இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2009 இதழ் 112  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நூல் அறிமுகம்!

'மஹாகவி'யின் ''பொருள் நூறு''

- சிற்பி பாலசுப்பிரமணியம் -


1981 - புத்தர் பெயர் சொல்லும் புல்லர்களின் கொலை வெறியால் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அது ஈழத்
தமிழ் மக்களின் நெஞ்சிலே இட்ட நெருப்பானது. கொடூரம் இழைக்கப்பட்ட சில மாதங்களில் தமிழ் நூல்களைத் தேடியும், ஈழத்துப் படைப்பாளிகளின் கையெழுத்துப் பிரதிகளைச் சுமந்தும் ஒரு யாத்திரிகர் தமிழகம் வந்தார். சோகம் எழுதிய அவருடைய முகத்தில் உறுதியின் ரேகைகளை அடையாளம் காண முடிந்தது. அவர் வேறு யாருமல்ல, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆர். பத்மநாப அய்யர்.

தட்டுத் தடுமாறி வானம்பாடி இதழை நான் நடத்தி வந்த காலம். நூல்களை அச்சிட்டுத் தரும் வசதி இல்லாததால், சில
கவிதைகளையும், ஒரு சிறு நூலின் கையெழுத்துப் பிரதியையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வானம்பாடி வெளிவந்தது. எம்.ஏ.நுஃ மான், அ.யேசுராசா, சேரன் ஆகியோர் தொகுத்துத் தந்த 22
கவிஞர்களின் 35 கவிதைகளை வெளியிட்டு நிறைவு கொண்டேன். சேரன், அ.யேசுராசா இருவரும் எழுதிய ஈழத்துத் தமிழ்க்
கவிதை குறித்த அறிமுகக் கட்டுரைகளும் வெளிவந்தன.
அப்போது பத்மநாப அய்யர் வழியாகக் கிடைத்த நூலின் கையெழுத்துப் பிரதி பல ஆண்டுகளாக என் நினைவிலும் என் புத்தகக் குவியல்களிலும் மறைந்து கிடந்தது. எஸ்.பொ.வின் தூண்டுதலால் நான் தேடிச் சலித்த அப்பிரதி இப்பொழுது என் கையில் கிடைக்கவும், என் பேரன்புக்குப் பாத்திரமான எஸ்.பொ.வுடன் அது குறித்துக் கதைக்கவும் காலம் வாய்த்தது. உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென எஸ்.பொ. விரும்பினார். இதுவரை வெளிச்சம் காணாத மஹாகவியின் ‘பொருள் நூறு’ மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீட்டக உதவியாலும், எஸ்.பொ. வின் தீவிர ஆர்வத்தாலும் இதோ உங்கள் கைகளில்.

மஹாகவி (1927 - 1971) வாழ்ந்த காலத்தில் தமது படைப்புகள் அனைத்தையும் அச்சு வடிவில் காணாமலே மறைந்தார்.

வள்ளி (1955), குறும்பா (1966), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1966), கண்மணியாள் கதை (1968), கோடை (1970) ஆகிய
சில நூல்களே அவர் காலத்தில் அச்சு வடிவம் கண்டன. அதனால் அவர் மறைவுக்குப் பின் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு
என்ற அமைப்பு உருவாக்கப் பெற்று மேலும் சில கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. எனினும் அவருடைய அனைத்துக்
கவிதைகளும் வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.

படைப்பில் முழுமை கண்ட மஹாகவியின் எழுத்துக்கள் முழுமையாக நமக்கு எட்டவில்லை. அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு சிறு முயற்சியாகப் ‘பொருள் நூறு’ வெளியிடப்படுவது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.

தமிழ்க் கவிதைக்கு மடை மாற்றம் தந்த பாரதிக்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட
புதுக் கவிதைக்கும் இடையில் சுயம்புவான அடையாளங்களோடு தன் மகத்துவத்தைப் புலப்படுத்தியவர் மஹாகவி.

தமிழகத்துக் கவிதையில் மரபு வடிவங்கள் புயலில் விழுந்த பனங்காடு போல் சாய்ந்து கிடந்த ஒரு தருணத்தில் ஈழத்தில்
அகவலும், கட்டளைக் கலித்துறையும், வெண்பாவும் புத்துயிர் தரித்து உலாவியமைக்கு மஹாகவியும், முருகையனும்,
நீலாவணனும் மிக முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியதே காரணம்.

சங்கத் தமிழ்க் கவிதையின் இயல்பான நீரோட்ட நடையை மஹாகவி தம் வசப்படுத்திக் கொண்டார். பாரதி கவிதையின்
எளிமை கலந்த தெளிவை அதனுடன் கலந்தார். அலை அலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாகக் கவிதையை
மிதக்க விட்டார். அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும்படி செய்தார். வானத்தையும்,
பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தை கனக்கக் கனக்க முன்வைக்காமல், சாளரத் திரையினூடே தெரியும்
நந்தவனம் போல், மெல்லிய காற்றில் அதிரும் வீணைத்தந்திபோல் தத்துவங்களை உணர வைத்தார்.

இதனால் போலும் சண்முகம் சிவலிங்கம், ‘பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால்
அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி’ என மதிப்பிடுகிறார்.

எனினும் ‘யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ என்ற தம் நூலில் மஹாகவியின் தனித்துவங்களை மெச்சுகிற வேகத்திலேயே
கவிஞர் மு.பொன்னம்பலம் பாரதியின் யதார்த்தப் பார்வை மஹாகவியிடம் இருந்தாலும் ஆத்மார்த்தமும் ஆழமும் குறைவு
என விமர்சிக்கின்றார்.

நீலாவணனோடு ஒப்பிட்டு இக்கருத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.

இதனால் மஹாகவியின் மேதைமை, வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தும், அவற்றின் அடிமணல் பிதிர்ந்தோடும் அசைவுகளிலிருந்தும் உய்த்துரைக்கும் பார்வைப் பாங்கானது. நாம் தேடுகிற ஒன்றை யல்ல, அவர் தருகின்ற ஒன்றை வைத்தே அவரை அளப்பது சரியாக இருக்கும்.

கவிதை, காவியம், பா நாடகம், இசை நாடகம், குறும்பா என மஹாகவியின் காவிய உலகம் பன்முகத் தன்மை கொண்டது.
அவை ஒவ்வொன்றிலும் விம்மும் உயிர்த் துடிப்பின் தடயங்கள்.

சாலை ஓரத்துச் சிறுபுல் பாதை இடையிலோர் பசுமையாய் முளைக்கிறது. வேதனைகளை விழுங்கிக் கொண்டு வளர்கிற புல்

சோதனைகளை வெல்லும் குறியீடாகிறது மஹாகவி கவிதையில்...
‘ ஆழப் புதைந்த அறம்போல்
முளைத்தெழுந்தாள்
வாழி அவளுக்கென் வாழ்த்து ’’
என்று கனிவுறப் பேசுவார் மஹாகவி

அவருடைய அகலிகை கற்பனை வளம் செறிந்தது. அவள் சாபத்தால் கல்லாகவில்லையாம். தீண்டியவன் யார் எனத்
தெரிந்ததும்,
‘‘ பார்த்ததே பார்த்த பாங்கில்
பாவை கல்லாகி விட்டாள் ’’

எனப் பெண் பாலவளிடம் பெருங்கருணை காட்டுவார்,

சடங்கு, கல்லழகி, கந்தப்ப சபதம், கலட்டி என்ற காவிய வரிசையில் வரும் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் தனிச்சிறப்புடையது.

‘தற்காலத்துக்கு உரிய வகையில் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கியைபு பெற்ற நவீன காவிய வடிவம் ஒன்றின் மூல கர்த்தா மஹாகவியே’ என எம்.ஏ.நுஃமான் வியப்புறப் பாராட்டுவார். பிறந்தமை முதல் இறந்தமை வரையிலான ஒரு வாழ்க்கையைச் சொல்லும் கவிஞர் உயிர் வாழ்வு மரணத்தால் ஓயாத தொடரோட்டம் என்பார்.

‘ அன்று பிறந்து
இன்று இறப்பதுள்
ஆயதன்று நம் மானிட வாழ்வு காண்
அப்பனே மகனாகி
வளர்ந்து
உயிர் ஓய்தல் அற்று
உயர்வு ஒன்றினை
நாடலே உண்மை....’’

என்பதை வாழ்வின் சாரமாக்குவார்.

கவிதை நாடகம் என்ற பா நாடகம் தாய்த் தமிழக இலக்கியத்துள் வெற்றி ஈட்டாத ஒரு இலக்கிய வகை. அது மட்டுமல்ல இவை
படிப்பு நாடகங்களாய்த் தேய்ந்தன; நடிப்பு நாடகமாய் அரங்கேறவில்லை.  (இன்றைய இராமானுசம், மங்கை நாடகங்கள்
புதியவை.) ஆனால் ‘திருவிழா,’ ‘கோலம்,’ ‘பொய்மை,’ ‘வாணியும் வறுமையும்’, ‘சேனாதிபதி’, ‘முற்றிற்று’, ‘புதியதொரு
வீடு’, ‘கோடை’ என அணி வகுக்கும்.

மஹாகவியின் நாடகங்களில் நெகிழ்ந்த யாப்பு உரையாடல்களுக்கு உகந்த கருவியாய் ஒளிர்கிறது. இவற்றுள் ‘கோடை,’ ‘புதியதொரு வீடு’ நாடகங்கள் பன்முறை மேடை ஏறியவை.

மானுட வாழ்வின் சலனங்களை நாடகப்படுத்தி, நவீன தமிழ்க் கவிதை நாடகக் கலைக்கு முன்னோடியாக மஹாகவி
திகழ்கிறார். பாத்திரங்களிடையே சிக்கலும், முரண்பாடும் அமையப் படைத்த நாடகங்களின் கவிதைப் படுத்தலில் வெகு
லாகவமாக மொழி கையாளப்படுவது மஹாகவியின் தனித்தன்மை.

‘கண்மணியாள் காதை’ வில்லுப்பாட்டாகவும், ‘மாநிலத்துப் பெருவாழ்வு’ தமிழிசைக் குறுங் காவிய மாகவும் மஹாகவியால்
வழங்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் வழங்கும் ( Limerick ) லிமெரிக் வடிவத்தைப் பின்பற்றி, அசல் தமிழ்க் கவிதைகளைக் ‘குறும்பா’ எனத் தந்த
அதிசயத் திறன்

மஹாகவியின் வெற்றிக்கொடி. எஸ்.பொ. எழுதுகிறார்;

‘‘நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலை சிறந்த கவிஞராக
விளங்கும் மஹாகவி அவர்கள் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம்
வகுக்கத்தக்கதாக நூறு குறும்பாக்கள் கொண்ட இக்கவிதைத் தொகையைத் தந்ததின் மூலம் தமிழ்க் கவி வக்ஷூத்தைச்
செழுமைப்படுத்துகிறார்.’’


நகைச்சுவை ததும்பிப் பெருகும் குறும்பாக்களில் ஆழ்ந்த சிந்தனை நயமும் நிரம்பிக் கிடக்கிறது.
‘‘ வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியது குண்டு
நல்லபடி நம் மனிதர்
நச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு ’’

இக் கவிதை வெகு கவலையோடு மனிதனை மனிதன் அழிக்கும் போரின் விளைவைப் பேசும்.

எல்லாச் சந்தங்களும் கைகட்டிச் சேவகம் செய்யும் மஹாகவியின் வர்ணமயமான சொற்கள் மெல்லடி வைத்து எப்படியெல்லாம் ஆனந்த நர்த்தனம் புரிகிறது என்பதைப் பாருங்கள்.
‘ சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்...
வெறு வான வெளிமீது மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும். ’’

உணர்வெனும் பெரும்பதத்துக்கு ஊஞ்சல் கட்டி அழைத்துப் போகும் உன்னதம் மஹாகவியின் கவிதைக் கலை.

புதிய புதிய பரிசோதனைகளைக் கவிதைகளில் செய்து பார்த்த மஹாகவியின் இன்னுமொரு கலை முயற்சி ‘பொருள் நூறு’.
திட்டமிட்டு உருவாக்கியது போல் தோன்றினாலும் அகர வரிசையில் சட்டென்று நினைவில் தட்டிய பொருள்களைக் குறித்த நூறு கவிதைகள் இந்நூலில்.

அகப்பை முதல் வெறுந்தகரம் வரையிலான பொருள்கள் நமக்கு அறிமுகமானவையே. அவற்றின் வெளிப்பாடாக வந்துள்ள
கவிதைகளிலோ எதிர்பாராத பொறிகள் ஒளிந்திருக்கின்றன.‘அம்பு’ என்றொரு கவிதை:

‘ அம்பு வில் நம் மூதாதையர் கருவி
ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்
போர்க்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்
போயினான்.
எய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்
காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது
வீரவான் விழுந்தனன்.... விலாவில்
ஓர் எலும்பின்றி ஒடித்தது குண்டே ’’


காலத்துக் கேற்ற கருவியைக் கையாளாமல், பழமை பழமை என்று பாவனை பேசுவதன் விளைவை வெகு நுண்மையாகச்
சொல்கிறது கவிதை.

கொஞ்சம் நின்று யோசிக்க வைக்கிறார் கவிஞர்.

கவிதை ஒன்று பொருள் நூறு என்று அனுபவப்படும் நேர்த்தி ஒவ்வொரு கவிதையிலும் இழையோடுகிறது. வெறும் வர்ணனைச்
சேர்க்கையோ, சொற்குவியலோ இடம் பெறாமல் ‘மர்மத்தில் எறிவேல்’ போல் பாய்கிறது கவிதை. குறியீடுகள் அர்த்தப்
பன்மையோடு பொருள்கள் ஏந்தி நிற்கின்றன. சுவரில் அடிக்கப்படும் ஆணி ஒரு கவிதைக்குப் பொருளாகிறது. ஆணி இங்கே
அதிகார வர்க்கத்தின் கைக்கருவியாகிறது. அடிமையும் ஆகிறது.

‘‘ அடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே
ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே
அடுத்தவர் கைப்பட் டமைந்ததுன் உருவம்
ஆதலால்
விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி
இருபுறம் கூர் எடுத் தின்னா
புரிவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே. ’’


அடிமைப் படுத்தப்பட்ட சமூகம் ஆற்றல் மிக்கது. இரும்பு மேனியும் உண்டு அதற்கு. ஆயினும் அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட நிலையில் அடி வாங்கத்தான் முடியும். இரண்டு பக்கமும் கூர்மை கொண்டிருந்தால் அடிப்பவன் கையைக் கிழிக்கலாமே. இருக்கிற நிலையின் சித்திரிப்பிலேயே இருக்கவேண்டிய நிலையைக் குறித்தும் குறிப்பாகப் பேசுகிறது கவிதை.

இயந்திரத் தொழில் நுட்ப உலகம் நுண்ணுணர்வுக் கலைகளைக் கொன்று தொலைக்கும் அபாயம் கவிஞரை வாட்டுகிறது.
ஆயினும் புதியவை புயலெனப் புகுவதைத் தடுக்க நம்மால் இயலாது. இந்த முரண்பாட்டிற் பூத்த கவலையை ‘ஏவுகணை’ சுட்டி நிற்கிறது.

‘‘ அறையினின் றொரு விசை அழுத்தவும் சுரங்க
உறையின் நீங்கி உலகு வலம் வந்து
சைகையிற் பொருளை உணர்ந்து சரிவரச்
செய்கையிற் காட்டும் தீவிர வலி எம்
கைகளில்
தேவீ, கலையின் தெய்வமே நீ இக்
காவியம் முடிகிற வரை எம்
சாவினைச் சற்றே தள்ளிவைத் தருள்வையே. ’’

ரயில் சக்கரங்களில் அறைபடப் போகும் தும்பைப் பூவுக்காகக் கலங்கும் மனநிலையை ‘ஏவுகணை’ ஏந்தி நிற்கிறது.

ஒரு ஊடகத்தில் தேர்ச்சி பெற்றவனின் கலைத்திறன் மற்றொரு ஊடகத்தில் சிறப்பது அபூர்வம். இதை விளக்கும் மேலை
நாட்டுக் கதை ஒன்று உண்டு. வெண்கலத்தில் மட்டுமே சிற்பம் செய்யத் தெரிந்தவன் தன் அன்னை இறந்த துயரத்தை ஒரு
சிற்பமாய் வடித்தான். தாயின் கல்லறையில் வைத்தான். மற்றொரு சமயம் அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம்
உண்டாயிற்று. இதனைச் சிற்பமாய் வடிக்கத் துடித்தான். எங்கும் ஒரு துளி வெண்கலமும் கிட்டவில்லை. அதனால்
கல்லறையில் இருந்த துயரச் சிற்பத்தை உடைத்து உருக்கி ஆனந்தச் சிற்பம் படைக்கத் தொடங்கினான். ‘கவிதை’ என்ற கவிதை இந்த உண்மையைப் பேசுகிறது. கவிதை எழுத ஓர் கதைஞன் முற்படுகிறான். இரவு முழுவதும் எழுதிப் பார்த்தான்.

‘‘ மூக்கிலே விரலை மோந்து பார்த்தான்
ஓட்டுக் கூரையை உற்றுப் பார்த்தான்
கோப்பியும் அடிக்கடி குடித்துப் பார்த்தான்
ஈற்றிலே இரண்டொரு நாவல்
தீட்டிப் பார்த்தான் மனையாள் தேற்றி நின்றாளே ’’


கதைஞனின் தோல்வி கவிதையின் வெற்றியாகிவிடுகிற அற்புதத்தைக் கவிதை சுட்டிக் காட்டுகின்றது.

வாழ்வின் முரண்களைப் பகடி செய்து பார்த்தவர் மஹாகவி. ‘கார்’ என்ற கவிதையில் கால் நடையாகச் சென்றபோது
கணபதிப்பிள்ளை நிற்க வைத்துப் பேசி அனுப்பியதையும், திருட்டுப் பணத்தில் கார் வாங்கி அதில் சென்றபோது ‘இருந்துண்டு போ’ என்று மதிப்புத் தந்ததையும் வாழ்வியல் முரண்களாகக் காட்டுவார்.

‘சுமை தாங்கி’ வழிப் போக்கர்கள் தலைச் சுமை வைக்க வழியில் வைத்த கல். அழகுபடுத்திய ஆலயத்துள்ளும் ஒரு கல்
வைக்கப்பட்டுள்ளது.

அது எதற்காக என்று கேட்டு விடையும் பகர்கிறார்:

‘ வழியெலாம் கற்கள் வைத்தார் தமது
சுமையினை இறக்கிச் சும்மா நிற்க
பெரிய
பழியெலாம் சுமக்கப் பாவியர் கூடி
வாயிலும் வளைவுமாய் வளர்ந்த
கோயிலிலும் கல் குடியிருத் தினரே ’’

இரண்டும் சுமைதாங்கிகள் தானாம். ஒன்று வழிச்சுமை சுமக்கவாம்; இன்னொன்று பழிச் சுமை சுமக்கவாம். வேடிக்கையுறக்
கண்டு நகைக்கத் தூண்டுகிறார் மஹாகவி.

மனிதனின் தந்திரங்களையும், ஏமாற்றுக்களையும் தோலுரித்துக் காட்டக் கவிஞருக்கு சங்கரப் பிள்ளையின் தராசு
கிடைத்துவிடுகிறது. பிள்ளை அசகாய சூரர். அவர் தராசில் கடைச் சாமான்களை நிறுத்துக் கொடுப்பதில் நிகரற்றவர்.
‘‘ எங்களூர்க் கடையில் ஓர் தொங்கும் தராசில்
சங்கரப் பிள்ளையர் சாமான் நிறுப்பார்
அதிலே,
ஆனையை அவர் ஒரு தட்டில் ஏற்றிப்
பூனையை மற்றதில் போட்டுக் கொடுப்பார்
எச்சிறிது எப்பெரிதினுக்கும்
ஒப்பு’ என இவர்படி ஓர் உண்மை விளக்குமே.’’

வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நோகாமல் கேலிக் கணைகள் தொடுக்கிற அழகு மஹாகவி படைப்புகளின் தனிச்
சிறப்பு.

மெல்லிய புன்னகைக் கீற்றை வாசகர் உதடுகளில் ஒரு தீபம் போல் ஏற்றி வைக்கின்றன ‘பொருள் நூறு’ கவிதைகள்.
புத்தகமும், புகை போக்கியும், பூசு மாவும், பூட்டும், விளக்கும் விளக்குமாறும் என அவர் எடுத்தாளாத பொருளே இல்லை.

அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியையும், கலம்பகம் பார்த்தொரு கலம்பக்கத்தையும் போலி செய்த காலத்தைக் கடிந்த பாரதியைப்
போல மஹாகவியும் பேசுவார்:
‘‘ இன்னவை தாம் கவி எழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்..’’


தம் கவிப்பயணத் தொடக்க நாட்களிலேயே இப்படிப் பேசியவர்.
சமகால நடப்புகளை எழுத்தில் ஏற்ற வேண்டுமென்பதில் தீவிரம் கொண்டவர். கவிதை நடப்பியலின் சுவடுகளைப்
பதிப்பிக்காவிடில் பயனில்லை என்ற கருத்துக்கொண்டவர்.
‘ இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுக்கள் ’’

அனைத்தும் கவிதையில் சங்கமம் கொள்ள ஆசைப்பட்டவர் மஹாகவி.

ஐன்ஸ்டீன் படைத்த கால விசைக் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை மிஞ்சிப் பயணம் போனால் தூரத்தை மட்டுமல்ல
காலத்தையும் கடக்கலாம். இந்த விஞ்ஞான உண்மையினூடும் மஹாகவியின் மந்திரக் கவிதை பயணம் போகிறது. எத்தனை
எளிதாக இதனை அவர் சாதிக்கிறார் என்பதற்கு ‘காலத்தேர்’ காட்டாகிறது.
‘‘ ‘இன்று போய் நாளை வா’ என்றனன் இராமன்
நன்று, நன்று!
என்று தன்
காலத் தேரினைக் கடுவிசைப் படுத்திச்
சென்றவன் மீண்டனன். சிரித்தான்
இன்று போனவன் நேற்று வந்தனனே’’


மஹாகவியின் படைப்புகள் ஒவ்வொன்றும் இந்த மாயத்தைச் செய்கின்றன. காலத்தை முந்திக் கொண்டு வந்து கைகொட்டிப்
பாடுகின்றன. மரபில் விந்தைகள் புரிந்து வியப்பூட்டுகின்றன.

நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய
எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.தமிழகத்துப் புதுக்கவிதை
பாதை மாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும் ஈழத்தின் நவீன கவிதை மரபுச் சாயலும், புதிய தேட்டமும், பேச்சோசை அழகும், வையப்பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி
வருவதற்குத் தடம் அமைத் தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு.

மஹாகவியின் அனைத்துப் படைப்புகளும் அடங்கிய பெருந்தொகுதிகள் வெளி வந்தாக வேண்டும். அத்தொகுதிகள் புதிய தமிழ்க் கவிதையின் போக்கைச் செழுமைப்படுத்துவதில் சாரமான பங்கு வகிக்கும் என்பது உறுதி.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்துக்குப் பார தூரமான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் மஹாகவியைப் பூரணமாய்
நுகர்வதற்கு ஒரு சாளரத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

மஹாகவியின் ‘பொருள் நூறு’ அச்சு வடிவம் காணும் இந்த நேரத்தில் கவனமாகக் கையெழுத்துப் பிரதியை என்னிடம்
இருபத்தைந்து ஆண்டுகள் முன் ஒப்படைத்த அன்பு நண்பர் ஆர். பத்மநாப அய்யர் அவர்களுக்குப் பெருநன்றி பாராட்டுகின்றேன்.

இத்தனை காலத்துக்குப் பிறகு இந்நூலை நான் கண்டெடுக்கவும், அதனைத் தமிழுலகுக்கு வழங்கவும் தூண்டுகோலாய்த் திகழும்
இலக்கிய போராளி எஸ்.பொ. அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்.

ஈழத் தமிழ் இலக்கிய சேவைக்குத் தம்மை முழுதாக ஒப்படைத்திருக்கும் மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் பொன். அநுரவுக்கும், பொன். இந்ரவுக்கும் என் அன்பைப் புலப்படுத்துகின்றேன். -

128 பக்கங்களைக் கொண்ட பொருள் நூறு மித்ர வெளியீடாக வந்துள்ளது. இதன் விலை ரூ 100.00

128 பக்கங்களைக் கொண்ட பொருள் நூறு மித்ர வெளியீடாக வந்துள்ளது. இதன் விலை ரூ 100.00
தொடர்புகளுக்கு:
Viruba சென்னை, தமிழ்நாடு, India
தொலைபேசி இலக்கம்:
9840254333
t.kumaresan@viruba.com


பதிவுகளுக்கு அனுப்பியவர்: விருபா து.குமரேசன்
t.kumaresan@viruba.com

****************************************

இலக்கியப்பூக்கள்

ரஸஞானி


இலக்கியப்பூக்கள்இங்கிலாந்தில் வருடாந்தம் ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியை நடத்திவருபவரும் காற்றுவெளி என்னும் சஞ்சிகையை வெளியிடுபவருமான முல்லை அமுதன், தமிழ் உலகம் நன்றி கூறத்தக்க சிறந்த பணியொன்றை செய்துள்ளார். 370 பக்கங்களில் 44 மறைந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்களைப்பற்றிய விரிவான
கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார்.

சென்னை காந்தளகம் பதிப்பித்துள்ள இலக்கியப்பூக்கள் என்ற நூலையே முல்லை அமுதன் தொகுத்துள்ளார். மறைந்தவர்களைப்
பற்றிய ஆக்கங்களைத்தொகுக்கும்பொழுது ஏற்படும் சிரமங்கள் பல. குறிப்பாக அந்த அமரர்களின் ஒளிப்படங்களை தேடி
எடுப்பதும் பொருத்தமானவர்களுடன் தொடர்புகொண்டு ஆக்கங்களைப்பெறுவதும் சிரமசாத்தியம்தான். முல்லை அமுதனின் உழைப்பு பெருமதியானது. அது வீண்போகவில்லை.

ஈழத்து பூதந்தேவனார், ம.க.வேற்பிள்ளை, சிவபாதசுந்தரனார், திருஞானசம்பந்தப்பிள்ளை, மகாலிங்கசிவம், பண்டிதமணி சி.
கணபதிப்பிள்ளை, தனிநாயக அடிகள், புலவர் ஞானப்பிரகாசம், புலவர் தேவசகாயம்பிள்ளை, கனக செந்திநாதன், பஞ்சாட்சர சர்மா,
வ.இராசையா, பண்டிதர் வடிவேல், கிருஷ்ணா வைகுந்தவாசன், சிவ.விவேகானந்த முதலியார், சு.வேலுப்பிள்ளை,
அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, வரதர், நந்தி, தில்லைச்சிவன், சொக்கன், புலவர் மிக்கேல்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி,
யாழ்வாணன், ஏ.ஜே.கனகரட்ணா, அப்பச்சி மகாலிங்கம், மு.தளையசிங்கம், பிரமிள், செ.கதிர்காமநாதன், அங்கையன்
கைலாசநாதன், செ.யோகநாதன், செம்பியன் செல்வன், பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா, சிலோன் விஜயேந்திரன்,
நாவண்ணன், ராஜஸ்ரீகாந்தன், சு.வில்வரத்தினம், சி.புஸ்பராஜா, சிவலிங்கம் சிவபாலன், கணபதி கணேசன், முல்லையூரான், குமார்
மூர்த்தி, எஸ்போஸ் ஆகிய 44 அமரர்களின் பல முகங்களை நாம் இந்த நூலில் தரிசிக்கலாம். பலமும் பலவீனமும் கொண்ட
மனிதர்கள் படைப்பாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் சாதனைகளும் சாதுரியங்களும் வாசகர்களுக்கு தம்மைத்தாமே
சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டுகிறது.

தந்தை செல்வாவை காங்கேசன்துறையில் எதிர்த்துப்போட்டியிட்ட வைகுந்தவாசன் பின்னாளில் ஐ.நா. சபையில்
மின்னலெனத்தோன்றி முழங்கியதையும் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சந்தேகநபராக சிறைசென்று மீண்ட சிலோன்
விஜயேந்திரனின் நடிப்புலக பக்கங்களையும், அற்பாயுளில் மறைந்துபோன இலக்கியவாதிகளையும் காலை ஆகாரமாக
இடியப்பமும் வடையும் சுண்டலும் அடையும் ஒரேநேரத்தில் ரசித்து சுவைத்து உண்டு இனிப்பையே தனது தீராத
நேயாக்கிக்கொண்ட (நீரிழிவு) செம்பியன் செல்வனின் சுவாரஸ்யமான வாழ்வையும் இன்னும் சிலரின் வலிகளையும்
ஏமாற்றங்களையும் சொல்கிறது இந்த ஆவணம்.

அவர்களின் ஆற்றல் ஆளுமை வாசகர்களை நிச்சயம் வியக்கவைக்கும். விந்தையான இந்த மனிதர்களின் வாழ்வில்தான்
எத்தனை சோதனைகள்? சில பக்கங்களை படித்து முடித்ததும் அவர்களின் அந்த வாழ்விலிருந்து வெளியே வருவதற்கு சற்று
நேரமாகிறது.

இலக்கியப்பூக்களில் இடம்பெற்றிருக்கும் சிலரை பல எழுத்தாளர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். இந்த நூல் வாசகர்களுக்காக மாத்திரம் தொகுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. எழுத்தாளர்களும் அறிந்துகொள்ளவேண்டிய பல அரிய தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

தொகுப்பாசிரியர் முல்லையமுதன் தமது என்னுரையின் இறுதியில் இப்படிக்குறிப்பிடுகிறார்:- சக எழுத்தாளர்களை நேசிக்கின்ற பக்குவம் யாருக்கும் வந்ததாகத்தெரியவில்லை. வரலாறுகளைத் தேடுகின்ற தேடுதல் முயற்சியும் அரிதாகியே வருகின்றது. ஒரு சிலர் முனைப்புடன் செயல்பட்டு வந்தாலும் போதியதாக இல்லை. எனினும் தேடுவோம். தமிழால் இணைவோம்.

இலக்கியப்பூக்கள் பிரதிகளுக்கு:-

Mullai Amuthan
34. RED RIFFE ROAD.
PLAISTOW - LONDON - E 13 OJX


நன்றி: உதயம்
mullaiamuthan_03@hotmail.co.uk

****************************************

திலகபாமாவின் 'திசைகளின் தரிசனம்'!

'திசைகளின் தரிசனம்'!

நண்பர்களே! எனது பயணக் கட்டுரைகள் காவ்யா வெளியீடாக " திசைகளின் தரிசனம் " என்ற தலைப்பில் வெளி வந்து
விட்டது

அன்புடன்
திலகபாமா

thilagabama
mathi hospital
15/1arumugam road
sivakasi 626123
9443124688

mathibama@yahoo.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner