இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2010  இதழ் 127  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நினைவுகளின் தடத்தில் .. (51)!
நினைவுகளின் சுவட்டில் - (51) (முதல் பாகம் முற்றும்)

- வெங்கட் சாமிநாதன் -

வெங்கட் சாமிநாதன்ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்தமாதிரி சந்தர்ப்பத்தைப் பெற, நான் அதிக நாள் அங்கு இருக்கவில்லை. ஒரு நாள் சில விருந்தினர்கள் ஏதோ காரணத்திற்காக ஜெம்ஷெட்பூர் வந்திருந்தார்கள். வெளியூரிலிருந்து. எந்த வெளியூர் என்பதை நான் அப்போது கவனம் கொள்ளவில்லை. மாமாவோடு பேசிக்கொண்டிருந்தார்கள். மாமா அவர்களிடம் பேச்சுக் கிடையில் என்னைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். ஊரிலேயிருந்து வந்திருக்கிறான். அப்பா அம்மாவுக்கு உதவியா இருக்கணும்னு வேலை வேணுமாம் இவனுக்கு. ஆறு மாசம் ஆகப் போறது. டைப் ரைட்டிங் ஷார்ட் ஹாண்ட், புக் கீப்பிங்கெல்லாம் இங்கே வந்து தான் படிச்சிருக்கான்" என்று சொல்லவே, மாமா எதிர்பாராமலேயே, "அதுக்கென்ன, ஹிராகுட்டுக்கு அனுப்பி வையுங்கோ. அங்கே ஒரு அணை கட்டப் போறா. இப்போதான் ஆள் எடுத்துண்டு இருக்கா. இவனையும் சேர்த்து விடலாம். ஒண்ணும் சிரமமில்லை. நீங்கள் கவலைப் பட வேண்டாம். நாங்க பாத்துக்கறோம்," என்று சொல்லவே, நான் மாமாவைப் பார்த்தேன். "என்ன போறயா?" என்று கேட்டார். "முகத்தைப் பாருங்கோ சந்தோஷத்தை. ஆர்வமாத்தான் இருக்கான். அனுப்பி வைக்கிறேன்," என்றார் மாமா.

ஹிராகுட் எங்கே இருக்கு, அங்கு போக என்ன வழி என்று அவர்கள் சொன்னார்களா, இல்லை மாமாதான் கேட்டு, பின் எனக்குச் சொன்னாரா என்பது எனக்கு நினைவில் இல்லை. இப்பவும் அதை நினைத்துப் பார்க்கும்போது, எப்படி அந்த வயதில் கொஞ்சம் சிக்கலான விஷயத்தைச் சமாளித்தேன் என்று விளங்வில்லை. மாமா பிஸ்டுபூர் பஸ் ஸ்டாண்ட் வரை வந்தார். "வேலை கிடைச்சுடும். அது கூட பெரிசில்லை. நீ அங்கே ஒழுங்கா இருந்து வேலை பாத்து, முன்னுக்கு வரணும். அது தான் முக்கியம்," என்றார்.

வண்டி இரவு ஒன்பது மணிக்கோ என்னவோ. கல்கத்தா-பம்பாய் மெயிலில் போகவேண்டும். காலை ஐந்து மணிக்கு ஜர்ஸகுடா என்ற ஸ்டேஷன் வரும். அது ஒரு சின்ன ஜங்ஷன். அங்கு தான் இறங்க வேண்டும். காலை ஐந்து மணிக்கு தவறாது விழித்திருந்து இறங்க வேண்டும். முன்பின் தெரியாத முதல் பிரயாணத்தில் சரியாக காலை ஐந்து மணிக்கு விழித்திருந்து இறங்கிவிட்டேன். ஆனால் ஒரு வாரம் கழித்து வேலையில் சேர்ந்து விட்ட சமாசாரத்தை நேரில் சொல்ல ஜெம்ஷெட்பூர் போயிருந்தேன். திரும்பி வரும்போது தூங்கிவிட்டேன். நான் கண் விழித்த போது ராய்ப்பூரைத் தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது. 'ஜெர்ஸகுடா போயிடுத்தா?" என்று கேட்டதுக்கு பக்கத்திலிருந்த பிரயாணிகள் சிரித்தார்கள். பின் என்ன? பிலாஸ்பூரில் இறங்கி பின் அடுத்து வந்த பாஸஞ்சர் வண்டியைப் பிடித்து சம்பல்பூர் சாயந்திரம் தான் போய்ச் சேர்ந்தேன்.

இன்னும் விடியவில்லை. ஜர்ஸகுடாவில் இறங்கினால் கொஞ்சம் தள்ளி ஒரு லூப் லைன் சம்பல்பூருக்குப் போகும். அங்கு ஒரு பாஸஞ்சர் வண்டி காத்திருக்கும். அதில் ஏறி உட்கார்ந்தால் காலை 6 அல்லது ஏழு மணிக்கோ என்னவோ அது கிளம்பி அங்கிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள சம்பல்பூர் போய்ச் சேரும். இங்கும் கவனமாக இருக்கவேண்டும். சம்பல்பூர் வருவதற்கு முன்னால் சம்பல்பூர் ரோட் என்று ஒரு ஸ்டேஷன் வரும். அங்கு இறங்கினால்தான் ஹிராகுட் போக பஸ் கிடைக்கும். ஸம்பல்பூர் மெயின் ஸ்டேஷனில் இறங்கினால் பஸ் வசதி கிடையாது. ஸம்பல்பூர் ரோட் ஸ்டேஷன் வாசலிலேயே ஒரு பஸ் காத்திருக்கும்,. அதில் ஏறி உட்கார்ந்தால் பத்து மைல் தூரத்திலிருக்கும் ஹிராகுட்டுக்கு முக்கால் மணி நேரத்தில் போய்ச் சேரும். இதையெல்லாம் சரியாக முதல் தடவை எப்படிச் செய்தேன் என்புது இன்னமும் எனக்கு புரிந்ததில்லை.

சம்பல்பூரிலிருந்து கிளம்பிய பஸ் வழியில் எங்கும் நிற்க வில்லை. வழியில் கிராமம் ஏதும் அந்த பத்து மைல் தூரத்தில் இல்லை. பத்து மைல் பஸ் பிரயாணத்திற்கு எட்டணா(அரை ரூபாய்) தான் டிக்கட்.ரோடின் இரண்டு பக்கங்களிலும் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகள் தான். அந்த முக்கால் மணி நேர பிரயாணம் சுகமாக இருந்தது. எட்டு மணிக்கோ என்னவோ ஹிராகுட் போய்ச் சேர்ந்தது பஸ். கையில் ஒரு பெட்டியும் ஜமக்காளத்தில் சுருட்டிய படுக்கையுமாக இறங்கியதும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார் எஸ்.என்.ராஜா. அவர் தான் நான் ஹிராகுட் அணையில் வேலை பார்த்த ஆறு வருஷ காலத்திற்கு என் ஆசான். ஆதரவாளர். நல்லது கெட்டது சொல்லும் மூத்தவர். அவரது முழுப் பெயர் எஸ். நடராஜன். அப்பு மாமா தன் பெயர் ஆர். நாராயணசுவாமியை, ஆர்.என். ஸ்வாமி என்று சுருக்கி வைத்துக் கொண்டது போல அவரும் எஸ். என்.ராஜா என்று வைத்துக்கொண்டிருந்தார்.

இறங்கின இடத்திலேயே எதிர்த்தாற்போல் ஒரு நாயர் ஹோட்டல். ஒரு சின்ன கூரைக் குடிசை மாதிரி இருந்தது அது. அது தான் நாயர் ஹோட்டல் என்றார் ராஜா. அவர் வீடும் பக்கத்தில் தான் இருந்தது. எல்லாம் அஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளாலேயே, நாற்பக்கச் சுவர், கூரை, உள் அறைச்சுவர்கள் எல்லாமே, எழுப்பப்படிருந்த வீடுகள். ஒரு வரிசைக்குப் பத்து வீடுகள் என, நிறைய ப்ளாக் பளாக்கா வீடுகள். தரை என்னவோ சிமெண்ட் தரை தான். அது மார்ச் மாதம். சரியாகச் சொல்லப் போனால் அன்று மார்ச் 19, 1950 ஒரு ஞாயிற்றுக்கிழமையாக இருக்கவேண்டும். 'ஆச்சு, இனிமே வெயில் ஆரம்பிச்சுடும். வெயில் காலத்திலே இந்த அஸ்பெஸ்டாஸ் வீடுகள்ளே சூடு பொறுக்கமுடியாது. ஆனா என்ன பண்றது? பிழைப்புன்னு ஒண்ணு இருக்கே.' என்றார் ராஜா.

ராஜாவும் அவர் மனைவியும் தான் அவர் குடும்பம். குழந்தைகள் இல்லை. ஒரு மாதம் கழித்து அவரது மச்சினனும் வந்து சேர்ந்துகொள்ள இருந்தான். நான் போனபோது ராஜா தனியாகத் தான் இருந்தார். அவர் மனைவி இல்லை. ஆகவே சமையலும் அவரே தான். பவர் ஹௌஸில் ஸ்விட்ச் போர்டு ஆபரேட்டராக வேலை அவருக்கு. ஷி·ப்ட் ட்யூட்டி. காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இரண்டு ஷி·ப்ட். பின் இரவு எட்டு மணியிலிருந்து காலை எட்டு மணி வரை ஒரு ஷி·ப்ட்.

"உன்னை வொர்க் ஷாப்பில் சேர்த்துவிடலாம்னு நினைச்சிண்டிருந்தேன். இப்படி நோஞ்சானா இருக்கியே!," என்றார் ராஜா. நான் என்ன சொல்வது? சிரித்துக்கொண்டேன். சாப்பிட்ட பிறகு செல்லஸ்வாமி என்பவர் வீட்டுக்குச் சென்றோம். அவர் சீ·ப் என் ஜினீயர் அலுவலகத்தில் உதவி புள்ளிவிவர அதிகாரி என்றார்கள். பி.ஏ.(ஹானர்ஸ்) உயர் கணிதத்தோடு கல்கத்தா செண்டிரல் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிட்யூட்டிலும் தகுதி பெற்றவர். பேசிக்கொண்டிருந்தோம். "சீ·ப் எஞ்சினீயரோட பி.ஏ. ஒருத்தர் இருக்கார். 'பி.ஏ.'ன்னா அவரும் என்ஞ்சினீயர் தான். எம்.பி. ரங்காச்சாரின்னு. நாளைக்கு அவர் கிட்டே அழைச்சிண்டு போறேன். ஒரு டெஸ்ட் ஒண்ணு வைப்பா. ஒரு அப்ளிகேஷன் எழுதி எடுத்துண்டு போகணும். நீ என்ன படிச்சிருக்கே, என்ன தெரியும்ணு. எழுதத் தெரியுமோ? என்று கேட்டார், நான் முழித்தேன். 'சரி, இந்தா இங்கே உக்காந்துக்கோ. நான் சொல்றேன் எழுதிக்கோ,' என்றார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுதிக்கொண்டேன்.

மறு நாள் காலை சீ·ப் எஞ்சினியர் ஆ·பீசுக்குப் போனோம். ரங்காச்சாரி எங்களை அட்மினிஸ்டிரேடி·ப் ஆ·பீஸரிடம் அனுப்பினார். அவர் ஒருவரைக் கூப்பிட்டு எனக்கு டைப் டெஸ்ட் வைக்கச் சொன்னார். டெஸ்ட் நடந்தது. என்னை எடுத்துக்கொள்ளச் சொல்லி முரளீதர் மல்ஹோத்ரா ஒரு குறிப்பு எழுதி என்னை நிர்வாகப் பகுதிக்கு அனுப்பினார். அங்கு ஒரு தாட்டியான, அனேகமாக ஏழடி உயர பஞ்சாபி, கே.கே.குமார் என்று பெயர், என் சம்பந்தப்பட்ட காகிதங்களையெல்லாம் பார்த்து விட்டு, "அரே யார், யெஹ் க்யா ஹோகயா?" என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லி அலுத்துக்கொண்டான். "ஏன்? என்ன ஆச்சு?" என்று அவனை அவனது அந்த நிர்வாகப் பகுதியின் தலைமை, அவனும் ஒரு பஞ்சாபி, பைஜல் என்று பெயர், "யெஹ் தோ பச்சா ஹை, ஸோலஹ் ஸால் கா", ( இவன் சின்ன பையன், பதினாறு வயசு தான் ஆகிறது) என்றான். அவன் என்னைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான். "சரி, போ. மலிக் சாப் கிட்ட போய் சொல்லு, அவர் கவனிச்சிருக்க மட்டார்." என்றான். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். "18 வயது முடிந்திருந்தால் தான் உன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியும்." என்றான் அவன்." இது பற்றி யாருக்குமே யோசனை தோன்றவில்லை. எதிர்பாராத் திடீர் திருப்பமாக இருந்தது. எனக்கு மனது ஒடிந்து விட்டது. அது வரைக்கும் நான் என்ன செய்வது? இன்னும் ஒன்றரை வருஷம் எங்கே போவது? திரும்ப உடையாளூர் தானா? என்றெல்லாம் மனதில் ஒரு வெறுமை பரவியது. இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு எளிதாக விதி ஒரு பயங்கர விளையாட்டு விளையாடுகிறதே என்று.

அரை மணி நேரம் போல இருக்கும். கே.கே. குமார் திரும்பி வந்தான். "மலிக் சாப் என்ன சொன்னார்?" என்று பைஜல் கேட்டான். "பாய்ஸ் சர்வீஸ் என்று போட்டு எடுத்துக்கொள்ளச் சொன்னார்." என்றான். "மலிக் சாப் மலிக் சாப்ஹி ஹை. குச் ந குச் ராஸ்தா நிகால் தேதே ஹை" என்றான். {"மலிக் சாப் மலிக் சாப் தான். ஏதாவது ஒரு வழி கண்டுபிடிச்சுடறார்.") பின் என்னைப் பார்த்து, உன்னை எல்.டி.ஸி. யாக எடுத்துக்கொள்கிறோம் இப்போ. உனக்கு 18 வயசு முடிஞ்சப் பிறகு தான் உன் ரெகுலர் சர்வீஸ் ஆரம்பிக்கும். பென்சனுக்கு அதைத்தான் எடுத்துக்குவாங்க." என்று எனக்கு விளக்கினான். எனக்கு அதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. எனக்கு புரிந்தது ஒன்று தான். எனக்கு வேலை கிடைத்து விட்டது. 1950-ம் வருடம், மார்ச் மாதம், 20-ம் தேதி.

இதைப் பற்றி அன்று சாயந்திரம் செல்லஸ்வாமி, எஸ் என் ராஜா எல்லோரும் பேசிக்கொண்டார்கள். "முரளீதர் ரொம்ப நல்லவன். எப்படியோ ஒரு வழி கண்டு பிடிச்சு உனக்கு வேலை கொடுத்துட்டான். "பென்ஷனைப் பத்தி இப்போ யாருக்கு என்ன கவலை? நாம இங்கே இருக்கப் போறதே, அணை கட்டி முடியற வரைக்கும் தான். அதுக்கப்புறம் யார் எங்கே போகப் போறமோ யார் கண்டா?" என்றார் ராஜா.

உடனே அப்பு மாமா, அப்பா, நிலக்கோட்டை மாமா எல்லோருக்கும் கார்டு எழுதிப் போட்டேன். வேலை கிடைத்துவிட்டது. சம்பளம் ரூ 100. ப்ராஜெக்ட் அலவன்ஸ் என்று ஒரு 11 ரூபாய், அவ்வப்போது சாங்க்ஷன் ஆனதும் கொடுப்பார்கள். ஒரு வருடம் கழித்து விடுமுறையில் ஊருக்குப் போனபோது, கும்பகோணம் மகாமகக் குள மேற்குத் தெருவுக்கும் போனேன். பாட்டியைப் பார்க்க. எனக்கு இரண்டு வருடம் சாப்பாடு போட்ட பாட்டி. "வடக்கேயாடா, ரொம்ப தூரமோ. இங்கேயே பாத்துருக்கப் படாதோ" என்றாள் சந்தோஷத் தோடு. "எவ்வளவுடா சம்பளம்?" என்று கேட்டாள். "111 ரூபா பாட்டி," என்று சொன்னேன். "போடா, அத்தனை ஒண்ணும் கொடுக்கமாட்டா. சும்மா சொல்றே, பாட்டிகிட்டே பெருமையா பீத்திக்கறே, அப்படித் தானே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

ஹிராகுட் பிரம்மாண்டமான மகாநதியின் கரையில் உள்ள ஒரு சிறு கிராமம். பழங்குடிகள் வசிக்கும் கிராமம். சந்தால்கள். நான் அங்கு போனபோது அங்கு அணைக்கட்டு வேலைக்கு வந்து சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர் பஞ்சாபிகள். எஞ்சினியர்களிலிருந்து ஆரம்பித்து க்ளர்க்குகள் வரை. எல்லாம் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்கள். சிந்து நதியின் சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். முரட்டு ஸ்வபாவம். ஆனால் சக மனித சினேகத்தைக் கொண்டாடுகிறவர்கள்.

அந்த மார்ச் 20, 1950 லிருந்து தான் என் வெளி உலகப் பரிச்சயம் தான் தொடங்கியது என்று சொல்லவேண்டும். அங்கு கிடைத்த நட்புக்களும், நிகழ்வுகள் சிலவும் இன்றும் நினைக்க இனிமையாகத்தான், மனம் நெகிழச் செய்வனவாகவும் இருக்கின்றன.

விரைவில் வெளிவரவிருக்கும் 'நினைவுகளின் சுவட்டில்' நூலின் கடைசி அத்தியாயம்
இத்தோடு நினைவுகளின் சுவட்டில் முதல் பாகம் முடிவடைகிறது. நினைவுகளின் சுவட்டில் அகல் வெளியீடாக வெளிவந்துள்ளது. விவரங்கள்:
நினைவுகளின் சுவட்டில்: (தன் வரலாறு) பிரசுரம்: அகல், 342, TTK Road, Royappettai, Chennai-14: e/mail: agalpathipagam@gmail.com (ப்.340)

அன்புடன்,
வெ.சா.

vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்