இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள் / அரசியல்!

வியூகம்: viyooham@gmail.com
பெப்ருவரி மாதம் 20 ம் திகதி கனடாவிலுள்ள ஸ்காபுரோ நகரில் 'மே 18 இயக்கம்' ஒழுங்கு செய்த கூட்டத்தில் ரகுமான் ஜான் ஆற்றிய உரை இங்கு இடம் பெறுகிறது.
இலங்கையில் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக வீசிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்;டத்தில் நாம் சந்திக்கின்றோம். இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த தேர்தல்களுக்கும். தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து நாம் கேள்வி எழுப்புவது நியாயமானதே. அதுவே எனது இன்றைய உரையின் தலைப்புமாகும்
வணக்கம். இலங்கையில் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக வீசிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்;டத்தில் நாம் சந்திக்கின்றோம். இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த தேர்தல்களுக்கும். தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து நாம் கேள்வி எழுப்புவது நியாயமானதே. அதுவே எனது இன்றைய உரையின் தலைப்புமாகும். ஒரு இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் நாம் நிறைய விடயங்களை மனம் திறந்து பேசியாக வேண்டியுள்ளது. அந்த நோக்கில் நான் உரையாற்றுவது என்பதைவிட ஒரு விரிவான உரையாடலின் தொடக்க புள்ளியாக அமைவதாக கருதப்படுவதே சரியானதாக இருக்கும். ஒரு விரிவான உரையாடலை நாம் நிகழ்த்த முடியுமாயின் அதுவே எனது செயற்பாட்டிற்கு முக்கியமான பலனாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் விடயத்திற்கு வருகிறேன்.

ஜனாதிபதி தேர்தலும், தமிழர் தேசிய பிரச்சனையும்.
கடந்த மே மாதம் நடந்த இனப்படுகொலையின் இரத்தச் சுவடுகள் காயும் முன்பே ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது. தமிழ் மக்கள் நடந்து முடிந்த பேரழிவின் அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்கவில்லை. தமது நெருங்கிய உறவினர்களை யுத்தத்தில் இழந்தவர்கள் ஒரு புறம்: முள்வேலிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டவர்கள் பல இலட்சங்கள்: உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற பெயரில் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களில் வாழ்பவர்கள் இன்னும் பலர்: பல்லாயிரக் கணக்கானோர் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்: இராணுவ முகாம்களும், உயர் பாதுகாப்பு வலையங்களும் அகற்றப்படாமல், துணைப்படைக் குழுக்கள் ஆயுதபாணிகளாக வலம் வந்து மாற்று கருத்துள்ளவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலம் முறைப்படி நிறைவு பெற இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமையின் கீழ் ஜனாதிபதி தேர்தலை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தாக வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

யுத்தத்தை அரசு என்னவோ பயங்கரவாதத்திற்கு எதிரானது, தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்று கூறிக் கொண்டாலும், சிங்கள மக்கள் மத்தியில் அது தமிழ் மக்கள் மீதான யுத்தமாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இதனால் புலிகள் மீதான சிறீலங்கா இராணுவத்தின் வெற்றியானது தமிழ் தேசத்தின் மீது சிங்கள தேசம் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொண்ட நிகழ்வாகவே புரிந்து கொள்ளப்பட்டது. அந்த அர்த்தத்திலேயே பெரிய விழாவாகவும் கொண்டாடப்பட்டது. இப்படியாக சிங்கள தேசம் ஒரு வெற்றிப் பூரிப்பில் மிதந்து கொண்டிருக்கையில் அதனை தனது அடுத்த தேர்தலுக்கு பயன் படுத்திக் கொள்வதுதான் அரசின் நோக்கமாக இருந்தது. யுத்தத்தின் வெற்றியை அடுத்த இந்த மகிழ்ச்சி, பூரிப்பு, சிங்கள பெருமித உணர்வு போன்றவை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதை யாராலுமே எதிர்வு கூற முடியாத நிலையில்: தீர்க்கப்பட்டாக தேசிய பிரச்சனை, தெற்கின் பொருளாதார நெருக்கடிகள், மற்றும் ஜனநாயகம் தொடர்பான பிரச்சனைகள் இந்த நிலைமையை வெகு விரைவில் மாற்றியமைத்துவிடலாம் என்ற நிலையில், அப்படிப்பட்ட ஒரு ஆபத்தை எதிர்கொள்வதை (Risk Taking) தவிர்க்கும் நோக்குடனேயே தேர்தலை விரைவு படுத்தும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

யுத்தத்தின் முடிவை அடுத்து, யுத்த காலத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கான கோரிக்கைகள் சர்வதேச அளவில் தீவிரம் அடைந்தன. இப்படிப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலமாக சர்வதேசத்தின் கவனமானது இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பப் பட்டது. இந்த பிரச்சனையை தீவிரமாக எழுப்ப வேண்டிய தமிழ் குழுக்களே இரண்டு அணியாக பிரிந்து இரண்டு போர்க்கால குற்றவாளிகளுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்க நேர்ந்தமை சிறீலங்கா அரசுக்கு கிடைத்த மேலதிக வெற்றியாகவும் அமைந்தது.

யுத்தத்தின் வெற்றி என்பது பிரதான விடயமாக ஆனபின்பு அதற்கு யார் உரிமை பாராட்டுவது என்பதில் மகிந்தவுக்கும் சரத்திற்கும் ஏற்பட்ட போட்டியில் சரத் ஓரம் கட்டப்பட்டார். இந்த யுத்த ஆரவாரங்களின் மத்தியில் தாம் மகிந்தவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியானது சரத்தை தனது பொது வேட்பாளராக நியமிப்பதன் மூலமாக இந்த போர் வெற்றி தொடர்பான ஆரவாரங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றது.

இப்படிப்பட்ட ஒரு தேர்தலை தமிழ் மக்கள் முகம் கொடுக்க நேர்கையில் தமிழ் தலைமைகள் என்ன செய்திருக்க வேண்டும். முதலாவதாக, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான விசாரணை தொடர்பான கோரிக்கைகள் இப்படியாக திசை திருப்பப்படுவதை அனுமதித்திருக்க முடியாது. அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து இதற்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள், தமிழர் தேசிய பிரச்சனைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது: இராணுவ முகாம்களையும், உயர் பாதுகாப்பு வலையங்களையும் உடனடியாக அகற்றி இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்வதற்காக உரிமைகளை வலியுறுத்துவது: முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் மக்களையும், விசாரணையின்றி தடுத்து வைத்திருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது: போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீவிரமாக போராடியிருக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி, இயல்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ளாமல் தேர்தலில் கலந்து கொள்வதற்கு சம்மதித்திருக்க கூடாது. இந்த போராட்டத்தில் தேவைப்பட்டால் தமிழ் மக்கள் இந்த தேர்தலை முற்றாக பகிஸ்கரிக்க நேர்ந்திருந்தாலும் அது ஒரு அரசியல் வெற்றியாகவே அமைந்திருக்கும். ஏனெனில் எதிர்த்து போட்டியிட்ட இரண்டு பிரதான வேட்பாளர்களுமே தமிழர்களது குருதியில் கைகளை நனைத்தவர்களேயாவர். அப்படியாக பகிஸ்கரித்து இருந்தால் அது ஒரு திட்டவட்டமான அரசியல் நடவடிக்கையின் பாற்பட்டதாகவே அமைந்திருக்கும்.

கடந்த கால தமிழ் தலைமைகளது நடவடிக்கைகளை அறிந்த எவருக்குமே இதன் சாத்தியப்பாட்டின்மை பற்றி தெரிந்தே இருக்கும். இந்த 'தலைமை' என்று சொல்லப்பட்ட எவருமே கடந்த காலத்தில் தாம் சரியென உறுதியாக நம்பும் கொள்கைகளின் அடிப்படையில் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்கள் கிடையாது. ஒரு பகுதியினர் புலிகளிடம் இருந்து பாதுகாப்பு தேடுவதாக கூறிக் கொண்டு அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள். இப்போது புலிகள் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட பின்னரும் கூட, அரசுடன் சேர்ந்து செயற்படுவதற்கான பாதுகாப்பு காரணங்கள் எதுவுமே இல்லாத போதிலும் இந்த இடைக்காலத்தில் பெற்றுக் கொண்டு பதவி, மற்றும் சலுகைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக அரசுடன் தொடர்ந்தும் ஒட்டிக்கொண்டு செயற்பட்டு தமிழ் மக்களது நலன்களை காட்டிக் கொடுப்பவர்கள். இவர்கள் அரசின் கூலிப்படைகளாகவே செயற்படுகிறார்கள். தாம் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பிவிட்டதாக கூறிக் கொண்டாலும் இன்னமும் ஆயுதம் ஏந்தியவாறு மாற்றுக் கருத்து கொண்டவர்களை வேட்டையாடித் திரிபவர்கள். இவர்களால் புலி வேட்டை என்ற பெயரில் கொன்றொழிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் பெரியது. இந்த விதத்தில் இவர்கள் புலிகளை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள். ஈபிடிபி டக்லசும், கிழக்கில் கருணாவும், பிள்ளையானும் இத்தகையவர்களே. முதல் சுற்றில் இந்த வாய்ப்பை இழந்த புளொட், பிள்ளையான், ஈபிஆர்எல்எப் இன் நாபா அணி போன்றவை இந்த தடவை தம்மையும் இந்த ~~கைங்கரியத்தில்|| இணைத்துக் கொண்டன. இப்படியாக இணைத்துக் கொண்டதற்கு காரணம் தாம் இப்போது கொண்டுள்ள நிலைமைகளை தக்க வைப்பதும், அடுத்த தேர்தலில் அதனை தக்க வைப்பது, முடிந்தால் அதனை பெருக்கிக் கொள்வது என்பதற்கு மேல் தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கும் இவர்களது குத்துக் கரணங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தமிழர் தேசிய கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால், இவர்கள் புலிகளால் உருவாக்கப்பட்ட தற்காலிக ஒரு சேர்க்கை மட்டுமேயாகும். இவர்களில் பெரும்பான்மையினர், புலிகளது அரசியலுக்கு கூட விசுவாசமாக இருக்காத பிழைப்புவாதிகள். புலிகள் உயிருடன் இருக்கும் வரையில் அவர்களது ஏவலை செய்து தமது பதவிகளை காத்துக் கொண்டார்கள். அத்துடன் தமது வருவாய்களை பெருக்கிக் கொள்வதில் கவனமாக இருந்தார்கள். இப்போது புலிகளின் மறைவின் பின்பு கலைந்து போகாமல் தமது தற்காலிக கூட்டை பேணுவதன் மூலமாக அதிக நன்மையை பெற முடியும் என்ற அபிலாசையில் காத்திருக்கும் அசலான பிழைப்புவாதிகள். முன்பு முக்கிய முடிவுகளை புலிகளின் கட்டளைகளின் படி மேற்கொண்டவர்கள், இப்போது தமது புரவளர்களை மாற்றிக் கொண்டுள்ளார்கள். இப்போது கட்டளைத் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப் பட்டுள்ளது. இவர்கள் எப்போதுமே ஏதாவது ஒரு சக்தியின் ஏஜென்டுகளாகத்தான் செயற்பட்டார்களே ஒழிய தமிழ் மக்களது நலனுக்காக எதுவுமே செய்தது கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது பலர் சொந்த ஊருக்கு போகாதது மட்டுமல்ல இலங்கையிலேயே நிற்காமல் விட்டவர்கள். தமிழ் மக்களது நலன்கள் பற்றிய அக்கறை சிறிதும் இன்றி தமது சொந்த வாழ்க்கையை, வருவாய்களை பெருக்கிக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் தமது முன்னால் புரவலரது அழிவுக்கு வஞ்சம் தீர்ப்பதாக கூறிக் கொண்டு தமது வழமையான வலதுசாரி கூட்டாளிகளான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியுடன் அணி சேர்ந்து கொண்டார்கள். இவர்களது கவனமும் தமது எதிர்கால் பாராளுமன்ற ஆசனங்கள் குறித்து இருக்கிறதே அன்றி வேறு தமிழ் மக்கள் நலன்கள் தொடர்பானவையாக இல்லை என்பது வெளிப்படையானது.

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவருமே தமிழரது தேசிய பிரச்சனைக்கு திட்டவட்டமான அரசியல் தீர்வு முன்மொழிவுகள் எதனையும் முன்வைக்கவில்லை. ஆனால் இவர்களுடன் இணைந்திருந்த தமிழ் தலைமைகள் தத்தமது ஆதரவைப் பெற்ற வேட்பாளர்கள் தேசிய பிரச்சனையை நியாயமான முறையில் தீர்த்துவைப்பார்கள் என தாம் நம்புவதாக கூறிக் கொண்டார்கள். இந்த நம்பிக்கையை நாம் வெளியிடுவதற்கான ஆதாரங்கள் எதனையும் இவர்கள் முன்வைக்கவில்லை. இப்படியாக அரசியல் ரீதியான திட்டவட்டமான முன்மொழிவுகள் எதனையும் முன்மொழியாத, வெறும் நம்பிக்கைகள் என்றால் அதன் அர்த்தம் என்ன? அதாவது இலங்கையின் தேசிய பிரச்சனைக்கான தீர்வு இந்த தனிநபர்களின் விருப்பு – வெறுப்பு சார்ந்ததொன்றாகத்தானே காட்டப்படுகிறது. இவர்கள் ஒரு விடயத்தை நன்றாக தெரிந்து கொண்டே பொய் சொல்கிறார்கள். அதாவது இலங்கையின் தேசிய பிரச்சனை என்பது வெறுமனே தனிநபர்களது விருப்பு – வெறுப்பு சார்ந்த ஒன்றல்ல. அதற்கான குறிப்பான சமூக, பொருளாதார, அரசியல், சித்தாந்த, இராணுவ காரணிகள் இருக்கின்றன. இந்த காரணிகளில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படாமல், தனிநபர்கள் எவ்வளவுதான் நல்லெண்ணத்துடன் விரும்பினாலும், இதனை தீர்த்து வைக்க முடியாது என்பதுதான். கடந்த எண்பது வருடங்களாக சிங்கள – தமிழ் தலைமைகள் மேற்கொண்ட தீர்வு முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததை நாம் இப்படியாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

அடுத்ததாக இந்த தீர்வு முயற்சிகள் எதுவுமே பகிரங்கமாகவும், சம்பந்தப்பட்ட மக்கள் பிரிவினர் அனைவரும் கலந்து கொண்டு சம்மதம் தெரிவிக்கும் விதத்திலுமே நடைபெற முடியும் என்பதாகும். குறிப்பிட்ட மக்கள் பிரிவினர் போதியளவு தெளிவும், சம்மதமும் தெரிவிக்காத எந்தவொரு தீர்வு முயற்சியும், அந்தந்த சமூகத்தில் மேலாண்மை செலுத்தும் சித்தாந்தத்தை கையில் எடுப்பவர்களினால் இலகுவாக குழப்பியடிக்கப்படக் கூடியவையாகும். ஆதலால் தமிழர் தேசிய பிரச்சனையானது திரைமறைவில் அல்லாமல் பகிரங்கமாகவும், இலங்கையில் உள்ள பல்தேச சமூகத்தவரது பங்கு பற்றலுடனும், கருத்தாடல்கள் மற்றும் கருத்திணக்கம் என்பவற்றின் மூலமாகவே தீர்க்கப்பட முடியும். அப்படிப்பட்ட தொரு கருத்தொற்றுமை காணப்பட முடியாதவிடத்து ஒடுக்கப்பட்ட தேசங்கள் தத்தமது தலைவிதியை தாமே கையில் எடுத்துக் கொள்வதை விட வேறு வழியிருக்க முடியாது. இதனை விடுத்து தனிநபர்களை நம்புவதாக கூறுவதும், குறிப்பிட்ட தனிநபர்கள் தேசிய பிரச்சனையை தீர்த்து வைப்பதான நம்பிக்கையை எந்தவிதமான அரசியல் முகாந்திரமும் இன்றி கூறுவதும் சுத்த ஏமாற்றே அன்றி வேறல்ல. இதன் மூலமாக குறிப்பிட்ட தமிழ் அரசியல் தலைமையானது தனது நலன்களை மாத்திரம்தான் காத்துக் கொள்ள முனைகிறதேயன்றி, தமிழ் மக்களது அரசியல் நலன்களை அல்ல என்பது திட்டவட்டமாக தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இப்போது இந்த தலைமைகளை திட்டவட்டமாக பரிசீலிப்போம். யுத்தத்தை அடுத்து நடைபெற்ற மிகவும் கேவலமான, தமிழ் மக்களது உணர்வுகளை சிறுமைப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா நகரசபை தேர்தலில் இவர்கள் போட்டியி;ட்டார்கள். இந்த தேர்தலில் தமது சொந்த சின்னங்களில் போட்டியிடக்கூட வக்கில்லாதவர்கள் இவர்கள். இது பற்றி பிரஸ்தாபித்த தமது ஆதரவாளர்களிடம், தமது சொந்த உயிர் பாதுகாப்பே உத்தரவாதமற்ற நிலைமையினாலேயே தாம் அவ்வாறு செய்வதாக குறிப்பிட்டவர்கள் இவர்கள். இவர்கள் எப்படி ஒரு தேசத்தின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தக் கூடும். கிழக்கில் மாகாண சபைகள் மூலமாக தமிழ் மக்களது தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதாக கூறிக் கொள்பவருக்கு அவரது சொந்த பாதுகாப்பே உத்தரவாதமற்றதாக இருக்கிறது. தனது அதிகாரங்களில் ஆளுநர் அத்துமீறி தலையீடு செய்வதாக நாள்தோறும் முறைப்படு செய்யும் இவர் எப்படி தமிழரது தேசிய பிரச்சினைக்கு குறிப்பிட்ட தனிநபர்கள் தீர்வை தரப்போவதாக உத்தரவாதமளிக்க முடியும். இப்போது தமிழ் மக்களது உடனடியான பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களே இவர்கள் தானே. பிரச்சனைகளுக்கு காரணமானவர்களே எப்படி அவற்றிற்கான தீர்வாக அமைய முடியும்.

தமிழர் தேசிய கூட்டமைப்பானது நேற்று வரையில் புலிகள் காலால் இட்ட பணிகளை தலையால் செய்தவர்கள். வன்னியில் இனப்படுகொலைகள் நடைபெற்றபோது கூட அந்த மக்கள் சொந்த விருப்பதின் பேரிலேயே அங்கு நிற்பதாக அப்பட்டமாக பொய் சொன்னவர்கள். புலிகள் மறைந்தவுடனேயே குத்துக்கரணம் அடித்து புதிய எஜமானர்களை தேடிக் கொண்டுள்ளார்கள். இன்று இன்னொரு எஜமானை மாற்றிக் கொண்டதும் பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ன? இன்று தமிழர் தேசிய கூட்டமைப்பிற்கென நிலையான கொள்கைகளோ, மக்கள் ஆதரவோ, அமைப்பு வடிவமோ கிடையாது. புலிகள் ஏற்படுத்திய தற்காலிக ஏற்பாட்டை மாத்திரம் தமது சொந்த இலாபத்திற்காக விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவற்றை விட 'வடக்கில் வசந்தம்' 'கிழக்கில் உதயம்' என்று அரசாங்கம் ஏற்படுத்தும் வெற்று ஆரவாரங்களை இவர்கள் இரவல் வாங்கி தமிழ் மக்களுக்கு படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அபிவிருத்தி மூலமாக தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்போகிறார்களாம். ~~சோறா சுதந்திரமா?|| என்று எழுபதுகளில் கேட்டபோது ~~சுதந்திரமே|| உயிர் மூச்சென்று உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்கள் இப்போது மீண்டும் ~~சோறு|| பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியாக ~~அபிவிருத்து|| மூலமாக தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமானால் அதனை எப்போதோ செய்து இருக்கலாமே? இத்தனை யுத்தமும் அழிவுகளும் ஏற்படுத்திய பின்புதான் இந்த இலகுவான வழிமுறையை இவர்கள் கண்டு கொண்டார்களா? உண்மையில் அபிவிருத்தி என்பது இது தேசிய வளங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது பற்றிய பிரச்சனை என்ற விதத்தில் தேசிய பிரச்சனையை உருவாக்கியதில் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்த ஒரு அம்சமும் ஆகும். ஆரம்பத்திலிருந்தே தேசிய வளங்களை பலவேறு சமூகங்களிடையும் நியாயமான முறையில் பங்கிட்டிருந்தால் தேசிய பிரச்சனை என்ற ஒன்றை உருவாக்குவதையே தவிர்த்திருக்கலாமே. இந்த விடயங்களையெல்லாம் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை மிகவும் சிறிதாக இருக்கும் போது திமிராக ஒதுக்கித் தள்ளியவர்கள், இப்போது பிரச்சனை பூதாகரமாக வளர்ந்து ~~ஒடு வைத்த பின்னர்|| இந்த புணுகு தடவ முயல்கிறார்கள். இப்படிப்பட்ட ஒட்டு வேலைகள் சரிவர மாட்டாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதுசரி, இந்த அபிவிருத்திக்கான நிதியாதாரங்கள் எங்கிருந்து வருகின்றன? வானத்தில் இருந்தா, அல்லது மகிந்தா ஏதாவது தங்கச் சுரங்கம், அல்லது நோட்டு அடிக்கும் இயந்திரத்தை புதிதாக கண்டு பிடித்திருக்கிறாரா? எல்லாம் மக்களது – தமிழ் மக்களதும் தான் - பணம். நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டிய வரிகள் தாம் அரசாங்கத்தின் கைகளில் உள்ள முக்கிய நிதியாதாரமாகும். அத்தோடு அந்தந்த பிரதேசங்களது மூலவளங்களை அந்நிய கொம்பனிகள் பயன்படுத்தும் போது கொடுக்கும் அரசாங்கத்திற்கு வழங்கும் தொகைகள் (சுழலயடவல) கள் மற்றொரு மூலமாகும். அந்தந்த பிரதேச மக்களே இதன் உண்மையான உரிமையாளர்கள் ஆவர். (இதனைவிட அந்திய கடன்கள் ஓரளவிற்கு நிதியாதாரத்தை வழங்க தற்காலிகமாக பயன்படலாம். ஆனால் இவற்றை நாமும், எமது அடுத்தடுத்த தலைமுறைகளும் வட்டியுடன் செலுத்த வேண்டியிருக்கும்). ஆக ஒட்டு மொத்தத்தில் இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது தனிச்சொத்துக்கள் போலக் கருதி தமிழ் மக்களுக்கு சலுகைகளாக வழங்குவதாக பாசாங்கு பண்ணும் அத்தனை வளங்களதும் உண்மையான உரிமையாளர்கள் தமிழ் மக்களேயாவர். இந்த நிதியாதாரங்களை முறைப்படி அனைத்து மக்கள் பிரிவினரிடையும் பகிர்ந்து கொள்ள மறுத்தமையே தேசிய பிரச்சனையின் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்தது. எப்படி, எந்த விதத்தில் வரிகளை விரிப்பது: அதனை எவ்வாறு செலவிடுவது என்பது ஒவ்வொரு மக்கள் பிரிவினருக்கும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமையாகும். இதனாலேயே ~~பிரதிநிதித்துவம் இல்லாத வரிவிதிப்பு என்பது கொடுங்கோண்மையாகும்|| என்ற சுலோகம் அமெரிக்க சுதந்திர போராட்டத்தை உந்தித் தள்ளும் அளவிற்கு பலமானதாக இருந்தது. அடுத்தடுத்து வந்த பல்வேறு முதலாளித்துவ புரட்சிகளின் போதும் இதே பிரச்சனை முன்னுக்கு வந்தது. ஆகவே எமது நிதியை கடந்த காலத்தில் முறையாக பயன்படுத்தாதது மட்டுமன்றி, இப்போது அதில் சில பருக்கைகளை வீசியெறிந்துவிட்டு ~~பெருந்தன்மை|| காட்டுவதும் அப்பட்டமான அரசியல் மோசடியாகும். அடுத்தடுத்து தொடர்ச்சியாக வந்த புறக்கணிப்புக்கள், மற்றும் சகிப்புணர்வின்மை என்பவற்றில் தொடங்கி நேரடியான ஒடுக்குமுறை எனத் தொடர்ந்து ஒரு மாபெரும் யுத்தமே நடந்து முடிந்துள்ள நிலையில் மீண்டும் அபிவிருத்தி பற்றி பேசுவது அப்பட்டமான அயோக்கியத்தனத்தையே காட்டுகிறது. தேசிய ஒடுக்குமுறையின் அரசியலை அறவே புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு அப்பாவியின் அல்லது அயோக்கியவாதியின் வாதங்கள் இவை. இப்படிப்பட்ட இருவருமே தமிழ் மக்களுக்கு தலைவர்களாக இருப்பதற்கான தகுதியற்றவர்கள். ஒரு தேசத்தின் மீது கொடுமையான அடக்கு முறைகளை கடந்த காலத்தில் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விட்டிருந்தவர்கள், இப்போது அதனை தற்காலிகமாக குறைத்து கொண்டு, அதனையே அந்த தேசத்தின் விடுதலையாக சித்தரிக்க முனைகிறார்கள். ஆனால் இப்போதும் கூட எந்தளவிற்கு ஒடுக்குவது? அதனை எப்போது செய்வது? என்பதை தீர்மானிக்கும் உரிமையை தமது கைகளில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதனைக் கூறுகிறார்கள். தேசிய ஒடுக்குமுறையும். அதற்கெதிரான போராட்டங்களும் படிப்படியாக வளர்ந்து சென்று. ஒரு இனஒழிப்பு யுத்தமாக நடந்து முடிந்துள்ளது. ஒரு தேசம் இராணுவரீதியாக முற்றாக தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தவிதமான அற்பத்தனமான கருத்துக்களை துணிந்து முன்வைப்பது வெறும் திமிரே அன்றி வேறல்ல.

கடந்த பல பத்தாண்டுகளாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் கணிசமான அளவிற்கு முன்னேறி போய்வி;;ட்டுள்ளார்கள். இந்த அபிவிருத்தி, சலுகைகள் போன்ற கோரிக்கைகளையெல்லாம் கடந்துபோய் கணிசமான காலம் ஆகிவிட்டது. இப்போது ஒரு தற்காலிகமான பின்னடைவை புலிகளின் தோல்வியின் மூலமான அடைந்ததுள்ளது என்பது உண்மைதான். போரினால் களைப்படைந்து போயுள்ள ஒரு சமூகம் ஒரு ஓய்வை நாடியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆதாலால் இந்த அன்றாட நெருக்கடி நிலைமைகளில் ஒரு தளர்வை தேசம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் இந்த தற்காலிக பின்னடைவை வைத்து இந்த போராட்டத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிட்டதாக கனவு காண்பது நிலைக்கமாட்டாது. அடிப்படையான தேசிய முரண்பாடுகள் தீர்க்கப்படாத வரையில் எதிர்ப்பியக்கங்கள் படிப்படியாக தொடங்கப்படுவதும், அதன் அடுத்த கட்டங்களாக போராட்டம் வேறுபட்ட வடிவங்களை நோக்கி நகர்ந்து செல்வதும் தவிர்க்கப்பட முடியாததேயாகும். வெறுமனே அடக்குமுறைகள் மூலமாக விழிப்புணர்வு பெற்றுவிட்ட மக்களை அடக்கிவிட முடியுமானால் பலஸ்தீனமும், வட அயர்லாந்தும், கிழக்கு தீமோரும் எப்போதோ உலக வரைபடத்தில் இருந்து காணாமற் போயிருக்கும்.

சுயநிர்ணய உரிமைக்காக போராடுவது என்ற தமிழ் மக்கள் முடிவு செய்ததன் மூலமாக அவர்கள் தமது தலைவிதியை தமது சொந்த கரங்களில் எடுப்பதற்கு என்றோ தீர்மானித்து விட்டார்கள். இதில் வரிவிதிப்பு மற்றும் அதனை எவ்வாறு செலவிடுவது போன்றவையும் சாதாரண சில்லறைத்தனமான விடயங்களாகும். சொந்த அரசியல் அதிகாரத்தை வேண்டி நிற்கும் தமிழ் மக்களிடம் வந்து அபிவிருத்தி பற்றி பாலபாடம் நடத்துவது வேடிக்கையானதாகும். தமிழ் மக்கள், சிங்கள மக்களுக்கு சமமாக விருந்து மேசையில் அமர்வது குறித்து தீர்மானித்து நீண்ட காலங்கள் ஆகின்றன. அவர்களுக்கு முன்பு சில பருக்கைகளையும், எலும்புத் துண்டுகளையும் விட்டெறிவதானது அந்த மக்களது சுயமரியாதையை அவமதிப்பதற்கு சமமானதாகும். இந்த பாடத்தை கற்றுக் கொள்ள மறுக்கும் எவரையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் தமிழ் மக்களை பாதுகாப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். முடியுமானால் இவர்கள் தமிழ் மக்களது கோபங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முயலட்டும்.

தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து...
தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பம் தொடக்கம் இரண்டு பிரதான வேட்பாளர்களுமே தேசிய பிரச்சனை திட்டவட்டமான நிலைப்பாடுகளை முன்வைப்பதை தவிர்த்தே வந்தார்கள். முன்னாள் இயக்க தலைமைகள் அப்படியே மகிந்தாவின் கால்களில் சரணடைந்தன. தமிழர் தேசிய கூட்டமைப்பானது நீண்ட இழுத்தடிப்பிற்கு பின்னர் ஐதேக கூட்டணியுடன் சேர்ந்து கொண்டது. அதற்கான முடிவை அவர்கள் எடுத்த விதமே அலாதியானது. பலவித திருகுதாளங்களைச் செய்து ~~ஜனநாயகபூர்வமாக|| முடிவை எட்டியதாக காட்டிக் கொண்டார்கள். இப்போது இந்த கூட்டமைப்பை கட்டுப்படுத்தும் சம்பந்தன்-சுரேஸ் பிரேமச்சந்திரன் கோஷ்டியினர் அமைப்பினுள் கடுமையான எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொண்டதாக அதன் பா.உ க்கள் புறுபுறுப்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. திட்டவட்டமான அமைப்பு வடிவமோ, அல்லது கொள்கை நிலைப்பாடுகளோ இன்று வெறுமனே புலிகளால் பொறுக்கி எடுக்கப்பட்ட தனிநபர்களைக் கொண்ட இந்த அமைப்பானது புலிகளின் மறைவை அடுத்து அதன் இருப்பிற்கான காரணங்களை ஏற்கனவே இழந்து விட்டது. ஆயினும் அடுத்த தேர்தல்கள் தமது ஆசனங்களை கைப்பற்றுவது எனும் ஒரே காரணம் மட்டுமே இவர்களை இணைத்து வைக்க மட்டுமல்லாது, அவர்களை கட்டுப்படுத்தவும் போதியதாக இருப்பது வேடிக்கையானதுதான்.

ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு – கிழக்கில் பிரதான வேட்பாளர்களது பினாமிகள் இவர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். இவற்றில் மனித உரிமைகளின் காவலராக மகிந்தவை புகழ்ந்தது உச்ச கட்டமாக அமைந்தது. தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஆரம்பத்தில் மகிந்த பின்னடைவதாகத் தோன்றியது. ஆனால் ததேகூ அமைப்பானது, சரத்திற்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து நிலைமைகள் சரத்திற்கு எதிராக தென்னிலங்கையி;ல் மாறத் தொடங்கின. சரத்திற்கும் சம்பந்தருக்கும் இடையில் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டதாக கடுமையான பிரச்சாரம் கட்டவழித்து விடப்பட்டது. சிங்கள அரசியல் தலைமையை தமிழர்கள் தீர்மானிக்க – கவனிக்க அதாவது இலங்கையின் தலைமையை அல்ல!- முனைவதான பயப்பிராந்தியை கிளப்பும் வகையிலானதாக இந்த பிரச்சாரம் அமைந்தது. இந்த வாதமே சிங்கள மக்களது முடிவுகளை தீர்மானிக்கும் அம்சமாக அமைந்தது. இதனை அடுத்து அலை மகிந்தவுக்கு சார்பாக மாறியது. இதனை தடுத்து நிறுத்த ஐதேக கூட்டமைப்பு எடுத்த முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை. ஏற்கனவே தமிழ் மக்கள் மீதான வெற்றியின் பெருமிதத்தில் தொடங்கிய இந்த தேர்தலானது, கடைசியில் சிங்கள இனவாதத்தை முழுமையாக பயன்படுத்தியவருக்கு சாதகமாக அமைந்தது. சிங்கள மக்கள் தம்மை தனியான ஒரு தேசமாக கருதி, தமது தேசத்தின் தலைவரை தீர்மானிக்கும் தேர்தலாகத்தான் இந்த ஜனாதிபதி தேர்தலை புரிந்து கொண்டமை மீண்டும் வெளிப்படையாகத் தெரிகிறது.

தமிழர் தாயகங்களில் விடயங்கள் வேறு விதமாக அமைந்தன. மக்களது தீர்ப்பு தமக்கு பாதகமாக அமையப் போவதை உணர்ந்த ~~ஜனநாயக வழிக்கு திரும்பிய|| முன்னாள் இயக்க தலைமைகள், அந்த வேடத்தை களைந்தெறிந்து விட்டு வன்முறை மூலமாக தேர்தலை முகம் கொடுக்க தயாரானார்கள். மாற்று கருத்து கொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. பயமுறுத்தல்கள் தாராளமாக இடம் பெற்றன. இறுதியில் தேர்தல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் பல குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். இதனால் பெருமளவிலான மக்கள் தமது சொந்த பாதுகாப்பு கருதி வாக்களிக்க செல்லாமல் விட்டார்கள். தெற்கில் சராசிரி வாக்களிப்பு 68 சதவீதமாக இருக்க, வடக்கிலோ வெறுமனே இருபது சதவீத்த்தினர் மாத்திரமே வாக்களித்தனர். தமிழர் தாயக வாக்குகள் சரத்திற்கு சாதகமாகவே அமைந்திருந்தன. கிழக்கில் கருணாவுடன், பிள்ளையானுமாக சேர்ந்து தமது விசுவாசத்தை நிரூபிப்பதற்கு பகீரத பிரயத்தனத்தில் இற்ங்கியிருந்தனர். இந்த முயற்சியில் இவர்கள் கடுமையான வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். இதே வேளை புலிகளை வைத்து தேர்தலில் குழறுபடிகள் செய்ய அரசு முயல்வதாக பட்டது. தேர்தல் தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட புலிகளது தலைவர் ராம் மோகன் இன்னமுமம் கைது செய்யப்படவில்லை என்பதாக பாதுகாப்பு தரப்பினர் விடுத்த அறிக்கைகள் இதனை கட்டியம் கூறுவதாக கருதப்பட்டது. ஆயினும், எதிர்க்கட்சிக்கு ஆதரவானவர்கள் இந்த பிராந்தியத்தில் சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரம் செய்வதை இந்த விதமான நடவடிக்கைகள் கட்டுப்படுத்துவதாக அமைந்தன.

தேர்தல் முடிவுகளைப் பொறுத்த வரையில் எதிர்த்தரப்பு கூறுவது போல முற்று முழுதான மோசடிகள் நடைபெற்றனவா என்று கூறுவதற்கில்லை என்றே படுகிறது. இதனை தவிர்த்து விட்டுப் பார்த்தால், சிங்கள தேசமும், ஏனைய தேசங்களும் மாறுபட்;ட அரசியல் அபிப்பிராயங்களை வெளியிட்டிருப்பதாக நாம் முடிவு செய்யலாம். அத்துடன் சிங்கள இனவாதம் என்பது சில கூற முனைவது போல ஒன்றும் மறைந்துவிடவில்லை என்பதையும், அதுவே சிங்கள் மக்களது முடிவுகளை தீர்மானிக்கும் அம்சமாக இருப்பதையும் காண முடிகிறது. தமிழர் தாயகங்களில் அமைதி திரும்பியதாகவும், முன்னாள் போராளி அமைப்புக்கள் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுவதன் முகத்திரை கிழித்ததையும் காண முடிகிறது. ஏற்கனவே தமிழர் தாயகங்களில் இருந்த பத்திரிகையாளர்களும், அங்கிருந்து வெளிவரும் பத்திரிகைகளும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியாத நிலைமையே நிலவி வந்தது. அது தேர்தல் காலத்தில் இன்னமும் வெளிப்படையானதாக தெரியலாயிற்று. தாம் ஏற்கனவே சலுகைகள் வழங்கி உருவாக்கியிருக்கும் வியாபாரிகளதும், விசுவாசிகளதும் ஆதரவைக்கடந்தும், மக்கள் தமது சொந்த கருத்துக்களை வெளியிட முனையும் போது வன்முறையின் மூலமாக நசுக்கப்பட்டார்கள். இந்த இலட்சணத்தில்தான் தமிழர் தாயகத்தில்; ஜனநாயகம் நடப்பில் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் அடைந்துள்ள மகிந்த பாராளுமன்ற தேர்தல்களை உடனடியாக நடத்துவதன் மூலமாக அதன் பெரும்பான்மையை தக்க வைக்க முனைகிறார். அந்த தேர்தலிலும் தமிழர் பிரதேசங்களில் இதே சக்திகளே தேர்தலில் கலந்து கொள்ளப் போகின்றன. பாராளுமன்ற ஆசனங்கள் மற்றும் அதில் கிடைக்கும் சுகங்கள், சலுகைகள், மற்றும் அதனை தொடர்ந்தும் காப்பாற்றிக் கொள்வது என்பதைத் தவிர கொள்கை ரீதியில் எந்தவிதமான பற்றுதலும் அற்றவர்கள் இவர்கள். தமிழ் மக்களது அடிப்படையான உரிமைகள், வாழ்வாதார தேவைகள், அவர்களது ஜனநாயக உரிமைகள் பற்றி அறவே கவலைப்படாத சந்தர்ப்பவாதிகள் இவர்கள். அத்தோடு பின்தள்ளப்பட்;ட தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தை, மாறிப் போய்விட்ட சூழலில் வேறு வடிவில் தொடர்ந்தும் முன்னெடுப்பது பற்றிய அக்கறை ஏதுமற்ற இவர்கள் இந்த தேர்தலிலும் தமிழ் மக்களது தேசிய தலைமைகள் என்ற கூறிக் கொண்டு கடைவிரிக்கப் போகிறார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் இந்த தலைமைகள் பற்றி மிகவும் தெளிவாகவே உள்ளார்கள். ஆனால் மாற்றும் தலைமைகள் அரங்கில் இல்லாதவரையில் மாறி மாறி இதே சக்திகள் அரங்கிற்கு வருவதும், அதில் மிகவும் மோசமானவை மோசடிகள் மூலமாக வெற்றி பெறுவதும் நடந்தேறப் போகின்றன. அப்படிப்பட்ட நிலையில் நாம் இந்த பாராளுமன்ற தேர்தல் வழிமுறைகளை அப்படியே இந்த தேசவிரோத, சந்தர்ப்பவாத, கூலிப்படைகளான சக்திகளது கரங்களில் ஒப்படைத்துவிட்டு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் செயலற்று இருப்பதா, அல்லது இந்த சக்திகளை அவற்றின் ஒரே ஆதாரமான தளத்தில் முறியடிப்பதற்கு ஏதாவது செய்தாவதா? என்பது நாம் உடனடியாக தீர்வு கண்டாக ஒரு பிரச்சனையாக முன்னுக்கு வருகிறது.

பாராளுமன்றவாதம் குறித்து...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ~மே 18 இயக்கத்தை|| சேர்ந்த நாம், மரபார்ந்த தமிழ் தலைமையின் இந்த சந்தர்ப்பவாத நடைமுறைகளுடன் முறித்துக் கொள்வதன் அவசியம் குறித்து யோசித்தோம். பிரதான வேட்பாளர்கள் இருவருமே நடந்து முடிந்த இனஒழிப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால் இவர்களை தமிழ் மக்கள் நிராகரிப்பதே சரியான செயலாக அமையும் எனக் கருதினோம். அத்தோடு தந்திரோபாயம் என்ற பெயரில் சந்தர்ப்பவாத அடிப்படையில் தமிழ் வலதுசாரி தலைமைகள் ஏதாவது ஒரு சிங்கள பேரினவாத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்களது வாக்கு வங்கியின் முகாமையாளர்கள் போன்ற செயற்படுவதை முடிவுக்கு கொண்டு வர விரும்பினோம். இதனால் தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தை முரணின்று ஆதரித்து வந்த NSSP கட்சியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களை ஆதரிப்பதாக முடிவெடுத்து, அதனை பகிரங்கப்படுத்தி, ஆரம்ப நிலையில் உள்ள ஒரு சிறிய அமைப்பு என்ற வகையில் எம்மால் ஆனவற்றை அவருக்கு ஆதரவாக செய்தோம். இந்த முயற்சிக்கு பெரியளவில் தாக்கம் நிகழ்த்தும் என்று நாம் நம்பாவிட்டாலும், எந்த சரியான நிலைப்பாடும் ஆரம்பத்தில் ஒரு சிறிய புள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற முடிவுடன் எமது செயற்பாடுகளின் தாக்கத்தின் வீச்சம் பற்றிய அதீத எதிர்பார்ப்புகள் இன்றே நாம் செயற்பட்டோம். தேர்தல் முடிவுகள் ஒன்றும் எமக்கு ஆச்சரியத்திற்குரியனவாக இருக்கவில்லை.

ஆனால் இந்த முயற்சியின் போது எழும்பிய விவாதங்களுள் ஒன்று கவனிக்கப்பட வேண்டியது என்பதனால் அது தொடர்பாக நாம் விரிவாக பேசியாக வேண்டியுள்ளது. விக்கிரமபாகுவை ~மே 18 இயக்கம்| ஆதரிப்பதன் வாயிலாக நாம் பாராளுமன்றவாதத்தில் மூழ்கிவிட்டதாகவும், பன்றித்தொழுவத்தினுள் நுழைந்து விட்டதாகவும் விமர்சிக்கப் பட்டோம். சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இது ஒருவித பாராளுமன்ற எதிர்ப்பாளர்களது கருத்தேயாகும். பாராளுமன்ற எதிர்ப்புவாதம் என்பது ஒன்றும் வரலாற்றில் புதியது அல்ல. வரலாற்றில் எப்போது முதலாளித்துவ ஜனநாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற முறைமை செயல் வடிவம் பெற்றதோ, அப்போதிருந்தே, இது தொடர்பாக காரசாரமாக விவாதங்கள் எழும்பியே வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ மன்னர் ஆட்சி முறையின் வரம்பற்ற அதிகாரத்தை மறுத்து மக்களது இறைமையை என்ற தார்ப்பரியத்துடன் முதலாளித்துவ அரசு தோன்றிய காலம் முதலாக தேர்தல்கள் என்பவை மிகவும் வரையறுக்கப்பட்டவர்களது உரிமையாகவே இருந்தது. முதலில் சொத்துடைய ஆண்களுக்கு மட்டுமே இந்த உரிமை வழங்கப்பட்டது. பின்பு கல்வி கற்றவர்களுக்காகவும் இது விஸ்தரிக்கப்பட்டது. ஆனால் இந்த உரிமை வழங்கப்படாக ஏனைய பிரிவினரான தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பெண்கள், கறுப்பினத்தவர்கள், பூர்வகுடிகள் போன்றோர் மிகுந்த போராட்டத்தின் மூலமாகவே இந்த உரிமைகளை வென்றெடுத்தனர். இந்த போராட்டங்களுக்காக இந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் அளப்பெரிய தியாகங்களை செய்தாக வேண்டியிருந்தது. கைதுகள், தாக்குதல்கள், சிறைத் தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளையும் மீறித்தான் இதனை வென்றெடுத்தனர். அந்தந்த கால கட்டத்தில் வாழ்ந்த புரட்சியாளர்கள் இந்த போராட்டங்களுக்கு மிகுந்த ஆதரவு வழங்கியதுடன், கருத்தியல் வழி காட்டுதல் உட்பட, தமது நேரடி பங்களிப்புக்களையும் வழங்கி இந்த போராட்டங்கள் வெற்றிபெற அயராது போரிட்டார்கள். இந்த போராட்டங்களில் கிடைத்த வெற்றிகளை கொண்டாடவும் செய்தார்கள்.

ஆனால் பிரச்சனை எங்கு எழுகிறது என்றால் ஒரு புரட்சிகர போராட்டத்தில் பாராளுமன்றத்தின் வரையறுக்கப்பட்ட பாத்திரம் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான. முதலாளித்துவ அரசில்; நாம் தேர்தல்களில் வாக்களிப்பதன் மூலமாக தேர்ந்தெடுக்கும் அரசாங்கமானது வகிக்கும் பாத்திரம் பற்றியதே இதுவாகும். அதாவது அரசு மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு பற்றியதே இந்த பிரச்சனையாகும். அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டில் இந்த வேறுபாடு என்பது மிகவும் தீர்க்கமானதாகிறது.

முதலாளித்துவ அரசியல் விஞ்ஞானத்தின் படி அரசானது மூன்று கூறுகளாக பிரிக்கப்படுகிறது. சட்டவாக்கம், நிர்வாகம், நீதி;த்துறை ஆகிய மூன்றுமே அவையாகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் முடியரசின் கீழ் அரசரிடம் இருந்த வரம்பற்ற அதிகாரங்களின்படி அறவே சட்டத்தை ஆக்குபவராகவும், நீதியை வழங்குபவராகவும், தண்டிப்பவராகவும் இருந்துவந்தார். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியானது இந்த மூன்று துறைகளையும் தனித்தனியாக பிரித்துவிட்டு அதனை முக்கிய சாதனையாக காட்டிக் கொண்டது. மார்க்சியமானது இந்த வெளித்தோற்ற அளவிலான அலங்காரங்களை மறுத்து அரசின் வர்க்க தன்மை பற்றி வலியுறுத்துகிறது. அத்துடன் அரசின் செயற்பாடுகளை மார்க்சியமானது அரசு மற்றும் அரசாங்கம் என்று இரண்டாக பிரிக்கிறது. ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒரு தடவை தம்மை ஆள்பவர் முதலாளிகளின் எந்த பிரிவினர் என்பதை தீர்மானிக்கும் இந்த பாராளுமன்ற தேர்தல்கள் மூலமாக ஒரு அரசாங்கத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் இந்த தேர்தல் நாடகங்களுக்கு பின்னால் அதிகார வர்க்கமும், இராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலை என்பவற்றை முதன்மையாகக் கொண்ட அரசானது இந்த மாற்றங்கள் எதனாலும் பாதிக்கப்படாமல் தொடர்ச்சியாக தனது வர்க்க நலன் பேணும் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டேயிருக்கிறது. இப்படியாக உண்மையான அதிகாரங்கள் எங்கேயோ இருக்க, வெறுமனே வெளித்தோற்றமாக அமையும் அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலை ஜனநாயகத்தின் பிரமாண்டமான திருவிழாவாக சித்தரித்து அதில் கலந்து கொள்வதன் மூலமாக ஒடுக்கப்பட்;ட மக்கள் தமது நலன்களை வென்று கொள்ளலாம் என்று ஒடுக்கப்பட்ட மக்களை நம்பச் செய்வதில்தான் ஆளும் வர்க்கங்களது ஏமாற்று வித்தை அடங்கியிருக்கிறது. இவையே மார்க்சிய அரசு தொடர்பான கோட்பாட்டின் அடிப்படையான அம்சங்களாகும். இந்த நிலையில் வெறுமனே பாராளுமன்ற தேர்தல்களில் மூலமாக குறிப்பிட்ட சில நபர்களை தேர்ந்தெடுப்பதன் மூலமாக ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதான ஒரு பிரமையை முதலாளித்து சக்திகள் வழங்க முனைகின்றன. இந்த ஏமாற்றை அம்பலப்படுத்துவது புரட்சியாளர்களின் முதன்மையான பணியாகிறது.

புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தின் மூலமாக அடிப்படையான மாற்றங்கள் நடத்திவிட முடியாது என்பதில் தெளிவாகவே உள்ளனர். ஆனால் வேறுபாடுகள் எழுவது என்னவோ இந்த பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதா அல்லது முற்றாக நிராகரிப்பதா என்பதில்தான். ஒரு பகுதியினர் இந்த மோசடியுடன் கூடிய பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுவது என்பது புரட்சியாளர்களும் இந்த ஏமாற்று வித்தையில் கலந்து கொள்வதாக அர்த்தப்படும் என்பதால் அதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார்கள். இவர்களே அந்த காலத்தின் முக்கிய ~அராஜகவாதிகளாக| இருந்தார்கள். (கோட்பாட்டுத் தளத்தில் Anarchist என்ற ஆங்கில சொல்லானது அராஜகவாதம் என்று மொழி பெயர்க்கப்படுவதே சரியானது. ஆனால் எமது போராட்டத்தின் குறிப்பான சூழலில் அராஜகவாதம் என்பது அடாவடித்தனம் பண்ணுவது என்ற பொருள்பட விரிவாக பயன்படுத்தப்படுவதால் இப்போதைக்கு இந்த பதம் தொடர்பாக ஏற்படக் கூடிய குழப்பங்களை தவிர்க்கும் விதத்தில் ~அராஜகவாதம்| என்று மேற்கோள் குறிகளுடனேயே பயன்படுத்துகிறேன்.) ஆனால் காரல் மார்க்ஸ் அவர்கள் இதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தார். அவர் பாராளுமன்றத்தின் மிகவும் வரையறுக்கப்பட்ட பாத்திரத்தை மறுக்கவில்லை. ஆனால், மக்கள் அதில் தொடர்ந்து பங்கு பற்றிக் கொண்டு இருக்கும் வரையில் புரட்சியாளர்களும் அதில் கலந்து கொண்டு பணியாற்றுவது அவசியம் என்ற அவர் கருதினார். இதுதான் அப்போது ~அராஜகவாதிகளுக்கும்|, மார்க்சியவாதிகளுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடாக இருந்தது. இது தொடர்பாக லெனினது ஒரு முக்கிய மேற்கோளை காட்டுவது அவசியமானதாகிறது. அவர் தனது ~அரசும் புரட்சியும்| எனும் மிகவும் முக்கியமான ஒரு நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ~~முதலாளித்துவ பாராளுமன்ற முறை ~~பன்றித் தொழுவமே|| ஆயினும் கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய் நிலைமைகள் புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்கு தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வாக்க நிலையிலிருந்து விமர்சிக்கவும் அவருக்கு தெரிந்திருந்தது.||

அதாவது பாராளுமன்ற முறைமை பிற்போக்கானதுதான் ஆனால் அதனை முற்றாக நிராகரித்துவிடக் கூடாது. புரட்சிகர வர்க்கங்கள் தமது நலன்களுக்கு ஏற்றவிதத்தில் பயன்படுத்திக் கொள்ள அறிந்திருப்பது அவசியம் என்ற படிப்பினை நாம் வந்தடைகிறோம். ஆனால் புரட்சிகர இயக்கங்களின் வரலாற்றில் இந்த பிரச்சனை இத்தோடு முடிந்துவிடவில்லை. அவ்வப்போது மார்க்சியத்தின் அடிப்படையான நிலைப்பாடுகளை திரிக்க முனையும் போக்குகள் தலையெடுக்கவே செய்தன. வளர்ச்சியடைந்த மேற்கு நாட்டைச் சேர்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைகளில் ஒரு பகுதியினர் தம்மை ஒரு விதமான மேட்டுக்குடிகளாக உருவாக்கிக் கொண்டு, அந்தந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கங்களுடன் சமரசம் செய்ய முயன்றார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற பாதை மூலமாகவே சோசலிசத்தை அடைந்துவிடலாம் என்ற விதத்தில் மார்க்சியத்தின் அடிப்படையான நிலைப்பாடுகள் திரிபுபடுத்தப்பட்டன. இந்த விதமான திரிபுவாத நிலைப்பாடானது மறுபுறத்தில் ~அராஜகவாதிகளது| போக்குகளுக்கு உர மூட்டியது. இவர்கள் தம் பங்கிற்கு பாராளுமன்ற எதிர்ப்புவாதத்தை முன்னெடுக்கலானார்கள். இந்த இரண்டு போக்குகளையும் அந்தந்த காலத்து மார்க்சியவாதிகள் எதிர்த்து போராடி முறியடித்தாக வேண்டியிருந்தது.

லெனினது போல்ஷேவிக் கட்சியிலும் பாராளுமன்றத்தை பயன்படுத்துவது பற்றிய பிரச்சனைகள் எழவே செய்தன.1905 இல் முதலாவது புரட்சியின் எழுச்சியானது ஆதிக்க சக்திகளது அதிகாரங்களை அசைக்கத் தொடங்கிவிட்ட நிலையில், விவசாயிகளும், தொழிலாளர்களும், படைவீரர்களும் தமது சொந்த அதிகார நிறுவனங்களான சோவியத்துக்களை தன்னியல்பாகவே தோற்றுவித்த பின்பு, இந்த புரட்சிகர நிலைமைகளை தணிவிக்கும் நோக்குடன் ஜார் தனக்கு ஆலோசனை வழங்கும் பாத்திரம் மாத்திரம் வகிக்கக் கூடிய ~டூமா| என்ற அமைப்பை கூட்டுவதற்கு அழைப்பு விடுத்த போது, இந்த டூமா மக்களது புரட்சிகர உணர்வுகளை திசை திருப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்படவதன் காரணமாக அதனை போல்ஷேவிக்குகள் நிராகரித்தார்கள். அந்த முடிவானது சமூகப் புரட்சியானது முன்னேறிச் செல்கையில் அதனை திசைதிருப்பும் வித்தில் முதலாளித்துவ சக்திகளது நடவடிக்கைகளுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. ஆனால்; 1905 ம் ஆண்டின் புரட்சியின் தோல்வியின் பின்பான கடுமையான காலகட்டத்தில் மீண்டும் ஒரு டூமா கூட்டப்பட்ட போது அதனை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நிராகரித்த போல்ஷேவிக் கட்சியானது, தனது முடிவு தவறென உணர்ந்து விரைவில் திருத்திக் கொண்டது. அதன் பின்பு டூமாவில் பிரவேசித்த கட்சி அங்கத்தவர்கள் புரட்சிகரமான முறையில் தமது பணிகளை பாராளுமன்றத்தினுள்ளும் ஆற்றி வந்தார்கள். இதன் மூலமாக புரட்சியாளர்கள் எவ்வாறு பிற்போக்கான பாராளுமன்றத்தினுள் சிறப்பாக செயற்பட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.; முதலாம் உலகப் போருக்கான நிதியொதுக்கீடுகளுக்கு பாராளுமன்றத்தில் ஆதராவாக வாக்களிக்க மறுத்து சைபீரியாவுக்கு நாடு கடத்தப்படும் வரையில் அதில் அங்கம் வகித்து பாட்டாளி வர்க்க புரட்சிக்கு ஆதரவாக தமது தொடர்ச்சியான போராட்டத்தை நிகழ்த்தினார்.

1917 ம் ஆண்டு ஒக்டோபரில் சோசலிச புரட்சி சோவியத் யூனியனில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த புரட்சியின் தாக்கங்கள் உலகலாவிய அளவில் உணரப்பட்டன. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த, சீர்திருத்தவாத அமைப்புகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த புரட்சியாளர்கள் பாராளுமன்றவாத நிராகரிப்பு வாதங்களை முன்வைக்கலானார்கள். 1920 இல் கூட்டப்பட்ட மூன்றாவது அகிலத்தில் இணைந்திருந்த கட்சிகளது இந்தவிதமான தவறான போக்குகளுக்கு எதிராக லெனின் தீவிரமாக போராடினார். ~~இடதுசாரி கொம்யூனிசம், இளம் பருவக் கோளாறு|| என்ற நூல் முழுக்க முழுக்க பாராளுமன்றம், மற்றும் தொழிற்சங்கங்ககள் போன்ற ~~பிற்போக்கு|| அமைப்புக்களில் சேர்ந்து செயற்பட மறுத்த புரட்சியாளர்களுக்கு எதிரான விமர்சனங்களாகவே இருந்தன. இப்படியாக மார்க்சியத்தின் வரலாற்றில் பாராளுமன்றவாதம் தொடர்பான விவாதங்கள் முற்றிலும் சரியான விதத்தில் தீர்க்கப்பட்டதாகவே அந்த காலத்தில் வாழ்ந்த புரட்சியாளர்களுக்கு தோன்றியிருக்கும். ஆனால் இந்த பிரச்சனைகள் அத்தனை இலகுவாக தீர்க்கப்படப் போவதில்லை என்பது பிற்காலத்தில் வந்த புரட்சிகர, இடதுசாரி இயக்கங்களின் நடவடிக்கைகளில் இருந்து தெளிவாகியது.

புரட்சிக்கு பின்பு புரட்சி வெற்றி பெற்ற நாடுகளில் ஒருவித அதிகாரவர்க்கமயமாதல் நடந்தேறியது. அதற்கு இணையாக இந்த கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த கொம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் அதேவிதமான அதிகாரவர்க்க நடைமுறைகளை நோக்கி செல்லத் தலைப்பட்டன. இதனால் இந்த கட்சிகளின் தலைமை அங்கங்கள் புரட்சியை, புரட்சியின் கடினமான பணிகளை தவிர்க்கும் விதத்தில் தமது வேலைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டன. கட்சியின் தலைமை அங்கங்களைச் சேர்ந்தவர்களே பாராளுமன்ற தேர்தல்களில் ஈடுபடுவதும், அதில் வெற்றி பெற்று முக்கிய அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதும் நடந்தேறின. இதனால் ஏனைய புரட்சிகர பணிகள் பின்னே தள்ளப்பட, பாராளுமன்ற வாதத்தை சுற்றிலுமே கட்சியின் பணிகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாய வர்க்கங்கள், ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவுகளது ஒழுங்கமைப்பு மற்றும் போராட்டங்கள் முக்கியத்துவம் குறைந்து, இவை பாராளுமன்ற வாதத்திற்குட்பட வேண்டியதாகின. பல சந்தர்ப்பங்களில் முதலாளித்துவ அமைச்சரவையில்; இருந்து கொண்டு, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை காப்பாற்றும் பணியை செய்ய நேர்ந்ததானது, தவிர்க்க முடியாதபடி, தொழிலாளர் மற்றும் விவசாயிகளது போராட்டங்களை தாமே முன்னின்று நசுக்க வேண்டிய மிகவும் துர்ப்பாக்கிய நிலைமைக்கும் இட்டுச் சென்றது. சொந்த தொழிலாளர் வர்க்கங்களுடன் மோதல்களில் ஈடுபடவும், ஏன் துப்பாககிச் சூடு நிகழ்த்தும் அளவிற்கு கூட சென்று முடிந்தது.

இதனுடன் இணைந்த, ஆனால் இதற்கு முற்றிலும் மாறான ஒரு தளத்தில் நடைபெற்ற இன்னுமொரு விடயம் இந்த பிரச்சனையை இன்னமும் சிக்கலானதாக மாற்றியது. சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற குருசேவ் ஒரு குறுகிய காலத்தினுள்ளேயே சில முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டார். ஸ்டாலினிசம் பற்றியதும், அதன் போது நடைபெற்ற மிகைப்படுத்தல்கள் பற்றியுமான பிரச்சனைகள் இதன் ஒரு பகுதியாக அமைந்தன. அதன் இரண்டாம் பகுதியானத சோசலிசத்திலுருந்து கொம்யூனிசத்தை நோக்கி மாறுவதற்கான காலகட்டத்தை தாம் அடைந்து விட்டதாக குறிப்பிடுவதுடன் தொடங்குகிறது. இதன்படி வர்க்கங்களும் வர்க்க போராட்டங்களும் சோவியத் யூனியனில் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் பிரகடனப்படுத்தியதுடன், உலகலாவிய அளவிலும் தாம் முதலாளித்துவத்தை புரட்சியின்றி, சமாதானமாக, போட்டியின் மூலமாக தோற்கடிக்கலாம் என்று வலியுறுத்தினார். இதன்படி தம்முடன் நெருக்கமான உறவில் இருந்த கொம்யூனிஸ்ட்டு கட்சிகளை தலைமறைவு வேலை முறைகளைக் களைந்துவிட்டு பாராளுமன்;ற வாதத்தில் முற்றாக இறங்குமாறு ஊக்குவிக்கப்பட்டது.

இதற்கெதிரான எதிர் வாதங்களை மாவோ தலைமையிலான சீன கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது முன்னெடுத்தது. இந்த விவாதத்தில் பாராளுமன்றவாதத்திற்கு எதிரான தீவிரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதத்தின் தீவிரமானது, இந்த கருத்துக்கள் பாராளுமன்ற எதிர்வாதமாக அர்த்தப்படுத்தும் அளவிற்கு அழுத்தம் பெறலாயின. ~~துப்பாக்கிக் குழலில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது|| என்ற மாவோவின் வாதமானது, குறுக்கப்படுத்தப்பட்டு, அதன் நேரடியான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படும்போது, ஒரு புரட்சிகர இயக்கத்தில் சாத்தியப்படக் கூடிய அனைத்து போராட்ட வடிவங்களுக்குள்ளும் ஆயுத போரட்டத்தை படிநிலைவரிசையில் ஒரு மேல் நிலைக்கு கொண்டு செல்வதான ஒரு நிகழ்வாக அமைந்தன. இந்த சர்ச்சைகள் இடதுசாரி இயக்கங்களை உலகலாவியரீதியில் மொஸ்கோ சார்பு, சீன சார்பு என்று பிளவுபட வழி வகுத்தது. ஆயினும் உடனடியாக இந்த பிளவானது பாராளுமன்றவாதம் தொடர்பாக பாரிய பிரச்சனைகளை தோற்றுவிக்கவில்லை. இந்தியாவில் தோன்றிய சிபிஎம் கட்சியும், இலங்கையில் சண்முகதாசன் தலைமையில் தோன்றிய சீன சார்பு கொம்யூனிஸ்ட்டு கட்சியும் வழக்கம் போலவே பாராளுமன்ற தேர்தல்களிலும் கலந்து கொண்டன. இலங்கையில் சண்முகதாசன் தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அந்த கட்சியானது மேற்கொண்டு தேர்தல் முறைகளை முற்றாக நிராகரிக்கத் தொடங்கியது. இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தின் தோற்றமானது இந்த வகையில் ஒரு முக்கியமான அம்சமாக அமைந்தது. இந்த இயக்கத்தை தோற்றுவித்த சாரு மஜும்தார் தலைமையிலான குழுவானது பல அதிதீவிர நிலைப்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இந்திய சமூக அமைப்பை வரையறுத்த விதம், அழித்தொழிப்பு தத்துவம், பாராளுமன்ற எதிர்ப்புவாதம், நீதிமன்றங்களை புறக்கணிப்பது போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கனவாகும். இந்த நிலைப்பாடுகள் இன்றும் இந்தியாவில் உள்ள மார்க்சிய லெனினிய இயக்கங்களை மாத்திரமன்றி, இலங்கையில் இருந்த, இருக்கின்ற அமைப்புக்களது நிலைப்பாடுகளையும் தொடர்ந்து பாதித்து வருகிறது. சண்முகதாசன்; தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட்டு கட்சியானது பாராளுமன்ற நிராகரிப்பு, ஆயுத போராட்டம் போன்ற நிலைப்பாடுகளை கருத்தளவில் முன்னெடுத்த போதிலும், ஆயுத போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுப்பதில் முனைப்பு கொண்டிருக்கவில்லை. சாதிய எதிர்ப்பு போராட்டத்தல் பல் வேறு சந்தர்ப்பங்களில் வெடி குண்டுகள், துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது நடைபெறவே செய்தது. ஆனால் இந்த நிகழ்வுகளைத் தாண்டி, இலங்கையில் ஒரு ஆயுத போராட்டத்தை நடத்துவது, அதற்கு இணையாக ஏனைய சட்டரீதியான மற்றும் சட்ட பூர்வமற்ற போராட்டங்களை ஒருங்கிணைப்பது என்ற வகையில் விரிவான ஏற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. உண்மையில் இவர்களது ஆயுதபோராட்டம் பற்றிய பிரச்சாரமானது தமிழ் மக்கள் மத்தியில் தன்னியல்பாக எழுந்த ஆயுத போராட்டத்திற்கு ஒரு தார்மீக பலத்தை வழங்க மாத்திரமே பயன்பட்டது. அதுவும் தேசிய விடுதலைப் போராட்டத்தை அவர் முற்றிலும் நிராகரித்த நிலையிலேயே இது நடைபெற்றது.

இப்போது நாம் எமது போராட்டத்தில் எவ்வாறு பாராளுமன்ற எதிர்ப்பு வாதமானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைப்பாடாக மாறியது என்பதை பற்றி பரிசீலிக்க வேண்டியுள்ளது. எழுபதுகளின் நடுப்பகுதியிலேயே பல்வேறு இளைஞர் அமைப்புக்களும் மரபார்ந்த தமிழர் தலைமைகள் மீது மிகுந்த ஏமாற்றம் அமைந்திருந்தனர். இவர்கள் இதன் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தையும் நிராகரித்தனர். தமிழர் தேசிய இயக்கத்தில் இருந்த கோட்பாட்டு அரசியல் வறுமை காரணமாக ஏனைய முக்கிய கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறைகள் பற்றிய பிரச்சனைகள் விவாதித்துத் தீர்வு காணப்படாமை போன்றே போராட்ட வழிமுறைகள் பற்றியும் எந்தவிதமான கோட்பாட்டுரீதியான விவாதங்களும் நடக்கவில்லை. இவற்றையும் மீறி பிரச்சனைகளை முகம் கொடுக்க நேரிட்ட போது அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவிதத்தில் ~பயனீட்டுவாத| அடிப்படையில் (Pragmatism) முடிவுகள் எடுக்கப்பட்டன. 1981. 1982 களில் யாழ்ப்பாணத்தில் தேர்தல்களை குழப்பிய நடவடிக்கைகள் எந்த கோட்பாட்டுரீதியான முடிவின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படாமல், அவ்வப்போதைய அரசியல் மற்றும் குழுக்களது விருப்பு – வெறுப்பிற்கு ஏற்ப முடிவெடுக்கப்பட்டது. இது ஏனைய போராட்ட நடைமுறைகள் தொடர்பாகவும் நடைபெற்றது. ஒரு சந்தர்ப்பத்தில் பிறரது உண்ணாவிரதத்தை குழப்பியவர்கள், இன்னோர் சமயத்தில் தாமே உண்ணாவிரதம் இருந்தார்கள். அவ்வாறே ஒரு சமயத்தில் பாரளுமன்ற தேர்தல்களை குழப்பியவர்கள் இன்னொரு சமயத்தில் பாராளுமன்ற தேர்தல்களில் கலந்து கொண்டார்கள். இந்த இடத்தில் போராளிகள் ஒருபோதும் தாம் முன்மொழிந்தவற்றிற்று விசுவாசமாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. இது போராட்ட வடிவங்கள் தொடர்பாகவும் அமைந்தது.

பாராளுமன்றம் தொடர்பான விடயத்திலும் இதே அணுகுமுறையே கைக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொதுவில் எமது போராட்டத்தில் கோட்பாட்டு, அரசியல் புரிதல் மட்டமானது மிகவும் அடிநிலையில் இருக்கிறது. அறிவுத்துறை சோம்பேறித்தனமும், போலிப் புலமையும் ஓங்கி நிற்கின்றன. வெறுமனே சில வறட்டுச் சூத்திரங்களை திரும்பத் திரும்ப உச்சரிப்பதே போதியளவு விவாதத்தை நடத்தியதாக கருதப்படுகிறது. வெறுமனே Cut and Past இல் தமது இணையத்தளங்களை நடத்தும் குழுக்கள் கருத்துக்கள் எதனையும் புதிதாக உருவாக்க முனைவதில்லை. அதற்கான திறமையும், உழைப்பும் இவர்களிடம் கிடையாது. தமிழக மாலெ குழுக்களது வாசகங்கள் சிலவற்றை இரவல் எடுத்து திரும்பத் திரும்ப உச்சரிப்பதே இவர்களது மார்க்சிய புரிதலாக உள்ளது. தமது எதிர்த்தரப்பாரை, அவர்களும் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராட முனையும் நட்பு சக்திகள் என்ற அக்கறை எதுவும் இன்றி, அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது.... இப்படியாக நடந்து கொண்டு ஆரோக்கியமாக விவாதம் நடத்துவதாக கூறினால் இதுதானே இந்த காலத்தின் மிகச் சிறந்த நகைச் சுவையாக இருக்கும். சரி இப்போது விடயத்திற்கு வருவோம்.

எனவே எமது போராட்ட சூழலில் பாராளுமன்றம் தொடர்பாக நாம் திட்டவட்டமான முடிவுகளை மேற்கொள்வது என்பது பல அம்சங்களில் தங்கியிருக்கிறது. முதலில் அரசு பற்றிய மரபார்ந்த மார்க்சியத்தின் அடிப்டையான கருத்துக்களை சரிவர புரிந்;து கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த மார்க்சிய மூலவர்களது காலத்திற்கு பிற்பட்ட இந்த இடைக்காலத்தில் இந்த துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகள், விவாதங்களை சரிவர கிரகித்துக் கொள்ள முயல வேண்டும். இதற்குமேல் பொதுவில் மூன்றாம் உலக நாடுகளில் அரசின் தன்மை குறித்தும், குறிப்பாக இலங்கையில் அரசின் தன்மை குறித்தும் புரிதலை எட்ட வேண்டும். அத்தோடு இலங்கையின் குறிப்பான நிலைமை என்ற வகையில் இலங்கையில் உள்ள சமூக உருவாக்கம், அதிலுள்ள பொருளாதார, சித்தாந்த, அரசியல், தேசிய, சாதிய, பெண் ஒடுக்குமுறை போன்றவற்றுடனும் இணைத்து இந்த புரிதலை ஆழப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு எல்லாம் மேலாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசம் என்ற வகையில் இலங்கை பாராளுமன்றத்துடன் எமது மக்களுக்கான உறவு என்ன என்பதையும் வரையறை செய்தாக வேண்டும். அத்தோடு எமது போராட்டத்தின் வளர்ச்சியானது பாராளுமன்றம் மற்றும் சட்;டபூர்வமான போராட்ட நடைமுறைகளை நிராகரிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளதா? என்ற கேள்வியையும் நாம் எழுப்பியாக வேண்டியுள்ளது. இவற்றின் வெளிச்சத்தில் நாம் எமது முடிவுகளை எடுக்கும் போதே அவை மிகவும் சரியானவையாக அமையும் என்ற நாம் நம்புகிறோம். ஆனால் அது ஒரு நீண்ட செயற்பாடு என்பதனால் இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் எவையும் மிகச் சரியானவை என்று உத்தரவாதப்படுத்த முடியாதனவாக இருப்பதுடன், ஒருவித இடைக்காலத் தன்மை கொண்டதாகவே இருக்கும் என்ற முடிவுடன் தொடர்ந்து விவாதத்திற்கு செல்வோம்.

ஒரு புரட்சிகர போராட்டத்தில் சமூக மாற்றத்தை எற்படுத்த முனையும் எந்த வொரு அமைப்பும், வரலாறானது இருவரை முன்வைத்துள்ள அத்தனை போராட்ட வடிவங்களிலும் முறைப்படி கற்றுத் தேர்ந்து கொள்வது அவசியமானதாகும். இவற்றில் சில சட்டபூர்வமானவை, இன்னும் சில சட்டத்திற்கு புறம்பானவை: சில மக்கள் திரள் சார்ந்தவை. இன்னும் சில சிறிய கருக்குழுக்களால் செய்யப்படுபவை: சில அகிம்சை வடிவானவை, இன்னும் சில வன்முறை சார்ந்தவை: சில தீவிர செயற்பாடு கொண்டவை, இன்னும் சில மிகவும் மந்தமான செயற்பாடு கொண்டவை. இவையாவும் வரலாறு புரட்சிகர போராட்டங்களில் மக்கள் முன்வைத்தவை என்ற வகையில் அனைத்துமே ஒரேவிதமாக முக்கியத்துவம் உடையனவாகும். குறிப்பிட்ட ஒரு சூழலில் தாக்கமுள்ளதாக திகழும் ஒரு போராட்ட வடிவம் இன்னொரு சந்தர்ப்பத்தில் அறவே பயனற்றதாக ஆகிவிடும். குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அறவே விரும்பப்படாத ஒரு வடிவம், இன்னோர் சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக ஆகிவிடும். ஆதலால் எல்லா போராட்ட வழிமுறைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமாக பண்பை கொண்டவையாக கருதப்பட்டு, அவற்றை கற்றுத் தேர்வதிலும், தனித்தேர்ச்சி பெறுவதிலும் புரட்சியாளர்கள் போதிய கவனம் எடுக்க வேண்டும். ஏனெனில் வரலாறானது எப்படிப்பட்ட ஒரு போர்க்களத்தை எம்முன் விரிக்கப் போகிறது என்பதை எவருமே முன்னறிந்து கூறும் திறமை அற்றவர்கள் என்பதே உண்மையாகும். ஏன் எமது போராட்டத்திலேயே எடுத்துக் கொண்டாலும் கூட, ஆயுத போராட்டமானது ஏனைய அனைத்து போராட்ட வடிவங்களிலும் உயர்ந்ததாகவும், பின்பு அதுவே ஒரே போராட்ட வடிவமாகவும் குறுக்கப்பட்ட நிலைமை எமது போராட்;டத்தில் உருவானது. இந்த நிலைமை எப்படிப்பட்ட நெருக்கடிகளை போராட்டத்தில் உருவாக்கிவிட்டிருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தனது எதிரியுடன் மோதச் செல்லும் ஒரு படையானது, தனது படைக்கலன்கள் அனைத்தையும் பாவிக்க தயாரான முறையிலேயே போர்க்களத்தை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் யுத்தத்திற்கான தயாரிப்பு நிலையிலேயே சில படைக்கலன்களை துறந்துவிட்டு செல்லும் ஒரு படையணி தனது வெற்றியை உத்தரவாதப் படுத்திக் கொள்ள முடியாது அல்லவா? நாம் இப்போது ஒரு பாரிய பின்னடைவில் இருந்து தமிழர் தேசியத்தை சிறிது சிறிதாக முன்னெடுத்துச் செல்ல முயல்கிறோம். ஆனால் அதன் ஆரம்ப கட்டத்திலேயே பாராளுமன்ற எதிர்ப்புவாதத்தை மேற்கொள்வது சரியான பாதையாக எமக்குப் படவில்லை. • முதலாவதாக, நாம் ஒரு தோல்வியை அடுத்து எமது முயற்சிகளை தொடங்குகிறோம். இப்போது மாற்றுக் கருத்துள்ள அனைவரும் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே எமது போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இப்படியான சந்தர்ப்பங்களில் சட்டபூர்வமான வழிமுறைகள், அதிலும் பாராளுமன்ற தேர்தல் முறைகள் நாம் மக்களைச் சென்றடைய கணிசமான வாய்ப்புக்களைத் தரும். • மக்கள் இப்போதுதான் ஒரு நீண்ட இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அமைதி தற்காலிகமானதுதான் என்றாலும் அதனை யாரும் குழைப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது வெறுமனே வாக்களிப்பது என்பதாகவே சுருங்கிப் போயுள்ளது. கடந்த காலத்தில் கூட யாருமே பாராளுமன்றத்தின் பற்றாக்குறை குறித்தோ, அதற்கு மாற்றான வழிமுறைகளில் ஒழுங்கமைத்துக் கொள்வது குறித்தோ எதுவுமே செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
• நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அண்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பாராளுமன்ற முறைமை அமுலில் இருந்தே ஆக வேண்டியுள்ளது. இதில் பல்வேறு சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் கலந்து கொண்டு ஆசனங்களை நிரப்பவே போகிறார்கள். பாராளுமன்றத்தை நாம் நிராகரிப்பதனால் இந்த இடங்களில் மோசமான பேர்வழிகள் அமர்ந்து கொண்டு அதனை தேசவிரோத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப் போகிறார்கள். வேறு ஜனநாயக சக்திகள் அந்த இடங்களை எடுப்பதனால் இப்படியாக எமது போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கும் புல்லுருவியொன்றை ஒரு பகிரங்கமான மேடையை விட்டும் அகற்றி விடுகிறோம்.
• மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது தொகுதிகளில் உள்ள பாராளுமன்ற அங்கத்தவர்களது உதவிகளில் சார்ந்தருpக்க நேர்கிறது. அந்த பொறுப்பை ஏன் இந்த கடைந்தெடுத்த அயோக்கியர்களிடம் பிழைப்புவாதிகளிடமும் நாம் ஒப்படைக்க வேண்டும்.
• தேர்தல்களில் நாம் கலந்து கொள்வது எப்படியும் ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேரவாவினால் அல்ல. தேர்தலில் கலந்து கொள்வதானது நாம் முதலில் மக்களை சந்திக்கவும், அவர்கள் மத்தியில் எமது கருத்துக்களை எடுத்துச் செல்லவும் வழி வகுக்கிறது.
• வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும் பட்சத்தில் அரசினதும், தமிழ் தலைமைகளினதும் மோசடிகளை அம்பலப்படுத்த உதவியாக செயற்படலாம். இது பாராளுமன்றத்திற்கு வெளியில் செய்யும் எமது பணிகளுக்கு உதவியாக அமையும்.
• உள்ளூரில் முளைவிட முயற்சிக்கும் பல்வேறு புதிய குழுக்களும் மோசமாக ஒடுக்கப்படும் நிலைமைதான் இப்போது காணப்படுகிறது. அனுபவத்தில் குறைந்து, போதிய பாதுகாப்பு வசதிகள் அற்ற பல்வேறு நபர்கள் தனித்து இப்படியாக எதிரியின் ஒடுக்குமுறைகளை முகம் கொடுக்குமாறு விட்டுவிடுவது அனுபவம் வாய்ந்த, பாதுகாப்பான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு அழகல்ல. பாராளுமன்ற திசையில் நாம் வைக்கும் முன்னெடுப்புக்களும், அது தொடர்பான எமது செயற்பாடுகளும் இன்னும் இப்படிப்பட்ட பலர் அரங்கிற்கு வந்து செயற்பட இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஜனநாய முன்னணியின் அவசியம்
இலங்கையில் ~~பயங்கரவாதம்|| ஒழிக்கப்பட்டு ஜனநாயக சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டாலும், அது ஆளும் தரப்பிற்கான ஜனநாயகமாகவே குறுக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துள்ளவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கவோ, அல்லது கூட்டங்களை ஒழுங்கு செய்யவோ, அமைப்பாகவோ அனுமதிக்கப்படுவதில்லை. அதிலும் தாயகத்தில் ஆக்கிரமித்துள்ள அரச படைகளும், அவர்களது ஆதரவுடன் செயற்படும் கூலிப்படைகளுமே மக்களதும், மாற்றுக் கருத்தாளர்களதும் செயற்பாடுகளுக்கும் பெரிய முட்டுக்கட்டைகளாக இருக்கிறார்கள். இங்கு அரசு வேடம் போடுகிறது. ஒரு புறத்தில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறது. மறுபுறத்தில் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் செயற்பாடுகளை கட்டவிழ்த்து விடுகிறது. ~~ஜனநாயக வழிக்கு வந்துவிட்டவர்கள்|| ஆயுதம் தாங்கியவாறு மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதிரணி ஜனாதிபதி வேட்பாளருக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை, ஏனெனில் விடுதலைப் புலிகள் இல்லை எனக் கூறும் அரசானது, இந்த கூலிப்படைகளை ஆயுதங்களுடன் வலம் வர அனுமதிக்க முடியாது.

இப்போது தமிழர் தாயகத்தில் தேசிய விடுதலைக்காக குரல் கொடுக்கும் சக்திகளுக்கு மட்டுமல்ல, ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நம்பும் சக்திகள் கூட செயற்பட முடியாத நிலைமையே இருக்கிறது. இந்த நிலைமையை கடந்து செல்லாமல் நாம் எமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்து செயற்படுவதோ, மக்கள் தமது முடிவுகளை சுயாதீனமாக மேற்கொள்வதோ சாத்தியப்படமாட்டாது. ஆதலால் நாம் இந்த நிலைமையை எதிர் கொண்டு முறியடிப்பது முக்கியமான பிரச்சனையாக முன்னிற்கிறது. இதில் நாம் மாத்திரம் அன்றி தமிழர் தாயகத்தில் சுதந்திரமாக செயற்பட முனையும், எம்மோடு மாறுபட்ட கருத்துடையவர்களுடனும் கூட சேர்ந்து செயற்பட்டு இந்த ஜனநாயகவிரோத சக்திகளுக்கு எதிராக செயற்பட்டாக வேண்டியுள்ளது. இதில் மரபார்ந்த இடதுசாரி கட்சிகள், மற்றும் ஏனைய முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அனைத்துடனும் நாம் சேர்ந்து செயற்பட்டாக வேண்டும். இந்த கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் பல்வேறு விடயங்களிலும் எமக்கு தீவிரமாக கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் நாம் இந்த வேறுபாடுகளையும் மீறி செயற்படவில்லையானால் இன்றைய நிலையில் தப்பிப்பிழைப்பதோ, அல்லது எதிர்காலத்தில் இந்த வேறுபாடுகளை விவாதித்துத் தீர்க்க முனைவதோ, முடியாதபோது மக்கள் முடிவிற்கு கொண்டு செல்வதோ சாத்தியப்பட மாட்டாது. ஆகவே எமது குறுகிய குறுங்குழுவாதங்களை கடந்து நாம் ஒரு விரிவான கண்ணோட்டத்தில் அனைத்து புரட்;சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடனும் ஒரு விரிவான ஐக்கிய முன்னணிக்கு வருவது உடனடி அவசியமாகிறது.

ஐக்கிய முன்னணி என்று வந்து விட்டாலேயே இதில் பங்கு பற்றும் எந்தவொரு குழுவுமே அதன் அரசியல் நிலைப்பாடுகளை அப்படியே முன்னணியின் கூட்டான முடிவுகளாக திணிக்க முடியாது என்பது புரிந்து கொள்ளத் தக்கதே. அந்த வகையில் நாம் அனைவரும் இணங்கக் கூடியதும், இன்றைய நெருக்கடி நிலைமைகளை கடந்து செல்வதற்கு அவசியமானதுமான குறைந்த பட்ச புரிதல்களை எட்ட முனைவது அவசியமானதாகிறது. அந்த குறைந்த பட்ச புரிதல்களாக பின்வருவன அமையலாம் என்று நாம் முன்மொழிகிறோம்.

1. இலங்கை ஒரு பல்தேச சமூகம். இதிலுள்ள ஒவ்வொரு தேசமும் சுயநிர்ணய உரிமை உடையவை.
2. தமிழர் தாயகம் இராணுவமயநீக்கம் செய்யப்பட வேண்டும் (Demilitarization).
3. உயர்பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்பட்டு மக்கள் தமது சொந்த பிரதேசங்களில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும்.
4. முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்து ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த இடம்பெயர்வுகள் யுத்தத்தினால் ஏற்பட்டது என்றவகையில் அரசிடம் இருந்து நட்டஈடு பெறும் உரிமை இவர்களுக்கு இருக்கிறது.
5. இனஒழிப்பு மற்றும் போர்க்கால் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
6. அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும.
7. துணை இராணுவ குழுக்கள் ஆயுதம் களையப்பட வேண்டும்.
8. பத்திரிகை சுதந்திரம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
9. மக்களது ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
10. புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயச சக்திகள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் ஐக்கியப்பட்டு செயற்படுவது இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான தேவையாகிறது. இந்த முயற்சிகளை மேற்கொள்ளமால் இருப்பது அல்லது இவற்றிற்கு ஊறு விளைவிப்பது எதேச்சாதிகார சக்திகளுக்கு துணைபோகும் நடவடிக்கைகளாகவே கருதப்பட வேண்டும்.

தகவல்: Viyooham Atacial viyooham@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்