிந்தவர்கள் அல்லது வேண்டாமென்று தூக்கி எறியப்பட்டவர்கள், வாழ்க்கையின் இறுதியில் பிண்டமாகிப்போகிறவர்கள். ஆப்பிள், இலவங்க மரநிழலில் உறங்கும் அவள் இன்னும் உயிரோடுதனிருக்கிறாள், அவளை அத்தனை சீக்கிரம் மரணம் கொண்டுபோகாது, ஆயுள் கெட்டி. ஆனால் பின்னல்வேலைபாடுகொண்ட கவுண் அணிந்த அவள் இறப்பாள், அது உறுதி. அவள் அழவும் நேரிடும்.

பாதையை ஒட்டியிருந்த நெல்வயல்களின் வரப்புகளில் அவளை பார்க்கமுடிகிறது, கூச்சலிடுகிறாள், தொண்டை கிழிய சிரிக்கிறாள், இறந்தவர்களை எழுப்ப நினைக்கிற பலவந்தச் சிரிப்பு, குழந்தைகளின் சிரிப்பினைக்கேட்டு பழகிய எவரையும் எழுப்பும் சிரிப்பு. நாட்கணக்கில் பங்களாவுக்கு முன்பாக நிற்கிறாள், பங்களாவுக்குள் வெள்ளைத்தோல் மனிதர்கள், அவர்கள் பிச்சைகாரர்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பதைப் பார்த்த ஞாபகம். பிறகு ஒரு தடவை, அதிகாலை நேரம், கண்விழித்தவள் அவள் பாட்டுக்கு நடக்கிறாள். ஒரு நாள் அப்படித்தான் காரணமின்றி புறப்பட்டுவிட்டாள், மலையைத் தாண்டினாள், பிறகு காடுகள் அதையும் கடக்கிறாள். சியாம் நதி அணையொட்டியிருந்த பாதையைத் தொடர்ந்து ஓடுகிறாள். சமவெளியின் மறுபக்கமிருக்கும், மஞ்சள் அல்லது பச்சைநிற வானத்தை பார்க்கும் ஆவலாக இருக்கலாம், கடந்து செல்கிறாள். முடிவினை நெருங்கிவிட்டவள்போல இறங்கி கடலிருக்கும் திசைக்காய் நடக்கிறாள். தனது மெல்லிய நடையினை எட்டிவைத்து, நீண்டுச் சரிந்திருந்த பாதையூடாக காட்டினுள் புகுந்து செல்கிறாள், நடக்கிறாள், வெகுதூரம் நடக்கிறாள். துர்நாற்ரம் வீசும் காடு, வெப்பம் அனலாய்க் கொதிக்கிறது. கடற் திசையிலிருந்து வீசும் உப்பங்காற்றுகூட இல்லை. காது செவிடுபடுபடியான கொசுக்களின் ரீங்காரம், மரித்த குழந்தைகள், விடாமற் பெய்யும் மழை. ஆ, கழிமுகம் தெரிகிறது, செழிப்பான நிலப்பகுதி.. வெறெங்கும் இவ்வளவு பெரிய டெல்டா பிரதேசத்தைக் கண்டதில்லை. வணடல் மண் பிரதேசம். சிட்டகாங் வரைச் நீள்கிறது. பாதைகள், காடுகள், தேயிலைத் தோட்டத்து ஒற்றை வழிபாதைகள், சிவப்பு நிற சூரியன்கள் என எல்லாவற்றையும் கடந்தாயிற்று, இனி டெல்டாவில் இறங்கி நடக்கவேண்டும். எதிர்ப்படுவதையெல்லாம் வாரிசுருட்டியபடி, கிழக்கே வெகுதூரத்தில் முடியும் சூராவளியின் திசையைக் குறிவைத்து நடக்கிறாள். அவளும் கடலும் எதிரெதிராக நிற்கிற நாளும் வரக்கூடும். ஓலமிடுகிறாள், பறவைகலெழுப்பும் விநோதமான ஒருவகை கிறீச்சிட்ட குரலில் சிரிக்கிறாள். இவள் சிரிப்பின்காரணமாக பாய்மரப்படகொன்று சிட்டகாங்கில் இவளை நெருங்குகிறது. படகிலிருந்த மீனவர்கள், அழைத்து படகில் ஏற்றிக்கொள்கிறார்கள், அவர்களுடன் சேர்ந்து வங்காள விரிகுடாவை இப்போது கடக்கிறாள்

கல்கத்தாவைச் சேர்ந்த புற நகர்பகுதி, குப்பைகள் மலைபோல குவிந்துகிடக்க அங்கே அவளை மறுபடியும் பார்க்கிறோம். நொடியில் மறைந்துபோகிறாள். மீண்டும் கண்ணிற்படுகிறாள், இம்முறை அவளை கல்கத்தாவிலுள்ள பிரெஞ்சு தூதுவர் அலுவலகத்தின் பின்புறம் பார்க்கிறோம். பூங்காவொன்றில் படுத்திருக்கிறாள். முகத்தில் தனது தீராபசியை ஆற்றிக்கொண்ட நிம்மதி. இரவு முழுக்க அங்கேயே இருக்கிறாள், சூரியன் உதிக்கிற நேரத்தில் கங்கைக்கரையில் நிற்கிறாள். அவளிடத்தில் இன்னமும் சிரிப்பும், எள்ளலும் இருக்கின்றன. அங்கேயே தங்கிக்கொள்கிறாள், இங்கே உண்பதும் உறங்குவதுமாக இருக்கிறாள், அமைதியான இரவுவேளைகலை ரோஸ்-பே பூங்காவில் கழிக்கிறாள்.

ஒரு நாள் எதேச்சையாக நான் அங்கு வருகிறேன், எனக்கு அப்போது பதினேழு வயது. ஆங்கிலேயர்கள் குடியிருக்கும் பகுதி, வெளிநாட்டு தூதுவர் அலுவலகங்களுக்கான குட்டிப்பூங்காக்கள், வடகிழக்கு பருவக்காற்று மும்முரத்துடன் இயங்கும் காலம். டென்னிஸ் விளையாட ஆட்களில்லை. கங்கைக்கரையெங்கும் தொழுநோயாளிகள் சிரித்தபடி இருக்கிறார்கள். வழக்கமாக நாங்கள் பயணிக்கிற கப்பல் பழுந்தடைந்ததால், கல்கத்தாவில் இற,ங்கிக்கொள்ளவேண்டியிருந்தது. நேரத்தைப் போக்க நகரத்தை சுற்றிப்பார்க்கிறோம். மறுநாள் மாலை அங்கிருந்து புறப்படுகிறோம்.

அத்தியாயம் - 15

பதினைந்தரை வருடங்கள். சாடெக் முகாமில் மளமளவென்று காரியங்கள் நடந்தன. அணிந்திருக்கிற ஆடைகள் போதும் எங்களுக்கு நேர்ந்த பொல்லாத நிலைமையை விளக்குவதற்கு. தாய்க்காரிக்கு அத்தனை விவேகமில்லை, ஒரு சின்னப் பெண்ணை எப்படி வளர்க்கவேண்டுமென்பது கூடப் போதாது. பரிதாபத்திற்குரிய பெண், உங்களுக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே? அவள் அணிந்த தொப்பிக்கு அர்த்தமில்லை என்று நினைக்காதீர்கள், அவள் உதட்டுச் சாயத்திற்குங்கூட பொருளிருக்கிறது, அதாவது அடுத்தவர் பார்வையை தன்பக்கம் திருப்பவேண்டும், பார்வைக்குப் பின்னே பணம் இருக்கிறது. உடன்பிறந்தவர்கள், குண்டர்களென எவரும் அதற்குப் பலியாகலாம். ஒரு சீனனென்று சொல்கிறார்கள், கோடீஸ்வரனின் மகனாம். நீலவண்ணப் பீங்கான் நிறத்தில் மேகோங் கரத்தில் ஒரு பெரிய வில்லாவும் அவனுக்கு உண்டு. கிழவனுக்கு தனது மரியாதையை காப்பாற்றிகொள்ள விருப்பமில்லை போலிருக்கிறது, போயும் போயும் வெள்ளைக்கார நாய்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியையா தன் மகனுக்குக் கொண்டுவருவதென்று, மறுத்துவிட்டான்.

