இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2010 இதழ் 124  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நினைவுகளின் தடத்தில் .. (45 & 46 )
நினைவுகளின் தடத்தில் (45)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்எனக்குத் தான் பரிட்சை, சர்வீஸ் கமிஷன் என்று வந்து பயமுறுத்திய சொப்பனங்கள் மறைந்து இயல்பான சகஜ நிலையில் ஜெம்ஷெட்பூர் பயணம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்திருந்தேனே ஒழிய, வீட்டில் சுற்றி என்ன நடக்கிறது, பெற்றோருக்கு என்ன புதிய கவலைகளை என் ஜெம்ஷெட்பூர் பயணம் முன் நிறுத்தியது என்பது பின்னர் தான் தெரிந்தது. புதிதாக துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும், ஜெம்ஷெட்பூரு க்குப் போக ரயில் டிக்கட் வாங்கவேண்டும், அங்கு வேலை கிடைக்கும் வரை செலவுக்கு ஏதாவது பணம் வேண்டும், மாமா வீட்டில் தான் இருப்பேன் என்றாலும், வெறும் கையோடு போகமுடியுமா? இதற்கெல்லாம் பணத்துக்கு என்ன செய்வது என்ற கவலை அவர்களுக்கு இருந்திருக்கவேண்டும். திடீரென்று ஒரு நாள் அப்பா வீட்டுக்கு வந்த போது, அம்மா கவலையுடன் காத்திருந்தவள், என்ன கிடைத்ததா? என்று கேட்டாள்.அப்பா கையில் ரூ 200. நான் இருவரையும் விழித்துப் பார்த்தேன். "உனக்காத்தாண்டா. நீ போறதுக்கு பணம் வேண்டாமா? என் சங்கிலியை அடகு வச்சு வாங்கிண்டுவந்திருக்கு. நீ சம்பாதிச்சு பணம் அனுப்பினேன்னாத் தான் அது எனக்குத் திரும்பி வரும். அப்பாவாலே முடியாது." என்றாள் அம்மா. பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது. இதெல்லாம் பத்தி நான் யோசிக்கவே இல்லை. யோசிக்கணும்னும் எனக்குத் தோணலை. ஆனால் அப்பு மாமாவின் ரண்டாவது லெட்டர் வந்ததிலிருந்து அவர்களுக்கு இந்தக் கவலை தான் அரித்துக்கொண்டிருந்திருக்கிறது. இந்தக் கவலைக்கு வழி பார்த்தாய் விட்டது. இனி இப்போது இல்லாவிட்டாலும், கொஞ்ச நாள் கழித்து, தன் கழுத்து செயின் எப்போ திரும்பி வரும் என்று கவலைப் படத் தொடங்குவாள். அந்தக் கவலையும் என் கண்ணுக்குப் படாத கவலையாக இருக்கும்.

இனி துணி வாங்கி புதிதாக உடைகள் தைக்கவேண்டும். டிரில் என்றால் என்ன? பாண்ட் என்றால் என்ன என்ற கேள்விகள் எழுந்தாலும் அது ஒரு பெரிய பிரசினையாகவில்லை. எங்கள் தெரு முனையில் நாலு வீடு தள்ளி கிழக்குத் தெரு ஆரம்பிக்கும் முனை வீட்டின் திண்ணையில் புதிதாக ஒரு டெய்லர் கடை தொடங்கி சில மாதங்களே ஆயிருந்தன. எனக்கு ஐந்தாறு வயது மூத்தவன். எனக்கு நண்பனாகி விட்டவன். பொழுது போகாத நேரங்களில் அவன் கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருப் பேன். உடையாளூரில் ஒரு டெய்லரிங் கடை வைத்தால் வருமானம் வரும் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது கும்பகோணமோ, வலங்கைமானோ போவதாக இருந்தால் தான் சட்டை கூட அவசியமில்லை. ஒரு பனியன் போதும். உள்ளூரில் இருந்தால் வேஷ்டி, ஒரு துண்டு போதும் என்று எளிமையான வாழ்க்கை வாழும் மனிதர்களைக் கொண்ட ஊர் இது. ஆச்சரியமான விஷயம் தான். என்ன தையல் வேலை இருந்தாலும் கும்பகோணத்துக்கோ, வலைங்கைமானுக்கோ ஓடவேண்டாமில்லையா, என்றும் ஒரு நினைப்பு இருந்திருக்கலாம். எதாக இருந்தாலும் இப்போது ஒரு பெரிய ஆர்டர் எங்களிடமிருந்து அவனுக்கு கிடைக்கவிருந்தது. அத்தோடு , டிரில், பாண்ட் சமாசாரங்கள் என்னவென்று அவனுக்குத் தெரிந்திருக்குமே. அப்பா ஒரு நாள் அவனிடம் விவரம் கேட்டுக்கொண்டு கும்பகோணம் போய் துணி வாங்கிவந்ததும் என் அளவுகளை எடுக்கச் சொல்லி, தைக்கக் கொடுத்துவிட்டார்.

