இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

நிகழ்வுகள்!

சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும், அதற்கு வெளியிலும்...

- ரவி (சுவிஸ்) -


சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும், அதற்கு வெளியிலும்...18.5.2008 அன்று இந்தக் கலந்துரையாடல் நடந்தது. சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். வடக்குக் கிழக்கு பிரிப்புப் பற்றியதும் கிழக்கின் நிலை பற்றியதுமான கருத்தரங்காக இது விரிந்திருந்தது. வடக்குக் கிழக்குப் பிரிப்பைப் பற்றிய விவாதம் அவசியமற்று இருந்தது. அதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கின் நிலை பற்றிய விவாதங்கள் நடந்தன. எதிர்விவாதங்களின் வலு குன்றி இருந்தாகவே எனது கணிப்பு. கலந்துரையாடல் நெடுகிலும் புலியெதிர்ப்பு மனஉளவு நிலையிலிருந்து வெளிவர முடியாது கருத்துக்கள் கணிசமானளவு இருந்ததாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் ஏதோ புதிய விடயமுமல்ல. இன்று ஐரோப்பிய சந்திப்புகள் எல்லாமே அல்லது கருத்தாடல்கள் எல்லாமே இதற்குள் புதையுண்டதாக சொல்லப்படுவது கவனத்திற்குரியதுதான்.

யாழ் மேலாதிக்கம் என்பதை எல்லாப் பிரச்சினைக்குமான விளக்கத் தளமாகக் கொள்வது முதல் வன்முறையை புலிகளோடு அல்லது
-அவர்கள் விரிந்த தளமாகக் கண்டுகொள்ளும்- யாழ்ப்பாணியத்தோடு மட்டும் அடையாளம் காணும் நிலை இருக்கிறது. அப்படியானால்
தலையை முண்டமாக வெட்டியெடுத்து வீசுவதுவரையான சிங்களப் பேரினவாதத்தின் வன்முறையை எதனால் விளக்கப் போகிறோம்.
ஐனநாயகம் செழித்தோங்குவதாகச் சொல்லப்படும் மேற்குலகில் இளைஞர் வன்முறை என்ற ஒரு விடயம் பெரும் பிரச்சினையாக ஊடக விவாதங்களை நிரப்புவனவாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வன்முறைகள், அதிகாரங்கள் செயற்படும் நுண்களங்கள் பற்றியெல்லாம் பின்நவீனத்துவம் சொன்ன விடயங்களையெல்லாம் இப்போதைய விவாதங்களில் பலர் பேசுவது
கிடையாது. முதலாளித்துவ ஐனநாயகம், அதன் அதிகார நிறுவனங்கள், தேர்தல் பற்றிய கணிப்பீடுகள் எல்லாம் இப்போ வசதியாக
மறக்கப்பட்டிருக்கின்றன.

வடக்குக் கிழக்குப் பிரிப்பை மேலாதிக்க அரசின் நீதிமன்றம் அங்கீகரித்ததை கிழக்கு மக்கள் அங்கீகரித்ததாக மொழிபெயர்க்கப்படுகிறது. வன்முறைகள் அற்ற தேர்தல் எப்போ எங்கே நடந்திருக்கிறது... எனவே இந்த மாகாணசபைத் தேர்தலையும் அந்தக் கூழுக்கள் இருக்கும் பலாக்கொட்டையாக எடுத்து ஜீரணிக்கச் சொல்கிறார்கள். அதாவது தவறுகள் வன்முறைகள் கொண்ட தேர்தல்களை இயல்பானதாக்கிக் காட்டுவதோடு அதை ஜனநாயக வழிமுறையாகக் காட்டுவதாக இதை விளங்கிக்கொள்ள முடியுமெனின் “உலகில் தவறுகள் வன்முறைகள்
அற்ற விடுதலைப் போராட்டங்கள் எங்கு நடந்திருக்கிறது எங்களிடமும் அப்படித்தான்” என வாதிடும் புலிகளின் வாதங்கள் மட்டும் எப்படி அர்த்தமற்றதாகும். புலியிசமும் புலியெதிர்ப்பிசமும் இங்கும் இணைகின்றன.

தேர்தலைக் காட்டி மட்டுமல்ல மக்களின் சக்தி பற்றி பெருமிதப்பட்டுக்கொண்டு மறுபக்கம் யாழ்ப்பாணியள் தரப்படுத்தலைக் காட்டி மற்றைய தமிழ் மாவட்ட மக்களை எல்லாம் ஏமாற்றினார்கள் என்று -தாம் மக்கள் பற்றிச் சொன்ன- பெருமிதங்களைக்
கொன்றுவிடுகிறார்கள். ஒடுக்குமுறையே அற்ற கிழக்கு மக்கள் ஏய்க்கப்பட்டு போராட வைக்கப்பட்டார்கள் என்று வாதம் புரிவதில் எங்கே இயங்கியல் இருக்கிறது. எங்கே மக்கள் சக்தி இருக்கிறது. ஒடுக்குமுறையற்ற ஒரு மக்கள்கூட்டம் போராடுகிறது என்றால் மார்க்சை மார்க்சியத்தை நாம் புதைத்துவிட வேண்டியதுதான். கிழக்கின் தனித்தன்மை பற்றிப் பேசும்போது அங்குள்ள முஸ்லிம்களின் தனித்தன்மையும் திருமலை மக்களின் தனித்தன்மையும் உள்ளடங்கித்தானே இருக்கிறது. தனித்தன்மைகள் உள்ள மக்கள் கூட்டம் மொழியால் மதத்தால் இனத்தால் என எந்த அடையாளத்துக் கீழ் ஒடுக்கப்படுகிறார்களோ அந்த அடையாளத்துடன் போராட்டத்தை முன்னெடுப்பர் என்பது வரலாறு. ஒற்றையடையாளமாகக் காட்டப்படும் கிழக்கின் தனித்தன்மை வடக்குக் கிழக்குப் பிரிப்புக்கு பலவீனமான காரணமாகவே இருக்கிறது.

மக்கள் இந்தப் போரில் நொந்து போனார்கள். மக்கள் பல்வேறு தமிழ் விடுதலை அமைப்புகளால் மற்றும் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த
ஸ்ரீலங்கா அரசுகளால் என அவர்கள் எதிர்கொண்டவை பல. எனவே வாழ்வாதாரத்துக்கான உடனடித் தேவைகள் அமைதிநிலை என்பன
அவர்களுக்குத் தேவை. இந்த இடைநிலையில் வைத்துநிகழ்த்தப்படும் அரசியல் வெளியில் அவர்கள் விடப்பட்டுள்ளனர். இதைப்
புரிந்துகொண்டு கிழக்குத் தேர்தல் 'setup' கிழக்கு மக்களுக்கு எதை வழங்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்பது தவிர்க்க
முடியாததாகிறது. [இந்தத் தேர்தல் ஆயுதமுனையில் , முதலாளித்துவ ஜனநாயகமே ஏற்றுக் கொள்ளமுடியாத அவகையில் நடத்தப்பட்ட
தேர்தல். இத்தகைய தேர்தல்கள் எதனையுமே பெற்றுத்தரப்போவதில்லை. சமூகங்களை வர்க்க, இன, பிரதேச மற்றும் மத ரீதியில் பிரித்தாளுவதற்கும், தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தங்குதடையற்றுத் தொடர்வதற்கும், சர்வதேச சமூகத்திற்கு முன்னால் தம்மை ஜனநாயகவாதிகளாக நியாயப்படுத்துவதற்கும், இது போன்ற விடயங்களுக்கு மட்டுமே உதவுமென்பதைப் பொறுத்திருந்துதான் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.- பதிவுகள்- ]அந்த வாழ்வாதாரங்கள் அவர்களுக்கு நிம்மதியான சூழலைத் தருமானால் அதற்காக சந்தோசப்படாமல் இருக்க முடியாது. ஒடுக்குமுறைகள் வெளிக்கிளம்பும்போது அங்கு அரசியல் போராட்டங்கள் தவிர்க்க
முடியாமல் எழும் என்று அரசியல் பார்வையை வைக்க முற்படும் ஒருவருக்கு மீண்டும் நிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்பது
பதிலாகாது.

தனது பதவிக்காலத்துள்ளேயே அதுவும் இந்த வருட இறுதிக்குள் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கப் புறப்பட்டுள்ள மகிந்தவுக்கு கிழக்கின் மாகாண சபை எதைப் ~பிரதியீடாக| வழங்கப் போகிறது? தேர்தல் நியமனங்களிலிருந்து பதவி நியமனங்கள்வரை எல்லாவற்றையும் மகிந்த ராஜபக்ச தனது விரல்களில் வைத்திருப்பதால் இந்த பிரதியீடு என்ற சொல்லாடலை இங்கு பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இது காலம் பதில் சொல்லும் கேள்வியாக இருக்கிறது. அத்தோடு மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடு என்ற பட்டத்தை வாங்கியுள்ள மகிந்த அரசு ஜனநாயக மீட்பு பயங்கரவாத ஒழிப்பு என்பவற்றுக்குப் பிறந்த குழந்தையாக தாலாட்டிக் காட்டும் ஒரு உத்தியில் ஈடுபட கிழக்கின் மாகாணசபை அவருக்குத் தேவைப்படலாம்.

தமிழ்த் தேசியம் என்பதை யாழ் மேலாதிக்கக் கருத்தியல் அரித்துத் தின்றதை காண மறுத்து புலிகள் கூறும் தமிழ்த்தேசியத்தை தமிழ்த்
தேசியமாகக் காட்ட முனைவது ஒருபுறம். தமிழ்த் தேசியம் சமன் தமிழீழம் என கொள்பவர்கள் இன்னொருபுறம். தமிழீழம், புலிகள்
என்பவற்றை மறுக்கப் போய் தமிழ்த்தேசியத்தை மறுக்கின்றனர். அதை மறுப்பதாயின் பேரினவாதம் என்ற ஒன்றை மறுக்க வேண்டும்.
அது இயலாததாகிறபோது பேரினவாதத்தை உருவாக்கியது தமிழ் அரசியல்தான் என்று நிறுவ வேண்டியிருக்கிறது. ஸ்ருட்கார்ட்
கூட்டத்தில் வைக்கப்பட்ட கிழக்கு முன்னணி அறிக்கையிலிருந்து உருவி எடுத்த இந்த மரதன் கோலை கைமாற்றி ஓடத்
தொடங்கியிருக்கின்றனர் சிலர். இதை ஏதோ புரட்டிப்போடலாகக் காண்பிக்க வெளிக்கிடுவது இன்னொரு அபத்தமாக உள்ளது.

தரப்படுத்தல் யாழ் மாவட்டத்தைத் தவிர்ந்த மற்றைய மாவட்ட மக்களுக்கு நன்மையளித்தது என்பது உண்மை. அதேநேரம்
சாதியொடுக்குமுறை மோசமாக நிலவிய யாழ் மாவட்டத்துள் அகப்பட்டிருந்த தலித்துகளை தரப்படுத்தல் இன்னமும் பாதித்தது என்பதை சொல்ல மறக்கும் வாதங்கள் பிரதேசவாதமன்றி வேறென்ன?

எந்தவித மண்வளமுமற்ற யாழ் மாவட்ட மக்களிற்கு கல்வி ஒரு மூலதனமாக இருந்தது என்பதால் தரப்படுத்தல் அவர்களுக்கு எதிரான
ஒடுக்குமுறையாக அடையாளங்காணப்பட்டது வியப்பில்லை. அதை முழுத் தமிழ் மக்களின் பிரச்சினையாக உருவகித்ததுதான்
தவறு.அதேபோல் சாதியக் கருத்தியலைக்கொண்டிருந்த யாழ் மேலாதிக்க உணர்வு மற்றைய தொழில்களை இயல்பாய்ச் செய்வதற்கு தடைவிதித்திருந்தது. படித்தவர்களை தோட்டத்துக்குள்கூட அனுப்ப அது விடவில்லை. படிப்பை கௌரவத்துக்குரிய ஒன்றாக அதிகாரத்துவ மனநிலையை வளர்ப்பதாக அது கட்டமைத்திருந்தது. இந்த கேடுகெட்ட மனோநிலைக்கு விழுந்த அடியாக தரப்படுத்தல் இருந்ததையும் நாம் கண்டுகொள்ளத்தான் வேண்டும். அதேநேரம் கல்வியையே மூலதனமாகக் கொண்டிருந்த அதுவும் நடுத்தர வர்க்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்த ஒரு சமூகத்துக்குள்ளால் இந்தப் போராட்டம் முன்னெழுந்த நிலைமையையும் நாம்
புரிந்துகொண்டுதான் ஆகவேண்டும். இந்தப் போராட்டம் எப்படி மற்றைய மக்களையும் இணைத்தது என்பதை யாழ் மேலாதிக்கத்தின்
இந்தச் சூழ்ச்சிக்குள் மட்டும் உள்ளடக்குவது மக்களை மந்தைகளாக்குவதற்கு ஒப்பானது. அவர்கள் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளை - நிலப்பறிப்பு, வேலைவாய்ப்பு, மொழித்திணிப்பு என- வெவ்வேறு நிலைகளில் எதிர்கொண்டார்கள். இதுவே அவர்களைப் போராட்டத்தில் இணைத்தது.

இயக்கங்களுக்குள் யாழ் மேலாதிக்க மனோபாவம் தவிர்க்க முடியாதபடி கோலோச்சியது மறுக்கமுடியாத ஒன்று. அதேநேரம்
அதற்கெதிராக சிந்திக்கும் போராளிகளும் அங்கு உருவாகினார்கள். ஆதிக்க சமூகத்தை பெருமளவில் கொண்டிருந்தாலும்
சாதியத்துக்கெதிரான போராளிகளையும் அது வளர்த்துக் கொண்டுதானிருந்தது. சிங்கள மக்களுக்கு எதிரா ஊட்டிவளர்க்கப்பட்ட மனநிலைகளைக்கூட கழற்றிப்போடும் போக்கும் உருவாகியிருந்தது. இவைகள் ஆதிக்க நிலையிலிருந்த யாழ்மனோபாவத்துடன் முரண்பாடுகொண்டன. இந்தப் போராளிகளே உட்கொலைகளில் பலியானவர்கள். இந்த முனைப்பு கிள்ளியெறியப்பட்டாலும்கூட, தமிழ்த் தேசியம் சரியான பாதையில் செல்வதற்கான சாத்தியங்கள் இல்லாமலில்லை என்று நாம் இதை எடுத்துக்கொள்ளவும் முடியும்.

இலங்கை ஒரு ஜனநாயகம் நிலவும் நாடாக, அங்கு மாகாணசபைகள் எல்லாம் அதிகாரப்பரவலாக்கலோடு செயற்படுவதாக, கொள்ள முடியும் என நாம் நிம்மதியாக நித்திரைக்குச் செல்லமுடிந்தால், கிழக்கின் மாகாணசபையை கிழக்கின் விடிவாக நாம் கனவுகண்டுகொள்ள முடியும். தேர்தலில் யார் யார் எங்கெங்கு போட்டிபோடுவது என்பதிலிருந்து அமைச்சர்களைக்கூட
வெருட்டிப்போடுவதுவரை ராஜபக்ச அமைத்த வியூகத்தினுள்தான் ரிஎம்விபியும் நிறுத்தப்பட்டது. இத் தேர்தல் மூலம் ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்ட நிலைகளுக்கு பதவிகளுக்கு தனக்கானவர்களை பொருத்திக்கொள்வதில் அரசு வெற்றிகண்டுதானுள்ளது. டக்ளஸ்க்கு
வடக்குக்கான நிர்வாகசபை ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேம்களை உருவாக்கி அதற்குள் போட்டோக்களை மாட்டும்
வேலைகள் இவ்வாறு நடந்தேறுகிறது. இந்த நிர்வாகசபையின் ஆலோசகராக பசில் ராஜபக்ச நியமிக்கப்பட டக்ளஸின் அமைச்சு
ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதம் கொலையுண்டுபோயுள்ளார். கிழக்கின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் காணி காணி
விஸ்தரிப்புக்கான மாகாணசபை அமைச்சராக விமலவீர திசநாயக்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். தரிசுநிலங்களில்தான் சிங்கள குடியேற்றம்
நிகழ்ந்தது என்று வாதிட மனிதாபிமானம் உதவலாம். ஆனால் ஒரு இனத்தின் இறையாண்மையால் இதை நியாயப்படுத்த முடியாது.
அதுவும் மேற்குலகில் செயல்படுத்தப்படும் இனங்குளுக்கிடையிலான இந்த இறையாண்மைகளைப் பற்றி அறிந்துவைத்திருந்தும்கூட இந்த
வாதங்கள் தமிழ்த்தேசியத்தை அர்த்தமற்றதாக்கும் விருப்பிலிருந்தே எழுகிறது எனலாம்.

கிழக்கு மாகாணத்தில் பிள்ளைபிடிப்பிலிருந்து முஸ்லிம் மக்களை பள்ளிவாசல்களில் கொலைசெய்வதுவரையான கறைபடிந்த வேலைகளை நடை முறைப்படுத்தியவர்களைத்தான் இன்று கிழக்கின் விடிவெள்ளியையாகக் காட்டப் புறப்பட்டுள்ளனர். இதேபோலவே குழந்தைப் போராளி முதலமைச்சராகிறார் என்று புனைவது குழந்தைப் போராளிகளை கௌரவப்படுத்துவது என்பதாகாது. இந்தச் சொல்லாடல் பற்றியும் ஒன்று சொல்லவேண்டும். சுவிஸ் தேவாவின் மொழிபெயர்ப்பில் வந்த குழந்தைப் போராளிகள் நூலுக்கப் பிறகு இந்த அடையாளம் சிலர்மேல் முளைக்கத் தொடங்கியுள்ளது.  இப்போ பிள்ளையான்மேலும் முளைத்திருக்கிறது. உலகம் பரவிய குழந்தைப் போராளிப் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபை வாசல் வரை கத்திக்கத்திப் பேசப்பட்டு பல ஆண்டுகளாகிறது. பிள்ளையான் புலிகளிலிருந்து விலகியும் சில ஆண்டுகள் ஆகிறது.
~குழந்தைப்போராளிகள்| தமிழ்மொழிபெயர்ப்புவரை, ராஜபக்சவின் தேர்தல் செற்றப் வரை பிள்ளையான் இந்த அடையாளத்துக்காகக்
காத்திருக்க வேண்டியதாயிற்றோ!

யாழ் மையவாத அரசியலால் கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என எல்லோருமே பாதிக்கப்பட்டதற்கு யாழ்ப்பாணியள் என்று
விழிக்கப்படுபவர்கள் கழிவிரக்கம் கொள்வதையும், அதேபோல் பாதிக்கப்பட்ட மக்கள் பழிவாங்கும் நோக்கோடு செயற்படுவதையும் நாம் புரிந்து கொள்ளத்தான் முடியுமேயொழிய இந்த மனஅலையில் நீந்தி பிரச்சினைகளை பார்ப்பது அரசியலாகாது. வடக்கில் புலிகளை
இராணுவ ரீதியில் அழித்தொழிக்கும் முயற்சியில் இதே கிழக்குப் போராளிகள் எதிர்காலத்தில் பாவிக்கப்பட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டபின் பேரினவாதம் தன் முகத்தை இந்த கிழக்கு மக்களின்மீது காட்டாது
என்பதற்கு உத்தரவாதமும் இல்லை. சதாமை எதிர்கொள்ள குர்திஸ்தான் போராளிகள் பாவிக்கப்பட்டு சதாமின் வீழ்ச்சிக்குப் பின் குர்திஸ் போராளிகள் வேட்டையாடப்படும் வரலாறு பச்சையாக எம்முன் உள்ளது. இவற்றையெல்லாம் உதாசீனம் செய்து புலிகள்தான் முதல் எதிரி புலிகளை அழிக்க எந்தப் பிசாசோடும் நாம் கூட்டுச் சேருவோம் என்றெல்லாம் எக்ஸ், வை கணிதச் சமன்பாடு போடுவது மனித மனங்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். மக்கள் திரளுக்கு அல்ல. பிசாசுகளின் அரசியலை வரலாறுகளை அதன் சூழ்ச்சியை அரசியல் தெரிந்தும் பார்க்க மறுப்பதை என்னவென்பது! அதுவும் விலக்குப் பிடிக்க சமாதானத் தூதுவர்களாக வந்த நோர்வேயின் அரசியலை உள்நோக்கத்தை ஒருபுறம் சரியாக விமர்சிக்க முடிந்த கருத்துநிலை பிசாசுக்கூட்டை தேடுவதில் காணாமல்போய்விடுகிறது.

இயக்கங்களில் பயிற்சி எடுத்தவர்களின் எண்ணிக்கை மட்டுமன்றி, இனம்தெரியாதோர் என்ற பெயரில் செய்த கொலைகள் உட்கொலைகள் என எல்லாமே சரியாகக் கணிக்கப்பட முடியாத நிலையில் இயக்கங்களுள் கிழக்குப் போராளிகளின் எண்ணிக்கை, உட்கொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்பவற்றை எமது கருத்துக்களை வலுப்படுத்த எமக்கேற்றவாறு எடுத்துக்கொள்வது ஒரு சரியான ஆய்வாகாது. கருணாவின் பிரிவின்போது நடந்த உட்கொலையின்; எண்ணிக்கையை பெரும்தொகையாகக் காட்டியும் மாத்தையா கொல்லப்பட்டபோது நடந்த உட்கொலைகளை சிறுதொகையாகக் காட்டியும் முன்வைக்கப்படும் விபரங்கள் தர்க்க ரீதியில் சரியானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை புள்ளிவிபரமாகத் தர முனைவது எந்த ஆதாரமுமற்றது. புளொட்டில் பயிற்சிபெற்றவர்கள் ஆறாயிரம் போரில் 3000 பேர் கிழக்கு மாகாண மக்கள் என கிழக்கிலங்கை முன்னணி சார்பில் ஸ்ருட்கார்ட்டில் முன்வைத்த அறிக்கையின் புள்ளிவிபரம் இந்த அமைப்பினுள் இருந்த பலபேரை இன்றும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறாக தமது கருத்துகளை நிறுவுவதற்காக புள்ளிவிபரங்களை உற்பத்தி செய்வது ஒன்றும் புதிய ஆய்வுமுறை அல்ல என்றாலும் அதை அடிப்படையாக முன்வைக்கும் ஆய்வுகளை நாம் சந்தேகிப்பது தவிர்க்கமுடியாததுதான்.

இந்தக் கலந்துரையாடலில் ஈரோஸ் உறுப்பினர்கள் உட்பட முன்னைநாள் இயக்க உறுப்பினர்கள் ~நிலவரம்| பத்திரிகை ஆசிரியர்... என பலரும் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடல் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டிய ஒன்றுதான். (ஒரே தலைப்புக்குள் என்றல்ல). ஒரு விமர்சன இயக்கமாக இது எடுத்துச் செல்லப்படுமானால் அது பிரயோசனம் தரும். அதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வகைக்
கலந்துரையாடல்களுக்கு ஆரம்பப் புள்ளியாக எதிரெதிர் கருத்து உள்ளவர்களின் தயாரிக்கப்பட்ட உரைகள் அவசியம். இது -அன்று நடந்தது போன்று- ஒரே அலையில் நீச்சலடிக்கும் வேலையைத் தவிர்க்க உதவும். 

ravin@bluewin.ch


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner