இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செபடம்பர் 2009 இதழ் 117  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை
Mutterpass

- பொ.கருணாகரமூர்த்தி (பெர்லின்) -

முட்டர்பாஸ் என்பது தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகால கண்காணிப்பு மருத்துவரால் வழங்கப்படும் ஒரு ஆவணம். அதில் தாய், சேய்களின் ஆரோக்கியம், நீளம் நிறைமன்ன பௌதீக தகவல்களுடன் அவரின் ஒவ்வொரு பிரசவத்தின்போதும் கவனித்துக்கொண்டமருத்துவர் பெயர், வழங்கப்பட்ட மருந்துகள், , மருத்துவவிபரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும். ஐக்கிய இராட்சியத்தில் அதை Antenatal Book என்பர்[முட்டர்பாஸ் என்பது தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகால கண்காணிப்பு மருத்துவரால் வழங்கப்படும் ஒரு ஆவணம். அதில் தாய், சேய்களின் ஆரோக்கியம், நீளம் நிறைமன்ன பௌதீக தகவல்களுடன் அவரின் ஒவ்வொரு பிரசவத்தின்போதும் கவனித்துக்கொண்டமருத்துவர் பெயர், வழங்கப்பட்ட மருந்துகள், , மருத்துவவிபரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும். ஐக்கிய இராட்சியத்தில் அதை
Antenatal Book என்பர்.]

பிங்கலை வெகு இயல்பாகத்தான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். ஆனந்தசிவன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் பேச்சை நிறுத்திவிட்டு வெறும் "ம்" களை மட்டும் கொட்டினாள். அவனுக்கு யாரும் பத்திரிகை படித்துக்கொண்டிருக்கையில் 'பேப்பரில என்ன விஷேசம்' ன்று கேட்பதோ, தொலைபேசிகொண்டிருக்கையில் 'போனில யாரு' என்று விசாரிப்பதோ பிடிப்பதில்லை. அவனும் அப்படி எவரையும் விசாரிக்கமாட்டான். வெகு இங்கிதம். பிங்கலை இன்னுமிருந்த "ம்" களையும் கொட்டிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டு அவனைத் தவிர்த்துக்கொண்டு உள்ளே போன போதுதான் 'அவளைக்கூப்பிட்டு அது யாரென்று விசாரிக்கலாமா' என்றொரு மின் யோசனை வந்தது. பின் அது அனாவசியமாகப்படவும் விட்டுவிட்டான். உள்ளே போன பிங்கலை குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த அவனுடைய சீனி சேர்க்காத பழச்சாற்றை அவனுக்கு பிடித்தமான கண்ணாடிக்குவளையுள் ஊற்றி பெரிய மனுஷிபோல எடுத்து வந்து அவனுக்குத் தந்துவிட்டு வதியும் அறைக்குள்ளேயே மைந்திக்கொண்டு நின்றாள். "தாங்ஸ் செல்லம்" என்றபடி வாங்கி ஒரு மிடறு விழுங்கிவிட்டு அவள் கண்களை நேர் கொண்டபோது அவளே தயக்கத்தோடு சொன்னாள்: " அது அம்மா அப்பா "
இவன் அக்கறைப்படாதவன்போல இருக்க முயற்சித்தான்.

"அவவுக்கு Mutterpass வேணுமாம் " என்றாள்.

ஓடிப்போற அவசரத்தில மகிமா அதை எடுத்துவைக்க மறந்துவிட்டாள். அதுக்கொரு அவசியம்வரும் என்கிற யோசனையும் அப்போ வந்திருக்காது. அவனுக்கு துருப்பிடிச்ச ஊசி ஒன்றைக் கன்னாமண்டையில் இன்னொருதரம் சொருகுவது போலிருந்தது.

மகிமாவிடம் அவனுக்கு நெருக்கம் உண்டானபோது அவளது முன்காதல் அனுபவங்கள்பற்றி அவன் எதுவும் உசாவவில்லை. காதலும் காமமும் அவரவர் அந்தரங்க உணர்வுகள். நாங்கள் சைட் அடிக்கலாம், சுழட்டலாம் அதெல்லாம் அவர்களுக்கு ஆகாதா? அவளும் எதைப்பற்றியும் சொல்லவுமில்லை. ஏதாவது விவகாரங்கள் இருந்து அவள் அதைச்சொல்லாமல் விட்டிருந்தாலும் அவனுக்கு அதுபொருட்டுமல்ல.

ஆனந்தசிவன் தான் காதலிப்பதை வீட்டில் தெரிவித்தபோது யாரும் கெம்பிக்குதிக்கவில்லை. அவனது மூத்தசகோதரன் மட்டும் அவனைத் தனிமையில் அழைத்து புத்திமதி சொல்வதுபோல மெல்லிய குரலில் சொன்னான்: " உடல்ல சூடு மிஞ்சின குமரியள்தான்டா காதல் மயிரெண்டு அலையிறதும், பெடியளைக் கவுழ்க்கிறதும். உன்னையும் சிறுக்கி யாரோ மயக்கிப்போட்டாள்....... மாட்டியிட்டாய். கவனமாயிரு உப்பிடியான கேஸ¤கள் ஒண்டும் குடும்பங்களுக்குச் சரிப்பட்டுவராது. கழட்டிவிட்டிட்டு திருநெல்வெலி பாங்கற்றை பெட்டையைக்கட்டு, மனுஷன் வத்தளையில பங்களாகணக்கா வீடொன்றும் வைச்சிருக்கு."

"இஞ்சை ஒருத்தரும் பெண்டுகள் கொண்டாறதில சுகம்காணத் தவிச்சிருக்கேல்ல."

தமையனாருக்கு அவன் தன்னைத்தான் குத்துறான் என்றது புரிந்தும் பொறுமைகாத்துச் சொன்னான்: " கன்னிக் கிறக்கத்தில பேச்சுக்கள் இப்ப இப்படித்தான் வரும் அப்பு, அதோட இப்ப அட்வைஸ்பண்றவையும் அடிமுட்டாள்களாய்த்தெரியும்........ இந்தச் சுதிகள் எல்லாம் முழங்கால் மூட்டுக்குங்கீழ வடிஞ்சு சேறு உழக்கயில வரும்பார் ஒரு ஞானப்பிரகாசம்........ அதிலதான் எல்லாம் ஓடிவெளிக்கும். நாம இல்லாத சனத்திட்ட வற்புறுத்தவோ தெண்டிக்கவோ இல்லை. இருக்கிறவையிட்ட வாங்கிறது அப்பிடியொண்டும் மா......பாதகமில்லை. அப்ப பாங்கர் சொத்தை மகளுக்குக்கொடுக்காமல் என்ன திருஞானசம்பந்தர் ஆதீனத்துக்கு எழுதிவிடுறதே............. நடைமுறைக்கேற்றபடி கொள்கைகளைத் தளர்த்தி அனுசரித்துப் போறவன்தான் விவேகி."

குடும்பத்தில் மற்றவர்களும் காரணங்களை வைத்துக்கொண்டோ, இல்லாமலோ இந்தச்சம்பந்தம் வேண்டாமென்றே நினைத்ததால் பெரிதாக அவன் முடிவைப்பாராட்டி வரவேற்கவில்லை. அண்ணன் சொன்ன அனுசரித்து வாழுங்கலை யையும் ஏற்கமுடியவில்லை. மகிமாவை ஏதுங்காரணிகளால் இழந்துபோனால் தான் வாழ்வு முழுவதும் வெங்காயத்தூசைப்போல் அடிபட்டு ஒதுங்கிக்கொண்டே இருக்கவேணும்போல் தோன்றவும் துணிந்து மகிமாவைத்தான் தாலிகட்டிவந்து இறக்கினான் ஆனந்தசிவன்.

இப்போ மனது ஒருகணம் சினந்தாலும் மறுபடிம் அது ஞானச்சித்தனைப்போலாகிவிடுவது அவனுக்கும் வியப்பாக இருக்கிறது. வாழ்புலச்சமூகத்தில் இதெல்லாம் இயல்பாகிவிட்டதைப் பார்த்த பட்டறிவோ, ரௌத்ரம் கொண்டுதான் என்ன கிழித்துவிடப்போகிறேன் என்கிற யதார்த்தமோ அவனுக்கு ரௌத்ரம் வரவில்லை, அப்படி வந்ததாக நடிக்கவும் அவனுக்கும் முடியவில்லை. மரபுக்கண்ணாடிகளைக் கழட்டிவைத்துவிட்டு உலகத்தைப் பார்ப்பதுபற்றித்தான் இப்போது சிந்திக்கிறான்.

நாம் ஒருவரை வெறுத்தால் அதேவிதமாக அவரும் வெறுப்பைத் திருப்பி உமிழும்போது அதைத்தாங்குவது கஷ்டம். அவர்கள் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் பரஸ்பரம் ஒருவரை வெறுக்கவோ ஒதுக்கவோ காரணங்கள் இருக்கவில்லை. வெகு இயல்பாகவே நகர்ந்தன நாட்கள். 'ஒருவர் பரிசளித்த முத்தையோ, வைரத்தையோ திருப்பித்தந்துவிடுமளவுக்கு வாழ்க்கையில் நான் எவரையும் வெறுப்பதில்லை' என்றாராம் Zsa Zsa Gabor என்கிற ஹங்கேரியநாட்டு நடிகை.

மகிமா அவனுக்கு கொடுத்த முத்துக்களில் எதைவைத்திருப்பது, எதைத்திருப்பிக்கொடுப்பது? தங்கள் திருமணப்புகைப்பட அல்பத்தின் முதல்பக்கத்தில் 'இனிமேல் சேர்ந்துவாழ்வது சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு இருவரும் வரும்வரை சேர்ந்திருப்பதற்காய் இன்று இணைந்துள்ளோம்' என்று எழுதிவைக்க உந்திய உள்ளுணர்வை மீட்கையில் உடல் சிலிர்த்தது. யார் யாருடன் என்னனென்ன ஒப்பந்தங்கள்தான் செய்துகொண்டாலும் தருணத்தில் தற்காரியவாதியாயிருக்கவும் முடிவெடுக்கவும் வாழ்வின் நிகழ்வுகள் சூழ்தகவுகள் நிர்ப்பந்திக்கும். அப்போது ஒருவரின் விருப்பு வெறுப்புக்களை இன்னொருவர் நிறைவேற்றிக்கொண்டு வாழ்வது
அசாத்தியமாகிறது. அப்பாவை 'குடிக்காதையுங்கோ குடிக்காதையுங்கோ' என்று சாகிறவரையில்தானே அம்மா கெஞ்சினார். அவரால் < என்றாவது அதை விட்டுவிடத்தான் முடிந்ததா?

" எனக்கும் நாளைக்கு Duisberg வரையில் போகவேண்டிய ஒரு ஒபிஸ் அலுவல் இருக்குது. வேணுமென்றால் நாம வழியில அதைக் கொடுத்திடலாம்" என்றான். பிங்கலைக்கு ஆச்சர்யம் தாளவில்லை. பெரிய கண்களை மலர்த்தி பல்லில் பொருத்தியிருந்த பிறேஸ் முழுவதுந்தெரியும்படியாக வாயைத்திறந்து வைத்திருந்தாள் ஒரு நிமிடம். அது ஈஸ்டர் விடுமுறைக்காலம். உடனே " Appa Kommen wir auch mit? " (நாங்களும் வருகிறோமா?) என்றாள்.

" No problem " தோள்களைக் குலுக்கினான். பிங்கலை உள்ளே ஓடிப்போய் ஏதோ வரைந்துகொண்டிருந்த தங்கை சாதனாவை (10 வயது) உலுப்பினாள்.

" Weisst du was?" (சேதி தெரியுமா உனக்கு?)

" Wir gehen zu Mama" (நாங்கள் அம்மாவிட்ட போகிறோம்")

" Unglaublich......... machts du kein Witz, wann denn? " (நம்பமுடியவில்லை........... நீ ஒண்ணும் தமாஷ் பண்ணலையே , எப்போ?)

"Morgen" (நாளைக்கு) பிங்கலைக்கும் சாதனாவுக்கும் இரண்டு அகவைகள்தான் வித்தியாசம். பிங்கலை பெரிய மனுஷியைப்போல சாதனா அவ்வப்போது தரும் அலுப்புக்களைத் தாங்கிகொள்வாள்.

மறுநாள் அவர்கள் புறப்படுகையில்--
''உன் kindersitz ஐ (child safety seat) எடுத்து வையடி'' என்றாள் பிங்கலை.

"நான் 120 செண்டிமீட்டர் வளந்திட்டன். அது இனித்தேவையில்லை. வேணுமென்றால் வழியிலை போலிசை நிறுத்திக்கேட்டுப்பார்".

"இவளே மாட்டிவிட்டுடுவாள் போல இருக்கு அப்பா"

"சிட்டிக்குள்ள அது ஓகே.....ஆனா இப்போ நாம Auto Bahnல (வேகநெடுஞ்சாலை) போகிறம், நீ அதில இருக்கிறதுதான்டா செல்லம் safety." "அது Auto Bahn வந்தபிறகு பார்ப்பம்"

மகிமாவிடம் இப்படியெல்லாம் வாலாட்டமுடியாது, முதுகு கன்றிப்போகும்.

பெர்லினில் அவர்கள் வீட்டுக்குப் பக்கமாக துருக்கி இஸ்லாமியச் சமூகத்தினரின் செறிவு அதிகம். அங்கே அவர்கள் நவீனமாக ஒரு மசூதி கட்டிகொண்டிருக்கிறார்கள். அதைத்தாண்டுகையில் சாதனா கேட்டாள்.

"அப்பா...... இப்போ 'அல்லா' எங்கே இருப்பர்? "

"ஏன்டா திடீர்ச்சந்தேகம் ? "

"Moschee (மசூதி)தான் இன்னும் கட்டி முடியேல்லையே? "

அவளின் டி.எஸ். லைட் கேம் போயை பிங்கலை எடுத்துத்தான் விளையாடத்தொடங்கவும் சாதனா 'தனக்கும் உடனே அது வேணும்' என்று அலறினாள்.

"ஒரு பன்றி அழுகிறதை முதல் தடவை கேட்கிறன்."

"இங்கே பாருங்கோ அப்பா பிங்கி என்னோட தனகிறா........ என்னையை பன்றி எங்கிறா."

"Doch du hast kein zweifel. " (உனக்கும் அதைப்பற்றிச் சந்தேகம் இல்லை.) "

"நான் ஒன்றும் பன்றி இல்லை. உன்னோட Schwester (தங்கச்சி)."

" Welche denn.... die dicke Dummkopf? " (எந்த தங்கச்சிமா...... குண்டாய் முட்டாளாயிருப்பாளே அவளா?)

ஆனந்தசிவன் இவர்களின் நட்டணை தாங்கமுடியாமல் டி.என்.சேஷகோபாலனின் குறுவட்டுத் தொகுப்பொன்றை இசைக்கவிட்டான். அவளுக்கு அதுவும் பிடிக்கவில்லை.

அவருடைய வேகமான கமகம் ஒன்றை அதேவேகத்துடன் தப்பில்லாமல் ஆனால் வலிச்சத்துடன் பாடிக்காட்டிவிட்டு சாதனா மீண்டும்
" Ist niemand da zum retten uns?" (அய்யோ எங்களைக் காப்பாத்த யாரும் இல்லையா?)

" ஏய் சாது அது அவரோட மியூசிக். அவர் கேட்கட்டும் உனக்கென்ன?"

" எனக்கல்ல காதுக்க அவ்வா(வலி) செய்யுது" இரண்டு காதுகளையும் பொத்தினாள்.

" நீ வேணுமென்டால் ஏன்ட MP3 ப்ளேயரைப் போட்டுக்கேள்"

" பெறவு நீ கத்துவாய் "

" இல்ல சொல்றன்லே "

அதன் சொருகிகளால் காதுகளை அடைத்தபின் கொஞ்சம் அமைதியானாள். பின் சொருகிகளை கழற்றிவிட்டுக்கொண்டு சொன்னாள்:

" மெலானிக்கு ஒரு சூப்பர் ipod ப்ளேயர் கிடைச்சிருக்கு, அதுல ஹ¤ன்டேர்ட் தௌசென்ட் பாட்டு(100,000) வைக்கலாமாம்."

" Es ist tierisch Teuer...(அதெல்லாம் ரொம்ப விலையாயிருக்கும்)."

" அவளோட பயோலொஜிகல் பப்பா அவள் பெர்த்டேக்கு Geshenke (பரிசாய்) கொடுத்தது."

" இரண்டு அப்பாக்களிடமிருந்தும் அவளுக்கு எவ்வளோ Geschenke (பரிசுகள்) தெரியுமோ.... மெலானி இரண்டு அப்பாக்கள் இருக்கும் Glueck (அதிஷ்டக்காரி).''

ஆனந்தசிவன் அதைத் தனக்குள் மீட்டுக் குறுநகைத்தான்.

முன்பெல்லாம் இப்படியான Auto Bahn பயணங்களின்போது குழந்தைகள் நித்திரையானதும் மகிமாவும் தூங்கிவிடமாட்டாள். வாசிக்கும் விளக்கைப்போட்டுக்கொண்டு அவனுக்காக கதைகள் படிப்பாள். தான் பத்திரிகைகளில், இணைவலைகளில் படித்த துணுக்குகள் ஜோக்குகள் என்று சொல்லிகொண்டே வருவாள். அவன் கழுத்து எலும்புகளையும், தோட்பட்டைகளையும் இதமாக நீவிவிடுவாள். நொட்டு நொறுக்கும், கோப்பியும் ஹோர்லிக்ஸ¤மாக கலந்து தந்துகொண்டே இருப்பாள் பயணம் களைப்பில்லாமல் ஒரு இன்பானுபவமாக இருக்கும்.

Braunschweig க்கு பிரிந்துபோகும் கிளையைத்தாண்டிச் செல்கையில் 2மீட்டருக்கும் அதிகமான அகலம்கொண்ட Hummer-H2 என்கிற ஒரு அதியுல்லாச அமெரிக்கன் டிறக்வண்டி அவர்கள் காரை ஒரு உலுப்பு உலுப்பிவிட்டு 200 மைல்வேகத்தில் முன்னேறிச்சென்றது. அது 6 லிட்டர் கொள்ளளவில் 400 குதிரைவலுவான மெஷின் பொருத்தப்பட்ள்ள ஒரு அநியாயச் சக்திவிரையம். பணக்காரநாடுகள் கொழுப்பெடுத்த செல்வந்தர்கள் பாவிக்கும் இத்தகை வண்டிகளை இன்னும் அனுமதித்துக்கொண்டு சுற்றுச்சூழல் பற்றித்தாம் கவலைப்படுவதாகவும் சொல்வது பெரீய பாசாங்கு.

" Wer HUMMER faehrt ist Dummer. " (யார் HUMMER ஓடுகிறானோ அவன் முட்டாள்) என்றாள் பிங்கலை.

" அப்படி யார் சொன்னா? " ஆனந்தசிவன் கேட்டான்.

" Frau. Berg " அது அவளது சூழலியல் ஆசிரியை. அது ஒரு ஆறு மணிநேர ஓட்டம்தான். அன்று வழியில் வாகன நெரிசல் எதுவுமே இருக்கவில்லை. அவர்களுகள் சீக்கிரமே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். அத்தொடர்மாடிவீட்டில் வாசலுக்குச்சற்றுத் தள்ளி காரை நிறுத்திவிட்டு '' அங்கே கனநேரம் நின்று கொஞ்சிக் கொண்டிருக்கப்படாது..... சீக்கிரம் வந்திடோணும்''. அவர்களை எச்சரித்து உள்ளே அனுப்பிவிட்டு சாரதி இருக்கையின் சாய்கையை பின்னே சாய்த்துவிட்டு Judith Hermann இன் கையடக்க 'Moment before Happiness' கதைப்புத்தகத்தை வாசிக்க முயற்சித்தான். கண்கள் வரிகளைத் தொடர்ந்தாலும் அவள் சொல்லும் கதையுடன் கலக்க மறுத்தது மனம். ஒரு மணிநேரம் கழிந்திருக்கும். முன்பென்றால் இதுவரையில் ஐந்தாறு சிகரெட்டுக்களாவது ஊதித்தள்ளியிருப்பான். அதைத்தொடாமலிருக்க மனத்தை பழக்கப்படுத்திவிட்டான். நினைத்தால் ஆகாதது எதுவுமில்லையென்று கொஞ்சம் கர்வமும் அவனுக்கு. அப்போது எடுப்புத்தொலைபேசி உதறியது. பிங்கலை பேசினாள்.

" என்னடா? "

" அம்மா எங்களை இட்லி சாப்பிட்டிட்டு போகச்சொல்றா அப்பா."

" சரி சரி சீக்கிரம். Hagenல ஆன்டி எங்களுக்காகக் காத்திருக்கப்போறா."

" இன்னொரு அரைமணிநேரமாகும்............பரவாயில்லையா அப்பா? "

" சரி....சரி."

"·ப்ளாஸ்க்ல இன்னும் கோப்பி இருக்கு, நீங்க குடிக்கிறீங்களா அப்பா? "

இந்த பெண் என்கிற ஒரு ஜீன் மட்டும் போதும். குழந்தைகள் என்றாலும் அவர்களிடம் எதுவோ ஒன்று கூடியே விடுகிறது.

காரின் கடிகாரம் டிஜிட்டலில் 22:00 மணியாகிவிட்டது என்றது. வானொலியை வைத்துப்பார்த்தான். அதில் கென்யாவின் தேர்தல் செல்லுமா செல்லாதா , அதைத்தொடர்ந்த வன்முறை விவகாரங்களை இரண்டாவது வாரமாக வைத்து அலசிக்கொண்டிருந்தார்கள். மீண்டும் Judith இடமே சரணடைந்தான். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவனது மனம் மாறியது. இரவு Hagen போக வேண்டாமேயென்று பட்டது. என்ன போனால் இன்னொருதரம் துக்கம் விசாரிப்பாள். குமர் குதிர்ற வயதில இவளுக்கு எப்பிடியப்பா மதிமயங்கிச்சு? குறைஎன்ன கண்டாள் உன்னட்ட? உச்சுக்கொட்டுவாள். Kueche Einrichtungs (சமையலறை தளவாடங்கள்) செய்துதாறன், Laminate போட்டுத்தாறனெண்டு அந்த நாய் வீட்டுக்க அலகை நீட்டக்குள்ளயே கதவுக்கு வெளிய போய்விழ அவனை நீ உதைச்சிருந்திருக்கவேணும். உள்ளே எடுத்ததும் உபச்சாரஞ்செய்ததும்....... எல்லாம் உன்ர பிழையுந்தான். குறைகள் சொல்வாள். ஏன் பிள்ளைகள் சாப்பிடவில்லையென்று விடுப்புக்கேட்பாள், குடைவாள். பொய் பேசவராத இவளவை எதையாவது உளறினாலும் உளறலாம். அவர்களை 'அம்மாவிட்டைபோகவில்லை என்று பொய் சொல்லுங்கோ' என்றும் சொல்ல முடியாது.
அவர்கள் காருக்குத் திரும்பியதும் சொன்னான்: "இன்றைக்கு நாங்கள் தங்க Hagen ஆண்டி வீட்டுக்குப் போகவேண்டாம். இங்கேயே திரும்புவம்."

" ஏன் அப்பா?"

" வீட்டுக்கே போயிடலாம் "

" றெஸ்ட் இல்லாமல் உங்களால திரும்பவும் கார் ஓட்டமுடியுமாப்பா? "

" ஓட்டுவேன் "

" சரி. அப்போ ஆன்டிக்குப் போன் பண்ணிச் சொல்லிடுவம் "

சொன்னார்கள்.

பிங்கலையும், சாதனாவும் வீதியைக்கடந்துபோய் காரில் ஏறிக்கொள்வதையும் கார் புறப்பட்டுப்போவதையும் மகிமா தன்வீட்டு கிழக்கு ஜன்னலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது எவருக்கும் தெரியாது. அடுத்த நகரமான Krefeldல் அவனது தொழில் நிமித்தமாக இன்னும் யாரையோ பார்த்து பத்து நிமிடங்கள் பேசியபின்னால் கார் பெர்லினை நோக்கித் திரும்பியது. நூறு கிலோமீட்டர் கடந்து Bielefeld ஐ அண்மிக்கவும் அமைதியான சூழலில் அமைந்திருந்த ஒரு பயணியர் விடுதி அவர்களை மட்டிலும் 'வருக' 'வருக' வென்று அழைப்பதைப்போல் இருக்கவும் காரை அதற்குள் இறக்கினான். அவ்வாடிவீட்டுக்கு இட்டுச்செல்லும் பாதையின் இருமருங்கிலும் வரிசையாக நின்ற Tulpe, Nelken பூமரங்கள் பூத்திருந்தன. இன்னும் சுற்றிலும் செறிவில் Pflaumen, ஆப்பிள்மரங்கள் சூழ்ந்திருக்க ஆடம்பரங்களற்று எளிமையாக இருந்தது விடுதி. வாசலில் ஒரு பக்கம் சிகரெட் தான்வழங்கி (Automat), மறுபக்கம் தொலை பேசிக் கூண்டும், வேகநெடுஞ்சாலையின் பெரிய வரைபடமும் இருந்தன. ஜெர்மனியின் கிழக்குத் திசையிலிருந்து புறப்பட்டு பெர்லினை அவசரத்தில் கொஞ்சிவிட்டு தென்மேற்காக Dortmund , Cologne நோக்கி வளரும் A2 வேகநெடுஞ்சாலையில் எல்லைகளற்ற ஐரோப்பாவின் உதயத்தின்பின் போலந்து, செக்கோசெலவாக்கியா, ஹங்கேரியிலிருந்து ஹொலண்ட், பெல்ஜியம், பிரான்ஸ், நோர்வே, சுவீடன் செல்லும் வாகனங்களின் நெரிசலும், அச்சாலையிலுள்ள வாடிவீடுகளில் கூட்டமும் சற்றே அதிகமாகிவிட்டது. ஜெர்மனியின் பெர்லின், பிறேமன், ஹம்பேர்க் போன்ற பெருநகரங்களின் ஹொட்டல்களில் சலவைத்துணிகளை பாரவுந்துகளில் எடுத்துக்கொண்டுசெல்லும் சலவைக் குழுமங்கள் இப்போதெல்லாம் அவற்றைப் போலந்தில் சலவை செய்துவிட்டு திருப்பி எடுத்துவருகிறார்கள்.

அன்றும் ஏனோ அவ்வாடிவீட்டின் உள்ளேயும் கூட்டம் அவ்வளவாக இருக்கவில்லை. உயரமான ஸ்டூல்களில் ஒரு இளம் தம்பதி அமர்ந்துகொண்டு மிதமாக பியரையும், அமிதமாக முத்தங்களையும் பரிமாறிக்கொண்டிருந்தனர். மிகவும் இணக்கமான அச்சூழலின் பதிவான தரையிலிருந்த ஷோபாக்களில் இன்னும் சிலபேர் ஏதேதோ பானகங்களை வைத்துக் குடித்துக்கொண்டும் புகைத்துக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டுமிருந்தனர். ஊதா, சிவப்பு, ஒறேஞ், பச்சை வர்ணங்களில் ஒளியை சிமிட்டிச்சிமிட்டி உமிழ்ந்துகொண்டும் 'வா வா' என்று அழைத்துக்கொண்டுமிருந்த SLOTS , மற்றும் Pinball மெஷின்களைக்கண்டதும் பிங்கலையும், சாதனாவும் அப்பாவின் பர்ஸிலிருந்த சில்லறைகள் அத்தனையையும் கபளீகரம் செய்துகொண்டுபோய் ஆளுக்கொரு மிஷினைக் கைப்பற்றிக்கொண்டு ஆடத்தொடங்கினார்கள்.

விடுதியின் பார் அணங்குக்கு முப்பது வயதிருக்கும் வாரத்தில் ஒருநாள்தான் சாப்பிடுபவள்போல இளைத்த வார்ந்தெடுத்த தேகம். சந்ததிச்சங்கிலியில் எவ்விடத்திலோ ஆபிரிக்கன் ஜீன்ஸ்களும் கலந்திருக்கவேண்டும். கீரியின்கேசமன்ன சிறு அலையலையாய் அடர்ந்து திரண்டு திமிர்த்துத்திணறிக் கொண்டிருந்த கூந்தலைக் கூட்டியள்ளி உச்சந்தலையில் கட்டிக்கொண்டிருந்தாள். அது ஒரு கடல் அனிமோனியை தூக்கிவைத்துவிட்டமாதிரியும் அவளை மேலும் வாலையாக்குவதாயுமிருந்தது. சிரிக்கின்ற கண்களின் பின்னால் சிறுகிறக்கத்தை மறைந்து வைத்துக் கொண்டு இவனை ஒரு வாடிக்கை விருந்தினனைமாதிரி அமர்க்களமாய் எதிர்கொண்டு வரவேற்றாள். தனக்கு ஒரு பெக் Budweiser பியர் வார்க்கச்சொல்லிவிட்டு அவளின் இதமான உபச்சாரத்துக்காக ஒரு கிளாஸ் ஷாம்பேனை அவளுக்கும் தன் கணக்கில் வழங்கினான். பியரைக் குடித்துக்கொண்டே பாரின் கண்ணாடி விறாக்கைகளிலிருந்த Hot சமாச்சாரங்களைத் துழாவினான். எல்லாமே Ballentine, Teachers, Johnny Walker, Jim Beam, Wyborowa Vodka, Jacobi1880, Asbach Uralt, Jack Daniels, என்று பெருக்கன் வெட்டிரும்புகளாக இருந்தன.

" கொஞ்சமும் Fine Stuffs கிடையாதா? "

" Zum beispiel meine Monsieur ? " (எடுத்துக்காட்டாய் என் மெஸியூ.)

" Wie ein (ஒரு) Hennessy, Dimple, Glenfiddich, Chivas....... (இப்பிடி)?"

" அதெல்லாம் இந்த வாடிவீட்டுக்கு கொஞ்சம் அதிகப்படி மெஸியூ."

" What about some Remy Martin?"

" Ideal ma........... Cool hast du was (வைத்திருக்கிறாயா)? "

" இல்லை இங்க இல்லை. என்கிட்ட பெர்ஸனல் அறையில இருக்கு, இன்னும் அரைமணியில Bar ஐ மூடியிட்டு நாம அங்கே போயிடலாம்." கண்ணடித்தாள். இளம் மின்னலின்கொடி ஒன்று அவன் உயிரின்மேல் பரவிப்படிந்து ஒளிர்ந்தது.

" ரொம்பத் தொலைவா?"

" இல்லை..... இங்கேதான். மெஸியூ யோசிக்கிறாப்போல. இங்கே கரடி புலி ஒன்றுங்கிடையாது. எல்லாம் மனுஷங்கதான். அதுவரைக்கும் இன்னொரு பியர் சாப்பிடுகிறீர்களா மெஸியூ?"

இரண்டு பெக்ஸ¤ம் உள்ளே போனதும் " எமக்கு இரண்டு Kinderbett (குழந்தைப்படுக்கை)களுடன் கூடிய ஒரு அறை கிடைக்குமா?" என்று கேட்டான்.

" Kinderbett எல்லாம் எதற்கு ஒரு சிங்கிள், ஒரு டபுள் பெட்ஸோட அறை தரலாமே......."

" ·பைன். "

" குழந்தைங்களுக்கு சான்ட்விட்ச் ஏதாவது பண்ணவா?"

" வேண்டாம் நன்றி. ஒருமணி முன்னதான் சாப்பிட்டார்கள்."

விளையாடி ஓய்ந்த குழந்தைகள் கொஞ்சம் பஷன்+ மாறகுயா+ ஒறேஞ் கலந்த ரசம் குடித்தபின்னால் அவள் காட்டிய அறையில் போய் தூங்குவதற்கான உடைகளை அணிந்துகொண்டு தொலைக்காட்சி பார்க்கத்தொடங்கினார்.

" நான் இந்த ஆன்டியோட கொஞ்சம் கதைச்சுக்கொண்டிருந்திட்டு வருவேனாம்.... நீங்கள் நெடுக டிவியையே பார்த்துக்கொண்டிராமல் படுத்திடோணும் என்ன........Gute Nacht Kinder."

" அப்பா அங்கே ஸ்பிறிட்ஸ் கனக்க மண்டுறேல்ல..... சொல்லியிட்டன். "
பிங்கலை எச்சரித்தாள்.

Remy Martin Cognac கோடு கடிக்க வார்ந்த Wild-boar இறைச்சியைத்தட்டி மசாலாக்கள் தடவி கணிதமாய் கிறில் பண்ணிக்கொடுத்தாள்.

இருவரும் சாப்பிட்டானதும் 'உன் பெயருக்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டாள் படுக்கையில். "எப்பொழுதும் பேரானந்தமாக Infinitive-Ecstasy யோட சதா சிவனாக, உல்லாசமாக இருப்பவன், இறைவன் என்றெல்லாம் பல அர்த்தங்கள் உண்டு அதுக்கு. அவளின் இடுப்புக்குள்ளால் கையை நுழைத்து சேர்த்து இறுக்கியபடி இதுவும் அதில இருந்து பறந்த ஒரு Spark தான்" என்றான். சுகிர்தங்கள் அரிவையர்களாகவே அள்ளித் தருகையில் அதன் லயங்களே எப்போதும் தனி. நிறையவே
அள்ளிப்பகிர்ந்தனர்.
பின்னால் மிகத்தாமதமாக ஓசை எழுப்பிவிடாமல் பூனைபோல வந்து தங்களுக்கான அறையில் படுத்துக்கொண்டான். கலர்க்கனவுகள் சில வந்தன. காளிமாதிரி விரித்த சடையுடன் திரிசூலம், ஈட்டி, தீப்பந்தங்களோடு ரௌத்ரமாக வந்ததுதான் கற்புக்கடவுளின் படிமம் என்றால்..... பின்னால் கடிக்கவேணும் போலொரு வழவழப்பில் வந்து ஒத்திவிட்டுப்போன தேவதைகள் யார்? பாவனைகள் தீர்ந்தபின்பே இடையீடுகளற்ற நல்ல தூக்கம் வந்தது.

காலையில் எழுந்ததும் குளித்தான். புத்துணர்ச்சியுடன் கூடத்துக்கு பிள்ளைகளோடுபோய் உணவு மேசையில் அமர்கையில் அப்போதுதான் நினைத்துக்கொண்டவன் போல பிங்கலையிடம் கேட்டான்: " அம்மா வேற என்னடா சொன்னா? "

"நாங்கள் தலைமயிரை ஷோர்ட்டா வெட்டியிருப்பதைப் பார்த்ததும் அழுதாப்பா. எதுக்கிப்படியென்று கேட்டா...... நான்தான் காலையில தலைசீவப் பின்னப் பராமரிக்க ரொம்ப நேரமாகுதெண்டு 'கட்'பண்ணிட்டோமென்று சொல்லிச்சமாளிச்சன்."

" You are too Smart றா செல்லம்."

" உங்களுக்கு அம்மாமேல கோபமில்லையாப்பா?"

" இல்லை."

" எப்பிடிப்பா..... ஏம்பா?"

" அவ நிறைய தந்திருக்காடா."

" புரியலை? "

" உங்களை எனக்கு தந்திருக்கா. அது அவளாலதான முடியும். பாடுபட்டு இதுவரையில உங்களை வளர்த்தது எல்லாம் அவதானே....... அதனால கடன் பட்டிருக்கோம்டா."

" எல்லாத்தையும் இவ்ளோ கூலா எடுத்துக்கிற உங்களைவிட்டிட்டு அப்புறம் ஏம்பா அவ........." அவளுக்கு முடிக்க வார்த்தைகள் வரவில்லை, விம்மவும் கண்கள் நிறைந்து வழிந்தன. " வீதியில போற எல்லா கார்களுமா அடிபடுகுது...... எங்கோ ஒண்ணுக்குதானே அப்பிடி ஆகுது. அப்பிடி அதுவும் ஒரு விபத்தடா. அவ்வளவுதான்.......ஏன் எதனால என்று ஆராய் வதெல்லாம் waste and vain yeah, எந்த முடிவுக்கும் வரமுடியாது"

" சரி...... தனக்கு தம்பிப் பாப்பாதான் பிறக்குமென்று டொக்டர் சொல்லிட்டாராம். அப்பாவிட்ட நல்ல தமிழ்ப்பெயர் ஒன்று கேளடி
என்றுஞ் சொன்னாப்பா."

" பார்க்கலாம். "

" இரவு முழுவதும் நீங்கள் தூங்கவேயில்லை அப்பா. யாரையோ funny funny யா திட்டிக்கொண்டே இருந்தீர்கள்."

" திட்டினேனா....... நானா இருக்காதே......... சரி எப்பிடிடா செல்லம்? "

அவள் அரைமண்டி இடுவதற்கு செய்வதுபோல இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முன்குனித்து ஒரு மரங்கொத்தியின் வேகத்தில் தலையை முன்னுக்கு ஆட்டியாட்டி "

Schlampe......Schlampe........Schlampe......Schlampe......Schlampe "(அவிசாரி) என்று சொன்ன விதம் அவனுக்கு சிரிப்பை வரவளைத்தது.

அவ்வேளை மகிமாமேல் பித்தாக அலைந்த காலத்தில் பெய்த கவிதையொன்றும் அவன் நினைவின் அடுக்குகளில் கசிந்து குமிழ்த்துக் கிளம்ப எத்தனிக்கிறது.

என்னைக் கல்லும் முள்ளும்
வலிசெய்வதில்லை இப்போ, ஏன் ?
வெந்த தார்ச்சாலையே
சுடுவதில்லை
கால்கள் தரையில்
பாவாமல் செய்யும்
உன் நினைவுகள் என்னடி
ஹீ£லியம் வகையதா?

"She is good like a Frog....... ஒரு வைரம் இடம்மாறி இருக்கிறதால அது வைரம் இல்லை என்றாகுமா...... Biological Papas, Preventive \ Papas, shared Slates all in the game..........ma.''

"என்னப்பா சொல்றீங்க? "

ஆனந்தசிவன் கண்களில் நீர்கட்டும் வரைக்கும் சிரித்துக்கொண்டிருந்தான்.

இரவு கீறினதுதான் அப்பாவுக்கு இன்னும் சரியாக முறியவில்லையென்று பிங்கலை நினைத்தாள்.

சாதனாவுக்கு எதுவும் புரியவில்லை.

- உயிர்நிழல்-பாரீஸ் ஜூலை- டிசெம்பர் 2008 -
karunah08@yahoo.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்