பயண ஏற்பாடுகள் இப்படி ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கியதும் தான், தங்கை தம்பிகளை விட்டு, உடையாளூரை விட்டு, கும்பகோணத்தை விட்டு, வெகுதூரம் போகப்போகிறோம், இனி எப்போது திரும்பி வரப் போகிறோமோ என்ற நினைப்புகள் மனதில் தைக்கத் தொடங்கின. வரப்போகிற பிரிவைப் பற்றிய எண்ணம், இது வரை வாழ்ந்த வாழ்க்கையை விட்டு முற்றிலுமாக நீங்கி புதிய இடத்தில் புதிய மனிதர்களோடு, பழக்கமில்லாத புதிய வாழ்க்கை எதிர்கொள்ள இருக்கிறது என்ற நினைப்பு இதுவரை பழக்கமானது, தெரிந்தது எல்லாவற்றையும் விட்டுப் பிரியப் போகிறோம் என்ற நினைப்பு மனத்தை மிகவும் சஞ்சலிக்கத் தொடங்கியது.

எல்லாவற்றையும் விட கும்பகோணமும் அங்கு கிடைத்த சில நட்புக்களும் ஒரு இரண்டு வருட வாழ்க்கையை மிக ரம்மியமானதாக ஆக்கியிருந்தன். மிக முக்கியமாக மனத்தில் அடிக்கடி தோன்றி மறையும் காட்சி, உடையாளூரிலிருந்து ஒரு மைல் வயல்கள் வழி நடந்ததும் தூரத்தில் காட்சி தரும் கும்பகோணத்தின் கோயில் கோபுரங்கள். காஞ்சிபுரத்தைப் போல கும்பகோணம் கோயில்கள் நிறைய கொண்ட ஊர். எங்கு திரும்பினாலும், ஒரு ·பர்லாங் தூரம் நடந்தாலே அங்கு ஒரு கோயில் கோபுரம் விண்ணைத் தொட்டு நிற்கும். இன்று நேற்று அல்ல. குறைந்தது ஆயிரம் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக வானளாவ நிற்கும் கோபுரங்களைக் கொண்ட கோவில்கள். கும்பகோண்த்துக்கு பெயர் கொடுத்த கும்பேஸ்வர ஸ்வாமி கோயிலை விட பெரிய சாரங்கபாணி ஸ்வாமி கோயில். மூலவரும் மிகப் பெரிய உருவம் கொண்டவர். சயனித்த திருக்கோலத்தில். எல்லாக் கோயில்களையும் விட மிக மிக அழகான சிற்பங்களைக் கொண்ட ராமஸ்வாமி கோயில். அவற்றின் அழகை விட்டுப் பிரிய கண்கள் விரும்பாது. எல்லாம் வெகு அருகாமையில் ஒன்றுக் கொன்று. சோழர் காலத்தைச் சேர்ந்த பிரகாரத்தில் அனேக சிற்பங்களைக் கொண்ட நாகேஸ்வர ஸ்வாமி கோயில். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கும்பகோனம் மட்டுமல்ல. அதைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து மைல் வட்டத்துக்குள் அதேபோல ஆயிரம் ஆயிரத்தைந்நூறு வருடங்கள் சரித்திர நீட்சியில் தானும் வாழ்ந்து நம்மையும் அச்சரித்திரத்தை நினைவு படுத்தி நம்மை அதனூடே வாழச்செய்யும் கோயில்கள். எப்போதுமே எனக்கு அவை மிக வசீகரமான தோற்றத்தோடு பிரமிக்க வைக்கும் கணங்களை நம் அனுபவத்திற்குத் தரும், என் பள்ளி நண்பனோடு, கும்பகோணம் இருப்புப் பாதையின் தண்டவாளத்தின் மீது நடந்தே ஒரு சமயம் திருநாகேஸ்வரம் போவோம். இன்னொரு சமயம் தாராசுரம், சுவாமி மலை என்று போவோம். நடுவில் அரசிலாற்றுப் பாலம் வரும். அதை மாத்திரம் தவிர்த்து விடுவோம். அது மாத்திரமல்ல. சுற்றி இரண்டு அல்லது நான்கு மைல் தூரத்தில் பட்டீஸ்வரம், பழையாறை, திருவலஞ்சுழி, நந்திகேஸ்வர விண்ணகரம் என்று சரித்திரத்தில் அறியப்பெற்ற நாதன் கோயில் என்று அனேக தமிழ் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் சிறப்புப் பெற்ற கோயில்கள். திரு வலஞ்சுழி, பெயரே சொல்வது போல, வலதுபக்கம் தன் துதிக்கையைச் சுழித்துக்கொண்டிருக்கும் சிறிய வினாயகரை மூலவராகக் கொண்ட கோயில் இன்னும் சிறப்பு மூலவர் கடல் நுரையால் ஆன, வெண்ணிற தோற்றம் கொண்ட வினாயகர். நக்கீர தேவநாயனாரால் மும்மணிக்கோவையில் பாடப்பெற்றவர். மிகவும் அழகான கோயில். நாதன் கோயில் மிக அதிசயமாக, மேற்கு நோக்கிய கோவில் பட்டீஸ்வரம் அவ்வப்போது சாமிநாதய்யரின் ஆசான், மீனாட்சி சுந்தரம் பிள்ளை நடமாடிய ஊர். தாராசுரம் அச்சிறு வயதிலேயே என்னை மிகவும் பிரமிக்க வைத்த கலை பிரம்மாண்டம். பின்னாட்களில் அது பற்றிப் படிக்கப் படிக்க என் பிரமிப்பு அதிகமாகி வந்தது. இந்தச் சிறப்புக்கள் எல்லாம் பின் வருடங்களில் நான் படித்தறிந்த சிறப்புக்கள். என் பள்ளி நாட்களில், என்னை அவை கவர்ந்தது அவற்றின் உள்ளே நுழைந்தாலும், அல்லது தூரத்திலிருந்து காட்சி தரும் கோபுரங்களப் பார்த்தாலும் மெய் சிலிர்க்கும். என்னவோ வேறு எங்கும் கிடைக்காத ஒரு உணர்வு நரம்புகளில் ஓடும். இவற்றில் அனேகம் தேவார நால்வரால் பாடப்பெற்றவை. ஆழ்வார்களால் போற்றப்பட்டவை. சாரங்கபாணி கோயில் பேயாழ்வாரும், பூதத்தாழ்வாரும் மங்களா சாசனம் செய்த கோயில். தேவார நால்வருக்கும் முன், ஆழ்வார்களிலும் முன்னவர்களான பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பாடி யுள்ளனர் என்றால் அத்தனை பழமையானது சாரங்கபாணி கோயில். எத்தனையோ எழுத்தாளர்கள் வாழ்ந்த ஊர்தான். ஆனால் அன்று 1947-49 களில் எனக்குத் தெரிந்ததெல்லாம், சாமிநாதய்யர் வாழ்ந்த, ஆசிரியராக பணி செய்த ஊர். அவர் வசித்த, நடமாடிய பக்தபுரி அக்ரகாரமும், காவிரிக்கரையில் மிக அழகாக அமைந்திருக்கும் கும்பகோணம் கல்லூரியும். கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த ஊர். பள்ளி நாட்களிலேயே கேள்விப்பட்ட பெயர் அது. எல்லாவற்றையும் விட என்னோடு மிக நெருக்கமாக அன்போடு பழகிய, அவனது தமிழறிவையும், கவிதைத் திறனையும் நான் வியந்த ஆர். ஷண்முகம். அவனையும் அல்லவா விட்டுப் பிரிய வேண்டும்.

இவ்வளவு அரிய நினைவுகளையும், வாழ்ந்த நாட்களையும் விட்டுப் பிரிந்து எங்கோ வேலை தேடிப்போவதென்றால்..... ஆனால் அதைத் தானே சில நாட்கள் முன் நான் வேண்டி கனவு கண்டதும். எதை விட்டுப் பிரிகிறோம் என்று மனம் தத்தளிக்கும் இப்போது ரம்மியமாகத் தோன்றுபவை எல்லாம், பின்னொதுங்கி, பரிட்சையும், சர்வீஸ் கமிஷனும், திரும்பப் படிக்கவேண்டும் ஆங்கிலப் பாடங்களும் தானே முன்னின்றன. ஒரே அனுபவத்தின் பல பக்கங்கள். அவ்வப்போதைய மனநிலைக்கு ஏற்ப ரம்மியமான பக்கங்கள் ஒரு சமயமும், கசப்பானவை வேறு ஒரு சமயமுமாக மனத்தை ஆக்கிரமித்துக்கொள்லும் போலும் அல்லது எந்த ஒரு நிகழ்வும், திருப்பமும், முற்றிலும் சந்தோஷம் தருவதும் அல்ல. முற்றிலும் துக்கம் நிரம்பியதும் அல்ல. எல்லாமே ஒரே நிகழ்வின் இரு அல்லது அதற்கு மேற்பட்ட பரிமாணங்கள். அவ்வப்போதைய நம் மனச்சாய்வுக்கு ஏற்ப நாம் தேர்ந்து கொள்கிறோம். ஒவ்வொன்றின் நிகழ்விலும் நமக்குப் பிடித்தமான பரிமாணத்தை மாத்திரம் பார்த்துக்கொண்டு மற்றதற்கு கண்மூடிக்கொள்கிறோம் என்று தோன்றுகிறது.

நிலக்கோட்டை மாமாவுக்கு அப்பா லெட்டர் எழுதிவிட்டார். மேலே படிக்கறதுக்கோ, பரிட்சை எழுதறதுக்கோ அவனுக்கு இஷ்டமில்லை. அப்புக்கு லெட்டர் எழுதியிருக்கான். அப்புவும், சரி வா பாக்கலாம்னு எழுதிட்டதினாலே, அவன் இஷ்டப்படியே விட்டுடலாம்னு நினைக்கிறேன். அவன் தனியா இருந்து பாக்கட்டுமே, அதுவும் நல்லதுக்குத் தான்' என்கிற மாதிரி அப்பா எழுதியிருந்தார். பாண்ட், ஷர்ட் எல்லாம் தைத்து வந்துவிட்டது. மூன்று வீடு தள்ளி இருக்கும் சித்தப்பா, தன் மச்சினன் வால்டேரில் ரயில வேலையில் தான் இருப்பதாகவும் உன்னை வால்டேர் ஸ்டேஷனில் வந்து பாக்கச் சொல்லியிருக்கேன் என்று சொன்னார். அப்பா ஒரு நல்ல நாள் பார்த்து, ஜூலை மாதம் 27-ஓ அல்லது 28-ஒ நினைவில் இல்லை, இப்படித் தான் மாதக்கடைசியில் ஒரு நாள் கிளம்புவது என்று நிச்சயமாயிற்று. அப்பு மாமாவுக்கும் கிளம்பும் தேதியைக் குறித்து அப்பா லெட்டர் எழுதினார்.

ஒரு டிரங்குப் பெட்டி. துணிமணிகள், செர்டிபிகேட், பின் சாப்பாடு எல்லாம் வைத்துக்கொள்ள. ஒரு ஜமக்காளம், தலையணை. இவ்வளவு தான் எடுத்துச்செல்ல. அப்பா மதராஸ் செண்டிரல் வரை வந்து கல்கத்தா மெயிலில் ஏற்றிவிட்டு ஊர் திரும்பி விடுவார். எப்படி கும்பகோணம் ஸ்டேஷனுக்கு நானும் அப்பாவும் போனோம் என்பது நினைவில் இல்லை. மாட்டு வண்டியில் போவதென்றால் வலங்கைமான் போய்த் தான் போகவேண்டும். சுற்று வழி. சுமார் எட்டு மைலுக்கு மேல் இருக்கும். எப்போதும் ஸ்கூலுக்குப் போவது போல குறுக்கே வயல்வெளியினூடே நடந்து செல்லமுடியாது, பெட்டி படுக்கையைத் தூக்கிக்கொண்டு. எனக்கு நினைவில் இருப்பது கும்பகோணம் ரயில் நிலையத்தில் நானும் அப்பாவும் ரயில் வரக் காத்திருந்தது தான். இரவு நேரம். ஏழு மணி இருக்கும். அப்போது தான் என் பள்ளி நண்பனும் கவிஞனுமான ஆர் ஷண்முகத்தை ரயில் நிலையத்தில் பார்த்தேன். தற்செயலாக சந்தித்தோமா, இல்லை, என் விடுமுறை நாட்களில் அவனும் நானும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் மூலம் விஷயம் தெரிந்து வந்தானா என்பது நினைவில் இல்லை. அவனுக்கு ஊர் மணல் மேடு. மாயவரம் பக்கம். ரயிலில் போகமுடியாது. ஆக, ஏதோ காரியமாக கும்பகோணம் வந்து என்னை தற்செயலாக ரயில் நிலையத்தில் அந்த நேரத்தில் சந்தித்தான் என்று சொல்ல முடியாது. மிகவும் அன்னியோன்னியமாக பழகிய நண்பன். இப்போது பிரியும் நேரம். இனி இருவர் வாழ்க்கையும் வேறு வேறு பாதைகளில் தான் செல்லும். இனி சந்திப்போம் என்பது நிச்சயமில்லை. பேச என்ன இருக்கிறது? என்ன பேசமுடிகிறது. அப்பா நின்ற இடத்திலிருந்து தள்ளி நின்று கொண்டோம். வண்டி வரும் வரை.  /22.10.09

நினைவுகளின் தடத்தில் - (46)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்வரும் ஒரு புகைவண்டியின் விசில் சப்தம் கேட்டது. தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் தூரத்தில் புகைவண்டியும் தெரியத் தொடங்கியது. பட்டணம் போகும் வண்டிதான். நான் சண்முகத்தைப் பார்த்தேன். சண்முகம் ஒரு புன்னகையோடு, "கூற்றுவனின் கூக்குரல்" என்றான். இருவரும் அப்பா சாமான்களோடு நின்றிருக்கும் இடத்திற்குச் சென்று பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டோம். அன்றைய சந்திப்பில், அப்போது இது தான் அனேகமாக கடைசி சந்திப்பும் என்று நினைத்துக்கொண்டிருந்த சந்திப்பில் என்ன பேசினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. "கூற்றுவனின் கூக்குரல்" என்று வரும் புகைவண்டியின் விசிலைக் குறித்து சண்முகம் சொன்னது தான் நினைவில் இருக்கிறது.

இருண்டு வரும் நேரம். நிற்கும் புகைவண்டியில் எந்தப் பெட்டியிலும் இடமிருக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துகொள்ளலாம். அந்தக் காலத்தில் ரிசர்வேஷன் என்றெல்லாம் ஒன்றும் இருந்ததில்லை. நாளை காலை விடிந்த பிறகு தான் மதராஸ் போய்ச் சேர்வோம். அது எனக்கு முதல் இரவு நேரப் பிரயாணம். இருவருமே உட்கார்ந்து கொண்டே தூங்கியிருப்போம். கொடை ரோடிலிருந்து கும்பகோணம் வரை பகல் நேரங்களில் ஒன்றிரண்டு முறை அதற்கு முன் பிரயாணம் செய்திருக்கிறேன். சுமார் எட்டு மணி நேரம் ஜன்னல் வெளியே பார்த்துக்கொண்டே பொழுது போகும் மிக ஆச்சரியத்துடனும், சுவாரஸ்யத்துடனும். அவையெல்லாம் என் நினைவில் நன்கு பதிந்திருக்கின்றன. ஆனால் இந்த இரவுப் பயணம் பற்றி எந்த நினைவும் இல்லை. கும்பகோணம் ரயில் நிலயத்தில் சண்முகத்தோடு நின்று கொண்டிருந்ததும், பின் மறு நாள் காலையில் சென்னை பார்க் ஸ்டேஷனிலிருந்து பெட்டியைத் தூக்கிகொண்டு அப்பாவோடு எதிரில் இருக்கும் செண்டிரல் ஸ்டேஷனுக்கு நடந்து கொண்டிருந்ததும் தான் ஞாபகத்தில் இருக்கின்றன. கும்ப கோணத்திலிருந்து புறப்பட்ட ரயில் எழும்பூர் சென்று நின்றுவிடும். அதன் பின் மின்சார வண்டியில் ஏறித் தான் பார்க் ஸ்டேஷனை வந்தடையமுடியும். அப்படி வண்டி மாறியதாகவோ, எழும்பூரிலிருந்து செண்டிரல் போவது எப்படி என்று அப்பா யாரையும் விசாரித்ததாகவோ நினைவில் இல்லை.

செண்டிரல் ஸ்டேஷன் பிரும்மாண்டத்தைப் பார்த்து மலைத்துப் போனேன். இவ்வளவு பெரிய நிலையம், நிறைய ரயில்கள் இந்தியா முழுதுக்கும் எல்லாத் திசைகளிலும் போகும் இங்கிருந்து தான். கல்கத்தா மெயில் எப்போது கிளம்பும், எங்கிருந்து கிளம்பும் என்று விசாரித்துக் கொண்டோம். மாலை ஐந்து அல்லது ஆறுமணி வாக்கில் என்று தெரிந்தது. கிளம்பும் ப்ளாட்·பார்ம்மும் தெரிந்தது. சாமான்களை ஒருவர் பார்த்துக்கொள்ள மற்றவர் பல்தேய்த்துவிட்டு வந்தோம். அங்கேயே இருந்த ரெஸ்டாரண்ட்டில் நான் இட்லி காபி சாப்பிட்டேன். அப்பா சாப்பிடவில்லை. சாப்பிட மாட்டார். அவர் இனி நாளைக் காலை உடையாளூர் போய்ச் சேர்ந்து, குளித்து, பூஜை யெல்லாம் முடித்துக்கொண்டு சாப்பிட மணி பதினொன்றாகிவிடும். வீடு தவிர வேறு எங்கும் சாப்பிடமாட்டார். குளித்து,மடியாக வேஷ்டி கட்டிகொண்டு பூஜை செய்த பிறகு, அதேபோல் அம்மாவும் குளித்து விட்டு சமைத்தால் தான் சாப்பிடுவார். அது அவரது நியம நிஷ்டை சார்ந்தது. என்றும் எந்த கஷ்டத்திலும், எந்த நிலையிலும் அவர் இந்த ஆசாரத்தை விட்டதில்லை. அவரது ஆசாரம்மும் நியமங்களும் அவரை வருத்துமே தவிர, மற்றவரை துன்புறுத்துவதில்லை.

அறுபதுகளில் நடந்த விஷயம் இது. என் தங்கை சொல்ல எனக்குத் தெரிந்தது. ஒரு தடவை தெரிந்த நண்பர்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு அவர் ஹைதராபாத் போயிருக்கிறார். போகும்போது ஒன்றும் சிரமமிருக்கவில்லை. கல்யாண கோஷ்டியினர் ஒரு சமையல்காரரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தனர். வண்டியிலே அப்பா குளித்து பூஜை செய்துவிடமுடியும். சமையல் காரருக்கும் அப்பாவோடு இன்னும் சிலரின் ஆசாரம் பற்றித் தெரியும். சிரமம் இருக்கவில்லை. கல்யாண வீட்டிலும் கல்யாண சாப்பாட்டை சாப்பிடுவது அப்பாவின் ஆசாரத்துக்கு ஒத்துவராது. அவர் போன்றவர்களுக்கு தனியாகத் தான் சமையல் நடக்கும். அது கல்யாண விருந்தாக இராது என்பது நிச்சயம். ஆனால் அது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் திரும்பி வரும்போது அப்பா தனியாகத் தான் திரும்பினார். மற்றவர்கள் திரும்ப சில நாட்கள் ஆகும் என்ற காரணத்தினால். ஆக, அவர் கிளம்பிய நாள் மதியம் கல்யாணவீட்டில் சாப்பிட்டது தான். ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு எவ்வளவு நேரப் பிரயாணம் என்று இப்போது சொல்லத் தெரியவில்லை. சென்னை வரும் வரையில் அவர் வழியில் எதுவும் சாப்பிடவில்லை. செண்டிரலில் வந்திறங்கிய போது இலேசான காய்ச்சல் போல இருந்திருக்கிறது. அத்தோடு மின்சார ரயிலில் பிடித்து க்ரோம்பேட்டை வந்து இறங்கி ஸ்டேஷனிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்துக்கு மேலிருக்கும் ராதாநகர் மெயின் ரோடின் கோடியில் இருந்த தங்கையின் வீட்டுக்கு நடக்க வேண்டும். நடந்து வந்திருக்கிறார். உடனே குளித்துவிட்டு, பூஜையையும் முடித்துக்கொண்டு சாப்பிடலாம் என்ற எண்ணம். ஆனால் வீடு பூட்டியிருக்கிறது. பக்கத்தில் விசாரித்தால், பக்கத்து வீட்டு சினேகிதிகளுடன் என் தங்கை மாட்டினி ஷோ பார்க்கப் போயிருக்கிறாள். அவள் இனி வர மணி ஐந்தோ, ஆறோ ஆகும். வாசல்படியில் தலையில் கைவத்தபடியே சுரதோடு உட்கார்ந்து விட்டார். என் தங்கைக்கு என்ன தெரியும், அப்பா இந்த நேரத்துக்கு வந்து காத்திருப்பார் என்று? அவள் திரும்பி வந்த போது அப்பா சுரத்தோடு பூட்டிய கதவுக்கு வெளியே தலையில் கைவைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாள். பின் என்ன. அப்பாவுக்கு சுரம் தான். குளிக்காமல் சாப்பிட மாட்டார். வெந்நீர் போட்டு அப்பாவுக்குக் கொடுத்துவிட்டு, தானும் குளித்து, வேறு புடைவை கட்டிக்கொண்டு சமைத்திருக்கிறாள். அப்பா பூஜை செய்யும் நேரத்தில்.. பிறகு தான் அப்பா சாப்பிட்டிருக்கிறார். அவ்வளவு தீவிரமாக கண்டிப்புடன் ஆசாரத்தைக் கடைப்பிடிப்பவர். அந்தக் கண்டிப்பு மற்றவர்களுக்கு மட்டுமல்ல. தனக்கும் தான். அது தன்னை எவ்வளவு வருத்தினாலும் சரி.

இந்தத் தீவிரமும், கண்டிப்பும் எனக்கு பின்னாட்களில் தான் தெரியவந்தது. இந்த மாதிரியான சோதனைகள் அப்பாவுக்கு நேர்ந்தது என்னை ஜெம்ஷெட்பூருக்கு அனுப்ப பட்டணம் வந்த போது தான். அதுதான் கிராமத்தை விட்டு, வீட்டின் சூழலை விட்டு வெளியே வந்த முதல் நீண்ட பிரயாணம். மற்றவையெல்லாம் சில மணி நேரங்களில் முடிந்து விடக்கூடிய பக்கத்து கிராமங்களுக்கு அல்லது வலங்கைமான், கும்பகோணம் போன்ற இடங்களுக்குச் சென்றது தான். அவரை நான் நிலக்கோட்டையில் இருந்த வரை நிலக்கோட்டைக்கு வந்து கூட பார்த்ததில்லை. இதெல்லாம் பற்றி நான் அப்போது கூட நினைத்துப் பார்க்கவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் தான் இப்படி நடந்தது என்று தங்கை எனக்குச் சொன்ன பிறகு தான் நான் அது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

செண்டிரல் ஸ்டேஷனைத் தான் எவ்வளவு நேரம் சுத்திப் பார்த்துக் கொண்டிருப்பது? நான் வெளியே போய்ட்டு வரேனே என்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தேன். அப்போதெல்லாம் இவ்வளவு வாகனப் போக்குவரத்தும் நெரிசலும் இருந்ததில்லை. வெகு சுலபமாக ரோடைக் கடக்க முடியும். எதிரே ஜெனரல் ஹாஸ்பிடல், டாக்டர் ரங்காச்சாரி சிலை கம்பீரமாக வரவேற்க. இவ்வளவு அகலமான ரோடையோ, பெரிய கட்டிடங்களையோ பார்த்ததில்லை. ரோடின் இருபுறமும் பெரிய பெரிய கட்டிடங்கள். கோட்டை நோக்கி போகும் ரோடு வழியே மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது ஒவ்வொரு கட்டிடம் முன்பும் கொஞ்ச நேரம் நின்று, அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். இடது பக்கமும் ஒரு ரோடு போகிறதே, அது எங்கே கொண்டு போய் விடுமோ, முன் பின் பழகியிராத புதிய இடத்தில் சில மணி நேரமே இருக்கப்போகிற இடத்தில் இதெல்லாம் வேண்டாம் என்று தோன்றிற்று. அப்பா ஞாபகம் வரவே ஸ்டேஷனுக்குத் திரும்பினேன். அவர் வரும் போகும் வண்டிகளையும் கூட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். "நாழியாச்சேடா, பசிச்சா சாப்பிடு என்றார்." அப்பா சொன்னதும் பசிக்கறாப்போலத் தான் இருந்தது. அம்மா கட்டிக்கொடுத்த பொட்டலங்கள், புளியோதரை, தயிர் சாதம், வடாம் எல்லாம் இருந்தன. இதெல்லாம் நேற்றைய பழையது. அப்பா சாப்பிட மாட்டாரே என்று பட்டது. "நீங்க பழங்களாவது சாப்பிடலாமேப்பா" என்றேன். 'சரிடா பாத்துக்கலாம். நீ சாப்பிடு என்றார்."

சாப்பிட்டு விட்டு மறுபடியும் ஒரு சுற்று. திரும்பினால் அப்பா காலை நீட்டி படுக்கைமேல் தலைவைத்து கண்ணயர்ந்திருந்தார். நான் பக்கத்தில் உட்கார்ந்து சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போதும் சுறுசுறுப்பாக, எல்லோரும் எங்கோ விரைந்து கொண்டிருக்கும் இடம். பார்த்துக் கொண்டே இருந்தால் பொழுதும் போகத் தான் செய்தது. எவ்வளவு நேரம் ஆயிற்றோ, அப்பா கண்விழித்தார். "நேரம் ஆயிண்டிருக்குடா, போய் டிக்கட் வாங்கிண்டு வந்துடலாம். நீ இங்கேயே இரு. நான் வரேன் என்று போனார். "டாடா நகர், கல்கத்தா மெயில்னு சொல்லணும்பா" என்று ஞாபகப் படுத்தினேன். அப்போதெல்லாம் முன்னாலேயே ரிசர்வ் செய்வது என்பதெல்லாம் இருந்ததில்லை. டாடா நகருக்கு டிக்கட் வாங்குவது, செண்டிரலிலிருந்து எழும்பூருக்கு டிக்கட் வாங்குவது போலத்தான். என்ன கூட்டமானாலும் இடம் இல்லை என்று சொல்லமாட்டார்கள். கொஞ்ச நேரத்தில் அப்பா திரும்பி வந்தார் டிக்கட்டுடன். டிக்கட்டைக் காண்பித்தார். டாடா நகர் ரூ 33-ஓ என்னவோ போட்டிருந்ததாக ஞாபகம். அவ்வளவு தான். இன்னும் அதிகம் இரண்டு மணி நேரம் தான். இடம் பார்த்து வண்டியில் உட்காரந்து விடலாம். "ஜாக்கிரதையா வச்சுக்கோ, தொலைச்சுடாதே. ராத்திரி தூங்கப்போ ஜாக்கிரதையா இருக்கணும்? என்றார். இதை அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு எத்தனை தடவை சொல்வாரோ. கவலை இருக்கத்தான் செய்யும். இரண்டு இரவு கழிந்து மூன்றாம் நாள் சாயந்திரம் தான் டாடா நகர் போய்ச் சேர்வேன். அது வரை சாமான்களை, கையில் இருக்கும் பணத்தை, டிக்கட்டை எல்லாம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். புதிய பொறுப்பு. இதுவரை பார்த்திராத அனுபவம். மூன்றாம் நாள் சாயந்திரம் வரை உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, சாப்பிட்டு.....

சாமான்களை எடுத்துக்கொண்டு கல்கத்தா மெயில் நிற்கும் ப்ளாட்·பார்முக்குப் போய் உட்கார காலி இடம் இருக்கும் பெட்டியைத் தேடி உட்கார்ந்து கொண்டேன். இடம் கிடைத்தது. பெட்டியை வேணும்னா பக்கத்திலேயே வச்சுக்கோ. என்றார் அப்பா. நான் அதை ஜன்னலுக்குப் பக்கத்தில் சீட்டிலேயே வைத்துக்கொண்டு, அதன் மேல் கைவைத்துச் சாய்ந்து கொண்டேன். வண்டியும் நிரம்பத் தொடங்கியது. நெரிசல் இல்லை. தாராளமாக உட்கார்ந்துகொள்ளலாம்.

'போன உடனே லெட்டர் போடுடா. மறந்துடாதே" என்றார் அப்பா. வண்டி கிளம்பியது. அப்பா கவலையோடு பார்த்துக்கொண்டே நின்றவர் நின்றவாறே பின் நகர்ந்து கொண்டே பார்வையிலிருந்து மறைந்தும் விட்டார். எனக்கு புதிய அனுபவம் என்று உற்சாகமாகவும் இருந்தது. புதிய அனுபவம் என்ற காரணத்தால் கவலையாகவும் இருந்தது. எல்லோரையும் விட்டுப் பிரிந்து செல்கிறோம் என்ற துக்கமும் ஒரு புறம்.  27.10.09

vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்