இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவமபர் 2010  இதழ் 131  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!

பலிகேட்கும் தேர்வுகள்  


- சோ.சுப்புராஜ் -

 

சோ.சுப்புராஜ்பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம் தாமதமாய்த் தான் போய்ச் சேர்ந்தாள். மையத்தின் சூபர்வைசர் ஏற்கெ னவே பரிச்சயமானவர். “என்ன டீச்சர், முதல் நாளே லேட்டா வர்றீங்க! வழக்கம் போல ட்ரெயின் லேட்டா….!” என்றவர் “உங்களப் பார்த்தே தீருவேன்னு ஒருத்தர் காலையிலருந்து காத்திருக்கிறார்; என்னன்னு விசாரிச்சுட்டு வந்துருங்க…” என்று ஒரு நமட்டுச் சிரிப்புடன் அனுப்பி வைத்தார்.

            உறவுகளே இல்லாமலாகி விட்ட வாழ்க்கையில் நம்மை யார் தேடி வந்திருக்கிறார்கள்? சூபர்வைசரின் சிரிப்பைப் பார்த்தால் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கும் போலிருக்கிறதே என்று மனசுக்குள் நிழலாடும் கேள்விகளுடன், தேடி வந்தவரை அணுகி விசாரித்தபோது அவர் சென்னையிலிருக்கும் ஒரு பிரபல பள்ளியின் புரோக்கர் என்று புரிந்தது. என்று புரிந்தது.

       அந்த பள்ளியின் மாணவர்கள் எழுதிய விடைத்தாட்கள் இந்த மையத்திற்குத் தான் திருத்துவதற்கு வந்திருக்கிறது என்றும், அவை இவளிடம் வந்தால் தாராளமாக மதிப்பெண்களைப் போடவேண்டும் என்றும் அப்படிச் செய்தால் ஒரு பேப்பருக்கு இவ்வளவு என்று கொடுத்து விடுவதாகவும் சொல்லி ஒரு பெருந்தொகையை முன்பணமாகவும் கொடுக்க முன் வந்தார். அங்கயற் கண்ணி அவரைத் திட்டி அனுப்பி விட்டு விடைத்தாள் திருத்தும் அறைக்குள் போனாள்.

       “என்ன டீச்சர் நல்ல அறுவடையா…?” என்றார் சூபர்வைசர் கிண்டலாய்ச் சிரித்தபடி.

      “அட, நீங்க வேற ஏன் ஸார் வெறுப்பேத்துறீங்க….! டம்மி நம்பர் அது இதுன்னு போட்டு எல்லாம் ரகசியமா வச்சிருந்தும் எப்படி ஸார் பேப்பர ட்ரேஸ் பண்ணி வந்துடுறாங்க….” என்றாள்.    

                   “அந்த அரசியல் எல்லாம் நமக்கு விளங்காது டீச்சர்; ஆனால் இந்தத் தடவ பேப்பர ட்ரேஸ் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான்; ஏன்னா இப்ப புதுசா வந்துருக்கிற லேடி சி.இ.ஓ. கடைசி நேரத்துல, முதல்ல போட்டுருந்த ஷெட்யூல்படி பேப்பர்கள அனுப்பாம மாத்தி மாத்தி அனுப்பச் சொல்லீட்டாங்க… இப்பக் கூட உங்களத் தேடி வந்து பார்த்துட்டுப் போறாருல்ல; அவர் ஸ்கூல் பேப்பர் இந்த சென்டருக்கு வரல; நானும் சொல்லிப் பார்த்தேன்; அவர் கேட்கல….” என்றபடி அவள் திருத்து வதற்கான பேப்பர் கட்டைக் கொடுத்தார்.           

         “இது எந்த ஸ்கூல் பேப்பர் ஸார்….” என்று அங்கயற்கண்ணி  கேட்கவும் அடையாரிலிருக்கும் பிரபல பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். அங்கயற்கண்ணிக்கு  சிலீரென்றிருந்தது. அந்தப் பள்ளியில் தான் அவளின் பெண் அன்புச்செல்வி ஒன்பதாம் வகுப்பு வரைப் படித்தாள். பத்தாம் வகுப்பில் தொடர்ந்து படிக்க அனுமதி மறுத்து விட்டார்கள்.

        சென்ற வருஷ ஜூன் மாதத்தின் மத்தியில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்து கொஞ்ச நாட்களாகியிருந்த நிலையில், அன்புச் செல்வி படிக்கும் பள்ளி நிர்வாகம் அங்கயற் கண்ணியை பள்ளிக்கு அழைத்திருந்தது. அலுவலக உதவியாளன் அனுமதிக்கவும்,  அவள் அன்புச் செல்வியையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியையின் அறைக்குள் நுழைந்தாள். இவள் வணக்கம் சொன்னதைக் கூட கவனிக்காத பாவணையில் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு “நீங்கதான் அன்புச் செல்வியோட அம்மாவா?” என்றாள் தலைமை ஆசிரியை.

            இவள் ஆமாம் என்று பவ்யமாய் தலை அசைக்கவும் ”பொம்பளப் பிள்ளைய இப்படியா பொறுப் பில்லாம வளப்பீங்க! அறிவியல்லயும் ஆங்கிலத்துலயும் இவ சிங்கிள் டிஜிட் மார்க்கத் தாண்டுறதே இல்ல; இதெல்லாம் நீங்க கவனிக்கிறதே இல்லையா? எனனவா வேலை பார்க்கு றீங்க?” என்றாள்.

            “அரசு மேல்நிலைப் பள்ளியில ஆசிரியரா இருக்கேன் மேடம்…”

            அவளுக்கு ஆங்காரமாய்க் கோபம் வந்தது.“ஆசிரியர் பிள்ளை மக்குன்னு நீங்க ரெண்டு பேரும் நிருபிக்கலைன்னு யாரு அழுதாங்க….!” என்று சிடுசிடுத்தாள்.

            “இல்ல மேடம் வீட்ல கொஞ்சம் பிரச்னை; நானும் காட்பாடியத் தாண்டி ரொம்ப தூரம் வேலைக்குப் போயிட்டு வர்றதால இவளக் கவனிக்க நேரமிருக்கிறதில்ல; இனிமே பார்த்துக்கிறேன்”

            “டூ லேட்; காரியம் கொஞ்சம் கை மீறிப் போயிருச்சு, இனிமே ஒண்ணும் பண்ண முடியாது; உங்க பொண்ணோட டீ.சி.யக் குடுத்துடுறோம், நீங்க வேற ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சுக்குங்க….”

            “அப்படியெல்லாம் சொல்லாதீங்க மேடம்… அவளுக்கு ஒரு நல்ல கல்வி கிடைக்கனும்னு தான், சென்னையிலயே சிறந்தது உங்க ஸ்கூல்ன்னு கேள்விப்பட்டு, எவ்வளவோ சிரமங்களப் பொறுத்துக்கிட்டு ஆறாம் வகுப்புல இருந்து அவள இங்க சேர்த்து படிக்க வைக்கிறேன்; இவளுக்காக காட்பாடியிலருந்து வில்லிவாக்கத்துக்கு குடி வந்துருக்கேன்…. பயணத்துலயே என்னோட பாதி நாள் கழிஞ்சுடுது; இவ படிப்புக்காகத் தான் பொறுத்துக் கிட்டிருக்கேன்….பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு வாய்ப்புக் குடுங்க, மூணே மாசத்துல முழுசா அவள நான் மாத்திக் காட்டுறேன் மேடம்…. ப்ளீஸ், தயவு பண்ணுங்க….” கையெடுத்துக் கும்பிட்டு இறைஞ்சினாள் அங்கயற்கண்ணி.

     “அன்புச் செல்வியோட அப்பா என்ன பண்றார்? “ என்று கேட்டாள் தலைமை ஆசிரியை. “அவர் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியர் மேடம்; ஆனா அவர் இப்ப எங்க கூட இல்ல மேடம்; சிங்கப்பூர்ல வேறொரு பொண்ணு கூட குடும்பம் நடத்திக்கிட் டிருக்கிறார்….அதான் இவளப் பாதிச்சு படிப்புல சுணங்கிப் போயிட்டாள் மேடம்………“கண் கலங்கினாள் அங்கயற்கண்ணி.

      “ஓ… ஐயாம் சாரி…..வேணும்னா ஒண்ணு பண்ணலாம்; எங்க ஸ்கூல்லயே தொடர்ந்து படிக்கட்டும்…. ஆனா எங்க ஸ்கூல் ரோல்ல வராம பரீட்சைய பிரைவேட்டா பணம் கட்டி வெளி மாணவர்களோட சேர்ந்து எழுதட்டும்; ஒருவேளை பாஸ் பண்ணீட்டாள்னா ப்ளஸ் ஒன்னுக்கு எங்க ஸ்கூல்லயே சேர்த்துக்குறோம்; அதுக்குன்னா ஏற்பாடு பண்ணட்டுமா….?”

       “அய்யோ வேண்டாம் மேடம்; அது சரியா வராது….கொஞ்சம் பெரிய மனசு பண்ணி….” அங்கயற்கண்ணி  முடிப்பதற்குள் சீறினாள் தலைமை ஆசிரியை.”சொன்னாப் புரிஞ்சுக்குங்க மேடம். இது என்னோட தனிப்பட்ட முடிவில்ல; மேனேஜ் மென்ட்டோட முடிவு…..உங்க பொண்ண  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுப்பினா கண்டிப்பா ஃபெயிலாயிடுவா(ள்); அது எங்க பள்ளிக்கே பெரிய களங்கமாப் போயிடும்….20 வருஷங்களுக்கும் மேலா பத்தாம் வகுப்புலயும் +2ல்யும் 100% பாஸ் ரிசல்ட் காண்பிச்சுட்டு வர்றோம்; அதோட ஸ்டேட் ரேங்க் வாங்குற ஸ்கூல்ல ஃபெயிலியர் வந்தா பேர் கெட்டுடாதா?”

                   அப்போது ஒரு நடுத்தர வயதுப் பெண் அறைக்குள் வந்து “நான் தான் இவளோட கிளாஸ் டீச்சர் மேம்; ஸ்பெஷல் கேர் எடுத்துப் பார்த்துக்கிறேன் மேம்…நாம ஒரு சான்ஸ் குடுத்துப் பார்க்கலாம் மேம்…” என்று அன்புச்செல்விக்காகப் பரிந்து பேசவும், தலைமை ஆசிரியைக்கு பலியாய் கோபம் வந்து விட்டது.”யாரக் கேட்டு உள்ள வந்த, மேனர்ஸ் இல்லாம….உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு…. ஃபெயிலாயிட்டா மேனேஜ் மென்ட்டுக்கு நீயா வந்து பதில் சொல்வ? கெட் அவுட்…”என்று சீறினாள். அங்கயற்கண்ணிக்கு அந்த டீச்சரைப் பார்க்க பாவமாக இருந்தது.

            “வேணும்னா அன்புச் செல்விய இந்த வருஷம் ஒன்பதாம் வகுப்பிலேயே ஃபெயில் பண்ணீடுங்க மேடம்…..அவளோட பெர்மான்மஸ் பார்த்துட்டு அடுத்த வருஷம் பத்தாவது புரமோட் பண்ணிக்குங்க….” என்றாள் அங்கயற்கண்ணி. தலைமை ஆசிரியை அதையும்  ஒத்துக் கொள்ள வில்லை.  “நாங்க யாரையும் எந்த வகுப்பிலயும் ஃபெயில் பண்றதில்ல; அது எங்க ஸ்கூலோட பாலிஸி….” என்றபடி அன்புச்செல்வியின் டீ.சி.யை கிழித்துக் கொடுத்து ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தாள்.           

            என்ன செய்வதென்று தெரியாமல், முகவாட்டத்துடன் வெளியே வந்த  அங்கயற் கண்ணியை அன்புச்செல்வியின் வகுப்பாசிரியை தான் தேற்றினாள். தன் பெயரைத் தங்கம்மாள் என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். “இது சரியான முசுடு மேடம்; ரிசல்ட், ரிசல்ட்டுன்னு பேயா அலையும்; இதுவரைக்கும் இவளோட சேர்த்து ஏழு பேருக்கு டீ.சி. குடுத்து அனுப்பீருச்சு; அஞ்சு பேர பிரைவேட்டா எழுதச் சொல்லிருச்சு; ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான்... தேறாதுன்னு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் பேரண்ட்ஸக் கூப்பிட்டு டீ.சி.யக் குடுத்துருவாங்க…அப்புறம் நூறு சதவிகிதம் தேர்ச்சி காண்பிச்சுட்டோம்னு பீத்திக்குவாங்க...

                   விடுங்க; இவங்க புரஜெக்ட் பண்ற அளவுக்கு அன்புச்செல்வி ஒண்ணும் அத்தனைக்கு மோசமான ஸ்டூடண்ட் இல்ல; இப்ப கொஞ்ச நாளாத்தான் ரொம்பவும் டல்லா இருக்கிறா…! வீட்ல எதுவும் பிரச்னையா? சொல்லலாம்னா என்கிட்டச் சொல்லுங்க….” என்றாள். அவளின் பேச்சில் நிஜமான கரிசனம் தெரிந்தது. அங்கயற்கண்ணி அவளின் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

                    அங்கயற்கண்ணிக்கு சொந்த ஊர் தென்காசிக்குப் பக்கத்திலுள்ள வாசுதேவநல்லூர்.அங்கேயே எலக்ட்ரானிக்ஸில் டிப்ளமா முடித்த முத்துராமன் என்பவளைக் காதலித்திருக்கிறாள். வேறு ஜாதி என்பதாலும் அவன் வேலை வெட்டி எதுவுமில்லாமல் வெறுமனே ஊர் சுற்றுகிறான் என்பதாலும் அங்கயற்கண்ணியின் அப்பா அவனை மணந்து கொள்ள சம்மதிக்க வில்லை.

         அவளின் அம்மா இருவரையும் ரகசியமாய் அழைத்து “நீங்க என்ன தான் கெஜவித்தை செஞ்சு பார்த்தாலும் இவளோட  அப்பா உங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார்; உங்களுக்கும் வயசாகலையா? பேசாம இந்த ஊரை விட்டுப் போயி எப்படியாவது பொழச்சுக்குங்க….நான் அவரச் சமாளிச்சுக்கிறேன்…..” என்று சொல்லி பணமும் நகையும் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருக்கிறாள்.

            இருவரும் பாண்டிச்சேரிக்கு ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொண்டு ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். அங்கயற்கண்ணி பி.எஸ்.ஸி, பி.எட். படித்திருந்ததால் மெட்ரிக்குலேசன் பள்ளியில் எளிதாய் வேலை கிடைத்திருக்கிறது.ஆனால் முத்து ராமனுக்குத் தான் சரியான வேலை அமையாமல் சிறு சிறு வேலைகள் தான் செய்ய வேண்டியிருந்ததாம். தன் படிப்பிற்கும், திறமைக்கும் தகுந்த வேலை சென்னைக்குப் போனால் கிடைக்கு மென்று முத்துராமன் அபிராயப்படவும், அதுவும் சரி என்று சென்னைக்குக் குடி வந்திருக்கிறார்கள்.

            சென்னையில் தடுக்கி விழுந்தால் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தான் என்பதால் அங்கயற்கண்ணிக்கு வேலை கிடைப்பதில் பிரச்னையில்லை.ஆனால் முத்துராமனுக்கு சென்னையிலும் சிலாக்கியமான வேலை அமையவில்லை. அதனால் முத்துராமனின் தகுதியை உயர்த்தும் விதமாக  அங்கயற்கண்ணி அவளுடைய சொற்ப வருமானத்திலும் அவனை பகுதி நேரக் கல்லூரியில் சேர்த்து பி.இ. படிக்க வைத்திருக்கிறாள். அதற்கப்புறம் அவர்கள் எதிபார்த்தபடியே அவனுக்கு ஒரு கம்பெனியில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. அப்புறம் அவனின் நண்பன் ஒருவனின் மூலம் சிங்கப்பூரில் வேலை கிடைத்து அங்கு போய் செட்டிலாகி விட்டான். எப்போதாவது இந்தியாவிற்கும் வந்து போய்க் கொண்டிருந்தான்.

                        திடீரென்று தொடர்ந்து சில வருஷங்களுக்கு அவன் இந்தியா வராமல் இருக்கவும் , அவனுக்கு என்னவாயிற்றோ என்று பதறிப் போய், அங்கயற்கண்ணி டூரிஸ்ட் விசா வாங்கிக் கொண்டு சிங்கப்பூர் போய்ப் பார்த்தவள் அதிர்ந்து போய் விட்டாள். முத்துராமனுக்கு சிங்கப்பூரிலும் இன்னொரு குடும்பம் மனைவி குழந்தைகள் என்று இருந்தது. பைத்தியக்காரி மாதிரி அவன் என்றைக்காவது இந்தியா வருவான் என்று தான் காத்திருக்க, அவன் அங்கேயே இன்னொரு குடும்பத்துடன் வாழ்வதைப் பார்த்ததும் உடைந்து சிதறிப் போனாள். அடிப்படை நியாயம் கூட இல்லாத அவனிடம் பேசிப் பிரயோசனமில்லை என்று அடுத்த விமானம் பிடித்து இந்தியாவிற்கு வந்து விட்டாள். 

            “அப்பாவோட நம்பிக்கைத் துரோகத்தை அன்புச்செல்வியாலயும் தாங்கிக்க முடியல; அதான் படிப்புல சுணங்கிப் போயிட்டா… நானும் அதக் கவனிக்காம இருந்துட்டேன்….” என்று தன் கதையைச் சொல்லி முடித்தாள் அங்கயற்கண்ணி.

        “சரி போனதெல்லாம் போகட்டும்; நீங்க கவலைப் படாதீங்க; அன்புச்செல்விய நான் தேத்திக் காண்பிக்கிறேன்…” என்றாள் தங்கம்மாள் சவாலாக.

                        வில்லிவாக்கத்துலருந்து தினசரி வந்து போனால் பயணத்துலயே இவள் கலைத்துப் போயிடுவாள் என்றும் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்றும்  தங்கம்மாள் அபிப்ராயப் பட்டாள். அவளின் ஆலோசனைப்படி அன்புச்செல்வியை அங்கயற்கண்ணி குடியிருந்த திருவான்மியூர் பகுதியில் ஒரு அரசாங்க மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்த்து விட்டு  அவளை தன்னுடைய வீட்டிலிருந்து பள்ளிக்குப் போய் வர ஏற்பாடுகள் செய்தாள்.

        ”ஒரு வருஷம் உங்க பொண்ணை நீங்க மறந்திடுங்க , நான் பார்த்துக்கிறேன்…” என்றாள். அப்படியே ஆனது.  அந்த வருஷமே அன்புச்செல்வி தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலாக மதிப்பெண் எடுத்து தேறினாள். தொடர்ந்து அரசாங்க பள்ளியிலேயே இப்போது ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறாள்.

                        “என்ன டீச்சர், பேப்பரயே பார்த்துக்கிட்டு இருக்கிறீங்க ; திருத்தத் தொடங்கலயா…?” என்று மையத்தின் சூபர்வைசர் கேட்கவும் தான் நினைவு கலைந்து நிகழ் காலத்திற்கு வந்தாள் அங்கயற்கண்ணி. இது தற்செயலானதா, அல்லது விதியின் விளையாட்டா என்று தெரிய வில்லை. இதோ தன் செல்ல மகளுக்கு  டீ.சி. கொடுத்து அவமானப் படுத்தி அனுப்பிய அடையாறு பள்ளியின் பேப்பர்கள் திருத்துவதற்காக அவளுக்கு முன் விரிந்து கிடக்கிறது. ஃபெயிலாகிப் போவாள் என்று தானே என் பெண்ணிற்கு டீ.சி.கொடுத்து அனுப்பினீர்கள்! இதோ உங்கள் பள்ளியின் எதிர்காலம் என் கையில்; என் பேனாவின் முனையில்…  அவளுக்குள் ஒரு வன்மம் கிளர்ந்தது.

                        கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு ஒவ்வொரு பேப்பரையும் மிக மிகக் கவனமாக திருத்தத் தொடங்கினாள். சிறு பிழை என்றாலும் தடாலடியாக மதிப்பெண்களைக் குறைத்தாள். இது அவளுடைய இயல்பே அல்ல; பொதுவாய் மதிப்பெண்களை  கர்ணபிரபு மாதிரி வாரி வாரி வழங்குவது தான் அவளது வழக்கம் . மாணவர்கள் 25 மதிப்பெண்களை நெருங்கி விட் டாலே, அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் போட்டு 35க்குக் கொண்டு வந்து பாஸாக்கி விடுவாள்.

                        ஆனால் இந்த முறை அப்படிச் செய்யவில்லை. ஐந்து மாணவர்கள் 30,33 என்று பாஸுக்குப் பக்கத்தில் வந்தும், எந்த மாற்றமும் செய்யாமல், எங்கள் பள்ளியில் யாரும் ஃபெயிலாக மாட்டார் களென்று பெருமை பீற்றினீர்களே, இதோ அந்த வரலாற்றை உடைக்கிறேன் என்று மனசுக்குள் கறுவியபடி விடைத்தாள்களைக் கட்டி சூபர்வைசரிடம் ஒப்படைத்தாள் அங்கயற்கண்ணி. ஆங்கில மீடியம் பள்ளி என்று அலப்பறை பண்ணும் பள்ளி; மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டுமென்றும் தமிழில் பேசினால் தண்டம் விதிக்கும் பள்ளியில்  ஆங்கிலப் பாடத்திலேயே ஐந்து பேர் ஃபெயிலென்றால்….. அது எத்தனை முரண்; அந்த தலைமை ஆசிரியை முகத்தை எங்கு போய் வைத்துக் கொள்வாள்! மனசுக்குள் குரூரமாகச் சிரித்துக் கொண்டாள் அங்கயற்கண்ணி.

                        “என்ன டீச்சர், அஞ்சு பேர பார்டர்ல ஃபெயிலாக்கி இருக்குறீங்க! நீங்க பொதுவா அப்படிப் பண்ற ஆளு இல்லயே, எத்தனை வருஷமா உங்களப் பார்த்துக் கிட்டு இருக்கிறேன்; இன்னைக்கு என்னாயிருச்சு…” என்று கேட்ட சூபர்வைசரிடமும்  “அதெல்லாம் அரை மார்க் போடக்கூட எடமில்ல ஸார்; ஃபெயிலாப் போகட்டும்; அப்பத் தான் அவங்களுக்கெல்லாம் புத்தி வரும்….” என்றாள் வெளத்துடன்.

        “வேண்டாம் டீச்சர்; பசங்க பாவம்….யாரு மேலயோ உள்ள கடுப்புல பசங்களோட எதிகாலத்தப்  பாழ் பண்ணீடாதீங்க….” என்று அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லிய போதும் அவள் பிடிவாதமாய் மறுத்து விட்டாள். “அவ்வளவு தான் ஸார்….பேசாம பேப்பர வாங்கிக்குங்க…” என்றாள் மிகவும் கடுமையாக.

           

கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாக, பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவுகள் வெளியாகி ஓரிரு தினங்களுக்குப்பின் தினப்பத்திரிக்கையில்  வந்திருந்த  ‘அந்த’  செய்தியை வாசித்த அங்கயற்கண்ணி அலறிவிட்டாள்.

        

 ஆசிரியை தற்கொலை முயற்சி; தன்னுடைய மாணவர்கள் தேர்வில் தோல்வி

         அடைந்ததின் எதிரொலி!

 

சென்னை, மே 23 – அடையாறிலுள்ள மிகப் பிரபலமான தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தன்னிடம் பயின்ற மாணவர்கள் சமீபத்தில் நடந்த  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார். இதைப் பற்றி மேலும் கூறப் படுவதாவது:-

இரண்டு தினங்களுக்கு முன்னால் அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனகரம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர் தேர்ச்சி முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில் அடையாறிலுள்ள மிகப் பிரபலமான தனியார் பள்ளியைச் சேர்ந்த  ஐந்து மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தில்  தேர்ச்சி பெறவில்லை என்றும், இதைக் கேள்விப் பட்டதும் அந்தப் பாடத்தைப் போதித்த  ஆசிரியை திருமதி தங்கம்மாள் (43)  நேற்று முன்தினம் அவருடைய வீட்டிலிருக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் , உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் சக ஆசிரியை ஒருவரின் மூலம் அருகாமையிலிருந்த அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுவதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

                        அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் பன்னீர் செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆசிரியையின் தற்கொலை முயற்சிக்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த கெடுபிடிகளும் அழுத்தமும் காரணமா என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரலாம்.

    

அங்கயற்கண்ணிக்கு மனசு பாரமாக வலித்தது. தான் செய்த  முட்டாள் தனத்தால் ஒரு அற்புதமான மனுஷியின் உயிரல்லவா போய் விடும் போலிருக்கிறது. கண்டிப்பாக  ஃபெயிலாகி விடுவாள் என்று நம்பிய தன்னுடைய மகள் அன்புச் செல்வியை எப்படி பயிற்சி கொடுத்து அவளே ஆச்சர்யப்படும் விதமாக மிக நல்ல மதிபெண்களில் தேர்ச்சி பெற வைத்திருந்தாள். அந்த  தங்கம்மாள் டீச்சருக்கா இந்த நிலைமை? அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று மனசுக்குள் மறுகினாள்.

அன்புச்செல்வியையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போனபோது தங்கம்மாள் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஆனால் மிகவும் சோர்ந்து போய் படுத்திருந்தாள். அவளின் படுக்கையைச் சூழ்ந்து கொண்டு  சக ஆசிரியைகளும் மாணவர்களும் நிறையப்பேர் நின்று கொண்டிருந்தார்கள். அன்புச் செல்வி ஓடிப்போய் ஆசிரியையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கவும் “அய்யோ…எனக்கு ஒண்ணுமில்லைடா; ஐயாம் ஆல்ரைட்…” என்று அவளை சமாதானப் படுத்தினாள்.

அங்கயற்கண்ணி அவளுக்கு அருகில் போய் மிக மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக  “ஸாரி டீச்சர்; உங்களோட இந்த நிலைமைக்கு  நான் தான் காரணம்…”என்றாள் குற்ற உணர்ச்சி மேலிட.

            “அய்யய்யோ, நான் முட்டாள் தனமா ஏதோ பண்ணதுக்கு நீங்க என்ன மேடம் பண்ணுவீங்க; பாஸ் ஃபெயிலெல்லாம் பரீட்சையில சகஜம்னு யோசிக்காம அவசரத்துல ஏதோ பண்ணீட்டேன்; அந்தப் பசங்க பரீட்சையில் பெயிலானத என் டீச்சிங்க்கான தோல்வியா நெனைச்சு ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன்; அந்தப் பசங்க மறு மதிப்பீட்டுக்கு அப்ளை பண்ணியோ அல்லது அடுத்த மாசமே அரசாங்கம் நடத்துற மறு தேர்வ எழுதியோ பாஸ் பண்ணீடப் போறாங்க; இதக்கூட அந்த நிமிஷத்துல யோசிக்க முடியாமப் போயிடுச்சு…..”   என்றாள் விரக்தியாய்.

  

அங்கயற்கண்ணி தான் வலிந்து மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டதை விளக்கமாய்ச் சொன்னான். “அந்த பள்ளிக் கூடத்துமேல இருந்த கோபத்துல, உங்க கேரியர்ல கறுப்புப் புள்ளி விழ வச்சு, உயிருக்குமில்ல உலை வைக்கப் பார்த்துட்டேன்தயவு பண்ணி என்னை மன்னிச்சுடுங்க….” என்று சொல்லி கண் கலங்கினான்.

engrsubburaj@yahoo.co.in


 
aibanner

 ©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்