இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2010 இதழ் 122  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நினைவுகளின் தடத்தில் .. (43 & 44 )
நினைவுகளின் தடத்தில் (43)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்இப்போது இதை எழுதும்போது தான், கடந்த காலங்களில் ஒவ்வொருவரும் தம் எதிர் வரும் நாட்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க நேரும்போது, என்னுடைய முனைப்பின்மையும், அதிகம் என்னைச் சிரமப்படுத்திக்கொள்வதில் ஆர்வமின்மையும், என் எதிர்காலத்தை நான் எதிர்கொண்டு அது அமைந்த குணத்திலிருந்து என் போதாமை தெரியவருகிறது.
கிராமத்தில் காத்திருக்கும் நாட்களில் கடைசியாக ஒரு நாள் பரிட்சை முடிவுகள் பத்திரிகையில் வெளியாயின. என் நம்பரும் பத்திரிகையில் அச்சாகி இருந்தது. நான் பாஸ் செய்துவிட்டேன். அப்பாவும் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். எனக்கு இந்த படிப்பு என்ற ரோதனை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது ஆசுவாசம் தருவதாக இருந்தது. உடனே மாமாவுக்கு எழுதினேன். எனக்கு முன்னால் என் நம்பர் தெரிந்து வைத்திருந்த மாமாவுக்கு நான் பாஸ் செய்துவிட்டது அவரே நிலக்கோட்டையில் பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டிருந்தார். உடனே அப்பாவுக்கு அவர் கடிதமும் எழுதிவிட்டார். நான் பாஸ் செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றும், என்ன மார்க் வாங்கியிருக்கிறேன் என்று தெரிந்ததும் மேலே மதராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிட்சை செய்தால் சிரமமில்லாமல் அரசாங்க வேலை கிடைத்து விடும் என்றும் எழுதியிருந்தார். இன்னுமொரு பரிட்சையா, என்று வெறுப்பாக இருந்தது எனக்கு. ஆனாலும் மாமா சொல்வதைத் தட்டமுடியாது. அப்பாவும் அம்மாவும் கூட மாமா சொல்வதைத் தான் கேட்பார்கள். ஏதோ சிக்கலில் அகப்பட்டுக்கொள்ளப்போகிறோம் என்று எனக்கு பயமாகவும் இருந்தது. பரிட்சை ரிசல்ட் வரும் வரை இதுபற்றிய சிந்தனைகளே ஏதும் இல்லாது கவலையற்று நிம்மதியாக லைப்ரரி புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் படித்துக் கொண்டிருந்த எனக்கு, பரிட்சை முடிவுகள் வந்ததிலிருந்து நிம்மதி இழந்து என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலை தொற்றிக்கொண்டது.

ஒரு நாள் அப்பா கேட்டார், "காலேஜிலே சேந்து படிக்கிறயா, சொல்லு. மடத்திலே சேத்து விட்டா உனக்கு சாப்பாடு, இருக்க இடம் கிடைச்சுடும். புஸ்தகத்துக்கும் காலேஜ் சம்பளத்துக்கும் தான் நாம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனா மடத்திலே சேக்கணும்னா அதுக்கு நாலு பேரைப் பாத்து கேக்கணும். கிடைக்கும்னு ஒண்ணும் நிச்சயமில்லை. ஆனா உனக்கு மேலே படிக்கணும்னு இருந்தா சொல்லு." என்று. இதைக் கேட்டுக்கொண்டு பக்கத்திலிருந்த அம்மாவுக்கு சந்தோஷத்திலே முகம் பூரித்து விட்டது. ஆனால் எனக்கு இது எதிர்பாராத இடி. இப்படிக் கூட திருப்பங்கள் ஏற்படுமா என்ன? "வேண்டாம்ப்பா" எனக்கு மேலே படிக்கிறது ரொம்ப கஷ்டம். ஏதாவது வேலைக்குப் போறேன். படிச்சது போறும்." என்று சொல்லி விட்டேன். ஹைஸ்கூல் சம்பளம் மாசம் ஆறு ரூபாய் கட்டறதுக்கே அப்பா பட்ட கஷ்டங்கள் எனக்குத் தெரியும். அது போக, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டால், கும்பகோணத்தில் தங்கி படிக்க சாப்பாடு போட்ட பாட்டிக்கு மாதா மாதம் குறைந்தது பன்னிரண்டு ரூபாய் கொடுக்கப் பட்ட பாடும் எனக்குத் தெரியும். இதையெல்லாம் மறந்து விட்டு இன்னும் நாலு வருஷம் இன்னும் அதிகம் செலவாகும் காலேஜ் படிப்பை எப்படி அப்பாவும் அம்மாவும் நினைத்தும் பார்த்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியாக இருந்தது. அந்தக் கஷ்டங்கள் தெரிந்து தானோ என்னவோ, அப்பாவும் சரி, அம்மாவும் சரி, என்னை அதிகம் வற்புத்த வில்லை.

எனக்கு ஜெம்ஷெட்பூரில் இருந்த மாமா ஒருவரின் நினைவு உடன் வந்தது. அவர் நினைவு மங்காதிருக்கக் காரணம், மதுரையில் பாட்டியுடன் ஒரு தனி வீட்டில் இருந்து கொண்டு மிகுந்திருந்த சில மாதங்கள் படிப்பிற்காகத் தங்கியிருந்த போது, அந்த மாமா திடீரென்று தோன்றினார். அந்த ஜெம்ஷெட்பூரில் ஒரு மாமா இருக்கிறார் என்பது பற்றி அப்போது தான் நான் அறிந்து கொண்டேன். அவர் பார்க்க வந்தது பாட்டியை. பாட்டி அவருக்கு சின்னம்மா. பாட்டியின் மூத்த சகோதரி (அவளும் விதவை தான்) உமையாள்புரத்தில் இருந்தாள். தன் சின்னம்மா மதுரையில் இருப்பது தெரிந்து பாட்டியைப் பார்க்க வந்திருக்கிறார். ஜெம்ஷெட்பூரிலிருந்து விடுமுறையில் வரும்போது அவர் எல்லா உறவினரையும் பார்த்து நலம் விசாரித்துப் போவதை ஒரு சந்தோஷம் தரும் கடமையாகக் கொண்டவர். அவருடைய ஒரு தம்பி, சாம்பசிவம் என்ற பெயர் கொண்டவர் பம்பாயில் இருந்தார். அவரை நான் பார்த்ததே இல்லை. இன்னொருவர், கடைசித் தம்பி, குழந்தை மாமா என்று நாங்கள் அழைப்போம் அவரை. அவர் உமையாள்புரத்திலோ அல்லது பாபுராஜ்புரத்திலோ இருந்தார். கணக்குப் பிள்ளையாக இருந்தார். கிராமத்தில் இருந்த ஆரம்பப் பள்ளியோடு படிப்பை நிறுத்திக்கொண்டவர். மிகத் தமாஷாகப் பேசுபவர். தன்னையே கேலி பேசிக்கொள்வார். அந்த குணமே அவர் எங்களுக்குப் பிரியமானவராக்கியது. அவரைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாக வாய்த்தாலும், அவரைப் பார்த்து அவர் பேசக் கேட்பது என்பது எங்களுக்கு மிக சுகமான அனுபவம். அவர் பேசினால் சுற்றியிருப்பவர் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். ஒரு முறை பாட்டியைத் தேடி சுவாமிமலை, பாபுராஜபுரம், உமையாள்புரம் எல்லாம் கிட்டத்தட்ட 24 மைல் தூரம் சுற்றி அலைந்து கடைசியில் கும்பகோணத்திலேயே கண்டுபிடித்ததைப் பற்றி எழுதியிருக்கிறேன். அப்போது தான் பாட்டியின் சகோதரிகளையும் அவர்களது குடும்பத்தையும் முதன் முறையாகப் பார்த்து அறிந்து கொள்கிறேன்.

ஜெம்ஷெட்பூர் மாமாவை அப்பு என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெயர் நாராயணசாமி. அவரும் பத்தாவது படித்து முடித்ததுமே, வீட்டு வறுமை காரணமாக வேலை தேடி வடக்கே சென்று விட்டார். நாக்பூரில் வேலையில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். கேம்ப்டியோ என்னவோ ஒரு ஊர், நாக்பூருக்குப் பக்கத்தில் என்று சொன்னார்கள். பின் எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் ஜெம்ஷெட்பூர் வாசம். அவர் தனக்கு வேலை கிடைத்ததும், தன் அடுத்த தம்பி சாம்பசிவத்தையும் அழைத்துக் கொண்டதாகவும், இப்போது சாம்பசிவம் (1947-ல்) பம்பாயில் இருப்பதாகவும் சொன்னார்கள். அப்பு மாமா உறவுகளைப் பேணுபவர். முடிந்தவரை எல்லோருக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை உள்ளவர். அவருடைய தங்கையும் மச்சினனும் கூட ஜெம்ஷெட்பூரின் இன்னொரு பகுதியில் டாடா நிறுவனத்தின் இன்னொரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவரை நான் முதல் முறையாகப் பார்த்தது, நானும் பாட்டியும் மதுரையில் என் படிப்புக்காக தங்கியிருந்த போது. அது 1946-ம் வருடம். தன் சித்தி (என் பாட்டி மதுரையில் இருப்பதைக் கேள்விப்பட்டு மதுரைக்கு வந்திருந்தார்.

முதலில் அவர் லக்ஷ்மி நாராயணபுர அக்கிரகார வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கு தான் தன் சின்னம்மா (பாட்டி) இருப்பாள் என்று நினைத்து. அந்த வீடு மூன்று குடும்பங்களைக் கொண்டது. மாமியின் குடும்பம் இருந்த பகுதி வீட்டின் கடைசியில் இருக்கும். விசாரித்துக்கொண்டு உள்ளே போய், பாட்டி கொஞ்சம் தள்ளி இருக்கும் காமாட்சி புர அக்கிரஹாரத்தில் இருக்கிறாள் என்று தெரிந்து பின் இங்கு வந்திருக்கிறார். அதை அவர் வெகு சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டு வந்தார். "எப்படிடா அப்பு கண்டு பிடிச்சே?" என்று பாட்டி சந்தோஷம் பொங்க கேட்க, " அந்த அட்ரஸ் தான் எங்கிட்ட இருந்தது. வாசல்லே நின்ன உடனேயே வாசல்படிலே குழந்தை ஒன்னு சிரிச்சிண்டு இருந்தது. அதுக்கு எப்படியோ தெரிஞ்சுடுத்தே,. "இவா நம்ம மனுஷாதான், இந்த ரத்தம் நம்ப குடும்ப ரத்தம் தான்"னு. பின்னே எனக்குக் கண்டுபிடிக்கிறதிலே என்ன கஷ்டம்? " என்று பதில் சொன்னார். என்ன உற்சாகம்,! என்ன சந்தோஷம்! எவ்வளவு அன்னியோன்ய உணர்வுகள் இருந்தாலும், பார்க்கவேண்டும் என்று எவ்வளவு துடிப்பு இருந்தாலும், வெகு அபூர்வமாகத்தான் இந்த மாதிரி சந்திப்புகள் அவருக்கு நேர்கிறது. அப்படி நேரும்போது சந்தோஷத்தை, பாட்டிக்கும் சரி, அப்பு மாமாவுக்கும் சரி, சொல்லி சாத்தியமில்லை. எழுத்தில் வராது அது.

ஒரு மணி நேரம் இருந்தார். நிறைய பேசினார்கள். அதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. காணாமல் போன சின்ன மாமாவைப் பத்தியும் பேச்சு வந்தது. "வருத்தப்படாதே. எங்கேயும் போயிட மாட்டான். வந்துடுவான் பாரு. பகவான் அப்படி ஒண்ணும் நம்மைக் கைவிட்டுட மாட்டார்" என்று பாட்டிக்கு மாமா சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என் பக்கம் திரும்பி, "இவன் தான் தங்கம் பிள்ளையா? இப்பத் தான் பாக்கறேன். நன்னா படிக்கறானா? என்று கேட்டார். பாட்டி எனக்கு நல்ல சர்டிபிகேட்டாக ஒன்று கொடுத்தாள். "சொன்னதைக் கேட்டுண்டு நன்னா படிக்கறான். இவனாவது முன்னுக்கு வந்து குடும்பத்தை ஒப்பேத்தணும்," என்றாள். மாமா என்னைத் தட்டிக்கொடுத்து, "நன்னா படிக்கணும். படிச்சுட்டு எங்கிட்டே வந்துடு. நான் வேலை வாங்கித் தரேன், என்ன படிக்கிறயா நன்னா?" என்று வாத்சல்யம் ததும்ப சொன்னார். அவருக்கு ஒண்ணுவிட்ட தங்கை, தங்கத்திடம் (என் அம்மாவிடம்) பிரியம் அதிகம் என்று தெரிந்தது.

"நான் அப்பு மாமாவுக்கு எழுதட்டுமா அம்மா? நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு ஒரு வேலை வாங்கித் தர முடியுமா? நான் ஜெம்ஷெட்பூருக்கு வரட்டுமா?" ன்னு கேட்டு எழுதறேனே," என்றேன் அம்மாவிடம். அம்மாவுக்கு அதிலும் சந்தோஷம். உடனே மாமாவுக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டு விட்டேன். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், மாமாவுக்கு என்னை ஞாபகம் இருக்குமா, பதில் எழுதுவாரா, என்றெல்லாம் மண்டையைக் குடைந்து கொண்டு இருந்தது தான். ஆனாலும் ஒரு கார்டு எழுதுவதில் என்ன சிரமம்? நடப்பது நடக்கட்டும் என்று மாமாவுக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டுவிட்டேன்.

/28.9.09

நினைவுகளின் சுவட்டில் - (44)

- வெங்கட் சாமிநாதன் -


ஆமாம். ஒரு கார்டு தான். அதில் அதிகமாக ஒன்றும் எழுதவில்லை. ஒரு கார்டில் எவ்வளவு எழுத முடியும்? மேலும் அதிகம் எழுத எனக்கு என்ன தெரியும்?

"மாமா அவர்களுக்கு அனேக நமஸ்காரம். நான் சாமிநாதன், உடையாளூரிலிருந்து எழுதுகிறேன். தங்கத்தின் மூத்த பிள்ளை, இப்போது எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் செய்து விட்டேன். இரண்டு வருஷங்களுக்கு முன் நீங்கள் பாட்டியைப் பார்க்க மதுரை வந்திருந்தபோது, பாஸ் செய்ததும் எனக்கு வேலை வாங்கித் தருவதாக சொன்னீர்கள். ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். இப்போது நான் உங்களிடம் ஜெம்ஷெட்பூருக்கு வரட்டுமா? வேலை கிடைக்குமா? உங்களிடமிருந்து வரச்சொல்லி லெட்டர் வந்ததும் புறப்பட்டு வருகிறேன். நமஸ்காரம், இப்படிக்கு உங்கள் அன்புள்ள,....

இப்படித்தான் ஏதோ எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். கறாராக, businesslike என்பார்களே அந்த மாதிரி. அப்படித்தான் எழுதினேன் என்பது பின்னால் மாமாவிடமிருந்து வந்த கடிதத்தில் தெரிந்தது. அது பற்றிப் பின்னால்.

அப்பா வந்ததும், "உங்க பிள்ளை வடக்கே மாமா கிட்டே போகப் போறானாம். வரட்டுமா, வேலை வாங்கித் தரேளா?-ன்னு கேட்டு அப்புக்கு லெட்டர் எழுதிப் போட்டிருக்கான்." என்று அம்மா சொன்னாள். அப்பா என்னைப் பார்த்தார். "ரொம்ப பெரியவனாயிட்டானோல்யோ! தானே எல்லாக் காரியமும் செஞ்சுக்க ஆரம்பிச்சுட்டான் போல்ருக்கு. அது சரி, முதல்லே போய் மார்க் என்ன வாங்கிருகேன்னு பாத்துட்டு வாடா, மாமா சொல்லிருக்காளே, நல்ல மார்க் வாங்கினா, என்னமோ பரிட்சை எழுதினா, இங்கேயே வேலை கிடைக்கும்னு. மாமா சொல்றதைக் கேக்காம, அதிகப் பிரசங்கித்தனமா உன்னோட அப்பு மாமாக்கு லெட்டர் போட்டுட்டே." என்று கொஞ்சம் கோபத்தோடு சொன்னார். "ஏண்டா, ஏதோ பேச்சுக்கு எதையோ சொன்னா அத பெரிசா எடுத்துப்பாளாடா, ரண்டு வருஷம் முன்னாலே சும்மா நீ நன்னா படிக்கணும்கறதுக்காகச் சொன்னதை, இப்போ நீ அப்படிச் சொன்னியேன்னு எழுதுவாளாடா, அவனுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கப் போறதா என்ன?" என்று சொல்லிக்கொண்டிருந்தார். அம்மாவையும் கோபித்துக் கொண்டார், "அவன் தான் எழுதினான்னா, நீயாவது அவனுக்கு புத்தி சொல்லப்படாதா? என்று.

பிறகு இரண்டு நாள் கழித்து அதெல்லாம் மறந்து விட்டது. கும்பகோணம் போய் ஸ்கூல்லே யிருந்து செர்ட்டிபிகேட் வாங்கிவரணும். மார்க் என்ன வாங்கிருக்கேன்னும் தெரியும். ஒரு நாள் போய் டிரான்ஸ்பர் செர்டிபிகேட், ஸ்கூல செர்டிபிகேட் எல்லாம் வாங்கிவந்தேன். மொத்தம் 600-க்கு 306 மார்க், ஆங்கிலத்தில் 38, ஹிந்தியில் 49. தமிழில் தான் நிறைய -56. மற்ற பாடங்களில் எல்லாம் 53, 54 என்று தமிழுக்கு ஒன்றிரண்டு குறைய. பரிட்சை அன்றைக்கு ஒரு மணி நேரம் முன்னால் போய், வீரராகவனிடம், படிக்காத பாடங்கள் ஒவ்வொன்றிலும் என்ன சொல்லியிருக்கு? என்று தமிழில் கேட்டுக்கொண்டு அவ்வளவு லக்ஷணமாக எழுதிய ஹிந்தி பரிட்சையில் கிடைத்த மார்க் 49. எப்படி இவ்வளவு மார்க் கிடைத்தது என்பது ஒரு ஆச்சரியம். ஆனால் முக்கியமா இங்கிலீஷில் 38 தான். மதராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுத இந்த மார்க் போதாது. அதுவே எனக்கு நிம்மதியாக இருந்தது. மாமாவுக்கு எழுதிப் போட்டுடலாம். மார்க் போதாது என்று. அப்படி ஒரு சந்தோஷம்.

மாமாவுக்கு பரிட்சையில் கிடைத்த மார்க்குகளைச் சொல்லி அப்பா லெட்டர் போட்டார். உடனே மூன்றாம் நாளே மாமாவிடமிருந்து பதில் வந்து விட்டது. சர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுதுவதற்கு இந்த மார்க் போதாது. இருந்தாலும் பரவாயில்லை. மறுபடியும் மார்க் குறைவா இருக்கற இங்கிலீஷ்லே மாத்திரம் நன்னா மறுபடியும் படித்து பரிட்சை எழுதினால் நிச்சயம் மார்க் நிறையா வரும். கவலைப்பட வேண்டாம்." என்று எழுதியிருந்தார். இது எதிர்பார்த்தது தான் என்றாலும், நிஜமாகவே ஒரு லெட்டர் வந்து சேர்ந்ததும், மனசு உடைந்தே போயிற்று. மறுபடியும் படிக்கணுமா?, மறுபடியும் பரிட்சை எழுதணுமா? என்று.

"என்னடா சொல்றே, உன்னோட மாமா இப்படி எழுதியிருக்கானே, மறுபடியும் பரிட்சை எழுதி மார்க் நிறைய வாங்கினா, இங்கேயே வேலை கிடைக்குமே, அதுவும் கவர்ன்மெண்ட் வேலை? என்று அப்பா வேற ஆரம்பித்துவிட்டார்.

நான் உடனே ஒன்றும் பதில் சொல்லவில்லை. "ஏண்டா நான் கேக்கறேனோல்யோ, பதில் சொல்லேன். மாமாவுக்கு என்ன பதில் சொல்றது?," என்று எரிச்சலோடு அதட்டிவே, "பாக்கலாம்பா, அப்பு மாமாகிட்டேயிருந்து ஏதாவது லெட்டார் வரதான்னு பாக்கலாம். அப்புறம், மறுபடியும் பரிட்சை எழுதணும் அதிலே மார்க் நிறைய வரணும். அப்புறம் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு எழுதணும். அப்படியும் வேலை கிடைக்கும்னு என்ன நிச்சயம். அதிலே பாஸ் பண்றவா எல்லாரையும் எடுத்துக்கப் போறதில்லே. எத்தனை காலி இடம் இருக்கோ அத்தனை பேரை எடுத்துண்டு பாக்கி பேரை விட்டுடுவா". என்று சொன்னேன். இப்படி ஒரு சிக்கல் இருக்கறதைக் கேட்டதுக்கு அப்புறம் அதில் அவருக்கு சுவாரஸ்யம் விட்டுப் போயிற்று என்று தான் தோன்றியது.

கொஞ்ச நாள் இப்படியே வீடு இறுக்கமாகத் தான் இருந்தது. அப்பா மாத்திரம் அப்பப்போ, "யாராவது சொல்றதைக் கேட்டாத்தானே, எப்படியோ ஒழிஞ்சு போங்கோ, உன்பாடு, அவன்பாடு," என்று அம்மாவிடம் எரிச்சல் பட்டுக்கொள்வார்.

நாட்கள் செல்லச் செல்ல ஜெம்ஷெட்பூரிலிருந்து ஒன்றும் வராதோ என்றும் சந்தேகம் வரத் தொடங்கியது. அப்படி ஒன்றும் நாட்கள் ஆகிவிடவில்லை. தபாலெல்லாம் ரயிலில் தானே வந்தாகணும்? உடனே பதில் எழுதுவதாக இருந்தாலும் பதில் வர ஒருவாரமாவது ஆகுமே. ஆனாலும் வீட்டில் இருந்த இறுக்கமான சூழலில் ஏதோ யுகம் போவது போலத் தான் இருந்தது. இனி எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை, மறுபடியும் பரிட்சை எழுத வேண்டும் போலிருக்கிறதே என்று பயந்து கொண்டிருந்த சமயத்தில் ஜெம்ஷெட்பூரிலிருந்து அப்பு மாமா கடிதம் வந்தது. ஒரு கார்டு தான். அப்பாவுக்கு எழுதியிருந்தார். "உங்க பிள்ளையாண்டான் சாமிநாதன்கிட்டேயிருந்து ஒரு கார்டு வந்தது. அவனுக்கு இங்கே வேலை கிடைக்குமான்னு கேட்டு எழுதியிருந்தான். அவன் எழுதினது உங்களுக்கு தெரியுமோ இல்லே ஏதோ ஆர்வத்திலே அவனே எழுதினானா என்று தெரியவில்லை. எதற்கும் உங்கள் சம்மதத்தின் பேரில் தான் எழுதியிருக்கிறான், உங்களை விட்டு அவன் இவ்வளவு தூரம் வருவதில் உங்களுக்கு ஆ§க்ஷபணை இல்லை என்று எனக்குத் தெரிந்தால் நல்லது என்று பட்டது. மற்றபடி அவன் தனியாகப் போய் வேலை பாக்கணும், அப்பா அம்மாக்கு உதவியா இருக்கணும்னு அவனுக்கே தோணினது சந்தோஷமா இருக்கு" என்று எழுதியிருந்தார்.

அந்த ஒரு கார்டு வீட்டில் இருந்த இறுக்கத்தை நீக்கி ஒரு மாதிரியாக சுமுக நிலை திரும்ப வைத்துவிட்டது. 'அப்ப்....ப்...பா' என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு, எனக்கு மாத்திரமில்லை. எல்லோருக்குமே. 'போட்டு வைப்போமே, பதில் வந்தால் சரி, வராவிட்டாலும் சரி' என்று நான் எழுதிய கார்டுக்கு எதிர்பாராத விதமாக நிரம்ப அக்கறையோடும் வாத்சல்யத்தோடும் வந்த பதில் எல்லோருக்கும் சந்தோஷத்தை அளித்தது. உடனே அப்பாவே தன் கைப்படவே பதில் எழுதிப் போட்டு விட்டார்.

இதன் பிறகு ஏழெட்டு நாட்களுக்குள் அப்பு மாமாவிடமிருந்து இன்னொரு கார்டு வந்துவிட்டது. முன்னர் அவரிடமிருந்து கடிதம் வராத நாட்கள் தந்த இறுக்கம் இப்போது இல்லை. கட்டாயம் அவரிடமிருந்து கடிதம் வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது. அத்தோடு நிலக் கோட்டை மாமாவின் ஆலோசனைகள் இப்போது பயமுறுத்துவதாக இல்லை

அப்பு மாமா அப்பாவுக்கே எழுதியிருந்தார். "எஸ்.எஸ்.எல்.ஸி சர்டிபிகேட் போக இன்னும் என்னென்ன உண்டோ எல்லாவற்றையும் பையன் வரும்போது கொடுத்து அனுப்புங்கள். அத்தோடு வெள்ளை டிரில் துணியில் நாலு பாண்ட்டும் வெள்ளை பாப்ளினில் நாலு சர்ட்டும் புதிதாக அவனுக்கு தைத்துக் கொடுத்து அனுப்புங்கள். மதராஸ் செண்டிரலிலிருந்து புறப்படும் கல்கத்தா மெயிலில் டாடாநகருக்கு என்று சொல்லி டிக்கட் வாங்கவேண்டும். சாயந்திரம் கல்கத்தா மெயிலில் ஏறினால் ஒரு நாள் விட்டு மறுநாள் காலை கார்க்பூர் ஸ்டேஷன் வரும். அங்கு இறங்கி கல்கத்தாவிலிருந்து பம்பாய் போகும் மெயிலில் ஏறினால் சாய்ந்திரம் நாலுமணிக்கு டாடா நகர் வந்து சேரும். நான் ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போகிறேன். கரக்பூர் ஸ்டேஷனுக்கு ரயில் வந்ததும் சாமிநாதனை கரக்பூரிலிருக்கும் என் சினேகிதர் வந்து அழைத்துக்கொண்டு போவார். பின் பம்பாய் மெயிலில் ஏற்றி விடச் சொல்லி எழுதுகிறேன். கவலை வேண்டாம். நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன். உங்கள் சம்மதத்தோடுதான் சாமா இங்கு வருகிறான் என்பதால் என் மனசில் ஒரு நிம்மதி. என்றைக்கு மதராஸிலிருந்து புறப்படுவான் என்பதை மட்டும் எனக்கு முன்னதாகவே தெரியப்படுத்துங்கள்" என்று இவ்வளவு விஷயங்கள் இருந்தன அந்த கார்டில்.

இவ்வளவோடு, இந்த கார்டிலோ அல்லது முந்தி வந்த கார்டிலோ, அம்மாவைப் பற்றியும் ஒரு வரி எழுதியிருந்தார். "தங்கம் பேர் மாத்திரம் தங்கம் இல்லை. அவளே தங்கம் தான்." என்று. அம்மாவின் சந்தோஷத்தைச் சொல்லி சாத்தியமில்லை. அப்பு அண்ணாகிட்டேயிருந்து உடனே இவ்வளவு கரிசனமும் அன்போடும் லெட்டர் வந்தது மட்டுமில்லை. அதில் தன்னைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து எழுதியிருந்தது, அம்மா இப்படியெல்லாம் தன்னைப் பற்றி யாரும் சொல்லிக் கேட்காத வார்த்தைகளாதலால், ஏதோ ஆகாயத்தில் தான் மிதந்தாள். இந்த வரி எங்களுக்கெல்லாம் மிக ஆழமாக நினைவில் பதிந்த வரி. உண்மையில் சொல்லப் போனால், அப்பு மாமா 1949 ஜூலை மாதம் எப்போதோ எழுதிய அந்த இரண்டு கார்டுகளையும் பத்திரப்படுத்தித் தான் வைத்திருந்தேன். இப்போது அந்த கார்டுகள் இரண்டையும் இங்கே அப்படியே ஸ்கான் செய்து தர ஆசைப்பட்டு தேடினேன். கிடைக்கவில்லை. இப்போது திரும்பிப் பார்க்கும் போது என் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தைத் தந்தவை அந்த கார்டுகள் இரண்டும். அவை தொலைந்து போயிற்று என இப்போது தேடும் போது தெரிந்ததும் மந்துக்கு மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது. கடந்த வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தின் சுவடு இப்போது இல்லாமல் போய்விட்டது. இருப்பது நினைவுகள் மட்டும் தான். எப்போது எந்த சந்தர்ப்பத்தில் தொலைந்திருக்கும் என்பதும் தெரியவில்லை.

ஆக, என் பிரச்சினைகள் ஒரு வழியாக அமைதியாகத் தீர்ந்தன என்று தான் சொல்லவேண்டும். நான் அப்பு மாமாவின் அழைப்பின் பேரில் ஜெம்ஷெட்பூர் போய் வேலை தேடுவது என்பது எவ்வித சுணக்கமுமில்லாமல் எல்லோரும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்ட விஷயமாயிற்று.

ஆனால் திரும்ப இங்கிலீஷ் பாடத்துக்கு பரிட்சை எழுதுவது, சர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுதுவது என்ற பயங்கள் விலகியதில் எனக்கு ஒரு நிம்மதி உணர்வு ஏற்பட்டது உண்மை தான். ஆனால், தமிழ் நாட்டை விட்டு வடக்கே போய் இனி வாழ்ப்போகிறோம் என்ற சில வாரங்கள் முந்திய எதிர்பார்ப்பும் கனவும் இப்போது நிச்சயமானதும் அது எனக்கு ஒரு மன அமைதியைத் தந்ததே தவிர ஏதும் வானத்தில் மிதப்பதான சந்தோஷங்கள் ஏதும் இருக்கவில்லை. கனவாக எண்ணியது நனவாகப் போகும் கட்டத்தில் அது மிக இயல்பான ஒரு நடப்பாகிவிட்டது போலும்.

19.10.09 '
vswaminathan.venkat@gmail.com
vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்