இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2008 இதழ் 101  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!
பெயர்வு: புலமும்! புலனும்?

- வ.ந.கிரிதரன் -

பெயர்வு: புலமும்! புலனும்? அன்று வந்திருந்த மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக மேலோட்டமாகப் பார்த்து விட்டு, அவற்றில் இணைய இதழுக்கு வந்திருந்த மின்னஞ்ல்களை அந்த மாதத்திற்குரிய 'போல்ட'ரில் சேமித்துக் கொண்டிருந்தேன். எல்லாம் நான் தற்செயலாக இணையத்தில் ஆரம்பித்திருந்த ''எண்ணங்கள்' இணைய இதழுக்கு வந்திருந்த ஆக்கங்கள்தான். - அப்பொழுது பிரபலமான தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து விட்டு , அவ்விதமான இன்னுமொரு வேலைக்காக மும்முரமாக முனைந்திருந்த சமயம். அப்பொழுதுதான் இவ்விதமாக ஒரு தளமொன்றினை ஆரம்பித்தாலென்ன என்றொரு எண்ணமே தோன்றியது. ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் செய்திக் கடிதமொன்றினை ஆரம்பிப்பதற்காக 'ISSN' இலக்கத்தினை 'எண்ணங்கள்' என்னும் பெயருக்குப் பதிந்து வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரவே அதனையே பெயராகக் கொண்டு , முரசு அஞ்சலின் துணையுடன் மிகவும் எளிமையானதொரு தமிழ் இணையப் பக்கத்தினைத் தொடங்கினேன். என் இலக்கிய முயற்சிகளை, என் எண்ணங்களை, ஆக்கங்களையெல்லாம் பிரசுரித்து, இணையத்தின் மூலம் ஏனைய இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டுமென்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இணையம் அதனை விரைவிலேயே அடியோடு மாற்றி 'எண்ணங்களை' முற்று முழுதாக இணைய இதழாகவே மாற்றி விட்டது. 2000இலிருந்து இன்று வரை, கடந்த எட்டு வருடங்களாக , இதற்காக நான் செலவழித்த காலத்துளிகளின் அளவு என்னைப் பொறுத்தவரையில் மானுட அளவு கோலளவில் என்னையே ஆச்சரியப்பட வைப்பது. ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் ஆகும் காலமென்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு துன்பமான செயலாகவே படுவதில்லை. பிடித்த செயல் யாருக்குத்தான் துன்பத்தைத் தரப் போகிறது? 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வதே' 'எண்ணங்களின்' தாரகமந்திரமாயிற்று. அன்றிலிருந்து இன்றுவரையிலான 'எண்ணங்களின்' வளர்ச்சியும், அதன்மேல் படைப்பாளிகள், வாசகர்கள் காட்டிய ஆர்வமும், பங்களிப்பும் மகத்தானவை. -

ஒவ்வொரு மாதமும் வரும் பல்வேறு வகையான ஆக்கங்களையும் அந்தந்த மாததிற்குரிய 'போல்டரி'னுள் சேகரித்து வைத்துவிட்டு, பின்னர் ஒவ்வொன்றாக வாசித்து, அவற்றிற்குரிய பக்கங்களை அமைத்து வலையேற்றுவதென் வழக்கம். இவ்விதம் வலையேற்றிக் கொண்டிருக்கையில் அடுத்தமாதமும் வந்துவிடும். அதற்குரிய ஆக்கங்களும் வந்துவிடும். இயலுமானவரையில் பதிவுகளுக்குரிய ஆக்கங்கங்களை, பதிவுகளின் நோக்கங்களைச் சிதைக்காமலிருக்கும் அமைந்திருக்கும் பட்சத்தில் அவற்றைப் பிரசுரிப்பது வழக்கம். இருந்தும் சில அவ்வப்போது என் கவலையீனத்தால் அவற்றுக்குரிய 'போல்டர்களில்' தேங்கி விடுவதுமுண்டு. இருந்து என்னால் முடிந்த அளவுக்கு விரைவாக வருவனவற்றைப் பிரசுரிக்கவே முயல்கின்றேன்.

இவ்விதமாக அன்று மின்னஞ்சலில் வந்திருந்த ஆக்கங்களை நுனிப்புல் மேய்ந்து மே 2008ற்குரிய 'போல்டரில் சேகரித்துக் கொண்டிருந்தபொழுதுதான் அந்தச் சிறுகதை கவனத்தைச் சுண்டியிழுத்தது. 'கருணாகரனென்ற புலம்பெயர்ந்த மனிதனொருவனின் கதையிது!' என்பதுவே சிறுகதையின் தலைப்பு. அதனை எழுதியனுப்பியிருந்தவர் டொராண்டோவில் வசிக்கும் கேசவன் என்னுமொரு அன்பர். இதுதான் அவர் 'எண்ணங்களுக்கு' முதன் முதலாக அனுப்பியிருந்த ஆக்கம். அந்தப் பெயரில் இதுவரை நான் வேறொரு ஆக்கத்தினையும் தொராண்டோவில் படித்திருந்ததாக ஞாபகமிருக்கவில்லை. ஆரம்பத்தில் மேலோட்டமாகப் படிக்க ஆரம்பித்தவனைக் கதையோட்டம் சிறிது இழுத்துப் பிடித்தது. சில நிமிடங்களிலேயே அதுடனொன்றிப் போனேன். அந்தக் கதை இதுதான்.

**** **** *****

கருணாகரனின் கதை! - கேசவன் -

1.

கருணாகரன் சிவந்து கிடந்த கீழ் வானில் உதயமாகிக் கொண்டிருந்த செங்கதிரின் பக்கம் பார்வையைத் திருப்பினான். உதிப்பதும், > கொஞ்சம் கொதிப்பதும், பின் மறைவதும், மீண்டும் உதிப்பதும்... எவ்விதம் சலிப்பில்லாமல் , மாற்றமற்ற செயலொன்றையே மீண்டும், மீண்டும் செய்து கொண்டிருக்க இந்தக் கதிரினால் முடிகிறது? எத்தனைமுறை பார்த்தாலும் இயற்கையை இரசித்தல் அவனுக்கு அலுப்பதேயில்லை. அதுவும் மதியை, சுடரை, கதிரை, விண்ணைப் பார்ப்பதில் அவன் தன்னையே மறந்து விடுவதுண்டு. அவற்றை நோக்கும் ஒவ்வொரு சமயமும்தான் இருப்பின் யதார்த்தம் பயங்கரமாக உறைப்பதை உணரமுடிகிறது. விரிந்திருக்கும் வெளியினூடு இந்தப் பூவுலகும் விரைந்து கொண்டிருக்கும் எண்ணம் அவனுக்கு ஒருவித வியப்பினையும், திகைப்பினையும், சிற்சில சமயங்களில் இனம்புரியாததொரு திகிலினையும், ஆழ்மனதைத் தழுவிச் செல்லுமோர் ஆனந்தக் களிப்பினையும் தந்து விடுவன. பிரம்மாண்டமாய் விரிந்திருக்கும் வெளியினூடு விரையும் சிறு காலவெளிக் குமிழிக்குள் தான் என்னே ஆட்டம்! .
வெளியிலோ... ஒளியாண்டுத் தனிமையில் மூழ்கிக் கிடக்கும் பிரபஞ்சம்., தனிமை ப்ரந்திருக்கும் பெருவெளி பற்றிய சிந்தனைகள்தான் சிற்சில வேளைகளில் ஒருவித திகிலினை ஏற்படுத்தி விடுகின்றன. அத்தகைய சமயங்களில் தனிமையினுள் மூழ்கிக் கிடக்கும் பெருவெளியின் யதார்த்தம் புரியாததொரு அறியாமையில் ஆடிக்கொண்டிருக்கும் இவ்வுலகின் அததனை உயிரினங்களின் மீதும் ஒருவிதமான அநுதாபம் பொங்கும்.

" என்ன ஐயா இயற்கைக் கன்னியின் அழகில் மெய்மறக்க ஆரம்பித்து விட்டாரா? இன்று எங்களை 'மோலு' (Mall)க்குக் கூட்டிக் கொண்டு போவதை மறக்காமல் இருந்தால் சரி. கட்டிய குற்றத்துக்கு அதைத்தானே நாங்கள் கேட்கிறோம். வேறென்னத்தைக் கேட்டோம்.."

எதிரில் கமலினி. அவனது சகதர்மிணி.

அனறு விடுமுறை நாளென்ற எண்ணம் அப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது.

"என்ன வழக்கம் போலை உம்முடைய தொணதொணப்பைத் தொடங்கி விட்டீரா? கொஞ்ச நேரமாவது கொஞ்சம் 'ரிலாக்ஸ்'சாக இருக்கலாமென்று பார்த்தால் விட மாட்டீர் போலையிருக்குதே... விடியிற காலை நேரத்திலை போய் புலம்பினால் இன்றைக்கு அவ்வளவுதான். உமக்குக் கொஞ்சமாவது 'பொசிடிவ் திங்கிங்' இருக்குதா?"

"உங்களுக்கு எப்பவுமே இப்படித்தான்.. எங்களைப் பற்றிக் கொஞ்சம் கூறினாலே பொத்துக் கொண்டு வரும். ஆனா தங்கடை ஆக்களென்றால் மட்டும் 'எயார்போட்' அங்கை இங்கையென்று போய்க் கூட்டி வரமட்டும் நேரமிருக்கும்..."

"இங்கை பார்.. நானும்தான் பார்க்கிறன். உம்மைக் கட்டிய நாளிலையிருந்து இதைத்தானே நீ சொல்லிக் கொண்டு வாறீர்.. இந்த விசயத்திலை மட்டும் உம்முடைய மனசு வளர்ச்சி அடையவில்லையா.. அல்லது சும்மா இதையொரு ட்ரிக்'க்காக வைத்திருக்கிறீரா.."

"இங்கை பாருங்கள்.. உங்களைக் கட்டினதுக்கு நாங்கள் கண்ட சுகம் இந்த ஒரு 'பெட் ரூம்' அப்பார்ட்மெண்ட் ஒன்று மட்டும் தான்.இந்தப் பதினைந்து வருசமாக இதுக்குள்ளை தானே இருக்கிறம். குழந்தையைப் பாருங்கள். உங்கடை பொறுப்பில்லாத போக்காலை அவளுக்கும் இப்படி இருக்க வேண்டுமென்று விதி... எப்படியிருக்க வேண்டிய பிள்ளை..."

கருணாகரனுக்கு அவளது ஆத்திரம் சிறுபிள்ளைத்தனமாகப் பட்டது. தன்னுடன் இழுத்து வைப்பதற்கு இவ்விதமான குற்றச்சாட்டுகளை அவள் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறாளா? அவனப்படியென்ன பெரிதாகக் குடும்பத்திற்கென்று செய்து விட்டான். குடும்பத்தவரை ஸ்பான்சர் செய்து கூப்பிட்டு விட்டிருந்தான். வீட்டாருக்கு அவ்வப்போது கொஞ்சம் காசு அது இதென்று அனுப்பியிருந்தான். அவன் பொருளியற் சிரமங்களுக்கு மத்தியிலும் அம்மா சட்டரீதியாக சமூக உதவிப்பணம் எடுப்பதற்குரிய காலம் வரையில் தன் ஓரறை 'அபார்ட்மெண்ட்'டில் வைத்துப் பராமரித்திருந்தான். இவளென்னடாவென்றால் தன்னுடைய புருஷன் ஏதோ தன் வீட்டாருக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து விட்டான் அல்லது கொடுக்கிறானென்று ஒருவித மனோநிலையில் ஓயாமல் குத்திக் காட்டுகிறாள். அவனுடைய உடன் பிறப்புகளென்னடாவென்றால் இவரென்ன எங்களுக்கு வெட்டிக் கிழித்துப் போட்டாரென்று அவனை ஒருவித ஏளனத்துடன் எள்ளி நகையாடாத குறையில் திரிகிறார்கள்.

மத்தளத்துக்கு இருபுறமும் இடி.

"என்ன நான் சொல்லுறது கொஞ்சமாவது காதிலை விழுகுதா?"

"விழாமல் இருக்கத்தான் 'ட்ரை' பண்ணுறன். அதிலையும் உமக்குத்தான் வெற்றி. சந்தோசம்தானே..?"

அவளது இதழ்க்கோடியில் ஒருவித நகை.

எந்த நிலையிலும் புகழ்ச்சிக்கு இந்த மனிதர் அடிமைதான்.


2.

