இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2009 இதழ் 120  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நினைவுகளின் தடத்தில் ..
நினைவுகளின் தடத்தில் (39)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்கும்பகோணத்தில் இருந்த இரண்டு வருடங்களின் அனுபவங்கள் எனக்கு புதிதாகவும் உற்சாகம் தருவனவாகவும் இருந்தன. நினைத்துப் பார்த்தால், நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் மாமாவின் கட்டுப் பாட்டில் இருந்ததும், ஒரு சில மாதங்கள் மதுரை வாசம் கட்டுக்களைத் தளர்த்தி சுதந்திரம் தருவதாக இருந்தது. திரும்பவும் உடையாளூர். நிலக்கோட்டையை விட கட்டுப் பாடுகள் அதிகம் நிறைந்த இடம். அப்பாவின், உடையாளூர் கிராம வாசத்தின் கட்டுப் பாடுகள். கிராம வாழ்க்கையின், ஆசாரமான வைதீகத்தின் கட்டுப்பாடுகள். நிலக்கோட்டையிலே மதுரையிலோ இருந்திராத கட்டுப்பாடுகள். ஆனால் எதிலும் நான் ஏதோ யாராலோ சுதந்திரம் மறுக்கப்பட்டதாக உணரவே இல்லை. சூழல் எப்படி மாறினாலும் அதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்ததாகவே உணர்ந்தேன். எந்தவித இறுக்கமும் உணரவில்லை. ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இப்போது அது பற்றியெல்லாம் எழுதும் இக்கணத்தில், சூழல் வெகுவாக மாறிய நிலையில் இறுக்கத்தை எப்படி உணராமல் இருந்தேன் என்பது தெரியவில்லை. கட்டுப்பாடுகளினிடையே இருக்கும் நேரங்களில் அது சுபாவவீகமாகத் தான் இருந்தது. அவை தளர்ந்து, என் இஷ்டத்துக்கு நான் என்னமும் செய்யலாம், எங்கும் போகலாம், யாரும் கேட்பதற்கில்லை என்பது போன்ற ஒரு சூழல் வந்த போது, அதுவும் அந்த சுதந்திரம் அனுபவிக்க வேண்டிய ஒன்றாகவும், அது சுபாவீகமான ஒன்றாகவும் தான் தெரிந்தது. இரண்டு நிலைகளிலும் எனக்கு பெரிய வித்தியாசம் இருந்ததாக மனத்தளவில் உணரவில்லை.

வெகு ஆழமான பதிவுகளை மனத்தில் இருத்திச் சென்ற அனுபவங்கள் மிகச் சாதாரணமாக நிகழ்ந்தவை. ஐந்தாவது படித்துக்கொண்டிருந்த போது, என் பதினோராவது வயதில் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் படிக்கக் கிடைத்தது. படிக்கக் கிடைத்தது. தேடிச் செல்லவில்லை. அந்த வயதில் தான் காந்தியைப் பார்க்க அம்மைய நாயக்கனூருக்கு குறுக்கு வழியில் ஒத்தையடிப் பாதையில் சென்றேன். ஆர் கே நாராயணனின் சுவாமியும் சினேகிதர்களும் படிக்கக் கிடைத்தது. தேடிச் செல்லவில்லை. ஆனால் கிடைத்தவற்றை விட்டு விடவில்லை. பதினாலாவது வயதில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அருணா ஆச·ப் அலி பேச்சைக் கேட்டே ஆகவேண்டும் என்ற ஒரு வேகம் மனதில். ஓடினேன். அருணா ஆச·ப் அலி பற்றியும் அவரோடு ஜெயப்ரகாஷ் நாராயண் பற்றியும் மனதில் ஒரு புரட்சி தீ கொழுந்து விட்டெரியும் பிம்பம் ஒன்று இருந்தது. நிலக்கோட்டையில் இருந்த போது 12-13 வயது காலத்தில் கல்கி பத்திரிகையிலும் ஆனந்த விகடனிலும் வந்த கல்கி, லக்ஷ்மி தொடர்கதைகளைப் பற்றிச் சொல்லவில்லை. அவை என் முன்னே கிடந்தவை. எந்த வயதுப் பிள்ளைகள் படிப்பவை தான். அந்த வயதில் ஹிட்லரின் '(Mein kemph' - எனது போராட்டம்)' புத்தகத்திற்காக கொட்டையூர் போய் நண்பன் வீட்டிலிருந்து வாங்கி வந்தேன். கோலாலம்பூரில் பிரசுரம் ஆனது 600 பக்கப் புத்தகம் என்பது நினைவில் இருக்கிறது. "எனது நாட்டுக்கு, என் மக்களுக்கு ஒரு நல்ல கொள்கையையோ கடைப் பிடிக்க வேண்டுமென்றால் அதை நான் அது பற்றித் தெரியாத நானூறு பேருக்கு முன்னால் வைத்து அவர்களுக்கு அத்திட்டத்தை விளக்கி அவர்களது அனுமதி பெற வேண்டும் என்பதுதான் ஜனநாயகம் என்றால் அது பைத்தியக்காரத்தனமல்லவா?" என்று ஹிட்லர் தன் சுய சரிதையில் ஒரு இடத்தில் (இதே வார்த்தைகளில் அல்ல, இந்த அர்த்தம் தொனிக்கும் எழுத்துக்களில்) எழுதியிருந்தது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. அப்போது ஹிட்லர் இன்னம் ஜெர்மன் சான்ஸலர் ஆகி விடவில்லை. ம்யூனிக் பீர் ஹால் கலவரத்தில் கைதாகி சிறையிலிருந்த போது எழுதப்பட்டது அனேகமாக அது 1921க்கும் 1923க்கும் இடைப்பட்ட காலமாக இருக்கும். இத்தகைய ஒரு விஸ்தாரமான படிப்பு அக்கறையில் வெ. சாமிநாத சர்மா எழுதிய புத்தகங்களும் ( முஸ்த·பா கெமால் பாஷா உட்பட) சுபாஷ் சந்திர போஸின் இளைஞனின் கனவும் இருந்தன. இப்போது நினைத்து பார்க்கும் போது அவை மிக சுவாரஸ்யமான நாட்களாகத் தான் இருந்தன. யோகி சுத்தானந்த பாரதியின் புத்தகங்கள் என்றால் தேடித்தேடி படிப்பேன். சரித்திர பாடம் நடத்திய சுந்தரம் பிள்ளை எனக்கு மிகவும் பிடித்த ஒரு அரிய மனிதராக இருந்தார். அவர் வகுப்புக்களை நான் தவறவிட்டதில்லை. மற்ற எந்த வகுப்பும் எந்தப் பாடமும் எனக்கு சுவாரஸ்யம் அளிக்கவில்லை. தமிழ் பாடப் புத்தகத்தில் மிகச் சாதாரண விஷயங்களை அடுக்கிச் சென்ற அன்பு கணபதி போன்றவர்கள் எப்படி தமிழறிஞர்கள் ஆனார்கள், பாப்பா பாட்டு மாதிரி ஏதோ எழுதிய தேசிக விநாயகம் பிள்ளை எப்படி பாடப் புத்தகத்தில் இடம் பெறும் கவிஞர் ஆனார் என்று எனக்குள் சந்தேகங்கள் எழும். பின் வருடங்களில் அன்பு கணபதி, ஆர் பி. சேதுப் பிள்ளை போன்றவர்களைப் பற்றிய என் அபிப்ராயங்கள் மாறவில்லையே தவிர, தேசிக விநாயகம் பிள்ளையின் ஆசிய ஜோதி, உமர் கய்யாம் பாடல்களைப் படிக்க நேர்ந்த போது அவரைப் பற்றிய என் அபிப்ராயங்கள் மாறின தான்.

ஒரு சில விஷயங்களில் எனக்கு ஏற்பட்ட ஆர்வம் பின் வருட என் ஆர்வங்களுக்கு ஆரம்பமாகவே இருந்தனதான். அது தெரிகிறது. ஆனால், அந்த 14-15 வயதில் இரவு 1 மணிக்கோ என்னவோ விழித்துக்கொண்டு, பாட்டியை அழைத்துக்கொண்டு பாட்டியின் பெட்டியையும் தூக்கிக்கொண்டு தனியே வயல் வழியே மூன்று ஆறுகளைக் கடந்து ஒரு பயணத்தை அப்போது மேற்கொண்ட துணிவு இப்போது இருக்குமா என்பது சந்தேகமே. அப்போது பாட்டி எங்கே இருக்கிறாள் என்று வீடு வீடாகத் தேடிக்கொண்டு 24-25 மைல் தூரம், சுவாமி மலை, பாபுராஜபுரம், உமையாள் புரம் என்று அலைந்தது, பாட்டிமீது இருந்த பாசத்தினால் என்பது இப்போது புரிகிறது. ஆனால் இப்போது அதுபோல் செய்வேனா என்பது தெரியாது. பாசமும் பிடிவாதமும் ஒன்றிணைந்து விட்ட சிறுவயது வேகம் அது. ஆனால் எத்தனை பேருக்கு அந்த வயதில் இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஓரு சிலருக்கு முற்றிலும் வேறு விதமான அனுபவம் இருந்திருக்கக் கூடும். ஆனால் ஒரு சிலருக்குத் தான்.

இப்போது இந்நினைவுகளைத் திரும்ப அசை போடும்போது அப்போது அவற்றில் இருந்த சுவாரஸ்யம் இப்போது இவ்வளவு வருடங்களுக்குப் பின் எழுதும்போதுகூட மங்கி விடவில்லை. ஏதோ ஒரு பாட்டி வீட்டில் தங்கி இரண்டு வருடங்கள் ஒரு பள்ளியில் படித்தோம் என்ற அளவுக்கு அவை சப்பென்று இல்லை தான். இரவு கிட்டத் தட்ட ஒரு மணிக்கு திண்ணையிலிருந்து "திருடன் டா எழுந்து உள்ளே வந்து படுத்துக்கோ" என்று பாட்டி எழுப்ப, வெளியே போய அந்தக் கூட்டதோடு ஸ்டேஷன் வரை சென்று மூன்று மணிக்கு ஒரு கிளூகிளுப்பான கதைத் திருப்பத்தோடு திரும்ப திண்ணைக்கு வந்து படுத்துக் கொண்ட அனுபவம் அந்த வயதில் எத்தனை பேருக்கு இருக்குமோ தெரியாது.

விடுமுறை நாள் ஒன்றில், உடையாளூர் கிராமத்தில், மாலை நாலு மணிக்கு அம்மாவிடம் "எனக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு சாப்டுட்டு போகணும்" என்று அம்மாவிடம் சொல்லி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டே கொல்லைத் தாழ்வாரத்திலிருந்து சமையல் அறைக்குள் நுழைந்த அப்பா, வைதீக ஆசாரங்களைக் கடுமையாகப் பின்பற்றும், எதையும் விட்டுக் கொடுக்காத அப்பா, "ஸ்பெஷல் க்ளாஸாவது மண்ணாவது, பொய் சொல்றான், கறுப்புச் சட்டைக் காரனுங்க போடற மீட்டிங், அதுக்குப் போறான், எப்படியோ கெட்டுத் தொலையட்டும் போ" என்று சலிப்பும் கோபமுமாகப் போக, நான் அன்று சாயந்திரம் கும்பகோணம் காந்தி பார்க்கில் அண்ணாதுரை, ஈ.வே.ரா பேச்சை இரவு வரை கேட்டுவிட்டு பட்டினியோடு யார் வீட்டுத் திண்ணையிலோ படுத்திருந்து மறுநாள் காலையில் உடையாளூரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இதற்கு என்னைத் தயார் செய்தது, மகாமகக் குள மேற்குத் தெருவோடு வடக்கே, அரசலாற்றுக்குப் போகும் திசையில் கொஞ்ச தூரம் நடந்து வலதுகைப் பக்கம் பிரியும் முதல் தெருவில் திரும்பி நடந்தால் ஒரு சின்ன கடையின் எட்டுக்கு எட்டு இடத்திலிருந்த திராவிட கழகம் நடத்திய படிப்பகம் தான். அங்கு விடுதலை, திராவிட நாடு, முல்லை, போர்வாள் இப்படி இன்னும் என்னென்னவோ நிறைய பத்திரிகைகள் அங்கு பரப்பிக் கிடக்கும். கழகம் சாராத ஒரே ஒரு தினசரிப் பத்திரிகையும்கூட அங்கு இருக்கும். பத்திரிகைகள் எல்லாம் தாள் தாளாக ஒவ்வொருவர் கையில் பிரிந்து கிடக்கும். தினசரி பத்திரிகை படிப்பது என்ற பழக்கம் என்னில் தொடங்கியது அங்கு தான். திராவிட கழகத்தைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இவ்விஷயங்களில் அந்நாட்களில் அக்கரை காட்டியதில்லை. இப்போதுதான் கழகங்களுக்கு அந்த அக்கறை இல்லை. ஆட்சியைப் பிடித்து விட்டதால் அதற்குத் தேவையும் இல்லை என்று ஆகியுள்ளது. அந்நாட்:களில், வேறு எந்த கட்சியும், மிக பலமான, பரவலாக வேறூன்றிய காங்கிரஸ் கூட மெத்தனமாகத் தான் இருந்தது. ஆனால் திராவிட கழகம் மேடைப் பேச்சு, சினிமா, நாடகம், பத்திரிகை என எல்லாச் சாதனங்களையும் தன் பிரசாரத்திற்குக் கருவியாக்கிக் கொள்வதில் அக்கறை காட்டியது. காங்கிரஸ் கட்சி இவ்விஷயங்களில் முன்னோடியாக இருந்த போதிலும், இடையில் அது மிகுந்த மெத்தனத்தோடு தன் இடத்தைக் காலி செய்ய கழகம் அதைப் பற்றிக்கொண்டு பூதாகாரமாக வளர்த்துக் கொண்டுவிட்டது.

இந்த பத்திரிகைகளில் திராவிட நாடு எனக்கு ரொம்ப பிடிக்கும். தவிர அண்ணாத்துரையின் பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தது. அடுக்கு மொழி என்று சொல்வார்கள். ஆனால் அந்த மொழி எல்லோருக்குமே பிடித்தது என்று தான் நினைக்கிறேன். அந்நாட்களில் ஈ.வே.ரா, அண்ணாதுரை தவிர திராவிட கழகத் தலைவர்கள் வேறு யாரும் எனக்குத் தெரிந்ததில்லை. என்னைக் கவரவும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். கே.கே நீலமேகம் என்பவர் கும்பகோணத்தில் இருந்த லோகல் தலைவர். டைமண்ட் டாக்கீஸ் இருந்த தெருவில் கொஞ்சம் தள்ளி அவர் வீடு இருந்தது. அவ்வளவு தான். அதற்கு மேல் அவரைப் பார்த்ததுமில்லை. அவர் பேசிக் கேட்டதுமில்லை. ஆனால் பலர் பல பட்டப் பெயர்களோடு தான் பேசப்படுவார்கள். எல்லோருக்குமே ஏதோ ஒரு ஆரவாரமான பட்டப் பெயர் இருக்கும்.
தென்னாட்டு லெனின் பெரியார், தமிழ் நாட்டு ரூசோ பெரியார், தமிழ் நாட்டு இங்கர்சால் என்று தான் ஊர்வலங்களில் முழக்கங்கள் எழும். சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு என்று ஒருவர் நினைவுக்கு வருகிறார். சின்னராசு என்ற பெயர் தான் சிற்றரசு என்று ஆயிற்று நினைக்கிறேன். ஆனால் சி.பி. என்ற ஆங்கில இனிஷியல் என்னவோ மாறவில்லை. இப்படி திராவிட கழகத்தில் எல்லோருக்குமே ஒரு ஆரவாரமான, அலங்காரமான பட்டப் பெயர்கள் இருந்தன. நடமாடும் பல்கலைக் கழகம், பேராசிரியர், திராவிடத் தந்தை, பகுத்தறிவுப் பகலவன் என்று இப்படி. காமராஜ், பக்தவசலம் என்று வெறும் பெயரோடு உலவியவர்கள் திராவிட கழகத்தில் யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலைவரிலிருந்து தொண்டன் வரை எல்லோருக்கும் ஆரவாரம், அலங்காரம் தேவையாக இருந்திருக்கிறது. தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ளவோ அல்லது தம்மை இப்படி உயர்த்திக் காட்டிக்கொள்வதோ அவசியம் என்றோ அவர்கள் நினைத்திருக்கக் கூடும். இப்போது நமக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அன்று இப்பட்டங்கள் ஜனங்கள் மனதில் ஒரு மயக்கத்தைத் தந்தன. தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இன்றும் கூட அந்த மயக்கம் நீங்கியதாகத் தெரியவில்லை. இருப்பினும் அப்போது அண்ணாதுரை வெறும் தளபதியாகத் தான் அறியப்பட்டார். ஆனால் அண்ணாதுரை எம்.ஏ. என்று கட்டாயம் குறிப்பிடப்பட்டார். அறிஞரும் பேரறிஞரும் ஆனது பின்னால் தான். இந்தப் பட்டப் பெயர் கலாச்சாரமும் மோகமும் திராவிட கழகத்தின் அடையாளமாக இருந்தது. வேறு எந்தக் கட்சியின் மூளையிலும் இப்படிப்பட்ட ஒரு பிரச்சார உத்தி தோன்றவில்லை. .அண்ணாதுரையிலிருந்து பலரும் கதைகள், நாடகங்கள் என்று எழுதினார்கள். அன்னாட்களில் டி.கே.சீனிவாசன் என்பவர் வித்தியாசமானவர் என்று சொன்னார்கள். 'ஆடும் மாடும்"- என்றோ என்னவோ ஒரு சிறுகதைத் தொகுதி அவரது வெளிவந்திருந்தது. நான் படித்ததில்லை. அவருக்கு ஏனோ கழகம் ஏதும் விருது தரவில்லை. பின் வருடங்களில் அவர் பெயர் கழகத்திலேயே மறக்கப்பட்டு விட்டது. இதனாலேயே அவரது எழுத்து திராவிட கழகத்தில் மற்றவர் எழுத்திலிருந்து வித்தியாசப்பட்டதாக இருந்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எனக்கு இவற்றில் எல்லாம் ஒரு மயக்கம் இருந்தது. முக்கியமாக அண்ணாத்துரையின் பேச்சிலும் எழுத்திலும். கும்பகோணத்தில் இரண்டு முறை அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவர் பேச்சைக் கேட்கவென்றே இரண்டு முறையும் உடையாளூரிலிருந்ததால், வீட்டில் ஏதோ பொய் சாக்குச் சொல்லி கும்பகோணம் வந்து இரவு ஏதோ வீட்டுத் திண்ணியில் தூங்கி காலையில் எழுந்து ஊர் திரும்பிருக்கிறேன். கழகப் பேச்சாளர்களிலேயே அவரிடம் தான் நாவன்மை மட்டுமல்ல, எந்தக் கருத்தையும் கேட்கத் தூண்டும் வகையில் அழகாகவும் கடூரமின்றியும் சொல்லம் திறனும் இருந்திருக்கிறது. கழகத் தொண்டர்களும், தலைவர்களும் இன்னமும் தம்முள் ஆத்திரம் பொங்கும் போதெல்லாம் 'வந்தேறிகள், கைபர் கணவாய், மத்திய ஆசியவிலிருந்து...." என்றெல்லாம் கொட்டித் தீர்ப்பவர்களாக இருந்தாலும், அன்று, 1947-ல் அண்ணாதுரை இப்படியெல்லாம் பேசியவரில்லை. அவருக்கே உரிய சிரிப்பும், அலங்கார தமிழுமாகச் சொல்வார், "எங்களுக்கு உங்களிடம் பகையில்லை. நீங்களும் தமிழர்கள் தான். ஆரியர் திராவிடர் என்ற பாகுபாடெல்லாம் என்றோ எப்போதோ, ஆற்றங்கரையோரத்திலே, மலர்ச் சோலையிலே, அடர்ந்த காடுகளின் அரவணைப்பில், அன்னாளின் கடைக்கண் கணை வீச, அன்னாரும் அதில் மயங்கி...." இப்படி நாம் ஒன்று கலந்து நூற்றாண்டுகள் பவ கழித்துவிட்டோம்."

அவரது வானொலிப் பேச்சுக்கள் சிறு சிறு வெளியீடுகளாக வந்தன. "கல்வியோ, பதவியோ, பணமோ சாதியை முற்றாக அழித்து விடுவதில்லை. நேரில் பார்க்கும் போது, "நாயக்கரய்யா" என்று குழைந்து பேசும் நாக்கு, தலை மறைந்ததும், "நாயக்கரய்யா" மறைந்து "வடுகப்பய" ஆகிவிடும். என்று அவர் ஒரு வானொலிப் பேச்சில் பேசியது நினைவில் இருக்கிறது. இம்மாதிரியான ஒரு பரந்த பார்வை அவரைத் தவிர கழகத்தவர் வேறு எவரிடமும் காணப்பட்டதில்லை. அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் வெறுப்பு, உரத்தகுரல் வசை கேலி எல்லாம் மாறாது விரவியிருக்கும். அன்று இந்த வேறுபாடுகள் தீவிரமாக எனக்கு உரைத்ததில்லை. அவரவரது சுபாவம் இப்படி, பேசும் தோரணை இப்படி என்றே நினைத்துக் கொள்வேன். ஆனால் இது பொதுவான சாதிப் பாகுபாட்டைக் கண்ட சீற்றம் இல்லை. அவர்கள் குறியிட்டுத் தாக்குவது சாதியை அல்ல, அவர்கள் குரோதம் கொண்டுள்ள சாதியினரைத் தாக்குவதற்கு கையாளும் வெற்றுக் கோஷம் தான் சாதி ஒழிப்பு என்பது சில வருடங்கள் கழித்தே எனக்குத் தெரிந்தது.


நினைவுகளின் தடத்தில் - (40)

வெங்கட் சாமிநாதன்விடுதலை பத்திரிகை அந்நாட்களில் அடிக்கடி வெளியிடும் ஒரு நீண்ட பட்டியல், அது கால் பக்கத்திற்கும் அரைப்பக்கத்திற்கும் இடையிலான அளவினதாக இருக்கும், அந்தப் பட்டியலும் அது பற்றிய விவரங்களும். தமிழ் நாடு அரசின் ஏதோ ஒரு துறையில், இருக்கும் ஊழியர்களில் பிராம்மணர் எத்தனை பேர் என்று அவர்கள் பெயர், அவர்கள் வகிக்கும் பதவி போன்ற விவரங்கள் அந்தப் பட்டியலில் தரப்பட்டிருக்கும். விடுதலையின் கவனம் பிராம்மணர் மீது மாத்திரமே குவிந்திருக்கும். வேறு பத்திரிகைகள் எதுவும் இந்த மாதிரியான கவனிப்பில் ஈடுபட்டதில்லை. எனக்கு அந்தக் காலங்களில், இது வேடிக்கையாக இருக்கும். விடுதலையின் பிராமணர் மீதான அதீத கவனிப்பு நியாயமானதாகவே அப்போது தோன்றிற்று.. பிராம்மணர் குடும்பங்களில் தான் தம் பிள்ளைகள் எவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் படிக்க வேண்டும், வேலைக்குப் போகவேண்டும் என்ற அக்கறை முன்னிற்பதாக இருக்கும். நிலக்கோட்டையில் படித்துக் கொண்டிருந்த போது, "உங்க பசங்க ஒழுங்கா ஸ்கூலுக்கு வர்ரதில்லை, படிக்கிறதில்லை" என்று மாமா (தலைமை ஆசிரியராக) புகார் செய்தால், "ஏதோ படிக்கற வரைக்கும் படிக்கட்டுங்க, அவன் படிச்சு என்ன கலெக்டர் வேலை செய்யப் போறான். இங்கே கல்லாவிலே உக்கார்ரவன் தானே" என்று பதில் வரும். அனேகமாக எல்லோரும் கடை வியாபாரிகள். பள்ளிக்கூடத்தை நடத்தி வந்த ஊரிலேயே பெரிய பணக்காரரான சௌராஷ்டிர குடும்பத்தின் பிள்ளையே அந்தப் பள்ளியில் கிடைக்கும் எட்டாவதுக்கு மேல் படிக்கவில்லை. ஆனால் பின் வருடங்களில் அவன் நிலக்கோட்டை பஞ்சாயத்து சேர்மன் ஆக ஊரில் பெரிய புள்ளியாக உயர முடிந்திருக்கிறது, தன் அப்பாவைப் போலவே. ஆக இதெல்லாம் ஒரு கால கட்ட நிலை என்பது அப்போது யாருக்கும் புரிந்ததில்லை.

எனக்கு என்னவோ, பத்திரிகை படிப்பதும், சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதும் திராவிட கழகம் ஒவ்வொரு ஊரிலும், ஊரின் ஒவ்வொரு மூலையிலும் நடத்திய இந்த மாதிரியான படிப்பகங்களிலிருந்து தான் முதன் முதலில் பழக்கமானது. வேறு எந்த கட்சியும் இந்த மாதிரி தீவிர பிரசார அக்கறை காட்டவில்லை. நிலக்கோட்டையில் இருந்த போது சிறு வயதிலேயே படிக்கத் தொடங்கிய பத்திரிகைகளும், புத்தகங்களும், கதையும் நாவலும் படிப்பதற்காகத் தான். அந்தக் காலத்தில் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த இரண்டாம் உலக யுத்தம் மற்றிய புகைப்படங்கள் நிறைய வரும். அவற்றைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. ஆனால் கும்பகோணம் வந்த பிறகு தான் கதைகள் மீறிய அரசியல் செய்திகள் படிப்பதன் ஆர்வம் என்னில் ஏற்பட்டது. அது வேடிக்கையாக விடுதலை பத்திரிகையுடன் தான் தொடங்கியது. அந்தப் பழக்கம் நான் ஒரிஸ்ஸா சென்று ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த பின்னும் தொடர்ந்தது. ஹிராகுட்டில் சந்தா கட்டி விடுதலை பத்திரிகை வாங்கிய ஒரே ஆள் நான் தான். அங்கு என் அறைக்கு வரும் நண்பர்கள் அங்கு கிடக்கும் விடுதலைப் பத்திரிகையயும் அதன் பிராமணர்களை மாத்திரமே குறிவைத்து செய்யப்படும் துவேஷப் பிரசார செய்திகள் கட்டுரைகளையும் கண்டு, "என்ன சாமிநாதா, இதையெல்லாமா படிக்கிறாய்?" என்று கேட்பார்கள். அது கொஞ்ச காலம் தான் தொடர்ந்தது. பின்னர் அங்கு வேறு பத்திரிகைகள் கிடைக்கவே விடுதலையிலிருந்து நானும் விடுதலை பெற்றேன். ஒரிஸ்ஸா போகும் முன் நான் ஆறு மாத காலம் தங்கியிருந்த ஜெம்ஷெட்பூரில் தங்கியிருந்த வீட்டின் சதுக்கத்தின் ஒரு மூலையில் ஜெம்ஷெட்பூர் நகர நிர்வாகம் நடத்திய ஒரு ரெக்ரியேஷன் க்ளப் கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய ஹாலில் பத்திரிகைகள் எல்லாம் போடப்பட்டிருக்கும். சாயந்திர நேரங்கள் எனக்கு அங்கு தான் கழியும். அங்கு தான் அமுத சுரபி பத்திரிகையும் அதில் சாண்டில்யன் எழுதிவந்த ஜீவபூமி (என்று தான் நினைவு. ராஜபுதன அரசர்களைப் பற்றிய சரித்திர நாவல்)யும் எனக்கு முதல் தடவையாக அறிமுகமாயினர். அதை அடுத்து நான் ஹிராகுட்/புர்லா போனதும், அங்கும் நான் அமுத சுரபி வாசகனாகத் தொடர்ந்தேன். அதில் லா.சா.ராமாமிருதம் என்ற பெயரைப் பார்த்தேன். என் நினைவு சரியென்றால், பஞ்ச பூதக் கதைகள் என்று அவர் எழுதி வந்தார். தமிழ் நடையும் கதை சொல்லும் பாணியும் பெரும் மயக்கத்தைத் தரக்கூடும் என்று முதன் முதலாக எனக்குச் சொன்னது லா.ச.ரா. 1951-ல் நான் பெற்ற அறிமுகம் அது.

இதெல்லாம் கொசுரு செய்திகள். சொல்ல வந்த விஷயம் திராவிட கழகம் நடத்தி வந்த படிப்பகங்கள் வழியாகத் தான் நான் தினசரி பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் பெற்றேன் என்பது முதல் செய்தி. இரண்டாம் செய்தி, கும்பகோணத்தில் எனக்கு அதிகம் பரிச்சயமானது திராவிட கழகக் கூட்டங்கள், பின் அதன் பல தலைவர்கள் வெளியிட்டு வந்த வார பத்திரிகைகள் வழி அரசியல் நடப்புகளில் அதிக ருசி ஏற்பட்டது. அதில் எனக்கு மிகவும் பிடித்துப் போனது, அண்ணாத்துரையின் பேச்சுக்களும், எழுத்துக்களும். அப்போது தான் வ.ரா. எழுதிய ஒரு சின்ன புத்தகம், பெரியாரைப் புகழ்ந்து எழுதியது வெளிவந்திருந்தது. தமிழ் நாட்டுப் பெரியார்கள் என்ற புத்தகத்திலும் பெரியார் ஈ.வே.ரா. என்ற கட்டுரை. இதற்கெல்லாம் திராவிட கழகத்திலிருந்து அண்ணாதுரையைத் தவிர வேறு யாரும் எதிர்வினை காட்டியதாக எனக்குத் தெரியவில்லை. முக்கியமாக விடுதலையில் ஏதும் இல்லை. பெரியாரும் வ.ரா.வைப் பற்றி ஏதும் எழுதியதாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்ற தலைப்பில் ஒரு சிறிய புத்தகம் அண்ணாத்துரை பெயரில் வெளிவந்தது. அதில் வ.ரா.வை புகழ்ந்து எழுதியிருந்தார். வேறு யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு வேளை என் கண்களில் படவில்லையோ என்னவோ. ஆனால் வ.ரா.வைப் பற்றி விடுதலையில் யாரோ ஒருவர் எழுதும் சந்தர்ப்பம் நேரிட்டது. வ.ரா.வின் அறுபதாண்டு நிறைவை ஒட்டி, அவர் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டினையும் நினைவு கூர்ந்து, ஒரு பாராட்டுக் கூட்டமும், ஒரு பணமுடிப்பு வழங்கலும் நடந்தது பற்றி செய்திகள் படித்தேன். அப்போது தான், அந்த விழாவைக் குறித்துத்தான் விடுதலை வ.ரா. பற்றிப் பேசியது. யாரோ ஒருவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குத்தூசி எழுதுவது போல ஒரு பத்தி. குத்தூசி தானா என்பது நிச்சயமாக நினைவில் இல்லைஅதில் என்ன எழுதியிருந்தது என்பதெல்லாம் நினைவில் இல்லை. அக் கட்டுரையின் கடைசி வரி, "வீடு போய்ச் சேர்ந்ததும், வ.ரா. விழாக் கூட்டத்தில் சொன்ன பணமுடிப்புத் தொகை சரியாக இருக்கிறதா என்று கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார்" என்ற வரி நினைவில் இருக்கிறது. வ.ரா. பூணூல் அணியாதவர், பிராமண சடங்குகள், பழக்க வழக்கங்கள் எதிலும் நம்பிக்கை இல்லாதவர். எதிர்ப்படும் பூணூல் அணிந்த எழுத்தாளரிடம் 'இது எதற்கு/" என்று கேட்பவர் என்பதெல்லாம் நான் பின்னால் படித்தறிந்து கொண்டது. அந்த சமயத்தில் நான் அறிந்தது, அவர் பெரியாரையும் அவர் கொள்கைகளையும் பாராட்டியவர் என்பது தான். வ.ரா.வின் சிந்தனைகளும், எண்ணமும் எழுத்தும் எதாக இருந்தாலும், வ.ரா ஒரு பிராமணர். கடைசியில் அவர் சாதிதான் திராவிட கழகத்தவரின் விருப்பையும் ஏற்பையும் தீர்மானிக்கும் விஷயமாக இருந்திருக்கிறது. 'நாங்கள் பார்ப்பனீயத்திற்குத்தான் எதிரிகளே அல்லாது, பார்ப்பனர்களுக்கு அல்ல" என்றெல்லாம் அவர்கள் சொல்லிக்கொண்டார்கள் தான். இருந்தாலும், பிராம்மண துவேஷம் என்பதை அவர்கள் என்றும் எக்காரணத்துக்கும் கைவிடமாட்டார்கள் என்பதெல்லாம் பின் வருடங்களில் தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் அன்று, இப்படிப்பட்ட விருப்பும் ஏற்பும் அண்ணாத்துரையிடம் இருந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அதுவும் அண்ணாத் துரையிடம் எனக்கு பிடிப்பு ஏற்படும் காரணங்களில் ஒன்றாயிற்று.

இதே போல இன்னொரு சந்தர்ப்பமும் அண்ணாத்துரை தவிர மற்ற கழகத்தவரின் கறாரான நிலைப்பாடுகளுக்கு உதாரணமாக இருந்தது. திருவண்ணாமலையில் ரமணமகரிஷி வெகு நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவர், மரணமடைந்த செய்தி வந்தது. அதற்கு முன்னர் சென்னை மாகாண முதன் மந்திரியாக ஒரு குறுகிய காலத்திற்கு இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார், மிக எளியவர், அவர் வந்ததும் தெரியாது, போனது தெரியாது என்று தான் அவர் பதவி வகித்த காலம் இருந்தது. அவர் ஒரு ரமண பக்தர் என்பது, அவர் ரமணாஸ்ரமம் சென்று ரமணரைத் தரிசித்து வந்தது பற்றிய செய்தி ஏதோ வாரப்பத்திரிகையில், கல்கி என்று தான் எனக்கு நினைவு, படங்களோடு வெளிவந்தது. ஐந்தாறு பேர், வரிசையாக நிற்க, நடுவில் ரமணர் அவரது வழக்கமான தோற்றத்தில், அவருக்கு அடுத்து ஓ.பி.ராமசாமி ரெட்டியார். அப்போதே ரமணர், பகவான் ரமண மகரிஷி என்று தான் அழைக்கப்பட்டார். அவருடைய மகத்துவம் பற்றி, பின்னர் தான் நான் பேராசிரியர் கே.சுவாமிநாதன் மூலமும், பால் ப்ரண்டன் புத்தகங்கள் மூலமும் தெரியவிருந்தேன். விடுதலையில் அவர் மரணம் பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. "அவாளுடைய பகவான் புழுத்துச் செத்தார்" என்று. எந்த அரசியலிலும், வெளிவிவகாரங்களிலும் சம்பந்தப் படாது, திருவண்ணாமலையில் தானுண்டு, தன் ஆசிரமம் உண்டு என்று ஒதுங்கி வாழ்ந்த ஒரு பெரியவர், ஒரு துறவி, இறந்த பின்னரும் ஏன் இப்படி எழுதுகிறார்கள்? என்று நான் நினைத்ததுண்டு. ஆனாலும் இதெல்லாம் தலைவர்கள் செய்யும் காரியமல்ல, கீழே இருப்பவர்கள் செய்யும் காரியங்களுக்கு கழகமோ தலைவர்களோ எப்படி பொறுப்பாவார்கள்? என்றும் நான் நினைத்ததுண்டு.

அண்ணாத்துரையின் பெயரை நான் நிலக்கோட்டையில் இருந்த போதே கேள்விப்பட்டிருந்தாலும், அவரை திராவிட கழகத்தின் ஒரு தலைவர், தளபதி என்று அறியப்படுபவர், அந்தக் கட்சியின் மற்ற எந்தத் தலைவரையும் விட நிறைய படித்தவர், எம்.ஏ. பட்டம் பெற்றிருந்த ஒரே தலைவர் என்ற அந்த அளவிலேயே தான் தெரியுமே தவிர, அவர் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்ததும், அவர் மேடைப் பேச்சைக் கேட்டதும், கும்பகோணம் வந்த பிறகு தான். அவைதான் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பை வளர்த்திருந்தன. இதற்கெல்லாம் மேலாக, கும்பகோணத்தில் நான் படித்துக்கொண்டிருந்த இரண்டு வருடங்களில் பல பரபரப்பும், புதுமையுமான சம்பவங்கள் பல நடந்தன. அவற்றில் அண்ணாத்துரை சம்பந்தப்பட்ட விஷயம், அவருடைய கதை வசனத்தில் வெளிவந்த ஓர் இரவு, வேலைக்காரி என்ற இரண்டு படங்கள். அவை பெற்ற வெற்றிகள். காங்கிரஸ் அனுதாபி என்று நினைக்கப்பட்டிருந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாரையே அன்ணாத்துரையின் பேச்சும் எழுத்தும் கவர்ந்து அவர் எழுத்தை சினிமாவாக்க பண முதலீடு செய்ய வைத்ததென்றால், அது ஒரு பெரிய மாற்றம் தான். சாதாரணமாக எதிர்பார்க்க இயலாத மாற்றம். இவை இரண்டும் பெரும் புரட்சியையே விளைவித்தன. கழகத்தவர் மத்தியில் பெரியாருக்கு அடுத்தபடியில் மிகப் பெரிய அளவில் இருந்த அவரது செல்வாக்கு, இப்போது கட்சி எல்லைகளையும் மீறி பொதுமக்களிடையேயும் கூட பரவியது கல்கி அவரை தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா என்று வர்ணித்துப் பாராட்டினார்.

தமிழ் சினிமாவில் அண்ணாத்துரையின் பிரவேசம் ஏற்படுத்திய பரபரப்பான மாற்றம் தவிர இன்னொரு பாதைத் திருப்பத்தை எஸ்.எஸ் வாசனின் சந்திரலேகா என்ற படம் ஏற்படுத்தியது அது பலவகைகளில் பெரிதும் பேசப்பட்டது. அது வரை எந்தத் தமிழ் படமும் கண்டிராத பொருட்செலவையும் பிரும்மாண்ட தயாரிப்பையும், விளம்பரத்தையும் கொண்ட படம் அது. 50 லக்ஷம் செலவில் தயாரான பிரும்மாண்ட படம் என்றே அது விளம்பரப்படுத்தப்பட்டது. யானைகளும் சர்க்கஸ் காட்சிகளும், பெரிய முரசுகளின் மீது அமைக்கப் பட்டிருந்த நடனக்காட்சிகளும், நடனத்தின் முடிவில் அம்முரசுகளைத் திறந்து வெளிப்பட்ட படைவீரர்கள் சண்டையிடும் காட்சியும், எல்லாமே அந்நாளைய ரசிகர்களை மலைக்க வைத்தன. தமிழ் நாட்டில் மட்டுமல்ல அது ஹிந்தியில் டப் செய்யப்பட்டு இந்தியா முழுதும்
திரையிடப்பட்ட போது, ஹிந்தி பட ரசிகர்களையும் அது பிரமிப்பும் அதிர்ச்சியுமடைய வைத்தது. ஹிந்தி பட தயாரிப்பாளர்களின் பொறாமையையும் வாசன் அந்த படத்தின் மூலம் சம்பாதித்துக் கொண்டார். ஒரே நாளில் தமிழ் நாடு முழுதும் திரையிடும் சாதனையை வாசன் தான் முதலில் தொடங்கி வைத்தார். அந்நாட்களில் சந்திரலேகா சம்பந்தப்பட்ட எல்லாமே பிரமிக்க வைத்தன. தமிழ் பத்திரிகைகளில், "ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது போன்று காட்சிகள் அமைந்துள்ளதாக" மதிப்புரைகள் சந்திரலேகாவைப் பாராட்டின. அதிலிருந்து தமிழ் படங்கள் வட இந்திய மார்க்கெட்டையும் தம் கைவசப்படுத்த தமிழில் தயாரிக்கப்பட்ட படங்களை ஹிந்தியில் டப் செய்ய ஆரம்பித்தன. இந்த புதிய பாதைதான் வைஜயந்தி மாலாவை ஹிந்தி நடிகையாக்கியது இதற்கெல்லாம் வழி அமைத்தது வாசன் தான்.

எனக்கு இப்போது சந்திரலேகா பற்றி இரண்டு நினைவுகள் இன்னமும் மறையாது உள்ளன. ஒன்று டி.ஆர்.ராஜகுமாரி பாடுவதாக வரும் ஒரு பாட்டு. அப்போதிலிருந்து இன்றைய நினைவு வரை மிகவும் பிடித்த பாட்டு. "செந்தாமரை மலர்தனை நீ கண்டதுண்டோடி, அதற்கும் என்னைப் போல் சிரிக்கத் தெரியுமோ, அதற்கும் என்னைப் போல் நடக்கத் தெரியுமோ" என்று நீளும் அந்த பாட்டு. இரண்டாவது, படத்தின் கடைசிக் காட்சியில் முரசு நடனம் முடிந்து முரசுகளிலிருந்து படை வீரர்கள் வெளிப்படுவார்கள். அதைப் பார்த்ததும் எதிர்பாராத இந்த விளைவைக் கண்டு அவர் திகைக்க வேண்டும். ஆனால் எதிரி படைகள் முரசிலிருந்து வெளிப்படும் முன்பே அவர் முகம் திகிலடையும். அதன் பின் தான் முரசுகளிலிருந்து வீரர்கள் வெளிப்படும் காட்சி வரும். சில வருடங்களுக்கு முன் இதை சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு பார்த்த போதும் வேடிக்கையாகத் தான் இருந்தது.

தமிழ் சினிமா படங்களின் போக்கே முற்றிலுமாக மாறிவிட்டதன் அடையாளமாகத்தான், 1945-க்கு முன் சுமார் 10 வருடங்களில் 12-ஓ என்னவோ படங்களில் நடித்து தமிழ் நாட்டையே கவர்ந்த நக்ஷத்திரமாக விளங்கிய தியாகராஜ பாகவதர், சிறையிலிருந்து திரும்பி தன்னை மீண்டும் தமிழ் சினிமாவில் ஸ்தாபித்துக்கொள்ள நினைத்துச் செய்த முயற்சிகள் படு பயங்கரமாக தோல்வி அடைந்தன. அதே பாகவதர் தான், பக்திக் கதைகள் தான், அதே மனதை மயக்கும், சொக்க வைக்கும் குரல் தான். இருப்பினும் காலம் மாறி விட்டது. தமிழ் சினிமாவின் ரசனை மாறிவிட்டது.

இன்னொரு புதிய திருப்பம் தான். தமிழ் சினிமாவுக்கு அது புதிது. ஆனால் அண்ணாத்துரையும் வாசனும் சாதித்துக் காட்டியது போல தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக் காட்டிய திருப்பம் இல்லைதான். ராமராஜ்யம் என்ற ஒரு ஹிந்தி படத்தை ஏ.வி.எம். தமிழில் டப் செய்து வெளியிட்டது. அதையும் நான் கும்பகோணத்தில் விஜயலக்ஷமி டாக்கீஸில் தான் பார்த்தேன். ராமாயணத்தின் உத்திர காண்ட நிகழ்வுகளைச் சொல்லும் கதை அது. அது எனக்கு மிகவும் வித்தியாசமான படமாகப் பட்டது. எந்த தமிழ் படத்தையும் விட அது வித்தியாசமானது. மிக அமைதியாக, குரல் எழுப்பாது, நேராக கதையைச் சொல்லும், கதையை மாத்திரம் சொல்லும் பாணியில் அது இருந்தது. என் நினைவுகள் சரியெனில் அதில் ராமனாக நடித்திருந்தது ரஹ்மான் என்ற ஒரு முஸ்லீம் ஹிந்தி நடிகர். ஷோப்னா சம்ரத் என்னும் மிக அழகான மராத்தி நடிகை சீதையாக நடித்திருந்தார்.(இப்போது அவரது பெண்கள் பேத்திகள் எல்லாம் ஹிந்தி சினிமாவின் நக்ஷத்திர நடிகைகள்) பாட்டுக்களும் மிக இனிமையாக இருந்தன. ஒரு பாட்டுத் தான் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. "வீணா, மதுர் மதுர் குச் போல்". அது தமிழில்' "வீணா மதுர மதுர நயம் போல்" என்று பாடப்பட்டது என்று நினைவு. ஆனால் அது தமிழ் சினிமாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

உடையாளூரிலிருந்து கும்பகோணத்துக்குப் படிக்கச் சென்ற இரண்டு வருடங்களில் என் முன் விரிந்த இந்த பரபரப்பு நிறைந்த, ஒரு புதிய உலகம், அப்போது எனக்கு மிக இயல்பாக வாழ்ந்த ஆனால் அவ்வப்போது சுவாரஸ்யம் தரும் உலகமாகத் தான் இருந்தது. இந்த நினைவுகளைப் படிக்கிறவர்களுக்கு நான் பள்ளிக்கூடம் செல்வதையும் படிப்பதையும் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்ததாகத் தான் தோன்றும். அதுவும் உண்மையல்ல. வெளி உலகத்தில் இவ்வளவெல்லாம் நடக்கும் போது புஸ்தகத்திலேயே ஆழ்ந்திருப்பது, கிராமத்திலிருந்து ஒரு சிறு நகரத்திற்கு வந்த ஒரு பதினாலு வயது பையனுக்கு எப்படி சாத்தியம்? வெளி உலகம் தான் மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாக இருந்தது.

12.3.09
vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்