பெண்மணி என்று அழைக்கபட்ட அவள் சாவன்னாகேட்டைச் சேர்ந்தவள் அவளது கணவனுக்கு வேன்லோங்கில் உத்தியோகம் கிடைத்திருந்தது. ஒருவருடகாலம் வேன்லோங்கை அவள் எட்டிப்பார்க்கவில்லை. எல்லாம் அந்த இளைஞனால் வந்தது, அவனுக்கு சாவன்னாகேட்டில் துணை நிர்வாகியென்ற உத்தியோகம். இனியும் அவர்களிருவம் தொடர்ந்து நேசிக்க முடியாத நிலை. ஆக அவன் சிறிய துப்பாக்கியொன்றினால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டான், அது நடந்தது புதிய உத்தியோகத்திற்காக வேன்லோங் நகருக்கு புறப்படும் தினம், குண்டு அவனது மார்பில் பாய்ந்திருந்தது. சம்பவம் சூரியன் காட்டமாக இருந்த ஒருநாளில், ராணுவ முகாமிற்கு வெளியே நடந்தது. அவளுடைய இளவயது பெண்களுக்காகவும், தனது கணவன் வேன்லோங்கிற்கு மாற்றாலாகி இருப்பதாலும், எல்லாவற்றையும் இனி நிறுத்தியாகவேண்டுமென்று அவனிடத்தில் அவள் சொல்லியிருந்தாள்.

கொலென் நகரத்தில் மோசமான இடமென வர்ணிக்கப்பட்ட பகுதியில், ஒவ்வொரு இரவும் அது நடந்தது. ஒவ்வொரு இரவும், மோசமான நடத்தைக்கொண்ட அந்தப் பெண், தனது உடல் அரவணைப்புக்கென்று, பணக்கார சீன அய்யோக்கியன் ஒருவனிடம் போய்வருகிறாள். வெள்ளைச் சிறுமிகள் படிக்கும் பள்ளியில், பிறகு அவர்கள் நீந்தப்போகிற உடற்பயிற்சிகிளப்பின் நீச்சல் குளத்தில் என்று எல்லா இடங்களிலும் அவளைப் பார்க்க முடிகிறது. சாடெக் பள்ளி ஆசிரியை, அப்பெண்ணிடம் உரையாடுகிறவர்கள் தண்டிக்கபடுவார்களென ஒரு நாள் சுற்றறிக்கை அனுப்பினாள்.

பள்ளியின் இடைவேளையின் போது, ஒரு நாள் தனியொருத்தியாக, வெளிமுற்றத்திலிருந்த தூணொன்றில் சாய்ந்தபடி வீதியை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தனது தாயிடம் அதுபற்றி எதுவும் சொல்லவில்லை. கொலென் நகரத்திலிருந்து சீனனின் கறுப்பு நிற சொகுசுக் காரில் பள்ளிக்கு வருவதுமட்டும் தொடர்கிறது. அவள் புறப்பட்டுச் செல்ல அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவளிடம் பேசுவதற்கு எவளுக்கும் தைரியமில்லை, ஒருத்திக்கூட முன் வரவில்லை. இந்தத் தனிமை, வேன்லொங் நகரத்துப் பெண்மணியைப் பற்றிய தூய நினைவுகளை அசைபோட உதவிற்று. அதைப்புரிந்துகொண்டதுபோல அவளும் வருகிறாள், முப்பத்தெட்டு வயதிருக்கவேண்டும். சிறுமிக்கு பத்துவயது, நினைவுகளை அசைபோடும் இந்த நேரத்தில் அவளுக்கு வயது பதினாறுவயது.

பெண்மணி அறைக்குவெளியே தளத்தில் நின்றவாறு மேக்கோங்கின் அகன்ற பெரிய வீதிகளை வேடிக்கைப் பார்க்கிறாள், கிருஸ்துவ சமய வகுப்பு முடிந்து எனது இளைய சகோதரனும் நானும் திரும்பிகொண்டிருக்கிறோம். மாளிகையின் மத்தியில் அந்த அறை, சுற்றிலும் திறந்த வெளிகள், மாளிகை ரோஸ்-பே யும், பணைகளுங்கொண்ட பூங்காவுக்கு மத்தியில் இருக்கிறது. ராணுவ முகாமிலிருந்த மற்ற மனிதர்களுக்கும் தொப்பியணிந்த சிறுமிக்கும் உள்ள இடைவெளி, இங்கே அந்தப் பெண்மணியிடத்திலும் உண்டு. எனினும் நதியை ஒட்டிய பெரிய வீதிகளை பார்க்கும்பார்வையில் இருவருக்கும் பேதங்களில்லை. இருவருமே தனிமைபடுத்தபட்டிருக்கிறார்கள். தன்னந்தனிகாட்டு ராணிகள், நல்லதற்கு மட்டுமல்ல கெட்டதற்குங்கூட. மானக்கேடான ஒரு விஷயத்தில் மட்டும் இயற்கையாய் இருவருக்குமிடையே ஒற்றுமை இருக்கிறது: தங்கள் உடல் தழுவப்படவும், முத்தமிடப்படவும், இனி அப்படியொருபரவசம் இல்லை என்பதுபோல அனுபவம் பெறவும், அப்படியொரு அனுபவத்தின் முடிவில் இறக்கவுங்கூட தாயாரென்று தங்கள் உடல்களை, உண்மையான அன்பற்ற காதலர்களிடம் ஒப்படைக்கிறார்கள். அதைச் சொல்லவும் செய்கிறார்கள். இப்போதுள்ள பிரச்சினை அப்படியொரு சந்தோஷமான மரணம் குறித்தது. அது அவர்களுக்கு வாய்க்கமாட்டேன் என்கிறது, வலிமை வாய்ந்த அந்த மரணம், அவர்களிடமிருந்தும் அவர்களுடைய அறைகளிலிருந்தும் தப்பி விடுகிறது, அதற்கான காரணமும், ராணுவமுகாம்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், பொதுவிடங்களில், வரவேற்பு கூடங்களில், ஏற்பாடு செய்யபடும் அரசு நிர்வாகத்தின் கூட்டு நடனங்களில், மொத்தத்தில் ஊரெங்கும் தெரிந்திருந்தது.

வழக்கம்போல அரசாங்கக் கொண்டாட்டகளில் கலந்துகொள்ளும் முஸ்தீபுடன் அப்பெண்மணி இருக்கிறாள். சாவன்னாகேட் இளைஞன் பற்றிய கதை எல்லோரும் மறந்திருப்பார்கள் என நினைக்கிறாள். அப்பெண்மணிக்குத் திரும்பவும் இரவு நேரகொண்டாட்டங்கள் வேண்டும், அதன்மூலம் அவ்வப்போது மனிதர்களைச் சந்திக்க முடியும், அதன்மூலம் நெல்வயல்கள், அச்சம், உன்மத்தம், காய்ச்சல்,மறதிக்கிடையே தொலைந்துபோன அவளது அலுவலகத்தின் கொடூரமான தனிமைச் சூழலிலிருந்து அவ்வப்போது விடுபடவும் முடியும்.

ஒரு நாள் மாலை நேரம் பள்ளியிலிருந்து வெளியே வருகிறாள். வழக்கம்போல கறுப்புநிற சொகுசுக் கார். வழக்கம்போல தலையில் அதே தொப்பி, வழக்கம்போல லாமேஓர் ஷ¥, அவள் வெளியில் செல்லவேண்டும், வழக்கம்போல பணக்கார சீனனின் உடலை அறியவேண்டும், அவன் இவளை நீராட்டுவான், வெகு நேரம் பிடிக்கும், அவளுடைய சொந்த வீட்டில் இவளுக்கென அம்மா புதுத் தண்ணீரை ஜாடியொன்றில் பத்திரமாக வைத்திருப்பாள், அதைப்போல அவனும் இவளுக்காக வைத்திருக்கிறான் பிறகு ஈர சரீரத்துடன் கட்டிலில் கொண்டுபோய் சேர்ப்பான், மின் விசிறியைச் சுழலவிடுவான், இவளைக் கட்டி அணைப்பான். மேலும் மேலும் தொடரும். இவளும் நிறுத்தாதே என்பாள். பிறகு தனது விடுதிக்குத் திரும்புவாள். அவளைத் தண்டிக்கவோ, அடிக்கவோ, தூற்றவோ, துன்புறுத்தவோ அங்கு
ஒருவருமில்லை.

அன்றைக்கு என்னை மிகவும் வதைத்த இரவு முடிவுக்கு வந்திருந்த நேரம், ராணுவமுகாமின் பெரிய திடல் ஒளிவெள்ளத்தில் மூழ்கியிருந்தது. அவள் நடனமாடிக்கொண்டிருந்தாள், விடிந்தது. பகல் அவள் உடலைச் சுற்றியிருந்தது, நேரம் கடந்தது சூரியன் மெல்ல உதிக்கிறான், வடிவம் நொறுங்கிப்போகிறது. அவளை நெருங்க அச்சம். போலீஸ¤க்கு அச்சமில்லைபோலும். மதியம் பயணம்முடித்து பெரிய படகு கரையை அடைந்தற்குப்பின்னர், அந்த இடம் வெறிச்சோசிவிடும், ஒன்றுமிருக்காது.

விடுதியின் தலைமை வார்டன் பெண்மணியிடம் அம்மா கூறினாள்: அதனாலென்ன, அதையெல்லாம் பெரிதுபடுத்தவேண்டாம், நீங்கள் பார்த்தீர்கள் இல்லையா, சுருங்கிப்போன பழைய சட்டைகள், ரோஸ் நிற தொப்பி, தங்கநிற காலணி அத்தனையும் அவளுக்கு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள். தனது பிள்ளைகளைப் பற்றி பேசும்போது அம்மா சந்தோஷத்தில் மிதப்பாள், அந்நேரத்தில் அவள் மேலும் அழகாக இருப்பாள். விடுதியின் இளம் பெண் ஊழியர்கள் அனைவரும் அம்மாசொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முகாமிலிருந்த அத்தனை ஆண்களும், மணமுடித்தவர்கள், முடிக்காதவர்கள் அத்தனைபேரும் ஒருவர் பாக்கியில்லை அவளைத்தான் மொய்க்கிறார்கள், இந்தப் சின்னப்பெண்தான் வேண்டும் என்கிறார்கள். நீங்களே பாருங்கள், இன்னமும் அவள் குழந்தைதான். வெட்கமற்ற செயலென்றா விமர்சிக்கிறார்கள்? நான் கேட்கிறேன், இவள் முகத்தைப் பாருங்கள், அப்பாவியான இவளா ஒழுக்கக்கேடான காரியத்தில்
இறங்குவாள்?

அம்மா வெகுநேரம் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருக்கிறாள். பெருகி வரும் விபச்சாரம் பற்றி பேசுகிறாள், சிரிக்கிறாள். தொடர்ந்து அவள் பேசிய பேச்சில் ஊராரின் வம்புபேச்சு, ஏளனம், தொப்பி, ஆற்றைக் கடக்கும் சிறுமியின் சௌந்தர்யம் என எல்லாமிருக்கிறது இடைக்கிடை சிரிக்கிறாள். பிரெஞ்சு காலனியவாழ்க்கையில் தவிர்க்கமுடியாத யதார்த்தம், வெள்ளைத்தோல், நேற்றுவரை எங்கோ காலனிய அரசு கட்டிடங்களில் முகவரியற்று இருந்த பெண்ணை, சட்டென்று ஒரு பெருநாளில் கீழ்மையான பணக்கார சீனன் ஒருவனோடு சேர்த்துவைத்து பலரும் விமர்சிப்பது, வட்டிகடைகாரியென அச்சிறுமியை வசைபாடவைக்கக் காரணமான வைரமோதிரம் எனப் பேச்சை மறுபடியும் தொடர்ந்த அவள் கடைசியில் குமுறி அழுகிறாள்.

அத்தியாயம் - 16

விரலிலிருந்த மோதிரத்தைப் பார்த்தவள், " முதற்கணவனுடன் நடந்த திருமண ஒப்பந்தத்திற்கு எனக்கு அணிவித்த ஒற்றைக்கல் மோதிரம், நினைவுக்கு வருகிறது", என்றாள். பதிலுக்கு "மிஸியே ஓப்ஸ்க்குயுர்( -தெளிவற்ற என்று பொருள்). ஞாபகமிருக்கு", என்கிறேன். இருவரும் சிரிக்கிறோம். "ஆமாம். அந்த ஆளுக்கு அப்படியொரு பெயர், இல்லையென்றா சொல்ல முடியும்".- அவள்.
வெகுநேரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம், மெல்லியதாக ஒரு சிரிப்பு, அதிலுள்ள கேலியை அறிவேன், "என்பிள்ளைகளை எனக்குத் தெரியாதா, எவ்வளவு நல்லா படிச்சுவச்சிருக்கேன், கொலென்ல என்ன நடந்ததென்று சொல்லாம போய்விடுவாயா என்ன?" என்பது மாதிரியான சிரிப்பு.

அன்றைக்கென்று இல்லை, அதற்குப்பிறகும் அதைச் சொல்லவேண்டுமென்று நினைத்ததில்லை.
தொடர்ந்து பேசுவதற்கு முன்பாக வெகுநேரம் காத்திருந்தாள், பேசியபோது, அவள்குரல் தழுதழுத்தது, தாய்ப்பாசத்தில் உருகினாள்," இங்கே இதற்குமேலே உனக்கு செய்ய ஒன்றுமில்லை, என்பதையாவது தெரிந்து வைத்திருக்கிறாயா? காலனி நாட்டிலே கல்யாணமென்பதெல்லாம், என்றைக்கும் சாத்தியமில்லை என்பதாவது தெரியுமா?. தோளை உயர்த்தி, பதிலுக்குச் சிரிக்கிறேன். தெரியாது, தெரிந்து என்ன செய்யப்போகிறேன் என்று அதற்கு அர்த்தம். "எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒருவனை கல்யாணம் பண்ணிக்கொள்வேன், யாரென்னை தடுப்பது" - நான். 'நீ நினைக்கிற மாதிரி எதையும் செய்திட முடியாது', என்பதுபோல தலையாட்டுகிறாள். இங்கே, ரகசியமென்று எதுவுமில்லை. ஊர்பூரா உன்னைப் பத்தி தெரிஞ்சிருக்கும், இங்கே வேறொருத்தனோட உனக்கு கல்யாணம் என்பதெல்லாம் ஆகிற காரியமா என்ன?, என்றவள் வாயிலிருந்து அடுத்து வந்த சொற்களை அத்தனை சுலபமாக என்னால் மறக்க முடியாது: அவர்களுக்கு உன்னைப் பிடிச்சிருக்கில்லையா? - அவள். பதிலுக்கு நான்," அதுதான், தப்பான அபிப்யாரங்கள் இருந்தாலும், இங்குள்ள அத்தனை பேருக்கும், நான் வேண்டும்., " ஆமாம், உன்னை அவங்க விரும்பறதுக்கு உன்னிடமுள்ள வேறொருத்தியும் காரணம்", மீண்டும் அவள்.

" பணத்திற்காகத்தானே, அவன்கிட்டே போயிட்டு வர", - அம்மா. இப்படி நேரிடையாகப் கேட்பாளென்று நினைக்கவில்லை, அவளுக்கு என்ன பதில் சொல்லலாமென்று தயக்கம், "ஆமாம் பணத்திற்காகத்தான்"- நான். என்னுடைய பதிலில் அவளுக்குத் திருப்தியில்லை என்பதுபோல, மறுபடியும், வெகுநேரம் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, " உனக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம், படிப்பிலே நான் கொஞ்சம் அப்படி இப்படித்தானிருந்தேன், நீ பரவாயில்லை. ஆனால் எதிலும் தீவிரமாயிருப்பேன், வெகுகாலம் அப்படித்தானிருந்தேன், சொந்த சந்தோஷத்தையெல்லாம் தொலைத்தாயிற்று", - என்றாள்

சாடெக்கில் அன்றைக்கு விடுமுறைதினம். கால்களிரண்டும் நாற்காலிமீது கிடக்க, சாய்வு நாற்காலியொன்றில் அமர்ந்திருந்தாள். வெளிக்காற்றுக்காகவென்று, சமையல் மற்றும் வரவேற்பறைக் கதவுகளை திறந்து வைத்திருக்கவேண்டும். முகத்தில் கடுகடுப்பில்லை, அமைதியாகத்தானிருந்தாள், சின்னப்பெண் நிற்பது தெரிந்தது. அவளைப் பற்றிப்பேச அவளுக்கு பேச விருப்பம்.

அணைக்கட்டு அருகே வாங்கியிருந்த நிலத்தையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு, புறப்படுவதற்கான கடைசி நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. பிரான்சுக்குப் புறப்படுவதற்கான நாள் அதிகத் தூரத்திலில்லை.

ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

இப்போதெல்லாம் அடிக்கடி ஆணைகள் பிறப்பிப்பது, அவளுக்கு வழக்கமென்றாகிவிட்டது. நாளைக்கு நிழற்படமொன்றெடுக்க ஸ்டுடியோவுக்குப் போகிறோம், ஒரு பக்கம் பண அதிகமாக கேட்கிறார்களென்று புலம்பலிருந்தாலும், குடும்ப நிழற்படத்திற்காகும் செலவைக்குறித்து அவள் கவலைப்படுவதில்லை. நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கிறோமோ இல்லையோ, போட்டோக்களில் பார்த்துக்கொள்கிறோம். போட்டோவை கையில் வைத்துக்கொண்டு, அடுத்தவரை விமர்சிக்கும் வழக்கமில்லை. தனித்தனியாகவோ அல்லது எல்லோரையும் சேர்ந்தாற்போலவோ எங்களை நாங்களே பார்த்துக்கொள்வது வழக்கம். பழையபோட்டோக்களிளிருந்த மிகவும் இளவயது தோற்றங்களையும், சமீபத்தில் எடுத்த நிழற்படங்களிலுள்ள, இப்போதையை எங்கள் தோற்றத்தையும் நேரங்காலமின்றி பார்த்துக்கொள்கிறோம். எங்களுக்கிடையேயான இடைவெளி அதிகமென்றே சொல்லவேண்டும். ஒரு முறை பார்த்துமுடித்த பிறகு பழையபடி போட்டோக்கள், அலமாரித் துணிகளுக்கிடையில், பதவிசாக சேர்ந்துவிடும். எதற்காக எங்களையெல்லாம் போட்டோ எடுக்கிறாளென்று நினைக்கிறீர்கள், போட்டோக்களிலிருந்தே எங்கள் ஒழுங்கான வளர்ச்சியைப்பற்றிய முடிவுக்கு அவளால் வரமுடிகிறதாம். எல்லா அம்மாக்களையும் போலவே பிள்ளைகளை வெகுநேரம் போட்டோக்களில் அவதானிக்கிறாள், அவற்றைக் கையில் வைத்துக்கொண்டு, ஒன்றை மற்றோடு ஒப்பிட்டாகவேண்டும், ஒவ்வொரு பிள்ளையின் வளர்ச்சியைப் பற்றியும் பேசியாகவேண்டும், பேசுவாள். அவள் பேசப்பேசக் கேட்டுக்கொண்டிருப்போம் பதில் சொல்வதில்லை.

பிள்ளைகளை படமெடுப்பதோடு சரி, வேறெதையும் படமெடுத்து வைத்துக்கொள்ளவேண்டுமென்கிற ஆசைகளெல்லாம் அவளுக்கில்லை, என்னிடத்தில் வென்லோங் சமபந்தமான படமெதுவுமில்லை அதாவது அங்குள்ள பூங்கா, நதி, நீண்ட பெரிய சாலைகள், சாலைகள் ஒட்டிய பிரெஞ்சுப்பெண்ணை வசீகரிக்கற புளியமரங்களென்று எதையும் நிழற்படமாக எடுத்துவைத்துக்கொண்டதில்லை. வீடு, இரும்பும் பொன்னிறமாயும் மின்னும் பெரியகட்டில்கள், பெரிய அவென்யூக்களுக்குண்டான சிவப்பு ஒளியை உமிழும் பல்புகள், அவை பிராகாசமாய் எரிய வகுப்பறைபோல தோற்றத்தைத் தரும் வெள்ளையடித்த சுவர்களைக்கொண்ட அறைகள், பல்புகளை அலங்கரிக்கிற பச்சைவண்ணை லேம்ப்ஷேடுகளென்று - தலைவிதியேயென சகித்துக்கொண்டிருக்கும் அவைகளெல்லாம் நிரந்தரமாக பிரான்சுக்கு செல்லும்வரை (அங்கே பா-தெ-கலேக்கும் ஆந்த்ர் -தே-மேருக்கும் இடையில், அவளுடைய குணத்திற்கும், வயதுக்கும், மனச்சுமைகளுக்கும் பொருந்தக்கூடிய இடமொன்று இருப்பதாகச் வெகுகாலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்) எங்களுக்கு வேண்டும், அனால் அவற்றைக்கூட நிழற்பட நினைவுகளாக எடுத்து வைத்துக்கொண்டதில்லை. இனி எதுவும் வேண்டாம் என தீர்மானிக்கிற நேரத்தில் சாடெக்க்கில் இருப்பதைப்போன்றே ஒரு வீட்டையும் அறையையும் பார்த்துக்கொண்டு பிரான்சில்- லுவாரில் தங்கிவிடுவாள், அதற்குப்பிறகு வேண்டுமானால் இவற்றையெல்லாம் அவள் மறக்கக்கூடும்.

இடங்கள், காட்சிகளென்றெல்லாம் படங்கள் எடுத்துவைத்திருப்பதில்லை, அத்தனை படங்களிலும் நாங்கள்தான், அதாவது அவளுடைய பிள்ளைகள் மாத்திரமே இருப்பார்கள், அதுவும் எங்கே ஒவ்வொருவரையும் தனித்தனியாக எடுத்தால் பணம் செலவாகுமென்று பயந்து, எப்போதும் எங்களை ஒன்றாக நிற்கவைத்துத எடுத்த நிழற்படங்களாகவே அவ்வளவும் இருக்கும். எப்போதாவது இடங்கள், காட்சிகளோடு நாங்கள் நிழற்படங்களில் இடம்பெற்ற அதிர்ஷ்டமுமுண்டு, அப்படங்கள் எங்களுக்குச் சொந்தமானவையுமல்ல, அவைகளை அம்மாவுடைய நண்பர்களோ அல்லது புதிதாக காலனியில் பணிபுரிய வந்திருக்கும் சக ஊழியர்களோ, பிரான்சிலுள்ள தங்கள் சொந்தங்கள், நட்புகள் ஆகியவற்றிர்க்கு காட்டுவதற்காக எடுத்ததாக இருக்கும், அம்மாதிரியான நிழற்படங்களில், வெப்பமண்டல பகுதிகளுக்கே உரிய காட்சிகள், தென்னைமரங்கள், காலனி நாட்டுத் தோட்டத் தொழிலாளிகளான கூலிகள் ஆகியோர் இடம்பெறுவர்.

அதிசயக்கத் தக்கவகையில், அம்மாவும் தன்னுடைய பிள்ளைகளுடைய நிழற்படங்களை, இந்தமுறை பிரான்சுக்குப் போக நேர்ந்தபோது தன்னுடைய சொந்தங்களுக்குக் காட்டுகிறாள். எப்போதுமே சொந்தக்காரர்களின் வீடுகளுக்கெல்லாம் போய்க்கொண்டிருந்த வழக்கம் எங்களுக்கிருந்ததில்லை, என்னுடைய சகோதரர்களும் அவர்கள் யார், எப்படி சொந்தம் என்றெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பியவர்கள் கிடையாது. நான் வயதிற் சிறியவளென்பதால், அவள் போகுமிடமெல்லாம் வரவேண்டுமென்று எனக்குக் கட்டளை. அடுத்த பயணத்தில் அதுவும் நின்றுபோயிற்று. அப்பாவுடைய சகோதரிகளுக்கும், அம்மாவுடைய சகோதரிகளுக்கும், காலனி நாட்டிலிருந்து வந்திருந்த என்னைப்பற்றிய செய்திகள் எதுவும் நல்லதாக இல்லை, நான் வேண்டாதவளாகிவிட்டேன். அவர்களுடைய பெண்களிடமிருந்து, நான் < தள்ளி வைக்கப்படவேண்டியவள். அம்மா மட்டும் எதுவுமே நடவாதமாதிரி அவர்களுடைய வீடுகளுக்கெல்லாம் போய்வந்துகொண்டிருந்தாள். தன்னுடையை பிள்ளைகளை நேரில் அழைத்துபோய் அவர்களிடம் காட்டமுடியாது, நிழற்படங்களில்தான் காட்டியாகவேண்டும், எனவே அவற்றைச் சொந்தங்களுக்குக் காட்டுகிறாள். இம்மாதிரியான காரியங்களிலிருந்து அவளுடைய உயிர்வாழ்க்கையின் நோக்கங்களை அனுமானிக்க முடியுமா? சொந்தம், வாழ்க்கையில் உற்ற இன்னல்கள், அத்தனையிலும் போதுபோதுமென்று அலுத்து, இடையிலேயே ஒதுங்கிக்கொள்கிற வழக்கமெல்லாம் எனக்கில்லை, மாறாக எடுத்துக்கொண்ட காரியத்தில் கடைசிவரை போராடும் குணம் தனக்குண்டு என்று சொல்வதைப்போல அவள் நடந்துகொள்ளவில்லை? அப்படித்தான் நினைக்கிறேன். இதுபோன்ற அசட்டுத்தனமான அவளுடைய காரியங்களை துணிச்சலென்றுதான் வர்ணிக்கவேண்டும், இதுபோன்ற துணிச்சலில்தான் அவளுடைய ஆழமான பரிவும் அன்பும் ஒளிந்துக்கிடக்கின்றன.

அவள் மூப்டைந்து, தலைமுடியெல்லாம் நரைத்தகாலத்திலுங்கூட புகைப்படம் எடுக்கிறவர்களைத் தேடிப்போயிருக்கிறாள். அவள் தனியாகப் போவாள். படம்பிடித்துக்கொள்வாள், தங்கத்திலான சங்கிலி, பொன்வேலைப்பாடுடன்கூடிய பச்சைக்கல் பதித்த தங்க ப்ரூச், அழகான கருஞ்சிவப்பு நிற கவுணென்று அப்படங்களில் காட்சிதருவாள். முடியைப் படியவாரி, எழுதிய சித்திரம்போல நிழற்படத்தில் இருப்பாள். வசதிபடைத்த உள்ளூர் மக்களுங்கூட, வாழ்நாளில் ஒருமுறை, குறிப்பாக தங்கள் அந்திமக் காலங்களில் புகைப்படகாரர்களைத் தேடிப்போவதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எடுத்துக்கொள்ளும் படங்களெல்லாம், கொஞ்சம் பெரியதாக, ஒன்றுபோலவே இருக்கும், பொன்னிற சட்டங்களிட்டு, தங்கள் முன்னோர்களின் நிழற்படங்களுக்கு அருகிலேயே தங்கள் படங்களையும் சுவரில் தொங்கவிட்டிருப்பார்கள். படமெடுத்துக்கொண்டவர்களையும் பார்த்திருக்கிறேன், அவர்கள் எடுத்துக்கொண்ட படங்களையும் பார்த்திருக்கிறேன், அத்தனைப் படங்களும் ஒன்றுபோலவே இருக்கும். அவர்களுக்கிடையேயுள்ள உருவ ஒற்றுமைகண்டு மூர்ச்சையாகாதது ஒன்றுதான் குறை. வயதான தோற்றத்தில்மாத்திரம் என்றில்லை, அசலான முகங்களை அடையாளப்படுத்துவதைபோல, ஆங்காங்கே தூரிகையால் தொட்டிருப்பார்கள்(எல்லாப் படங்களிலும் தூரிகையின் கைவண்ணமிருக்கும்)தூரிகைக்குத் தப்பி, மங்கலாகத் இருப்பவைகளிலுங்கூட ஒற்றுமையைக் காணலாம். கால முச்சூடும் இருப்பதற்கெனவே தயாரிக்கப்பட்டவைபோல இளமையும், பளபளப்புமாக அவைகள் இருக்கும்.. அதைத்தான் அங்குள்ள மக்கள் விரும்பினார்கள். வழிவழியாக தொடரும் தங்கள் குடும்ப நினைவுக்கு வடிவ ஒற்றுமையையும், தன்னடக்கத்தையும் அணிவித்து, சம்பந்தப்பட்ட படத்தின் தனித்தன்மைக்கும், பல்வகைபுரிதலுக்கும் ஆதாரங்களாக அவற்றைக் கருதினார்கள். தோற்றத்தன்மைகளில், படங்களுக்கிடையேயான வேறுபாடுகள் குறையக்குறைய, அக்குடும்ப உறவில் அவர்களுக்கான பாத்யதையும் வலுப்பெறுகிறது என்று பொருள். தவிர, ஆண்களின் தலைப்பாகை, பெண்கள் தங்கள் தலைமுடியை இழுத்துக் கொண்டைபோட்டிருக்கும் விதம், ஆண்பெண் இருவரும் அணிந்திருக்கும் ஆடைகளுக்கான கழுத்துப்பட்டைகளெல்லாங்கூட ஒரே மாதிரியாக அமைந்தவை. அவர்களுடை முகபாவங்களும் அப்படித்தான் வேறுபாடுகளின்றி இருந்திருக்கின்றன, அங்கெடுக்கப்படுகிற எல்லா நிழற்படங்களிலும் அவற்றைக் கண்டிருக்கிறேன். சிவப்பு கவுணுடன் அம்மா எடுத்துக்கொள்ளும் நிழற்படங்களுக்கும் அதுபோன்ற முகபாவங்களுண்டு, பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளுக்குரிய முகபாவம், அம்முகபாவத்தை அம்மாவின் சிலபடங்களில் பார்த்திருக்கிறேன், சிலபடங்களில் அவை தொலைந்திருந்தன.

அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகளில்லை. இனி அவ் விஷயத்தைத் தொடுவதில்லையெனத் தீர்மானிக்கபட்டதுபோல அவனும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வது குறித்து தந்தையிடம் பேசுவதைத் தவிர்க்கிறான். தகப்பனுக்கு பிள்ளைமேல் பரிவோ பாசமோ இல்லையென்றுதான் சொல்லவேண்டும், இரக்கமில்லாதவன், மகனென்றில்லை, பிறரிடமும் அந்த ஆள் அவ்வாறே நடந்துகொள்கிறவன். அங்கே வியாபாரத்தைத் தங்கள் கைக்குள் வைத்திருக்கும் அத்தனை சீனர்களையும் பார்க்க மோசமான குணத்தில் மாத்திரமல்ல, பணத்திலும் முதல் நபராக இருந்தார். அவருடைய சொத்துக்கள் சாடெக்கையும் தாண்டி, பிரெஞ்சு காலனி நாட்டின் தலைநகராகவிருந்த கொலென்வரை பரவிக்கிடந்தன. கொலென் மனிதனுக்கு, தனது தகப்பனின் பிடிவாதம், ஒரு குழந்தையின் பிடிவாதத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை என்பது நன்றாகத் தெரியும். தன்னுடைய மகனின் காதல் விவகாரம், பெண்ணின் சொந்தநாட்டுப் பயணத்தினால் முடிவுக்குவந்துவிடுமென்ற செய்தியையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள ஒன்றுமில்லை என்பதுமாதிரி அம்மனிதர் நடந்துகொண்டார். அவளைப்போன்ற பெண்களுக்கெல்லாம் திருமணம் அவசியமா என்ன? திருமணமென்று பேசிப்பார், ஓடி ஒளிந்துவிடுவாள், அவள் தலைமுழுகப்படவேண்டியவள், மறக்கப்படவேண்டியவள், நமக்கு சரிவராது, எவனாவது வெள்ளைக்காரன் ஒருவன் அவளுக்கு அமைவான் அதுவுமில்லையென்றால் இருக்கவே இருக்கிறார்கள் அவளது சகோதரர்கள்.

தனது உடல்மேல் அவனுக்கு அப்படியொரு வெறி, அதற்காக எதுவும் செய்ய அவன் தயாராக இருந்தான். எனவே, அவனை அடைவதிலிருந்த பெண்ணுக்கிருந்த சிரமங்கள் வெகுவாக குறைந்திருந்தன, அவனது மெலிந்த உடல்கூட பரவாயில்லை என்றாகிவிட்டது, தாய் கூட கூட முன்புபோல கேள்விகேட்பதில்லை, அதுபற்றிய கவலைகளேதும் தனக்கில்லை என்பதுபோல நடந்துகொள்கிறாள். அவளுக்குங்கூட அவனது உடல் அப்படியொன்றும் தீண்டத் தகாததல்ல, பிறருடைய உடல்களுக்கும் அவனுடைய உடலுக்கும் பெரிதாக வித்தியாசமேதுமில்லலை, ஏற்றுக்கொள்ளகூடியதுதான் என்பதை புரிந்துகொள்கிறாள். காலணி நாட்டின் வெயிலிலே வதைபட்டு அப் பெண் வளர்ந்திருப்பதாக, கொலென் காதலன் நினைக்கிறான். அவன் மாத்திரமென்ன, கலணி நாட்டு வெயிலை அறியாதவனா என்ன, பிறந்ததும் வளர்ந்ததும் அந்த நாட்டில் தானே? இவ்விஷயத்தில் அவளும் அவனும் ஒத்துப்போவதாக அவன் நினைக்கிறான். இத்தனை வருடங்கள், சகிக்க முடியாத ஓர் அட்சரேகையில் காலத்தைகழித்ததின் பலனாக, அப்பெண்ணையும் தனது நாட்டுப் பெண்களில் (இந்தோ-சீன நாட்டைச்சேர்ந்த) ஒருத்தியாகவே பார்க்கவேண்டுமென்கிறான். விரல்களை மடிக்கும்போதுள்ள மென்மை, நீளத்தில் அவர்களுடைய வீட்டுப்பெண்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, அவளுடைய பலத்தையெல்லாம் தம் வசமெடுத்துக்கொண்டதைப்போல அடர்த்தியாகவிருந்த தலைமயிர், பெண்களும், பிள்ளைகளும் குளிக்கவேண்டுமென்றே மழைநீரை பாத்திரங்களில் பிடித்துவைக்கும் பழக்கம் இந்தோசீனாவிலுண்டு, அப்படிப்பட்ட மழைநீரில் குளித்து உருவான அவளுடைய சரீரம் என்று அனைத்திலும், அப்பெண் தங்கள் நாட்டுப்பெண்ணைப்போலவே இருப்பதாகச் சாதிக்கிறான். அவளோடு ஒப்பிடுகிறபோது பிரான்சு நாட்டுப் பெண்களின் உடல்கள் சொரசொரவென்று, அத்தனை தடிப்பு, மென்மையற்ற சரீரம். அடுத்து வெப்பமண்டல நாடுகளுக்கே உரிய எளியவகை உணவுகளான மீன்கள், பழங்கள் ஆகியவையுங்கூட அவளுடைய உடலின் மென்மைக்குக் காரணமானவை. அவளை நிர்வாணத்தில் வைத்திருப்பதுபோல சரீரத்தில் ஒட்டாமல் அளவிற் பெரியதாய் அணிந்துள்ள பருத்தி பட்டாலான உடைகளுக்குங்கூட அவளுடைய சரீரத்தின் மென்மையில் பங்குகள் உண்டென்று நினைக்கிறான்.

அத்தியாயம் - 17

கொலென் பிரதேசக் காதலனுக்கு வெள்ளைக்காரகுட்டியின் பதின் பருவமே எல்லாமென்றாகி அவளே கதியென்று கிடக்கிறான். ஒவ்வொரு மாலையும் அவளிடத்தில் கிடைக்கும் சந்தோஷத்திற்கென்றே அவனது வாழ்க்கையும், காலமும் என்றாகிறது. அவளைப்பற்றியோ, இதுவரை அறிந்திறாத அக்காதல் அனுபவம்குறித்து என்னபேசுவதென்கிற தமது குழப்பத்தைப்பற்றியோ ஏதேனும் பேசினால், அதைபுரிந்துகொள்ள அவளுக்குப் போதுமோ என்கிற ஐயமிருக்கவேண்டும், வாய்ச் சொற்களைத் தவிர்க்கிறான். மாலையை ஒன்றாக அவர்கள் கழிக்க உதவிய அறையில், ஒருவரையொருவர் உரத்து அழைத்துக்கொண்டதன்றி இதுவரை உரையாடியதென்றில்லையே? ஒருவேளை, அந்த உண்மை தெரியவந்திருக்குமோ. ம்.. தெரிந்திருக்காதென்றுதான் நினைக்கிறேன், இதுபற்றிய அறிவின்றியே இத்தனை நாளும் இருந்திருக்கிறோம் என்ற உண்மைவேண்டுமானால் அவனுக்குப் புரிந்திருக்கும்.

அவன் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். மூடிக்கிடக்கும் விழிகளைத் திறக்காமல் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவள் முகத்தைச் சுவாசிக்கிறான். சிறுமியைச் சுவாசிக்கிறான். இமைகளைத் திறக்காமல் அவளுடைய சூடுதணியாத சுவாசத்தை மாத்திரம் சுவாசிக்கிறான். பிறரிடம் காணமுடியாத சரீரம், அதன் வடிவம் அவனுக்குப் பிடிபடமாட்டேனென்கிறது, ஒவ்வொருகணமும் முடிவில்லாமல் அறையில் அசுரத்தனமாக வளருகிறது, அவன் அவளை பார்க்கின்ற நேரங்களில் மட்டும் வளர்கிறதென்று நினைக்கவேண்டாம், சந்தோஷ தருணங்கள், இறப்பு மற்றும், அவனுடைய பார்வைக்கு அடங்காத பிற இடங்களிலுங்கூட வளர்கிறது. மிகவும் மென்மையானது. கலவியின் உச்சத்தில், வன்மமற்று அளவுகடந்த புத்திகூர்மையுடன் வயதிலும், பிறவற்றிலும் தான் பெரியவன் என்பது போல தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்கிறது.

என்னை என்னவெல்லாம் செய்தான் என்பதைப் பார்க்கிறேன். இப்படியெல்லாங்கூட சாத்தியங்களுண்டு என்று நான் நினைத்ததில்லை அப்படி என்னை நடத்தினான். எனது உடலின் தேவை மற்றும் அதன் எதிர்பார்ப்புக்கு மேலாகவே அவனது காரியங்களிருந்தன. அந்த வகையில் அவனுக்கு நானொரு குழந்தையாகவும், அவனும் ஏதோவொன்றாக எனக்கும் மாறினோம். அவனிலும் பார்க்க அவனது மேல்தோலும் சரி அவனது ஆண்குறியும் சரி விவரிக்கவொண்ணாத மென்தன்மை கொண்டதென்பதைக் கண்டுகொள்கிறேன். இளம் கொலையாளி தோற்றத்தில் அன்னியன் ஒருவனின் நிழலைக்கூட அறையில் பார்த்த ஞாபகம், இதுவரை என்கண்களில் அவன் படவில்லை, அவன் யாரென்றும் தெரியாது. வேட்டையில் ஆர்வமுள்ள ஓர் இளைஞனையும் அறைக்குள் கண்டிருந்தேன், அவனை யாரென்று தெரிந்து வைத்திருந்தேன். கலவியில் உச்சத்தில் திளைக்கிறபோது அவனுடைய முகம்தான் தெரிகிறது. என்னுடைய கொலென் காதலனிடத்தில் அதுபற்றி பேசினேன். வேட்டை இளைஞனின் உடம்பு, சொற்களுக்குள் அடங்காத அவனது ஆண்குறியின் மிருதுத்தன்மை, கருஞ்சிறுத்தைகள் உலாவும் நதிகளின் முகத்துவாரங்களிலும், காடுகளிலும் அவனிடம் வெளிப்படும் வீரமென அவனைப் பற்றிய நிறைய தகவல்களைக் கூறினேன். அவனது விருப்பப்படியும், என்னை ஆட்கொள்ளவும் எல்லாம் நடந்தது. நான் அவனது குழந்தையாகிப்போனேன். அவனுடைய குழந்தையுடனேயே ஒவ்வொரு மாலையும் புணர்ச்சியை மேற்கொண்டான். கூடியசீக்கிரத்தில் அவளை இழக்கப்போகிறோமென்கிற வருத்தம். அவள் நிரந்தரமானவளல்ல என்பதைப் புரிந்துகொள்கிறான், அதுவே அவனது உடல்நிலைகுறித்தும் கவலைகொள்ளவைக்கிறது, எனவே சில நேரங்களில் கலவரப்படுகிறான். அதிலும் அவள் மிகவும் ஒல்லியாக இருப்பதால், சிலநேரங்களில் திடீர்திடீரென்று பயம் அவனைக் கவ்விக்கொள்கிறது. பிறகு இருக்கவே இருக்கிறது அவளுக்கென்று வரும் தலைவலி, உயிரற்ற ஜடத்தைப்போல, ஈரத்துணியை கண்களில் கட்டிக்கொண்டு, கட்டிலைவிட்டு அசையாமல் படுத்துக்கிடக்கிறாள், அடுத்து உயிர் வாழ்க்கைமீதும் அது தன்மீது செலுத்தும் ஆதிக்கத்தின் மீதும் அவள் கொண்டிருக்கிற கோபம். அம்மாவை நினைத்துக் கொள்கிறாள், அம்மாவின் எண்ணம்போல எதுவும் நடவாததாலும்; தமது எதிரிகள் துடிதுடித்து மடிவதைப் பார்த்தபிறகே அம்மா சந்தோஷமாக சாகவேண்டும், அதற்கெதுவும் தன்னால் செய்யமுடியவில்லையே என்பதாலும் விளைந்த கோபத்தில் சத்தம்போடுகிறாள் பின்னர் அழுகிறாள். அவளுடைய முகத்தோடு தனது முகத்தைப் பதித்து, அவளது சோகத்தையெல்லாம் தனதாக்கிக்கொள்கிறான், அவளது கோபம், துக்கம் அனைத்திலும் தீராத மோகம்கொண்டவன்போல வாரி இறுக அ¨ணைத்துகொள்கிறான்.

அவனுக்கொரு குழந்தை இருந்தால் எப்படி கொஞ்சுசுவானோ, அப்படித்தான் அவளிடத்தில் நடந்துகொள்கிறான். சரீரத்தோடு விளையாடுகிறான், அதைத் தொட்டுத் திருப்புகிறான், முகம், வாய், கண்கள் என்று பரவுகிறான். அவளோ, அவன் விளையாட்டினைத் தொடங்க தன்னை மறந்தவளாய் அவன் அடியொட்டிப் பயணிக்கிறாள். சட்டென்று காரணமேதுமில்லாமல் அவனிடம் கெஞ்சுகிறாள், 'வாயை மூடிக்கிட' என்று பதிலுக்கு அவன் கத்துகிறான். "இனியெனக்கு உன் உறவும் வேண்டாம், உன்னால் கிடக்கும் சந்தோஷமும் வேண்டாம்" என்று சத்தம்போடுகிறான். ஆ.. அவர்களுக்குள் மற்றொரு சர்ச்சை என்றாகிவிட்டது. இருவருக்கிடையேயான பீதியில் விளைந்த சர்ச்சை. அப்பீதி கண்ணீர், விரக்தி, சந்தோஷதருணமென்று தன்னை கரைத்துக்கொள்கிறது.

அன்றுமாலை முழுக்க இருவரும் பாராமுகமாக இருக்கின்றனர். தனது விடுதிக்குக் காரில் திரும்பும்போது அவனுடைய தோளில் தலைவைத்திருக்கிறாள், அவன் அவளை அ¨ணைத்தபடி இருக்கிறான். பிரான்சிலிருந்து கப்பல் வருவதும், அவனிடமிருந்து அவளைப்பிரித்து கூடிய சீக்கிரம் அழைத்து செல்வதும் ஒருவகையில் நல்லதென்கிறான். வழியெங்கும் அமைதியாக இருக்கிறார்கள். சில சமயங்களின் காரோட்டியிடம் நதியைச் சுற்றிக்கொண்டு போகுமாறு பணிக்கிறான். அவள் களைப்புற்றிருக்கவேண்டும், அவன் மீது சாய்ந்தபடி உறங்குகிறாள். முத்தமிட்டு அவளை எழுப்புகிறான்.

நீல விளக்கொளியில், விடுதியின் தூங்குமிடம் மூழ்கிக்கிடக்கிறது. ஊதுபத்திவாசம். அந்தி நேரத்தில் ஊதுபத்திகொளுத்தும் பழக்கம் விடுதியிலுண்டு. எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வெப்பம் அன்றைக்கும் இருக்கிறது. சன்னற் கதவுகளை அகலத் திறந்து வைத்திருந்தார்கள். காற்றென்று ஏதுமில்லை. காலிலிருந்த சப்பாத்துகளை கழட்டிக் கைகளில் எடுத்துக்கொண்டபோதிலும், எனக்கு யாரிடமும் பயமில்லை, வார்டன் அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்திருக்கமாட்டாள் என்பதுமட்டுமல்ல இரவுநேரங்களில் நான் விரும்பிய நேரத்திற்கு திரும்புகின்ற உரிமை எனக்கிருந்தது. உடனடியாக நான் செய்யவேண்டிய காரியம் ஹெலெனைத் தேடி செல்வது., மனதில் ஒருவித பதட்டம், பகல் நேரத்தில் விடுதியைவிட்டு அநேககமாகப் புறப்பட்டு சென்றிருக்கலாம் என்பதால் அச்சம். அவளுடைய இடத்திற்குச் சென்று பார்க்கிறேன் நல்லவேளை உறங்கிக்கொண்டிருக்கிறாள். இதற்குமுன்பும் இப்படி விருப்பமில்லாமல் உறங்குவதைப்போலதொரு தோற்றத்துடன் அவள் படுத்திருக்க பார்த்திருக்கிறேன். சண்டைபோடும் மனபாவத்துடன் வெற்றுக்கைகளை தலைக்குக் கொடுத்து அநாதைபோல படுத்திருக்கிறாள். பிற பெண்களைப்போல உடலை வசதியாகக் கிடத்தி நித்திரைகொள்ளும் வழக்கமெல்லாம் அவளுக்கில்லை கால்களிரண்டும் மடிந்திருக்கின்றன. அவளுடைய முகத்தைத் தேடவேண்டும், தலையணை நழுவிக் கிடக்கிறது. அநேகமாக என்னை எதிர்பார்த்திருந்த கோபமாக இருக்கலாம். அவளும் வெகுநேரம் அழுதிருப்பாள், பிறகு அதளபாதாளத்தில் விழுந்திருப்பாள். அவளை உறக்கத்தைக் கலைக்க ஆசை, இருவரும் ரகசியக்குரலில் உரையாடுகிறோம். கொலென் மனிதனிடத்தில் பேசுவதை நிறுத்தியாயிற்று, எனக்கு இப்போதெல்லாம் ஹெலென் கேட்கும் கேள்விகள் முக்கியம், பிறரைப்போல அல்லாமல், அடுத்தவர் பேசுவத்தைக் கவனத்தோடு கேட்கும் பண்பு அவளிடம் நிறைய இருந்தது. ஆனால் இப்போது அவளை எழுப்புவதென்பதெல்லாம் கூடாது. இப்படித்தான் ஒருமுறை அவளுடைய நித்திரையை கலைத்துவிட, அதற்குப் பிறகு அவள் உறங்கவே இல்லை. அவள் எழுந்திருக்கிறாள், அவளுக்கு வெளியே எங்கேயாகிலும் போய்வரவேண்டும் போலிருக்கிறது. படிகளில் தாவி இறங்குகிறாள், தாழ்வாரங்களைக் கடக்கிறாள், மைதானம் வெறிச்சோடி கிடக்கிறது, ஓடுகிறாள், என்னை அழைக்கிறாள், அவளுக்கு சந்தோஷம், அதைத் தடுப்பது யார்? வெளியிற் செல்ல அனுமதி இல்லை என்கிறபோது, அவளது எதிர்பார்ப்பென்னவென்று தெரியும். தயக்கமாக இருக்கிறது, பின்னர் அவளை எழுப்பக்கூடாதென்று முடிவெடுக்கிறேன். கொசுவலைக்குள்ளே வெப்பம் கடுமையாக இருக்கிறது, அதை மூடியபிறகு சகிக்கமுடியவில்லை. நான் வெளியிலிருந்து வந்திருப்பவள் என்பதால் எனக்குத் தெரியும். இரவு நேரங்களில் நதிக்கரைகளில் எப்பொழுதும் குளுகுளுவென்றிருக்கும். எனக்கு பழகி இருக்கிறது, வரும்போது வரட்டுமென காத்திருக்கிறேன், அசையாமல் இருக்கிறேன், ஒருவழியாய் வந்து சேர்ந்தது. சமீபகால நடவடிக்கைகள் தந்த களைப்புகூட எனக்கு உடனடியாக உறக்கத்தைக் கொடுப்பதில்லை. கொலென் மனிதன் இந்நேரத்தில் என்ன செய்வானென்று யோசிக்கிறேன். சூர்ஸ்க்கு அருகிலுள்ள ஓர் இரவு விடுதியில், அவனும் அவனது காரோட்டியும் அமர்ந்து அரிசியில் தயாரித்த மதுவொன்றை வழக்கம்போல அமைதியாகக் குடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது அவனது இருப்பிடத்திற்கு திரும்பி, அறையின் வெளிச்சத்துக்கிடையில் எப்போதும்போல பேச்சுத்துணைக்கு ஆளின்றி ஆழ்ந்து உறங்கலாம். அன்றைய தினம், கொலென் மனிதனின் நினைப்புகளையெல்லாம் சகிக்கமுடியாதவளாக இருக்கிறேன். ஹெலெனையும் என்னால் சகிக்க முடிவதில்லை. அவர்களுக்கென்று ஒருவித வாழ்க்கை இருக்கிறது அவ்வாழ்க்கைக்கும் எனக்கும் சம்பந்தமில்லையென்றுதான் சொல்வேன். அம்மா சொலவ்துபோன்று எனக்கு என்றுமே நிறைவுகாணாத வாழ்க்கை. எனது வாழ்க்கை என்னவென்று புரியத் தொடங்குகிறது. அதைச் சொல்லும் ஆற்றலும் எனக்குண்டென்று அறிவேன். ஏனென்று தெரியவில்லை செத்தொழியலாம் போலிருக்கிறது. இதுதான் முதல்தடவை என்றில்லை, பலமுறை இம்மாதிரியான எண்ணம் வருகிறது. அவ்வாறே தனித்திருக்கவும் ஆசைப்படுகிறேன், அதற்கும் காரணத்தைச் சொல்ல எனக்குப் போதாது. இத்தனித்திருக்கும் எண்ணங்கூட எளிதில் திருப்தியுறாத குடும்பத்து பிள்ளைப்பருவத்திடமிருந்து என்னை விலக்கிக்கொண்டபோது ஆரம்பித்தது. புத்தகங்கள் எழுதப்போகிறேன் இக்கணத்தினை கடந்து, மாபெரும் பாலைநிலத்தில் அதன் சாயலில் எனது வாழ்க்கையின் அங்க அடையாளங்கள் பரவிக்கிடப்பதைப் பார்க்கிறேன்.

(தொடரும்)

nakrish2003@yahoo.fr


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner