இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2010  இதழ் 130  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

நன்றி: வடக்குவாசல்
ரவீந்திரர் என்றொரு மாமேதை

சு.கிருஷ்ணமூர்த்தி


ரவீந்திரர் என்றொரு மாமேதை[புது டில்லியிலிருந்து வெளிவரும் 'வடக்கு வாசல்' மாத இதழ் மற்றும் 'வடக்குவாசல்' ஆகியவற்றின் ஆசிரியரும் , வெளியீட்டாளருமான யதார்த்தா கி.பென்னேஸ்வரன் நேர்மையானதொரு படைப்பாளி. 'ராகவன் தம்பி' என்னும் பெயரிலும் அவ்வப்போது எழுதிவருபவர். மேற்படி 'வடக்கு வாசல்' இணைய இதழின் செப்டம்பர் 'ரவீந்திரநாத் தாகூர்' சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. 2011 மே 7இல் ரவீந்திரரின் நூற்றி ஐம்பதாவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளாதொரு சூழலில் மேற்படி 'ரவீந்திரர் சிறப்பிதழாக' 'வடக்கு வாசல்' இணைய இதழ் வெளிவந்திருப்பது பாராட்டுதற்குரியது. அதற்காக ஆசிரியர் கி.பென்னேஸ்வரனுக்கு நமது நன்றி என்றும் உரித்தானதாகவிருக்கும். மேற்படி 'ரவீந்திரர் சிறப்பிதழிலி'ல் 'ரவீந்திரர் என்றொரு மாமேதை' என்றொரு சிறுகதையினை நல்லதொரு, நாடறிந்த மொழிபெயர்ப்பாளரான சு.கிருஷ்ணமூர்த்தி எழுதியிருக்கின்றார். அதனையே இங்கு நாம் மீள்பிரசுரம் செய்கின்றோம்.]

ரவீந்திரர் போன்ற மாமேதைகள் உலகில் வெகு அரிதாகவே தோன்றுகிறார்கள். ஒரு மனிதனின் மனிதத் தன்மையில் எவ்வளவு பகுதி அவனுக்கு இயற்கையாக அமைந்தது. எவ்வளவு அவனது சமகால சமூகச் சூழலால் உருப்பெற்றது என்பதை அறுதியிட்டுக் கூறுவது கடினம். எந்த ஒரு படைப்பாளியின் படைப்பும் அவனது சமகாலச்சூழலின் தாக்கத்துக்கு உட்பட்டதே. அந்த நோக்கில் பார்க்கும்போது ரவீந்திரரின் மேதைமை மலர்ச்சி பெற அவரது சமூகச் சூழல் உறுதுணையாக இருந்தது என்று கூறலாம்.

மேலை நாட்டுக் கல்வி, கலை, பண்பாடு இவற்றுடன் இந்தியர்களுக்கு முதன் முதலில் பெருத்த அளவில் தொடர்பு ஏற்பட்டது வங்காளத்தில் தான். ஆகவே 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வங்காளத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சிதான் இந்திய மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக அமைந்தது. ராஜாராம் மோகன்ராய் இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படுகிறார். உடன்கட்டையேறும் வழக்கத்துக்கு எதிர்ப்பு, உருவ வழிபாடு எதிர்ப்பு, ஆங்கில கல்விக்கு ஆதரவு ஆகிய இயக்கங்களால் அவர் சமூக, ஆன்மீக, கல்வித் துறைகளில் மாற்றங்களுக்கு அடிகோலினார். அவருக்குப்பின் வந்த மகரிஷி தேவேந்திர நாத தாகூர், கேசவ சந்திரசென், பண்டித ஈசுவர சந்திர வித்யாசாகர் ஆகியோர் மறுமலர்ச்சி இயக்கத்தை நடத்திச் சென்றனர். உடன்கட்டை வழக்கம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டது. விதவை மறுமணம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரம்மசமாஜம் வங்காளிகளின் ஆன்மீக வாழ்வில் பெரும் மாற்றத்தை விளைவித்தது. வங்காளமெங்கும், குறிப்பாகக் கொல்கத்தாவில், ஆங்கிலப் பள்ளிகள் தோன்றின.

கலை, இலக்கியம், ஆன்மீகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய ஒரு குடும்பத்தில் ரவீந்திரர் பிறந்தார். அவர் மகரிஷி தேவேந்திரநாத தாகூரின் புதல்வர். ஆகவே ஒரு கலை, இலக்கியப் படைப்பாளிக்கு ஏற்ற சூழல் அவருக்கு இயற்கையாகவே அமைந்து விட்டது. பன்னிரண்டு வயதிலேயே எழுதத் தொடங்கிய அவரது பேனா, அவர் எண்பது வயதில் மரணமெய்தும் வரை எழுதுவதை நிறுத்தவில்லை. அவருடைய படைப்புகளின் எண்ணிக்கை வியப்பளிக்கிறது. அவற்றை முழுமையாகப் படித்துப் புரிந்து கொள்ளபல ஆண்டுகள் பிடிக்கும். அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களையும், கட்டுரைகளையும் படிக்க ஒரு பிறவி போதாதோ என்று தோன்றும்.

ரவீந்திரரின் சிறந்த சாதனை கவிதைதான். எனினும் சிறுகதைப் படைப்பிலும் அவர் சிறந்து விளங்கினார். அவரை "இந்திய சிறுகதையின் தந்தை' என்று கூறலாம். அவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தந்த மொழி எழுத்தாளர்களுக்கு வழிகாட்டிகளாக அமைந்தன.ரவீந்திரரின் சிறந்த சாதனை கவிதைதான். எனினும் சிறுகதைப் படைப்பிலும் அவர் சிறந்து விளங்கினார். அவரை "இந்திய சிறுகதையின் தந்தை' என்று கூறலாம். அவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தந்த மொழி எழுத்தாளர்களுக்கு வழிகாட்டிகளாக அமைந்தன. பாரதியாரும், வ.வே.சு. அய்யரும் ரவீந்திரரின் சில சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். அய்யரின் "குளத்தங்கரை அரசமரம்' கதையில் ரவீந்திரரின் "பசித்த கற்கள்' கதையின் தாக்கத்தைக் காணலாம்.

ரவீந்திரரின் படைப்புத்திறன் ஒரு சில துறைகளோடு நின்றுவிடவில்லை. அவரது மேதைமை பல்வேறு துறைகளிலும் செயற்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் ஆங்கிலக் கல்வி, கட்டுரையாளர் ஆலிவர் கோல்டுஸ்மித்தைப் பற்றி டாக்டர் சாமுவேல் ஜான்சன் கூறுகிறார். ""அவர் தொடாத துறை இல்லை: அவர் தொட்ட துறையெதையும் அலங்கரிக்காமல் விடவில்லை''. இந்தக் கூற்று கோல்டுஸ்மித்தைவிட ரவீந்திரருக்கே அதிகம் பொருந்தும். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல. இசை நிபுணரும், ஓவியருங்கூட. அவர் 2500க்கு மேற்பட்ட பாடல்களை இயற்றியதோடு அவற்றுக்கு இசையும் அமைத்துள்ளார். கருத்துச்செறிவும் ஒலியினிமையும் கொண்ட இப்பாடல்கள் "ரவீந்திர சங்கீத்' என்ற பெயரில் இன்னும் இசைக்கப்பட்டு வருகின்றன. தம் இறுதிப் பருவத்தில் ஓவியங்களும் தீட்டத் தொடங்கினார் ரவீந்திரர். சுமார் பன்னிரண்டு ஆண்டுக் காலத்தில் 3000 ஓவியங்கள் தீட்டியுள்ளார்.

அவர் ஒரு சீரிய சிந்தனையாளருங்கூட அவர் கலை, இலக்கியம், ஆன்மீகம் பற்றியும் தம் காலப் பிரச்சனைகள் பற்றியும் எழுதியுள்ள கட்டுரைகள் பின்வந்த தலைமுறைகளுக்கு வழிகாட்டிகளாக இருப்பதோடு அவரது தொலைநோக்குக்குச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. அவர் இந்து முஸ்லீம்களிடையே நிலவும் வேற்றுமையையும், சாதிப் பிரிவுகளில் இந்துக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வையும் கண்டித்திருக்கிறார். அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறித்தும் எச்சரிக்கை விடுத்தார். அவரது எச்சரிக்கை பிற்காலத்தில் பலித்துவிட்டது.

அவரது தொலைநோக்குக்கு இன்னொரு சான்று ரஷியாவிலிருந்து அவர் எழுதிய கடிதமொன்றில் கிடைக்கிறது. அவர் 1930ம் ஆண்டில் அன்றைய இந்திய அரசாங்கத்தின் விருப்பத்தை மீறி ரஷியா சென்று ரஷியப் புரட்சியால் அங்கு நேர்ந்த மாற்றங்களை நேரில் கண்டு அவை பற்றித் தம் கருத்துக்களை அங்கிருந்து எழுதிய கடிதங்களில் வெளியிட்டார். கல்வி, தொழில் முன்னேற்றம், வறுமையொழிப்பு ஆகிய துறைகளில் சோவியத் ரஷியா அடைந்திருந்த வளர்ச்சி அவரை வியப்புக்குள்ளாக்கியது. ஆனால் அங்கு தனிமனித உரிமைகள் கட்டுப் படுத்தப்படுவதையும் பொதுமக்கள் அரசின் விருப்பங்களுக்கு முற்றிலும் அடிபணிய நேர்ந்துள்ள நிலையையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. தனிமனித ஆளுமையில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த ரவீந்திரருக்கு இந்த நிலை துன்பமளித்தது. இயற்கைக்கு மாறான கட்டுப்பாடுகள் மனிதனின் முழு வளர்ச்சிக்குத் தடையாகும் என்றும், தன் பொருளாதாரத் தேவைகள் நிறைவதால் மட்டும் மனிதன் திருப்தியடையமாட்டான் என்றும் அவர் உறுதியாக நம்பினார். மனிதன் இந்தக் கட்டுப்பாடுகளுக்கெதிராக ஒருநாள் கிளர்ந்தெழுவான் என்று அவர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அதுதான் நிகழ்ந்தது. சோவியத் ரஷியா துண்டுகளாக உடைந்தது.

ரவீந்திரரைப் பற்றிச் சில தவறான கருத்துக்கள் சில தமிழரிடையே நிலவுகின்றன. அவர்கள் வறுமையிலுழன்று, இளம் வயதிலேயே மரணமடைந்த சில தமிழ்க்கவிகள், எழுத்தாளர்களை மனதில் கொண்டு. ""ரவீந்திரர் மேற்குடியில் பிறந்து வசதியாக வாழ்ந்து எண்பதாண்டு வாழ்ந்ததால்தான் அவரால் இவ்வளவு எழுத முடிந்தது. கவியாகச் சிறக்க முடிந்தது'' என்கிறார்கள். இந்தக் கருத்து சரியில்லை. வசதியான வாழ்க்கை வாழ்வதாலோ, நீண்டகாலம் வாழ்வதாலோ மட்டும் அழியாத இலக்கியம் படைத்துவிட முடியாது. வசதியாக நீண்டகாலம் வாழ்வோர் எவ்வளவு பேர்? அவர்களில் எத்தனைபேர் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள்? வாழ்நாளின் அளவைக் கொண்டே ஒரு கலைஞனின் திறனையோ பங்களிப்பையோ அளந்துவிட முடியாது. 26 ஆண்டுகளே வாழ்ந்த கீட்சும் 30 வயதில் மறைந்த ஷெல்லியும், 80 ஆண்டுகள் வாழ்ந்த வேர்ட்ஸ்வொர்த்தையும் 62 வயது வாழ்ந்த கோலரிட்ஜையும் புகழில் விஞ்சிவிட்டனர். தம் வாழ்க்கையின் பெரும் பகுதியை சொல்லொண்ணா வறுமையில் கழித்து 43 ஆண்டுகளே தன்னினைவோடு செயற்பட்ட வங்காளப் புரட்சிக்கவி காஜி நஜ்ருல் இஸ்லாம் 3000 க்கு மேற்பட்ட பாடல்களை இயற்றி ரவீந்திரர் காலத்திலேயே பெரும் புகழ்பெற்றார். தன் நடு வயதில் மும்முரமாக எழுதத் தொடங்கிய சரத்சந்திரர் தான் படைப்பாளியாகச் செயற்பட்ட சுமார் இருபது ஆண்டுகளில் புகழின் உச்சத்தை எட்டியதோடு கதைப் படைப்பில் ரவீந்திரரையும் விஞ்சிவிட்டார்.

ரவீந்திரரின் சாதனைகளை இவ்வாறு சிலர் குறைத்து மதிப்பிடுவதற்கு முக்கிய காரணம் அவருடைய எல்லாப் படைப்புகளும் ஆங்கிலத்திலோ தமிழிலோ மொழி பெயர்க்கப்படவில்லை என்பதுதான். அவருடைய படைப்புகளின் ஒரு சிறு பகுதியே இதுவரை இம்மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய கதைகள், நாவல்கள், நாடகங்கள் அதிகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மொழி பெயர்க்கப்பட்டுள்ள கவிதைகள் அவருடைய மொத்தப்படைப்பின் ஒரு பகுதிதான். மேலும், பொதுவாக கவிதைகளைச் சிறப்பாக மொழிபெயர்ப்பது கடினம். "கவிதை மொழிபெயர்ப்பில் விட்டுப் போவது கவிதைதான்'' என்பது ஓர் அறிஞரின் கூற்று.

குறிப்பாக, உணர்ச்சிச் செறிவும், தத்துவ ஆழமும் சொல்லினிமையும் கொண்ட ரவீந்திரரின் கவிதைகளை மொழி பெயர்ப்பது மிகவும் கடினம். கவிதைகளைச் சிறப்பாக மொழிபெயர்க்க முனையும் மொழி பெயர்ப்பாளருக்கு மூலமொழி, இலக்குமொழி இரண்டிலும் நல்ல புலமை இருப்பதோடு அவர் இலக்கு மொழியில் சிறந்த கவியாகவும் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகொண்ட மொழி பெயர்ப்பாளர்கள் இல்லாத நிலையில் ரவீந்திரரின் கவிதைகளின் தமிழ்மொழி பெயர்ப்புகள் நீர்த்துப்போகின்றன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு கவியின் படைப்பை மதிப்பிடமுடியாது.

ரவீந்திரர் புனைவிலக்கியம் தவிர வேறு பல துறைகளிலும் செயற்பட்டார். எழுதினார், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உரைகள் நிகழ்த்தினார். இவற்றில் பெரும் பகுதி இதுவரை தமிழுக்கு வரவில்லை.

ரவீந்திரர் வறுமையில் உழலவில்லை. ஆனால் அவர் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. அவருக்கு அடிக்கடி பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அவர் சாந்திநிகேதனில் அமைந்திருந்த பள்ளிக்கு அரசு உதவியோ, போதுமான அளவு தனியார் ஆதரவோ கிடைக்காததால் அவர் அதைத் தொடர்ந்து நடத்துவதற்காகப் பூரியிலிருந்த தம் வீட்டையும், தம் நூலகத்தின் ஒரு பகுதியையும், தம் மனைவியின் நகைகளையும் விற்க நேர்ந்தது. அவர் தமக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையின் ஒரு பகுதியையும் அப்பள்ளிக்காகச் செலவிட்டார். அதற்காகப் பணம் தேவைப்படும் போதெல்லாம் அவர்தம் கலைக்குழுவுடன் வெவ்வேறு நகரங்களுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் மூலம் பணம் சேகரித்தார். அவர் தம் 75ம் வயதில் இம்முயற்சியில் டில்லிக்குப் போயிருந்தபோது, அங்கு அவரைச் சந்தித்த காந்திஜி அவர் தம் முதிர்ந்த வயதில் இவ்வாறு தம்மை வருத்திக் கொள்வதைக் கண்டித்து அவருக்கு அப்போது தேவைப்பட்ட 60,000 ரூபாயை ஒரு நண்பரிடமிருந்து வாங்கிக் கொடுத்து அவரை சாந்திநிகேதனுக்குத் திருப்பியனுப்பினார்.

பொதுவாக நீண்ட காலம் உயிர் வாழ்பவர்களுக்கு நேரும் துன்பங்கள் அவருக்கும் ஏற்பட்டன. அவருடைய மனைவியும் குழந்தைகள் பலரும் அகால மரணமடைந்தனர். இந்த அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொண்டு அவர் தொடர்ந்து இலக்கியம் படைத்தமை அவரது திடமான ஆளுமைக்குச் சான்றாகும்.

பெரும்புகழ் ஈட்டுவோர் பொறாமைக் காரர்களின் எதிர்ப்புகளுக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாவது இயற்கை. காய்க்கும் மரந்தானே கல்லடி படும்! ரவீந்திரரும் இத்தகைய தாக்குதல்களுக்கும் அவதூறுகளுக்கும் ஆளானார். வங்காளியில் அவர் புதுமையைப் புகுத்தியது மரபுவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அவர் வங்காளியின் தூய்மையைக் கெடுத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினர். கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் மெட்ரிகுலேஷன் தேர்வின் கேள்வித்தாளில் ரவீந்திரரின் கட்டுரையின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டு அதிலுள்ள பிழைகளைத் திருத்துமாறு சொல்லப்பட்டதாம்! அவர் நோபல் பரிசு பெறுவதற்கு முன்னால் பலர் அவரை அலட்சியம் செய்தனர். அவர்கள் அவருடைய தகுதியைப் புரிந்துகொள்ள ஒரு வெளிநாட்டுப் பரிசு தேவைப்பட்டது. அவர் நோபல் பரிசு பெற்றபோது நூற்றுக்கணக்கான பெரிய மனிதர்களும் அறிஞர்களும் அவருக்குப் பாராட்டு அளிப்பதற்காகக் கொல்கத்தாவிலிருந்து சாந்திநிகேதனுக்கு ஒரு தனி ரயிலில் சென்றனர். அவர்களுடைய முந்தைய தாக்குதல்களால் மனம் நொந்திருந்த ரவீந்திரர் அவர்களுடைய பாராட்டை ஏற்க மறுத்துவிட்டார்.

நமது நாட்டின் தேசிய கீதமான "ஜன கண மன'' நாட்டைக் குறித்துப் பாடப்பட்டதல்ல. அது பிரிட்டிஷ் சக்ரவர்த்தியை வாழ்த்தி எழுதப் பெற்றது என்ற அவதூறு ரவீந்திரர் காலத்திலேயே பரப்பப்பட்டது. இதை இவர் வன்மையாக மறுத்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டு இப்போதும் சிலரால் எழுப்பப்படுவது வருத்தத்துக்குரியது.

ரவீந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்கு அறியாதவர்கள் அவர்மேல் எழுப்பும் ஒரு குற்றச்சாட்டு - அவர்தம் மேற்குடிப் பிறப்பு காரணமாகப் பொதுமக்களிடமிருந்து ஒதுங்கி ஒரு தந்தக் கோபுரத்தில் வாழ்ந்தார். அவர்களது வாழ்வில் கலந்து கொள்ளவில்லை, வங்காளத்தில் அரசியல் கொந்தளிப்பு மிகுந்திருந்த அந்தக் காலத்தில் அவர் அரசியலில் நேரடிப் பங்கு கொள்ளவில்லை என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டும் உண்மையல்ல. கவி நஜ்ருலுக்கும் கதைச் சிற்பி சரத்சந்திரருக்கும் கிடைத்தமாதிரி ஏழை எளிய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லைதான். ஆனால் அவர் மக்களிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. கிழக்கு வங்காளத்திலிருந்த தம் ஜமீந்தாரியைப் பார்வையிடச் சென்றபோது அவர்தம் குடிமக்களுடன் பழகினார். அவர்களுடைய பிரச்னைகளைப் புரிந்து கொண்டார். ஏழை விவசாயிகளை லேவாதேவிக்காரர்களின் சுரண்டலிலிருந்து காப்பதற்காக அவர் விவசாய கூட்டுறவு வங்கியை நிறுவி அதற்கு தம் நோபல் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை அளித்தார். அவர் சாதாரண மக்களை விளித்து "நான் உங்களில் ஒருவன்' என்று எழுதினார்.

ரவீந்திரர் இளம் வயதிலேயே தம்மைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய தேசீய காங்கிரசுக்கு முன்னோடியாகக் கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட "இந்துமேளா'வில் அவர் தாம் இயற்றிய கவிதையைப் பாடினார்.ரவீந்திரர் இளம் வயதிலேயே தம்மைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய தேசீய காங்கிரசுக்கு முன்னோடியாகக் கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட "இந்துமேளா'வில் அவர் தாம் இயற்றிய கவிதையைப் பாடினார். 1905ம் ஆண்டு நிகழ்ந்த வங்கப் பிரிவினை எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை வகித்தவர் அவர்தாம். 1919ம் ஆண்டில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் அவர்தம் "சர்' பட்டத்தைத் துறந்து எழுதிய உணர்ச்சிமயமான கடிதம் நாட்டின் விடுதலை வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணமாகும். திலகர் மீது ராஜத்துரோக வழக்கு நடந்தபோது அவர் திலகரின் சார்பில் வழக்கு நடத்த நிதி திரட்டினார். கொல்கத்தாவில் பிளேக் நோய் பரவியபோது சகோதரி நிவேதிதாவுடன் இணைந்து நோயாளிகளின் சேவையில் ஈடுபட்டார். நாட்டில் ஆட்சியாளர்களின் கொடுமைகள் அளவுக்கு மிஞ்சியபோதெல்லாம் அவர் அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்கவில்லை. அரசு தயாரித்திருந்த புரட்சிக்காரர் பட்டியலில் ரவீந்திரர் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஹிஜ்லி சிறையில் இரண்டு அரசியல் கைதிகள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைக் கண்டிக்க நடைபெற்ற கூட்டத்துக்குத் தலைமை தாங்கியபோது அவருக்கு வயது 70. அந்தமான் தீவில் உண்ணா நோன்பு இருந்த அரசியல் கைதிகளின் மேல் அரசின் அடக்குமுறையைக் கண்டித்து அவர்தம் 76ம் வயதில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதே ஆண்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான அனல் மின் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் அவரது காலத்தில் வங்காளத்தில் அரசியல் இயக்கத்தில் வன்முறை மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தது. அவர் வன்முறையை எதிர்த்தார். அவர் காந்திஜியைப் பெரிதும் மதித்தார். அவரை "மகாத்மா' என்று போற்றினார். ஆனால் காந்திஜியின் சர்க்கா இயக்கம், ஒத்துழையாமை இவற்றில் அவருக்கு நம்பிக்கையில்லை. சட்டமறுப்பு இயக்கத்தில் பொது மக்களின் உணர்ச்சி வெறி எல்லை மீறி வன்முறை நேரும் ஆபத்து பற்றி அவர் எச்சரித்தார். அவர் பயந்தபடியே நிகழ்ந்தது. அவருடைய கருத்துக்கள் போராளிகளுக்கும் காந்தீய வாதிகளுக்கும் கோபமூட்டின. அவர்கள் அவரைத் தேசத்துரோகி என்று சாடினர். எனினும் அவர்தம் நிலைப்பாட்டிலிருந்து விலகவில்லை. தனக்கு இசைவில்லாத நேரடி அரசியலிலிருந்து விலகிக் கொண்டார்.

ரவீந்திரர் வெறும் "நாற்காலி இலட்சியவாதி'யோ இலக்கிய படைப்பாளியோ அல்லர். கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகிய துறைகளில் தம் கருத்துக்களைச் செயற்படுத்தும் முனைப்பு அவருக்கிருந்தது. சாந்திநிகேதனும் ஸ்ரீநிகேதனும் அவரது இந்த முனைப்புக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. அவர்தம் ஜமீந்தாரியில் விவசாய கூட்டுறவு வங்கி நிறுவிய செய்தி முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்தம் மகன் ரவீந்திரநாத் தாகூரைப் புதிய விவசாய முறைகளைக் கற்றுவர அமெரிக்காவுக்கு அனுப்பினார்.

அவர் நாட்டுக்காக மட்டுமின்றி உலகத்தின் நலனுக்காகக் கவலைப்பட்டார். தம் இறுதிப் பருவத்தில் உலகத்தில் தீவிர தேசீயவாதத்தால் வலுப்பெற்று வந்த சண்டைகளையும், குழப்பங்களையும் கண்டு தீவிர தேசீயவாதத்தை எதிர்த்துப் பேசினார், எழுதினார். அவரது மறைவுக்கு மூன்று வாரங்கள் முன்பு அவர் மனித குலத்தை எதிர்நோக்கியுள்ள ஆபத்தைச் சுட்டிக்காட்டி "சப்யதார் சங்கட்' (நாகரீகத்துக்கு ஆபத்து) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். நோய் வாய்ப்பட்டிருந்ததால் அவரே அதைப் படிக்க இயலாத நிலையில் அது அவரது முன்னிலையில் ஒரு பொதுக்கூட்டத்தில் வாசிக்கப் பெற்றது.

ரவீந்திரர் வங்காளத்தின் அல்லது இந்தியாவின் கவி மட்டுமல்லர்: அவர் உலக மகாகவி. அவரது கருத்துக்களின் அழகும் வீச்சும் உலகெங்கும் செல்வாக்கு பெற்றன. முதல் உலகப்போரில் மேற்கு ஐரோப்பியப் போர்க்களத்தில் மடிந்த ஒரு ஆங்கிலக் கவியின் பையில் கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்ததாம்.

"நீங்கள் இருப்பது ஒன்றே இந்தியா சுதந்திரம் பெறவேண்டும் என்பதற்குப் போதிய காரணமாகும்'' என்றார் அமெரிக்க அறிஞர்

நன்றி: http://www.vadakkuvaasal.com/article.php?id=644&issue=74&category=8


 
aibanner

 ©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்