அவன் ஒரு போதுமே இவ்விதம் தன் கடந்தகாலத்தை மீளாய்வு செய்வானென்று எண்ணியிருந்ததில்லை. தன்னால் முடிந்ததை அவன் செய்திருந்தான். இருந்தாலும் ஒருத்தருக்குமே அதில் திருப்தியிருந்ததாகத் தெரியவில்லை. அவன் தன் வீட்டார் அனைவரையும் 'ஸ்பான்சர்' செய்து அழைத்து விட்டிருந்தான். அவனுக்குத் தெரிந்து எத்தனையோபேர் இருபதினாயிரம், முப்பதினாயிரமென்று காசை வட்டிக்கெடுத்து, முகவர்களுக்கு வாரியிறைத்தும் தோல்வியுற்ற நிலையிலிருக்கிறார்கள்? இன்னும் சிலர் அதன் காரணமாகவே இருந்ததையுமிழந்து உருக்குலைந்து போயிருக்கிறார்கள். அவனைப் பொறுத்தவரையில் காலம் இந்த விடயத்தில் மட்டும் சிறிது ஒத்துழைத்திருந்தது. உண்மையில் ஐயாயிரம் டாலர்களை கடனட்டையொன்றில் அவசரமாகவெடுத்து அவர்கள் அனைவருக்குமான பயணச்சீட்டுகளை எடுத்தனுப்பியிருந்தான். அவ்வப்போது வீட்டாருக்குப் பணம் அனுப்பியிருந்தான். எஞ்சிய குடும்பத்தவர்கள் அனைவரும் வருவதற்கு முன்னிரு மாதங்களில் மட்டும் தொலைபேசிக் கட்டணம் இரண்டாயிரம் டாலர்களைத் தாண்டிவிட்டிருக்கும். போதாதற்கு வீடொன்று சேர்ந்து வாங்கி, சந்தையின் நிலைகுலைவால் இழுத்திழுத்துக் கட்டிக் கொண்டிருந்தான். புலம்பெயர்ந்து வந்திருந்தவன், ஒரு மாதிரி மாதம் இருநூறு டாலர்கள் செலவில் மேலும் சில நண்பர்களுடன் வாழத் தொடங்கியிருந்த நிலையில் , மாதம் ஆயிரம் டாலர்களாவது சேமிக்க முடிவு செய்திருந்தான். மாதம் ஆயிரமென்று பல்லைக் கடித்துக் கொண்டு சேமித்தாலும் நாலு வருடங்களில் நாற்பதினாயிரங்களை இலகுவாகத் தாண்டி விடலாம். இவ்விதமாக அவன் திட்டமிட்டவன், தன் கல்வியினைத் தொடரும் திட்டத்தினைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். இந்த நிலையில் அவனது சம்பாத்தியத்தை எதிர்பார்த்திருந்த அவனது அம்மா, அதில் சிறிது ஏமாற்றமடைந்திருந்த நிலையில் , இரண்டாவது தங்கச்சியை அனுப்பி வைத்திருந்தாள். அவள் வந்து கூட உழைத்தாளென்றால் அவனுக்கு உதவியாகவிருக்குமென்றெண்ணினாள். சகோதரியைத் தனியாக இருக்க் விட முடியாது. அதற்காக 'அபார்ட்மெண்ட்' ஒன்றினை மாதம் ஐநூற்றி ஐம்பது டாலர்கள் வாடகையிலெடுத்தான். மாதம் இருநூறு டாலர்களுக்குள் வாழ்ந்து , மாதம் ஆயிரம் டாலர்கள் அவரையில் சேமிப்பதற்குத் திட்டமிருந்தவனுக்கு அடுத்த மூன்றாண்டுகள் செலவு 'அபார்ட்மெண்ட்', தொலைபேசி, உணவு, தொலைக்காட்சியென்று மாதம் ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. நண்பர்களுடன் மாதம் இருநூறு டாலர்களுக்குள் வாழ்க்கை நடத்தியவனுக்கு
மாதம் ஆயிரம் டாலர்களுக்குக் குறையாமல் செல்வானது. அடுத்த மூன்றாண்டுகள் வரையில் நிலைமை இதுதான். மாதம் எண்ணூறு டாலர்கள் கணக்கில் வருடத்திற்கு சுமார் பத்தாயிரம் டாலர்கள் வரையில் அடுத்த மூன்றாண்டுகளில் சுமார் முப்பதினாயிரம் டாலர்கள் வரையில் சேமிக்க வேண்டிய அவனது பணம் இவ்விதமாகத் தொலைந்து போனது. அவனுடன் சேர்ந்து உழைத்துக் குடும்பதைக் காக்க வந்த மூத்த தங்கச்சிக்கோ வேலைச் செய்வதென்றால் வேப்பங்காயாகக் கசந்தது. விளைவு அடுத்த மூன்று வருடங்களில் ஒரு சில மாதங்களே வேலை. மூன்று மாதங்கள் வேலையென்றால் அடுத்த ஆறு மாதங்கள் உழைத்ததைச் செலவுச் செய்வதென்று அவளின் வாழ்க்கையாகக் காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையினையும் வேலையினை அவளாகவே கைவிடுவதால் , வேலையின்மைக்கான காப்புறுதிக்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை. அவவின் அகதிக் கோரிக்கைக்குப் பாதகமான விளைவினைத் தந்தாலுமென்று சமூக உதவிப் பணத்திற்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை. விளைவு ஊரிலிருந்த குடும்பத்தவர் செலவுடன், இந்தச் செலவும் சேர்ந்து கொண்டது. இடையில் அவனால் மேலதிகமாக எதனையும் சேமிக்க முடியாமலிருந்தது. அவளாவது சிறிதளவு சேமிக்கட்டுமென்று கருதியவன் நண்பர்கள் தொடங்கியிருந்த நான்காயிரம் டாலர்கள் பெறுமதியான சீட்டொன்றில் சேர்த்து விட்டான். அப்படியாவது அவள் கொஞ்சப் பணத்தைச் சேர்க்கட்டுமென்று. அவளோ சீட்டின் ஆரம்ப காலகட்டத்திலேயே மிகப் பெருந்தொகையில் கழித்தெடுத்து விட்டா. அந்த முயற்சியும் கை தரவில்லை.இந்த நிலையில் ஒரு மாதிரி ஊரில் எஞ்சியிருந்த குடும்பத்தவரைக் கடனட்டையின் உதவியுடன் அழைத்திருந்தான். அந்தக் கடனைக் கட்டி முடிக்க மேலும் நான்கு வருடங்கள் ஓடி விட்டிருந்தன. விளைவு ஐயாயிரம் கடனைக் கட்டி முடிக்கும் போது மொத்தமாக மேலும் மூவாயிரங்களுக்குக் குறையாமல் ஒன்பதினாயிரம் வரையில் கட்டி முடித்திருந்தான்.

வீட்டார் வந்திருந்தபொழுது இச்சமயத்தில் தங்கையின் திருமணமும் முடிந்து விட்டிருந்தது. அவளது முதலாவது குழந்தையும் பிறந்திருந்தது. அம்மா சிறிது காலம் தங்கச்சியுடனிருந்தால் அவர்களுக்கும் துணையாகவிருக்கும் என் எண்ணினான். ஆனால் அவளோ தம்பி தங்களுடனிருந்தால் வாடகையைப் பகிர்ந்து கொள்ளலாமென்று திட்டம் போட்டிருந்தாள். விளைவு... அவன் அம்மாவைத் தன்னுடன் வைத்துக் கொண்டான். அடுத்த மூன்றாண்டுகள் மீண்டும் நண்பர்களுடன் வாங்கிய வீட்டுக்குரிய அவனது மாதத்தொகையுடன், அம்மாவுடன் இருப்பதற்காக எடுத்த அபார்ட்மெண்ட் செலவு சேர்ந்து கொண்டது. சேமிக்க வேண்டிய இன்னுமொரு முப்பதினாயிரம் டாலர்கள் வரையில் செலவானது. அம்மா தங்கச்சிக்காரியுடன் சிறிது காலம் தங்கியிருந்தால், அவன் தம்பிக்காரனைத் தன்னுடன் தங்க வைத்துச் சிறிது காலம் மாதச் செலவினைப் பகிரிந்து கொண்டிருக்க முடியும்.
இநத நிலையில் வீட்டு விலையெல்லாம் அடியோடு குறைய ஆரம்பித்தது. பொருளாதார மந்த நிலையில் நகரம் மூழ்கியது. வெளிநாடு வந்து ஒன்பது வருடங்கள் கழிந்த் நிலையில் அவனைப் பொருளாதாரச் சூறாவளி தாக்கியது. வீட்டைக் கைவிட வேண்டிய நிலை. உடன்பிறப்புகள் நினைத்திருந்தால் எல்லோருமாகச் சேர்ந்து வீட்டைப் பொறுப்பேற்றிருக்கலாம். வீடாவது தப்பியிருந்திருக்கும். ஆளாளுக்குத் தான் தப்பினால் போதுமென்று அவர்கள் சிந்தித்தார்கள். ஆனால் யாராவது அவனது பொருளாதார நிலையினை உணர்ந்திருந்தார்களாவென்று தெரியவில்லை.

பணம் எவ்வளவு தூரம் மனிதரை மாற்றி விடுகிறதென்பதை இருப்பு உணர்த்தி வைத்தது. அம்மாவும் பாவம். குழந்தைகள் எல்லாரையும் தன் ஒரே சம்பாத்தியத்தில் படிப்பித்து வைத்தார். மகனின் சம்பாத்தியத்தில் பெண்களுக்கெல்லாம் நல்வாழ்வமைத்துக் கொடுக்கும் கனவுகளில் அவர் ஆரம்பத்தில் ஆழ்ந்திருக்கலாம். சகோதரிமாரும் அத்தகைய கனவுகளில் ஆழ்ந்திருந்தார்களோ தெரியவில்லை. இருந்திருக்கலாம். அவனது நிலையை யாருமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒற்றுமையாய் இணைந்து குடும்பத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக ஆளாளுக்குக் கற்பனைகளுடன் அவனிடம் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்தார்களோ தெரியவில்லை.

இதற்கிடையில் எல்லாவற்றையும் இழந்த நிலையில் அவனுக்குக்காகக் காத்திருந்தவளை ஸ்பான்சர் செய்து அழைத்தான். வந்தவள் மறுபேச்சேதும் பேசாமல் அவனுடன் வாழ்க்கையைத் தொடங்கினாள். அடுத்த பன்னிரண்டு வருடங்கள் அவர்களது வாழ்க்கை அந்த ஓரறை 'அப்பார்ட்மென்'டில் ஆரம்பமாகியது. இதுதான் அவனது நிலைமை. உடன்பிறப்புகளுக்கோ இவரென்ன எங்களுக்குச் செய்து விட்டாரென்று அவன் மீது ஒருவித ஏளனமும், ஆத்திரமும். மனைவிக்கோ இவனைக் கட்டியதாலென்ன சுகமென்ற காலங்கடந்த ஆராய்ச்சி. இந்தச் செலவுகளையெல்லாம் அப்பொழுது அவன் பெரிதாக நினைத்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது நினைக்கும்பொழுது எல்லோரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துத் திட்டமிட்டுச் செயலாற்றியிருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாமென்று பட்டது.

நண்பன் ரமேஷ் இந்த விடயத்தில் கொடுத்து வைத்தவன் குடும்பத்தவர் அனைவரும் ஆண்டுக் கணக்கில் ஒன்றாக இருந்து, உழைத்துச் சேமித்து ,இன்றைக்கு ஆளுக்கொரு வீடென்று ஆனந்தமாகக் காலம் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அவன் அவர்களை அழைத்த விமானப் பயணச்சீட்டுக்கான முழுத்தொகையினையும் வந்த சில மாதங்களிலேயே தம்பி, தங்கச்சியென்று அனைவரும் சேர்ந்து உழைத்துக் > கட்டிவிட்டார்கள். ஒவ்வொருவரும் வந்ததிலிருந்து உழைக்கத் தொடங்கினார்கள். முதல் ஐந்து வருடங்களும் கூட்டுக் குடும்பமாக ஒன்றாக , ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இதனால் குடும்பச் செலவும் மிகவும் குறைவாகவிருந்தது. ஐந்து வருடங்களில் ஒவ்வொருவரிடமும் போதுமான அளவுக்குப் பணமிருந்தது. அதன்பிறகுதான் ஆளாளுக்கு வீடு வாங்கிப் பிரிந்தார்கள். ஒவ்வொருவரும் பொருளாதாரநிலையில் நல்ல நிலையிலிருந்ததால், அவசரத்திற்கு ஆளுக்காள் உதவிக் கொண்டார்கள். ஒற்றுமையின் சக்திக்கு உதாரணமாக அவர்கள் விளங்கினார்கள். இவனது குடும்பத்தவரோ பிரிந்து நின்று ஆளாளுக்குத் தப்பிப் பிழைப்பதிலேயே குறியாக இருந்ததில் ஒன்றுபட்டுச் சாதிப்பதற்குரிய சந்தர்ப்பங்களை இழந்திருந்தனர். ஆனால் இவனுக்கு விளங்காத விசயம்... எல்லோருமே இவனை விட நல்லநிலையில், குறிப்பாகப் பொருளாதாரநிலையில் , இருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் விடுமுறைகளெடுத்து ஊர் சுற்ற அவர்களுக்கு வசதிகளிருந்தன. ஆனால்.. இவனோ... வந்ததிலிருந்து இத்தனை ஆண்டுகளாக இன்னும் வருடத்தில் மூந்நூற்றைந்து நாட்களும் வேலை செய்கின்றான். விடுமுறைபற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. ஒருநாள் உழைக்காவிட்டால் அடுத்தநாள் இவனால் குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாதென்ற நிலை. இருநதும் அன்றாடச்செலவுக்கே அல்லலாடிக் கொண்டிருந்த இவனிடம் இன்னும் எதையோ எதிர்பார்த்தார்கள். கேட்டால் எதனையும் எதிர்பார்க்கவில்லையென்று கூறிக்கொண்டார்கள். நடைமுறையோ அவ்வித எதிர்பார்ப்பினையே புலப்படுத்தி நின்றன. இருந்தாலும் அவன் அவர்கள் மேல் வைத்திருந்த அன்புணர்வெதுவும் குறைந்திருக்கவில்லை. அவர்கள் அனைவரினைதும் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அவனால் வாழ்முடியவில்லையேயென்றதோர் உணர்வுதான் அவனிடம் ஓங்கியிருந்தது. எல்லோரும் நன்றாகவிருந்தார்கள். எல்லாம் அம்மாவின் தன்னளமற்ற உழைப்புக்குக் கிடைத்த பலன். இவன் தன்னால் முடிந்ததைச் செய்திருந்தான். ஒருத்தருக்கும் திருப்தியில்லை. அனைவரும் ஒத்துழைத்துச் செயலாற்றியிருக்கும் பட்சத்தில் இன்னும் அதிகமாக, அனைவரும் சிறப்பாகவிருந்திருக்கும் வகையில் செயலாற்றியிருந்திருக்க முடியும்? எல்லாரும் தான் தப்பினால் பரவாயில்லையென்றோடிக்கொண்டே பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இன்னும் அதிகமாக இல்லாதவனிடம் எதிர்பார்த்தார்கள். இருந்திருந்தால் இவன் அதிகமாகக் கொடுத்திருப்பான். இருந்தாலும் எல்லாரும் நன்றாகவிருப்பதே இவனுக்குத் திருப்தியாகவிருந்தது. அது போதுமென்று பட்டது.ஆனால் அதற்காகவே அது பற்றியே எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? புதிய உறவுகளும், புதிய கடமைகளும் அவனை இருகரம் நீட்டி அழைத்துக் கொண்டிருக்கின்றனவே.

3.

இடையிலொரு சம்பவம்....

காலத்தின் விரைவு மட்டும் சுயாதீனமாக ஓடிக் கொண்டிருந்தது. இப்படியேயிருந்தால் அவனது எஞ்சிய காலமும் இவ்விதமே கழிந்து விடுமென்று கருணாகரனுக்குப் பட்டது. முப்பத்திநான்காவது வயதில் மீண்டும் படிக்கத் தொடங்கினான். அவனது படிப்பிற்குக் கணினியொன்றின் தேவை மிகவும் அதிகமாகவிருந்தது. கடனட்டைகளையெல்லாம் இழந்த நிலையில், மாதத் தவணையில் கணினியொன்றை வாங்குவதென்பது அவன் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவிலிருந்தது. இந்த நிலையில் யாரிடம் கேட்கலாமென்று சிந்தித்துப் பார்த்தான். தம்பியின் ஞாபகம் வந்தது. அதே நேரத்தில் அவ்விதம் அவனிடம் கேட்பதும் செய்த உதவிக்காக நன்றியை எதிர்பார்ப்பதாகிவிடுமொரு செயலாக இருந்து விடுமென்று பட்டது. அவமானம் அவனைக் கூசிக் குறுக வைத்தது. இருந்தாலும் கேட்டுப் பார்ப்பதில் தவறில்லையென்று பட்டது.

"இருக்கிற நிலையிலை உன்னட்டை கேட்கிறேனெயென்று கூடாமல் நினைத்து விடாதை"யென்று பீடிகை போட்டான்.

"பரவாயில்லை. பேசாமல் சொல்லு" என்றான் தம்பி.

"உனக்குத்தானே தெரியுமே.. என்னுடைய் நிதி நிலைமை... அவசரத்துக்கு ஒரு 'கிறெடிட் கார்ட்' கூட இல்லை. ஒரு காரை வாடகைக்கு எடுக்கேலாது. எனக்கு இப்ப நீ ஒரு உதவி செய்ய வேண்டும். உன்னால் முடியுமென்றால் செய்வியா?"

"சொல்லேன்.. முடிந்தால் செய்யிறன்..."

"வேறொன்றுமில்லை... எனக்கு இப்ப படிப்புக்கு அவசரமாக ஒரு 'கம்யூட்டர்' வாங்க வேண்டும். கையிலை முழுக் காசையும் குடுத்து வாங்கிறதுக்கு வசதியில்லை. எனக்கிருக்கிற 'கிரெடிட்' நிலையிலை மாதத் தவணையிலை வாங்கிறதையும் நினைத்துப் பார்க்க முடியாது. 'கார்ட்' கொடுத்து வாங்கலாமென்றால் கையிலை அவசரத்துக்கு ஒரு 'கார்ட்' கூட இல்லை. நீ உன்னுடைய 'கார்ட்டொ'ன்றிலை வாங்கித் தந்தாயென்றால்.. மாதாமாதம் ஒழுங்காக கட்டி விடுறன். கையிலை ஒரு முன்னூறு டாலர்கள் வரையிலை இருக்கு. மிச்சத்திற்கு உன்னுடைய 'கார்ட்'டைப் பாவிக்க முடியுமாவென்று...."

அதற்கு அவன் தம்பி கூறினான்: "அண்ணை... என்ற கார்ட் விசயத்தையெல்லாம் மனுசிதான் பார்த்துக் கொள்ளுறது. என்ற கார்ட்டிலை வாங்கிறது தேவையில்லாத பிரச்சினையைத் தரும். என்னை மன்னிச்சுக் கொள்".

அவனுக்கு அவமானமாகவிருந்தது. தேவையில்லாமல் கேட்டு வீணாக அவமானப்பட்டதாகப் பட்டது. அதே சமயம் அவனுக்கு ஆச்சரியமாகவுமிருந்தது. அவனைப் பொறுத்தவரையில் அவன் புலம்பெயர்ந்து வந்ததிலிருந்து வீட்டாரை எப்படியாவது அழைத்து விடவேண்டுமென்ற ஒரே நினைவுடனேயே செயலாற்றிவந்தான். தேவைப்பட்டபோதெல்லாம் முடிந்தளவுக்குப் பணம், பொருட்களென்று அனுப்பினான். அன்றைய நிலையில் ஒவ்வொரு ஆயிரம் டொலர்களும் இன்றைய ஆயிரம் டாலர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பல மடங்குகள் பெறுமதிவாய்ந்தவையாகவிருந்தன. வீட்டாரைக் கூப்பிடும்போது எந்தவித யோசனையுமின்றி பயணசீட்டுகளை கடனட்டையில் வாங்கி அனுப்பிப் பின்னர் அவற்றுக்கு வட்டியும், முதலுமாகக் கட்டி முடித்தான். இதுவரையில் 'அண்ணை எங்களுக்காக ஏதாவது கடன்பட்டிருக்கிறாயா? ஏதாவது உதவ வேண்டுமா' என்று கேட்காத தம்பியிடம் தயங்கித் தயங்கி இந்த உதவியினைக் கேட்டிருந்தான். சந்தோசமாக உதவியிருக்க வேண்டியவனுக்கு இவனால் தன் 'கிறடிட் ரேட்டிங்கிற்கு' ஏதாவ்து பிரச்சினை வந்து விடவேண்டுமென்று பயம் போலும். வந்ததிலிருந்து உழைக்கிறான். இருந்தாலும் அவன் கையில் காசிருக்காது. அவசரத்துக்குக் கேட்க முடியாது. வீட்டாரைக் கூப்பிட வேண்டும்; வீட்டாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமென்றெல்லாம் எந்தவிதக் கவலைகளுமில்லாத
களிப்பான வாழ்க்கை.

"பரவாயில்லை. உன்ற நிலையும் கஷ்ட்டம்தானே.." என்று அவனுக்குச் சமாதானம் கூறி விட்டகன்றான். அவசரத்துக்குதவியென்று கேட்டால் ஒருமுறையாவது இன்முகத்துடன் அவன் பதிலிறுத்ததாக ஞாபகமில்லை.

அச்சமயம் அவனுக்கு அண்மையில் நடந்த சம்பவமொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவனது தம்பி கடந்தவாரம் வாங்கியிருந்த காரொன்றினை இந்த வருடம் மீளக்கொடுத்து இன்னுமொரு 'மினி வான' ஒன்றினை அதற்குப் பதிலாக வாங்கியிருந்தான். அவ்விதம் வாங்கிய காரினை மீளக் கொடுத்து வாங்கியதில் பத்தாயிரம் டாலர்கள் வரையில் மேலதிகமாகக் கட்ட வேண்டி வந்திருந்தது. அதனை எவ்விதத் தயக்கமுமின்று அவன் ஏற்றுக் கொண்டதைப் பார்த்தபொழுது இவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது. ஊரானுக்குப் பத்தாயிரத்தை இழப்பதில் கணக்குப் பார்க்காதவனுக்கு மாதாமாதம் அண்ணன் காசு கட்டுவானென்று கூறுவதில் கூட நம்பிக்கையில்லையென்ற உண்மையும் இவனுக்குப் பயங்கரமாக உறைத்தது. அதுவும் எழுநூறு டாலர்களுக்கும் குறையாத கடன். இவனே மாதாமாதம் கட்டுவதாக வாக்களித்திருக்கின்றான். இருந்தாலும் பொருளாதாரநிலையில் சீரழிந்து கிடந்த இவனை நம்புவதற்குத் தயாராக அவனிருக்கவில்லை. ஒருநாளும் கேட்காதவன் கேட்டிருக்கின்றான். கேட்டிருக்கத் தேவையில்லையென்று பட்டது. இதுபோல் பல சந்தர்ப்பங்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் மனசு கூசும் படியாக, சுயகெளரவத்தைச் சிதைத்து விடும்படியாக அமைந்து விட்ட சம்பவங்கள். இருந்தும் அவனுக்குத் தம்பியின்மேல் எந்தவித ஆத்திரமும் ஏற்படவில்லை. தனது பொறுப்பற்ற பண விடயத்தில் ஒழுங்காகத் திட்டமிடாத வாழ்க்கையே எல்லாவற்றுக்கும் காரணமென்று தன்னையே நொந்துகொண்டான்.


4.
காலத்தின் விரைவு அவனுக்குப் பெரிதும் ஆச்சரியத்தைத் தந்தது. இவ்வளவு விரைவாகவா காலம் பயணித்து விட்டது என்றிருந்தது. எவ்விதம் இதுவரையில் இதனோட்டத்தினைக் கவனிக்காதிருந்து விட்டோமென்று பட்டது. நனவிடை தோய்தலும், குறுகிய கால எதிர்காலத் திட்டங்களுமாக காலத்தைக் கடத்தியதில் காலம் போனதே தெரியாமல் காலம் கழிந்து விட்டிருந்தது காலங்கடந்துதான் தெரிகிறதா? உடல் வலிவுற்றிருந்த காலத்திலெல்லாம் புரியாமலிருந்த காலத்தின் கதி இப்பொழுது ஓரளவு உடல் தளர்வுறத் தொடங்கியதும்தான் தெரிகிறதா? காலத்துடனான மோதலை இன்னும் கொஞ்சம் கவனத்துடன் கையாண்டிருக்கலாமென்றும் ஓரெண்ணம் ஓடி மறைந்தது. இந்த விடயத்தில் அவனுக்குக் காலம் பற்றிய நியூட்டனின் சிந்தனையே ஐன்ஸ்டைனின் சிந்தனையைவிட சரியாகப் பட்டது. காலம் அவனது கட்டுப்பாட்டிற்குமப்பால் சுயாதீனமாக இருந்ததால்தானே அவனால் அதன் விரைதலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதிருந்து விட்டது. சார்பானதாக இருந்திருக்கும் பட்சத்தில் இதுவரை காலமும் இளமைத் துடிப்புடன் துரித கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் அவன் அகவுலகுடனொத்துக் காலமும் அவன் கட்டுக்குள் இருந்திருக்குமே. வேகத்துடன் காலத்தின் வேகமும் குறைந்தள்ளவா இருந்திருக்க வேண்டும். சுயாதீனமாக அவனது கட்டுக்கப்பால் விரைந்து கொண்டிருந்த காலத்தின் விரைவு தொடர்ந்தும் பிரமிப்பினைத் தந்துகொண்டிருந்தது. சார்பான காலமே! சுயாதீனமாகவேன் நீ கழிகின்றாய்? என்று தனக்குள் இவன் கவிதை பாடிக் கொள்வதைப் பார்த்துக் காலத்திற்குக் கூட இவனது கோலம் ஏளனத்தை வரவழைத்திருக்க வேண்டும்? இதுதான் காலம்; காலத்தின் கூத்து; எல்லாம் காலமென்று பட்டது..

[ - யாவும் கற்பனை -]

****** ******* ******

கேசவனின் சிறுகதை எனக்குப் பல்வகையான நினைவுகளை ஏற்படுத்தியது. அண்மையில் 'யங்'கும் 'புளோரி' வீதிகளின் சந்திப்புக்கண்மையில் அமைந்திருந்து 'தொராண்டோவின் பிரதான பொதுசன் நூலகப் பிரிவுக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது சந்தித்த சோமாலிய மனிதனான முகமத் பற்றிய நினைவுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவனுடான உரையாடலினைச் சிறிது விபரிப்பதன் மூலம் அவனைப் பற்றியதொரு சரியான பிம்பத்தினைப் புலப்படுத்தலாம்.

நூலகத்தின் வாசலுக்கு முன்பாக, நீண்டு சென்று கொண்டிருந்த உலகத்துப் பெருஞ்சாலையான 'யங்' வீதியில் அவன் நின்றிந்தான். என்னைக் கண்டதும் சிறிது உற்றுப் பார்த்தான். பின் அவனது மொழியில் எதையோ கூறினான். அவன் கூறியதிலிருந்து அவன் தன் மொழியில் என்னை நோக்கிக் கூறிய முகமனாக அவனது சொற்கள் பட்டன. நான் 'திருதிரு'வென விழிப்பதைக் கண்டதும் ஆங்கிலத்தில் "மன்னிக்கவும். உன்னைப் பார்த்தால் என் நாட்டவனைப் போலிருந்தது. அதுதான் என் மொழியிலேயே உரையாடி விட்டேன்"

நான்: "பரவாயில்லை. அவ்விதம்தான் பலர் என்னைப் பார்த்துச் சோமாலியனாக எண்ணி உரையாடலைத் தொடங்கி விடுகிறார்கள்.."

அவன்: "சகோதரனே! என பெயர் முகமட். இந்த மண்ணில் கடந்த் இருபது வருடங்களாக இருந்து வருகிறேன். டொராண்டோப் பல்கலைக் கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமானி பட்டம் பெற்றவன். சில வருடங்களின் முன்னர்வரை அமெரிக்க நிறுவனமொன்றில் தகவல் தொழில்நுட்பதுறையில் ஆலோசகனாகப் பணி புரிந்தவன். அந்த வேலை போனதும் ஒரு சில மாதங்கள்
மனப்பாதிப்பேற்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் என் மனைவிக்கும் எனக்குமிடையில் தேவையற்ற பிரச்சினைகள் வெடித்தன. இன்று அவளும், பிள்ளைகளும் என்னை விட்டுத் தனியாகப் பிரிந்து வாழுகின்றார்கள். அது மேலும் என்னைப் பாதித்து விட்டது. என்னால் எதனையுமே உற்சகமாக செய்ய முடியவில்லை. மருந்தின் துணையுடன் வாழ்க்கை தொடருகிறது.."

அவனது தோற்றம் வீடற்று, வீதிகள்தோறும் அலைந்து திரியும் மனிதரொருவனை ஒத்திருந்தது.

முகமட்: "நான் இங்கு வருவதற்கு முன்னர் பல வருடங்கள் மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் பலவருடங்கள் வேலை பார்த்தேன். அப்பொழுது எவ்வளவு மாதச் சம்பளம் உழைத்தேன் தெரியுமா?"

நான்: "நிச்சமாக நிறைய உழைத்திருப்பாய் என்பதுமட்டும் புரிகிறது."

முகமட்: "மாதம் நான்காயிரம் அமெரிக்க டாலர்கள் வரையில் உழைத்தேன். என் சகோதரனை அமெரிக்காவுக்கு அனுப்பிப் படிக்க வைத்தேன். அவன் இப்பொழுது அமெரிக்காவில் நல்ல வேலையிலிருக்கிறான். இதுவரையில் என் குடும்பம், மனைவி, பிள்ளைகளென்று உழைத்திருந்தேன். ஆனால் வருத்தமென்று வந்ததும் வெளியில கலைத்து விட்டார்கள் பார்த்தியா? அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்த நாட்டுச் சமூக அமைப்பில் இதைத்தவிர வேறு வழியேதிருப்பதாகவும் தெரியவில்லை.

சிறிது நேரம் மெளனமாகவிருந்தான். பின் தொடர்ந்தான்: "சகோதரனே! உன்னிடம் ஐந்து டாலர்கள் இருந்தால் கொடுத்துதவுவாயா? மருந்து வாங்குவதற்குப் பணம் சிறிது குறைகிறது."

அவன் சமூக உதவிப் பணமெடுக்கலாம் தானே. மருந்துகளையும் இலவசமாகப் பெறலாம்தானே. ஏன் செய்யவில்லை என்று நான் கேட்கவில்லை. சிந்தனையோடிய என் முகத்தைக் கண்டதும் தன் 'பேர்ஸ்'சைத் திறந்து தொரண்டோ பல்கலைக் கழகத்தில் படித்ததற்கடையாளமான மாணவ அடையாள அட்டையினை எடுத்துக் காண்பித்தான்.

அவனிடம் ஐந்து டாலர்களை எடுத்துக் கொடுத்தேன். "சகோதரனே, உனது வாழ்க்கை நன்றாக விளங்க இந்த அண்ணனின் மனப்பூர்வமான வாழ்த்துகள். என்னால் செய்யக் கூடியது இது மட்டுமே" என்று கூறிவிட்டுப் பிரிந்து, டொராண்டோ மாநகரின் மூன்றரை மில்லியன் மக்கள் திரளிலொருவனாக மறைந்தேன்.

சிந்தனை கேசவனின் சிறுகதை மீது திரும்பியது.சோமாலிய அண்ணனென்றாலென்ன, தமிழ் அண்ணனென்றாலென்ன ,அண்ணனென்றதொரு காரணத்திற்காக ,அண்ணன் மீதான எதிர்பார்ப்பென்ற விடயத்தில்மட்டும் அவ்வளவு வேறுபாடேதுமிருப்பதாகத் தெரியவில்லை. நல்லாயிருக்கிற ஒருவர் தன்னால் முடிந்த அளவில் உதவி செய்வது நல்ல விடயம், நல்லாயிருக்கிறரோ இல்லையோ அண்ணனென்ற காரணத்திற்காக எப்பொழுதுமே அண்ணனின் கடமைகளென்றதொரு எதிர்பார்ப்பில் வாழ்வதும், அவை சரியாக நிறைவேறாதவிடத்து முகங்களை நீட்டுவதும் மாறவேண்டுமானால் ..... இந்தக் கதையில் கருணாகரனது வாழ்வினைப் பார்த்தால் பொதுவாக நிலவும் நம்மவரது சமுதாய அளவு கோல்களின்படி அவன் எதோ பெரிதாகச் செய்யாததுமாதிரித்தான் தெரியும். ஆனால் அவன் செய்த அந்தச் சாதாரண விடயங்களையே பட்டியலிட்டுப் பார்த்தால்....

புலம்பெயர்ந்ததிலிருந்து எவ்விதமாவது தனது குடும்பத்தவர்களை வெளியாலை அழைத்துவரவேண்டுமென்று முயன்று அழைத்து வந்திருக்கின்றான். அவ்விதம் அழைத்த பணமே அவனுக்கு ஒன்பதினாயிரம் டாலர்கள் வரையில் செலவினைத் தந்திருக்கின்றது. அவர்கள் வரும் வரையில் முடிந்த அளவுக்கு உதவியிருக்கின்றான். அவ்விதம் அவன் செலவழித்த பணம் மட்டும் ஐயாயிரத்திலிருந்து பத்தாயிரம் டாலர்கள் வரையில் செலவ்ழிந்திருக்கும். சகோதரி விடயத்தில் சேமிக்க வேண்டிய பணத்தில் முப்பதினாயிரம் டாலர்கள வரையில் இழந்திருக்கின்றான். அவனது குடும்பத்தவர் வந்தபிறகாவது அவனது தாயாரைத் தன்னுடன் அவனது சகோதரி வைத்திருந்திருக்கலாம். வாடகையைப் பங்கிட்டுக் கொள்வதற்காக அவனுடன் தள்ளி விட்டார்கள். விளைவு... அவன் நண்பர்களுடன் வாங்கிய வீட்டில் தங்கியிருப்பதன் மூலம் சேமித்திருக்க வேண்டிய பணம் , மீண்டும் முப்பதினாயிரம் டாலர்கள் வரையில் செலவு. பின்னர் வீட்டையும் இழக்கின்றான். அந்தச் சமயத்தில் அவனது குடும்பத்தவர்கள் அனைவரும் அதனைப் பொறுப்பெடுத்து, ஆளூக்காள் தனித்தனியாகச் செலுத்திக் கொண்டிருந்த வாடகைப் பணத்தின் மூலம், காப்பாற்றியிருக்கலாம். வேண்டுமானால் வீட்டை அவர்கள் பேரிலும் மாற்றியிருக்கலாம். அவ்விதம் செய்திருந்தால் .. பின்னர் வீட்டு விலைகள் கூறும்பொழுது பெரிய இலாபத்தை அடைந்திருக்க முடியும். பிறகென்ன நடந்தது... பல வருடங்களின் பின்னர் வாகனமொன்றினை மாற்யும்போது பத்தாயிரம் டாலர்கள் வரையில் இழப்பதைப் பற்றிச் சிறிதுக் கவலைப்படாத அவனது சகோதரனுக்கு, அண்ணனுக்குத் தன கடனட்டையில் எழுநூறு டாலர்களுக்குக் கணனியொன்றை வாங்கிக் கொடுக்க முடியாமலிருக்கிறது. அண்ணன் மாதக் கட்டணத்தைக் கட்டத்தவறிவிட்டால், எங்கே அவனைப் போலவே தனது 'கிரடிட்'டும் பழுதாகிப் போய் விடுமோவென்ற கவலை அவனுக்கு. ஆனால் அண்ணனாகப் பிறந்து விட்டதொரு காரணத்தால் இன்னும் அதிகமாகக் கருணாகரனிடமிருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கத்தான் போகின்றார்கள் 'தாய் மாமன்' என்ற் பெயரில். அங்கும் சடங்குகள் , சம்பிரதாயங்களை வெறுக்கும் அவனால் நிச்சயமாக அவர்களது ஆசைகளை, அபிலாசைகளைத் தீர்த்து வைக்க முடியுமா? அவை கருணாகரனின் பொருளியல் நிலை சீரடைவதைப் பொறுத்திருக்கிறது. ஆனால் அவனது பொருளியல் நிலை எதுவோ, அவன் மீதான எதிர்பார்ப்புகள் தொடரத்தான் செய்யும். அவற்றையும் உள்ளடக்கி விரிவான நாவலொன்றையே எழுத முடியும். ஊரில் நிலவும் சமூகநிலை வித்தியாசமானது. பெண்கள் இங்குபோல் தமது சொந்தக் கால்களில் நிற்கும் நிலை இன்னும் அங்கில்லை. அத்துடன் நடைபெறும் போர்க்கால நிலைமை வேறு. ஆனால் இங்குள்ள நிலை வேறானது. எனக்குத் தெரிந்து நன்கு படித்த கணவன்மார் பலர் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும்போது, ஊரில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த மனைவிமார் பலர் நல்ல ஊதியத்துடன் கூடிய அரசாங்க வேலைகளில் பணிபுரிகின்றார்கள். ஆணுக்கு நிகராக வேலை செய்யும் வசதிகள் இங்குள்ளன. இருந்தும் எதற்காக அண்ணன் , அண்ணனென்று இன்னும் அண்ணன்மாரை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். குடும்பத்திற்காக உழைத்த பல அண்ணன்மாரைத் தொடர்ந்தும் பலவேறு சடங்குகளுக்காக ஏன் எதிர்பார்க்கின்றார்கள்? குடும்பத்திற்காக உழைத்துழைத்து ஒட்டாண்டியாகப் போன் அண்ணன்மார் பலரைப் பார்த்திருக்கின்றேன். உதவி பெற்றவர்களெல்லாரும் நல்ல நிலையில் வீடு, வாசலென்றிருக்கும்பொழுது பல அண்ணன்மார் இன்னும் தொடர்மாடிக் கட்டடங்களில், பலவேறு கடன் சுமைகளுக்குள் மூழ்கி வாழ்வதைப் பார்த்திருக்கின்றேன்.

புலம்பெயர்ந்தால் மட்டும் போதுமா? பெண்கள் ஆணுக்கு நிகராக உண்மையில் வாழவேண்டுமானால் தன்னம்பிக்கையுடன் , உறுதியுடன், உறசாகத்துடன் வாழ்வை எதிர்நோக்கப் பழக வேண்டும். தேவையற்ற சடங்குகள், சம்பிரதாயங்களைத் தூக்கியெறியும் துணிவுடன் வாழ வேண்டும். சீதனம் கேட்கிற ஆண்களை ஒதுக்கி வைக்கிற மனப்பக்குவத்துடன் வாழ முயலவேண்டும். சீதனமில்லாமல் காதல் திருமணம் முடித்த படித்து நல்ல உத்தியோகத்திலுள்ள பெண்கள் பலர் பின்னர் காலப்போக்கில் அவ்விதம் அவர்களை மணம் முடித்த ஆணகள் ஏதோ பெரிய தியாகத்தைச் செய்து விட்டது போன்றதொரு தாழ்வு மனப்பான்மையில் வாழ்வதைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் எதற்காக அவ்விதம் கூனிக்குறுகி வாழவேண்டும்? இந்த விடயத்தில் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

'புலம் பெயர்ந்தவர்தம்
புலன் பெயர்வதுதான்
எக்காலம்?' - காலவெளிச் சித்தர் -


ngiri2704@rogers.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner