இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2011  இதழ் 135  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கவிதை!

[ நம் பழந்தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டில் ஒன்றான ‘நெடுநல்வாடை’ பற்றிய அறிமுகமாகவும் ஆய்வாகவும் முப்பது அறுசீர் மண்டிலப் பாடல்களை எழுதி விடுத்திருக்கின்றேன். ,  அன்பன்,  - தமிழநம்பி. ]

நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!
-
தமிழநம்பி -

தமிழநம்பி

(நான்குகாய் – மா - தேமா வாய்பாட்டில் அமைந்த அறுசீர் மண்டிலங்கள்)
கழக(சங்க) இலக்கியமும் நெடுநல்வாடையும்
சீரார்ந்த செம்மொழியாம் செந்தமிழின் தமிழர்களின்
சிறப்பைச் சொல்லும்
ஈரார்ந்த சான்றுகளாய் இலங்குவன நம்கழக
இலக்கி யங்கள்!
கூரார்ந்த தொன்மையுறு கொழுஞ்செழுமை நாகரிகம்
கூறா நிற்கும்!
வேரார்ந்த சொன்மலியும் வியன்றமிழின் நுட்பமெலாம்
விளக்கிச் சொல்லும்!

பத்துப்பாட் டுடனெட்டுத் தொகைக்கழக இலக்கியமாம்
பத்துப் பாட்டில்
முத்தேழாம் பாட்டாகும் முழுத்திறத்தில் நக்கீரர்
மொழிந்த திந்த
எத்துணையும் சுவைகுன்றா தேந்துநெடு நல்வாடை
ஏற்ற பேரும்
ஒத்தவகை கருத்தறியின் உணர்ந்துசுவைத் தேத்திடலாம்
ஓர்ந்து நோக்கி!

பெயர்ப் பொருத்தம்
தலைவன்றன் பிரிவாற்றாத் தலைவிக்கோ நெடுந்துயரைத்
தந்த வாடை!
உலைவறியாத் தலைவனுக்கோ உறுவெற்றி ஞாட்பளிக்கும்
ஒருநல் வாடை!
கலைவறியா நிகழ்நடக்கும் காலமதும் வாடையெனக்
கருத்தாய்த் தேர்ந்தே
நிலைபொருந்த பெயரிட்டார் ‘நெடுநல்வா டை’யெனவே
நேர்த்தி சேர்த்தார்!

பாட்டும் உரையும்
சுவையான நிகழ்வுகளைச் சொல்லழகில் கலைநுட்பில்
சொல்வ தோடே
சவையேற்றும் நச்சருரை தந்தகருத் தெழுப்பியதோர்
தக்கத் தாலே
சுவைகூடும் இப்பாடல் சொலலகமா புறப்பொருளா?
சொற்போ ராலே!
இவையிருக்க, சுருக்கமுற இப்பாடல் இயம்புவதை
இனிகாண் போமே!

பாட்டு கூறும் நிகழ்வுகள்
கூதிர்கா லத்தரசன் கொண்டமனை யாள்பிரிந்தான்
கொடும்போர் செய்ய!
கோதில்தூய் தலைவியுறும் கொடுந்துயரை செவிலித்தாய்
குறைக்க எண்ணி
ஊதிகைநெல் தூவிதொழு துருகிமனம் கொற்றவையை
உதவக் கேட்பாள்!
மாதிவளின் துயர்தீரே! மன்னன்வா கைசூடி
வரச்செய் என்றே!

கூதிர்காலமும் ஊரும் உயிர்களும்
ஒருநூற்று எண்பதுடன் ஓரெட்டு அடிப்பாட்டில்
உரைக்கும் செய்தி
பருகிடவே ஒவ்வொன்றாய் பார்த்திடுவோம் சுருக்கமுற
பாரில் மாரி
பெருவெள்ளம்! கோவலரும் பிறவுயிரும் நடுங்குகுளிர்
பீழை கூறி
இருங்களியும் ஊர்செழிப்பும் ஈரநீர்ப்பூ விரிசிரிப்பும்
எழில்வி ளக்கும்!

ஓங்கியவீ டமைந்ததெரு ஓராற்றைப் போல்கிடக்கும்
ஊர்வ ளத்தில்!
வீங்குதிணி தோள்வலியர் விலங்கன்னார் முறுக்குடலர்
வீழ்ம ழைக்கே
ஆங்கஞ்சா தலைந்திடுவர் அளிமூசு கட்குடியில்
அறுவை தொங்க!
பாங்காக விளக்கேற்றிப் பனிமுல்லை நெல்தூவிப்
பணிவர் பெண்டிர்!

கூதிர்கால நிலைப்பால் விளைவுகள்
மனையுறையும் ஆண்புறவு மகிழ்பெடையோ டுணாத்தேட
மறந்து மாழ்கி
வினையின்றி நின்றவலி மிகவாகக் கால்மாற்றும்
விந்தைக் காட்சி!
புனைமாலை தவிர்பெண்டிர் பூச்செருக நறுங்கூந்தற்
புகைவ ளர்ப்பார்!
முனைகொக்கி விசிறிதொங்கும் மூண்டிருக்கும் சிலந்திவலை
மொழிதல் நுட்பம்!

தென்றலடி சாளரத்தின் திண்கதவங் குளிர்க்கஞ்சித்
திறவாத் தாழில்!
கன்னலுள தண்ணீரைக் கருதியுணார் குளிர்காயக்
கடுகிச் செல்வார்!
குன்றியுள யாழிற்பண் கூட்டுதற்கே நரம்பைமுலைக்
கொம்மை வைப்பார்!
புன்கூர்ந்த காதலர்கள் புலம்பிடுவர் பிரிதுன்பில்
போகாக் கூதிர்!

அரசியின் மனை வகுத்த முறை
கதிரவனின் வெப்பொளியில் காலிரண்டு குடகுணக்கில்
கணக்கில் நட்டே
அதிலிரண்டு கோல்குறுக்காய் அளவிட்டு வைத்துப்பின்
அவற்றின் நீழல்
பொதிந்தொன்றன் மேலொன்றாய்ப் பொருந்தியொரு கோடாகும்
போதில் கண்டே
மதிபுலவர் நூலறிந்தார் மயக்கின்றிக் கயிறிட்டே
மனைவ குப்பார்!

வாயிலும் முன்றிலும் வழங்கொலிகளும்
புகுவாயில் யானையமர் மறவன்கைக் கொடியுயர்த்திப்
போகும் வண்ணம்
மிகுமலையில் திறந்தன்ன மேலுயர நெடுவாயில்
வினைவல் லாரால்
தகுவுயரத் திருக்கதவம் தாழமைத்துப் பிடிபொருத்தித்
தக்க வாறு
தெகுளுறவெண் கடுகொடுநெய் தேர்ந்தப்பி நெடுநிலையும்
திகழா நிற்கும்!

மணல்ஞெமிரும் முன்றிலிலே மானன்னம் துள்ளிமிக
மகிழ்வி லாடும்!
உணவாம்புல் தெவிட்டபரி ஒலிகனைப்பும் நீர்வீழும்
ஒலியும் மஞ்ஞை
முணங்கின்றி அகவொலியும் மூண்டுமலை எதிரொலியாய்
முழக்கம் கேட்கும்!
இணங்கலுறப் பலவொலியும் இவ்வாறே அரண்மனையில்
எழுச்சி கொள்ளும்!

அரசியின் நல்லில்லம்
பாவையகல் நெய்யூற்றிப் பருத்திரியும் நேரெரியப்
பார்த்துத் தூண்டி
தேவையுறு பள்ளிதொறும் தேங்கிருளை நீக்கியொளி
சேர்த்தும் காவல்
கோவையலால் பிறஆண்கள் குறுகியலா வரையிருக்கும்
குன்றென் இல்லில்!
பூவைமிகக் கொள்கொடிகள் பொலிவான்வில் குன்றின்மேல்
போல்வி ளங்கும்!

வெள்ளியெனச் சுதைசாந்து வீசவொளி பூசிமிக
விளங்க, தூண்கள்
வள்ளுரக்காழ் கருநிறத்தில் வாய்த்திருக்க நெடுஞ்சுவரோ
வார்ப்புச் செம்பில்
உள்ளியவே லைப்பாட்டில் உயர்வாகச் செய்ததைப்போல்
ஓங்கி நிற்கும்!
கொள்ளையழ கோவியப்பூக் கொடிகளுடன் கருப்பெயர்தாங்
கும்நல் லில்லம்!

கட்டிலும் படுக்கையும்
நாற்பத்து அகவையுடை நால்வாய்ப்போர்க் களம்பட்டு
நல்குங் கொம்பை
ஆற்றலுற கைவல்லான் அழகாகக் காற்குடமாய்
ஆக்கிக் கட்டில்
ஏற்றவகை இலையுருவை இடையமைத்து நாற்புறமும்
இனிய முத்து
நூற்சரமாய் தொங்குமதன் மேல்நோக்கின் தகட்டிலுரு
நுட்பம் தோன்றும்!

கான்முல்லை சேர்ந்தமலர் கவினுறவே வேறறிய
கட்டில் இட்டார்!
கோன்கோதை தாம்படுக்கக் குழையிணைவில் படுக்கைகளைக்
கூட்டி வைத்தார்!
மேன்மென்மை புணரன்னம் மெலவிடுத்தத் தூவியணை
மேலே இட்டார்!
தேன்றவசக் கஞ்சியுடன் திகழ்சலவை மடியாடை
தேர்ந்து வைத்தார்!

அரசியின் நிலை
ஆரமில்லாத் தனித்தாலி அழுத்துமுலை உலர்கூந்தல்
ஐயன் நீங்க
சீரழகி நுதல்உலற செறிகுழையும் அகற்றியதால்
சிறிதே தொங்கும்
ஆரழகு வடுச்செவியே! அவள்முன்கை பொன்வளையும்
நீங்கி ஆங்கே
நேரல்லாத் தொடிசங்கில் நெளிமெலிதாய் துய்யுடையும்
நீக்கா மாசில்!

தீட்டாத ஓவியமாய்த் திகழ்வளவள் தோழியர்க்கோ
தேமல் மேனி
ஊட்டத்தோள் வேயொப்ப உறுத்துமுலை மரையொக்க
ஒடுங்கி டையாம்!
நாட்டமுடன் தோழியரும் நல்லடியை வருடிடுவர்
நன்மை சொல்வர்!
கூட்டமுறு செவிலியரும் குறைதேற்றத் துணைவனின்னே
குறுகும் என்பார்!

ஆற்றாதாள் இன்சொலினும் அதையேற்கா தகங்கலங்கி
அமைதி அற்றாள்!
மேற்கட்டின் ஓவியத்தில் விண்ணிலவும் மீன்சகடும்
மேவி நீங்கா
வீற்றமெண்ணி நெட்டுயிர்த்தாள் விழிவடிநீர் செவ்விரலால்
மெலத்து டைத்தாள்!
மாற்றியவள் படர்தீர மன்னற்கு விறல்தந்தே
மறல்மு டிக்க!

பாசறையில் அரசன்
ஒளிப்பட்டப் போர்யானை ஒற்றைக்கை நிலம்புரள
ஒறுத்த வீரர்
ஒளிறுபகை போழ்ந்திடவே உற்றபுண்கண் டவர்வீரம்
உயர்த்திப் போற்ற
நளிர்வாடை அகற்சுடரை நனியசைக்க வேம்பார்த்த
நல்வேல் தாங்கி
மிளிர்பொருநன் முன்சென்றே விழுப்புண்ணர் குறித்திறைக்கு
விளக்கிச் சொல்வான்!

மணியணிந்த கடிவாளம் மாட்டுகிற சேணம்வேய்
மாத்தாள் பாய்மா
துணிவோடே பாசறையின் தொய்யலதை எங்கெங்கும்
துளித்துச் செல்ல
அணிவெண்கொற் றக்குடைக்ககீழ் அந்துகிலை இடப்பக்கம்
அணைத்துக் கொண்டே
பிணித்தவாள் தோள்தொங்கும் பெருமறவன் சுவலில்கை
பெய்து செல்வான்!

நள்ளிரவும் பள்ளிகொளா நல்வேந்தன் சிலரோடே
நண்ணி யாங்கே
வள்வலியர் விழுப்புண்ணார் மனம்மகிழக் கண்டவரை
வாழ்த்தி ஊக்கி
நள்ளார்தம் மோடுபொரும் நசைகொள்பா சறைத்தொழிலாம்
நவில்கின றாரே!
தெள்ளலுற நக்கீரர் தேர்ந்துரைத்த பாட்டிலிவை
தெரிவித் தாரே!

அகமா புறமா?
அகப்பொருளி லக்கணத்தில் அன்றேதொல் காப்பியனார்
அறியத் தந்தார்
மிகத்தெளிவாய் மக்களியற் பெயர்சுட்டி எவ்விடத்தும்
விளியா ரென்றே!
அகமறிந்த நக்கீரர் அதைமீறா தெழுதிடினும்
அறிவர் நச்சர்
தகவாய்ந்தே தருமுரையில் தலைவனியற் பெயரறிந்து
தருகின் றாரே!

வீரர்படைத் தலைவனின்வேல் ‘வேம்புதலை யாத்த”தென
விளம்ப லாலே
கீரருரைப் படிவேலில் வேப்பம்பூத் தாருளதால்
வேந்தன் மாறன்!
வீரமிகப் “பலரோடு முரணிய”னென் றுரைத்ததனால்
விளங்கும் மன்னன்
கூரறிவு நெடுஞ்செழியன் கொடுந்தாக்கில் எண்மரென
கொண்ட செய்தி

இன்னவகை ஆய்வுரையால் இயற்பெயரைக் கண்டுரைத்தே
இந்தப் பாட்டு
சொன்னவகை புறப்பாட்டே சுட்டியந்த வேப்பந்தார்
சொன்ன தென்றார்!
இன்னுமதன் திணைவாகை என்றுரைத்தே வெற்றிதனை
இயம்பி யுள்ளார்!
பின்னுமதன் துறைவாடைப் பாசறையா மதுபாலைப்
புறமென் றாரே!

புலவர்தம் உச்சிகொளும் நச்சருரை இவ்வாறு
புகன்ற போது
பலராய்வு வேம்பெனவே பகன்றததன் தழையைத்தான்
படலை அன்றென்
றிலகலுற சான்றுடனே எடுத்துரைத்தே இதுஅகமே
என்று சொல்லும்!
நிலவுமிரு ஆய்வுகளும் நெடுநல்வா டைச்சிறப்பை
நிலைக்கச் செய்யும்!

அகப்புற ஒப்பீடு
நெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள
நினைத்தி ருப்பான்!
நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள்
நெஞ்சம் நொய்வாள்!
படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான்
படர்த ணிக்க!
கடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள்
கலக்கம் மாறாள்!

செந்தமிழின் இலக்கியங்கள் செழியன்பு செருமறத்தின்
சீர்மை சொல்லும்!
சிந்தையுறு நுண்ணுட்பச் செய்திகளைத் தெரிவிக்கும்
தெருட்சி மாட்சி!
இந்தநெடு நல்வாடை இன்னன்பும் மறச்சிறப்பும்
எடுப்பாய்க் கூறித்
தந்தவகை அன்புமறம் தமிழினகப் புறச்சிறப்பை
தகவி ளக்கும்!

பாட்டு நலம்
பாட்டுநலம் அனைத்தையுமே பாராட்டல் எளிதன்று
பலநி கழ்வை
ஏட்டினிலே இயல்பின்பம் எள்ளளவும் மாறாதே
எழுதி யுள்ளார்!
காட்டும்வா னியற்சிறப்பும் கணியறிவும் ஓவியமும்
கனியத் தந்தே
தீட்டியுள அழகியற்கை தேன்சுவையாய் உயிரியக்கம்
திகட்டா இன்பம்!

சிறப்புரைக்கும் ‘மருவினிய கோலநெடு நல்வாடை’
செப்பக் கூற்று!
திறஞ்சான்ற பொருள்வளமும் தேர்ந்தெடுத்த உவமைகளும்
செஞ்சொற் சீரும்
மறஞ்சான்ற மன்னவனின் மதித்தொழுகும் பொதுவுணர்வும்
வழங்கும் பாட்டு
விறலார்ந்த நாகரிகம் விளங்கவுரை நக்கீரர்
வெற்றிப் பாட்டாம்!

தமிழநம்பி
thamizha nambi <thamizhanambi44@gmail.com


வேட்டையாடும் மிருகம்

- சித்தாந்தன் -


வேட்டையாடும் மிருகம்

வேட்டையின் போது
கொல்லாதுவிட்ட மிருகம்
என்னைக் கனவில் அச்சுறுத்துகின்றது

மரங்களிடை பதுங்கும்
அதன் கண்களின் குரூரம்
கொலையாளியின் கூரிய ஆயுதங்களாய்
ஒளிருகின்றன

அதன் பஞ்சுடலின் வனப்பில் மயங்கி
தப்பிக்க அனுமதித்துபோதும்
தன் சாதுரியத்தால்
என்னை வேட்டையாட வந்திருக்கின்றது

இலைகளையுண்ணும்
அதன் பற்களில் வழியும் இரத்தத்தில்
நனைகிற என் தேகத்தில்
தன் சிறுவிரல்களால் புலால் நாறும்
சுரங்களை மீட்டுகின்றது

பூச்சியத்தில் சிதறுண்ட
என் தூக்கத்தின் பசிய துளிரை
தன் நகங்களால் கீறும் மிருகம்
எதிர்பாராத பொழுதில்
ஒரு போர்வீரனாய் விஸ்பரூபம் கொண்டு
தன் யுகத்தின் கடைசிப் பிராணியாய்
என்னைப் பாவனை செய்து
அங்கலாய்த்தபடி அமர்ந்திருக்கிறது முன்னால்

நினைவின் வழி கனவுள் நுழைந்த
மிருகத்தின் சிறிய கண்களுக்குள்ளிருந்து
வேட்டை முடித்துத் திரும்பும்
எண்ணற்ற வீரர்களில் ஒருவனாய்
நானும் திரும்புகின்றேன்
தப்பித்தல்களை முறியடிக்கும்
பொறிகளைக் காவிக்கொண்டு


siththanthan@gmail.com

************************
கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

1. வளியின் உள்ளீடற்ற ஓசை...
வளியின் ஊடுருவல்
இசைக்கான தபால் தலை
நடை, தாளம், ஜதை
அசைவு, முத்திரை, பாவனைகள்
விலாசம் நிரப்பிய கடிதங்கள்
நடனம் பட்டுவாடா
ஒலியின் உந்து காற்று
தீண்டல், தழுவல், வருடல்
உயிர்ப்பித்தல், அரவணைப்பு
உணர்வூட்டல், படர்பித்தல்
சுவாசித்தல், உலர்வித்தல்
சுடர்வித்தல், நடைப்பித்தல்
அசைவித்தல், ஒளிர்வித்தல்
சலசலப்பு, அழுவித்தல்
நெகிழ் வூட்டல், விரித்தல்
பிரித்தல், குளிர்வித்தல்
வளர்த்தல், கேட்ப்பித்தல்
தொய்வித்தல், தாழ்வித்தல்
தளிர்த்தல், பறத்தல்
பூப்பித்தல், பகுத்தல்
அனைத்தும்
வளியின் பூரண முகவரிகள்!
அண்ட அசைவின்
மைய தந்தி காற்று

வளிபுகா வழித்தடத்தில்
ஓசை உணர்கிறேன்
நான்மட்டும் !
சலசலத்து பாயும் வெள்ளம்
ஆழம் மிகுந்த நீரடியுள்
தங்கி உருளும்
கூழாங்கற்களின்
உரசல் ஓசை
கேட்கிறது காதுகளுள்...
காற்றின் ஏமாற்றம் கலந்து!

2. அன்பிலார் எல்லாம் தூண்டில் !
சுரம் தப்பிய மனசு
அறிந்திராது வீழும்
வேண்டப்பட்ட பிசாசுகள்
வீசிய தூண்டிலில்

செலவாகி தவிக்கும்
வாழ்வின் எச்சம்
தக்கை உருளையேறி மிதக்க
தொடர் நெருங்கும் உறுத்தல்கள்
நட்புப் பேழையுள்
விஷம் துப்பி நிரப்பும்

அறியா காலம்
வஞ்சக சூழல்
பொன்னினிமை பொய்முகங்கள்
உயிர் மென்மை உறிந்து மகிழும்
அட்டை குழுக்கள்
அவசரமாய் இருள் புகுத்த
தன்னிலை உணரா சக்தி தோய்ந்து
வீழுகிற உள்ளம்
தண்டுவடம் கிழிபட்டு
தூண்டில் சிக்கும்

காயம் பதிந்த ஜீவன்
யாரும் இலா சூழலில்
தனிமை பருகி
குற்றம் பதியா கோப்பின்
நகல் துடைத்து
மீண்டும் மலர்ந்த நாட்களை
சுவாசிக்க தயாராகும்
உயிர் ஒட்டிக்கொள்ளும் ...
இனி
உதிர்ந்த செதில்கள்.


Kelango_rahul@yahoo.com

**************************
அழகிய தீவாய்ப் பெண்....

- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.-


வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.-

பெண்ணிலை வாதம் பேசிப் பேசியே – நாம்
நன்னிலை நாசம் செய்வது மோசம்.
முன்னிலை முயற்சி முனைப்பாய் முன்னெடுத்தால்
என்னிலையிலும் பெண்ணுயர்ச்சி பெருகும்.
அன்பு, வீரம், சுதந்திரம், தர்மம்
அறிவுப் பெண்ணின் உயர் சாரமாகட்டும்.
சதியும் பதியும் சமனெனக் கொண்டு
சங்கீதமாய் நல் சம்சாரம் இழையட்டும்.

நாணம் குறைத்துப் பெண் தலை நிமிரட்டும்.
வானிற்குயர கல்வி கலைகள் பெருகட்டும்.
தன்னை இகழ்பவன் போற்ற வழி காணட்டும்.
தென்னை பனையளவு தன் சிறப்பை உயர்த்தட்டும்.


பழகிய பண்ணாய்ப் பண்பில் இனிக்க வேண்டும்.
அழகிய தீவாய் உலகை அசத்த வேண்டும்.
பாரதி மட்டுமன்று பெண்ணைப் பாடுவோர்
யாரதுவாகிலும் நற் திறம் போற்றுவார்.


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-1-2006.

Vetha. langathilakam <kovaikkavi@gmail.com

***************************
ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்

1. அதீதவேளை
வாழ்வுப் புத்தகத்தில் மரணத்தின் வரிகள்
சூன்ய வெளியில் அக்னி ஜுவாலை
காற்றின் தேசமெங்கும் காந்தல் வாசம்
வீட்டின் விட்டத்தில் விண்மீன்கள்
குழந்தையின் கைகளில் தவளும் வெண்ணிலா
யானைக் கூட்டத்தில் சிக்கி
பயந்தோடும் சிறுத்தை
வனத்தில் மீதமிருக்கும்
மான் இறைச்சியை ருசிக்க
வட்டமிடும் கழுகுகள்
பசியோடு அலையும் பிச்சைக்காரன்
நினைப்பான்
கடந்து செல்லும் எல்லோரும்
உணவருந்திவிட்டதாக
தேசாந்திரியாக திரிபவன்
கிழக்கு எதுவென்று தேடிக்கொண்டே
மேற்கு நோக்கி நடந்தான்
அந்தி நேரத்துச் சூரியன்
பொன்ணொளிப் பாய்ச்சியது
விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டதையுணர்த்த

2. கடைசி தருணங்கள்
மேஜையின் மீது விஷம் இருந்தது
போத்தல்களில் தண்ணீர்
நிரம்பியிருந்தது
விஷம் கசக்குமா, துவர்க்குமா
முன்பின் அருந்தியதில்லை
யார் மீது கோபம்
அவனுக்கு தன் மீது
தீராக் கோபம்
ஏமாற்றம், துரதிஷ்டம்
இவைகளால்
நிரம்பியது அவன் வாழ்க்கை
எதிர்கொண்ட செயல்களனைத்தும்
தோல்வியில் முடிந்தது
இந்த நிலையில் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அவனுக்கு இருக்கத்தான் ஆசை
ஆனால் நாளையே
வாழ்க்கையின் கோர முகத்தை
அவன் மீண்டுமொருமுறை
எதிர்கொள்ள நேர்ந்தால்
கையிலெடுத்தான் விஷ பாட்டிலை
விழுங்கிய வேளையில்
இன்றோடு அவனுக்கான உலகம்
அழிந்துவிட்டிருந்தது.

3. நெடுஞ்சாலையிலொரு விபத்து
சுமார் நாற்பது வயது இருக்கலாம்
கல்யாணமானவர் போல் தான் தெரிகிறது
இருசக்கர வாகனமும் புதுசு தான்
இன்னும் பதிவு எண் கூட
வாங்கவில்லை
என்ன காரியமாய்
வீட்டிலிருந்து கிளம்பினாரோ
எப்பவும் போல் குழந்தைகள்
டாடா சொல்லியிருக்கும்
மனைவி கொடுத்த
மளிகை லிஸ்ட் கூட
பையில் இருந்திருக்கும்
கைபேசி அருகில் கிடந்தது
பேசிக் கொண்டே வாகனத்தை
அஜாக்கிரதையாக செலுத்தியிருக்கலாம்
டேங்கர் லாரி மோதி
தூக்கிவீசப்பட்டவுடன்
அவரது வாய்
தண்ணீர் தண்ணீர் என்று
முனகிக் கொண்டே இருந்தது
எனக்கும் சோடா வாங்கிக்
கொடுக்க விருப்பம் தான்
அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது
உயிர் உடலிலிருந்து பிரிந்துவிட்டிருந்தது.


ப.மதியழகன்,
cell:9597332952
mathi2134@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2011  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்