இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

'பனியும் பனையும்' தொகுப்பின் கனடியத் தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளிகள் பற்றியதொரு பதிவு!

- வ.ந.கிரிதரன் -


பனியும் பனையும்'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுப்பு 1994இல் எஸ்.பொ.வின் மித்ர பதிப்பக வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்து பலரதும் கவனிப்பைப் பெற்ற தொகுதி. மேற்படி தொகுதியில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழப் படைப்பாளிகளின் 39 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மேற்படி தொகுதியிலுள்ள கனடா எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் அவர் பற்றிய விபரங்களைச் சுருக்கமாக பதிவு செய்யும் கட்டுரையிது. மேற்படி தொகுப்பான 'பனியும், பனையும்' தொகுப்பின் இரண்டாவது தொகுப்பு விரைவில் மீண்டும் மித்ர பதிப்பக வெளியீடாக, மேலும் பல சிறுகதைகளைச் சேர்த்து வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்படி தொகுப்பில் வெளிவந்த கனடியத் தமிழ்எழுத்தாளர்களின் படைப்புகளையும், அவர்களையும் மிகவும் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதோடு பதிவு செய்வதும்தான் இப்பதிவின் நோக்கம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளில் ஒருவரான 'பவான்' என்னும் படைப்பாளியைப் பற்றி மேலதிகத் தகவல்களைப் பெற முடியவில்லை. இவரைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்தவர்கள் எமக்கு அவற்றைச் சுருக்கமாக எழுதி அனுப்பினால நல்லது. (எமது மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com)

மேற்படி தொகுதியில் இடம் பெற்றிருக்க வேண்டிய பல கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் உரிய நேரத்தில் கிடைக்காத
காரணத்தினாலோ அல்லது மேற்படி கதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப திரு. எஸ்.பொ. அவர்களினால் தொடர்புகொள்ளப்பட்ட கனடியத் தமிழ் எழுத்தாளர்கள் தெரிவு செய்யாத காரணத்தினாலோ வெளிவரவில்லை. அவர்களது சிறுகதைகளையும் வெளிவரவிருக்கின்ற இரண்டாவது 'பனியும் பனையும்' தொகுப்பு கொண்டிருப்பது அவசியமானதென நினைக்கின்றேன். மேற்படி தொகுப்பில் வெளிவந்த எனது 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' என்னும் சிறுகதையைக் கண்டபோது எனக்கு வந்த ஆச்சரியத்தை விட , சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவர்களும் ஆச்சரியப்பட்டுப் போயிருக்கலாம். ஏனெனில் அவர்கள் யாருமே அனுப்பாத வ.ந.கிரிதரனின் சிறுகதையொன்று மேற்படி தொகுப்பில் இடம் பெற்றதுக்குக் காரணம எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியாக இருக்கலாமென்பதென் ஊகம்.

மேற்படி 'பனியும், பனையும்' தொகுதிப்பின் சிறுகதைகள் பலவற்றை 'நூலகம்' இணையத் தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். ஆனால்
'பனியும்,பனையும்' தொகுப்பிலுள்ள வட அமெரிக்கக் கதைகள் (வட அமெரிக்கக் கதைகள் என்று குறிப்பிட்டிருந்தாலும் அவை
அனைத்தும் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளே. புதிய பதிப்பில் அமெரிக்காவிலிருந்தும் படைப்பாளிகளிடமிருந்து கதைகளைப் பெற்று வெளியிட்டால் அது சிறப்பாகவிருக்கும் என்பதென் கருத்து) மற்றும் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்ட நோர்வேச் சிறுகதை ஆகியன விடுபட்டுப்போயுள்ளன. தட்டச்சுச் செய்தவர் நேரமின்மை காரணமாக தவிர்த்திருக்கலாம் போலும். சுயவிருப்புத் தொண்டர்களின உதவியால் இயங்கும் நல்லதொரு திட்டமான 'நூலகம்' இணையத்தளத் திட்டத்திற்கு மேற்படி விடுபட்ட கதைகளைத் தட்டச்சுச் செய்து அனுப்ப முடிந்தவர்கள் நேரம் கிடைக்கும்போது அனுப்பினால் அது 'நூலக'க் குழுவினருக்குப் பெரிதும் உதவியாகவிருக்கும். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளை, கலையிலக்கியப் பங்களிப்புகளை இணையத்தில் பதிவேற்றி வரும் நூலகத் திட்டம் இன்று ஈழத்துத் தமிழ் இலக்கியம்
பற்றிய ஆய்வுகளுக்கு மிகுந்த பயனுள்ள உசாத்துணைத் திட்டங்களினொறாக இருந்து வருவது பாராட்டுதற்குரியது. (நூலகத் திட்ட இணையத்தள முகவரி:
http://noolaham.net )

மேற்படி தொகுப்பிலுள்ள வட அமெரிக்கச் சிறுகதைகள் மற்றும் அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:

அளவெட்டி சிறிசுக்கந்தராசா - 'மரபுகளும் உறவுகளும்'
ஆனந்த் பிரசாத் - 'அவர் நாண...'
அ.கந்தசாமி - 'விடிவு தூரத்தில்'
வ.ந.கிரிதரன் - 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'
சக்கரவர்த்தி - 'மனசு'
க.நவம் - 'க.குழம்பும், க.முரண்பாடும்'.
நிலா குகதாசன் - 'பிரசவம்'
பவான் - 'முகமிழந்த மனிதர்கள்'
என்.கே.மகாலிங்கம்- 'வெறுமை'
ஜோர்ஜ் குருஷேவ் - EX - அலைகளில்'

அளவெட்டி சிறிசுக்கந்தராசா:அளவெட்டி சிறிசுக்கந்தராசா: கனடாத் தமிழ் எழுத்தாளர்களில் அளவெட்டி சிறிசுக்கந்தராசாவுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. கனடாவிலிருந்து வெளிவந்த நான்காவது பரிமாணம், தாயகம், செந்தாமரை மற்றும் தமிழர் மஞ்சரி போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இவரது பல படைப்புகள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைத் தொகுதியான 'சிறிசுவின் சில கதைகள்' எஸ்.பொ.வின் மித்ர வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்துள்ளது. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்றவரான அளவெட்டி சிறிசுக்கந்தராசா மரபுகளைத் துணிச்சலுடன் தனக்கேயுரிய மொழி நடையில் தகர்ப்பதில் வல்லவர். இவரது கதைகளைப் பற்றி எழுத்தாளர் க.நவம் அவர்கள் "புகலிட வாழ்வின் வினோத ஆனுபவங்களை இடையிடையே ஊரின் காற்றை அங்கிருந்தும், சில வேளைகளில் இங்கிருந்தும் சுவாசிக்கும் கரிசனை, மனவெளியிலும் மாய விசித்திரங்களிலும் மொய்க்கிற பிரமைகளின் பிரதிபலிப்பு என்கிற சூழ்முழுமை அமசங்கள் யாவற்றையுமே தனக்குரிய மாறுபட்ட பாணியில் குழைத்து, இவரால் அழகாக வரையப்பட்ட சித்திரங்கள்'  என்பார். அத்துடன் அரசியல் சூழல் காரணமாக புலம்பெயர்ந்த ஈழந்த்தமிழர்களின் புலம்பெயர் அனுபவங்களை அனுகூலமாக்கிக் கொண்ட் தமிழ்ப் ப்டைப்பாளிகளில் அளவெட்டி சிறி முக்கியமான ஒருவர் என்றும் குறிப்பிடுவார்.

இவரது புகைப்படம் கிடைக்கவில்லை. அதனால் அவரது கவிதைத் தொகுதியின் அட்டைப்படத்தினை ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம்.ஆனந்த் பிரசாத்: 1975இலிருந்து எழுதிவரும் ஆனந்த பிரசாத் தற்போது கனடாவின் மாண்ட்ரியால் நகரில் வசித்து வருகின்றார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பகாலக் கவிதைகள் பலவற்றை இலங்கை இராணுவ்ச் சுற்றிவளைப்பொன்றின்போது எரித்து விட்டதாகத் தெரியவருகிறது. கவிதைகள், சிறுகதைகள், மற்றும் கலையிலக்கிய கட்டுரைகள் எழுதுவதில் வல்லவரிவர். புலமை மிக்க மிருதங்க வித்துவானான ஆனந்தபிரசாத் மாண்ட்ரியாலில் 'நிருத்தியா' அமைப்பில் மிருதங்கள் வித்துவானாக இருப்பதோடு மிருதங்க வகுப்புகளையும் நடத்தி வருகின்றார். சிறந்த பாடகரும் கூட. இவரது கவிதைகள் மற்றும் இசை, நாட்டியக் கலை சம்பந்தமான விமர்சனக் கட்டுரைகள் பல தாயகம், காலம், தேடல் போன்ற சஞ்சிகைகள் பலவற்றில் வெளிவந்துள்ளன. 'காலம்' வெளியீடாக இவரது 'ஒரு சுயதரிசனம்' என்றொரு கவிதைத் தொகுதி வெளியாகியுள்ளது. ஒருகாலத்தில் அதிகளவில் கனடாத் தமிழிலக்கிய உலகில் பங்களித்துக் கொண்டிருந்த ஆன்ந்த் பிரசாத் அண்மைக் காலமாக அஞ்ஞாதவாசம் செய்வதும் தான் ஏனோ?

அ.கந்தசாமிஅ.கந்தசாமி:சிறந்ததொரு பெளதிக ஆசிரியராக எழுபதுகளில் யாழ்நகரில் அறியப்பட்ட அ.கந்தசாமி நல்லதொரு எழுத்தாளருமாவார். அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து எழுதத்தொடங்கிய இவரொரு பேராதனைப் பல்கலைக் கழகத்து விஞ்ஞான பீடப் பட்டதாரி. கனடாவிற்குப் புலம்பெயர்ந்தபின்னர் கலை, இலக்கிய முயற்சிகளில் மிகவும் தீவிரமாக வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, நாடகமெனச் செயற்பட்டவர். இவர் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், சினிமா விமர்சனமெனப் பன்முக ஆற்றல் வாய்ந்த படைப்பாளிகளிலொருவர். கனடாத் தமிழிலக்கியத்தில் குறுகிய காலமே வெளிவந்தபோதுமே தடம் பதித்த 'ழகரம்' சஞ்சிகையினை வெளியிட்டதோடு அதன் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தவர். இவரது 'கானல்நீர்க கனவுகள்' என்னும் கவிதைத் தொகுதியொன்று .எழுத்தாளர் க.நவத்தின் 'நான்காவது பரிமாணம்' வெளியீடாக வெளிவந்துள்ளது. இன்னுமொரு கவிதைத் தொகுதியான 'காலத்தின் பதிவுகள்' என்னும் கவிதைத் தொகுதியில் ரதன் , மலையன்பன் ஆகியோருடன் இவரது கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

வ.ந.கிரிதரன்:இலங்கையிலிருந்த காலகட்டத்தில் 1970களிலிருந்து எழுத்துலகில் காலடி வைத்தவர். இலங்கையிலுள்ள மொறடுட்வைப் பல்கலைக கழகக் கட்டடக்கலைப் பட்டதாரி. இவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்நாவல்கள் ஆகியன தாயகம், புரட்சிப்பாதை, தேடல், ழகரம் , சுபமங்களா, கணையாழி, ஆனந்த விகடன், வீரகேசரி, சிரித்திரனுட்படப் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 2000ஆம் ஆண்டிலிருந்து 'பதிவுகள்' இணைய சஞ்சிகையினை (http://www.pathivukal.com) வெளியிட்டு அதன் ஆசிரியராகவிருந்து நடாத்தி வருபவர். திண்ணை, பதிவுகளுட்படப் பல்வேறு இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், அறிவியற் கட்டுரைகள் மற்றும், நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைத் தொகுதியான 'அமெரிக்கா', 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' (ஆய்வு) ஆகியன தமிழகத்திலிருந்து சிநேகா பதிப்பக வெளியீடுகளாகவும், 'மண்ணின் குரல்' (நான்கு நாவல்களின் தொகுப்பு) 'குமரன் பபளிஷர்ஸ்' வெளியீடாகவும் வெளிவந்துள்ளன. கனடாவிலிருந்து 'மங்கை'  பதிப்பக வெளியீடுகளாக 'எழுக அதிமானுடா' (கவிதைகள்), 'மண்ணின் குரல்' (தொகுப்பு) ஆகியன வெளிவந்துள்ளன. அண்மையில் 'திண்ணை', 'பதிவுகள்' ஆகிய இணைய சஞ்சிகைகளில் இவரது 'அமெரிக்கா' நாவலின் இரண்டாவது பகுதி, நல்லூர் இராஜதானி நகர அமைப்பின் (திருத்தப்பட்ட பதிப்பு) ஆகியன தொடராக வெளிவந்துள்ளன.

சக்கரவர்த்தி; நன்றி: வைகறைசக்கரவர்த்தி:'யுத்த சன்னியாசம்' கவிதைத் தொகுதி , 'யுத்தத்தின் இரண்டாம் பாகம்' (சிறுகதைத் தொகுப்பு) ஆகியவற்றின் மூலம் நன்கறியப்பட்ட எழுத்தாளர் சக்கரவர்த்தி ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். 'மஞ்சரி', 'ழகரம்', 'தாயகம்', 'வைகறை' , 'முழக்கம்'  போன்ற பலவேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இவரது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் ஆகியன வெளிவந்து கவனிப்பைப் பெற்றன. யுத்தத்தைத் தின்போம் என்ற மூன்று கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிலும், ஒருவராகப் பங்களிப்புச் செய்துள்ளார். தனக்குச் சரியென்று பட்டதைத் துணிச்சலுடன் முன்வைக்கத் தயங்காதவரிவர்.

க.நவம்க.நவம்:ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரான 'தெணியானின்' சகோதரரான க.நவம் தற்போது கனடாவிலுள்ள 'தொராண்டோ'வில் வசித்து வருகின்றார். கனடாத் தமிழ இலக்கியத்தில் தடம் பதித்த இன்னுமொரு சஞ்சிகையான 'நான்காவது பரிமாணம்' சஞ்சிகையின் ஆசிரியரும், வெளியீட்டாளரும் இவரே. இவரது 'உள்ளும் புறமும்' சிறுகதைத் தொகுதி இலங்கையில் வெளிவந்து 'ஆக்கவுரிமைகள் வியாபாரக் குறிகள் பதிப்பகத்தினரால் நடாத்தப்பட்ட அகில இலங்கைக்கான சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினைப் பெற்ற நூல். பின்னர் கனடாவிலும் வெளிவந்தது; கவனத்திற்குரியது.

நிலா குகதாசன்நிலா குகதாசன்:இளம் வயதிலேயே அமரராகிய எழுத்தாளர் நிலா குகதாசன் கனடியத் தமிழ் இலக்கியவுலகில் குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான இன்னுமொரு படைப்பாளி. தனது குறுகியகால வாழ்வில் சிறுகதை, கவிதை, நாடகம், நடிப்பு, விமர்சனமெனப் பல்வேறு துறைகளிலும் கால பதித்தவர். சஞ்சிகைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலிகளென பல்வேறு வெகுசனத் தொடர்பச் சாதனங்களிலும் தன் கலை, இலக்கிய ஆற்றலை 'நிலா', 'அக்கினிக்குஞ்சு', 'திரிலோகசஞ்சாரி' 'ஆசான்' போன்ற பலவேறு
புனைபெயர்களில் வெளிப்படுத்தியவர். ஒளிபரப்புத் துறையிலும் பாண்டித்தியம் பெற்ற இவர், கனடாவில் வெளியான தமிழ் வீடியோ
சஞ்சிகையான 'இளையநிலா'வின் ஆசிரியரும், தயாரிப்பாளரும் , வெளியீட்டாளருமாவார். இவரது கவிதைத் தொகுதியான 'இன்னொரு
நாளில் உயிர்ப்பேன்' கனடாவில் ரோஜா சஞ்சிகையின் வெளியீடாக வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது..

பவான்:மேற்படி 'பனியும் பனையும்' தொகுப்பிலுள்ள 'முகமிழந்த மனிதர்கள்' சிறுகதை அண்மையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் கவனத்தையீர்த்த கதைகளிலொன்று. இவரது சிறுகதைகள் சில 'தாயகம்' சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. இவரைப் பற்றிய விபரங்களை அறிய முயன்றபோது மேலதிகத் தகவல்களையும் பெறமுடியவில்லை. இவரைப் பற்றி, இவரது இலக்கிய முயற்சிகள் பற்றி மேலதிகத் தகவல்களை அறிந்தவர்கள் எமக்கு அனுப்பி வைக்கலாம். பயனுள்ளதாகவிருக்கும்.

என்.கே.மகாலிங்கம்:என்.கே.மகாலிங்கம்:எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் இலங்கையிலிருந்த காலத்திலேயே நன்கறியப்பட்டவர். 'பூரணி' என்னும் இலக்கியச் சஞ்சிகையின் இணையாசிரியர்களிளொருவராக இருந்தவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மற்றும் மொழிபெயர்ப்பென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் காலபதித்த இன்னுமொரு முக்கியமான படைப்பாளி. நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தவர். புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளரான சினுவா அசுபேயின் Things Fall Apart என்னும் புகழ்பெற்ற நாவலைத் தமிழில் 'சிதைவுகள்' என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர். மேற்படி நூல் தமிழகத்திலிருந்து காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேற்படி காலச்சுவடு பதிப்பகம் இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய தொகுதியொன்றினை 'இரவில் நான் உன் குதிரை' என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது. இவை தவிர ஏற்கனவே இவரது 'தியானம்' என்னும் சிறுகதைத் தொகுதியும், 'உள்ளொளி' என்னும் கவிதைத் தொகுதியும் நூலுருப்பெற்றுள்ளன. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் 'முற்போக்கு' , 'நற்போக்கு' போன்ற இலக்கியக் கோட்பாடுகளுக்கெதிராகப் 'பிரபஞ்ச யதார்த்தவாதம்' என்னும் கோட்பாட்டினை முன்வைத்த எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் மீதும், , அவரது இலக்கியக் கோட்பாடுகள் மீதும் மிகுந்த பற்றுதலும், மதிப்பும் வைத்திருப்பவரிவர்.

ஜோர்ஜ் குருஷேவ்: சிறந்த சிறுகதை ஆசிரியரான ஜோர்ஜ். குருஷேவ் கனடாவில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக வாராவாரம் வெளிவந்த 'தாயகம்' சஞ்சிகை/பத்திரிகையின் ஆசிரியர். அதன் வெளியீட்டாளரும் கூட. 'தாயகத்தில்' வெளிவந்த இவரது 'கொலைபேசி' சிறுகதை
பலத்த வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்த கதைகளிலொன்று. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனமெனப் பன்முக எழுத்தாற்றல் வாய்ந்த படைப்பாளிகளில் ஜோர்ஜ். குருஷேவ்வும் ஒருவர். இவரது படைப்புகளும் 'தாயகம்', 'தேடல்' உட்படப் பல்வேறு சஞ்சிகை,
பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

ngiri2704@rogers.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner