இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2007 இதழ் 92  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
பதிவுகளில் அன்று!

- பதிவுகள் சென்ற ஆண்டிலிருந்துதான் 'யூனிகோட்டி'ல் வெளிவருகின்றது. அதற்கு முதல் வெளிவந்த பதிவுகள் இதழின் ஆக்கங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட படைப்புகள் யூனிகோட்டில் இப்பகுதியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. -

பதிவுகள்: அக்டோபர் 2002 இதழ் 34!~
தேவகாந்தனின் 'கனவுச் சிறை'!
-ந.இரவீந்திரன்
-

1
தேவகாந்தனின் 'கனவுச் சிறை'! ஐந்து பாகங்களில் 1300 பக்கங்களுக்குள் இலங்கை மக்களின் போராட்ட வாழ்வை கலைப் படைப்பாக்கம் செய்துள்ள நாவல் "கனவுச் சிறை" . 'திருப்படையாட்சி' எனும் முதற் பாகம் ஈழத் தமிழர் தேசிய விழிப்புணர்வைப் படையெடுப்பால் ஒடுக்கிவிட முனையும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு எதிராக இளைஞர்கள் படைதிரண்டு , இயக்கங்களாக ஸ்தாபனமயப்பட்டு போர்க்கோலம் பூணுவதைக் காட்டுவது. இலங்கை பூராவும், பரந்தும் சாத்தியப்படும்போது திரைகடலோடியும் திரவியம் தேடி வாழ்வை வ்ளப்படுத்தும், பொதுவாக யாழ்ப்பாணத்ததும் குறிப்பாகத் தீவினதும்வாழ்வு, போராட்டச் சூழலில் சுழன்றடிக்கும் பாங்கையே நாவல் சித்திரிக்கின்றது. இளம் வயதில் கணவனை இழந்து கைம்பெண்ணாய் வாழ்ந்து தங்களை வளர்த்த தாய் மகேஸ்வரியின் கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதற்காய்க் கொழும்பு சென்று வேலை தேட முனையும் ராஜலட்சுமி [ராஜி] ஈழப் பிரிவினையை மனதளவில் விரும்பாத போதிலும் முடிவில் போராட்டத் தேவையின் தவிர்க்கவியலாமையை உணரத் தலைப்படும் வகையிலான நிர்ப்பந்தத்துக்குள்ளாவதை முதற் பாகம் காட்டும்.

ராஜியின் விருப்பத்தைப்பற்றிப் பொருட்படுத்தாமலே போராளியாய் ஓடிப்போன அவளது காதலன் சுதந்திரன் [சுதன்], அவள் போராட்ட அவசியத்தை உணரும்போது இயக்கத்தை நீங்கி தப்பியோடியதில் கதிகலங்கிப் போவாள் ராஜி. அவள் முன்னால் பல வினாக்கள். இனி என்ன அவனுடன் ஓடுவதா,அன்றிப் போராடும் இனத்தின் மீட்சிக்கு முடிந்த பங்களிப்பை நல்குவதா, நல்குவதாயின் எப்படி என்று இப்படிப் பல.அவளுக்கு மட்டுமல்ல , முழு இனமும் அலமந்துபோய் போர்ச் சக்திகள் சிதறி ....எதிர்காலம் பெருங்கேள்விக்குறியான அவலம்.அது 'வினாக் காலம்' எனும் இரண்டாம் பாகத்தின் அடங்கல்.

அக்னி பகவானாய்த் திகழ்ந்து கதி மோட்சம் தருமென எத்ர்பார்த்து எத்ர்பார்த்து ஏமாந்திருக்கையில் வாராதுவந்த அயலவர் அக்னித் திரவம் கொட்டிப் போராடும் இனத்தின் அபிலாஷைகள் அனைத்தையும் பொசுக்கிவிட்டதில் அதிர்ச்சிக்குள்ளான ஈழத் தமிழர் வாழ்வு 'அக்னி திரவம்' எனும் மூன்றாம் பாகத்தில். புலம்பெயர்ந்த மன்களில் காலூன்ரும் எத்தனிப்புகள் வலுவடையும், கலாசாரத்தாலும் அந்நியப்பட்ட ஐரோப்பாவிற்கோ கனடாவிற்கோ ஓடிவிடாமல் இந்திய அகதி முகாங்களில் வாடும் ஈழ ஏதிலியர்களுக்கு எனத் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் ராஜி.

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பிராந்தியம் முழுதாய் வேரறுத்துப் புலப்பெயர்வடைந்த காலப் பகுதி 'உதிர்வின் ஓசை'எனும் நாலாம் பாகம் . எத்தகைய அதிர்வுகளையும் தாங்கி அந்த நிலத்துடன் இரண்டறப் பிணைந்து வாழ்ந்த லட்சக்கணக்கான மண் சுமந்த மேனியர், எல்லாம் இழந்து கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு நடைப் பிணங்களாய் தெற்கு நோக்கி நகர்ந்தது இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் மோசஸ் தலைமையில் யூத மக்கள் எகிப்தைவிட்டுப் பெயர்வடைந்த அவலத்துடன் ஒப்பியல்புடையது. இந்த அநர்த்தங்களுள் தொடர்ந்த யுத்தத்தால் தமது வாழ்வை இழந்த சிங்கள மக்களுக்குள்ளும் சமாதானத் தீர்வுக்கான சலசலப்பு . யுத்த சன்னத்தமான பௌத்த தலைமைப் பீடத்தின் ஒரு பிரதிநிதியாய் குணானந்த தேரர்;சமாதானக் குரலாய் சங்கரானந்த தேரர்.இவர்களது மோதல்களும் பல்வேறு எத்தனிப்புக்களும்.

மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழத்தொடங்கி அந்த மண்ணில் வேரோடிவிட்ட நிலையில் ,சொந்த மண்ணின் தீர்வுக்குரிய தமது பங்களிப்புக்கான வடிவத்தைக் கலாசாரப் பேரியக்க வாயிலாகக் கண்டடைந்ததன் பேறு இறுதிப் பாகமான 'ஒரு புதிய காலம்'. சிறுமியாக ஜேர்மனியில் பிரவேசித்து இளமைக்காலத்தை யுத்த எதிர்ப்பு ஜேர்மனிய இலக்கியத்தை உட்செரித்து வளர்ந்துவிட்டிருந்த ஆநந்தி அந்தப் புதிய காலத்தின் குரல். ராஜி தன் வாழ்வுப் போராட்டம் வகுத்துவிட்டிருந்த வியூகங்களைத் தகர்த்து இறுதி நிலையில் அந்தப் புதிய குரலில் நம்பிக்கைகொண்டு தனக்கான ஒரு தளத்தை மேலைத்தேசத்து தமிழர் வாழ்வுப் போராட்டத்தில் கண்டடைந்து அங்கே போக முடிவுசெய்வாள். ஆரம்பத்தில் போராட்டத்தை வெறுத்தவள்தான்;போர்க் கொந்தளிப்பில் மக்கள் உள்ளீர்க்கப்பட்டபோது ஐரோப்பாவுக்கு ஓடுவதை வெறுத்தவள்; யுத்தத்துக்கு முடிவுகட்டும் அடித்தளம் அங்கே கட்டியெளுப்பப்பட முடியும் என அவள் திடங்கொள்ளூம்போது இந்தக் கனவுச் சிறை நிறைவுபெறுகிறது.

2

இப்படிச் சொல்வதால் ராஜிதான் இந்நவீனத்தின் பிரதான பாத்திரம் எனக் கருதிவிடக்கூடாது. இருபத்தொரு வருடக் காலம்தான் இந் நாவலின் பிரதான பாத்திரம். அக் காலியின் லீலையில் நாலு தலைமுறை மக்கள் புரட்டியெடுக்கப்படும் ஓட்டம் கதைப் போக்கு. அதற்கான பின் தளமாக இருபத்தொரு நூற்றாண்டுக் காலம்.வேறுவகையில் சொன்னால் , இரண்டாயிரத்து நூறு வருஷங்களின் ஈழம் வாழ் தமிழ் பேசும் மக்களதும், சிங்கள மக்களதும் ஊடாட்டமும் , உறவும், முரணும் ஒரு குறித்த இருபத்தொரு வருட கால வெளிப்படுகையாய் "கனவுச் சிறை". இலங்கைச் சமூகம் அந்த உறவை இந்த இருபத்தொரு ஆண்டுகளில் எப்படி உரசிப் பார்த்திருக்கிறது? காலம் முற்றுப் புள்ளி தரிப்பதில்லை. ஒரு முரண்தீர்வு முற்றுப் புள்ளி இட்டுவிட்டால் அது தொடர்புள்ளிகளை இட்டோ , அன்றிக் கம சேர்த்தோ ,கம ஆக்கிவிட்டோ அது வேறொரு தளத்தில் தொடரும். இந் நவீனமும் கண்டடைந்த மார்க்கத்தைத் தொடர்ந்து நீடிக்கலாம்,அன்றேல் முறித்துவிட்டு இன்னொரு தளத்தில் செல்நெறி தொடங்கப்பட்டுக் காலம் தனக்கான ஒரு திசையை நாடலாம்.

நான்கு தலைமுறைகளின் தரிசனம் இங்கு உண்டு. பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஆழ்ந்த முரணை விதைக்கும் வண்ணம் சிங்கள பேரினவாத சக்திகளிடம் அரசியலுரிமையின் அதீத ஆதிக்கத்தையும் , யாழ்ப்பாணத் தமிழ் மேட்டிமைக் குடியிடம் இலங்கை பூராவுமான உயர் பதவிகளின் அதிகாரத்தையும் கல்வியையும் கொடுத்துச் சென்றிருந்தது. அதன் தாரதம்மியம் அறியாத முதல் தலைமுறையொன்று 'இனபேதமற்று ஊடாடி வாழ்ந்த 'அடையாளமாய் முன்னாள் நீதிபதி இராஜநாயகம் , நயினாதீவுப் பௌத்த மடப் பிக்கு சங்கரானந்த தேரர், ஆநந்தியின் தாத்தா கார்த்திகேசு ஆகியோர் முதல்வரிசையினர். உடைவின் கனதியை உணரத் தலைபட்ட சுந்தரலிங்கம், மகேஸ்வரி, சரஸ்வதி, விஸ்வலிங்கம் ,வாலாம்பிகை . இன யுத்தமாய்ப் பரிணமித்த கட்டத்துக்குரிய ராஜி, சுதந்திரன் [சுதன்] , திரவியம் , சுவர்ணா , அரசி , ராகினி , குணானந்த தேரர் ஆகியோரே நாவலின் இளைய தலைமுறை. இந்த மூன்று தலைமுறைகளின் அனுபவ உண்மைகளை உள்வாங்கிய எதிர்கால ஒளிக்கீற்று ஆநந்தி. காலம்தான் இந்த நான்கு தலைமுறைகளுக்குமான கருத்தியல் மற்றங்களை , வளர்ச்சிகளை ஏற்படுத்திச் சென்றது.

அதனை உணராத முடிவுகளை எவராவது கொள்ளும்போது காலம் சிரிக்கும். அது அடிக்கடி நிகழும். எவ்வது உறைவது உலகம் என உன்னிப்பாய்ப் பாராமல் , அதிரவரும் மாற்றச் செல்நெறியைப் புரிந்துகொள்ளாமல் ஒருவர் முடிவை வகுக்கும்போது காலம் சிரிக்கத்தானே செய்யும்? நாவலின் பல சந்தர்ப்பங்களில் அந்தச் சிரிப்பு பதிலாகியுள்ளது. காலம் முனகியதை 'அக்னி திரவம்' (பக்.285) காட்டியுள்ளது. அது, ஆநந்தியின் தந்தை பிரபு முன்முயற்சியெடுத்து உருவாக்கியிருந்த கலாசாரப் பேரவை வளர்ந்துவரும் நிலையில் நடாத்திய சமாதானத்துக்கும் அரசியல் தீர்வுக்குமான பேரணி கண்டு . தமிழ் மக்களின் விடுதலையை வாழ்நாளெல்லாம் நேசித்து அதையே யாகமாய் வரித்து இயங்கிய சுந்தரலிங்கம் பரதேசம் போய்க் கண்காணாமல் செத்துப் புதைந்து இரண்டு வருடங்களின் பின் , ஈழ மண்ணில் வாழ்ந்த அவரது மகள் அரசி அதைச் சொன்னபோது அது கேட்ட உறவினர் காலத்தைச் சபிக்கவும் செய்தனர்(உதிர்வின் ஓசை-பக்.71).

ஐந்து பாகங்களில் இரு நூல்கள் காலத்தைத் தலைப்பிலும் தாங்கியுள்ளன;அவை, வினாக் காலம் (இரண்டாம் பாகம்), ஒரு புதிய காலம் (ஐந்தாம் பாகம்) . நாவல் பூராவிலும் காலவெளியே இணைப்புச் சரடாகவும் தலைமைப் பாத்திரமாகவும் வ்விளங்குவதை ஆசிரியர் தேவகாந்தன் குறிப்பிடத் தவறவில்லை.(வினாக் காலம்-பக்.7). ஐயங்களும் கேள்விகளும் குழப்பங்களும் மிக்க காலமாய் இரண்டாம் பாகம் திகழ்வதால் வினாக் காலம் எனக் குறிப்பிட்டதை அவரது விமரிசன மனமாகிய ' நண்பன்' ச்சிலாகித்துக் கூறியதாய் எழுதியுள்ளார் ( படைப்பாளி நிலைநின்று 'என்னுரை' எழுதும்போது அவர் பெயர் சுட்டாமல் குறிப்பிடும் நண்பன் என்பது அநேகமாக இந்த விமர்சன மன நிலை என்றே படுகிறது.'வினாக் காலம்' பக்.7).

இறுதிப் பகுதிக்கு 'ஒரு புதிய காலம்' எனக் குறிப்பிடுவது எதிர்காலதின்மீது நம்பிக்கைகொள்ளுவதன் பேறாகவெனலாம். ஈழப் போராட்டம் வெகுஜன எழுச்சிசார்ந்து அமைந்ததில்லை ; மக்கள் போராட்டமாய் அது ஒருபோதும் வடிவம் பெற்றதில்லை. இளாஇஞர் இயக்கங்கள் அடித்துக் கனிய வைத்து தமது செயலை மக்கள் ஏற்கும் வண்ணம் நிர்ப்பந்திக்கும் போக்கே ஆரம்பம்முதல் இருந்தது. கடத்திய வாகனங்களில் மாணவர்களாஇப் பாடசாலைகளிலிருந்து கடத்தி ஊர்வலங்களில் விட்ட சில இயக்கங்கள் மக்களைப் பார்த்து 'பார்வையாளர் வேண்டாம், பங்காளிகள் வேண்டும்' எனக் கோசம் போடவைத்திருக்கிறார்கள். இப்போதும் ஈழ மண்ணில் ச்சுதந்திரமான மக்கள் எழ்ழுச்சிக்கு இயலாமலே உள்ளது. அந்த நிலையில் புலம் பெயர் நாடுகளில் கலாசார இயக்கமாய் மக்கள் எழுச்சிஏற்பட முடியுமென்பதை நாவலின் இறுதிப் பாகம் சுட்டுகிறது. எப்படி இருக்கிறது என்பது மட்டுமன்றி எப்படியாகவேண்டும் என்பதைக் காட்டுவதும் அவச்சியம் என்றவகையில் இந்த எதிர்பார்ப்பு தவிர்க்கவியலாததுதான். ஆயினும் யதார்த்தம் என்னவோ 'கனவுச் சிறை' எனும் முழுப் படைப்புக்குமே 'வினாக் காலம்' என்ற மாற்றுப் பெயர் பொருந்தக் கூடிய வகையில்தான்.

3

நாவலின் காலப் பரப்பு 1981 தொடங்கி 2001 வரையான இருபத்தோராண்டுகளாயினும் இத் துளிப் பனிக் காட்சி பெருவெளிக் காலத்தை அவாவியது என்பார் தேவகாந்தன்('வினாக் காலம்' பக்.6).யாழ்ப்பாணச் சமூகம் கொந்தளிப்பு நிலையடைந்து முழு இலங்கைச் சமூகத்தையும் போர்ச் சூழலில் வேகப்படுத்தியவகையில் மனித சுபாவங்களைப் புடமிடும் இக் காலப் பனித் துளி பெருவெளிக்காலத்தின் தேர்ந்த பகுதியாக ஆதல் பொருத்தமுடையதே. தெற்காசியாவின் மிகப்பெரும் நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதும் , யாழ்ப்பாணத்திலிருந்து அப்போது வெளிவந்த ஒரே தினசரியான 'ஈழ நாடு' பத்திரிகையின் காரியாலயமும் அச்சகமும் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதுமான 1981 இலிருந்து நாவல் தொடக்கம் பெறுகிறது. இந்த அழிப்புகள் எதிர்நிலையில் தேசியக் கொந்தளிப்பையும் எழுச்சியுணர்வையும் வளர்த்தனவேயன்றி அஞ்சி ஒடுங்கிப்போய்விடச் செய்யவில்லை. ஈழத் தமிழர் பண்பாட்டழிவு இவ்வளவு வெளிவெளியாக இருந்துவிட முடியாதென்பதை ஜே.ஆர். ஜெயவர்த்தனா கண்டுகொண்டார்.

பொதுவாக யாழ்ப்பாணத் தமிழர் பொருளாதாரத் தீர்க்கதரிசானப் புத்தியுடையவர்கள்; கல்விக்கு முதன்மை வழங்குவதும் உயர் பதவிகளையீட்டுவதற்கேயன்றி , அறிவு நாட்டத்தால் அல்ல என்பதை ஜே.ஆர். கண்டார்.அவரது அரசு திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப் படுத்தி வெளி நாடுகளுக்கு உழைப்புத் தேட வ்வேலைப் பட்டாளத்தை அனுமதித்தபோது முதலில் படைதிரண்டு ஓடியது பெரும்பகுதியும் யாழ்ப்பாணம்தான். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கான புலப்பெயர்வை அவரது அரசு ஊக்கப்படுத்தியது. எங்கு காணினும் தமிழருக்குக் கெடு காலமென்றிருந்தபோது விமானனிலையப் பாதை மட்டும் சுதந்திரமாய்த் திறந்து கிடந்தது.

உடனடிப் பலாபலன் என்றவகையில் ஜே.ஆர். வெற்றி பெற்றார்.ழாம் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தவர்களும் ஜேர்மனிக்குப் போய் கோப்பை கழுவினால் ஆயிரமாயிரமாய்ச் சம்பாதிக்கலாம் எனக் கண்டபோது படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஓடினார்கள். அது ஒரு கட்டம் வரையிலும்தான். அங்கே குடும்பங்களை அழைத்து வாழ்வுக்கு அடித் தளமிட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கேயுரிய பண்பின்படி மீண்டும் கல்வியின்மூலம் உயர் உத்தியோகம் நாடும் குணம் மேவியது. அது கனடாவ்வில் பெருவாய்ப்புடையதெனக் கண்டபோது யாழ்ப்பாணத்தவரது முதற் தேர்வாகக் கனடாவே அமைந்தது.

அயலவர் உதவியில் ச்சுலபத்தில் தமிழீழம் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையுடன் போராட்டம் தொடங்கியிருந்தபோதிலும் , அந்த யுத்த அனுபவங்கள் தமிழருக்கு பெறுமானமிக்க பல படிப்பினைகளை ஏற்படுத்திவிட்டிருக்கிறது. துக்கத்தைப் பலமாகவும் , தோல்வியையே வெற்றியாக்கியிடவும், எதிரிகளின் சதி நோக்கங்களையே தமக்கான சாதகமான சூழ்நிலைமைகளாக மாற்றிடக் கற்றிருக்கிறார்கள். அத்தகைய செழுமையான அனுபவத்தை உள்வாங்கிய தேவகாந்தன் , மேற்கு நாடுகளின் பிரஜைகளாகிவிட்ட ஈழத் தமிழரிடமிருந்து யுத்தத்துக்கு முடிவு கட்டும் செயல் முனைப்பை எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு விடயத்திலும் இரண்டு அம்சங்கள் உண்டு. எத்ர்நிலையான அந்த அம்சங்களில் ஒன்று குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் மற்றதாக முடியும்.

இன்று யுத்தத்தை முழுமூச்சுடன் ஆதரித்து தூண்டுவதாக மேற்கு நாடுகளின் தமிழர்கள் பார்க்கப் படுகிறார்கள். அதன் காரணமாகவே , சந்திரிகா அரசு அந்த நாடுகளில் புலிகளின் செயற்பாட்டை முடக்கிப் பண வருவாய் மார்க்கங்களை தடுத்திட முழு முயற்சியெடுத்து வெற்றிபெற்று அந்த நாடுகளில் புலிகளின் மீது தடைவிதிக்கவும் ஏற்பாடு செய்தது.பணத் தட்டுப்பாட்டை விடவும் அரசியல் முடக்கத்தையே புலிகள் பெரிதும் விசனத்துக்குரியதாய்க் கருதிய போதிலும் , 'அடைந்தால் தமிழீழம்; இல்லையேல் வீரமரணம்' என்ற விடாக்கண்டர் நிலைக்கு மேற்குத் தமிழர்களே பாலமான ஆதரவுச் சக்தியாய்த் திகழ்கின்றனர் என்பது பிரதான அம்சமாகும். அந்த வகையில் மேற்குத் தமிழரின் மனப்பாங்கு முக்கியத்துவம் பெறுவதைக் கவனத்திலெடுக்காமல் இருக்க முடியாது. கள நிலவரம் பற்றிய அக்கறையின்றி , அழிவுகள் யாருக்கோ என்ற அக்கறையீனத்தில் , தமிழருக்கான ஒரு தனி நாடு என்ற அவாவில் இறுதிவரை யுத்தமென்றபோக்கு மேற்குத் தமிழரிடம் ஆதிக்கம் செலுத்தும் அம்சமாகும்.

அங்கேயும் யுத்தத்துக்கு எதிரான குரல் , ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்புக்குள் தமிழீழம், சிறீலங்கா எனும் இரு தேசங்கள் என்ற அரச்சியால் தீர்வுக்கான எதிர் அம்சக் குரல் முழைவிட்டு வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச் சிறு பொறியைத் தேவகாந்தன் இனங்காணுகிறார். ஒன்று மற்றதாக மாறும் விதிப் பிரகாரம், இந்த அரசியல் தீர்வுக்கான கலாசாரப் பேரவைச் செயற்பாடு போன்றன பிரதான அம்சமாக ஆகும் எதிர்காலம் மேற்குத் தமிழரிடம் சித்திக்கும் என நம்பலாம். யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடித்தளத்தைத் தகர்ப்பதாகிய ஜே.ஆரின் சதியைத் தகர்ப்பதாயின் இத்தகைய வளர்ச்சிநிலையை உண்மையில் மேற்குத் தமிழர் விட்டாகவேண்டும்.

இது ராஜி காணும் தனக்கான செயற்தளம் என்ற தீர்வு சார்ந்தது. அவள் முன்னதாக ஐரோப்பாவ்வுக்கு ஓடுவதை வெறுத்தவள். இந்தியாவில் இருந்தபடி ஈழ ஏதிலியர்களுக்காய் உழைத்தவள். தன் சார்பாய் , தன்னை ஆழ்மன ஈடுபாட்டுடன் காதலித்த மைத்துனன் யோகேஷை போராளியாகிப் போராட யுத்த களத்துக்கு அனுப்பியவள்.யோகேஷ்மீது தனக்கும் காதலீர்ப்பு வந்தபோதெல்லாம் அதை ஒதுக்கி தொடர்ந்தும் போராட்டத்துக்கு அனுசரணையாக வாழ்ந்தவள். அவன் களப்பலியான பின்னரே மேற்குத்
தமிழர் மத்தியில் தனக்கான நுண் அரசியல் செயற்பாட்டுக்குரிய கலாசாரத் தளத்தை தேர்ந்து கொள்கிறாள்.

இடைப்பட்ட இருபது வருடங்கள் பாரிய மாற்றத்துக்குரிய காலம். இப்போதும் அவர்கள் புலம்பெயார்ந்த தமிழர்கள் அல்ல. அவர்கள் முன்னாள் ஈழத் தமிழர்கள்,அவ்வளவே. இப்போது அந்தந்த நாட்டுக் குடியுரிமை பெற்ற மேற்குத் தமிழர்கள், அங்கே ஆழ வேரோடிவிட்டவர்கள்.ஆயினும் ஒரு புதிய தலைமுறை தன் மூல வேர் நாடி , அது செழிப்புடன் விருட்சமாகும் சூழலைச் சிருஷ்டிக்கக் குரலெழுப்புகிறது. அதனுடன் இணைய ராஜி முடிவுசெய்கிறாள். இது காலம் அவளிடம் ஏற்படுத்திவிட்ட மாற்றம். ராஜிக்கான இந்தத் தீர்வுடன் நாவலை முடித்துவிடாத பாடைப்பு நுட்பம் விதந்துரைக்கத் தக்கது. ராஜியின் பிறந்த மண்ணாகிய நயினாதீவு புதியவர்களின் வாழ்வுக் களமாகிவிட்ட ஒரு புதிய காலத் தொடக்கத்தைப் பெற்றிருப்பதுடன் நாவல் முற்றுப்பெறும். வருஷங்கள் பலவற்றின் முன் கடலுக்குள் மூழ்கி இறந்த தன் காதலியைத் தேடிக்கொண்டிருந்தவன் தியாகு. ஆணாதிக்க கபடத்தில் மூழ்கடிக்கப்பட்டு வாழ்வு சின்னாபின்னமாகசிதைந்து மரணித்த நேசமலரின் மகனுடன் நாயினை அம்மன் கோயில் வாசலில் தனக்குத் தெரிந்த, தன்னைத் தெரிந்த யாராவது வருகிறார்களாவென்று பார்த்து ஏமாந்த தியாகு, அந்தச் சிறுவனைக் கையில் பிடித்துத் திரும்புவதுடன் இந்தப் புனைவு நிறைவடையும்.

4

நம்பி ஏமாந்து அபலையாகும் நேசமலர்போன்று ஒரு சில பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். தலை மாற்றிய கடவுச் சீட்டில் கணவன் என்று இருந்ததால் ஹோட்டலில் ஒரு அறையில் தங்க விடப்பட்டதைச் சாதகமாக்கிக்கொண்ட சகோதரத் தமிழனால் வல்லுறவுக்காளாக்கப்பட்டவள், அகதி முகாமின் சிதைவுப் பண்பாட்டில் நெறிகெட்டுச் சென்று கொலையுண்ட ஒரு பெண் , சுதன் அவசர ஆத்திரத்தில் ஜேர்மனி அழைத்துச் சென்ற ஷீலாவின் நிலைதடுமாற்றமும் இறுதியில் சிறைப்படலும் என்ற கையறுநிலைக்காளான பெண்களுக்குரிய வகைமாதிரிப் பாத்திரங்கள் சில உண்டு.ஆவற்றை மீறி நாவலில் ஆளுமையுன் புதிய ரத்தமாய் வீறுகொண்டெழ்ழுந்துள்ள பெண்கள் பலமான பக்கமாய் நிமிர்ந்து நிற்கின்றனர்.யுத்தத்துக்கு முந்திய நயினாதீவுப் பெண்களின் மன வைராக்கியத்துக்கும் , கணவனின் நிர்வகிப்பை எதிர்பார்க்காமல் தாமே குடும்பத்தை ஆற்றலுடன் கொண்டு நடத்தும் திடவுறுதிக்கும் மகேஸ்வரி , வாலாம்பிகை , சரஸ்வதி ஆகியோர் சிறந்த உதாரணங்கள். மகேஸ்வரி இளமையில் கணவனை இழந்து போனாலும் எவரையும் கையேந்தி நிற்காமல் வளவு வரும்படியில் மூன்று பிள்ளைகளை ஆளாக்கியவள். முழுநேர அரசியலாளனாய் அலைந்த சுந்தரலிங்கத்தின் மனைவி வாலாம்பிகைக்குப் புருஷன் இருந்தும் குடும்ப பராமரிப்பைப் பொறுத்து இல்லாத மாதிரித்தான். சரஸ்வதிக்கு வருடத்தில் ஒரு தரம் கொழும்பிலிருந்து வந்து தவறாமல் ஒரு பிள்ளையைத் தந்து போகும் கணவன்;அவளும் காதலில் சற்றும் சளைக்காமல் அரை டசின் பிள்ளைகளை முடிந்தவரை கரைசேர்க்கும் எத்தனிப்பில் சோடைபோகாமல்.

யுத்த பேரலைச் சுழியில் எதிர் நீச்சல் போடும் ராஜி , அரசி , சுவர்ணா , ராஹினி ஆகியோர் புதுமைப் பெண்களுக்கான எடுத்துக் காட்டுக்கள். ராஜியைப் பொறுத்தவரை சுதனுடனான காதல் தற்செயலானது. அது ஆழம் பெறுவதற்குள் அவன் அவதிப்பட்டு இயக்கத்துக்கு ஓடி , அதையும் விட்டு ஜெர்மனிக்கு ஓடிவிடுகிறான். வாழ்க்கைப் போர்க் களம் அவளை யோகேஸ்வரன் மீது நாட்டம் கொள்ள வைக்கிறது. அவனுக்கு தன்னை அவள் விட்டுக் கொடுக்கவும் செய்கிறாள். அவனோடும் வாழ்வைத் தொடராமல் அவனை விடுதலை வேள்விக்கு ஆகுதியாக்கி விடுகிறாள். ஏறத்தாழ பதினேழு வருடங்களின் பின் மீண்டும் சுதனுடன் சேர்கிறாள்.

அரசிக்கு இத்தனை சிக்கல் காதல் வாழ்க்கையில் இருக்கவில்லை. தூரத்து உறவில் பேசிச் செய்த திருமணம்.முத்ற் பார்வையில் முரடனாய்த் தோன்றிய போதிலும் ஆழ்ந்த காதல்வயப்பட்ட கணவனாய் இருந்தவன். பயணமொன்றில் தமிழ்ப் பெண்ணின் சட்டைக்குள் கைவைத்து குண்டு தேடும் இராணுவத்தினனின் அயோக்கியத்தனமான அடாவடித்தனத்தைத் தட்டிக்கேட்டுச் சூடுபட்டு இறந்தவன். அந்தப் போர்க்குணப் புருஷனின் நினைவோடு தாய் மண்ணில் வேரோடிப் போனவள். ஆயினும் புதிய உறவாய்த் திரவியம் வந்தபோது கரமிணைக்கத் தயங்காதவள்.

முன்னதாய்த் திரவியம் சுவர்ணா என்ற சிங்களப் பெண்ணை மணந்து காமாந்தப் பிக்கு குணாநந்தவினால் அவளை இழந்தவன். சுவர்ணாவின் முதற் கணவன் திரவியத்தின் நண்பன் உதயன். உதயனை 83 ஜூலை கலவரத்தில் கொலைசெய்த குணாநந்தவுக்கு தமிழ் வெறுப்பளவுக்கு சுவர்ணாமீதான மோகமும் இருந்தது. அவன் சுவர்ணாவின் உறவினனும்கூட. அவர்களைப் பழிதீர்க்கும் வகையிலேயே தன் காதல் கணவனின் நண்பனை அடைந்து காலகதியில் அவனை இரண்டாம் திருமணமும் செய்தவள்.

கற்புக்குப் புது வரைவிலக்கணம் படைத்த இந்த வீரப் புதுமைப் பெண்களை முந்திய தலைமுறைப் பெண்களால் இலேசில் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. அந்தப் பழைய தலைமுறைப் பெண்களூக்கு கடல் கடந்து போகும் கணவன் ஊர் மேய்ந்துவிட்டு வந்தாலும் தங்கள் உடலைத் தூய்மையாய்ப் பேணிக் காணிக்கை ஆக்குவதே கற்பு. கற்பு இரு கட்சிக்கும் பொது என்பதையேகூட நினைத்துப் பார்த்துவிட முடியாது. ஆயினும் இந்தப் புதிய தலைமுறையின் வீறுகொண்ட எழுச்சிக்கு முந்திய தலைமுறைப் பெண்களும் இறுதியில் இணக்கமடைவது நாவலில் காட்டப்படுகிறது.

சுந்தரலிங்கத்தின் பாத்திர சிருஷ்டியில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம் எனச் சொல்ல முடிந்தாலும் , பெருங் குற்றம் சொல்லமுடியாது. சரஸ்வதியின் கணவர் விஸ்வலிங்கம் , மகேஸ்வரியின் மகன் ராஜேந்திரன் , திரவியம் , உதயன் , திரவியத்தை ஊடகவியலாளனாய் வளர்த்தெடுக்கும் அனில் , யோகேஷ் ,தியாகு போன்ற பாத்திரங்கள் சிறப்பாக வார்க்கப்பட்டுள்ளனர். ஆயினும் பெண் பாத்திரங்களின் வார்ப்புடன் ஒப்பிடுகையில் ஆண்களைச் செதுக்கியதன் செய் நேர்த்தி அந்தளவுக்கு இல்லையென்றே சொல்லவேண்டும். யுத்தம் ஆகக் கூடுதலாய் சோதனைக்குள்ளாக்குவது பெண்களையென்பதால் , அவர்களின் மீது மாற்றங்கள் தெளிவானது. அதன் காரணத்தால் பெண் பாத்திரங்கள் மிகத் துலக்கமாய்ப் படைப்பாக்கம் பெற்றிருக்கின்றனர் எனக் கொள்ளலாம் போலும். அவர்கள் அனைவரிலும் ராஜி சற்று எடுப்பாக வெளிப்படுகிறாள். நாவலில் காலம்தான் பிரதான பாத்திரம் என்பதை அடுத்து , நாவலின் மையப் பாத்திரமாக ராஜியே துலங்குகிறாள். கால மாற்றமும் அவளூடாகவே முனைப்புடன் வெளிப்படுவதைக் காணலாம்.

5

இந்த நாவலில் மிகவும் பலகீனமான பாத்திர வார்ப்பு சுதனுடையது. சுதனுடன் கூடிச் சென்று கொழும்பு நேர்முகப் பரீட்சையை முகங்கொண்டதால் அவப்பெயருக்கு ஆளாகி யோகேஷின் அண்ணனுடனான திருமணப் பேச்சு முறிவடைந்த பின்னரே சுதனுடன் தன் வாழ்வை இணைக்க ராஜி முடிவுசெய்தாள். அது ஆழமான காதலாய்ப் பரிமளிக்க முடியவில்லை. சுதனின் அவசர முடிவுகளில் அதிர்ந்து , தனக்கான தனி வழியைத் தேர்ந்து கொள்ளும் ராஜி , எத்ர்கொள்ளும் யுத்த அனர்த்தங்களுள்ளிருந்து எப்படி வீழ்ந்துவிடாமல் தலைநிமிர்ந்து எழுகிறாள் என்பதைக் காட்டுவதே படைப்பின் மூலாதாரமாயுள்ளது. அந்த அம்சத்தை சற்று மிகை அழுத்தமாய்க் காட்ட முனைவதில் சுதன் கொஞ்சம் சிதைந்து போய்விடுகிறான்.

ஒவ்வொரு பாத்திரத்தையும் இழைத்து இழைத்துச் செதுக்கிவரும் ஆசிரியர் சுதனின் வார்ப்பில் இத்தகைய கவனப் பிசகுக்குள்ளாவது ராஜி பெற்ற ஆளுமைவீச்சினாலாகும் என்ற புரிதலுடன் தொடரும்போது , அந்த எண்ணத்தை அழுத்தும் ஒரு இடம் வந்தது. 'அயோத்தியிலேயே ஒரு சீதைதான் இருந்தாள்.சோழ நாடில ஒரு கண்ணகிதான் இருந்தாள். அதுபோல இந்தமாதிரி அவலத்துக்கு நான்தான் இருக்க ஏலும்...'என ஒரு சந்தர்ப்பத்தில் ராஜியே சொல்வாள் (உதிர்வின் ஓசை-பக்.283).தமிழ் நாவலிலக்கியக் களம் முழுமையிலும் இருந்து கிளைத்தெழுந்து நிலைபேறடைந்துள்ள விரல்விட்டெண்ணக் கூடிய ஒரு சில கதா மாந்தர்களில் ஒன்றாகத் திகழும் ஆளுமை ராஜிக்குண்டு. ஈழத் தமிழ் மக்கள் சிந்திய ரத்தமும் கண்ணீரும் இலக்கியமயப்பட்டதின் வடிவமாக ராஜி திகழ்வாள்.

ஆயினும் அதற்காகச் ச்சுதன் சிறுமைப்பட்டிருக்க வேண்டியதில்லை. சுதனின் அவசர முடிவுகளில் தன் அபிப்பிராயக் கலப்பில்லாமையினால் , வெறுப்படைந்து ராஜி விலகுவது சரியானதுதான். ஏனைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கூடியவரை நிகழ்வுகளைவிடவும் அவை எவ்வாறு நேர்ந்தன என்பதை வீச்சுடன் வெளிப்படுத்தியிருப்பது 'கனவுச் சிறை'யின் பலம். சுதன் விடயத்தில் அவ்வாறில்லை. தான் அதிகம் உறவாடிய இயக்கத்தைவிட்டு போட்டியிட்டு இழுக்க முயன்ற எதிரணியில் சேர்ந்த நெருக்கடி நிலை என்ன? பின்னர் இயக்கத்துக்காகக் கொள்ளையடித்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு அவசர கோலத்தில் ஓடியது ஏன்?என்பவற்றுக்கு போதிய காரணங்கள் நவீனத்தினுள் இல்லை. எல்லாவற்றையும் படைப்புக்குள் கொண்டுவர வேண்டியதில்லை. அவசியமான இடைவெளிகள் வாசக மன விரிவுக்கு இடமளிப்பன.ஆயினும் இங்கு அமைக்கப்பட்ட இடைவெளிகள் சுதன் பாரதூரமான தப்புகளுக்குரியவன் என்று காட்டவே விடப்பட்டுள்ளமை அவனது முழுமையைப் பார்க்கும்போது ஏற்கத்தக்கதல்ல. அவன் படைப்பாக்கத்தில் இத்தகைய தவறுகளைச் செய்பவனாகக் அமைத்திருப்பின், அத்ற்கேற்ற சூழ்நிலை சிருஷ்டித்துக் காட்டப்பட்டிருக்கவேண்டும்.

தமிழின விடுதலைக்காகத் தன்னைப் பரித்தியாகம் செய்த, ஊர்மெச்சும் சுந்தரலிங்கத்தின் மகன் சுதன் எனப்படும் சுதந்திரன். இரண்டு பிள்ளைகளுக்குப் பிறகு தனது கணவர் குடும்பத்தையும் கொஞ்சம் பார்த்திருக்கலாம் எனக் கருதிய போதிலும் சற்றும் முணுமுணுக்காமல் குடும்ப பாரத்தை மனப்பூர்வமாய்த் தானொருத்தி தலைமேல் ஏற்று மகனையும் மகளையும் பிறர் குறைகாண முடியாதவகையில் வளர்த்தெடுத்த வாலாம்பிகை சுதனின் தாய். பிறர் ஈனநிலை கண்டு துடித்தும், தன் துயர் கண்டு துவண்டுபோகாமலும் கவிதையாய் உணர்வுகளை வடித்த அரசி அவனுடைய அக்கா.அவனும்கூட சுயநலத்தில் மூழ்கிவிடாமல் பொது உணர்வு மேவியவனாகவே வளர்ந்தவன்.யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அவனுடன் கற்ற உயர் மத்திய தர வர்க்க நவநாகரீக மாணவியொருத்தி தன்னை விரும்பியபோதிலும் அதனை நிராகரித்து செயற்கைத்தனமில்லாத கிராமிய அழகை ஆராதித்தவன். ராஜி நேர்முகப் பரீட்சைக்கு தனியே கொழும்பு வர விழைந்தபோது பொறுப்புணர்வுடன் அதன் பாதிப்பை முன் உணர்ந்தவன். அவள் துணிவினால் ஆகர்ஷிக்கப்பட்டு உடன்பட்டு அழைத்துச் சென்று , பின்னால் அதுவே அவளைப் பாதித்த போது தன்பக்கத்து மிகச் சிறிய தவறையும் பெரிதாகக் கருதி அவளுடன் தன் வாழ்வை இணைக்க முன்வந்தவன்.

ராஜியின் கோபத்துக்கு ஏற்புடையதாக அமையும் அவனது அவசர முடிவுகளுக்கு நியாயமான காரணங்கள் அவனிடம் இருந்திருக்கமுடியும். அவளது கோபம் நியாயமாயிருந்து கதைப்போக்கு பாதிக்கப்படாதிருக்கும் அதேவேளை அவன் பக்கத்து உண்மைகள் காட்டப்பட்டிருக்க முடியும். அன்றைய நிலையில் கொஞ்சமாய் நனைந்தவர்கள் கைதுசெய்யப்படும் அபாயம் நெருங்கிவிட்டபோது அவசர கோலத்தில் தாம் கடுமையாய் விமர்சித்த இயக்கங்களில்கூட உடன் அவதியின்பொருட்டு சேர்ந்துவிடும் சந்தர்ப்பங்கள் நிறையவே இடம்பெற்றிருந்தன. ஏதோ விடுதலை இயக்கம் என்ற சிறு பிடிப்புக்கூட உள்ளே போய் உள்விவகாரங்கள் கண்டபின் இல்லாமலாகி முழுதாய் மனம் வெறுத்துப் போனவர்கள் பலருண்டு. பொதுச் சொத்தைச் சுருட்டும் கபடனல்ல சுதன் என்ற வகையில் இயக்க அடாவடித்தனத்துடன் ஒப்பிட்டால் தான் விலகிப்போவது த்ரோகமில்லையென்ற அவனது நியாயப்பாடே அவனை ஐரோப்பாவுக்கு பணத்துடன் ஓடிவிடத் தூண்டியிருக்கும். அவாறு உணர்வு கொள்ளத்தக்க நடத்தைகள் அனைத்து இயக்கங்களிலும் இருந்துள்ளன. இயக்கத்திடமும் சரி, தனி மனிதர்களிடமும் சரி நியாயமான கோட்பாட்டாராய்வு இருக்கவில்லையென்பதே குறை. அதற்கு இடமின்றி யுத்தச் சூழல் ஒரு இனம் முழுமையையும் இழுத்தடித்துப் புரட்டியது என்பதே உண்மை.

பின்னால் செயலின்றி அவமே வாழ முடியாமல் கலாசாரப் பேரவையில் முனைப்புடன் இயங்கியவன் சுதன். அப்போதும் மக்கள் நலனில் அக்கறையின்றி அரசும் இயக்கமும் மக்கள்மீது யுத்தத்தைத் திணித்துள்ளது என்ற அபிப்பிராயம் சுதனிடம் இருந்தது. அதற்காக அவன் நடுநிலை எடுத்துவிடவில்லை. சரி பிழைகளுக்கு அப்பால் நியாயமான உரிமையை வென்றெடுக்க போராடும் இனமொன்ற்க்குத் தலைமை தாங்கும் இயக்கத்தின் பக்கத்தில் , ஆந்த இயக்கத்தால் கொல்லப்படலாம் என்ற நிலைமையிலும் அவனது ஆதரவு இருந்தது. " 'விடுதலைப் போராட்ட இயக்கங்களாய் இல்லாமல் , பயாங்கரவாத இயக்கங்களாய் அடையாளப்படுத்த சகல முனைப்புகளையும் சிறீலங்கா அரசாங்கம் இப்போ செய்ய முனைஞ்சுகொண்டிருக்கு. இந்த நேரத்தில ..... அதுக்குச் சாதகமாகக் கூடிய முயற்சியெதையும் செய்திடக்கூடாதெண்டுதான் பேசாமலிருக்கிறம்' "என்றான் சுதன்(உதிர்வின் ஓசை-பக்.50).இந்த உணர்வு கவனிப்புக்குரியது.

6

சுதனின் சிருஷ்டிப்பில் உள்ள தவறு தவிர்ந்து வேறும் சில சிறிய தவறுகள் நாவலில் ஆங்காங்கே உண்டு. அவை அப்படியொன்றும் பாரதூரத் தன்மையினவல்லவெனினும் சிலவற்றை இங்கு குறித்து வைப்பது பொருத்தமுடையது. அத்தகைய தவறுகளில் அடிப்படையான கோட்பாட்டுத் தளம் சார்ந்து அமைகிற ஒன்று ஆராய்வின்றிப் பலரும் சொல்வதைப் போல தமிழ்-சிங்கள முரண்பாட்டை இருபத்தொரு நூற்றாண்டுகளுக்கு நீடித்து எடுத்துச் செல்வதாகும். இலங்கை யுத்த களமாயே காலகாலமாய் இருந்து வருகிறதென அரசி யோசிப்பது இப்படி அமையும்:'கிறித்து சகாப்தத்திலிருந்தே இரண்டு மகா சக்திகளின் யுத்தகளனாய் ஈழம் இருந்திருக்கிறது. அம் மகா சக்திகளின் யுத்த முனைகள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் தம் இருத்தலை நிலைநாட்டுவதற்கானதாகவே இருந்திருக்கின்றன.வெற்றியும் தோல்வியும் மாறிமாறி ஏற்பட்டிருக்கிறது. வெற்றிக்கான ராஜதந்திரங்களாய் அயலக உறவுகள் அப்போதும் இருந்திருக்கின்றன. அது அன்றுவரை தொடர்வது பெரும்பாலும் வேறு காரணங்களாலில்லை.'(உதிர்வின் ஓசை-பக்.72).

இவ்வாறு சிங்கள-தமிழ் முரண்பாடே எல்லாக்காலத்துக்குமானது என்ற நினைப்பு தனியொரு பாத்திரத்தினது மட்டுமல்ல. பொதுவாகவே நாவல் கட்டமைப்பது இதன் அடித்தளத்திலிருந்துதான். கால் நூற்றாண்டு யுத்தமும் அரை நூற்றாண்டு முரண்பாட்டுக் கூர்மையடைதலும் இத்தகைய ஒரு கருத்தை வலுப்பெறச் செய்துள்ளது. முரண்பாட்டு வளர்ச்சிக்குச் சாதகமாய் புராதன வரலாறு புனையப்பட்டு மறுபடைப்புச் செய்யப்பட்டு அதுவே வரலாறு என்ற தவறான புரிதலும் ஏற்பட்டுள்ளது.

இந்த முரணில் எல்லாளந்துட்ட கைமுனு முரண்பாடு முதன்மையானது. வரலாற்றிலும் அதுவே மிகவும் பழமையானது.இந்த விமர்சன எல்லைக்கு அப்பால் இங்கு அதிகம் செல்ல முடியாதாயினும் ஒன்ரை வலியுறுத்த முடியும். எல்லாளன் சோழப் பேரரசின் வாரிசல்ல. சோழப் பேர்ரசு எல்லாளனுக்கு பத்து நூற்றாண்டுகள் கடந்து வரலாற்றில் வருவது. எல்லாளன் சோழ இளவல் என்பற்கு போதிய ஆதாரம் இல்லை. ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முந்திய வடபிரதேசச் சிற்றரசில் இருந்து சென்று அனுராதபுரி ராஜ்ய உள்முரண்பாட்டை (பெரும்பாலான இனங்களில் போலவே நீண்ட வரலாறுடைய சிங்கள இனத்திலும் தமிழருட்பட பிற இனத்தாருடனான முரண்பாட்டைக் காட்டிலும் ஆட்சியுரிமைக்கான உள்முரண்பாடே வலியதாயும், நீண்ட வரலாற்றுப் பாரம்பரியமாயும் இருந்து வந்துள்ளது)சாதகமாக்கி அதனைத் தன் ஆளூகைக்குள் கொணர்ந்தவன் என்ற கருத்தையும் நிராகரித்துவிட முடியாது. அவ்வாறு கொணர்ந்து தனது தாயகப் பேர்ரசு எதனுடனாவது இணைக்கும்படி அன்று பேர்ரசு உருவாக்கம் இல்லாததால் சுதந்திரமான அனுராதபுரி ராஜ்யத்தை அதன் மக்கள் மிக நேசித்த ஒரு மன்னனாகத் திகழ்ந்து மரணித்தவரை நாற்பது ஆண்டுகள் நீதிநெறி தவறாது ஆண்டவன்.

கைமுனு தமிழாதிக்கத்தை தகர்க்கப் படை திரட்டி எல்லாளனை வீழ்த்தவில்லை. கைமுனுவின் படைத் தளபதிகள் பலர் தமிழர்கள். தனது பரம்பரை ஆட்சியை மீட்கப் போரிட்டு வென்ற கைமுனு எல்லாளன் மீது மிகுந்த மதிப்புடையவன். அத்தகைய கைமுனுவை மாவீரனாய்ப் படைப்பாக்கம் செய்த மஹாவம்சம் தமிழருக்கு எதிராகவன்றி தமது தேரவாத சமயத்துக்கு எதிரான சக்திகளுடன் போரிட்டு தேரவாத பவுத்த எழுச்சியின் காவலனாய்த் திகழ்ந்தமையையே பாடுபொருளாக்கியது. அப்போது தமிழ் சைவத் தமிழ் ஆகிவிடவில்லை. தமிழில் பௌத்தமும் சமணமும் மேலோங்கியிருந்தன. தமிழ்ப் பௌத்தம் மஹாயானப் பிரிவில் இருந்தபோது சிங்களத்திலும் அப்பிரிவு செல்வாக்குப் பெற்றிருந்தது. அதனை முறியடிக்கப் போராடிய தேரவாதப் பிரிவினர் , சிங்கள மஹாயானப் பிரிவைத் தாக்குவதைவிட அதற்கு மூலாதாரமாய்த் திகழ்ந்த தமிழ் மஹாயானத்துக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எந்தப் பிரிவுப் பௌத்தமும் தமிழ்நாட்டின் ஊடாகவே இலங்கையினுள் பிரவேசித்ததெனினும் தமிழின் ஆதிக்கமுடைய மஹாயான பௌத்தத்தை குறிப்பாகத் தாக்கவேண்டியிருந்ததாலேயே மஹிந்தர் சங்கமித்திரை ஆகியோர் தமிழ் நாட்டின் ஊடாக வந்து கடல் கடந்து யாழ்ப்பாணத்து ஜம்புக்கோளத் துறையில் இறங்கியதாய்ப் புனைந்தனர். பறத்தல் மிஹிந்தலைவரை இருந்திருக்கவேண்டியத்தானே என்று சிங்கள ஆய்வாளர்கள் என்று கேள்வியெழுப்புகின்றமை சிந்தனைக்குரியது.

இத்தகைய உண்மைகளை வளவ கங்கைப் பிக்குவாகிய முன்னாள் சரித்திரப் பேராசிரியர் சங்கரானந்த தேரரிடம் கிளர்த்தியிருக்கவேண்டும். அந்த மூத்த துறவியிடம் இனவாதத்துக்கெதிரான பல விஷயங்களைக் கற்றறிந்த சங்கரானந்த தேரர் குறிப்பாக இதனையும் அறிந்திருக்கவேண்டும். பௌத்த சிங்கள இன வாதிகள் கைமுனுவை கொடிய இனவெறி ஆயுதமாய்க் கையேந்தியபோது அவனது உயர் பண்புகளை வெளிப்படுத்துவதைவிடுத்து சங்கரானந்ததேரர் கைமுனுவின் சுருங்கிய இதயப் படிமத்தை முன்னிறுத்துவதைவிடவும் அவனது உயர் பண்புகளை முதன்மைப்படுத்தியிருந்தால் தமிழினவாதிகளது ஒரு ஆயுதத்தைப் பலமிழக்கச் செய்திருக்கமுடியும். இன்று அவனெழுப்பிய எல்லாளன் சமாதி (அந்த உத்தம மாவீரன் இறந்துபட்ட இடத்தில் இளவல் கட்டியது ) முக்கியத்துவம் இழந்து காணப்படினும் நீண்டகாலம் செல்வாக்குடன் மிளிர்ந்தது. இன்றும் வேறு பெயரில் வழிபடப் படுவது.

இதன்றி , ஏனையவை சாதாரணத் தவறுகள். சங்கரானந்த தேரர் சமாதானத்துக்கான பிரசாரத்தை முன்னெடுத்த வேளையில் அவர் தனியரல்ல. தனியொருத்தரால் செய்யப்பட்டதாக படைப்பில் காட்டப்பட்டிருப்பினும் (அக்னி திரவம்-பக்.107)அதற்குரிய சமாதானக் குரல் பல தளவிரிவுகளில் இருந்தது. மதத் தலைமைப் பீடம் தவிர ஏராளமான பிக்குகள் சமாதானத்துக்கான பலமுனைச் செயல்களை முன்னெடுத்தனர்.

7

'சொல்லாத சேதி' எனும் முதல் தமிழ்ப் பெண்ணியக் கவிதை நூல் பிறந்த யாழ்ப்பாணச் சமூகத்தில் விறல் மிகு பெணாளுமைகள் விடுதலை எழுச்சியில் கிளர்ந்த்ந்ழுவதைப் படைப்பாக்கம் செய்துள்ளது 'கனவுச் சிறை'.அரசி , ராஹினி என்ற இரு பெண் கவிஞர்கள் நாவலில் பதிவாகியும் உள்ளனர். போராளிகள் வாழ்முறை, இயக்கச் செல்நெறிகுறித்து 'புதியதொரு உலகம்', 'கொரில்லா' போன்ற நாவல்கள் உண்டு.'கனவுச் சிறை' மக்களின் வாழ்வையும், யுத்தக் கொந்தளிப்பூடான மாற்றங்களையும், உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தி நிற்கிறது. மனித ஊடாட்டங்கள் விழுமியங்கள் அபிலாஷைகளில் போர் விளைக்கும் மாற்றங்கள் அர்புதமாய்ப் படைப்பாக்கம் பெற்றுள்ளன.

(22/09/02 இல் கோவையில் திரு.ஞானி தலைமையில் விஜயா பதிப்பகம் & தமிழ் நேயம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'கனவுச் சிறை' நாவல் விமர்சனக் கூட்டத்தில் ந.இரவீந்திரன் பேசிய பேச்சின் எழுத்து வடிவம்)

அக்டோபர் 2002 இதழ் 34

பதிவுகள்: டிசம்பர் 2002 இதழ் 36!!
சமகால அரசியற் புலத்தில் 'கனவுச் சிறை' நாவல்!
-கோவை ஞானி-


எண்பதுகளிலும் அதன் பிறகும் தமிழில் வெளிவரும் மஹா நாவல் வரிசையில் இறுதியாக வெளிவந்திருப்பது தேவகாந்தனின் 'கனவுச் சிறை'. ஐந்து பாகங்கள், 1300 பக்கங்கள், ஐம்பதுக்கு மேற்பட்ட பாத்திரங்கள். 1981 முதல் 2001 வரையிலான இருபத்தோராண்டுக் கால அளவில் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் அவலங்களையும், போராட்டங்களையும் மிக விரிந்தளவில் படைப்பு நெறி பெரும்பாலும் பிசகாமல் இந்த மஹா நாவல் படைக்கப் பட்டிருக்கிறது. இதற்காக தேவகாந்தன் நம் மரியாதைக்குரியவராகிறார். நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளென தொடர்ந்து அவர் படைத்து வந்ததின் உச்சமென இந்த நாவலைக் குறிப்பிடலாம்.

ஈழத் தமிழ் மக்களின் போராட்டங்களைச் சித்திரிக்கும் முறையில் அருளரின் 'லங்கா ராணி', கோவிந்தனின் 'புதியதோர் உலகம்', சோபா சக்தியின் ' கொரில்லா' நாவல்கள் வெளிவந்துள்ளன. புகலிட எழுத்தாளர்கள் உட்பட ஈழத்துப் படைப்பாளிகள் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் வெளிவந்துள்ளன.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தங்களுக்கான அரசியல் உரிமைகளையும், தாயகத்தையும் பெறும் நோக்கில் ஈழத் தமிழர்கள் இடைவிடாத போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் பேரனுபவங்கள் உலகளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.படைப்புக்கள் என்ற வகையில் இன்னும் பல மஹா நாவல்களுக்கான செறிவான கருக்களை இந்தப் பேரனுபவங்கள் கொண்டுள்ளன. ஈழத் தமிழ் மக்களின் இடைவிடாத போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை வந்தடைந்துள்ள இன்றைய கட்டத்தில் தேவகாந்தனின் 'கனவுச் சிறை' நாவல் வெளிவருவது நம் வரவேற்புக்குரியது.

ஈழத் தமிழகத்தில் தொடர்ந்து செயல்பட்ட எந்தப் போராளிக்குழுவிலும் தேவகந்தன் இருந்ததாகத் தெரியவில்லை. 1984 இல் அவர் அகதியாக தமிழகத்துக்கு வந்து சேர்ந்தார். 1983 கலவரங்களுக்குப் பிறகு ஈழத் தமிழ் மக்கள் பல இலட்சம் பேர் அகதிகளாக தமிழகத்துக்கும், ஐரோப்பா முதலிய அன்னிய தேசங்களுக்கும் போய்ச் சேர்ந்தனர். வசதி வாய்ப்புள்ளவர்கள் இப்படி தாயகத்தை விட்டு வெளியேறிய நிலையில் வசதிவாய்ப்பற்றவர்களும், தாய்மண்மீது மகத்தான நேசம் கொண்டவர்களும் இலங்கையிலேயே தங்கினர்.

இவர்கள் பட்ட துயரங்களுக்கு அளவு இல்லை. போராளிக் குழுக்களில் இளைஞர்களிலிருந்து முதியோர்வரை பலர் போராடிச் செத்தனர். போராளிக் குழுக்களிடையிலும் கடுமையான மோதல்கள். இறுதியாக இவர்களையெல்லாம் மீறி வளர்ச்சி பெற்ற விடுதலை இயக்கம் ஈழத் தமிழ் மக்களுக்கான தாயக உரிமைகளை மீட்டுத் தர முடியுமென்ற நிலை இன்று நேர்ந்துள்ளது. இவர்களின் தலைமையை இன்று போராளிக் குழுக்கள் பலவும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை இவர்கள் மதிக்கவில்லை என்ற ஓயாத குற்றச்சாட்டுக்கள் ஈழத் தமிழகத்திலும், புலம் பெயர்ந்த தேசங்களிலும் எழுந்தது என்பது உண்மைதான். தமிழகத்திலும் இத்தகைய குரல்கள் எழுந்தன. இவர்கள் பெரிதாகப் பசப்புரை செய்யும் அந்தப் புனிதமான ஜனநாயக உரிமைகளை விடுதலை இயக்கம் முழு அளவில் கடைப்பிட்ட்திருக்குமென்றால் தவிர்க்க இயலாமல் இன்றைக்கு சமரசம் என்ற உடன்பாட்டுக்குச் சிங்கள அரசு வந்திருக்குமென எவரும் சொல்ல முடியாது. வரலாறு இப்படி எத்தனையோ சிக்கல்களோடும், குழப்பங்களோடும்தான் இயங்குகிறது என்ற உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை.

இலங்கையென்ற ஒரு தேசத்தில் பல ஆயிரமாண்டுகளாக தமிழ் மக்கள் வாழ்ந்திருந்தனர். இவ்வளவு தொன்மையான வரலாறு சிங்கள மக்களுக்கு இல்லையென்பதினாலேயே, தமிழ் மக்களுக்கு மட்டுமே இந்தத் தேசம் உரிமையுடையது என்று யாரும் கருதத் தேவையில்லை. தமிழ் மக்களும் சிங்களரும் ஒற்றுமையோடு ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த காலங்களும் உண்டு. சிங்கள மக்களை நாகரிகப்படுத்தியதில் தமிழ் மக்களுக்குப் பெரும் பங்குண்டு. சிங்கள மக்களின் பவுத்த மதம் மரியாதைக்குரியது என்பதிலும் ஐயமில்லை.

ஐரோப்பியர் வருகையையொட்டி இலங்கையும் நவீன காலத்துள் வந்து சேர்கிறது. இந்தக் காலத்தைத்தான் இன்றுவரையில் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் முரண்பாடுகளோடு நாம் எதிர்கொள்கிறோம். இரண்டு இனங்களும் ஐம்பது ண்டுகளுக்கு மேலாக மிகக் கடுமையாக மோதிய நிலையில் இன்று ஒரு கட்டத்தை அடைந்துள்ளார்கள். இவர்களுக்கிடையில் ஏற்பட இருக்கிற உடன்பாடு எத்தகைய அரசியல் பொருளியல் முதலிய கூறுகளோடு அமையும் என்பதை இப்பொழுதே உறுதியாகச் சொல்வதற்கு இல்லை. சமரசம் தவிர வேறு வழியில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம் என்று தோன்றுகிறது. உடன்பாடு எத்தகைய கூறுகளை உள்ளடக்கியிருந்த போதிலும், ஒரு தேசம் -- இரண்டு இனம் என்பதுதான் அடிப்படையாக இருக்க முடியும். இப்படி ஒரு சமரசத்தைத்தான் நாங்களும் இருபது ண்டுகளுக்கு மேலாக வற்புறுத்தி வந்தோம் என்று இன்று எவரும் பெருமை பேசுவதற்கு இடமில்லை. 60000 மக்களைப் பறிகொடுத்த பிறகுதான், இப்படி ஒரு சமரசத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைப்பாட்டிற்கு சிங்கள அரசு வந்து சேர்ந்திருக்கிறது.

தனிநாடு என்பதைத் தவிர வேறு இறுதி இலக்கு எங்களுக்கு இல்லையென்று விடுதலைப் போராளிகள் நம்பிக்கையோடும் உறுதியோடும் போராடினர் என்பதிலும் ஐயமில்லை. அடிமைப் பட்ட நாடுகள் விடுதலை பெறுவதென்ற போக்கு வரலாற்றில் இன்றளவும் தொடர்கிறது என்பதுவும் உண்மைதான். எனினும் இன்றைய வரலாற்றிலும் வல்லரசுகள் முதலியஆஅதிக்கச் சக்திகள் தங்கள் தேவைக்கு ஒத்த முறையிலான விடுதலைகளைத்தான் ஏற்கின்றன என்பதும் உண்மை.

ஆனையிறவு வெற்றிக்குப் பிறகு ஈழத் தமிழகம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் பிறகு என்ன ஆயின என்பதை நாம் நன்கு அறிவோம் . இந்தியாவுக்கு ஒத்த ஒன்றைத்தான் ஈழத் தமிழகம் பெறமுடியும். அமெரிக்காவுக்கும் இது ஒத்ததாக இருக்க வேண்டும். வேறுவழி இல்லை. இலங்கை அரசுக்கு இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா முதலிய நாடுகள் போர்த் தளபாடங்களைத் தொடர்ந்து வழங்கிய போதும், இந்தியாவும் , அமெரிக்காவும் சிங்கள ராணுவத்துக்கு தொடர்ந்து லோசனை முதலியவற்றை வழங்கிவந்த போதிலும் சிங்கள அரசு விடுதலைப் போராளிகளை வெற்றிகொள்ள இயலவில்லை என்பது உலக வரலாற்றில் ஒரு அற்புத நிகழ்வு என்றே வரலாற்றாசிரியர்கள் மதிப்பீடு செய்வார்கள். இரண்டு இனங்களுக்கு இடையில் உறுதியான உடன்பாடு சாத்தியம்தானென்று இன்றும் நாம் உறுதியாக நம்புவதற்குத் தயாரில்லை. எனினும் போர்க் களத்தில் இரு இனங்களும் அழிந்து ஒழிவதைக் காட்டிலும் சமரசம் எல்லாவகையிலும் மேலானது என்பதில் ஐயமில்லை.

நாம் இவ்வளவும் சொல்வதற்கான காரணம் என்ன என்பதை இப்போது குறிப்பிடலாம். நாவலின் இறுதியில் தேவகாந்தன் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவு படுகிறது. சென்னையில் நடைபெறும் உலகத் தமிழர் கலாச்சாரப் பேரவையினிறுதி நாள் பொதுக் குழுவில் கடுமையான விவாதம் நடைபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சமரன் முதலியவர்கள் தனி நாடு என்பதுதான் இறுதி இலக்காக இருக்கமுடியும் என்று வாதாடுகின்றனர். இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் முறையில் ஐரோப்பாவிலிருந்து வந்தஆஅனந்தி என்ற பெண் பதில் கூறுகிறார்:'ஐரோப்பாவில் புகலிடம் தேடி குடியேறிய நாங்களும் போராளிகள் ஆயுதங்கள் முதலியவற்றைப் பெற நிதி வழங்கினோம். நாங்கள் இதில் பின் வாங்கவில்லை. போராளிகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளைத் தந்த பிறகு இன்று நாங்கள் வற்புறுத்துகிறோம் இரண்டு இனங்கள் - ஒரு தேசம் என்பதுதான் நமக்கு இலக்காக இருக்க முடியும். '

இது ஆனந்தியின் கருதுமட்டுமல்ல, புகலிட போராளிகளின் கருத்துமாகும். தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழத் தமிழ் மக்களுக்கோ, போராளிகளுக்கோ எந்த உதவியும் செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் செய்யும் வாய்ச்சவடால்களுக்குப் பொருளில்லை. அன்றியும் கலாச்சார இயக்கத்தின் நோக்கமும் வேறாக இருக்க முடியாது. நாவல் இந்தச் செய்தியோடுதான் முடிவடைகிறது.ம் ஆகவே தேவகாந்தனின் பார்வையும் இதுவாகத்தான் இருக்கமுடியும். போராளிக் குழுக்களில் தேவகாந்தன் இல்லையென்பதை இவரது நிலைப்பாட்டிற்கு எதிரான விவாதமாகவும் மாற்றுவதற்கு இடமில்லை. ஆனால் இதே கருத்தை 1983 முதலே இவர் கொண்டிருந்தார் என்பதற்கும் இல்லை.

இரண்டு இனங்களும் ஒரு தேசத்தில் அவரவர்க்கு ஒத்த உரிமைகளோடு இணைந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஆசிரியரின் கருத்து என்று உறுதியாகச் சொல்வதற்கு நாவலுக்குள்ளிருந்து சில சான்றுகளைத் தரலாம்.

'கனவுச் சிறை' நாவலை ஒரு மகா நாவலாக நாம் மதிப்பீடு செய்வதற்கு தேவகாந்தன் படைத்துள்ள சில அற்புதமான பாத்திரங்களை நாம் சான்றாகச் சொல்ல முடியும். இவர்களுள் ஒருவர் சங்கரானந்த தேரர்.தமிழ் நாவல்கள் முழுவதும் தேடினாலும் இவருக்கு நிகரான இன்னொரு துறவியை நம்மால் சொல்ல முடியாது. சிங்கள வெறி பிடித்த பௌத்த துறவிகளிலிருந்து இவர் முற்றிலும் வேறுபட்டவர். சிங்கள தேசத்தை இராணுவ உடை தரித்த புத்தரின் பிம்பம் பெருமைக்குரியதாக்கியதாய் சிங்கள மக்கள் எண்ணிப் போற்றிய சூழலில் அமைதியே உருவான புத்தரின் இன்னொரு வடிவமாகச் சங்கரானந்தர் இருந்தார். இலங்கையில் தமிழர் மற்றும் சிங்களவரின் வரலாற்று உண்மைகளை தன் ஆசிரியரின் மூலம் கண்டறிந்தவர் இவர். தமிழர்களின் மேன்மைகள் பற்றி அக்கறையோடு சொல்பவர் .இவர் மூலம் இலங்கைத் தீவின் தொன்மையான வரலாற்றையும், இரண்டு இனங்களும் கொண்டும் கொடுத்தும் மேன்மையடைந்தது பற்றியும் தேவகாந்தன் விரிவாகச் சொல்கிறார். நாவலுக்குள் ஒரு விரிவான வரலாற்று ஆய்வு இடம் பெற்றிருக்கிறது.(அபூர்ணம்).

பதிவுகள்: டிசம்பர் 2002 இதழ் 36!

[தேவகாந்தனின் மேற்படி நாவலான 'கனவுச் சிறை' விரைவில் தமிழகத்தில் முழுத்தொகுதிகளும் இணைந்து வெளிவர இருப்பத் குறிப்பிடத்தக்கது.]


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner