இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2010  இதழ் 129  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!

ஆஞ்செலா தனிமையில் இருந்தபோது...
பஸ்க்கால் மெரிகோ
தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணாவரவேற்பறையில் ஒரு பெரிய மேசையின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். கடந்தபல வருடங்களாக எதுவுமே அவள் விரும்பினமாதிரி நடப்பதில்லை என்பது உண்மைதான், எனினும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சூழல் அவளை என்னவோ செய்தது. இத்தனைக்கும் கல்லறையிலிருந்து வீட்டிற்குத் திரும்புகிற தருணத்தைப்போல கொடுமையானது வேறில்லையென்று ஓயாமல் பலரும் கூறியிருக்கிறார்கள். அவளைப்பொறுத்தவரை எல்லாமே ஒழுங்காகத்தான் நடக்கிறது. தேவாலயம் நிறைந்திருந்தது. கல்லறையிலும் வந்திருந்த கிராம மக்கள் அனைவரையும் ஒருவர் பாக்கியின்றி கட்டிஅணைத்து, அவர்களுடைய ஆறுதலை ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. கிழம் திபூகூட வந்திருந்தாளே! அவளைக் கடைசியாகச் சந்தித்தது குறைந்தது ஒருவருடம் இருக்குமா? இருக்கலாம், எமிலி மர்த்தேன் சவ அடக்கத்தின்போது பார்த்தது. எமிலி மர்த்தேன் சவ அடக்கம் மட்டும்தானா? வேறெதுவும் நடக்கவில்லை? நினவிலில்லை. மாறாக இன்றைக்கு யார் யாரெல்லாம் கல்லறைக்கு வந்திருந்தார்களென்று சொல்ல முடியும். உதாரணமாக ஆந்தரே, நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நடனத்தின்போது, இவளை உதாசீனப்படுத்தியவர். பாப்திஸ்த் இவளுடைய வாழ்க்கையில் குறுக்கிடுவதற்கு முன்பு நடந்த சம்பவம். பாப்திஸ்த்! அவருடைய நீலக் கண்களும், பூபோட்ட சட்டைகளும், வாயிலிருக்கும் ரொம்பப காலத்திய புகைபைப்பும்; பைப் அவருடைய தகப்பனுடையது, அதையும் தகப்பனே விரும்பி மகனிடம் கொடுத்ததாக பெருமைவேறு... அவளுக்கு இன்றைக்குக் கசப்பினைத் தந்த அனுபவமென்று சொன்னால் ழெர்மேன் ரிஷார் என்பவளை கல்லறையிலிருந்து புறப்படும் நேரத்தில் நேருக்கு நேராக பார்க்க நேர்ந்தது. அவளுக்கு அறுபது வயது, இந்த வயதிலும் தேவடியா மாதிரி இருக்கிறாள்.. ம் அப்படித்தானே இருந்தாள்.

அஞ்செலா எழுந்தாள். எல்லாம் முடிந்தது. வீட்டில் மரணச் சுவடே கூடாது. தொலைத்து தலைமுழுகவேண்டும். முதலில் மெழுகு வர்த்திகள், பிறகு கட்டில் நெடுக ஆளுக்கேற்ப போட்டிருந்த நாற்காலிகள். ஒழித்துமுடிந்ததும் ஒரு முறை பெருக்கினால் தீர்ந்தது. திரும்பி நடந்தபோது சட்டென்று பார்வை தோட்டத்தின் பக்கம் சென்றது. ஆமாம், இதிலென்ன சந்தேகம்? எப்படி அவர் அங்கிருக்கமுடியும்? இருந்தால் அநேகமாக விதைகள் தூவிய பாத்தியில் குனிந்தபடியிருப்பார்- காரட் ஒழுங்காக முளைத்துவருகிறதா எனப் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்ப்பதும் அநேகமாக அன்றைக்கு மூன்றாவது முறையாக இருக்கும். இருக்கமாட்டாரெனத் தெரிந்தும் வில்லோ மரமிருக்கும் திசைநோக்கியும், ஒருவேளை ஆப்பிள் மரத்தின்கீழ், ஏன் கூடையில் பழங்களை பொறுக்கிபோட்டபடி வலம் வரக்கூடாதென்றெண்ணி அந்தப் பக்கமாகக்கூட பார்வை சென்றது. ஒரிரவு திடீரென்று கண்விழித்தவர், வயிற்றுப்புண் மீண்டும் உபத்திரவம் கொடுக்கிறதென்றார், அதற்குப் பிறகு மளமளவென்று எல்லாம் முடிந்தது. இத்தனைக்கும் ஒரு சில ஆண்டுகளாகவே அதற்குப் பழகியிருந்தார். அன்றைய தினம் மருத்துவரை அழைக்க, அவரும் வந்திருந்தார். பொதுவாகவே அந்த ஆளுக்கு நோயாளிகளைப் பதட்டப்படவைக்கும் குணம். அவர் வருவதற்கு முன்பாகவே பாப்திஸ்த் இப்போது பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தார்... மூன்று வாரங்கள் கடந்திருந்த நிலையில் ஆஞ்செலாவிடம் எக்காரணத்தை முன்னிட்டும் மருத்துவமனையில் சேர்க்கமாட்டேன் என சத்தியம் பண்ணிக்கொடு என்று கேட்டு வாங்கிக்கொண்டார். மருத்துவரை மீண்டும் வீட்டுக்கு அழைக்கவேண்டியிருந்தது. அவருக்கு ஒன்று புரியவில்லை. எதுவும் நடக்கக்கூடாதென்பதுபோல வலியினாற் கட்டிலில் துடித்துக்கொண்டிருந்தபோதும் பாப்திஸ்த் தனக்குச் சரியாகிவிட்டதென்றார். மறுநாள், எல்லாவற்றையும் மறந்துபோனார்கள். அவளோடு தனியாக இருந்தபோது தனது உயிர் மருத்துவமனையிற் போகக்கூடாதென்றார். தமக்கு முடிவு நெருங்குகிறதென்பதை அறிந்தவர் போல நாட்களை எண்ணிணார். இளம் வயதினரெல்லாம் இறக்கிறபோது தாம் மட்டும் எவ்வளவு நாட்களுக்கு உயிர்வாழ்வதாம், அவருக்குத் தெரியாதா என்ன? ஆனால் அவர் செயிண்ட் -ஜான் தினம்வரை உயிர்வாழவேண்டுமென நினைத்தார். எனினும் மனதிலுள்ள ஆசையைக் வெளிப்படுத்தியவரல்ல. ஆஞ்செலாவுக்கு அவர் மனது விளங்கியிருந்தது, அவரும் அது போதுமென நினைத்தார். அவ்வருடம் செயிண்ட்- ஜான் தினத்தைப் பார்க்க அவருக்குக் கொடுப்பினையில்லை. மாலை, திருச்சபை குரு வீட்டிற்கு வந்தார். அன்றுகாலைதான் பாப்திஸ்த் இறந்திருந்தார். அவர் சரீரத்தை இரண்டாக வகுந்திருந்த சனியன் ஜெயித்திருந்தது. எதிர்பார்த்ததுதான்.

செசில் வந்திருந்திருந்தாள். அவள் வீட்டுக்குள் எப்படி வந்தாளென்பது ஆச்சரியமாக இருந்தது. கல்லறையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி உடைமாற்றிக்கொண்டு நேரே இவளைத் தேடிக்கொண்டு வந்திருந்தாள். இவளுக்கு ஏதேனும் உதவித் தேவைப்படுமென நினைத்திருக்கலாம். அவளுக்கு யாருடைய உதவியும் வேண்டியதில்லை. அவளை அமரும்படிக் கேட்டுக்கொண்டாள். இருவருமாக உரையாடினார்கள். கடைசியில் செசில் பேசினாள். நடந்து முடிந்த சவ அடக்கம்பற்றி - பேசித்தானே ஆகவேண்டும்; வந்திருந்தவர்களில் ஒரு சிலர் கண்ணீர்சிந்தியது, பொதுவாக துக்க சம்பவத்தில் கலந்துகொண்ட அனைவருமே வருந்தினார்கள் என்றாள். அஞ்செலா அவள் கூறியது எதையும் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.

பாப்திஸ்தும் அவளும் செயின்ட் - கிராஸ் கிராமத்திற்கு வெளியே காலெடுத்து வைத்தவர்களல்ல. அது குறித்த வருத்தம் அவளுக்கிருந்தது. லூர்துக்குப்போகும் விருப்பம் நிறைய. லூர்து தேவாலயத்தில் நடக்கும் சமய ஊர்வலங்களைப் தொலைக்காட்சிகளிற் கண்டு திருப்திபட்டதோடு சரி.

கணவன் பாப்திஸ்த்தை மிகவும் நேசித்தாள். ஏறக்குறையை ஆரம்பத்திலிருந்தேயென சொல்லவேண்டும். மணமுடித்த முதல் வருடம் அவனுடன் வயலுக்குச் சென்று ஒத்தாசையாக இருந்திருக்கிறாள். அதற்கு பிறகு அவளுக்கு முடியவில்லை. திட்டமான சூட்டுபதத்துடன் அவனுக்கு எந்நேரமும் காப்பி வேண்டும், கொதிக்கக்கூடாது. தாயாராகும் காப்பியைக் கண்காணித்தபடி காத்திருந்தாள், மூக்கின் அவசியமின்றி ஓரப்பார்வையே அதற்குப் போதுமானதாக இருந்தது. மணிக்கூடிற்கு வேலையில்லை. கோழிகளுக்கு தீனி வைக்கும் நேரமெது? உணவை மேசைக்குக் கொண்டுவரவேண்டிய நேரமெது? என்று அவளுக்குத் தெரியும். பாப்திஸ்த் வீட்டிற்கு வரும் நேரம் கூட துல்லியமாக அறிவாள். வீட்டிற்கு செசில் வருவதும், அவளுக்குத் துணையாக இருப்பதும் நடந்தது. செசில் வருகிறபோது கையோடு பின்னல்வேலைகளைக் கொண்டுவருவாள், ஊர்க்கதைகளும் அவளோடு சேர்ந்து ஏராளமாக வரும். அப்படியொருநாளில்தான் உரையாடலுக்கிடையில் திராட்சைப் பண்ணையில் பாப்திஸ்த், ழெர்மென் ரிஷார்டோடு பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதாகக் கூறினாள். அடுத்துவந்த மாதங்களில் ஜாடைமாடையாக வேறு சிலகதைகளும் சேர்ந்துகொண்டன. அதன் பிறகு ஒன்றுமில்லை, அவள் வாயிலிருந்து எதுவுமில்லை. சொல்லாவிட்டால் என்ன? ஆஞ்செலுக்கு நடப்பதெதுவும் தெரியாதா? தெரியும் இருந்தாலும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை, மெல்ல மெல்ல எல்லாம் பழகிப்போனது. அதுபற்றிய எந்த சிந்தனையும் இல்லாமலேயே பாப்திஸ்த்திடமோ அயல் மனிதர்களிடமோ அதனைப் பேசுவதில்லையெனத் தீர்மானித்தாள். அதுதான் அவளுக்கும் மரியாதை. இந்நிலைமை பாப்திஸ்த் கட்டிலில் விழுந்து பிறகு எழமுடியாமற்போன காலம்வரை நீடித்தது. ஏறக்குறைய இருபது ஆண்டுகள். அவளுடைய துயரமெல்லாம் தமக்கு 'பிள்ளைகள் இல்லையே' என்பதுதான். அவள் பொய் சொன்னவளல்ல. ழெர்மென் ரிஷாரை அவளுக்குப் பிடிக்காமற்போனதற்கு வேறொரு காரணமும் இருந்தது. அவளுக்கு ஒரு மகன் இருந்தான், தகப்பன் இறந்த கொஞ்சகாலத்தில் பிறந்தவன். இறந்த தகப்பனுக்கு எட்மண்ட் ரிஷார் என்று பேரு, ராட்சசன் மாதிரி கண்களும், நிறைய தலைமுடியுமாகவும் இருப்பான் திடீரென்று படுக்கையில் விழுந்தவன், ஒரு சில கிழமைகளிலேயே இறந்துபோனான். என்னதான் நடந்ததென ஒருவருக்கும் தெரியாது. மகன் ரிஷாரை செயிண்ட்-கிராஸ் கிராமத்து சனங்கள் ஒருவரும் பார்த்ததில்லை. ஆன்ழே (Anger)வில் அவனுடைய அத்தையின் வளர்ப்பில் இருப்பதாக ஊரில் பேச்சு. ஒருநாள் அதாவது பாப்திஸ்த் சுகவீனப்பட்டு கட்டிலில் படுப்பதற்கு முதல் நாள் அவனுடைய அம்மாவைப் பார்க்க வந்திருந்தான். செசிலும் அங்கே இருந்திருக்கிறாள். பின்னே செசில் இல்லாமலா? ஊரில் என்ன நடந்தாலும் அங்கே செசில் இருந்தாகவேண்டுமென்பது ஒரு பிரார்த்தனை. வெளுத்த பெரிய கண்களுடன் பையனைப் பார்க்க மந்தபுத்திக்கொண்டவன்போல இருந்திருக்கிறான். செசில் கூறியதைக்கேட்டு ஆஞ்செலா மனக்குழப்பத்துக்குள்ளானது உண்மை.

செசில் புறப்பட்டுப் போய்விட்டாள். இரவு வந்தது. சமயலறையில் கழுவாமற்கிடந்த பாத்திரங்ளை கழுவி முடித்தாள். சில குவளைகளையும் கழுவ வேண்டியிருந்தது. அவள் காப்பி குடிப்பவளல்ல என்பதால் இனி உபயோகப்படாதென்று தோன்றிய பழைய வெண்மைநிற காப்பிமசினையும் கழுவினாள். அனைத்தையும் சுவரை ஒட்டியிருந்த மேசையின் மேற்தட்டில் வைத்தாள். சிங்க்கின் கீழே காலியான ஜாம் பாட்டில்கள் இருந்தன, அப்புறப்படுத்தினாள். ஜாம் செய்யவேண்டுமென்ற அவசியமில்லையென்கிறபோது அவற்றினால் உபயோகமென்ன? செய்து வைத்திருக்கும் ஜாமையையே சாப்பிட்டு முடித்தால் போதும், நிறைய இருக்கிறது. துடைப்பதெற்கென வைத்திருந்த சிலதுணிகளையும், முக்கால் டப்பி காலியாகியிருந்த எலிமருந்தையும் அப்புறப்படுத்தினாள். இனி அவைகளை குப்பையிற் சேர்க்கவேண்டும். அந்த வீட்டில் கடந்த இருபது ஆண்டுகளாகவே எலிநடமாட்டமென்று எதுவுமில்லை.

nagarathinam.krishna@neuf.fr


 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்