இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2010  இதழ் 132  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
டிசம்பர் மாதக் கவிதைகள்!

கடைசி வேட்டை

- நட்சத்திரவாசி -

ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன்ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன்
பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது
யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான்
மெல்ல தென்றல் வீசுகையில் நான் நினைவுகளில் என்னை காண்கிறேன்
எனது தேசத்தில் எனக்கிருந்த வீடும்,ஊரும் இல்லாமல் போயிற்று
என்னை ஆண்ட காதலியவளின் முகமும் கூட
ஒரு மின்னல் வெட்டென வந்து போகிறது அவ்வப்போது நினைவுகள்
எனது குழந்தைகளிடன் நான் கொண்ட பாசம் கண்ணீராய்
வானத்தில் ஊர்ந்து போகிறது வெண்ணிற மேகக் கூட்டமாய்
அது எங்கோ மழையாய் பெய்யக் கூடும் என் சோகம் சொல்லி
எனினும் வறண்ட பாலையில் தூசிக்காற்றாய் சுழலும்
உயிரின் பொடிதுகள்கள் உயிராக வேண்டி தியானிக்கின்றன
அவனோ ஏழு வானங்களுக்கு மேல் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறான்
அவனுக்கு தெரியாததல்ல தனிமையும்,உவர்ப்பும்
மந்திரத்தால் அவனை வசியம் செய்து எனதுயிரை என்னிடம்
சேர்க்கும் வல்லமையுடையவன் யாரோ எப்போது வர கூடுமோ
எனினும் நான் காத்திருக்கிறேன்
எனது ஊரின் ரம்மியமான பொழுதுகளை குடித்து
காதல் போதையை கிரகித்து ஊன் அழிய சிதிலமாய்
போகுமிந்த உயிர்கூட்டில் கடைசி வேட்டை எப்போதோ சொல்லிவிடு
அதற்கு முன்னால் எனக்கொரு சேதியனுப்பவேண்டும்.


mujeebu2000@yahoo.co.in

**********************
சுரேசுகுமாரன் கவிதைகள்

மூச்சுக்காற்றின் மரம்

சுரேசுகுமாரன் கவிதைகள்அந்த மரம்
மூச்சுக் காற்றால் ஆனது.
கோடாலியால் வெட்ட முடியாது எனினும்
மெல்லிய தூரிகையின் நெருடலில் நொறுங்கும்.
நெருப்பு நெருங்க முடியாது எனினும்
சுட்டு விரல் பொசுக்கிவிடும்
அதன் மையம்.

மூச்சுக்காற்றின் மரம்
மொழியின் எல்லை தாண்டி
விரியும் ஒர் அற்புத உலகம்.

தவம்

வாகன உரசலின் சிரத்தையற்று
தார்ச்சாலையின் மத்தியில்
அழகுப்பதுமையாய் வீற்றிருக்கும்
வெள்ளாட்டுத் தாயொன்று…

குறும்பாட்டு ருசியில்
ஓவ்வொன்றாய்
தன்குட்டிகளை இழந்த விரக்தி..

அவ்வசிரத்தையின் இறுமாப்பு
வலிமையை காட்டினாலும்
இப்புவியில் கால்பாவாத
இன்னுமொறு உயிரல்லவோ
அதனுடன் காத்துக் கிடக்கிறது.
அவதானிப்பு

என் எண்ணங்களை விட
வேகமாய் இழுத்துச் செல்லும்
என் வாகனம்..
பத்து நூறு வருடங்களில்
முடிக்கப்பட வேண்டிய வேலைகள்
எனக்காக காத்துக் கிடக்கின்றன.

முடிவற்று சுழலும் நாற்காலிகள்.
எவற்றினாலோ முடுக்கப்பட்டு
ஒயாது அசையும் தலைகள்..

இவற்றினூடே
விதானத்தில் அமர்ந்தவாறு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்
பருந்து ஒன்று.

நான்-யார்?

நெற்றிப்பொட்டில் நிலைத்திருக்கும்
சிறகு விரித்த பருந்தின் வடிவம்.
ஓளிவட்ட பின்புலத்தில்
நிழழுருவாய் நகரும்
குருஷேத்திர காட்சிகள்...
அர்ஜீனனா?
சாரதியா?
துரியோதனனா?
குத்திட்ட அம்புடன்
‘ராமா’ என்றலறி
செத்தொழிந்தது மான்..,

எதிர் யுத்தம்

நண்பா...
எவற்றில் நாம் வேறுபடுகிறோம்?
நாம் பேசும் மொழியில்?
ஆனால் அதன் அர்த்தத்தில் அல்ல
நம் சீருடையில்?-
ஆனால் அதன் பாதுகாப்பற்ற அடையாளத்தில் அல்ல
நம் அதிகாரத்தின் வடிவில் ?
ஆனால் அதன் குரூரமான உள்ளடகத்தில் அல்ல

நம் வறண்ட நிலத்தின்
நீரூற்றுகளான நம் குழந்தைகளுக்கு
நாம் எதை விட்டுச்செல்கிறோம் ?
சிதைந்த உடல்களுடன்
வெளிறிய பார்வை கலந்த அரிய புகைப்படங்கள்;
தூசு படியும் வரலாற்று பொக்கிஷங்கள்;
இவை தவிர
அதிகாரத்தால் முடுக்கப்பட்டு
ஓயாது அசையும் தலைகள்..
நண்பா..
இனி நம் யுத்தம் எதிர்முகமானது..
நம்மை ஓயாது செதுக்கிய
உளிகளுக்கு எதிரானது…
நம் திரும்புதலின் கலகம்
வெறும் அதிகார மீட்பு அல்ல..
அதுவே நம் மனசாட்சியின் வடிவம்.

கனவு

மூடப்பட்டிருந்த கதவை
யாரோ உடைத்து திறக்கிறார்கள்

வாய்க்குள்
கையை முழுவதுமாக திணித்து
எதையோ துழாவி எடுக்கிறார்கள்.,

எரியும் மேடையொன்றில்
ஏதோ ஒரு நாடகம்
அரங்கேறி முடிகிறது.

சுதந்திரமான தேர்வு என்பது…
அண்டை வீட்டாரிடம் பேசாமலிருப்பது
அதை எண்ணி வருத்தம் கொள்வது அல்லது
வருத்தப்படாமலிருப்பது…
மனைவி,பிள்ளையுடன் பாசமற்று இருப்பது..
பாசத்திற்காக ஏங்குவது அல்லது
ஏக்கமற்று இருப்பது..
அறிந்தவர்கள் கடந்து செல்லும் போது
கவனிக்காமல் செல்வது பின்பு
அதை எண்ணி வருத்தப்படுவது அல்லது
மறந்து விடுவது…
மனதிற்கு விளக்கமளிக்கும்
விளங்காதவர்களுக்கிடையில்
காரணம் ஏதுமின்றி
தற்கொலை செய்து கொள்வதும் கூட…

suresukumaran@gmail.com


**********************
கோநா. கவிதைகள்

புகைப்படத்தில் புன்னகைக்க முயன்ற பிதா காந்தியிதழ்கள்

கோநா. கவிதைகள்

பழுப்பு வன்புணர்ந்த
வெண் சுவரில்,
புகைப்படத்தில்,
புன்னகைக்க முயன்ற
பிதா,காந்தியிதழ்களில்
பிடித்துத் தொங்குகிறது
ஒட்டடை மாலை.

குறிவிடைக்கத் துரத்தி
கடித்துக் குதறிய
மென் கழுத்தின்
குருதி வாடையோ...

ஐந்து பேர்
குழு வன்புணர்ந்த பின்
பூப்பெய்தி வந்த
முதல் விலக்கு நனைத்த
பத்து வயது
பாஞ்சாலி உள்ளாடை வீச்சமோ...

கடைசி ராணுவனின்
கடைசித்துளி சிதறிவிழ
பெருமூச்சோடு எழுந்து வந்த
பதினான்கின்
உப்புக் கண்ணீர்க் கல் கரிக்கும்
பவுடர் வாசனையோ...

மொய்த்த ஈக்களை விரட்டி
முதல்த்துளி சீளில் விழுந்து
கலந்து எழுந்த மழை வாசமோ...

உண்டு புணர்ந்தபின்
மூச்சிரைக்க முலைகளில்
முத்தமிட்டுக் கொண்டிருந்த பின்னிரவில்
ஷெல்லடித்துச் சிதறிய
குருதி அமிலங்கலந்த
எச்சியிதழ் வாசமோ...

எட்டி உதைக்கச் சிதைந்து
குருதியோடு ஒழுகிய
தாய் மணம் வீசுங்கருவில்
ராணுவ(ன்) போதையில்
எடுத்த வாந்தியில் வீசும்
சாராய வாடையோ...

வழியற்று நீளும்
பெருவெளிப் போராட்டப் பாலையில்
வரியோடிய குருமணலின்
முடிவற்றாதுதிர தாகத்தில்
நினைவிழந்து முடமான
கருடன் குதறி குருடானவனின்
எறும்புகளை எச்சிலொழுக்கி இழுக்கும்
கண் பச்சை வாடையோ...

மோன புன்னகைக்கும்
புத்தனின் பாதகமலங்களில்
சிங்க வேட்டை நாயின்
விந்து நாத்தமும்
கந்தக நெடியும்
கலந்து சிதறிய
தமிழ் யோனியின்
கருகும் புகைவாசமோ...

எலிப்பொந்து முகாம்களில்
சுற்றிலும் மலம் சூழ
பாடம் நடக்க
பள்ளி தகர்த்து
தரைமட்டமாக்கி
வெடித்துச் சிதறி,
எரித்து,
கொன்று,
புதைத்து
வெற்றியென்றபின் தந்த
பொட்டலச் சோற்றில் வீசும்
பீதியில் பேண்டயெம்
பிள்ளைகளின் மலஜல வாசமோ...

கலந்து வந்த காற்றால்
மெலிதாய் ஒட்டடை அசைய
புகைப்பட பிதா,காந்தியிதழ்கள்
போதை அகிம்சையில்
புன்னகைக்கிறதோ...

பழுப்புச் சுவரைப்
பற்றிப் புணர்ந்த
ஒற்றைப் பல்லியின்
குறுங்குறி
உச்சத்தில் துப்பிய
செந்நிற விந்து
பிதா விழிகளில்
விழுந்து வழிவது
கண்ணீரோ ...
அழுகிறதோ,
புகைப்படத்தில்
புன்னகைக்க முயன்ற
பிதா,காந்தியிதழ்கள்.

தலைப்பு: நிதானம்

உருகி ஒழுகி விடுமென்ற பயத்தில்
கரைந்து குறையும் ஐஸ்கிரீமை
அவசரமாய்ச் சுவைத்திடும்
பெண்ணின் மடியில்
கரையாத விரல்களை -நிதானமாய்
சுவைத்துச் சிரித்தபடியொரு
குழந்தை

konamonaa@gmail.com


**********************
விழுதுகள்

- ராம்ப்ர‌சாத் (சென்னை) -


ராம்ப்ர‌சாத் (சென்னை)
நீ குளித்துவிட்டு
நனைந்த கூந்தலைத் துவட்டுகையில்
உன் கூந்தல் விழுதுகளை
விட்டகன்று பறக்கின்றன‌
நீர்த்துளிகள் சிட்டுக்குருவிகளாய்...

விழுதுகளின் ஊடாக‌
வழியும் பெருமழைத்துளிகளாகின்றன‌
உன் குளவிப்பூ விரல்கள்
நீ உன் கூந்தல் விழுதுகளை
கோதிவிடுகையில்...

பெண்ணழகே,
ஆலம் விழுதுகள்
ஆலமரத்தையே தாங்குமாம்...
உன் கூந்தல் விழுதுகள்
எப்போதும் உன் பூமுகத்தையல்லவா
தாங்குகிறது...

க‌ட‌ற்கரைக‌ளில் பெருங்கூட்ட‌ம்
கூடுவ‌து ஏன் தெரியுமா?
கடற்கரைகளின் நீலப் பொழுதுகளில்
உன் நீள விழுதுகள் அலைக‌ளாய்த்
தென்றலுடன் சஞ்சரிப்ப‌தை
ஆச்ச‌ர்ய‌மாய் க‌ண்டுக‌ளிக்கத்தான்...

இப்போதெல்லாம் எனக்குப் புத்தகங்கள்
பிடிக்கின்றன...
அவ்வப்போது கிடைக்கும்
உன் கூந்தல் விழுதுகளை
வேறெங்கே சேகரிப்பதாம்?...

- ramprasath.ram@googlemail.com
**********************
ப.மதியழகன் கவிதைகள்

விழுதுகள்பறவைகளின் எச்சத்திலிருந்து
முளைத்தது அந்த விருட்சம்
பாற்கடலை கடைவதற்கு
வாசுகி மறுத்திருந்தால்
இந்த ஆலம் விழுதுகளைத்தான்
தேடி வந்திருப்பர்
தேவாதி தேவர்கள்
நடந்து செல்லும்
பாதசாரிகளுக்கு
அவர்கள் இளைப்பாற
நிழலுடன் தென்றல் காற்று தரும்
சிட்டுக்குருவி முதல் கிளிகள் வரை
எத்தனையோ பறவைகளுக்கு
அடைக்கலம் அளித்திருக்கிறது
தனது கிளைகளில்
கூடுகட்டி வாழ இடமளிக்கிறது
தனது ஆயுளில் பாதியை
வேர்கள் தாங்கினாலும்
ஆயுளின் மீதியை
வளர்ந்து வந்து விழுதுகளே
தாங்கும் என
நன்கு உணர்ந்துள்ளது
விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடினாலும்
மனிதர்கள் உணர்வதில்லை
குடும்பமெனும் விருட்சத்தை
விழுதுகளாய் நாம் தாங்கவேண்டுமென்று.

வாழ்த்துகள்
வாழ்த்துவதில் இருக்கும்
இன்பம்
வாழ்த்து பெறுவதில்
இல்லை
வாசகன் அனுப்பும்
வாழ்த்தொன்றும்
சும்மா வந்துவிடவில்லை
இதெற்கெல்லாம் மேலாக
இலக்கிய விமர்சகனின்
போற்றுதல்
மேடை நாகரிகம்
என்று கருதி
போட்டி போட்டுக்கொண்டு
வாழ்த்துவோர்
இந்த பட்டியலிலேயே
சேர்க்கப்படவில்லை
தாய், தந்தையிடம்
வாழ்த்து பெற
கொடுத்து வைத்திருக்க வேண்டும்
அவங்க இருக்கிறப்பவே
சுகமாக வைத்துக் கொள்ள
யாருக்குத்தான் கொடுப்பினை இருக்கு
ஆசானிடம் ஆசிர்வாதம் பெறுவதில்
இருக்கும் நிறைவு
வேறெதிலுமில்லை
மனைவி பாராட்டுதலின் காரணமாக
கிறக்கம் கொள்ளும் அநேகருள்
நானும் ஒருவன்
இதில் மறைப்பதற்கோ,
வெட்கப்படவோ ஒன்றுமில்லை.

நிலைக்கண்ணாடி
தனது பிம்பத்தைப் பார்த்து
பூரிப்பு கொள்வார்கள் மனிதர்கள்
தனது எழிலை மெருகூட்டுவாள்
கண்ணாடி முன்பு
திருமணமாகாத கன்னிப்பெண்
பிரதிபலிப்பை மூலதனமாய் வைத்து
வீட்டினுள் எல்லா
அறைகளுக்குள்ளும் நுழைந்து
வேவு பார்த்துவிடும் கண்ணாடி
புறம் காட்டும் கண்ணாடி
அகம் காட்டினால்
எவர் நிற்க முன்வருவர்
கண்ணாடி முன்பு
தண்டிக்கப்படாத வன்செயலுக்கு
சாட்சியாய் இருப்பதுவும்
ஒரு கண்ணாடி
நரை கூட கூட
கண்ணாடி பார்ப்பது
சஞ்சலத்தை தருகிறது
முதுமையை நெருங்குபவர்களுக்கு
தன்னை அறிந்து கொள்ளும்
ஆர்வத்தின் முதல்படி
கண்ணாடியில் தனது
பிம்பத்தைப் பார்ப்பது.

மதியழகன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு.

mathi2134@gmail.com
**********************

இதயத்தின் மொழியில் உன்னிடம்!

- காளி நேசன் -


உன்னை பார்த்துக்கொன்டிருந்த நொடிகள் ஒவ்வொன்றும் உன்னை பார்த்துக்கொன்டிருந்த நொடிகள் ஒவ்வொன்றும்
ஒரு பிரளயம் என் காலடியில்!
காதல் சொல்லியபின் கடந்த ஆண்டுகள்
நொடியில் நழுவி சென்றதாக எண்ணம்!
எனக்கு இதயத்தின் மொழியில்தான் பேச தெரியும்!
எனக்கு புரிந்ததெல்லாம், இதயத்தின் மொழி மட்டுமே!
என் சொல், குறியீடு, சைகை எல்லாம் என்
ஆன்மாவின் ஆழத்தில் உதிப்பவை!
நான் எந்த ஒரு கூட்டத்தையும் எளிதில் சாராதவன்!
அவை சார்ந்த சொல், குறியீடு, சைகைகள் எதுவும் புரியா!
காதலுடன் சேர்ந்து வரும் சாரல் மழை என்றனுபவத்தை தவிர
மற்ற விஞஞானங்கள் எதிலும் நம்பிக்கையில்லை!
நான் பார்ப்பதெல்லாம் இவைகள்தான்
காதலின் துடிப்பு, ஆன்மாவின் அழகு, இதயத்தின் உண்மை!
இவைகளில் எந்தவிதத்திலும் நீ தோற்றவள் அல்ல!
சிவப்பு வண்ண உடையில் என் அருகில் நீ
செம்பருத்தி மலரின் இதழ்களால் நெய்யபட்ட சந்தன யாழ்!
ஆன்மாவின் ஆழத்தை உணர்த்தும் உன் அழகிய விரல்கள
முல்லை மலர்கள் பதித்த செண்பக பூங்குலழ்கள்!
இந்த கரங்களுக்கு என்னால் என்ன பெரிதாக தர முடியும்?
கொடுக்கவிருந்ததையும் கடலிடம் அளித்துவிட்டேன்!
உனக்கு நான் எதையும் கொடுக்கவில்லை
சில கவிதைகள் தவிர! ஆனாம் எல்லாம் இழந்து நிற்கிறேன்!
என்னை சுற்றி சுற்றீ வந்து நீ பேசாமல் செல்வது .....
நான் என்ன சொல்வது?......
இனி இழப்பதற்க்கு ஒன்றுமில்லை என்னிடதில்!

kali.priyan@gmail.com


 
aibanner

 ©©©©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்