இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2009 இதழ் 116  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம் /  கணித்தமிழ்!
மீள்பிரசுரம்!
கட்டுரை இலக்கியம்

- பா. ராகவன் -


பா. ராகவன்நண்பர்களே, நல்லபல ஓட்டல்களும் பூங்காக்களும் திரையரங்குகளும் கூப்பிடு தூரத்தில் இருக்கின்ற இந்த இடத்தில், தமிழ் கட்டுரை இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து ஆதௌ கீர்த்தனாரம்பத்திலிருந்து நான் பேச ஆரம்பித்தால் பெரிய பிரச்னையாகிவிடக்கூடிய அபாயம் இருக்கி றதாக நினைக்கிறேன். மேலும் தமிழில் கதையல்லாத எழுத்துவகையின் வயசும் மிக அதிகம் என்பது இதற்காகக் கொஞ்சம் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்துக்  கொண்டிருந்தபோது தெரிந்தது. நவீன தமிழ்ச்> சிறுகதை இடுப்பில் அரசிலை நழுவ, நீந்தத் தொடங்கியிருந்த காலத்தில் கட்டுரை இலக்கியம் என்பது எட்டுமுழ வேட்டியும் சங்குமார்க் லுங்கியும் அணிந்து உலா வரத் தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல அதைப் பண்டிதர்களிடமிருந்து பாரதி பிடுங்கிக்கொண்டுவந்து மக்கள் மத்தியில் புழங்க வி ட்டாலும் தொடர்ந்து பல காலத்துக்குக் கட்டுரைகள் என்பவை இந்தமாதிரி பொருட்படுத்திப் பேசத் தகுந்ததொரு விஷயமாக இல்லை.

தமிழ்க் கட்டுரைகளின் ஆரம்பக் காலம் எப்படி இருந்திருக்கிறது என்பதை இன்றைக்குவரை உள்ள நமது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துத் தமிழ்ப் புத்தகங்களிலிருந்து சுலபமாக அறியமுடிகிறது. இன்றைய தலைமுறைத் தமிழ்க் குழந்தைகள் ஏன் தமிழ் என்றாலே தலைதெரிக்க ஓடுகின்றன என்பதற்கான
உதாரணங்களாகவும் அவை திகழ்கின்றன.

ஆகவே இந்த 2004ம் ஆண்டில் கட்டுரைத் துறை எப்படி இருக்கிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்பதன்மூலம் நாம் எத்தனை தூரத்துக்கு வளர்ந்து வந்திருக்கிறோம், அல்லது உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருந்திருக்கிறோம் என்கிற உண்மையைக் கண்டடையமுடியும் என்று தோன்றுகிறது. பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் இனி செய்யவேண்டியவை குறித்துச் சிந்திப்பதே இம்மாதிரி மாநாடுகளின் ஆகப்பெரிய அர்த்தமாக இருக்கமுடியும் என்று நினைக்கிறேன்.

O

இன்றைக்குத் தமிழில் கட்டுரைகள், மூன்று தளங்களில் தொடர்ந்தும் தீவிரமாகவும் எழுதப்பட்டுவருகின்றன. வாரப்பத்திரிகைகள் மற்றும் தினசரிகள் அவற்றுள் முதலானவை. சிற்றிதழ் சார்ந்த எழுத்துகள் அடுத்தது. மூன்றாவதும் முக்கியமானதுமான தளம், இணையம் என்கிற இண்டர்நெட்இன்றைக்குத் தமிழில் கட்டுரைகள், மூன்று தளங்களில் தொடர்ந்தும் தீவிரமாகவும் எழுதப்பட்டுவருகின்றன. வாரப்பத்திரிகைகள் மற்றும் தினசரிகள் அவற்றுள் முதலானவை. சிற்றிதழ் சார்ந்த எழுத்துகள் அடுத்தது. மூன்றாவதும் முக்கியமானதுமான தளம், இணையம் என்கிற இண்டர்நெட்.
எழுத எடுத்துக்கொள்ளப்படுகிற விஷயங்கள், கையாளும் மொழி, பின்னணியில் இருந்து செய்யப்படக்கூடிய ஆய்வுகள், அலைச்சல்கள், தொகுப்பு நேர்த்தி, வாசிக்கிற குழுவினரின் ஏற்புப் பக்குவம், எதிர்வினைகள் அனைத்துமே இந்த மூன்று தளங்களிலும் முற்றிலும் வேறுவேறானவையாகவே இருக்கின்றன. இவை ஒருபோதும் ஒன்றையொன்று நெருங்கியோ, அனுசரித்தோ வரப்போவதில்லை என்றாலும், இந்த வித்தி யாசங்கள்தான் கதையல்லாத எழுத்து முயற்சிகளை இன்றளவும் புத்துணர்சியுடன் வைத்திருக்கிறது.

ஒருபக்கச் சிறுகதைகள், சீர்காழி ரேவதி ஜோக்குகள், கண்களில் நீர்மல்க வைக்கிற தொடர்கதைகள் விஷயத்தில் வெகுஜன இதழ்களில் பிரமாதமான மாறுதல்கள் ஏதும் சமீபகாலத்தில் ஏற்படவில்லை என்றாலும் கதையல்லாத விஷயங்களின் தேர்விலும் வெளிப்பாட்டிலும் குறிப்பிடத்தகுந்த மாறுதல்கள் உண்டாகியிருப்பதாகவே நினைக்கிறேன்.

லட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகிற பத்திரிகைகள், இப்போது தம் வாசகர்களின் ரசனையை உயர்வாக மதிக்கத் தொடங்கியிருக்கின்றன. நேற்றைக்கு வரைக்கும் சிற்றிதழ்களுக்கும் வார இதழ்களுக்கும் இடையில் இருந்த பெர்லின் சுவர் இடிக்கப்பட்டிருக்கிறது. நல்ல பல சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகள் ஆர்வமுடன் வார இதழ்களில் பத்திகள் எழுதுகிறார்கள். தமிழில் இதற்குமுன் இல்லாத அளவுக்கு அரசியல் வரலாறுகளும் சர்வதேச அரசியல் விவகாரங்களும் பொருளாதாரக் கட்டுரைகளும் நீண்ட தொடர்களாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. சதாம் உசேனின் வாழ்க்கையை சம்பந்தப்பட்ட பத்திரிகை பரபரப்பு கருதி வெளியிட்டாலும் அதனூடாக மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் அரசி யலும் இனப் பிரச்னை விவகாரங்களும் இன்னபிறவும் தமிழ் வாசகர்களுக்குச் சென்று சேர்ந்துவிடுவதை நாம் நிச்சயம் புறக்கணித்துவிட முடியாது.

கடந்த சில மாதங்களாக நான் பயணம் செய்ய நேர்கிற அனைத்து இடங்களிலும் சந்திக்கிற வாசகர்கள் மறக்காமல் ராமகிருஷ்ணனின் துணையெழுத்து குறித்துப் பேசுகிறார்கள். ஜெயமோகனின் சங்கச் சித்திரங்களை சிலாகிக்கிறார்கள். இவர்கள் இதற்குமுன் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஆர்வமுடன் விசாரிக்கிறார்கள். நேற்றைக்கு முந்தினம் நெய்வேலி போயிருந்தேன். ஒரு எஸ்.டி.டி. பூத் வைத்தி ருக்கும் இளைஞர், ராமகிருஷ்ணனின் விகடன் கட்டுரைகளின் வழியே அவரது உபபாண்டவத்தைச் சென்றடைந்த கதையைச் சொன்னபோது உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது.

கவனமுடன், ஒரு சிறுகதைக்குரிய இறுக்கமும் கட்டுக்கோப்பும் கொண்டு எழுதப்படுகிற அடர்த்தியான கட்டுரைகள் பல இன்றைக்கு வெகுஜனப் பத்திரிகைகளில் வரத் தொடங்கியிருக்கின்றன.

மூன்று வருடங்களுக்கு முன்பு குமுதம் வார இதழில் பாகிஸ்தானின் அரசியல் வரலாறை நான் ஒரு தொடராக எழுதினேன். சாமிநாத சர்மா தொடங்கிவைத்து, அவரோடேயே அடக்கமும் செய்யப்பட்டுவிட்ட அரசியல் வரலாறு என்கிற எழுத்துப்பிரிவு மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியபோது தமிழ் வாசகர்கள் அளித்த வரவேற்பும் காட்டிய ஆர்வமும் சாதாரணமாக இல்லை. அதன் தொடர்ச்சியாக ஆப்கனிஸ்தான் குறித்தும் அமெரிக்க அரசியல் குறித்தும் சாண்டில்கன் கதைகள் அளவுக்கு நீளமாக எழுதிக்கொண்டே போனாலும் விடாமல் வாசித்து உடனுக்குடன் எதிர்வினை புரியும் ஒரு பெரிய வாசகர் சமூகம் வெகுஜன பத்திரிகை உலகில் உருவாகியிருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

இதற்கு, சிறுகதைகளும் தொடர்கதைகளும் தொடர்ந்து அளித்துவரும் ஏமாற்றம் ஒரு முக்கியக் காரணியாக இருப்பதை நிராகரிக்க முடியவில்லை. கதைகளைக் காட்டிலும் யதார்த்தம் சுவாரசியமாக இருப்பதாக வாசகர்கள் நினைத்திருக்கலாம். அல்லது கதை படிக்கிற ஆர்வத்தைத் தொலைக்காட்சி ஒழித்தது காரணமாயிருக்கலாம். தொலைக்காட்சித் தொடர்களுக்குச் சற்றும் சளைக்காத அறுவைக் கதைகளாகவே தொடர்ந்து பிரசுரமாவதும் காரணமாயிருக்கலாம்.

இன்றைக்கு வாரப்பத்திரிகைகளில் தமிழ் லினக்ஸ் பற்றிப் பேசப்படுகிறது. குவாண்டம் தியரி குறித்து எழுதப்படுகிறது. மரபணுச் சோதனைகள் குறித்து உடனுக்குடன் எளிய தமிழில் விரிவான அறிமுகங்கள் தரப்படுகின்றன. இலக்கியத் துறை நிகழ்வுகள் குறித்து மனுஷ்யபுத்திரன் தன் கூர்மையான விமர்சனங்களைச் செய்தித் தொனியில் முன்வைக்கவும் இடம் இருக்கிறது. ப. சிதம்பரத்தால் ஆரோக்கிய அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள் தர முடிகின்றது.

இதை எழுதமுடியாது என்பதே இல்லாமல் எதுவும் எழுதப்படலாம் என்று வார இதழ்கள் தம் முகத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அடிப்படையில் ஒரு பொதுவான இலக்கணம் இதற்கு இருக்கிறது எப்பேற்பட்ட கனமான விஷயமானாலும் எளிமையாக எழுதப்படவேண்டும் என்பதே அது.

உ.வே.சா., சாமிநாத சர்மா வழியில் உயிர்பெறத்தொடங்கிய தமிழ் வெகுஜனப் பத்திரிகைக் கட்டுரை இலக்கிய மரபு திரு. சுஜாதாவின் வருகைக்குப் பிறகு அதன் அதிகபட்ச சாத்தியங்களைத் தொட்டு இன்றைக்கு மிகவும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் மேலும் பல எல்லைகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் ஜீவஜோதியும் செரினாவும் இல்லாதுபோனாலும் பத்திரிகைக் கட்டுரைகளில் சுவாரசியப் பஞ்சம் நேராது என்கிற நிலைமை உருவாகிவிடும் என்றே நினைக்கிறேன்.

சுவாரசியம் என்பதென்ன? வாசகர்களின் ரசனை உயர்வு. வாரப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை இது அவ்வளவுதான்.

O

சிற்றிதழ்களைப் பொறுத்தவரை அவற்றில் வெளியாகும் கட்டுரைகளின் மொழி ஏனோ நாளுக்குநாள் இறுக்கமாகிக்கொண்டே போவதாகத் தோன்றுகிறது. தீவிரமான விஷயங்களை விவாதிக்கும் கட்டுரைகளை உள்வாங்கிக்கொள்வதில் தொடர்ந்து சிரமம் இருக்கிறது. இத்தனைக்கும் தமிழ்ச் சிற்றிதழ் சூழலை வலுப்படுத்தி, வளர்த்த முன்னோடிகள் மொழி விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்தி, எளிமையை ஒரு பிரதானமான அளவுகோலாக வைத்திருந்ததை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

அந்தக் காலத்துச் சிற்றிதழ் படைப்பாளியான ஏ.கே. செட்டியார் போன்றவர்களுக்கும் சரி. தற்காலப் படைப்பாளிகளான அசோகமித்திரன், சுந்தரராமசாமி போன்றோரும் சரி. சிற்றிதழ் இயக்க முன்னோடிகள் அனைவருமே விஷயநேர்த்தி அளவுக்கு மொழி நேர்த்தியிலும் கவனம் செலுத்திவந்திருக்கிறார்கள்.

ஆனால் சமீபகால சிற்றிதழ்களில் இடம்பெறுகிற பல முக்கியமான கட்டுரைகள் அவற்றில் கையாளப்படும் மொழியினாலேயே உரிய கவனம் பெறாமல் போய்விடுவதாகத் தோன்றுகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைக்குச் சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. அதிகம் பிரபலமடையாத - அதே சமயம் முக்கியமான பல உலக எழுத்தாளர்கள் குறித்த விரிவான, முழுமையான அறிமுகங்கள் அவர்கள் படைப்புகளுடன் சேர்த்துக் கிடைக்கின்றன. சொல்புதிது இதழின் வருகைக்குப் பிறகு இலக்கியம் மட்டுமல்லாமல் இந்தியத் தத்துவங்கள், மேலை நாடுகளின் தத்துவங்கள் குறித்த விரிவான அறிமுகமும் அலசலும் வாசிக்கக் கிடைப்பதை ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறேன்.

சிற்றிதழ்களில் அதிகம் எழுதாவிட்டாலும் சிற்றிதழ் சார்ந்த சிந்தனையாளராகவே அறியப்படும் வேங்கடாசலபதியின் வருகையும் செயல்பாடும் ஆராய்ச்சிபூர்வமான கட்டுரைகளின் பெருக்கத்துக்கு மிகமுக்கியமானதொரு வாசல் திறந்திருப்பது சமீபகாலத்தில் நிகழ்ந்ததுதான்.

பெரும்பாலான சிற்றிதழ் கட்டுரையாளர்கள் குழப்பமான மொழியையே தொடர்ந்து கையாண்டுகொண்டிருந்தாலும் வேங்கடாசலபதி, காலச்சுவடு ஆசிரியர் கண்ணன், சி. மோகன், ஜெயமோகன், சாருநிவேதிதா போன்ற சிலர் மிகுந்த மொழிப்பிரக்ஞையுடன் வாசக அக்கறையுடன் எழுதுவதை அவசியம் குறிப்பிடத் தோன்றுகிறது. குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான இன்னொரு நபர் மனுஷ் யபுத்திரன். கவிஞராகவே பெரிதும் அறியப்பட்டிருக்கும் மனுஷ்யபுத்திரனை அவரது கட்டுரைகளை முன்வைத்துத் தனியே குறிப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். அடர்த்தியும் கூர்மையும் மிக்கத் தனது தலையங்கங்கள் மூலம் சமூக - அரசியல் நிகழ்வுகள் மீதான யோக்கியமான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்துவருகிறார் அவர்.

O

குறிப்பாக, கட்டுரைத் துறையைப் பொறுத்த அளவில் இன்றைக்கு இணையத்தில் நிகழும் சங்கதிகளை - நல்ல அர்த்தத்தில் - ஒரு புரட்சி என்றே சொல்லமுடியும்மூன்றாவதாக இணையம். வாரப்பத்திரிகைகளுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் கூடக் கல்யாண சம்பந்தம் உருவாகிவிடும் போலிருக்கிறது. ஆனால் இந்த இரு தரப்புமே தமிழ் இணையத்தை இன்னும் பொருட்படுத்தவே ஆரம்பிக்கவில்லை என்பதை மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாக நினைக்கிறேன். குறிப்பாக, கட்டுரைத் துறையைப் பொறுத்த அளவில் இன்றைக்கு இணையத்தில் நிகழும் சங்கதிகளை - நல்ல அர்த்தத்தில் - ஒரு புரட்சி என்றே சொல்லமுடியும். ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் கண்டங்கள் நீங்கலாக உலகின் அத்தனை கண்டங்களிலிருந்தும் பல தமிழ்ப் படைப்பாளிகள் மிகத் தீவிரமாகவும் சி றப்பாகவும் பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஆக்கபூர்வமான கட்டுரைகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், விஞ்ஞானம், அரசியல் ஆகிய ஐந்து துறைகள் தமிழ் இணையத்தில் அதிகம் அலசப்படுகின்றன.

இத்தனைக்கும் வார இதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் இருப்பதுபோன்ற நீண்ட சரித்திரமெல்லாம் தமிழ் இணையத்துக்கு இல்லை. ஒரு பத்திருபது வருஷங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்களாகத்தான் இணையத்தில் தீவிரமாகத் தமிழ் புழங்க ஆரம்பித்திருக்கிறது.

இரா. முருகன், ஜெயமோகன், பாவண்ணன் போன்ற தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் தவிர, இணையத்திலேயே பிறந்து வளர்ந்த எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகப் புகலிடத் தமிழர்களின் இன்னொரு தாய்வீடாகவே தமிழ் இணையம் இன்றைக்கு ஆகியிருக்கிறது என்று சொல்லிவிடமுடியும்.

கோ. ராஜாராம் நடத்திக்கொண்டிருக்கிற 'திண்ணை' என்கிற மின்னிதழும் வ.ந. கிரிதரனின் 'பதிவுகள்' மின்னிதழும் தொடர்ந்து தீவிரமாக, கட்டுரை இலக்கியத்துக்கு ஆற்றிவரும் பங்கினைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மிகச் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாலனின் 'திசைகள்' குறுகிய காலத்தில் செய்திருக்கும் சாதனைகள் பிரமிப்பூட்டுபவை.

இணையத்தில் எழுதும் எழுத்தாளர்கள், தமிழ் சமூகத்தின் தற்கால நடப்புகளை இணையத்திலிருந்தே செய்தியாகப் பெறுகிறார்கள். பிறகு மின் குழுக்களில் நண்பர்களுடன் விவாதிக்கும்போது செய்திகளின் பல பரிமாணங்கள் வெளியாகின்றன. கட்டுரையாகப் பதிவு செய்யப்படவேண்டிய விஷயங்களை உடனுக்குடன் எழுதி மின்னிதழ்களுக்கு அனுப்புகிறார்கள்.

பத்திரிகைகளில் இருப்பது போல இலக்கிய வாசகர்கள் - வெகுஜன வாசகர்கள் என்கிற பாகுபாடுகள் இன்னும் இணையத்தைத் தீண்டவில்லை என்பதால் எல்லா மின் இதழ்களிலும் மின் குழுக்களிலும் எல்லாவிதமான எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்றாக இணைந்தே படைக்கிறார்கள்; படிக்கிறார்கள்.
விவாதங்களின்போது தரமான கட்டுரைகள் எவை, எந்தெந்தக் காரணிகளைக்கொண்டு தரம் மதிப்பிடப்படுகி றது என்பது வெளியாகிவிடுவதால் சராசரி வாசகர்கள் சுலபமாகத் தம்மை மதிப்பிட்டுக்கொள்ளவும் வாசி ப்புத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும் முடிகிறது. இதை மிக முக்கியமானதொரு விஷயமாக நினைக்கிறேன்.

தமது தீவிரமான நவீன இலக்கிய அறிமுகக் கட்டுரைகள் மூலமும் ஆலோசனைகள் மூலமும் ராயர் காப்பி க்ளப் என்கிற மின் குழுவிலிருந்து எழுத்தாளர் இரா. முருகன் உருவாக்கியிருக்கும் இளம் கட்டுரையாளர்கள் குறைந்தது ஐம்பது பேராவது இருப்பார்கள். சுமார் இருநூறு பேர் உறுப்பினர்களாக இருக்கிற ஒரு குழுவில் இரண்டு வருடங்களில் சுமார் ஐம்பது நம்பிக்கை அளிக்கும் கட்டுரையாளர்களை உருவாக்குவது என்பது சாதாரண விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. வெகுஜன இதழ்களிலோ, சிற்றி தழ்களிலோ இது நிச்சயம் சாத்தியமில்லை. இந்த ஐம்பது இளம் படைப்பாளிகளுக்குப் பத்திரிகை உலகோடு பரிச்சயம் கிடையாது. அவர்கள் எழுதும் விஷயம் அன்னா கோர்னிகோவாவின் அழகு பற்றி யதாக இருக்கலாம், அருந்ததி ராயின் படைப்புகள் பற்றியதாக இருக்கலாம், அத்வைதம் குறி த்தோ, அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து குறித்தாகவோ இருக்கலாம். இணையத் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அவர்களைத் தெரியும்.

இதேபோல பழந்தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் குறித்துத் தீவிரமாக விவாதிக்கும் கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரிக்கும் 'அகத்தியர்' என்கிற மின் குழுவை மலேசியாவிலிருந்து டாக்டர் ஜெயபாரதி நடத்திவருகிறார்.

இங்கே வெளியாகும் கட்டுரைகளுக்கும் நமது பத்திரிகைக் கட்டுரைகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், இணையத்தில் எழுதப்படும் கட்டுரைகள் அதனளவில் ஒரு முழுமையையும் எளி மையையும் தவறாமல் பெற்றிருக்கின்றன. கடல் கடந்து வசிக்கிற இந்த எழுத்தாளர்கள் தமிழில் எழுதுவதை ஒரு சந்தோஷமான கடமையாக முதலில் நினைப்பதால், மற்ற அனைத்தைவிட மொழியின் அழகைத் தம் படைப்பெங்கும் பரவவிட நினைக்கிறார்கள். இறுக்கங்கள் இல்லை. மயக்கங்கள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, எழுதுவோர் யாருக்கும் தம்மைப்பற்றிய பிரமைகள் கிடையாது.

கனடாவில் வசிக்கிற விஞ்ஞானியான வெங்கட் ரமணனும் சிங்கப்பூரில் வசிக்கிற இன்னொரு விஞ்ஞானியான முகுந்தராஜும் இன்னும் சில நண்பர்களும் லினக்ஸ் என்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முற்றி லுமாகத் தமிழ்ப்படுத்தி, சராசரித் தமிழர்கள் அனைவரும் கம்ப்யூட்டரின் சௌகரியங்களை அனுபவி க்கவேண்டும் என்பதற்காக வருஷக்கணக்காகப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஒரு வரியைப் புரிந்துகொள்வதற்கே கொஞ்சம் மெனக்கெடவேண்டும். ஆனால் டாக்டர் வெங்கட் ரமணன், தமிழ் லினக்ஸ் குறித்து மிக விரிவாகவும் அதிகபட்ச எளிமையாகவும் சுவாரசியமாகவும் 'திண்ணை' மின் இதழில் எழுதிய கட்டுரைத் தொடர் உண்மையிலேயே பிரமிப்பூட்டக்கூடியது. தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு அறிவியல் எழுத்து என்றால் திரு. சுஜாதா ஒருவரைத் தான் தெரியும். ஆனால் இணையத்தில் குறைந்தது பத்துபேராவது மிகத் தீவிரமாக அறிவியல் கட்டுரைகள் தந்துகொண்டிருக்கி றார்கள்.

அறிவியல் மட்டுமல்ல. வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை மண்ணின் வாசனையுடன் பதிவுசெய்யும் மதி என்கிற சந்திரமதி கந்தசாமி, ரமணீதரன் கந்தையா போன்றவர்கள், தொழில்நுட்பம் சார்ந்த
வளர்ச்சிகளை உடனுக்குடன் அறிமுகப்படுத்தும் டாக்டர் பத்ரி சேஷாத்ரி, வெங்கட், முகுந்தராஜ் போன்றவர்கள், நவீன இலக்கியம், சமூகம், அரசியல், சட்டம் மற்றும் கலைத் துறைகளில் ஆழமான வி மர்சனக் கருத்துகளை முன்வைக்கும் ரவி ஸ்ரீனிவாஸ், ஐகாரஸ் பிரகாஷ், கே.வி.ராஜா, பிரசன்னா, பி ரபு ராஜதுரை போன்றவர்கள், கட்டுரைகள் மூலம் கவிதையை ரசிக்கக் கற்றுக்கொடுக்கும் ஹரிகிருஷ் ணன், அபுல்கலாம் ஆசாத் போன்றவர்கள் -

போதும். பொதுவாகப் பட்டியல்கள் போரடிக்கிற ரகத்தைச் சேர்ந்தவை. ஆனால் இந்தப் பெயர்களுக்கு உரியவர்களின் சராசரி வயது அதிகபட்சம் முப்பத்தைந்துக்குள்தான் இருக்கும். இவர்களை இணையத்துக்கு வெளியே இருக்கிற உலகத்தைச்சேர்ந்தவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அறியாதது பெரிய இழப்பு என்று பின்னால் வருந்தவேண்டிய அளவுக்குத் தமது கட்டுரைகளின்மூலம் மௌனமாக மிகப்பெரிய காரி யங்களைச் செய்துகொண்டிருப்பவர்கள் என்பதால்தான் பெயர்களையாவது அறிமுகப்படுத்த விரும்பினேன்.

O

தமிழ் கட்டுரை இலக்கியத்தின் மிக நீண்ட மரபு இந்த இருபத்தோறாம் நூற்றாண்டின் ஆரம்ப வருஷங்களில் ஒரு புதுப்பரிமாணம் கொண்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். சிற்றிதழ்களின் வசைக்கட்டுரைகளையும் வார இதழ்களின் அக்கப்போர்க் கட்டுரைகளையும் சேர்த்தேதான் இதைச் சொல்லுகிறேன்.

பா. ராகவன்
09/01/2004
நன்றி: http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/4995

 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்